Tuesday, July 30, 2019

என்றும் போல....

என்றும் போல....
(13வருடங்களின் முன்னர் ஒரு கரும்புலி வீரனின் நினைவாய் எழுதிய கவிதை)

சாந்தி நேசக்கரம்
நிலவுக் கதிர்களை
விழுங்கிச் செல்கிறது
மழைக்கால வானம்.

மாவீரம் சொன்னபடி
மழைத்துளிகள்
நிலம் நனைக்க
கருவறை வாசம் நினைவேற்று
நித்திரை அறுகிறது.....

ஒளிக்காட்சியொரு பொழுதில்
உயிர் அதிர்த்த ஞாபகத்தில்
விழிக்காட்டிக்குள்ளிருந்து
துளித்துளியாய் சொட்டுக்கள்.....

சென்று வருவதாய்
சொல்லிப் போனவனின்
கடைசிக் கடிதத்தின்
சொற்கள் கசங்சி மங்கலாகி
பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப்
பாடமான பின்னாலும்....
அவனைக் காணும் அவசரம்
என்றும் போல.....

இரவுக் கரி திரட்டி
ஒளியின் விழி தன்
உயிரில் திரிமூட்டி
ஊரதிர உயிர்க்காற்று
பேரதிர்வாய் நிறைகிறது.

சொல்லாமல் கொள்ளாமல்
சென்றவனின் சிரித்த முகம்
கொல்லாமல் கொல்கிறது.

'மீளவொரு பிறப்பில்
உன் கடன் முடிக்க வருவேன்"
நம்பிக்கைகள் இன்னும்
கரையாமல்....

21.11.06
சாந்தி நேசக்கரம்

Sunday, July 28, 2019

பார்த்திபனின் வரவு - பாகம் 2

16. 07. 1996 காலை...,
எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை.

ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். 

வலிக்கிறதா?  வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். 
இல்லை...,
ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். 

அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன்.  துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில்  இருந்த இயந்திரத்தில் இருந்து எனது சுவாசத்துடிப்பு இரத்த அழுத்தம் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

தாதியொருத்தி அருகில் வந்தாள். 
இப்ப எப்படி இருக்கு?
தண்ணி வேணும்... கேட்டேன்.

ஏறிக்கொண்டிருந்த மருந்து முடியும் வரை தண்ணீர் தரமாட்டோமென்றாள். துவாயொன்னை நனைத்து முகத்தைத் துடைத்து விட்டு தலையைத் தடவிவிட்டு கொஞ்சம் பொறுத்திரு என்றாள்.

மருந்து ஏறி முடிய மதியச்சாப்பாட்டு நேரமாகிவிட்டது.  கட்டிலோடு உருட்டிப்போய் எனக்கான அறையில் விடப்பட்டேன்.  மருந்து கழற்றப்பட்ட பிறகும் மணிக்கட்டில் ஏற்றப்பட்டிருந்த உரசி கழற்றப்படவில்லை.  நெருப்பு பட்டது போல கை வலித்துக் கொண்டிருந்தது.

எனது அறைக்கு கொண்டு வந்த பிறகும் என் பார்த்திக்குட்டியை கொண்டு வர அது தரவில்லை. மற்றவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை தூக்கி வைத்திருந்தார்கள்.

அவசர அழைப்புமணியை அழுத்தினேன்.  சற்று நேரத்தில் தாதியர்கள் வந்தார்கள்.  ஏன் அழைத்தாயெனக் கேட்டார்கள். 

எனது குழந்தையை ஏன் கொண்டு வரவில்லை? 

உங்கள் மகன் குழந்தைகள் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலநாட்கள் அங்கே அவர் கண்காணிக்கப்படுவார்.  நாளைக்கு பிறகு தான் நீங்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பார்கள். நீங்கள் தனியாக குளியலறை போக வேண்டாம்.  எங்களை அழையுங்கள்.  சொன்னவர்கள் போய்விட்டார்கள்.

தந்த சாப்பாடு மறந்து போனது.  கண்ணீர் தான் வந்தது.  சாப்பாட்டை விலத்திவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். 

என் குழந்தைக்கு என்ன நடந்தது? குழந்தைகள் கிளினிக்கில் ஏன் வைத்திருக்கிறார்கள் ?

மனம் தன்பாட்டில் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கியது.  வீட்டில் சிகரெட் வாடை வந்தாலே கதவுகளைத் திறந்து விட்டு அந்தப்புகை கருவறையில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரக்கூடாதென்ற என் கவனம்.... வெளியே போகும் நேரத்தில் சிகரெட் பிடிக்கும் ஆட்களின் பகுதியை தவிர்த்து எத்தனை கவனமெல்லாம் பார்த்தேன்...?

வீட்டுக்கு தொலைபேசியெடுத்தேன். மறுமுனையில் கலோ... என்ற குரல் கேட்டதும் அழுகை தான் வந்தது. பிள்ளையை நான் பாக்க தரேல்ல. குழந்தைகள் கிளினிக்கில் வைச்சிருக்கினமாம்.

ஏதாவது வருத்தங்கள் இருக்கோண்டு பாக்கவாயிருக்கும்.  நான் பின்னேரம் வாறன்.  இன்னும் ஆட்களுக்கு பிள்ளை பிறந்தது சொல்லி முடியேல்ல. சரி நான் வாறன் வந்து  கதைக்கிறேன். தொலைபேசி தொடர்பு அறுபடுகிறது.

மனம் அமைதி இல்லாமல் போனது. அப்படியே உறங்கிப் போயிருந்தேன். ஆட்களின் சத்தம் கேட்டு விழித்த போது அங்கிருந்த தாயர்களின் உறவினர்கள் நின்றார்கள்.   

பின்னேரப் பரிசோதனை நேரம்.  இரத்த அழுத்தம் காச்சல் பரிசோதிககப்பட்டுக் கொண்டிருக்க  அறைக்கதவைத் தட்டிக் கொண்டு வந்த நபரைக் கண்டதும் குழந்தை பற்றிய விபரம் கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருப்பதாகச் சொன்னார்கள்.  இன்னும் ஒருமணிநேரம் கழித்து மருந்து மீண்டும் ஏற்றப்படுமென்றாள் தாதி.

என் குழந்தையைக் காட்டினால் நான் உயிர்த்து விடுவேன் எனக்கத்த வேண்டும் போலிருந்தது.

அதொரு பிரச்சினையும் இல்லையாம் பிள்ளை மஞ்சள் நிறமாயிருக்கிறானாம்.  அதுதான் கண்ணாடிப்பெட்டியில வைச்சிருக்கிறாங்களாம்.  மூண்டு கிழமை செல்லுமாம் தர.

என் குழந்தை என் கையை விட்டுப் போனதான உணர்வு. அழுகை அழுகை அதுதவிர வேறெதுவும் தெரியவில்லை.

நான் பிள்ளையைப் பாக்க வேணும்.  கேளுங்கோ. 
நீ கேக்கிறமாதிரி காட்டமாட்டாங்கள் பேசாமல் இரு. அதற்கு மேல் என் துயரைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லையென்பது புரிந்தது.

நான் பிள்ளை பிறந்ததுக்கு பெடியளுக்கு பாட்டி வைக்க வேணும்.  எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறாங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அந்தரிக்கும்  எனது தவிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை. அதற்கு மேல் எதுவும் பேசும் மனநிலையும் எனக்கில்லை. எனக்குள் எல்லாத் துயரையும் விழுங்கிக் கொள்ளென்றது விதி.

நண்பர்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்வைக் கொண்டாட போய்விட்டார்.  மீண்டும் மருத்துவமனையில் நான்.

குழந்தைக்குப் பால் கொடுக்காத வலி உயிரைத்தின்றது. மார்பு கட்டிப் போனது. வுலியைக் குறைக்க மெசினில் பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் பார்த்திபன் என எழுதி வைக்கச் சொன்னார்கள். குழந்தைகள் கிளினிக்கிற்கு பாலை அனுப்புவோமென்றார்கள். எனக்காக ஒரு மெசின் தரப்பட்டது. பால்கட்டி வலியெடுக்கும் நேரம் பாலை மெசினில் எடுத்து கொடுக்க வேண்டும்.

பால்கொடுக்காமல் விட்டால் எவ்வளவு வலியென்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இதைவிடக் குழந்தைப் பேற்று வலியைக் கூட தாங்கிவிடலாம் போலிருந்தது. அந்தளவு வலி. வலிகளால் மட்டுமே என் வாழ்வு ஏனோ சபிக்கப்பட்டிருந்தது.

17. 07. 1996 காலை பரிசோதனைக்கு மருத்துவர்கள் வந்தார்கள். என் குழந்தையைப் பார்க்க வேண்டும் என கேட்டேன்.  மறுநாள் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போவதாக மருத்துவர் சொன்ன பதில் பாரமொன்று இறங்கிய அமைதியைத் தந்தது.

