Thursday, December 30, 2010

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்
அவள் அணிந்த ஆடைகளையும்
அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்
படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்
செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி
76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..
அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..
ஆளாளுக்கு விளக்கங்கள்
அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்
அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்
பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட
விட்டு வைக்காத இனம் நாங்கள்.
நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க
சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி
ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்
கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்
தன்னையே பெருமைகொள் தமிழினம்
உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்
வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை
இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!
எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!
இதுவா மனிதப் பண்பு…?
இதுவா சீர்திருத்தம்…..?
இதுவா தமிழினப் பெருமை….?
ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்
தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்
இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு


அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)

Friday, November 26, 2010

நீங்கள் பிறந்த இந்நாள்


மெளனங்களாய்
உங்கள் நினைவேந்திக்
கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்
முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு
மூச்சறுந்த நிலையில் எல்லாம்
உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்
வரலாறாய் பதித்துவிட்டு
வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே
வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்
இந்த மெளனங்களும் ஊகங்களும்
வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்
இப்போ நல்ல மழை பெய்கிறது…..
நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை
உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு
உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு
உயிர் கொடுக்கப் போனவர்கள்
தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்
பிழைகாணும் வீர(ண)ர்கள்
இடுகின்ற ஊழைகளில் உண்மையும்
நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை
இந்த ஊனக்கண்களும்
உக்கிய வாய்களும்
ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..
நீங்களாய் மாற நிறையவே நரிகள்
பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்
வருடாவருடம் வந்து போன
நாட்கள் போலில்லை…..
என்றுமே உணர்ந்திராத
வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க
உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்
மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..
26.11.10

Thursday, November 4, 2010

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

Wednesday, November 3, 2010

மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

ஈரம் காயாத உனது குருதிச்
சுவடுகளின் மீதேறிச் சென்று கொண்டிருக்கிறது
வன்மங்களின் வெறியடங்கிய மெளனம்……
உறைந்து போன கனவுகளை அள்ளியபடி
அலைகிறது உனது உயிரின் காற்று……

நீ நேசித்த நிலவும் நிசப்தம் நிறைந்த இரவும்
உனது ஆத்ம அலைவின் எச்சமாய்
இரவெல்லாம் காய்ந்து
பகலில் பயங்களோடு தேய்கிறது…..

கடைசிச் சாட்சியங்களுடன்
கடல் கடந்திருப்பாயென்ற எங்களது நம்பிக்கையை
கடைசிவரை உன்னோடிருந்து காலொன்றையிழந்து
கடைசியாய் மீண்ட தோழனின் சாட்சியங்களுடன்
நீயில்லையென்பதை நிரந்தரமாக நம்புகிறோம்….

கண்முன் இறந்த குழந்தைகளுக்காய் நீயழுததும்
களத்தில் கூட நின்ற தோழர்களுக்காய் நீ வாழ்ந்ததும்
கடைசிவரையும் நீ நேசித்த எதையுமே தப்பிக்க விடாமல்
சாம்பராக்கிச் சாம்பலாக
நின் கனவுகள் மெய்க்குமென்றுதான் நம்பினாய்…..
மெளனமாகிறேன்…..உனக்காக…..உன்போன்றோருக்காக…..

‘‘நானில்லாட்டி…என்ரை ஞாபகமாய்‘‘
நீயனுப்பிய பொக்கிசமாய் மிஞ்சிச் சிரிக்கும்
உனது நிழற்படங்களை சாமிகளோடு
சமன்படுத்துகிறேன்…..
சேமிக்கப்பட்ட உனது நினைவுகளுடனும்
நெஞ்சுக்குள் கனக்கும் உனது கனவுகளுடனும்
காலக்கொலைஞரின் கண்களின் முன்னால்
மறைக்கப்பட்ட உங்களது வாழ்வைச் செதுக்குகிறேன்…..
மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கைகளோடு……

17.10.10 (மே 2009 கனவுகளுக்காக தன்னையும் தனது கணணியையும் தன்னோடு எஞ்சிய யாவையும் எரித்துச் சாவை எய்தியதாய் அவனோடிருந்து பின்னர் சரணடைந்து வந்த ஒருவனின் உறுதிப்படுத்தலின் பின்னால் எழுதப்படுகிறது இவ்வரிகள். எப்போதாவது சந்திப்போமென்ற நம்பிக்கை போய் இனி எப்போதுமில்லைச் சந்திப்பென்று ஸ்கைபில் விடைபெற்றுப் போன தோழன் நினைவுகளோடு பிறந்த வரிகளை அவனுக்காக.....)

Thursday, October 21, 2010

அற்புதம் அம்மாவின் பேரறிவாளனுக்காகக் காத்திருக்கிறோம்.

தலையின் மேல் தொங்கும்
தூக்குக் கயிற்றின் கீழிருக்கும்
துயரம் அவன்…..
பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய
தமிழின உணர்வின் ஊற்று அவன்….

சாவின் நிணம்
அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க
சாவுமின்றி வாழ்வுமின்றி
சந்தேகத்தின் பெயரால்
இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்…..

வசந்தம் துளிர்த்த வயதில்
வாழும் ஆசைகளுடன் போனவன்
மரணம் கொல் இருளில் மன உழைச்சலும்
மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன்
பாழும் உயிரும் பாரமாய் பழியுடன்
நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில்
இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை……

19வருடச் சிலுவையின் பாரம்
குருதியழுத்த நோயாளியாய்
வாழ்வின் காலங்கள்
நோயின் கோரங்களோடு கழிய
காற்றணைத்த ஒளியில்
கருகிக் கொண்டிருக்கிற
திரியின் துணியாய் காத்திருக்கிறான்…..

இதயத்தை அவனுக்காகவே இயக்கிக் கொண்டிருக்கும்
அற்புதம் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவேனும்
அவன் வர வேண்டும்…..
இரும்புகளின் காவல் உடைந்து அவன்
நரம்புகளின் இயக்கம் நிற்க முன்னம்
விடுதலையென்ற ஒற்றைச் சொல்லைக் கேட்கவேனும்
பேரறிவாளன் பொதுமன்னிப்போடு வர வேண்டும்.

தோழனே,
உனக்காக நீ நம்பாத கடவுள்களை மட்டுமே இறைஞ்சுகிறோம்
வேறெந்த முயற்சியும் முடியாது நண்பனே !
மன்னித்துக் கொள் உனக்காய்
எதையுமே செய்ய எம்மால் இயலாது.
எனினும் நீ வருவாயென்ற நம்பிக்கையோடு
நாங்களும் அற்புதம் அம்மாவின்
கனவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்.

22.10.10(இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் பேரறிவாளன் பற்றிய செய்தியொன்று படித்த போது அவனுக்காக எழுதிய வரிகள் இவை)

Monday, October 11, 2010

அவனுக்காக.... இது கவிதையில்லை....

எல்லோரையும் போல அவனுக்கும்
வாழ்வு மீதான பிரியங்களும்
தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன…..
பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும்
அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்……

கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப்
பேரலையொன்று விழுங்குமாப்போல
குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில்
தொலைந்து போக
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்……
ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய்
ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்…..

காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள்
போரும் அவலமும் புகுந்து கொண்ட போது
போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன்
சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு
வீட்டுப் படியேறி வந்தவனை வேண்டாமென்றா ஒதுக்க முடியும்…?

