Sunday, May 31, 2009

சிங்கம் சீமானும் சிறுத்தை திருமாவும் பேசாமல் இருங்கோ.//இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடைப்பிடித்த மரபுகளை நாங்கள் கடைப்பிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களவன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.//


இப்படிச் சீறியிருப்பவர் இயக்குனர் சீமான். இதைப் பார்த்து அழுவதா ? அனுதாபப்படுவதா ? எதைச் செய்ய ?

இறுதிக்கட்டப்போரென்று சிங்களவன் நடத்திய போரில் நாங்கள் இழந்தது ஐ.நா கணக்கெடுப்பின்படியே 20ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஐ.நாவின் பதிவைத் தாண்டி 50ஆயிரம் வரையில் இறுதி யுத்தம் கொன்று குவித்துத் தின்ற உயிக்கள் , மிஞ்சிய 3லட்சம் பேரின் எதிர்காலத்தின் கதியையெண்ணிச் சாகாத பிணங்களாகத் தமிழர் துடிக்கிறோம்.

இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இழந்த உயிர்களின் தொகை லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. எங்கள் இலட்சியங்களை விட்டுவிட்டு எங்கள் மக்களின் ஏதிலியான நிலைமை மாற ஏது செய்வோமென்று உலகையும் உள்நாட்டில் உள்ளவர்களையும் நம்பி ஏமாந்து போயிருக்கிறோம். மே17…18..19…வரையில் நந்திக்கடல் முனைவரை சிந்திய குருதியின் நெடில் ஆறாமல் நொந்து போயிருக்கிறோம். ஏன் ? எப்படி ? எதற்காக ? இப்படியாக்கப்பட்டோம் என்றெல்லாம் ஆலோசிக்க அவகாசமின்றி அந்தரிக்கிறோம்.

கோட்டையைத் தகர்ப்போம் கொடுங்கோலை முறிப்போமென்ற கோசங்களை மறந்து கொள்ளைபோன எம்மவரின் நினைவுகளில் தினமும் சாகிறோம். யுத்தத்தின் கோரம் எதுவென்பதை வீரம்பேசிய யாவரும் எங்களுக்காய் இறுதிவரை களமாடிச் சரிந்தவர்களையும் இழந்து போய் இனியேது என்ற துயரில் ஓடிந்து போயிருக்கிறோம்.

எங்களுக்காகக் குரல் கொடுத்துச் சிறைசென்று வந்த தோழர் சீமானின் சீற்றத்தை எத்தனையோ தரம் மீளமீளக் கேட்டு வியந்து போயிருந்த நாம் இப்போது நிரந்தரமான அமைதியொன்றுக்கான கதவுகளைத் திறக்க திறவுகோல்களைத் தேடிக் கொண்டிருக்க.., இப்போது சிங்களவனை விடோம் , கொழும்புக்குள் புகுந்து தாக்குவோம் , மானமுள்ளவர்கள் சிங்களவரோடு போராடுவோம் என்று கர்ச்சித்து என்னத்தை வாங்கித் தரப்போகிறீர்கள் சீமான் ?

இது சினிமாவில் வந்து ஒருவர் நூறுபேரை அடித்து வீழ்த்தி வெற்றிபெறும் களமென்று நினைக்கிறீர்களா சீமான் ? மேடையில் ஏறி உணர்ச்சி சொட்டப்பேசிக் கைதட்டல் வாங்கும் கைங்கரியமென்றா கனவுகாண்கிறீர்கள் ? இது தமிழக அரசியலில் தேர்தல் வாக்குறுதிகள் போல் வார்த்தைகளால் வசியம் பண்ணும் விசித்திரமா ? சொல்லுங்கள் சீமானே ?

எங்களுக்கென்றொரு தலைவன் இருந்தான். எங்களுக்கு எல்லாமுமாக அவன் இருந்தான். சூரியனாய் எங்களில் சுடர்விட்டெரிந்தான். வாழும்வரை போராடுவேனென்றபடி வாழ்ந்து முடியும் வரை எங்களுக்காகவே போராடி மடிந்தான் அல்லது மறைந்தான். எங்கள் தலைவனின் பின்னே ஆயிரமாய் ஆயிரமாய் அணிசேர்ந்த தோழரும் தோழியரும் கொத்துக்கொத்தாய் செத்துமடிய நாங்கள் எதுவுமே செய்ய இயலாதோராய் அழுதோம்.
அதற்கடுத்து இந்த உலகத்தை ஊரெங்கும் கூடி நின்று உலுப்பியும் எவருமே கண்ணெடுத்தும் காணாமல் கண்மூடியிருந்தார்கள். கடைசி நிமிடம் வரை நம்மைநாமே சமாதானப்படுத்திச் சர்வதேச அரங்கையும் அசைத்துக் கடைசியில் கண்ணீரஞ்சலி கூடச் செலுத்த முடியாமல் எங்களுக்கு எல்லாமுமானவர்களை இழந்து போனோம். உங்கள் உணர்ச்சிமிகு பேச்சுக்கள் எங்கள் தளபதிகளை தலைவனைக் காப்பாற்றவுமில்லை. கரை சேர்க்கவுமில்லை. நட்டாற்றில எங்களை நாதியற்றுப் போகும் நிலையில் விட்டுள்ளது.

இப்போதெல்லாம் நாங்கள் விரும்புவது எங்கள் சூரியதேவனும் அவனைச் சுற்றிவந்த சுதந்திரப் போராளிகளும் நேசித்த மக்களின் ஒரு நிம்மதியான வாழ்வு மட்டுமே. அதிகபட்ச உரிமையாக அவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய ஒரு தீர்வையே. அதற்கும் அப்பால் எதையும் எங்களால் எண்ணிப்பார்க்க எதுவுமில்லை. போதும் எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

நேதாஜியைத் தொலைத்துவிட்டு இந்திய தேசம் சத்தியாக்கிரகம் என்று சுற்றிய காந்தியால் சுதந்திரம் பெற்றதாய்க் காட்டி இந்திய சுதந்திரப்போராளியை வெள்ளையன் விழுங்கினான். அதுபோல் எங்கள் வல்லமைத் தலைவனைத் தளபதிகளை வஞ்சத்தால் அழித்தது வல்லரசுக்கூட்டம்.போராடும் இனங்களுக்குப் பரிசாய்க் கிடைப்பது எதுவென்பதை வரலாறுகள் தந்த பாடங்களிலிருந்து புரிந்து கொள்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.