18.07.1996. காலை பத்துமணிக்கு தாதியொருவர் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போக வந்திருந்தார். கட்டிலால் இறங்க கைதந்தாள் வந்திருந்த தாதி. எழுந்து நிற்க தலைசுற்றியது.

நடக்க ஏலுமோ ? கேட்டவளுக்கு ஓமென்றேன். அறைக்கதவு வரை வந்ததன் பிறகு ஞாபகம் இல்லை. சில நிமிடங்களில் கண்விழித்தால் கட்டிலில் கிடந்தேன். தாழ் இரத்த அழுத்தம் எனச் சொன்னார்கள். மீண்டும் சேலைன் ஏறத்தொடங்கியது.

அந்த 3நாட்களும் வந்த மருத்துவமனைச் சாப்பாட்டை சரியாகச் சாப்பிடவில்லை. கட்டாயமாகச் சோறு சாப்பிட்டுப் பழகிய என்னால் உப்புச்சுவை குறைந்த உறைப்பே இல்லாத மருத்துவமனைச் சாப்பாட்டைச் சாப்பிட முடியவில்லை.

குழந்தையைப் பார்க்க பின்னேரம் அழைத்துப் போக வந்திருந்த மருத்துவத்தாதி சக்கரநாற்காலியொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினாள். அதிலே என்னை இருக்க வைத்து உருட்டிச் சென்றாள் 35ம் இலக்க கட்டடத்திற்கு. அங்கே அனுமதியின்றி எல்லோரும் போக முடியாதபடி கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள் கதவு திறபட்டது.

உள்ளே போனதும் ஒரு இடத்தைக் காட்டிச் சொன்னாள். கைளைக் கழுவிவிட்டு அந்தப் பகுதியில் போட வேண்டிய அங்கியொன்றும் தொப்பியும் தந்தாள். இனி எப்பொது வந்தாலும் இதுபோலவே கிருமிநீக்கியில் கைகழுவி அந்தப்பகுதிக்கான தண்ணீர்ப்பச்சை அங்கியும் வெள்ளைநெற் தொப்பியும் அணிந்து தான் உள்ளே போக வேண்டுமெனச் சொன்னாள்.

பெற்றோர் தவிர வேறுயாரையும் உள்ளே கூட்டிவரக் கூடாதெனவும் கூறப்பட்டது. என்னைக் கூட்டிவந்த தாதி குழந்தையைப் பார்க்கும் நேரம் முடியும் போது தங்களுக்கு தொலைபேசியில் அறிவிக்கச் சொன்னாள். மீண்டும் ஒருவர் என்னை அழைத்துப் போக ஒருவர் வருவார் எனச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

அவர்கள் சொன்ன யாவற்றையும் செய்து உள்ளே கூட்டிச் செல்லப்பட்டேன். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் குழந்தைகள். மாதங்கள் முழுமையடையாது பிறந்த குழந்தைகளுக்கு பெரிய மெசின்களில் உணவு உயிர்க்காற்று யாவும் போய்க் கொண்டிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுபோல மெசின்கள் கண்ணாடிப் பெட்டிகள் அவற்றுள் குழந்தைகள் பொம்மைகள் போலக் கிடந்தார்கள். கால்கள் நடுங்கத் தொடங்கியது. தொண்டை வரண்டு போனது. 4வுது கண்ணாடி அறையினுள் கண்ணாடிப் பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர் பிறந்த திகதி நேரம் நிறை உயரம் தலைச்சுற்றளவு எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. ஏனது குழந்தையை அந்த அடையாளத்தைப் பார்த்துப் போனேன்.

என் குழந்தை ஒரு பொம்மை போலக் கிடந்தான். கண்ணை மூடி வெள்ளைத்துணி போன்ற அகலமான பஞ்சினால் பாதிமுகம் கட்டப்பட்டிருந்தது. வெறும் மேலில் கட்டப்பட்ட பம்பஸ் மட்டுமே அவனது ஆடையாக இருந்தது. வெள்ளை நிறத்தில் மின்குமிழ் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கண்ணைப் பாதிக்காமல் இருக்க அந்த மின்குமிழ் போடப்பட்டிருப்பதாக அந்த அறைக்கு பொறுப்பாக நின்ற தாதி சொன்னாள். 5.30இற்கு பால் கொடுக்க வேண்டும் இன்னும் அரை மணித்தியாலத்தில் குழந்தையை வெளியில் தூக்கி வைத்திருக்க தருவதாகச் சொன்னார்கள். என் குழந்தையின் அருகில் எனக்கு ஒரு கதிரை தரப்பட்டது. அதில் இருந்து என் குழந்தையைப் பார்த்தேன்.

என் குழந்தைக்கு என்ன நடந்தது ? ஏன் இப்படி வைக்கப்பட்டுள்ளான் என்பதற்கான சரியாக விளக்கம் ஏதும் எனக்கு முழுமையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் குறைந்தது  மூன்று வாரங்கள் இப்படியே வைத்துத் தான் வீட்டுக்கு போக விடுவார்கள் எனச் சொல்லப்பட்டது. அது பற்றி மேலதிகமாக விசாரித்து விளங்கிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மொழியாற்றலும் இல்லை.

என் பார்த்திக்குட்டி அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் குப்புற கால்களைக் குடக்கிக் கொண்டு படுத்திருந்தான். அப்படியே அவனைப் பார்க்க அழுகைதான் மேலிட்டது.

5.35 மணிக்கு பார்த்திக்குட்டி அழத் தொடங்கினான். அங்கிருந்த சில குழந்தைகள் மெல்ல மெல்ல அழத் தொடங்கினார்கள். அந்த அறையில் இருந்த 8கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த குழந்தைகளின் தாய்களும் தந்தையர்களும் வந்து நின்றார்கள்.

வுந்தவர்கள் அவரவர் தங்கள் குழந்தைகளின் கண்ணாடிப் பெட்டியில் மின்குமிழை நிறுத்தினார்கள். பிறகு கண்ணைக் கட்டியிருந்த பஞ்சுத்துணியைக் கழற்றிக் குழந்தைகளைக் கையில் எடுத்தார்கள். எனது குழந்தையை எப்படி வெளியில் தூக்குவதென எனக்குத் தெரியவில்லை. அங்கு நின்ற ஒரு பெண் எனக்கு உதவினாள்.

மெசினில் எடுக்கப்படும் தாய்ப்பாலை பாதுகாக்க இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தனது குழந்தைக்கான பாலையும் எனது குழந்தைக்கான பாலையும் எடுத்து வந்து சூடாக்கித் தந்தாள்.

முதல் முதலாக குழந்தைக்குத் தாய்ப்பாலை சூப்பிப் போத்தலில் ஊட்டினேன். பால் குழந்தைகள் குடித்து முடித்ததும் தோழில் போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தார்கள். மற்றவர்கள் செய்வது போல நானும் பாலைக் கொடுத்துவிட்டு தோழில் போட்டு என் குழந்தையை முதகில் தடவினேன்.

அருகில் இருந்த மேசையில் வைக்கப்பட்ட பம்பஸ் பெட்டியை நானும் எடுத்துக் குழந்தைக்கு பம்பஸ் மாற்றத் தொடங்கினேன். அவன் கால்களை உதறிக் கொண்டிருந்தான். என்னால் மாற்ற முடியாதிருந்தது. என் போராட்டத்தை அவதானித்த மருத்துவத்தாதி எனக்கு உதவினாள்.

பார்த்திக்குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் உலகத்திற்கு வெளிச்சமாய் வந்த என் குழந்தையின் கைவிரல்களை கன்னங்களை தலையை எல்லாம் வருடினேன். அந்தச் சின்னக் கண்ணால் என்னைப் பார்த்தான். அவனோடு கதைபேசினேன். அவன் விரைவில் என்னோடு வர வேண்டுமென்று அவனுக்குச் சொன்னேன்.

ஏழுமணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறதென அறிவித்தார்கள். மீண்டும் குழந்தையை வாங்கி கண்ணைக் கட்டி மின்குமிழ் ஒளியில் கண்ணாடிப் பெட்டியினுள் குழந்தையைப் படுக்க வைத்தார்கள்.


Sunday, July 14, 2019

15.07.1996 பார்த்திபனின் வரவு பாகம் 1

15.07.1996 பார்த்திபனின் வரவு - பாகம் 1

12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை.

என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது.

வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும்.