போன உயிர் புதுப்பிறவியெடுத்தது போலக் கொண்டாடிய
அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் அவன் வாழவேயில்லை……
வரலாற்றையும் அதற்காக வாழ்ந்தோரையுமே வழிகாட்டியென்பான்
வழிநெடுகத் தன்கூட வாழ்ந்து மடிந்துபோன வரலாற்றுப்
பிள்ளைகளையே உச்சரிப்பான்…..
என்ன பிள்ளையடா நீ எங்களின் வாழ்வடா….?
அம்மாவின் அழுத கண்ணீர் துடைத்து
அவன் சொன்ன கதைகள் ஆயிரம்….
உயிர் பிரிந்து அம்மா நான் உனைப்பிரிந்து போனாலும்
உங்களைக் காக்க ஆயிரம் மகன்கள் வருவார்கள்…..
அவர்களுக்காக வாழ்ந்திரு
சத்தியம் செய்தான் சபதமாகவே…..

கண்களில் ஏந்திய கனவுகள் தாங்கிய
களமொன்றில் காயமடைந்தவன்
கடைசியாய் உணர்வு நரம்புகள் அறுபட்டுக்
கையில் 3விரல்களும் கழுத்தின் மேலாயும்
உயிர்ப்புடன் திரும்பினான்…..
எல்லாம் போயிற்றென்று புலம்பிய அம்மாவுக்கு
எல்லாரும் எனக்காகவே நம்பியிரு தாயே….
நம்பிக்கை கொடுத்தான்…..

வாரம் ஒரு தரம் மாதம் ஒருதரமாகி
அவனைக் காணும் நாட்கள் தூரமாகிப்போனது
கண்ணீரில் அவனைக் கனவுகளில் காணுதலே அரிதாகி
அவன் மே 2009 காணாமலே போய்விட்டான்…..
அம்மாவும் அப்பாவும் அவனைக்
காணாதோர் பட்டியலில் வைத்துக்
காத்துக் கொண்டிருக்க
அவன் காணாமல் போயிருக்கிறான்……

கலந்து வைத்த வண்ணங்களைக்
காற்றடித்துச் சிதைத்தது போல்
அவனது கனவுகள் சிதைக்கப்பட்டது….
சாகவிடாமல் அவனையும்
அள்ளிக்கொண்டு போனார்கள்….
தடுப்பும் கம்பியும்
அவனையும் அவனது தோழர்களையும்
கம்பியிட்டுக் காவலர்கள் மத்தியில்
அழுக்குகளும் நாற்றமும்
அவர்களுக்கு உணவாக……போயிற்று எல்லாம்…..

நாங்களிருக்கிறோம் நம்பிக்கையின் தூண்களிருக்கிறோம்
என்றொலித்த குரல்கள்
மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று…..
எவரையும் காணவில்லை எங்கிருந்தோவெல்லாம்
வந்து போனவர்கள் ஞாபகப்படம் பிடித்தவர்கள்
ஒருவரையும் காணவில்லை…..

சோறும் நீருமா சுதந்திரம் இல்லை
வீரம் என்றுமே
விலையானதில்லையென்றோரால் மறக்கப்பட்டு
மரணம் கூட அண்டாத பிண்டங்களாய்ப்
போன துயரைச் சொல்லியழ
ஆழுமின்றி அனாதரவானவர்கள் வரிசையில்
அவனும் அனாதரவாகிக் கிடக்கிறான்…..

மூன்று விரலுக்குள் கரண்டியைச் செருகிச் சோற்றுக் கோப்பையை
வைத்துவிட்டுப் போகின்ற உறவுக்கு நன்றி சொல்லி
கிடைக்கின்ற சோற்றுக்குள்ளே அவனது சுதந்திரக் கனவுகள்
சிதைந்து போவதாய் நினைக்கையில் நெஞ்சுக்குள்
சோகம் அப்பிக் கொள்வதில்லை கோபமே வருகிறது…..

அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்
அவர்களுக்கு என் துயர் இனியும் வேண்டாம்
வெறுப்புகளாலும் வேதனைகளாலும் சூழப்பட்டுள்ளான்…..
கந்தக வாசனை கடந்தகாலக் கனவுகளின் வேதனை
எல்லாவற்றின் மீதும் அவன் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறான்……
அனாதையாய் போனதாய் அலட்டிக் கொள்கிறான்
ஆருமற்றுப்போனதாய் தனக்குள் அழுது தொலைகிறான்…..

எவரது வார்த்தைகளும்
தன்னைக் காப்பாற்றாது என்பதை மட்டும் நம்புகிறான்…..

வாழும் ஆசையும் வருங்காலக் கனவுகளும்
சிறுவயதில் கட்டிய மண்வீடு போலக் கரைகிறது
அவனது கண்ணீராயும் அவனது கனவுகளாயும்……
மிஞ்சிக் கிடக்கும் காலம் அவனையும் தன்னோடு
இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது……
ஓரினத்தின் கனவுகளைச் சுமந்தவன்
ஒன்றுக்கும் பயனில்லாத சடமாகிக் கிடக்கிறான்
சாவுக்காய் காத்துக் கிடக்கிறான்……
11.10.10இந்த இணைப்பில் உள்ளவனுக்காக இந்த வரிகள். இது கவிதையல்ல....

Saturday, October 9, 2010

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்

உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் துயரமுறுவதையோ கண்ணீர் விடுவதையோ விரும்பாத இவன் தனக்குள் தினமும் அழுவதை யாருக்கும் வெளிப்படுத்தாது தனக்குள் குமுறிக்கொண்டிருக்கிறான். தனது ஒவ்வொரு தேவைகளுக்கும் யாராவது ஒருவர் வந்து நிறைவேற்றினால்தான் எல்லாம் என்ற நிலமையில் இருக்கின்ற எதுவுமே இயலாத தன்னை அழித்துக்கொள்ளவே இயலாத பாவமாகத் தானிருப்பதைச் சொல்லித் துயருறும் இவனோடு பேசுகின்ற ஒவ்வொரு வினாடிகளும் உயிர் வலிக்கிறது. இவன் செய்தது ஒன்றுதான். தனது வாழ்வை எங்களுக்காகத் தரத்துணிந்ததுதான். நாங்கள் கனவுகாண எங்கள் கனவுகளின் வடிவமாகித் தங்களை அழித்துக் கொண்ட இவர்கள் இன்று சாவுகூடத் தங்களை ஏற்காதுள்ளதாகத் துயருறுகிறார்கள். காலம் இவர்களை வஞ்சித்துத் தன் காலடியில் இம் மனங்களை வைத்து மகிழ்கிறது. ஒரு தேசத்தின் விடுதலையை நேசித்தவர்களை இன்று நாங்கள் சாகடித்துக் கொண்டிருக்கின்றோம். உதவுகிறோம் என்று இவர்களின் படங்களை விபரங்களைச் சேர்த்தவர்கள் யாவரும் கைவிட்ட நிலமையில் உதவிகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் இழந்து உயிரை மட்டும் வைத்திருக்கும் இளையோர்கள் இவர்கள். இவர்கள் இப்படியாகிப்போக இவர்கள் இப்படித் துயரங்களோடு சாக விரக்தியோடு வாழக் காரணமாகிப்போன எம்மீது கோபம் மட்டுமே வருகிறது. இவர்களுக்கான குறைந்தபட்சம் இவர்கள் வாழும் நாட்கள் வரையிலுமாவது ஏதாவது ஒரு நேரக்கஞ்சியாயினும் கொடுக்க ஒரு வழியைச் செய்ய வேண்டிய மாபெரும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்குமே உள்ளது. மாற்றங்களை விரும்பும் ஒவ்வொருவரும் இவர்களோடு பேசுங்கள். அதன் பின்னால் முடிவெடுங்கள் இப்போதைய தேவையென்ன என்பதை. எங்கள் கனவுகளின் விலாசங்களாகவும் எங்கள் மகிழ்ச்சிகளின் வெற்றியாளர்களாகவும் வாழ்ந்த மனிதக் கடவுளர்கள் இவர்கள். இவர்கள் வாழும் வரையான உதவிகளை நேசக்கரம் ஊடாக வேண்டுகிறோம். மீளவும் மீளவும் உங்களிடமே கையேந்துகிறோம். இதோ பேசக்கூட விரும்பாத கழுத்துக்குக் கீழ் இயக்கம் இல்லாது போன இந்த இளைஞனின் குரலிலிருந்து…..