அயலில் களக்கொலை நடக்க உங்கள் ஊரில் கள்ள மெளனம் சாதித்து எங்கள் காவியங்களைக் கொன்ற கள்வர்களுக்கெல்லாம் சாட்சியாய் இருந்தவர்களைத் திருத்துங்கள். அவர்களது நிம்திமதியைத் தட்டி எங்கள் அழிவுக்கு நீதி கோருங்கள். அதுவே எங்கள் தலைவனுக்கும் தளபதிகளுக்கும் ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் , அழிந்து போன மக்களுக்கும் நீங்கள் செய்யும் கடைமையாகும். எங்களுக்காய் குரல் கொடுக்கும் உங்களை உதாசீனம் செய்வதாய் எண்ண வேண்டாம். இழந்து போன வலி தீர இன்னும் சில தசாப்தங்கள் தேவையெங்களுக்கு. பசித்தவனுக்கு பசிமாற முதலில் உணவழித்துவிட்டுச் சுதந்திரத்தைப் பற்றிச் சுவையாக உரைக்காலம் என்பதை அனுபவத்தால் பட்டறிந்துள்ளோம். ஆக அனல் கக்கும் பேச்சுகள் கேட்கவும் கைகொட்டிக் கூச்சலிடவும்தான் பயன் மற்றப்படி ஏதுமில்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ! சீமானுக்கு ஓர் படிமேலே போய் `´நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும்`´ எனச் சிறுத்தை போர்வெடிக்கும் நாளை பேராவேசத்துடன் பேசியுள்ளார்.

திருமாவின் தலைவரும் தலைவரின் மகளும் முள்ளிவாய்க்காலில் களக்கொலை நடைபெறும்வரை டில்லியுடன் என்னத்தைக் கதைத்தார்களென்ற மர்மம் திருமாவே உங்களுக்கும் தெரியாதா ? உங்கள் அரசியல் எழுச்சிகளுக்காக எங்களின் உயிர்களோடு இனியும் இறுமாப்புக் கதைகள் பேசாதீர்கள். நீங்கள் செய்திகளில் சாவைப் பார்ப்பவர்கள் ,சினிமாவில் சண்டியர்களைத் தோற்கடிப்பவர்கள். களநிலையும் தமிழர் கடந்த நாட்களின் கடைசி நிலையும் அனுபவித்து அழிந்தோர் தமிழர். அண்ணே ! பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்.

இதுவரை எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவுகளுக்கு நன்றிகள். நாங்கள் செத்துப்போகும் வரை காத்திருந்து மீண்டும் சாகடிக்க உங்கள் தலைவர் காத்திருக்கிறார். உங்கள் அன்பும் ஆதரவும் இனி உங்கள் ஊரிலுள்ள பொய்களைக் கிழிக்கட்டும் எங்களை உசுப்ப வேண்டாம். எங்களை வாழவிடுங்கள். இனிச்சாகவோ சண்டித்தனம் பண்ணவோ சக்தியில்லை.. எந்தச்சனியின் காலில் வீழ்ந்தாயினும் எங்கள் மக்களுக்கான நிம்மதியை நாங்கள் பெற்றிடுவோம். இனிமேல் உங்கள் ஈழ ஆதரவு உணர்ச்சிகள் நிறைந்தாய் இல்லாமல் உணர்வோடு வளரட்டும்.

31.05.09

Thursday, May 28, 2009

தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ?

எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டது.

வவுனியாவுக்குள்ளும் யாழ்ப்பாணத்துக்குள்ளும் ஏன் இலங்கையின் பல பகுதிகளுக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ள சிறைகளில் சித்திரவதைக் கூடங்களில் தமிழினம் இனியொரு ஐம்பது ஆண்டுகள் நிமிரமுடியாதபடி நிலமை வந்து நிற்கிறது. தாய் வேறு குழந்தைகள் வேறு தந்தை வேறு என்ற வகைபிரித்தலில் அனாதைகளாய் போன அத்தனையாயிரம் அப்பாவிகளையும் அடைத்த முகாம்களில் எங்கே முழுமையான நிம்மதியை அவர்கள் தேடுவார்கள்.

புனர்வாழ்வு என்ற பெயரில் ஆயிரமாயிரம் போராளிகள் முன்னாள் போராளிகள் என வகைபிரிக்கப்பட்டு வதைபடும் துயரம், தனது மக்களுக்காகப் போராடிய தெய்வங்கள் இன்று அடுத்த நேரச்சோற்றுக்குத் தட்டேந்தும் நிலைக்கு வரக்காரணமான அனைத்தையும் அனைவரையும் வெறுக்கிறோம்.

இப்போது எம்மிடம் மிஞ்சியிருப்பது ? துயரமும் கண்ணீரும் , இயலாமையும் , இனி எஞ்சியோரது வாழ்வுக்கான வழியொன்று திறபட வேண்டும் என்பதேயாகும். இந்த வழியின் மூலம் எங்கே ? அது இனி என்னத்தைத் தமிழினத்துக்குச் செய்யப்போகிறது ? என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்து தொலைகிறது.

ஆயுதங்கள் மெளனித்தனவா ? மெளனிக்க வைக்கப்பட்டனவா ? எதுவோ இனி ஆயுதங்களால் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். ஆயினும் நாம் மீண்டும் எழுவோம் ஆழுவோம் என்ற கனவில் எஞ்சிய உயிர்களையும் பலியெடுக்க இனி அனுமதிக்க முடியாது. யுத்தம் எங்களைக் களைக்க வைத்துவிட்டது. சிறுபான்மையினம் இன்று சின்னாபின்னமாய் நிமிரமுடியாமல் தனது வளத்தை வாழ்வை இழந்து போயுள்ளது. இனியொரு யுத்தம் இனியொரு அழிவு வேண்டாம். அதைத்தாங்கும் வல்லமையில்லை எங்களிடம். எல்லோரும் சொல்வதுபோல் நாங்கள் தோற்றுப்போனோம். எங்கள் தோழர்கள் வஞ்சனையால் வன்கொலை புரியப்பட்டார்கள். மலைகளாய் நாம் நம்பிய இமயங்களையெல்லாம் இறுதிக்கணம் வரை உயிருக்காய் இறைஞ்ச வைத்து அழித்து விட்டார்கள். யுகங்களுக்கும் மாறாத வடுவாய் எங்கள் மனங்கள் ரணமாய்ப்போயுள்ளது.