அதவரை என்னால் தாக்குப்பிடிப்பேனா என்பது சந்தேகமாக இருந்தது. என்னை மருத்துவமனையில் விட்டுவிட்டு எங்கென்றாலும் போகுமாறு சொன்னேன். கடைசியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

பரிசோதித்த மருத்துவர் மறித்துவிட்டார். நாளை அல்லது மறுநாள் குழந்தை பிறக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே எனக்கான உடுப்புகள் ஒரு பையில் தயாராக வைத்திருந்தேன். அதனை வரும்போது கொண்டுவர மறந்து போனேன். எனக்கான அறையிலக்கம் தந்து போகச் சொன்னார்கள்.

ஏன்ர உடுப்புகள் எடுத்துவர மறந்து போட்டேன்....ஒருக்கா எடுத்து வந்து தாங்கோ...,
வெளிக்கிடேக்க ஞாபகம் வரேல்லயோ ? வந்த சினப்பையும் பேச்சையும் வாங்கிக் கொண்டேன்.

யாருமற்றுத் தனித்து மருத்துவமனையில் என் குழந்தையின் வரவுக்காகக் காத்திருந்தேன். ஓரிடத்தில் இருக்க முடியாது இடுப்பு வலித்துக் கொண்டிருந்தது. 
3வது மாடியில் அமைந்திருந்த மகப்பேற்றுப் பகுதியில் இருந்து முதலாவது மாடிவரை பலதடவை ஏறியிறங்கினேன். படியேறி இறங்கினால்  வலியின்றி விரைவில் குழந்தை பிறக்குமென்ற நம்பிக்கை.

மாலை ஆறுமணிக்கு இரவுச்சாப்பாடு கொண்டு வந்தார்கள். இரவு உணவாக மண்ணிறப்பாண் வந்திருந்தது. கத்தரிக்காய் உறைப்புக்கறியோடு அந்தப்பாணைச் சாப்பிட்டால் அதன் சுவை எப்படியிருக்கும் என்பதை எனக்குள் நினைத்துப் பார்த்தேன்.

நல்ல உறைப்புச் சாப்பிட வேண்டும் போலிருந்தது. எதையும் கொண்டு வந்து தரவும் ஆட்களில்லை. ஏன்னருகிலும் யாருமில்லாமல் தனித்திருந்தேன்.

குழந்தையின் அசைவோட்டம் எனது இரத்த அழுத்தம் சுவாசத்துடிப்பு யாவையும் பதிவு செய்யும் இயந்திரத்தை அருகில் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் அழைப்புமணியை அழுத்தச் சொன்னார்கள்.

ஆடிமாத வெயில் வெக்கை வியர்த்து எரிச்சலாக இருந்தது. தலைசுற்றிக் கொண்டிருந்தது.

இரவு ஏழுமணி. எனது அறைக்கு வந்த மருத்துவத்தாதி குழந்தையின் அசைவோட்டத்தை குறிக்கும் இயந்திரத்தின் வயர்களைப் பொருத்திவிட்டுப் போனாள். வயிற்றுள் இருக்கும் என் குழந்தையின் ஓட்டம் இரைச்சல் துள்ளல் கரகரப்பு என மாறிமாறி சத்தங்கள் வந்து கொண்டிருந்தது. 20 நிமிடங்கள் அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை இன்னும் 24 – 48 மணித்தியாலத்திற்கிடையே பிறக்கும் எனச் சொன்னார்கள். தாய்வாசல் விரிவடைந்தது போதாதெனவும் கூறப்பட்டது.


இரத்த அழுத்தம் 52-85 என இருந்தது. சீனிக்கட்டியில் 20துளிகள் மருந்தொன்றை சொட்ட வைத்துத் தந்த தாதி அதை மெல்ல மெல்ல உமிந்து விழுங்குமாறு சொன்னாள்.

கால் பகுதியால் கட்டிலை உயர்த்திப்படுக்க வைத்தார்கள். தங்களை அழைக்காமல் கட்டிலை விட்டு இறங்க வேண்டாமெனவும் ஏதாவது தேவையென்றால் அவசர அழைப்புமணியை அழுத்துமாறும் சொன்னார்கள். 

12.07.1996 – 15.07.1996 பின்னேரம் வரையும் கட்டிலைவிட்டு அதிகம் இறங்கவிடாமல் சேலைன் ஏற்றப்பட்டது. மருத்துவமனைச் சாப்பாடு உறைப்புமில்லை உப்புமில்லை புளிப்புமில்லை சப்பென்ற சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

15.07.1996 அன்று மதியம் மருந்துகள் கழற்றப்பட்டு குளிக்க அனுமதித்தார்கள். இரண்டுநாள் வெக்கையும் வியர்வையும் போக மென்சூட்டுத்த தண்ணீரில் முழுகினேன். அங்கேயும் அவசர அழைப்புமணியை எப்படி அழுத்த வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

இடுப்புவலி 5நிமிடங்களுக்கு ஒருமுறையாக இருந்து மெல்ல மெல்லக் கூடிக்கொண்டிருந்தது. தாங்க முடியாத வலி. அழுகையாக வந்தது. என் சிலுவைத் துயரைத் துடைக்க யாருமின்றிய தவிப்பும் தனிமையும் சேர்ந்த துயரைச் சொல்ல முடியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் எப்படி இருக்கிறேன் என்ன நடக்கிறது என்பதைக் கூட எட்டிப்பார்க்க முடியாதளவு கொண்டாட்டத்தில் இருந்தவரைத் தேடி தொலைபேசியெடுத்தேன். சில உடுப்புக்களும் மருத்தவமனை வெளிக்கிட்ட அன்று வைத்த கணவாய்கறியையும் கொண்டு வந்து தரச் சொன்னேன்.

சரியாக அவியாத வெள்ளையரிசிச் சோறும் பழைய கணவாய் கறியும் பகல் இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னேரம் கிறிக்கெட் விளையாடப் போக வேண்டுமெனச் சொல்லப்பட்டது. 3நாள் உறைப்பு இல்லாத சாப்பாட்டைவிட்டுவிட்டு பழைய கணவாய்க்கறியையும் சோற்றையும் சாப்பிட்டேன்.

தனது கோடைகால விடுமுறையை நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடியும் குடித்து டிஸ்கோவுக்குப் போய் கும்மியடித்தும் கொண்டாடிக் கொண்டிருந்தவரால் எனது வலியை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அடுத்த சில மணித்தியாலத்தில் சாப்பிட்ட கணவாய்க்கறியும் சோறும் சத்தியாக வந்தது. இடுப்பு வலி அதிகரித்துக் கொண்டிருந்தது. கட்டிலைவிட்டு இறங்க முடியாத வலி.

அழுதபடி  அவசர அழைப்புமணியை அழுத்தினேன். என்னால் தாங்க முடியாதிருந்த வலியை வந்திருந்த மருத்துவத்தாதிக்குச் சொன்னேன். 20வருடகாலம் மகப்பேற்றுப் பிரிவில் பணியாற்றும் அந்தத் தாதி என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அழாதே என ஆறுதல் சொன்னாள். இன்னும் சில மணித்தியாலங்களில் குழந்தை பிறந்துவிடுமென்றாள். உனக்கு வேண்டிவர்களைக் கூப்பிடென்றாள்.

தெரிந்த சிலரது வீடுகளுக்கு அழைத்து நிலமையைச் சொன்னேன். கிறிக்கெட் விளையாட அந்த வீட்டு ஆண்களும் போயிருப்பதாக பதில் வந்தது. அவர்களும் தாங்கள் தேடிச் சொல்வதாகச் சொன்னார்கள்.

இரவு எட்டுமணிக்கு பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்கள். வலி வலி வலி...எப்படி அதனை விளக்குவதென்று தெரியாத வலியது. கட்டிலில் படுக்க வைத்து பூட்டப்பட்ட இயந்திரத்தின் இரைச்சல் குழந்தையின் அசைவுகளோடு எனது இயங்குதலையும் குறித்துக் கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பிரசவ அறைக்குப் போன பிறகு பத்துமணி தாண்டியதும் மருத்துவர்கள் இருவரும் 3தாதியர்களும் என்னருகில் வந்தார்கள். அருகிருந்த அறைகளில் பெரும் கூக்குரல்களும் அழுகையுமாக இருந்தது.

பலரும் குழந்தைப் பேற்றின் கடைசி மணித்துளிகNளூடு போராடிக் கொண்டிருந்தார்கள். அனைவருக்குமே குடும்ப உறுப்பினர்கள் கணவர்கள் காவலிருந்தார்கள். கண்ணீர் துடைத்துத் தேற்றி ஆற்ற ஆட்களிருந்தார்கள்.  நான் தனியே போராடிக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது அறை தட்டப்பட்டது. கதவைத் திறந்து கொண்டு வந்தவரின் பியர் நாற்றம் தடுமாற்றம் மருத்துவர்களை தாதியர்களை அருவெருப்படைய வைத்தது. அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது. அந்தக் கணங்களை என்றுமே மறக்க முடியாது.