Thursday, October 7, 2010

வெளிநாட்டில இருக்கிற அவனைத் தேடிக்கொண்டிருக்கிறம்

அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள்.

அக்கா….நான் முகாமிலயிருந்து வெளிய வந்திட்டன்….அவரைத்தானக்கா காணேல்ல…..தேடலாமெண்டு சொல்லீனமாக்கள்…ஆனா நான் எல்லா இடத்திலயும் தேடீட்டன் ஒரு தொடர்புமில்லை….இஞ்சை ஆக்கள் சொல்லீனமக்கா கனபேர் வெளிநாட்டிலை இருக்கினமாமெண்டு….இவரும் உங்கினேக்கை எங்கையும் இருப்பரோண்டு தேடேலுமேக்கா…..?
அவளது அப்பாவித்தனமான கேள்விக்கு எந்தப்பதிலைச் சொல்ல…..? ஆரிட்டையும் விசாரிச்சுப் பாப்பம்….அப்ப ஆரோடை இப்ப இருக்கிறீங்கள்……? எத்தினை பிள்ளையள் ? ஒரு தோட்டக்காணியில என்ரை பாவத்தைப்பாத்து ஒரு கொட்டிலொண்டு போட்டு ஒராக்கள் தந்திருக்கினம் அதிலதானிருக்கிறன்…..4பிள்ளையள்…..வீட்டாக்களின்ரை தொடர்புகளும் ஒண்டுமில்லை….இவற்றை தமக்கையும் நானும் தான் இதில பிள்ளையளோடை இருக்கிறோம்……அவாக்கு ஆரோ சொன்னவையாம் வெளிநாடுகளுக்கு கனபேர் போயிருக்கினமாமெண்டு…..இவரும் வெளிநாட்டுக்குப் போயிருப்பரெண்டு சொல்றா….உங்களுக்குப் புண்ணியம் கிடைக்குமக்கா ஒருக்கா தேடிப்பாருங்கோ…..என்ரை பிள்ளையளும் நானும் சரியா கஸ்ரப்படுறமக்கா….அவள் அழத்தொடங்கினாள்…..

எங்கே எந்தப் பெயரைச் சொல்லித் தேடுவது ? அவள் கண்ணீரின் கனம் மறுமுனையில் என் கண்களால் வடிந்தது. எத்தனையோ பேரின் கனவும் வாழ்வும் தியாகங்களும் ஒரு கனவின் விழித்தல் போல எல்லாம் முடிந்து போயிற்று. கனவுகள் தாங்கிக் களங்களில் நின்றவர்கள் ஆயிரமாயிரமாய் காணாமலும் தடைமுகாம்களிலும் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் வரை எல்லாம் எல்லாரும் எங்கிருந்தார்கள்…..?

அவள் அவன் இருப்பானென்ற நம்பிக்கையில் அவனைப்பற்றிச் சொல்லியது மட்டும்தான் அவன் பற்றிய தற்போதைய அடையாளம். அவள் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.
இயக்கத்தில் இணைந்த ஆரம்பமே அவனுக்குக் கள அனுபவமாகவே அமைந்தது. களங்களில் அனுபவம் காரியமாற்றலில் அவனுக்கிருந்த அசாத்தியம் எல்லாம் ஒருங்குசேர்ந்து அவன் புலனாய்வுப்பிரிவில் ஒரு பொறுப்பாளனாய் நியமனம் பெற்றான். அவன் பொறுப்பில் அவனது ஆழுமையில் பலநூறு புலனாய்வுப்போராளிகள் உருவாகினார்கள். ஒரு புலனாய்வாளனுக்குரிய எல்லாத்தகுதிகளும் அவனுக்கு வாய்த்திருந்தது. இந்த ஆழுமை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் இலகுவாய் சென்று வென்று வரும் வல்லமை வாய்த்தது.

வெளிவேலையில் இருந்த காலங்களில் அவனுக்கு ஆதரவாயிருந்த அவளது குடும்பத்துடன் அவனுக்குப் பரிச்சயமாகியது. அவன் மீது அந்தக்குடும்பம் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் அவளது பெற்றோரின் விருப்போடு அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெற்று முடிந்த திருமணத்தில் உறவினர்களுக்கு பெரியளவு மகிழ்ச்சியைக் கொடுக்காதது ஒரு குறையென்றே இல்லாத அளவு அவள் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். முதல் குழந்தைபிறந்து நான்காவது மாதம் அவன் உள்ளே திரும்பியும் போகவேண்டிய வேளை வந்தது. அவனோடு அவளும் வன்னிக்குள் போய்ச்சேர்ந்தாள்.

2008 மூன்றாவது குழந்தையும் பிறந்தது. குழந்தைகளோடு அவள்….அவன் தனது கடமைகளோடு…..சில நேரங்களில் வீட்டுக்கும் வராமல் நின்றுவிடுவான். விரும்பி ஏற்ற வாழ்வு அவனுடனானது…அதில் முரண்பட அவளுக்கு எதுவுமிருக்கவில்லை. அவனுக்கு முரண்பாடு மிக்க கடவுள் நம்பிக்கை சாத்திர சம்பிரதாயங்கள் யாவையும் அவள் வீட்டிலிருந்து வரும்போதே தன்னோடு கூட்டிவந்தது பற்றி தெளிவுபடுத்தப் பலதரம் முயன்றும் தோற்றுப்போனான். அதற்குமேல் அது அவளது சொந்த விருப்பு வெறுப்பு என அவற்றில் தன் தலையை உடைக்காமல் தப்பித்தான்.

வெள்ளி செவ்வாய் தவறாது அவளது விரதங்கள் கெளரிநோன்பு கந்தசஷ்டி முதல் வருடத்தில் என்னென்ன விரத நாட்கள் இருக்கிறதோ அத்தனையும் அவள் பின்பற்றிவரும் விரதங்களாகியது. தனது கடவுள்களும் விரதங்களும்தான் அவனை வாழ்விப்பதாக அவளது நம்பிக்கை.

போரின் உக்கிரம் தினம் தினம் சாவும் அழுகையும் நிறைந்த நாட்களால் வன்னிமண் சூழப்பட்ட போது ஒருநாள் அவனிடம் கேட்டாள்….எல்லாத்தையும் விட்டிட்டு அம்மாவேட்டைப் போவமோ…..? வன்னியை விட்டு வெளியேறிவிடுவோமென்று விடாப்பிடியாய் நின்றாள். அவனது கொள்கைக்குள் அவளது கண்ணீரும் பிள்ளைகளின் வாழ்வும் அமிழ்ந்து போய்விட வாழும்வரை வன்னி மண்ணுக்குள்ளேயே வாழ்வு முடியுமென்று முடிவாகக் கூறியிருந்தான். அந்தச் சொல்லுக்குப்பின் அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென்பது முடிவாகியது.

இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இனி இடம்பெயர முடியாது முள்ளிவாய்க்காலில் போய்ச் சேர்ந்தவர்களோடு அவளும் குழந்தைகளுமாக ஓர் மூலைக்குள் ஒதுங்கிக் கொண்டாள். அவன் அவளையோ பிள்ளைகளையோ பார்க்கவும் வராமல் களங்களில் காவலிருந்தான்.