இனியென்ன செய்வது ?
மக்களின் பணியாளர்களைத் தேடித் தேடி எனது மக்களைக் காக்க என்ன செய்யப்போகிறீர்கள் ? என அவலப்படும் மக்களுக்கான ஆதரவுகளைத் தேடுகிறோம்.
மக்கள் பிரதிநிதிகள் அக்கறையாளர்கள் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்றே முனைப்போடு உள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த முனைப்பை முளையில் கிள்ளிவிட இன்னும் பல மூதேவித்தலைகளும் மூத்ததுகளும் தடைக்கற்களாகவே இடையில் வந்து செருகுப்படுவதால் ஆர்வலர்கள் பின்வாங்குகிறார்கள். இன்னும் மந்தைகளாய் மக்களை மேய்க்கப் புலத்தில் அதிகாரம் பண்ணும் அடங்காப்பிடாரிகளை நம்பி இனியும் எமது மக்களைப் பலிகொடுக்கமாட்டோம். முதலில் இந்தப் பெருச்சாளிகளை எம்மிலிருந்து பிரித்து ஒதுக்குவோம்.

மக்களுடன் நின்று இயங்கக்கூடிய வழிகளைத் தேடியொரு மனிதாபிமானப் பணிகளுக்கான பாதைகளைத் திறந்து விடவேண்டியது முக்கியமாகும். இந்தப்பணியைச் செய்ய இப்போதைக்கு எங்களுக்கு ஒரு துடுப்பாக இருப்பது தமிழ்க்கூட்டமைப்பு மட்டுமே. கூட்மைப்பில் உள்ள 22பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை ஏதோ இருக்கிறோம் என்று இருந்த நிலைமாறி இனி மக்களுக்கான விடிவொன்றை வழிவகுக்க வேண்டிய மாபெரும் கடைமையைப் பொறுப்பெடுக்க வேண்டும். புலம்பெயர் மக்களின் பணத்தில் அறிக்கையும் , கண்டனமும் விடும் அகதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனையோர் உடனடித் தேவைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

கூட்டமைப்பினர் ஏதிலியான எமது மக்களுக்கு ஒரு விடிவைப்பெற்றுப் கொடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுவரை காலமும் மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயருக்குள் மக்களுக்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் செய்யாமல் ஐரோப்பிய ஊலாவந்தும் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் ஐரோப்பாவுக்கும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடம்மாற்றிய சுயநலமக்கள் பிரதிநிகைளைத் தள்ளி வைத்துவிட்டு உரிமையுடன் தங்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

கூட்டமைப்பினர் இன்னும் புலத்துப்புண்ணியர்கள் அனுமதித்தால் தான் தமிழினத்தைக் காப்போம் எனக் காத்திருக்காமல் உங்கள் கடமையை ஆரம்பியுங்கள். உங்களுக்கான ஆதரவுகளைத் தரக்காத்திருக்கிறோம்.

நட்டாற்றில் நமது இனம் சாக நிம்தியாய் எங்களால் இருக்க முடியவில்லை. ஊர் உறவுகள் முழுவதும் இடைத்தங்கள் முகாம்களிலும் , புனா்வாழ்வு முகாம்களிலும் புழுக்கள் போல் நசிபட புலத்திலிருந்து புதுயுகம் படைப்போமென்று பூச்சாண்டி காட்ட முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் நெருங்குகிறது. தமிழ்க்கூட்டமைப்பு தனது முழுமையான பலத்தையும் கையில் எடுக்க வேண்டிய தருணமிது. தமிழின விதி உங்கள் கையில் தான் தொங்குகிறது.

உங்களுக்குள் உள்ள முரண்கள் மனத்தாங்கல்களை மறந்து உங்கள் போன்று தமிழினத்தைத் தாங்கும் தூண்களையெல்லாம் உங்களோடு உள்வாங்குங்கள். மாற்றுக்கட்சி முரண்பாடு கொள்கைக்கட்சி முரண்பாடுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். சங்கரியின் கையிலோ டக்ளசின் கையிலோ சித்தார்த்தன் கையிலோ சிறீதரன் கையிலோ தமிழனின் விதி கைமாற வேண்டாம்.

உங்களையே நம்புகிறோம் எங்கள் மக்களுக்கான மறுவாழ்வைக் கொடுங்கள். உலக மூலையெங்கும் இருக்கும் தமிழினத்தை உங்களோடு சேருங்கள். அடுத்த தேர்தலை தமிழினத்துக்கான மோட்சமாக மாற்றுங்கள். உங்களையே இறுதியாய் நம்புகிறோம். எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கான எதிர்காலம் வாழ்வு எல்லாம் உங்கள் கையில் தந்துவிடுகிறோம். துணையாய் நாங்களிருப்போம். தடைகளை உடையுங்கள் என்று கேட்கவில்லை. எம் மக்களின் மறுவாழ்வை உறுதிப்படுத்துங்கள்.

அக்காச்சி பிள்ளைகளைப்பறி கொடுத்தாளாம் , மாமாவின் மனைவி சிதறிச் செத்தாளாம் , மருமகள் முடமாகிப்போனாளாம் , மச்சான் எறும்பு மொய்த்து இரத்தத்தில் கிடந்தானாம் என்று உறவுகளின் துயர் எங்களை அணுவணுவாய் கொல்கிறது. போரால் தாயகம் சிதிலமானது. இங்கோ ஊரை உறவுகளை நினைத்து நாங்கள் மனநோயாளிகளாகிறோம். எம்மக்களைக் காப்பாற்றுங்கள்.
ஆண்டவனை இழந்து விட்டோம். அதற்கடுத்து உங்களைத் தான் நம்புகிறோம்.

28.05.09

Tuesday, May 26, 2009

எங்கள் எதிர்கால இருள் அகற்றும் ஒளி தீபங்களாய்…..

இயற்கை உங்களிடமே - தன்
இயல்பை உணர்ந்து கொண்டது.
வாழ்வு உங்களிடமே - தனது
வரலாற்றை எழுதியது.
வரலாறு உங்களிடமே தன் வல்லமை
எங்களின் அணுக்களில்
கொண்டு வந்து இணைத்தது.