அந்த அந்தரமான நிமிடங்களில் கூட என்வலியைப் புரிந்து கொள்ளாத மனிதனாக என்னோடு கிரந்தம் கதைத்துக் கொண்டிருந்தது. நான் சத்தமாகக் கத்தியழுவது அவமானமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு நின்றது.

மருத்துவர்களும் தாதியர்களும் சுற்றி நின்றார்கள். வியர்வையில் வளிந்த முகத்தை ஒருதாதி ஈரத்துவாயால் துடைத்துவிட்டாள். குழந்தையின் அசைவோட்டத்தையும் எனது இரத்த அழுத்தம்  சுவாசத்துடிப்பு ஆகியவற்றை அவதானிக்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.  வயிற்றைச் சுற்றி கட்டப்பட்ட பட்டியைக் கழற்றியெறிய வேண்டும் போல அந்தரம். கால்பகுதியில் நின்ற மருத்துவரை உதைத்துவிட்டேன்.

என் ஓலக்குரலால் அந்த அறை நிறைந்திருந்தது. ஏல்லோரையும் தள்ளி விட்டு எழுந்து ஓடென்றது மனம். வாழ்வில் அப்படியொரு போதும் அழுதிருக்காத அழுகையது.

முதுகைக் குடங்கி படுக்குமாறு மருத்துவர் சொன்னார். முதுகில் ஊசியேறியது. இனி இடுப்புக்கு கீழ் வலிகுறையும் என்றார். தாங்க முடியாத வலி என்னைத் தின்று கொண்டிருந்தது. இடுப்பு எலும்புகள் ஒவ்வொன்றாய் உடைந்து போவது போலிருந்தது.

கைகளிரண்டையும் ஒரு தாதி இறுகப்பிடித்தாள். கால்களை அகட்டி மருத்துவர் ஒருவர் பிடித்தார். அடுத்த இரண்டு மருத்துவர்களும் „'நன்றாக முக்கு' என சொல்லிக் கொண்டு மேல் வயிற்றிலிருந்து கீழ்நோக்கி வயிற்றை அழுத்தினார்கள்.

மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. 1...2..3...இப்ப உனது குழந்தை வரப்போறான் நல்லா முக்கு...நன்றாக மூச்சை உள்ளிளுத்துக் கொண்டு முக்கு....4தடவை நான் முயற்சித்தும் என்னால் முடியவில்லை.

மூச்சடங்கிப் போவதை உணர்கிறேன். அனைவரின் குரல்களும் எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. கன்னத்தைத் தட்டி யாரோ எழும்பென்று சொல்வது கேட்கிறது. கால்களிரண்டினிடையிலும் மெல்லிய சூடாக திரவம் ஏதோ வெளிவருவதை  உணர்கிறேன்.

செயற்கைச் சுவாச மஸ்க்கினை முகத்தில் பொருத்தினார்கள். சில வினாடிகளில் எனது சுவாசத்துடிப்பு சீராகியது.  அந்தா பார் உனது குழந்தை எப்பிடி ஓடிவாறான்....நீ முயற்சி செய்தால் இன்னும் சில நிமிசத்தில உனது குழந்தை வெளியில வந்திடுவான்.....கணணித்திரையைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார் மருத்துவர்.

உன்னாலை முடியும் இன்னொரு தடவை முயற்சி செய் உனது சக்தியைத் திரட்டி முக்கு... சொல்லிக் கொண்டு வயிற்றை இரண்டு மருத்துவர்களும் ஊண்டி அமத்தினார்கள். அவர்கள் சொன்னது போல என் சக்தியெல்லாம் ஒன்றாகியதா அல்லது அவர்கள் அமத்திய அமத்தில் குழந்தை வெளியில் வந்ததா தெரியாது. 

23.20...மணிக்கு பார்த்திபன் பிறந்தான். என் நெஞ்சில் குழந்தையை மருத்துவர் படுத்திவிட்டார். என் பார்த்திக்குட்டி என் நெஞ்சில் கிடந்து அழுதான்.

பார் பார் வந்தவுடனும் அவருக்குப் பசிக்குது...மருத்துவர் சிரித்தார்.  அவ்வளவு நேரம் நான் அழுத அழுகை ஓய்ந்தது. அதுவரையில் என்னை வதைத்த வலியை என்னால் உணர முடியவில்லை.

புhர் அழகான குழந்தை நல்ல கறுப்பு தலைமயிர் வடிவான கண் மூக்கு முகம்...என ஒவ்வொன்றாகச் சொல்லிச் சிரித்தபடி தொப்புள் கொடியை வெட்டி குழந்தையைத் தாதியொருத்தியிடம் கொடுத்தார் மருத்துவர்.

குழந்தையின் நிறை உயரம் தலையின் சுற்றளவு யாவையும் அவள் எழுதி ஒரு அட்டையில் குறித்தாள். குழந்தையை மெல்லிய சுடுநீரில் கழுவிக் கொண்டிருந்தாள். மருத்துவர் கதைத்துக் கதைத்து என் வயிற்றிலிருந்து அகற்ற வேண்டிய கழிவுகளை அகற்றி தைத்துக் கொண்டிருந்தார்.

குழந்தையைக் கழுவிக் கொடுக்க அடுத்த மருத்துவர் குழந்தையின் கண்கள் கைகால்களை பரிசோதனை செய்துவிட்டு திரும்ப தாதியிடம் கொடுக்க அவள் பிள்ளைக்கு உடுப்புப் போட்டு என் நெஞ்சில் வைத்தாள்.

என் குழந்தையின் கைவிரல்களைப் பிடித்தேன் அவன் கன்னங்களை மெல்ல வருடினேன். எனக்கு புதுவாழ்வு தந்த கடவுளாக அவன் என் நெஞ்சில் கிடந்தான்.

கைகள் இரண்டையும் குடக்கி கால்களையும் மடித்து என் நெஞ்சில் கிடந்தான். என் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டேன். அவன் பஞ்சுக் கைவிரல்களை என் கன்னத்தில் வைத்து அழுத்தினேன். ஆழதான்.

அவனது வாயை பால்குடிக்க வசதியாக சரித்துப் படுக்க வைத்தார்கள். அவன் அழுதான். சில நிமிடங்கள் பாலை உறிஞ்ச முடியாமல் அழுதவன் கொஞ்ச நேரத்தில் அமைதியாக பால் குடிக்கத் தொடங்கினான்.   


14.07.2019

Sunday, March 17, 2019

மேடைகள் ஏறாமல் கடமை செய்த ஆற்றலாளன் வரதகுமார்.


Varadakumar uncle passed away. 13.03.2019 அனுராஜ் அனுப்பிய குறுஞ்செய்தியது.
ஏன் ? என்ன நடந்தது ? வேலையால் வந்தவுடனும் அனுராஜ் தொலைபேசிக்கு அழைத்தேன்.

வரதகுமார் என்ற பேராற்றலாளனின் மரணம் பற்றி அனுராஜ் சொல்லி முடித்தான். முகநூலில் பலரும் வரதகுமார் பற்றிய தங்கள் பகிர்வுகளைப் பகிர்ந்திருந்தார்கள்.

அங்கிள் என நாங்கள் அழைக்கும் எங்கள் ஆசானை இழந்துவிட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது.

வரதகுமார் என்றால் பலருக்கும் நினைவு வருவது லண்டன் கிங்ஸ்ரன் பகுதியில் அமைந்த ‚'துளசி இல்லம்' தமிழர் தகவல் மையம் தான். என்ன வகையான தகவல்கள் வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பதோடு இல்லாமல் என்ன தகவல் கேட்டாலும் தந்துதவும் மனிதர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இனங்காட்டி மேடைகள் ஏறாமல் தன் கடமைகளைச் செய்து கொண்டிருந்த கடமையாளன்.

விடுதலைப்புலிகளின் தவறுகள் என பட்டியலிடுவோரின் முன்னால் விடுதலைப்புலிகளின் நேர்மையை சரிகளை வெளிப்படுத்துவார், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது பற்றாளர்கள் முன் விமர்சனங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

எந்த அரசியல் சார்ந்தோரையும் தன் நட்பிலிருந்து விலத்தி வைக்காமல் எல்லோரையும் ஆதரித்து அணைத்துச் சென்ற ஆழுமை.

புலரால் புரிந்து கொள்ளப்பட்ட சிலரால் விமர்சிக்கப்பட்ட வரதகுமார் அவர்களை முதல் முதலில் 2012ம் ஆண்டு தொடக்கத்தில் சந்தித்தேன்.