எழமுடியாத எறிகணைக்குள்ளும் அவனைத் தனது சாமிகள் தான் காக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் நம்பிய சாமிகளைத்தான் நம்பிக் கொண்டிருந்தாள். தன்னோடு கூடவே கொண்டு வந்த கந்தசஸ்டி கவசப்புத்தகத்தை இரவும் பகலும் பதுங்குகுளிக்குள்ளும் ஓதிக்கொண்டேயிருந்தாள்.

அதுவொரு வெள்ளிக்கிழமை. விடியப்பறம் வீட்டுக்கு வந்திருந்தான். நன்றாக மெலிந்திருந்தான். நித்திரை இழந்த கண்களும் , வெட்டப்படாத தலைமுடியும் , சேவிங் செய்யப்படாத தாடியும் மீசையும் அவனைப் பார்க்கவே ஏதோ போலிருந்தது. கனநாட்கள் வராமலிருந்தவன் அதிசயமாய் வந்திருந்ததை அவதானித்தவள்….. உதென்ன வேட்டைக்கு வளத்தமாதிரி தாடியும் மீசையும்….புறுபுறுத்தாள்…..இத்தினை அவலத்துக்கையும் இப்ப இதுதான முக்கியம் சொல்ல எழுந்த சொற்களை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டான்.
பிள்ளையளையெண்டாலும் கொண்டுபோயிருக்கலாம்…..எங்கை நான் சொல்றதில எதுதான் விளங்கியிருக்கு……சாவெண்டா சா சண்டையெண்டா சண்டையெண்டவைக்கு எங்கை புரியப்போகுது இதெல்லாம்…..உங்கா உந்தப் புள்ளையள் எத்தினைநாளா பங்கருக்கை கிடக்குதுகள்….வளமையாக அவள் வாய் திறக்க முதல் ஆயிரம் கதைசொல்லிச் சமாளித்து விடுகின்றவன் அன்று வாயே திறக்கவில்லை.

எல்லாரும் வெளியில போறதில நிக்கிறாங்கள்…. நானும் கடலால போகலாமெண்டு நினைக்கிறேன்…. சரணடையப்போறதா பொடியள் கதைக்கிறாங்கள்….தொடர்புகள் எல்லாம் விடுபட்டுப் போச்சுது….அரைவாசிச்சனம் போயிட்டுதுகள்….எங்கடை பக்கத்தாலையும் கனபேர் போயிட்டினம்….நீயும் பிள்ளையளைக் கொண்டு போ நான் கடலாலை பக்கத்து நாட்டுக்குள்ளை போகலாமெண்டு யோசிக்கிறேன்….போறதுக்கு காசு வேணும்…

அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்க்கும் தைரியம் துணிவு எதுவுமே அவனிடம் இருக்கவில்லை. ஒண்டுமில்லாம வெறுங்கையோடை நிக்கிறம்…இதில என்னண்டு காசு….? அவள் கேட்டாள். உம்மடை தாலிக்கொடியைத் தந்தா சமாளிப்பன்….தாலிக்கொடி….? ஏதோ உலகம் இடிந்து போனதைப்போல உறைந்து போனாள். வார்த்தைகள் வரவில்லை…..

சாமிகளும் சமயமும் மூச்சென வாழ்கின்றவளிடம் தாலிக்கொடியென்றதும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாள். வெள்ளிக்கிழமையில தாலி கழட்டினா தரித்திரமெண்டது தெரியாதோ…? உமக்குத் தாலி முக்கியமோ உயிர் முக்கியமோ….? கடுமையாகத்தான் கேட்டான். நான் சொன்னதை எப்ப கேட்டிருக்கிறியள்…?அழுதாள்….. வெள்ளிக்கிழமை தாலி கழற்றுவது பற்றித்தான் பக்கவீட்டிலும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. உயிரைக் கழற்றிக் கொடுப்பது போல கழுத்திலிருந்த தாலியைக் கழற்றிக் கொடுத்தாள். கையில் வாங்கிய அவனது கண்ணிலிருந்தும் கண்ணீர்ச் சொட்டுக்கள்…..அவளுக்காக எதையுமே செய்திருக்காது அவளது சாமி நம்பிக்கையில் ஒருநாளும் தலையிடாதவன் இன்று அவளது மனம் சஞ்சலப்படும்படி நடந்து கொள்வது வேதனையாகத்தானிருந்தது. எல்லாம் கைமீறிப்போன நிலமையில் இந்த மூடநம்பிக்கையையெல்லாம் பார்த்து என்ன பயனென்று நினைத்தவன் அவள் அறியாமல் கண்ணீரைத் துடைத்தான். பிள்ளையள் கவனம் கவனமா போ….அக்கா வாறனெண்டவா…..அவவோடை சேந்து போ….கடலுக்காலை கடந்திட்டா எப்பிடியும் நாங்கள் சந்திக்கலாம்…..சொல்லிவிட்டுப் போனான்.

அவளது அழுகையும் குழந்தைகளின் முகமும் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது. கடற்பயணத்துக்காக தயாரானவர்களோடு அவனும்….
உயிர்கள் பறிபோய்க் கொண்டிருந்த அந்தக் கடைசிநேரத்திலும் பணமே எங்கும் எல்லாவற்றுக்கும் முன்னணியில் நின்றது…பணமில்லாதவன் பிணமென்ற யதார்த்தம் நிறைந்த உண்மையை அந்தக்கணங்களில்தான் அவன் உணர்ந்து கொண்டான். கேட்கப்பட்ட பணத்தோடு சென்றவர்கள் மட்டும் கடல்கடக்கும் பயணத்தில் தெரிவாக….இவனும் இவன்போன்ற ஏழைகளும் கண்ணீரோடு திரும்பினார்கள்…..

இந்த மண்ணுக்காகத்தான நாங்கள் இருவது முப்பது வருசமா எல்லாத்தையும் விட்டுக்கிடந்தம் எங்களுக்கே இந்த நிலையெண்டா…..சாதாரண சனங்களின்ரை நிலமை….அவனோடு கடைசிவரையும் நின்றிருந்த ஒருதோழன் சொன்னான்….அவனது வார்த்தைகளின் உண்மையை அங்கே யாவரும் மெளமனமாக உணர்ந்து கொண்டார்கள். போனப்போகுது இந்த உயிர்தானே போகட்டும் என்ற அந்தத்தோழன் கழுத்தில் கட்டியிருந்த குப்பியைக் கையில் எடுத்தான்…..இது கூட எங்களைக் காப்பாற்றத்தான்…..அந்தக்குப்பியை அவன் மென்று கொண்டான்….அவன் தனது உயிரை மாய்த்துக்கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தடுக்கவேயில்லை.

காலையில் அவனது மனைவியும் இவனது மனைவிபோலவே 4குழந்தைகளோடு தாலியைக்கழற்ற அடம்பிடித்து அழுதது ஞாபகம் வந்தது. குப்பி கடித்தவனைக் காப்பாற்ற மருத்துவமும் இல்லை மனிதர்களும் இல்லை….கூவிவந்த எறிகணை நடுவில் அந்தத் தோழனின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. இவனால் தன்னை அழிக்கவும் தைரியமில்லாது தளர்ந்தது மனம். கழற்றிய அவளது தாலியைக் கொடுத்துவிட்டு இனிச் சாகும்வரை அவளோடும் பிள்ளைகளோடும் இருப்போமென்ற நினைவோடு இருள் பரவிய மைம்மலில் வீட்டுக்குப் போனான்….