ஓர் பெரும் விடுதலை விருட்சத்தை
எவனோவெல்லாம் ஆராட்சி செய்கிறானாம்.
அவன்கள் முகத்தில் ஆணிகள் அறைபட
ஆலமரமாய் எங்களுக்குள் அகன்று விரிகிறது
உங்கள் பெயர்.

இயலாதோராய் இனியாருமே இல்லாதோராய்
நாடோடிகள் போல்
நடுத்தெருவில் வைத்து நாய் போல்
இழுத்துப் போகவும் நாதியின்றிச்
செத்துத் தொலையவும்
நீங்களில்லா வெறுமையை
உணர்கிறது இலங்கையின் தமிழினம்…..

இல்லையென்பதை இன்னும் நம்பாமல்
உங்களையே நமது நம்பிக்கையின் தூணாக நம்புகிறோம்.
காலம் தனது கையிலிருந்து எங்கள் கடவுளைக்
களவெடுத்துப் போய்விட்டது.

இருள் காய்ந்து இரவுகள் பகலாய்
ஊண் மறுத்து உறக்கம் மறுத்துப்
பிரமை பிடித்துப் பிதற்றுகிறோம்.
யார் எதிரி யார் நண்பன்
யாரை நம்ப யாரை நம்பாதிருக்க ?
நீங்கள் ஓர் அநாதைபோல் மர்மமாய் போக விடவா
இத்தனை காலம் இந்த இனத்தை நேசித்தீர்கள் ?
நன்றிகெட்ட இந்தக் கொள்ளையர்களை
நம்பினானா எங்கள் தலைவன் ?
நம்ப முடியவேயில்லை.

இல்லை நீங்களென்றாலும் இருப்பதாய் சொல்லட்டாம்
இல்லையேல் கட்டமைப்பு குழம்புமாம்.
கள்வர்கள் கடவுளின் பெயரால் உரைப்பதையெல்லாம்
இந்தக் கண்கெட்ட சாதி நம்பிக் கொண்டேயிருக்கட்டும்.
எங்களால் இயலவில்லை
உங்களை அநாதைபோல் ஒற்றைப் பூவிட்டேனும்
நினைக்காமல் இருக்க எங்களால் இயலவில்லை.

உண்மையிதுவென்றால் உலகைத் திரட்டுவராம்
சொல்கிறார்கள் இன்னும் சிலர்.
சரி இது பொய்யாகவே இருக்கட்டும்
நாம் பொய்யாக இல்லை
உண்மையாகவே அஞ்சலிக்கிறோம்.
நம்பிக்கை பொய்த்து மீள வந்தாலும் நீங்கள் தான்
எங்கள் குலவிளக்கு.
நீங்கள் தான் எங்கள் கலங்கரை ஒளிவிளக்கு.
கண்களில் நீர் கோர்த்துக்
கடவுளே உங்களை வணங்குகிறோம்.
உங்களுடன் உதிர்ந்த அத்தனை பேரையும்
இதயத்தில் ஏற்றுகிறோம் – எங்கள்
எதிர்கால இருள் அகற்றும் ஒளி தீபங்களாய்…..
25.05.09

Monday, May 25, 2009

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியேஎங்களுக்காய் வாழ்ந்து
எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே !
வணங்குகிறோம்.

சூரியனாய்ப் பிறப்பெடுத்துச்
சுதந்திரத்தின் காவலனாய்
கால்நூற்றாண்டையும் கடந்து
காடும் மேடும் களவாழ்வுமென
வாழ்வையும் உங்கள் வம்சத்தையும்
எங்களுக்காய்த் தந்தவரே !

காலப் பெருநதியில் காணாமல் போகாமல்
ஓயாமல் பாய்ந்த எரிமலையே !
காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள்
அவதாரனின் துயரில் அனைத்தும்
அசையவோ அடுத்து நகரவோ இயலாமல்
போட்டு வைத்த பிணங்கள் போல்
காலம் காப்பிடமின்றி அலைகிறது.

வஞ்சம் கொன்றது
எங்கள் வாழ்வைத் தின்றது
இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க
என்ன மர்மம் உள்ளதோ…..?
வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல்
இறுதிவரை போராடியே மாண்டீர் அல்லது மறைந்தீர்.

மரணம் மாவீரரை வென்றதில்லை – மாவீரம்
மரணத்தை வென்ற பெரும் வல்லமை படைத்ததை உங்கள்
வழிவந்த தோழதோழியரைக் களப்பலியெடுத்த
துரோகங்களே சாட்சியாக
`´சாவெனில் சமர் வாழ்வெனில் போரென்று`´
போனவர்கள் முடிவுகளில் கண்டோம்.

கடைசி நிமிட வேண்டுகையும்
காப்பாற்றுகிறோம் என்றவரின் கழுத்தறுப்பும்
ஓடிய காலப்பெருங்கடலை இடையறுத்துத் தடைவிழுத்தித்
தமிழரின் விதியறுத்து வென்றதாய் விழாக்காணும்
கொலைஞர்கள் இன்று போகட்டும்.
எல்லாளன் பின்னர் எழுந்த கதிரவன் உங்கள் பின்
எழுந்த எரிமலைகள் உள்ளார்கள் என்பதை
உறுதியுடன் நம்புகிறோம்.

உலகம் இதையெல்லாம் ஒதுக்கிவிட முடியாத
உண்மைகள் புரியப்படும் ஒருநாளில்
எல்லாம் ஒளிர்வு பெறும் முடிவு வரும்.
அந்நாள் வரையிலும் அமைதியுடனிருப்போம்.

நன்றியென்றுங்கள் கொடையை
மூன்றெழுத்துக்குள் முடக்கமாட்டோம்.
நாளையெங்கள் சந்ததிக்கு
நீங்களே முன்னோடி
முகவரி எல்லாம் நீங்களே….,
எங்கள் மூச்சுள்ள வரையுமுங்கள்
முகமே எங்களுக்கு விடிவெள்ளி.