நேசக்கரம் பணிகள் பற்றி அறிந்து எனக்கு முதல் முதலாக மின்னஞ்சல் எழுதியிருந்தார். தமிழர் தகவல் மையத்தில் ஒரு உறுப்பினராகி தனது பணிகளைத் தொடங்கியிருந்த அனுராஜ் தான் முதல் முதலில் வரதகுமாரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்திருந்தான்.

துளசி இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழர் தகவல் மையம் வெறும் தகவல் செகரிப்பு மையம் மட்டுமல்ல தாயகத்திற்கான பல்வேறு பணிகளையும் செய்து கொண்டிருப்பதை வரதகுமார் அவர்கள் அறியத்தந்தார். சில உதவித்திட்டங்களில் அவர்களோடு நேசக்கரமும் இணைந்து கொண்டது.

யானைப்பசிக்கு சோளப்பொரியாக செயற்படும் எங்கள் உதவிப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்ட எதிர்காலத் திட்டமிடல் செயற்படுத்தல்களோடு பெரும் பலமாக மாற வேண்டிய தேவையை அவரைச் சந்தித்த பிறகே உணர்ந்து கொண்டேன்.

அந்தச்சந்திப்பின் பின்னர் நேசக்கரம் தாயகப்பணியாளர்களோடு வாராந்த உரையாடலில் பலவிடயங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அவை பற்றி அடிக்கடி  மின்னஞ்சலில் தொலைபேசியில் பரிமாறிக்கொள்வோம்.

போரால் பாதிப்புற்ற பெண்களுக்கான திட்டங்கள் மட்டுமன்றி சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைச் சேகரித்துக் கொடுத்திருந்தேன். சட்ட ரீதியான சில வேலைகளைச் செய்து தந்தார். சட்ட ரீதியாக வெளியுலகுக்கு தகவல்களைக் கொண்டு செல்ல வேண்டிய பாதைகளை உருவாக்கித் தந்தார். இப்படி நிறைய பொதுப்பணிகளோடு தன் ஆலோசனைகளாலும் கற்பித்தலாலும் எம்மை வழிநடத்தியவர்.

தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம் ஊடாக பெண்களை உள்வாங்கி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் திட்டத்தினை முன்வைத்து என்னையும் தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றத்தில் அங்கத்துவராக்கி ஒரு பொறுப்பையும் தந்திருந்தார்.

அத்தோடு ஆங்கில மொழிக்கல்வியை கற்க வைத்து அனைத்துலக அரங்கில் இயங்கக்கூடில வழியினையும் ஏற்படுத்தித் தந்தார். ஆனால் என்னால் தொடர்ந்து அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடியாத தனிப்பட்ட வாழ்வுச்சிக்கல் ஒதுங்க வைத்துவிட்டது.

இன்று அவரில்லாத நாட்களில் அவர் காட்டிய வழியில் போயிருந்தால் எனது ஆங்கில அறிவும் உயர்ந்திருக்கும் பலருக்கு என்னால் நிறைய உதவியிருக்கவும் முடிந்திருக்கும்.

பெண்களை அரசியல் வேலைத்திட்டங்களில் இணைப்பது பற்றி நிறையவே பகிர்ந்து கொள்வார். அவரது கனவுகளில் ஒன்று தமிழ்ப்பெண்களை இணைத்து சர்வதேச சமூகத்தோடு இணைந்து பணியாற்றக்ககூடிய ஆற்றல் மிக்கவர்களை உருவாக்குதல். அதற்கான பயிற்சிகளை வழங்கவும் ஒழுங்குகளைச் செய்து பலரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அவரது சிந்தனையைப் புரிந்து கொண்டு உண்மையாக இயங்குவதற்கு பெரிதாக யாரும் அக்கறை காட்டவில்லை. அவரது பல முயற்சிகள் தோல்வியடைந்து போனது. காரணம் அவரது எதிர்பார்ப்பை சரியாக உள்வாங்கி செயற்படாமல் பலர் இடையில் ஒதுங்கிப் போனார்கள்.  அவரது கனவு நிறைவேறாமலே கலைந்து போய்விட்டது.

2013அனைத்துலக விதவைகள் தினம் லண்டனில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். அந்நிகழ்வில் உரையாற்ற என்னையும் அழைத்திருந்தார்.

பெரும்பான்மையானோர் ஆங்கிலத்தில் தான் அங்கே உரையாற்றினார்கள். அதில் நான் தமிழில் என்ன சொல்ல ? எனக்கேட்ட போது நீங்கள் தமிழில் உரையாற்றுங்கள் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரை ஒழுங்கு செய்வதாக கூறி என்னை அந்த மேடையில் ஏற்றுவித்தார்.

தமிழ் நிகழ்வுகளில் மேடையேறுவது எனக்குப் பழகிப்போன காரியம்.  வேற்று நாட்டவர்கள் அங்கம் வகிக்கும் மேடையில் ஏறியது அதுவே எனக்கு முதல் அனுபவம். அந்நிகழ்வுக்கு தாயகத்தில் இருந்து திருமதி சாந்தி சச்சிதானந்தம் உட்பட பலரும் பேச்சாளர்களாக வந்திருந்தார்கள். அந்த மேடை எனக்கு மென்மேலும் பல திட்டங்களை நேசக்கரம் ஊடாக உருவாக்கவும் செயற்படுத்தவும் உதவியது. புதிய எண்ணங்களை செயற்திட்டங்களையும் உருவாக்க புதிய வழிகளை யோசிக்க வைத்தது.

2014 சர்வதேச பெண்கள் தினத்தை ‚'தமிழ்ப் பெண்கள் அபிவிருத்தி மன்றம்' ஏற்பாட்டில் செய்யலாமெனக் கேட்டிருந்தேன். தமிழ்ப்பெண்களை  பலதரப்பிலும் இருந்து அழைத்ததோடு நின்றுவிடாமல் அந்நிகழ்வுக்கு குர்திஸ் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்போராளிகளையும் அழைத்து அவர்களது அனுபவங்களையும் பகிர வைத்தார்.

உலகில் போராடும் தேசங்களோடு நாங்கள் எவ்வாறு உறவைப பேண வேண்டும் அரசியல் பணிகளைத் தொடர வேண்டும் என்பதனை அந்நிகழ்வில் உணர்த்தியிருந்தார்.

அந்நிகழ்விற்கு பீபீசி நிறுவனத்தில் பணியாற்றிய ஊடகர் பிரான்ஸ்சிஸ் கரிஷன் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் அழைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தார். அந்நிகழ்விலும் எனது உரையை தமிழில் செய்தேன். வெளிநாட்டவர்களுக்காக எனது உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரை நியமித்தார். எனது இரண்டாவது உரை ஆங்கில மொழிபெயர்ப்போடு நிகழ்ந்தது அன்று.

ஆழுமைப் பெண்களை அன்றைய அரங்கில் மதிப்பழிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். கேட்டதும் சிரித்தார்.

சாந்தி ஒரு விருது குடுக்கிறதெண்டால் அந்த விருதைப் பெற நீங்கள் தெரிவு செய்யும் நபர் தகுதியானவராக இருக்க வேண்டும். அரசியல் பேதம் கட்சிபேதம் பாராமல் தெரிவு செய்ய வேணும் அதுதான் சரியான ஆழுமைக்கான விருது. என தனது கருத்தை முன்வைத்தார்.

அவரது கருத்துக்கமைய சிலபெண்களை தெரிவு செய்து அனுப்பினேன். தன்சார்பாக சில ஆழுமைகளின் பெயர்களையும் சிபாரிசு செய்திருந்தார். ஆழுமைப் பெண்களில் மானிடத்தின் குரல் 2014 விருதினை ஊடகர் பிரான்சிஸ் கரிஷன் அவர்களுக்கு வழங்கினோம். அவ்விருதினை போராளி சீதா அவர்கள் பிரான்சிஸ் கரிஷனுக்கு வழங்கினார்.

ஏப்போதுமே நாம் நடாத்தும் நிகழ்ச்சிகளுக்கு முழுமையான தனது ஆதரவு ஒருங்கிணைப்பு யாவையும் செய்து தந்துவிட்டு நாங்கள் மேடையேற அரங்கின் கடைசிக் கதிரையில் போயிருந்து நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவார். அடுத்த நிகழ்வு இன்னும் எப்படி சிறப்பாக நடத்தலாம் என்பதை அடுத்த சந்திப்பில் கருத்திடுவார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த விரும்பாமல் எம்மை வழிநடத்திய தலைமைத்துவச் சிறப்பாளன்.

தாழ்ந்து போகத் தயரானவர்களே தலைமைத்துவப்பண்பும் தலைவராகும் தகுதியும் உள்வர்கள் என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டிய மனிதர். 2014 அனைத்துலக பெண்கள் தினத்தில் எங்களுக்கு பின்பலமாய் ஆதரவு தந்துதவிய வரதகுமார் , அனுராஜ் இருவரையும் மேடைக்கு அழைத்து கௌரவம் செய்தோம்.