அவனது மூத்தக்காவும் அவனது பிள்ளைகளும் பதுங்குகுளிக்குள் படுத்திருந்தனர். அவள் பதுங்குகுளி வாசலில் மெழுகுதிரியில் கந்தசஸ்டி கவசம் உச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளது பெயரைக் கூப்பிடும் வரைக்கும் அவன் வரவைக்கூட அவதானிக்காது கந்தசஸ்டி கவசத்திலேயே கவனமாயிருந்தாள். அவளிடமிருந்து எதுவித சொற்களும் எழவில்லை…..

என்ன ? போகேல்லயா ? அவளுக்கு அவன் பயணம் தடைப்பட்டது பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவன் தடைகளின்றி கடல் கடக்க வேண்டுமென்று கந்தசஸ்டி கவசம் உச்சரித்து முருகனை வேண்டியவளின் நம்பிக்கையில் முதலாவது தோல்வி….அதுவரையும் தனது கடவுள்களால் அவன் காப்பாற்றப்பட்டானென்ற நம்பிக்கைகூட பொய்த்துப்போனது போலிருந்தது…..

செத்துப்போகலாம் போலையிருக்கு…..அங்கையே செத்திருப்பன்….ஆனால் நான் இருக்கிறதும் தெரியாமல் இல்லாததும் தெரியாம நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பாயெண்டுதான் திரும்பி வந்தனான்….முதல் முறையாக அவளிடம் மன்னிப்புக் கோரினான்….நாங்கள் நினைச்சது நாங்கள் நேசிச்சது எல்லாம் சுயநலங்களுக்குப் பலியாகீட்டுது….
சனத்தோடை சனமா அவனிட்டைப்போவம்…..என்னைச் சிலவேளை அடையாளங்கண்டாலும் தனித்தனியாவே போவம்….வாழ விதியிருந்தா பாப்பம்….
கனக்க அவளுடன் கதைக்க வேணும் போலிருந்தது….அவள் தனக்காகக் காத்திருந்த காலங்களையெல்லாம் மறந்து இலட்சியங்களுக்காக வாழ்ந்ததும்…..இன்று நம்பிய இலட்சியம் கனவு யாவையும் யாரோவெல்லாம் கொள்ளையிட்டு எல்லாம் கையைவிட்டுப்போன நிலமையில் நிற்கின்ற துயரத்தைச் சொல்லியழ வேணும்போலிருந்த இன்றைய விருப்பங்களையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.

சாவின் கணங்களாகவே ஒவ்வொரு கணமும் கழிந்து கொண்டிருந்தது. எல்லாம் எல்லாரும் மறந்து இப்போ அவரவரைக் காக்கும் அவசரத்தில் ஆளாளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நெருப்பு மண்டலாமாகவும் புகையால் அழிந்த இடங்களாகவும் இருந்த நிலத்திலிருந்து கடைசிக் கனவுகள் தீய்ந்து கொண்டிருந்தது.
அவளது கைகளைப்பற்றியபடி பிள்ளைகள் , அவனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். காயங்களும் அழுகையும் பிணங்களும் நிறைந்த இடங்கள் தாண்டி அவர்கள் வந்தடைந்த போது அந்தப் பெருநிலம் ஆயுத ஓசைகளிலிருந்து விடபட்டு அச்சத்தால் சூழப்பட்டிருந்தது.

வரிசையில் நின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனித்தனியாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் பழகிய முகங்களும் கடைசிவரை தங்கள் காலங்களை களங்களில் கழித்தவர்களுமாக தரம்பிரிக்கப்பட்டு ஏற்றப்பட்டார்கள். உறவுகளின் அழுகுரல்களும் பிரிவின் கதறல்களும் நிறைந்த அந்தக்கணங்களின் நிகழ்வுகளை நினைவுக்குள்ளிருந்து தூக்கியெறிய முடியாதபடி ஒவ்வொரு மனதிலும் ஓராயிரம் துயரம்.....ஆளையாள் நிமிர்ந்து பார்க்கவே அச்சப்பட்ட வினாடிகள் அவை…..
ஒரு இளம் சந்ததி தனது தாய்களுக்காகவும் தந்தைகளுக்காகவும் உறவுகள் தங்கள் சொந்தங்களுக்காகவும் கதறக்கதற பிரிப்பும் ஏற்றலும் நிகழ்ந்து கொண்டிருக்க அவனும் தனியே அழைக்கப்பட்டான். அவன் கொண்டு செல்லப்படுவதைக் கண்டவள் பெருங்குரலெடுத்து அழுதாள்…. அவனது பிஞ்சுக் குழந்தைகள் பயத்தில் உறைந்து போயினர்….வாகனமொன்றில் அவனும் அவன்போன்ற பலரும் அள்ளிச் செல்லப்பட்டார்கள்.

அவனில்லாது தனித்து அவள் முகாமிற்குச் சென்று அவனைத் தேடி பதிவுகள் தேடல்கள் என எத்தனையோ முயற்சிகள் எதுவும் பயனில்லாமல்…. அவன் எங்கே….எப்படி….இருக்கிறானா…இல்லையா… எதுவித முடிவுகளும் இல்லாத தொடர்கதையாய் அவன் அவளால் தேடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான் யாரோ அவன் வெளிநாடு போயிருக்கலாமென்று சொன்னதை நம்பிக் கொண்டிருக்கிறாள்.

சில ஆயிரங்கள் இல்லாமையால் கடல்கடக்க முடியாது ஏமாந்து திரும்பியவனை வெளிநாட்டிற்கு யார் அழைத்திருப்பார்கள்…..? ஆயிரமாயிரமாய் அடையாளமில்லாமல் அழிக்கப்பட்டவர்களோடு அவனும் அழிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் தகவலை அவளுக்கு யாரால் சொல்ல முடியும்….? அல்லது அவன் வெளிநாட்டில் வாழ்வதாகவும் கடமையின் நிமித்தம் தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அவளுக்குச் சொல்லப்பட்ட கதைகளை நம்பியிருக்கும் அவளது நம்பிக்கையைச் சிதைப்பதா….? எங்கேனும் இருந்தால் வருவானென்ற நம்பிக்கையோடு.....நாங்களும் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறோம்…..

02.09.10

Tuesday, October 5, 2010

வெற்றிடமாய் கிடக்கிறது ஓர் சந்ததியின் வாழ்வு…


புழுதியப்பிய தெருக்களின் முனைகளில்
அழுதபடி குழந்தைகளும்
அனாதைகளான அவர்களுமாக
தெருக்கள் இப்போது
துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது.

எல்லோரையும் எல்லாவற்றையும்
அழித்துச் சென்றவர்களின் முகங்களால்
நிறைந்து கிடக்கிறது நிலம்.
நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின்
முகங்களில் பயமும் வறுமையும்
பதியமிடப்பட்டிருக்கிறது…..

ஆணிவேருடன் ஒரு சந்ததியும்
அதன் குருத்துக்களும் கனவுகளும்
அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட
அடையாளங்களை அழிக்க
யார்யாரோ வருகிறார்கள்
அறிக்கைகள் எழுதுகிறார்கள்
எல்லாம் வளமைபோல்
அவர்கள் போய்விடுகிறார்கள்….

இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில்
ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட
அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும்
குமரிகளையும் காப்பதற்காகவே
காவலிருக்கும் கண்களுக்குள்
பேய்களின் காலடிகள்
பேரோசைகளுடன் உதைக்கிறது…..

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..
01.09.10

Tuesday, August 31, 2010

நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…!

வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட
நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய்
போராட்டம் நிகழ்கிறது….!
நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும்
நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்…..

ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி
துரோகம் அநியாயம் வசைபாடல்
நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில்
போராடியோர் குரல்களும் உயிர்களும்
நசுங்கிக் கொண்டிருக்க
நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது.