நீங்கள் விரும்பிய தேசம்
நீங்கள் விரும்பிய விஞ்ஞானம்
உங்கள்விருப்பான எல்லாம் கொண்டு
எங்கள் வம்சம் எழுந்து வரும்
உங்கள் புதல்வர்களாய் புதல்விகளாய்…..,

எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே
எங்களால் இயன்றது
இன்று ஒரு நினைவிருத்தல்
இதைவிட ஒன்றுமேயில்லையிப்போது எங்களிடம்.
நாங்கள் விட்ட கண்ணீரால்
நிறைந்திருக்கும் நந்திக்கடல் சோம்பல் முறித்து எழும்
சோகம் துடைத்து வரும் நன்நாளில்
உங்கள் கனவுகளை நினைவாக்கி எழுந்து வருவோம்.
26.05.09

அமைதியின் பெயரால் அனைத்தும்
பதுங்கப் பிறப்பெடுத்த அகழிகளிலிருந்து
ஒதுங்குகிறது தசைத்துகள்கள்.
புழுதியின் வாசம் தொலைந்து
குருதியின் வாசம்
நாசியை அரிக்கும் நாற்றத்தில்
ஆயிரமாயிரம் பேரின்
அவலக் குரல்களின்
இறுதிக் கணங்கள் உலகத் துரோகத்தை
ஒன்றுவிடாமல் ஒப்புவிக்கிறது.

`காப்பாற்று காப்பாற்று´ என்ற
கடைசிக் குரல்களின் கடைசி நேர நம்பிக்கைகள்
காப்பிடமின்றி முள்ளிவாய்க்காய் மீதுறைந்து
மிஞ்சியிருந்தோரும் மிஞ்சாமல்
கோத்தபாயவின் கட்டளையின் பெயரால்
கொள்ளையிடப்படுகிறது.

கண்ணீரைத் திரட்டி நந்திக்கடலோடு
கரைக்கிறது முல்லை நிலம்.
களத்திலிருந்தோரின் கடைசி மூச்சு
வஞ்சம் கொன்று இறுதிவரை போராடிய
நிறைவோடு இயக்கமின்றிச் சரிகிறது.

இழப்பதற்கு இனியெதை இவ்வுலகிடம் ஒப்படைக்க….?
எதுவுமில்லை எல்லாவற்றையும்
அமைதியின் பெயரால் ஆயிரமாயிரமாய்
அள்ளி வார்த்துவிட்டு
அமைதியாகிப் போனவர்கள் நினைத்தது யாதோ ?
கேள்புலனைக் குடைந்து
மனக்கதவைத் தட்டுகிறது குரல்கள்.
யாரை நோக யாரை இறைஞ்ச…?
21.05.09

Sunday, May 24, 2009

சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர்

இயலாப்பொழுதின் புலர்வாய்
ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி
இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்….
எதை இழக்க எதை மறக்க ?
எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை….
எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை
கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய்
கடைசிக்கணங்களின் நுனியில்
சாவின் நொடிகளை நுர்கின்றன….

சந்திப்புகள் சரித்திரக் கதைகள்
சாதனைகளின் நீளமாய்
ஒவ்வோர் நினைவும் முகமும்
கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து
கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும்
மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு
கவிதையும் கடந்தகால நினைவுகளும்
கசங்கிக் காற்றள்ள முன்னம்
கடைசியாய் ஏவப்பட்ட
நவீனக் குண்டின் அதிர்வோடு அழிகிறது…….

நந்திக்கடல் நினைவும்
நிழல்விரித்த வீர வன்னிக் களமுனையும்
நெல்மணிகள் நிரம்பிய வயல்வெளியும்
தோழதோழியரின் கைபற்றி நடந்த தெருமுனையும்
யாருமற்றுத் தனிக்க
முள்ளிவாய்க்காய் முனையில் மிதக்கிறது ஞாபகங்கள்.
கடைசிவரையும் அந்தக் கந்தகப்புகை நடுவே
கடவுளர்களுக்காகக் காத்திருந்து
கனவுகளோடு கிடந்த ஆயிரமாயிரம் உயிர்களின்
கடைசிக்கணங்கள் உலகின் முனையெங்கும்
அவலப் பேரலையாய் ஓங்கி ஒலிக்கிறது.

உலகே வரும் ஒன்றாயெம்மை அள்ளிப்போய்
சொர்க்கம் தரும் கடைசிவரை கனவாக எல்லாம்
கடவுளுமில்லைக் கண்ணகையம்மனுமில்லை
தனியனாய் பதுங்குகுழி மூடிப் பாறைகள் விழுத்திப்
பாதாளம் திறந்து இரத்தமும் சதைகளும்
சகதிக்குவியலில் இலையானின் எறும்புகளின்
உயிர்ப்பசி போக்கி எல்லாம் முடிகிறது…..

நாங்கள் நினைத்திருந்த தாயகமும் விடுதலையும்
ஏதோ ஒரு கையில் இடம்மாறி விழுகிறது.
அது இனி எங்களுக்கானதில்லை
விலைபேசி விரோதிகளின் வாய்களில்
அமெரிக்க டொர்களாய் ஐரோப்பிய யூரோக்களாய்
எங்கெங்கோ விலையாகிக் கொண்டிருக்கிறது.
இலங்கைத் திருநாடு இனி உலகத் திருநாடுகளின்
உற்பத்திக் கழிப்பிடமாய் சீனனின் ஜப்பானியனின்
இந்தியனின் ரஸ்யனின் அமெரிக்கனின்
ஐரோப்பியனின் நிரந்தர நுகர்வாகும்.
நாடற்ற நமது துயரமும் இழப்பும்
யுகங்களுக்கும் மாறாத் துயராய்
பெயர் தெரியா வீதிகளில்
பெயர் தெரியா ஊர்களில் பிணங்களாய்க் குவியும்....

போர்க்குற்றம் உண்மையா பொய்யா ?
உலகின் உயிர்ப்பு உள்ளவரைக்கும்
ஆய்வுகளும் அறிக்கைகளும் நிரம்பி வழியும்.
நீதியரசர்கள் மாறிமாறி வருவார்கள்
ஐ.நா என்றும் அமெரிக்கா என்றும்
கொலைகாரர்கள் சாதாரணமாய்
சென்றுவரச் செத்தவர் நினைவில்
சவங்களாய் நாங்கள்…..

நீதிசாகாதென்று நம்பும் நாங்கள் உள்ளவரை
இன அழிப்பும் இறப்புகளும்
குறையாத செல்வங்களாய்
அள்ள அள்ள நிறையும் அட்சயங்களாகும்.
துரோகங்களும் கூடவிருந்து
குழிபறிக்கும் குணங்களும் கொடையாக
எங்களினம் சாகும்.