வரதகுமார் அவர்கள் அந்த அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென மேடைக்கு வருமாறு அழைத்ததும்.., ஏனென்னை கூப்பிடுறியள் எனக் கேட்டார். ஆனால் சபையின் முன் எங்கள் அழைப்பையேற்று மேடைக்கு வந்து கௌரவத்தை ஏற்றுக் கொண்டார்.

வருடாவருடம் ஒவ்வொரு நாடுகளிலும் அனைத்துலக பெண்கள் தினத்தை தமிழ்ப்பெண்கள் அபிவிருத்தி மன்றம் ஊடாக நடாத்துவதென அன்று திட்டமிட்டோம். ஆனால் காலவோட்டம் தொடர்ந்து அதை நிறைவேற்ற முடியாது எங்களைக் கடந்து போய்கொண்டிருக்கிறது. 

பொதுவாகவே தமிழ் அமைப்புகளின் எற்பாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழர்களால் தமிழர்களுக்கான பரப்புரைகளாகவே இருக்கும். ஆனால் வரதகுமார் அவர்கள் அனைத்துல இராஜதந்திரிகள் , தொண்டு அமைப்புகள் , விடுதலைக்காக போராடிய உலகப் போராளி அமைப்புகள் , அரசியல்வாதிகள் என பலரையும் அணுகி அவர்களோடெல்லாம் எங்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லும் வழிகளைத் தேடியவர் செயற்பட்டவர்.

அவரது இச்செயற்பாடானது பொதுவான தமிழ் மனநிலையில் துரோகமாக உலக உளவு அமைப்புகளின் முகவராக புனைவுகளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டவர்.

புலிக்கொடியால் கௌரவம் பெறுவதையே தங்கள் வாழ்நாள் கொள்கையாக வரித்து தமிழினத்துக்கு துரோகம் செய்யும் பலரால் வரதகுமார் விமர்சிக்கப்பட்டவர். அனால் அந்த விமர்சகர்கள் ஆயும் பத்தி ஆய்வுகளுக்கான தகவல்களை பின்கதவால் வரதகுமாரிடமிருந்து பெற்றவர்கள் பலர். அத்தகையவர்களை அவர்களது இயல்பை அறிந்திருந்தும் அவர்களையெல்லாம் முறித்து கோபித்துக் கொள்ளாமல் நட்பை பாதுகாத்துக் கொண்டவர்.

இன்னும் சிலர் துளசி இல்லத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தங்கள் பறக்கணிப்பை செய்வார்கள். இப்புறக்கணிப்பு எவ்வளது மடமைத்தனம் என்பதை இன்னும் உணராது இருப்போர் பலர்.

தமிழர் தகவல் மையம் அனைத்துத் தரப்பையும் துளசி இல்லத்தில் வரவேற்றிருக்கிறது. யாரெல்லாம் தமிழினத்து விரோதிகள் துரோகிகள் என சில குழுக்கள் வகுத்து வைத்துள்ளார்களோ அவர்களையெல்லாம் வரதகுமார் கைகுலுக்கி துளசி இல்லத்தில் வரவேற்றுள்ளார். அவர்களோடு பணியாற்றியுள்ளார்.

அனைவரும் இணைந்ததே தமிழர் விடுதலையென்ற உண்மையை புரிந்து செயற்பட்டவர் இறக்கும் வரையும் தனது எல்லையை விட்டு விலகாமல் இயங்கி ஓய்ந்தார்.

தான் இல்லாது போனாலும் தமிழர் தகவல் மையத்தை தொடர்ந்து செயற்பட வைக்க அவரால் உருவாக்கப்பட்ட இளையோரும் ஆற்றலாளர்களும் அவரது இடைவெளியை நிரப்பி காலத்தின் பணியைச் செய்வார்கள்.

பலர் வாழும் வரை அவர்களது மதிப்பு பெறுமதி தெரிவதில்லை. ஆவர்கள் மறைந்த பிறகு வரும் நினைவுமீட்டல்கள் கூட காலவோட்டத்தில் அழிந்து அந்நபர்களையே காலம் மறந்துவிடுகிறது. வரதகுமார் இத்தகைய புறக்கணிப்புகளால் மறைக்கப்பட்ட இறுதி நபராக இருக்க வேண்டும். வுhழும் போது வல்லமையாளர்களை இனங்கண்டு அவர்களை கௌரவிப்போம். மதிப்பழிப்போம்.


சாந்தி நேசக்கரம்.
15.03.2019

Sunday, December 16, 2018

விடுதலைப் புலிகள் பெயரில் நடைபெறும் ஏமாற்றுக்களும் அறிக்கைகளும்.

விடுதலைப் புலிகள் பெயரில் நடைபெறும் ஏமாற்றுக்களும் அறிக்கைகளும். 
___________________________________________

01.12.2018 அன்று விடுதலைப்புலிகளின் அரசில்துறை பிரதிநிதி  குரபரன் குருசாமி மற்றும் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கள் இருவரும் கையொப்பமிட்ட அறிக்கையொன்று வெளியாகியிருந்தது.

(தமக்குத்தாமே லதன் , குரபரன் சூட்டிக்கொண்ட பதவிகளே மேற்படி பதவி நிலைகள்)

அவ்வறிக்கையானது விடுதலைப்புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வமான  கடிதத்தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

'ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமது கையொப்பங்களோடு ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தனர்.

குருபரன் , லதன் ஆகியோரை நியமதித்தோர் விடுதலைப்புலிகள் எனவும் ஒளியூடகம் ஒன்றில் குருபரன் செவ்வியொன்றினையும் வழங்கியிருந்தார்.

இன்னும் இயங்கு நிலையில் விடுதலைப்புலகள் இயக்கம் இருப்பதாகவும் தெரிவித்திருந்த குருபரன் பற்றிய வரலாறு அவர் மீதான கேள்விகளுமே இப்பதிவை எழுத வைத்துள்ளது.

குருபரன் யார் ?

2002ஆண்டின் பின்னர் சகோதரன் ஒருவரின் அனுசரணையில் டென்மார்க் நாட்டிற்கு வந்து பின்னர் சுவிஸ் நாட்டின் அகதி அந்தஸ்தைப் பெற்றிருப்பவர். (இவைபற்றிய தகவல்கள் தேவைப்படும் போது விரிவாக எழுதப்படும்)

சுவிஸ்நாட்டில் இயங்கும் அனைத்துலக செயலகத்தில் ஆதரவாளராக இணைந்த குருபரன் இளையோர் அமைப்பில் அங்கத்தவராக இயங்கினார்.

 2009 யுத்த முடிவின் பின்னர் ஈழத்தமிழர் மக்களவையின் அங்கத்தவரானார். மக்களவையோடும் முரண்பாடு வந்து மக்களவையால் நீக்கப்பட்ட போது இடிந்து போனார் குருபரன்.

இக்காலப்பகுதியில் சுவிஸ் குடியுரிமை பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனது சொந்த பொருளாதார பலத்தை உயர்த்தத் தொடங்கினார். (தனிமனித வாழ்வை அவரவர் மேம்படுத்துதல் தவறான வியடம் அல்ல. அது அவசியமானதும் கூட)


2018 'தமிழர் இயக்கம்' என்ற ஒரு அமைப்பை உத்தியோக பூர்வமாக அறிவித்து இயங்கத் தொடங்கினார். 2009 காலத்திலிருந்து 2018 காலப்பகுதிக்குள் அங்குமிங்கும் அலைபாயும் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.

தனக்கான பதவி இல்லையென்றதும் கட்சிதாவும் அரசியல்வாதிகள் போல் தாவித்திரியும் குருபரனின் இலக்கற்ற செயற்பாடாகவே அவரது தமிழர் இயக்கம் அமைகிறது.

இவரது தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கிய செயற்பாடு என்பதும் கேள்விக்கு உள்ளாகிறது. தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளை தனது பேச்சுகளில் பயன்படுத்திக் கொள்வது கூட வாய்ச் சொல்லாகவே இருக்கிறது.

10.01.2018 அன்று 20min எனும் சுவிஸ் பத்திரிகை குருபரனிடம் செவ்வியொன்றை எடுத்திருந்தது. குருபரனுக்கு கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம் அது. அச்சந்தர்ப்பதை தனது தெளிவான கொள்ளையில்லாத தாவும் மனப்போக்கால் தவறவிட்டிருந்தார்.

பத்திரிகையாளர் (கேள்வி):- நீங்கள் தமிழர் அமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். உங்களின் உந்துசக்தி என்ன ?