செய்திகளும் அறிக்கைகளும்
கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட
உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக….
எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும்
புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின்
பெயர்களாலும் நீதிக்கான போராட்டம் நடக்கிறது.

ஆழுக்காள் கொத்துப்பட்டு கொழுவுப்பட்டு
தீராவஞ்சப் பிணியகலா மனங்களோடு
யாருக்காய் போராடி யாருக்காய்
வெற்றியை நமதாக்கி
யாருக்காக இதுவெல்லாம்….?

சாவோடும் நோயோடும்
உயிர் கொல்லும் பசியோடும்
தினம் சாகின்ற உயிர்களுக்கு
சங்கூதும் முடிவோடு
அறிக்கைகளின் பெயராலும்
அடிக்கடி முளைக்கும் புது
அவதாரர் பெயராலும்
ஆணிகள் அறையப்படுவதை
யார்தான் நினைப்பார்…..?

ஓ….
மண்ணுக்குள் மரணத்துள்
வாழ்கின்றவர்களே…!
போராடுவோம் நீங்கள்
சாகும்வரை போராடுவோம்.
நீங்கள் கவரிமான்கள் *மயிர் நீர்ப்பின் உயிர்வாழா மானிடங்கள்*
நீங்கள் உயிர் நீர்ப்பினும்
ஓயாது எங்கள் போராட்டம்
ஏனெனில் நாங்கள் கவரிங் மான்கள்.

ஓயமாட்டோம் உங்களை ஒரு வழி பண்ணிக்
கொல்லும் வரை ஓயமாட்டோம்.
வீழமாட்டோம் நீங்கள் வீழ்ந்து மடியும் வரை
நாங்கள் வீழமாட்டோம்.

கோடைவிடுமுறையைக்
கீரிமலையிலும் திருமலையிலும்
நல்லூரிலும் நயினை
நாகம்மை வாசலிலும்
கு(டி)ழித்துக் கழிக்க
எங்களுக்கொரு நிலம் வேண்டும்.

சோற்றுக்காய் பிள்ளைக்குப் பால்மாவுக்காய்
ஆமியிடமும் அகப்படும் யாவரிடமும்
எங்கள் பெண்களும் குழந்தைகளும்
விலையாகிப்போயழிந்து போனாலும்
நாங்கள் ஓயமாட்டோம்.
போராடுவோம் உங்களுக்காக….

போராட்டம் புலத்தார் கைகளில்
தரப்பட்டிருக்கிறது.
இத்தத்துவம் புரியாத (என்போன்ற) மக்குகளை
மண்டையிலை போடாதது பிழையென்று உசுப்புவோம்
இன்னும் கனவுகளில் வாழும் அப்பாவிகளுக்கு
ஓதுவோம் துரோகிகள் இப்படித்தான்
ஒளிந்திருக்கிறார்கள்.
அரிச்சந்திரர்களை அழைத்து
இந்த மக்குகளை
மண்டையிலை போடுவிப்போம்.

போராடுவோம்…..!
இன்னும் மிஞ்சியிருக்கும் உயிர்களே...!
நோயிலும் பசியிலும் நீங்கள்
சாகும் வரை நாங்கள் போராடுவோம்.

31.08.10 (பகல் 11.10)

Sunday, July 18, 2010

இவர்களின் எஞ்சிய நாட்களை இனியதாக்குவோமா?

யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள அறுபது பேருக்கான உதவியை நேசக்கரம் நாடிநிற்கிறது. படுக்கையிலும் சுழல்கதிரைகளிலும் வாழும் இவர்கள் வாழப்போகும் மீதி நாட்களிலாவது மகிழ்ச்சியாக வாழ இவர்களுக்கு நேசக்கரம் கொடுங்கள் உறவுகளே...? ஒரு நோயாளிக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான அன்றாட சீனி, தேயிலை,சவர்க்காரம் போன்ற சில தேவைகளை நம்மிடமிருந்து எதிர்பார்க்கும் எங்கள் உறவுகளுக்கு உதவுங்கள். இவர்களில் பெரும்பாலானோர் படுக்கைப்புண்களாலும் காயங்களாலும் அவதியுறுகின்றனர். இந்த நடமாட முடியாத சிலரது படங்களை இங்கே இணைக்கிறோம்.

Sunday, July 11, 2010

பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே...?

இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்துபோனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம்வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலதுகையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயதுஇளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில்வாழ்கிறான்..

அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கானஎதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும்இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்றகனவோடு தனக்காய் ஒரு தொழிலைத் தேடுகிறான். ஒற்றையுடன் இருக்கும்இவனை எந்த நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாத நிலமையிலும் தினம் தினம்வேலைதேடி அலைகிறான் இவன். அண்மையில் இவன் ஒரு கடையில் வேலைதேடிச்சென்ற நேரம் அவனது ஒற்றைக்கையை காரணம் காட்டி அவனுக்குவேலை மறுக்கப்பட்ட போது மனமுடைந்து ஓரிடத்தில் நின்றவனை நேசக்கரம்பயனாளர் ஒருவர் நம்பிக்கையளித்து நேசக்கரத்திடம் கொண்டு வந்துசேர்த்திருக்கிறார்.

Monday, June 21, 2010

எதுவுமற்ற 30 பல்கலைக்கழ மாணவர்களுக்கு உதவுங்கள்

எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம்.

ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது.

உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம்.

உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள்

1) நிசாந்தினி கனகரத்தினம்
கலைப்பிரிவு

2)கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

3) தனபாலசிங்கம் பிரதீப்
பெளதீக விஞ்ஞானம்

4)ஆறுமுகம் அமலன்
மீன்பிடியியல் விஞ்ஞானம்

5) கணேசலிங்கம் வினோ
சமூகவியல் 1ம் வருடம்

6) சீவரத்தினம் தாரகன்
கலைப்பீடம் 1ம் வருடம்

7) நடராசா கிரிநாத்
மருத்துவம் 1ம் வருடம்

8) செல்வராசா கயோதீபன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

9) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்
முகாமைத்துவம் 2ம் வருடம்

10) கந்தசாமி சாரங்கன்
விவசாயம் 1ம் வருடம்

11)கனகலிங்கம் விக்னா
கலைப்பிரிவு 1ம் வருடம்
12) கந்தையா சிறீகாந்
கலைப்பிரிவு 1ம் வருடம்

13) செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4 கிடைத்தது)
முகாமைத்துவம் 2ம் வருடம்

14) நவரத்தினம் தருசன்
கலைப்பீடம் 2ம் வருடம்

15) கந்தையா பரமேஸ்வரன்
முகாமைத்துவம் 1ம் வருடம்

16) சுகுமாரன் கயிலாயபிள்ளை
2ம் வருடம் முகாமைத்துவம்.

17) பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
முகாமைத்துவம்.

18)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம்இரண்டாம் வருடம்
விளையாட்டு விஞ்ஞானம்.

19)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

20)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம்முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
வணிகத்துறை.

21) சுலக்ஸன் தயாபரன்
முதலாம் வருடம் , உயிரியல் விஞ்ஞானம்

22) நிசாந்தன் கமலநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

23) கமலேஸ்வரன் பஞ்சநாதன்
கலைப்பிரிவு 1ம் வருடம்

24) நவரத்தினம் நவநந்தன்
முகாமைத்துவம் முதலாம் வருடம்

25) றாயேஸ் துரைச்சாமி
2ம் வருடம் கலைப்பிரிவு

26) சுரேந்திரன் சுந்தரலிங்கம்
1ம் வருடம் விஞ்ஞானம்

27) உதயகுமார் பழனியாண்டி
1ம் வருடம் முகாமைத்துவம்

28) ரமேஷ்குமார் காளிமுத்து
கலைப்பீடம் 2ம் வருடம்

29) சிவராசா வேலுச்சாமி
கலைப்பீடம் 1ம் வருடம்

30) மகேந்திரம் சுப்பிரமணியம்
கலைப்பிரிவு 2ம் வருடம்

Sunday, June 13, 2010

ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள்

இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது.

வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடாக கனக்கின்ற துயரங்களின் பாரம் உங்களின் சிந்தனைக்காக….


Monday, May 31, 2010

அது பிணங்கள் மீதான நடைபயணமென்றே சொல்கிறேன்...உயிர் பிழைத்த ஒருவனின் வாக்குமூலம்

இனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

Saturday, May 29, 2010

குடும்பத்தில் யாவரையும் இழந்து தனியனான ஒரு மாணவனின் குரல்

இந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளான். இனி வாழ்வதில் என்ன இருக்கிறது என்கிற மனைநிலையில் இருந்தவனுடன் உரையாடிய போது அவனுக்கான ஆறுதலை ஆற்றுப்படுத்தலை செய்ய வேண்டிய நிலையில் இவனது மனநிலை இருப்பதை உணர முடிகிறது. இவனுடனான உரையாடலை ஒரு செவ்வியாக இல்லாமல் தோழமையுடன் அணுகிய போது அவன் சொன்னவற்றிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறோம்.

Monday, May 24, 2010

எங்கடை குடும்பத்தில கனக்க இழப்பு - ஒரு போராளியின் கதை

1997இல் யெயசிக்குறு சமரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழ் இயங்கா நிலைக்குப் போனான் இவன். 17வயதில் ஊனமுற்றுத் தன்னைக் கவனிக்கவே ஒரு துணையோடு வாழ்ந்தவன். குடும்பத்தில் வரிசையாய் நாட்டுக்குக் கொடுத்தவன். மேமாதம் வரையும் கள முனையிலேயே இருந்தவன். கடைசியில் இவனும் தடைமுகாமில் போய் சேர வேண்டிய நிலையில் ஊரோடு இவனும் போய்ச் சேர்ந்தான். எந்தவித வசதிகளுமற்ற இடமொன்றில் இன்று இவன் படுக்கையில் இருக்கிறான். முன்னாள் போராளிகள் வரிசையில் இவனும் ஆனால் அன்றாட தேவைகளுக்கே உதவிகளை எதிர்பார்த்தபடி இவன்.இதோ இவனது குரலிலிருந்து....

Saturday, May 22, 2010

வட்டுவாகலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்களைத் தாண்டி வந்தேன்

என்ரை தம்பியவையை காணேல்ல கடைசி நேரத்தில களத்துக்கு போனவை....இன்னும் வரவுமில்லை அவையைப்பற்றிய எதையும் இதுவரை அறியவும் முடியேல்ல...நான் தான் என்ர தம்பியவையின்ரை குடும்பங்களையும் பாக்கிறேன்....10பேர் என்னை நம்பியிருக்கினம்....கடைசியில எரிஞ்ச அந்த நெருப்பு இன்னும் என்னாலை மறக்கேலாதாம்....இப்பவும் கனவிலை வருது....கடைசி நேர யுத்தத்தில் தான் கண்ட உண்மைகளை பகிர்கிறாள் இந்தப் பெண்.....இரத்தமும் சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து உயிர் தப்பியது பற்றி உதிரம் உறையும் கதைகளிலிருந்து ஒரு பகுதி இது....ஒலிப்பதிவைக்கேட்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.
அடுத்த பகுதி நாளை....

Friday, May 21, 2010

விடுதலை பேசி நாசமாய்ப்போவோம்.

மரணம் !
அது உனது முகம் முழுவதும்
வியாபித்திருக்கிறது....
சொல்ல எழுகிற சொற்களைக்
குற்றித் துளைக்கும்
கூர்முனைக் கத்தியிலிருந்து
உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது.

உதிரும் குருதித் துளிகள்
உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும்
உறிஞ்சிக் கொண்டு போகிறது.....
கத்தியின் இடுக்கிலிருந்து
ஒழுகுகிறது உனது
கடைசிக் கனவுகள்.....

ஓர் உயிரின் பெறுமதி பற்றிய
எந்தவித கவலையுமின்றி
உன்னைக் குற்றிக் குருதியில்
குளிப்பாட்டி மகிழ்கிறது
காடேறிகளின் கர்வம்.....

இன்றைய முகப்புச் செய்திகளிலும்
தலைப்புச் செய்திகளிலும்
நீ நிறைந்து வழிகிறாய்.....
வியாபாரிகள் வயிறு முட்ட நீ
வலியில் துளித்துளியாய்
செத்துப் போகிறாய்.

எத்தனையோ கொடுமைகள்
படங்களாய் வந்து போயிற்று
அதுபோல நீயும்
நாலுநாள் செய்தி - பின்
நாவுகளில் மட்டுமல்ல
நமது வீரங்களின்
நினைவுகளிலிருந்தும்
நிரந்தரமாய்
மறந்து போய்விடுவாய்.....

உன்போல் பல கதைகள்
அவ்வப்போது வந்து
ஆயுளை அழித்துச் செல்லும்
ஆயினும் வீரமாய் விடுதலை பேசி
நாசமாய்ப்போவோம்....

நீங்கள் சாவது
குருதியில் மிதந்து போவது
நமக்கெல்லாம் இது வீரத்தின் குறியீடு
விடுதலையின் அடையாளம்....

`மனிதம் மனிதவுரிமை`
மேற்படி சொற்களின் பெறுமதி
உனக்கானதும் உன்போன்ற
ஆயிரமாயிரம் பேருக்கான முடிவுகள்
இதுதான் என்பதை மீள்பதிவாக்குகிறது.

தோழனே !
தூ....எனக்காறித் துப்புகிறது மனச்சாட்சி
இந்தத் துப்புக்கெட்ட சாதிக்காகவா
நீங்கள் சாகத்துணிந்ததும்....?
சயனைட் அணிந்ததும்.....?

22.05.2010 (இன்று வெளியான ஒரு போராளியின் கொலை தந்த துயரிலிருந்து....)

Monday, May 17, 2010

தெருவில் படுத்துறங்கும் ஒரு முன்னாள் கரும்புலிப்போராளியின் இன்றைய நிலை

பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நேசக்கரம் அவனிற்கான ஆரம்ப உதவிகளை வழங்கிருந்தது. ஆனால் மனஅழுத்தத்தால் பாதிக்கபட்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை எனவே தற்கொலை செய்யப்போகிறேன் என்று கடிதம் எழுதியிருந்தான். அவனது நிலையை அவனது குரலியே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்.

Wednesday, April 28, 2010

பல்கலைக்கழகமாணவர்களின் தற்கொலைகள் பகிர்கிறார் தீபச்செல்வன்

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக உயர்கல்வி கற்கும் மாணவர்களிடையே குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயான தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. அதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி செய்திகளாகிக்கொண்டிருப்பது மட்டுமல்லாது அவை வெறும் அன்றாட சம்பவங்களாகி போய்விட்டதொரு நிலைமையே தொடர்கின்றது.

இத்தகைய நிலையில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்து நிறுத்த புலம்பெயர் சமூகம் என்ன செய்யலாம் என்கிற கேள்விகளுடன் இதோ தீபச்செல்வனை தொடர்பு கொள்கிறோம்.

Saturday, April 24, 2010

எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில்

நீ வருவதாய் கனவுகள்
நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்....
நினைவுகள் தின்று
நெஞ்சில் துயர்
மீதமாய்க் கனக்கிறது.....