காசுக்கும் நல்வாழ்வுக்கும் விலைபோகும்
காக்கை வன்னியர்கள் விளைச்சல் பெருக்கெடுக்க
அவதாரங்கள் அவ்வப்போது பிறந்து வந்து
அழிவோரைக் காப்பாற்ற ஆயுளை முடித்துக் கொள்வர்.

காலம் தந்த கொடைகளைக் கயமைகள் காவுகொள்ளத்
தோற்றுத் தம்மை தீயில் கருக்கிச் சூரியப்பேரொளி
மடியில் அணையும் சூரியக் குழந்தைகள்
காலப்பெருநதியில் கடவுளராய்ப் பிறப்பர்.

கடவுளையே காலில் மிதித்தவராய் போகும்
கண்கெட்டோருக்காய் காவியப் போராளிகள்
காடுகள் மலைகள் யாவிலும் தம் வாழ்வினைத் திரித்துச்
சுதந்திர வாழ்வின் சுகத்தினை எழுதுவர்.
எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி
எழும் சூரியப்பேரொளியைச் சுற்றி வரும்.
எங்களின் இனிய தோழரும்தோழியரும்
தவமியற்றி வனங்களிலே தாயகக் கனவுகளோடு வருவர்….
19.05.09

'மானிடவுயிர்' மகத்துவம் அப்புடியென்றால்....?

ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின்
இறுதிக் கணங்கள் இருளுக்குள்
புதைந்து கொண்டிருக்கின்றன.

எதுவித அறிவிப்புகளுமின்றி
ஊரழித்த போர் டாங்கிகளின்
சில்லுகளின் மிதிப்பில்
ஒரு சந்ததியின்
நூற்றாண்டுச் சந்தோசங்கள்
நிலக்கீழ் சகதிக்கும் கீழாய்
பிய்த்தெறியப்படுகிறது.

'மானிடவுயிர்' மகத்துவம்
அப்புடியென்றால்....?
அர்த்தம் புரியவில்லை.

விலங்குகளுக்கான விதிகளைக்கூட
சட்டம் இயற்றிக் காத்திடும் உலகம்
அதனினும் கீழாய் அடகு வைத்து
அழிப்பதில் முனைப்புடன்....

முதலைக் கண்ணீரும் மூக்குச் சிந்தலும்
முழுப்பக்க அறிக்கைகளும்
முழுமைப்பலம் கொண்டவர்களிடம்
சமர்ப்பித்துள்ளதாய் சத்தியம் செய்கிறது
சர்வதேச தூதர்கள்.

'வலிந்தவன் பிளைப்பான்
நலிந்தவன் அழிவான்'
வரலாற்றின் தத்துவம்
விளங்கினோம் உலகே...!
எங்களின் விடுதலை
உங்களின் முடிவுகள்
என்பதையும் விளங்கினோம்.

போதும்...!
உங்கள் கருணையும்
கண்துடைப்பும் போதும்.

சாம்பல் பூத்த தெருவிலிருந்து
செத்துக்கிடக்கும் எங்கள்
சொந்தங்களின் பிணங்களிலிருந்து
சத்தியம் செத்துவிட்டதென்பதை
சர்வதேச சமூகத்தின் முகத்தில்
அறைவதாய் உணர்த்துவோம்.

28.02.09

கடைசி நம்பிக்கையும் போக்கிடமின்றி.....

பூர்வீகப் பூமியைப்
பிழக்கிறது போர்.
யாருமினி மீளார் என்ற
முடிவாய் பேரவலப்
போர் மூட்டுகிறது உலகம்.

இனியெமக்குப் பிறப்புமில்லை
இறப்புமில்லை எந்தப் பூமியும்
எமக்காய் நீதி கேட்கவோ
நியாயம் சொல்லவோ யாருமேயில்லை.

பிழந்து கிழிந்து கந்தலாய்
தாய்நில வளங்களும்
தமிழரின் உயிர்களும்.

கண்ணீரும் குருதியும்
கலந்து எங்கள் காலமும்
கடைசி நம்பிக்கையும்
போகிறது போக்கிடமின்றி....

" அக்கா கதைக்க ஆசையாயிருக்கு
எப்போதாவது சந்திப்போம்
என்ற நம்பிக்கை போய்
ஒருதரம் கதைக்க வேணுபோலயிருக்கு"
என்ற தம்பியும்....
கடைசியாய் அவன்
கதை சொன்ன குரலும்
உறவின் பலமறுத்து
அவன் நினைவுகளை
விட்டுச் சென்ற
குரல் தொலைகிறது....

சின்ன வயதுத் தோழி வன்னியில்
செல்லடியில் செத்தாளாம்.
அவள் செல்ல மகள்
தனித்துப் போனாளாம்.

ஒளியலை விழியில் ஒளிப்படமாய்
சிதறிய அவளும்
பிணங்களின் நடுவே
அழுதபடி அவள் மகள்
ஆற்றுதற்கு ஆளின்றி
அனாதையாய் போனாள்.....

பேரவலம் ஒன்றின் பிரளயம்
பதுங்குழியிலும் பாதுகாப்பற்ற
பாழ் வெளியிலும்
குற்றுயிராய் குடல் பிழந்து
தமிழின ஆன்மா
ஆற்றவோ அணைத்துத் தேற்றவோ
ஆளின்றித் தனித்து
கடைசிச் சொட்டு நம்பிக்கையும்
காற்றோடு காற்றாய்....
கந்தகப்புகையோடு புகையாய்...

20.04.09 (காலை 09.58)

நம்பிக்கைகள் உனக்காய் துளிர்விடுகிறது...

நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....

"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....

"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....

ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....

வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?

"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?

விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.

06.05.09

நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம்

காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச்
சாவின் வாயிலில்....
மூச்சிழுக்கவோ முழுமையாய்
சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்....
மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி
கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய்
மகிந்தவின் மந்திரமும்
இந்திய மத்திய அரசின் தந்திரமும்....

குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள்
எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு
கண்களில் ஈரமின்றி எங்கள்
காவியங்கள் முகம் மட்டும்
கனவிலும் நினைவாக...

பழைய புன்னகையும்
பசுமையாய் நெஞ்சக்கூட்டில்
தோழரும் தோழியரும்
தொலைந்திடா நினைவோடு
கண்ணயர முடியாமல்
கனவிலும் அவர்களே
கலையா நினைவுகளாய்.....

பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு
வான் நிறைத்த
கரும்புகையோடு கலக்கிறது.

மானுடவியலாளர்களே
மனுப்போடாதீர் மண்ணீரம் சேரக்
கண்ணீரும் விட வேண்டாம்.
சாகும் இனமாய் நம் சந்ததியே
பாடையேற இதுவரை பார்த்திருந்து
பக்குவமாய் அறிக்கையிட்ட
உங்களுக்கு நன்றிகள்.

போதும் நாங்களினிப்
போக்கின்றிப் போய்விட்டோம்
நிம்மதியாய் மூச்சுவிட்டு
நிறையும் வைன் கோப்பைகளில்
நியாயம் பேசுங்கள்.

மானிட நேசம் மனிதவுரிமை
இப்படி நிறையவே பேசுங்கள்.
எங்காவது எம்மைப்போல்
அழிவதற்கே பிறந்தவர்கள்
ஊர்களுக்கு ஊருலா போய்
எழுதுங்கள் நிறைய நிறைய....
எங்களுக்காயினி
எவரும் வர வேண்டாம்.
நன்றி வணக்கம்
நாங்கள் செத்துப்போகிறோம்
சென்று வருக.
05.04.09

புலத்தில் புற்றெடுக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே....

"மட்டு.திருகோணமலை துணை ஆயர் அவசர கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்."

இவ் வேண்டுகோளானது புலம்பெயர் தமிழர்களுக்குமானது என்பதனை நினைவில் கொள்வோம். ஆயர் விடுத்திருக்கும் இந்த அவசர அழைப்புக்கு வெளிநாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டியது அவசியமாகிறது.

மன்னாரில் மட்டுமல்ல இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சகல இடங்களிலும் மேற்கூறப்பட்ட நிலைமையே நிதர்சனமாயுள்ளது.

போரின் வலியகரங்கள் எமது இனத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் தற்போதைய நிலைமையானது எந்தவொரு இனமும் அனுபவிக்காத கொடுமையிலும் கொடுமை.

காட்டுப்பகுதிகளை அவசரமாக திருத்தி அதை எமது மக்களின் தற்காலிக இருப்பிடமாக்கியிருக்கும் அரசைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ இந்த உலகில் யாருமில்லை. நாதியற்றவராய் நமது இனம் இன்று. ஆனாலும் எமது மக்களை பாதுகாக்கும் உரிமையையும் கடமையையும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற நம்மால் செய்ய முடியும்.

இராணுவத்தினரால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மக்களிடம் உயிரைத்தவிர தற்போது ஏதுமற்ற நிலமை. இம்முகாம்களில் மக்களுக்கு கொடுக்கப்படும் உணவுப்பொட்டலங்கள் கூட உரிய முறையில் பங்கிடப்படாமல் பலர் பசியோடு பரிதவிக்க வேண்டியுள்ளதான அவலத்தில் அகப்பட்டுக் கிடக்கிறார்கள். வரிசையில் உணவுப்பொதிக்காகக் காத்திருந்து மிதிபட்டு மூச்சைவிடும் நிலமையில் நமது மக்களின் துயரால் நிரம்பி வழிகிறது அகதிகளுக்கான அமைவிடங்கள்.

உலகம் எங்கோ தனது வளர்ச்சியை எட்டியிருக்க எமது மக்கள் காட்டுவாசிகள் போல காற்செருப்புமின்றிச் சுடுவெயிலில் அவலப்படும் உண்மை எவருக்குத் தெரியும் ? இவ் இடைக்கால முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் எவரின் காலிலும் செருப்புக் கூட இல்லை. சுடுவெயிலிலிருந்து தம்மைக் காப்பாற்ற மட்டைகளை வெட்டி நுலால் கட்டித் தங்கள் கால்களைக் காத்துக் கொள்கிறார்கள். பெண்கள் , கற்பிணிகளின் நிலமையோ எல்லாவற்றிற்கும் மேலான அவலமாகவுள்ளது.

அனைத்துலகமும் கைவிட்டு அறிக்கைகளோடு மக்களின் நிலை அமுக்கப்படுகிறது. வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் சில நமது மக்கள் புழுக்களையும் பூச்சிகளையும் தின்கிறார்கள் என அறிக்கைகளை எழுதி தமது உல்லாசபயணங்களுக்கான வசூலிப்பை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிறுவனங்கள் கூட எமது மக்களின் துயர வாழ்வைத் தங்கள் உல்லாசப் பயணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்போகிறார்கள்.

இவர்களை ஒருபடி மேல் நோக்கிச் சென்று தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளைக் காப்பதில் குறியாகியுள்ளதை அவர்களது அண்மைய நடவடிக்கைகளும் தெளிவுபடுத்துவதாக அமைகிறது. புலிகள் தவிர்ந்த ஓர் தீர்வைத் திணிக்க முயன்ற இந்திய உளவு "றோ" வின் கால்களில் கவிழ்ந்து பற்றிக்கொள்ளவும் தயரான நிலையில் மக்கள் பிரதிநிதிகள் மாறும் நிலையில் சமகாலக்களம் மாறி நிற்கிறது.

சர்வதேச சமூகத்தை விட்டு விடுவோம் போகட்டும். மக்களின் வாக்குப் பெற்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் அல்லலுறும் இந்த நேரத்தில் எங்கே ஒழிந்து போனார்கள் ? மக்களுக்குப் பணி செய்ய வேண்டிய தருணத்தில் வெளிநாடுகளில் வந்து நின்று என்னத்தைப் புடுங்குகிறார்கள் ?

இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உருப்படியாய் எதையும் இவர்கள் சாதிக்கவில்லை. மேடைகளில் வந்து நின்று புலம்பியது தவிர தமது சொந்த வாழ்வைத் தமது குடும்பங்களைக் கவனித்ததோடு இவர்கள் எதையும் செய்யவில்லை. 3மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஆறுமாதத்துக்கு ஒருமுறை கொழும்பு போனதும் பாராளுமன்றில் கையொப்பமிட்டதும் தான் இவர்கள் சாதித்த சாதனையாகப் பட்டியலிடலாம்.