குருபரன் (பதில்):-
என்னுடைய அப்பா ஒரு விவசாயி. யாழ்ப்பாணத்திற்கு அருகில் விடுதலைப்புலிகளிற்கு தன்னுடைய காணிக்குள்  அடைக்கலம் கொடுத்தவர். நான் வயிற்றில் இருந்த போது சிறீலங்கா இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டார். என்னைக் காப்பாற்றுவதற்காக எனது அம்மா ஏஜென்சி மூலம் எனது 9வது வயதில் ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தார். இப்பொழுது என்னுடைய அப்பா விரும்பிய தமிழீழத்திற்கான பேராட்டத்தினை நான் முன்னெடுக்கிறேன்.

அப்பத்திரிகையின் இன்னொரு கேள்வி :- தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் நீங்கள் அங்கே சென்று வாழ்வீர்களா ?

புதில் : (குரபரன்):-
இப்பொழுது நான் ஒரு சுவிஸ் தமிழ் பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன். எனவே நான் திரும்பிப்போவேன் என்று நான் நினைக்கவில்லை.

தந்தையின் கனவை நிறைவேற்ற குருபரன் போராடுவது இலங்கையின் வடகிழக்குப் பிரதேசமான தமிழீழம். ஆனால் தேசம் கிடைத்தால் தாயகம் திரும்புவதற்கு தயாரில்லை.

இவர் பெற்றுத்தரப் போகின்ற தமிழீழம் யாருக்காக ?

வெளிநாட்டு வாழ்வின் சொகுசை சுகத்தை விட்டுப் போகமாட்டேன். ஆனால் தமிழீழத்திற்காக போராடுவேன். என்பவரின் கருத்தும் கொள்கையும் சுயநலம் என்பதைவிட வேறெந்தச் சொல்லாலும் சரி செய்ய முடியாது.

ஆனால் குரபரன் தன்னை விடுதலைப்புலகளின் அரசியல்துறை பிரதிநிதியாக பிரகடனப்படுத்தி ஊடகங்களில் கருத்துச் சொல்லும் கருத்துக்களும் மீண்டும் மீண்டும் தெளிவற்ற இலக்கற்றவர் என்பதையே சுட்டிக்கொண்டு இருக்கிறது.

சரி இவை ஒருபுறமிருக்கட்டும்.

2002ம் ஆண்டு குருபரன் பதின்ம வயதினை அடையாத சிறுவன். 2002ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகள் அமைப்பும் இலங்கையரசும் சமாதான உடன்படிக்கை செய்து அரசியல் பேச்சுவார்தைகளை ஆரம்பித்தகாலம்.

ஆக குருபரனை அரசியல்துறை பிரதிநிதியாக நியமிக்கும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் குழந்தைப் போராளியாக குருபரனை விடுதலைப்புலிகள் அமைப்பு உள்வாங்கவில்லை. உள்ளே எடுக்கவும் இல்லை.

அப்படியாயின் குருபரன் எப்படி விடுதலைப்புலிகள் அரசியல்துறை பிரதிநிதியானார் ? எனும் கேள்வி சாமான்ய மக்களாகிய எங்களிடம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

அதுமட்டுமன்றி 10.01.2018 அன்று குரபரன் சுவிஸ்நாட்டிலிருந்து வெளியாகும் „' 20min ' பத்திரிகையில் வழங்கிய செவ்வியில் அப்பத்திரிகையானது அப்போது குருபரனின் வயது 26என குறிப்பிட்டிருந்தது.

20min பத்திரிகையானது குறிப்பிட்ட அடிப்படையில் பார்த்தால் குருபரன் வெளிநாடு வரும் போது குருபரனின் வயது பத்து. 2009 விடுதலைப்புலிகள் வீழ்ச்சிகாணும் போது குரபரனின் வயது பதினேழு.

அப்படியானால் 18வயதிற்கு குறைந்த சிறுவர்களை புலிகள் அமைப்பு படையில் இணைத்தார்கள் என உலகம் சுமத்தும் குற்றச்சாட்டினை குருபரனே மெய்யாக்குகிறாரா ?

இது விடுதலைப்புலிகளின் பெயரையே அனைத்துலக
சமூகம் கேள்விக்கு உட்படுத்தும் தவறல்லவா ?

இன்னொரு உண்மையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தள்ளப்படுகிறேன்.

சமாதானப்பேச்சுக்கள் தோல்வியுற்று விடுதலைப் புலிகள் யுத்தமென்று முடிவெடுத்த போது வன்னியில் நாட்டுக்கான பணியைச் செய்ய இளையோர் அனைவரையும் விடுதலைப்புலிகள் இயக்கம் போராட அழைத்தது.

அப்போது  குருபரனின் அக்காவையும் விடுதலைப்புலிகள் அழைத்திருந்தனர். இதையறிந்த குருபரன் அனைத்துலக செயலகத்தின் திரு.கஸ்ரோ அவர்களோடு கடிதப்போர் செய்தார் , தோலைபேசியில் முரண்பட்டார்.
 சுவிசில் இருந்து நான் தமிழீழத்திற்காக போராடுகிறேன் எனது அக்காவை விடுமாறு கோரிக்கொண்டிருந்தார். 

அவரது தாயார் விடுதலைப்புகளின் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து குருபரனின் சகோதரியைக் கடத்தி மறைத்து வைத்திருந்தார்.

 2009மே மாதத்தை அண்டிய காலம் இரவோடு இரவாக குருபரனின் தாயார் குருபரனின் சகோதரியை அழைத்துக் கொண்டு இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுளைந்தார். வுவனியா நலன்புரி நிலையத்தில் அடைக்கலமானார்கள்.

வெளிநாட்டிலிருந்து பணம் கொடுத்து தனது தாயாரையும் சகோதரியையும் இந்தியா அழைத்து பாதுகாத்தார் குருபரன்.

இவரது தாயார் மகளைக் காத்தது தாய்மை. சகோதரனாக குருபரன் இந்தியா அழைத்தது சகோதரபாசம்.

அரசு மீள்குடியேற்றம் செய்யத் தொடங்கிய போது வெளிநாட்டுப்பணத்தையும் கொடுத்து கொள்வனவு செய்த காணிகளையும் அரச சலுகைகளையும் பெற்று தனது குடும்பத்திற்கான வசதிகளைச் செய்து கொடுத்துக் கொண்டு சுவிசிலிருந்து தமழீழம் யாருக்கு வாங்கித் தரப்போகிறார் குருபரன் ?

பணம் உள்ளவர்கள் தப்பிக்க ஏழைகளும் விடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் வாழ்வைக் கொடுத்த போராளிகளும் இலங்கையரசால் சிறையிடப்பட்டது சித்திரவதை செய்தது இன்னும் தொடர்வது முற்றாத கதைகள்.

எனக்கு நடந்தால் துயரம் மற்றவருக்கு நடந்தால் போராட்டம் . இதுவா குருபரனின் அரசியல் நிலைப்பாடு ? தமிழீழத்திற்காக போராடும் வீரம் ?

குருபரனிடம் மேலும் சில கேள்விகள் :-

2002 ஆரம்பித்த சமாதான காலத்தில் புலம்பெயர் நாடுகளில் இருந்து பல இளையோர்கள் தாயகம் சென்றார்கள். ஆயுதப்யிற்சியும் எடுத்தார்கள். களங்களும் கண்டார்கள். இறுதியில் காணாமலும் போயிருக்கிறார்கள். 

ஆனால் நீங்கள் ஏன் தாயகத்திற்குப் போகவில்லை ? ஆயுதம்  ஏந்திப் போராடவில்லை ?

உங்கள் அக்காவை விடுதலைப்புலிகள் போராட்டத்தில் இணைத்த போது போராட விடவில்லை?  ஏன் பணம் கொடுத்து நாடுகடத்தினீர்கள் ?

நாடு கிடைத்தால் தாயகம் திரும்பமாட்டேன் என சுவிஸ் பத்திரிகையிலேயே பதிவு  செய்தது ஏன் ?

ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயங்குநிலையில் இருந்த போது அதுவொரு துன்பியல் சம்பவமென சொல்லியிருந்தார்கள். 1991 தளபதி கிட்டு மறுத்த விடயத்தை 2002 ஊடகமகாநாட்டில் தெளிவாக 'அதுவொரு துன்பியல்' சம்பவமென தலைவரே ஏற்றுக் கொண்டார்.

நீங்களும் லதன் சுந்தரலிங்களும் தற்போது புலிகளின் பிரதிநிதிகளாக புல(கிழ)ம்பியிருப்பது எவருக்கான வால்பிடிப்பு ?

ராஜீவ் மரணத்தில் சரி பிழைகளுக்கு அப்பால் தங்களைத் தியாகம் செய்தவர்களை இரட்டை முகவர்களாக நீங்கள் சித்தரிப்பதன் நோக்கம் என்ன ?
அந்தத் தியாகத்தை துரோகமெனச் சித்தரிக்க நீங்கள் யார்?
நீங்கள் எவரிடம் கூலிவாங்கும் முகவர்கள் ?