இரத்தம் செறிந்த புழுதியில் நீயும்
புழுதியாய் கலக்கையில்
யாரை நினைத்து நீ
துகள்களாய் உதிர்ந்தாயோ....?
வருவேன் என்றதும்
துயர் தொலையும் என்றதும்
மறந்தா தோழனே
முள்ளிவாய்க்கால் முனையிலே - உன்
முடிவை மாற்றினாய்.....?

வருடம் ஒன்று முடியப் போகிறது
நீ வருவாயென்ற நம்பிக்கை
வலுவிழந்து செயலிழந்து
செல்லாது போகிறது.....

கடைசிவரை நீ கதைத்த சொற்கள் ஒவ்வொன்றும்
கனவையும் காலத்துயரையும் பெயர்த்து
நிலம் மீது வேரோடுகிறது....
நீ நிழற்படமாய் சிரிக்கிறாய்
நினைவினில் நிறைகிறாய்.....
அழுவது தவிர்த்து
அதற்கப்பாலொரு தீர்வில்லாத்
துயர் நிறை வெளியினில்
நலிந்து போயுளோம்.....

நடந்தவை கதைகளாய்....
நாங்கள் நினைத்தவை
வெறும் கனவுகளாய்
வருவேன் வருவேன் என்ற உனது சொற்கள்
நீ வராமல் தனித்துத் தவிக்கிறது.....

நீ வருவாயா.....?
வந்தெம் உயிர் நனைத்துப்
புத்துயிர் தருவாயா....?
வசந்தம் நிறைந்த உனது பெயரில்
ஒளியான சோதி நீ
எங்கேனும் இருந்தால்
எழுது ஒரு பதில்.....
17.03.10

Monday, April 19, 2010

ஒரு போராளி மனைவியின் குரல் இது

நீண்ட நாட்கள் வலைப்பூவில் எழுதவில்லை. மீண்டும் வந்துள்ளேன். எமது மக்களின் அவலங்கள் சுமந்த வாழ்வுகளின் கதைகளை அவர்களின் குரலினூடு எடுத்துக் கொண்டு வருகிறோம்.

நேசக்கரம் இது துயரப்படும் எமது மக்களுக்கான ஆதரவுக்கரமாக ஆரம்பித்துள்ளோம். பல நண்பர்களின் முயற்சியில் 3வருடங்களுக்கு மேலாக எம்மால் இயன்றதை செய்து வந்தநாம் 2010 முதல் யேர்மனியில் பதிவு செய்து ஒரு நிறுவனமாக எழுந்துள்ளோம். வலைப்பூ நண்பர்களையும் எமது நேசக்கரத்தோடு கைகோர்க்கும்படி அழைக்கிறோம்.

இது நேசக்கரம் அமைப்பின் உத்தியோகபூர்வ இணையம். வாருங்கள் வந்து பாருங்கள். உங்கள் கரங்களையும் இணையுங்கள்.
http://nesakkaram.org/

தடுப்பில் உள்ள தனது போராளிக் கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கண்ணீரோடு வாழும் தாயின் குரல் இது.

இக்குரல் போல ஆயிரமாயிரம் குரல்களின் துயர்களை நேசக்கரம் ஊடாய் எடுத்து வருகிறோம்.

Tuesday, March 2, 2010

கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும்ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம்
உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில்
நீ எத்தனையோ அடையாளங்களாய்.....

தேசம் தேசியம் என்றெல்லாம்
கனவுகள் நிரம்பியல்லவா உனது
கடிதங்களை எழுதினாய்...!
ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும்
உரமூட்டி உரமூட்டியல்லவா
உன்னைத் தீட்டிக்கொண்டாய்....!

உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும்
காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று
கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில்
எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது....
எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய
நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்....

மேமாத முடிவுகளைத்
தைமாதமே உரைத்த நீ
மாசி27 கிபீரடியில்
உன் கொள்கையும் இலட்சியமும்
தமிழீழ தேசத்தின்
கனவுடனே கரைந்து போனது....
நீ கண்ட கனவும்
உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும்
கொள்ளைபோய்விட்டன.....
தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும்
அள்ளுண்டு அரியுண்டு
அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது.

வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன்
உயிரின் துளியான உன் குழந்தை
உனது வயதான பெற்றோர்கள்
உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும்
நீயிருந்தால் நீயிருந்தாலென்று
எத்தனையோ விதமான கற்பனைகள்
எங்களுக்குள்.....

உன்னை வார்த்தாற்போல
உன் செல்வமகன்
அவன் மழலைக்குரலில்
உன் குணங்கள் யாவும்
தேங்கிக் கிடப்பது போல....
உன்னை எழுதுகிறான்
உன்னைத் தேடுகிறான்....
உன் நினவுகளை எங்களோடு தேக்கி
அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்....

தொலையலையில் அழைக்கும் போதெல்லாம்
என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை
அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்.....
அவன் குரல் கேட்டால்
உன்னையே காண்பது போன்ற பிரமை....
நீ வந்தால்....
இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?

(லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010)

Monday, January 11, 2010

வரலாறு எழுதிய கதைகளில் வாழாது போயினர்.

மெல்ல மெல்லக் கசியும்
உண்மைகளிலிருந்து
நீண்ட பெருவெளிக் கனவு
தற்கொலை செய்து கொள்கிறது.....

முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து
சொட்டுச் சொட்டாய்
சேர்த்து வைத்தவையெல்லாம்
இரத்தம் குளி(டி)த்துப்
பெருத்து நாறிப் பிணங்களாய்
மனித எலும்புக் கூடுகளாய்
வெளிவருகிறது.

நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய்
விட்டுச் சென்ற வார்த்தைகளும்
ஆள்மாறி ஆள்மாறி
அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு
துயர் வலியில் தடயமறிவிக்காமல்
தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள்.

சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள்
சாவின் நிணம்மாறாத்
தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து....
யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று
ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால்
அவர்கள் உண்மை அடையாளம்
அழிக்கப்படுகிறார்கள்.

களம் விட்டால் அன்றி நிலமறியாப் பிள்ளைகளின்
நிலமை கவலை தருவதற்கும் மேலாய்
இக்காலத்தைச் சப்பித்துப்பிச் சபிக்கிறது.
இன்னொருவன் போராட
இன்னொருத்தி இறந்து போக
மிடுக்கோடு கவியெழுதிய கையில் - அவர்கள்
விட்டுச் சென்ற துயரம் வழிகிறது.

தோழியே என்றவன்(ள்) தொடர்பறுத்துத்
தொலைந்ததும்....
தங்கையே என்றவன் தன் கடைசிச் சிரிப்பை மட்டும்
தந்துவிட்டுச் சென்றதும்....
அக்கா என்றவன் அசுமாத்தமின்றிப் போனதும்....
மகளே என்றவர் மவுனமாய் ஆனதும்....
மருமகளே என்றவர் மண்ணணையில் வீழ்ந்ததும்.....

எல்லாம் போயிற்று
எல்லார் உயிரும் என்னைப் போல
இன்னும் வாழ்வதில் எத்தனை பிரியமுடன்
வாழாது போயினர்.....?
வரலாறு எழுதிய கதைகளில் அவர்கள்
பெயரிட்ட பிள்ளைகளும்
துணைவந்த துணைவிகளும்
தனித்துப் போயினர்......

ஒரு நேர உணவிற்கும்
ஒற்றைப் படுக்கை நிழலுக்கும்
எவரையெல்லாமோ இறைஞ்சி....
எஞ்சிக் கிடப்பது கண்ணீர் மட்டுமேயான
இயலாத் துயரோடு
இன்னும் நம்புகிறார்கள்....
என்னை உன்னை எம் எல்லோரையும்......

01.01.2010