வெளிநாடுகளில் கூட மக்களுடன் மக்களாக நின்று எதையும் செய்வதில்லை. இங்கு ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டுத் தரப்புகளுடனான சந்திப்புகளில் கூட இந்தத் தலைகள் வரமாட்டார்கள். வத்திக்கானுக்குக் கூட இலகுவாய் சென்று வந்து விடலாம், ஆனால் இந்தப்பாராளுமன்ற உறுப்புகளுடன் கதைக்கவே கனசாமிகளைத் தாண்ட வேண்டிய நிலமை. இவர்கள் எதற்காக பாராளுமன்று போனார்கள் தமிழரின் பெயரால் ? ஐரோப்பாவில் வந்து அகதியுரிமை பெறவா ? அல்லது தமிழரின் உரிமையை வெல்லவா ?

யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான கஜேந்திரன் , பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்கள் இன்னும் என்னத்தை ஐரோப்பாவிலிருந்து செய்து கொண்டிருக்கிறீர்கள் ? உங்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று இராணுவப் பகுதிக்குள் படுகின்ற துயரங்கள் தெரியுமா ? உங்களுக்காக ஒருநாள் முன்னதாக முகமாலைக்குப் போய் காவலிருந்து உங்களைத் தெரிவு செய்தவன்னி மக்களுக்காக சர்வதேச சமூகத்திடம் என்ன தகவலைச் சொன்னீர்கள் ? உங்களை நம்பி வாக்களித்த பல்லாயிரம் மக்களுள் சிலரோடு பேசக் கிடைத்த போது அவர்கள் உங்களை நோக்கிக் கேட்ட கேள்விகளே இவை.

பெண்களின் துயர் பற்றி ஊடகங்களில் வந்து மூக்குச் சிந்திய பத்மினியக்கா...., மாற்றுடைகள் முதல் பெண்கள் மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தத் தேவையான வசதிகள் எதுவுமற்று அல்லறும் பெண்களுக்காக என்னத்தைச் செய்யப் போகிறீர்கள்?

கிழிந்த உடைகளைக் கூடச் சோதனையென்ற பெயரில் எங்கள் தங்கைகளின் , அக்காக்களின் , அம்மாக்களின் உடைகளை அகற்றி நிர்வாணமாகப் படம்பிடித்துச் சிங்கள இராணுவம் செய்கின்ற கொடுமையை எங்கேயக்கா சொல்லப் போகிறீர்கள்? வன்னிக்குள் எங்கள் பெண்கள் அவலப்பட லண்டனில் திருமண விழாக்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கவா உங்களை அந்த மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் ? (உங்கள் தனிப்பட்ட விருப்புக்களுக்கு தடையிடுவதாய் எண்ண வேண்டாம்)

நீங்கள் திருமணங்களில் நின்று சிறப்பிப்பதைவிடவும் நாங்கள் ஏற்பாடு செய்கின்ற வெளிநாட்டு அரசியலாளர்களைச் சந்திக்க வருவீர்களானால் எமது மக்களுக்கு உங்களால் ஏதாவது வழிகிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளது. கலைஞருக்கு வாய்த்த கனிமொழிபோல எங்களுக்கு நீங்களோ என எண்ணத் தோன்றுகிறது அக்கா.

"முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 165,000 மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை முற்றாக அழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.. கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.- யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு பா.. கஜேந்திரன்

அண்ணை கஜேந்திரன் ! இந்தக்கண்டனங்களை யாருக்குச் செய்கிறீர்கள் ? தமிழால் தமிழர்களுக்குத்தானா ? "40ஆயிரம் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம்" என முழக்கமிட்ட உங்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் காற்செருப்புக்கும் வழியின்றி மட்டைகளைச் செருப்பாக்கி கற்காலம் நோக்கி நிற்கிறார்கள் தெரிகிறதா உங்கள் கண்களுக்கு ?

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மக்களின் பிரச்சனைகளைச் சொல்ல முடியாவிடில் பிறகெதற்குப் பாராளுமன்றப் பதவியும் பரபரப்பு அறிக்கையும் ? உங்கள் உயிர்கள் தானா உயிர் ? மற்ற உயிர்களெல்லாம் என்ன மண்ணுக்குள் புதைய வேண்டியவையா ? மக்களுக்காக நீங்கள் பணியாற்ற வேண்டிய தருணமிது. இதைத் தவறவிடில் உங்களைத் தமிழின வரலாறு மன்னிக்காது. போதும் அறிக்கைகள் ஆய்வுகள். சிங்கள அரசு சிறைவைத்திருக்கும் எங்கள் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைச் செய்ய முன்வாருங்கள். நீங்கள் வெளியில் இறங்கி எங்கள் மக்களுக்கான நிவாரணப் பணிகளைச் செய்யுங்கள். உலகமே உங்களுக்கு அள்ளித் தரக்காத்திருக்கிறது.

ஒளித்து நின்று மக்களுக்காகப் பேசாமல் வெளிச்சத்துக்கு வந்து உலகத்திற்கு எங்கள் மக்களின் அவலங்களைச் சொல்லுங்கள். தனிமனிதர்கள் சாதிக்க முடியாததை உங்கள் பாராளுமன்றப் பதவியால் சாதிக்கலாம். அடுத்து நீங்கள் பாராளுமன்றப்பதவிக்கு வரப்போவதில்லை. இப்போது உள்ள பதவிக்காலத்தை உரிய வகையில் மக்களுக்காகச் செலவிடுங்கள்.

களத்து வெற்றியை அடுத்த கட்ட நகர்வை களத்தில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் களத்து மாற்றங்களை அளவிடும் ஆய்வுகளை நிறுத்திவிட்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள். சங்கரியின் அறிக்கைபோல் உங்கள் அறிக்கைகளையும் ஆக்காதீர்கள்.

புலத்தில் நின்று நீங்கள் புதுமை படைக்கவும் எதுவுமில்லை. புலத்திலிருந்து செய்ய வேண்டிய கடமையை இங்குள்ள எமது இளையோரும் புலம்பெயர் மக்களும் செய்கிறார்கள். இங்கும் உங்கள் அவசியம் இல்லாது இருக்கிறது. நிலத்தில் நின்று நீங்கள் செய்ய வேண்டியவை நிறையவே இருக்கிறது. அங்கு செல்லுங்கள் அவற்றைச் செய்யுங்கள். அதுவே இன்றைய தேவை.