எல்லோரையும் போல அவனுக்கும்
வாழ்வு மீதான பிரியங்களும்
தனக்கான வாழ்க்கை மீதான பிடிமானங்களும் இருந்தன…..
பருவவயதின் காதலும் பள்ளிக்கூடக் கனவுகளும்
அவனையும் ஒரு சினிமாக் கதாநாயகனாக்கியது ஒருகாலம்……
கால இடைவெளி நதியாய் ஓடிய குடும்ப நிம்மதியைப்
பேரலையொன்று விழுங்குமாப்போல
குடும்பத்தின் நம்பிக்கையொன்று இடையில்
தொலைந்து போக
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எல்லாமுமாகியிருந்தான்……
ஒற்றைப்பிள்ளையாய் ஒருகோடி நம்பிக்கையாய்
ஒளி நிறைந்த சூரியனாய் அவனே அனைத்துமாய்…..
காதலும் கல்வியும் நிறைந்த நாட்களுக்குள்
போரும் அவலமும் புகுந்து கொண்ட போது
போராளியாதலே யாவற்றுக்குமான முடிவென்றவன்
சொல்லாமல் கொள்ளாமல் காடேகிக் கையில் இயந்திரத்தோடு
வீட்டுப் படியேறி வந்தவனை வேண்டாமென்றா ஒதுக்க முடியும்…?
போன உயிர் புதுப்பிறவியெடுத்தது போலக் கொண்டாடிய
அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவும் அவன் வாழவேயில்லை……
வரலாற்றையும் அதற்காக வாழ்ந்தோரையுமே வழிகாட்டியென்பான்
வழிநெடுகத் தன்கூட வாழ்ந்து மடிந்துபோன வரலாற்றுப்
பிள்ளைகளையே உச்சரிப்பான்…..
என்ன பிள்ளையடா நீ எங்களின் வாழ்வடா….?
அம்மாவின் அழுத கண்ணீர் துடைத்து
அவன் சொன்ன கதைகள் ஆயிரம்….
உயிர் பிரிந்து அம்மா நான் உனைப்பிரிந்து போனாலும்
உங்களைக் காக்க ஆயிரம் மகன்கள் வருவார்கள்…..
அவர்களுக்காக வாழ்ந்திரு
சத்தியம் செய்தான் சபதமாகவே…..
கண்களில் ஏந்திய கனவுகள் தாங்கிய
களமொன்றில் காயமடைந்தவன்
கடைசியாய் உணர்வு நரம்புகள் அறுபட்டுக்
கையில் 3விரல்களும் கழுத்தின் மேலாயும்
உயிர்ப்புடன் திரும்பினான்…..
எல்லாம் போயிற்றென்று புலம்பிய அம்மாவுக்கு
எல்லாரும் எனக்காகவே நம்பியிரு தாயே….
நம்பிக்கை கொடுத்தான்…..
வாரம் ஒரு தரம் மாதம் ஒருதரமாகி
அவனைக் காணும் நாட்கள் தூரமாகிப்போனது
கண்ணீரில் அவனைக் கனவுகளில் காணுதலே அரிதாகி
அவன் மே 2009 காணாமலே போய்விட்டான்…..
அம்மாவும் அப்பாவும் அவனைக்
காணாதோர் பட்டியலில் வைத்துக்
காத்துக் கொண்டிருக்க
அவன் காணாமல் போயிருக்கிறான்……
கலந்து வைத்த வண்ணங்களைக்
காற்றடித்துச் சிதைத்தது போல்
அவனது கனவுகள் சிதைக்கப்பட்டது….
சாகவிடாமல் அவனையும்
அள்ளிக்கொண்டு போனார்கள்….
தடுப்பும் கம்பியும்
அவனையும் அவனது தோழர்களையும்
கம்பியிட்டுக் காவலர்கள் மத்தியில்
அழுக்குகளும் நாற்றமும்
அவர்களுக்கு உணவாக……போயிற்று எல்லாம்…..
நாங்களிருக்கிறோம் நம்பிக்கையின் தூண்களிருக்கிறோம்
என்றொலித்த குரல்கள்
மெல்ல மெல்லக் குறைந்து போயிற்று…..
எவரையும் காணவில்லை எங்கிருந்தோவெல்லாம்
வந்து போனவர்கள் ஞாபகப்படம் பிடித்தவர்கள்
ஒருவரையும் காணவில்லை…..
சோறும் நீருமா சுதந்திரம் இல்லை
வீரம் என்றுமே
விலையானதில்லையென்றோரால் மறக்கப்பட்டு
மரணம் கூட அண்டாத பிண்டங்களாய்ப்
போன துயரைச் சொல்லியழ
ஆழுமின்றி அனாதரவானவர்கள் வரிசையில்
அவனும் அனாதரவாகிக் கிடக்கிறான்…..
மூன்று விரலுக்குள் கரண்டியைச் செருகிச் சோற்றுக் கோப்பையை
வைத்துவிட்டுப் போகின்ற உறவுக்கு நன்றி சொல்லி
கிடைக்கின்ற சோற்றுக்குள்ளே அவனது சுதந்திரக் கனவுகள்
சிதைந்து போவதாய் நினைக்கையில் நெஞ்சுக்குள்
சோகம் அப்பிக் கொள்வதில்லை கோபமே வருகிறது…..
அம்மாவும் வேண்டாம் அப்பாவும் வேண்டாம்
அவர்களுக்கு என் துயர் இனியும் வேண்டாம்
வெறுப்புகளாலும் வேதனைகளாலும் சூழப்பட்டுள்ளான்…..
கந்தக வாசனை கடந்தகாலக் கனவுகளின் வேதனை
எல்லாவற்றின் மீதும் அவன் நம்பிக்கையற்றுப் போயிருக்கிறான்……
அனாதையாய் போனதாய் அலட்டிக் கொள்கிறான்
ஆருமற்றுப்போனதாய் தனக்குள் அழுது தொலைகிறான்…..
எவரது வார்த்தைகளும்
தன்னைக் காப்பாற்றாது என்பதை மட்டும் நம்புகிறான்…..
வாழும் ஆசையும் வருங்காலக் கனவுகளும்
சிறுவயதில் கட்டிய மண்வீடு போலக் கரைகிறது
அவனது கண்ணீராயும் அவனது கனவுகளாயும்……
மிஞ்சிக் கிடக்கும் காலம் அவனையும் தன்னோடு
இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது……
ஓரினத்தின் கனவுகளைச் சுமந்தவன்
ஒன்றுக்கும் பயனில்லாத சடமாகிக் கிடக்கிறான்
சாவுக்காய் காத்துக் கிடக்கிறான்……
11.10.10
இந்த இணைப்பில் உள்ளவனுக்காக இந்த வரிகள். இது கவிதையல்ல....
No comments:
Post a Comment