இந்தியாவுக்கு ஒரு சுப்பிரமணியசுவாமி போல ஈழத்தமிழர்களுக்கு குருசாமி மகன் குருபரனா ?


2009 ஆயதங்களை மௌனிக்கிறோம் என அறிவித்துக் கொண்ட போதே விடுதலைப்புலிகள் இயக்கமானது தனது இயங்குதலையும் இழந்து போனது.

 தற்போது  மிஞசியிருப்போர்  விடுதலைப்புலிகள் அமைப்பில் போராடிய உறுப்பினர்களே. அரசியல்  நீரோட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய உரிமையும் பொறுப்பும் அவர்களுக்கானதே.

நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையை நம்பி இந்தியாவும் உலகமும் விடுதலைப்பலிகளின் தடையை நீக்குமென குழந்தைத்தனமாக நம்புவது என்ன வகையான பம்பாத்து ?

பிற்குறிப்பு :-

குருபரனின் செம்பொன்று என்னிடம் தொடர்பு கொண்டு சொன்னது யாதெனில் :-

விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகள் அனைவரும் ஒன்றுபட்டே குருபரன் , லதனை நியமித்ததாகக் கூறியிருந்தது. 

இதுபற்றி கேள்வி கேட்ட பலரை அடக்கிவிட்டோம் நீர் எதற்காக எதிர்த்து வருகிறீர் என கொடுக்குக் கட்டிக் கொண்டு வந்து தொலைபேசினார். (இவர் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்ததாய் வரலாற்றில் எந்த பதிவும் இல்லை.சுதந்திரமாய் இலங்கை சென்று வரக்கூடிய வசதியையும் வாய்ப்பையும் பெற்ற தேசியவாதி)
குருபரன் குருசாமி , லதன் சுந்தரலிங்கம் ஆகியோரின் அறிக்கை தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த பல மூத்த இளநிலைப் போராளிகளிடம் இது குறித்துக் கேட்ட போது அவர்கள் தந்த பதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த தமக்கும் இவ்வறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதே.

நான் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. விடுதலைப்புலிகளை நேசிக்கும் அவர்களது தியாகங்களை மதிக்கும் ஒரு ஆதரவாளர். குருபரன் ,லதன் ஆகியோரின் அறிக்கை மீதான எனது அதிர்வே இக்கட்டுரையாகும்.

தாயகம் கிடைத்தால் ஊரில் போய் வாழுவாயா ? என்னிடம் யாரும் கேட்டால் எனது பதில். 
ஓம் போவேன். 
எனது மண்ணில் வாழ்வேன். 

ஆனால் எனது வாழ்வுக்காக இன்னொருவரின் உயிரைக் கொடு என்று கேட்கமாட்டேன். அவர்கள் வாழ்வை மேம்படுத்த இப்போதைக்கு என்னால் இயன்ற பணிகளை மட்டுமே அதுவும் வெளிநாட்டில் இருந்தபடியே செய்ய முடியும்.

ஏனெனில் யாரோ எனக்காக போராட நான் வெளிநாட்டு வாழ்வை வாழ்ந்தேன் என்ற குற்றவுணர்வு இனிமேலும் இன்னொருவரை போராடு எனச்சொல்லும் தைரியத்தை தரவில்லை.

இன்னும் வளரும்.... (சாந்தி நேசக்கரம்)
15. 12. 2018

Sunday, June 17, 2018

நூறாய் பெருகும் நினைவு


நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., 
ஓமோம்... சொல்லியும்

நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., 
ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை

அப்ப ஊரில எந்த இடம்?

சிலருக்கு பூராயம் ஆராயாமல்  பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன்.

அதையும் மீறி வரும் கேள்வி இது :...., 
அப்ப வெளிநாடு வந்து கனகாலமோ?  
இங்கை இப்ப எங்க  இருக்கிறியள்?  

சிலர் மேலும் விபரம் அறியும் ஆர்வத்தை இப்படியும் கேட்டு வழிமறிப்பார்கள்

நீண்ட காலம் வாழ்ந்த இடத்தை விட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள்  தொலைவாக ஒதுங்கியது...., 

 பழைய நினைவுகளைத் தொலைத்து புதிய நினைவுகளைச் சேமித்து மீள வேண்டும் என்பதும் பிரதான காரணம்

அத்தோடு அதிகமாக தமிழர்கள் அல்லாத இடத்தை தேர்வு செய்தது யாருக்கும் என் தற்கால இருப்புப் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே

புதிய இடத்தில் வேலை. பெரும் நிறுவனம். 350பேருக்கு மேற்பட்டோரோடு வேலை செய்யும் சூழல். பணியில் சந்திக்கும் தருணங்களில் பொதுவான வணக்கம் நலவிசாரிப்பு அதோடு போகிறது முகங்கள். எந்த முகத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. எனக்கான பணியை செய்து கொள்வதே பணி.

அதிகம் யாருடனும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. எல்லோரையும் போல அருகில் யாரும் வந்தால் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தால் சரி. அவர்களாகவே ஒதுங்கி விடுகிறார்கள். தற்காலம் அதிகம் பேரை ஆதரிக்கும் ஒரே இலத்திரனியல் சாதனம் மொபைல் பேசி. ஆதுவே என்னையும் இப்போது தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளது.

இடைவேளை ஓய்வில் தனியே ஓரிடத்தை தேர்வு செய்து எனக்கான உணவை யாரோடும் கூட்டுச்சேராமல் தனித்து சாப்பிடுவதை வளமையாக்கிக் கொண்டேன். இதை கவனித்த சிலர் எனது மேசையில் வந்து சேர்ந்தார்கள்.
நீங்கள் வரேக்க எங்களையும் கூப்பிடுங்கோ சேர்ந்து சாப்பிடலாம்.

நெருங்கி வரும் உறவுகளை தட்டிவிட முடியாது சிலரது அன்பு இருக்கிறது. ஆனால் யாரையும் கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் மனநிலமை இல்லை. அதனால் எனக்கான இடைவேளை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். ஏனக்கு சௌகரியமாக இருக்கிறது தனித்திருத்தல்.

தொடர்புகளில் இருந்த பெருமளவு நண்பர்களின் தொடர்புகளைப் பேணிக் கொள்ளாமல் உறவுகளைத் துண்டித்துக் கொண்டுள்ளேன்

பலரை விட்டு ஏன் ஒதுங்கிப் போக எத்தனிக்கிறது மனம்
அவ்வப்போது எனக்குள்ளும் எழும் கேள்விக்கான பதிலை என்னாலும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை

தவிர்க்க முடியாத சந்திப்புக்களை இயன்றவரை தற்கால இருப்பிடம் அடையாளம் சொல்லாமல் தவிர்த்துக் கொள்கிறேன்

சிலர் எனது அன்னியமாதல் புரிந்து எனக்கேற்ப பேசப்பழகியுள்ளார்கள்.  அதிகம் கேள்விகள் கேட்டு சங்கடம் தராமல் நாகரீகம் காக்கும் சிலரோடான தொடர்பாடலை மட்டும் பேணிக்கொள்கிறேன்

யாரையும் பார்க்க பேசும் மனநிலையை ஏனோ இந்த நாட்கள் தருவதில்லை

அதிக நேசிப்பு நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு துரோகம் ஏமாற்று. இவற்றைத் தந்து பொய்யாகிப் போனவர்களை அடிக்கடி ஞாபகவோடை இழுத்து வருகிறது

உறவுச் சேர்ப்பில் கண்ணீரை விதைத்து மனவழுத்தத்தைக் கூட்டிக் கொண்டது தவிர வேறு பயனில்லை

மறந்துவிட நினைக்கும் முகங்களும் அவர் தம் துரோகங்களும் மனவோடையை ரணமாக்கிய காயம் அவ்வளவு இலகுவாய் ஆறிவிடக்கூடியதல்ல

இதுவும் கடந்து போகட்டும் இப்படித்தான் என்னை ஆற்றுகிறேன்

தனிமையின் முழுமையான அழுத்தத்தை அணுவணுவாக அனுபவிக்கத் தொடங்கியுள்ளேன்

இந்தக்காலம் என்னை முழுதாக மாற்றிப் புதிதாக்குமென்ற நம்பிக்கையில் ஒதுங்கிப் போகிறேன்

ஆறாய் ஓடிவரும் கண்ணீருக்கு 
அணைகட்டி ஓயத்தெரியாது. நூறாய் பெருகும் நினைவுகளைத் தூர எறியவும் முடியாது கடக்கிறது காலம்


02. 05. 18

Monday, August 28, 2017

தோழமையின் ஆழுமையே பாடல்

நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம்.

நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள்.