Friday, June 24, 2011

என்ர நிலமையை முதலாவதா எழுது…

XXXXஅக்காவும் XXXXXXஅண்ணையும் இங்காலை வாங்கோ….
உங்களைத்தான் இங்காலை வாங்கோ….

அத்தனைபேருக்குள்ளும் அவளையும் அவனையும் இனம்காட்டி அழைத்தவன் எதிரியின் இனத்தைச் சேர்ந்தவனில்லை. இவர்கள் பணியாற்றி அரசியல் பிரிவில் அவனும் பணியாற்றியவன். தூXXன் என்ற பெயரைக் கொண்டவன். அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவன்.

யுத்தம் முடிந்து நிராயுதபாணிகளாய் நிரையில் நின்றவர்களில் பலரை புலிகள் என்பதை இனங்காட்டி மக்களிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டிருந்தான் அவன். எதிரியின் இதயக்கூட்டையே தொட்டுத்திரும்பிய விடுதலையமைப்பின் பலம் நம்பிக்கை யாவும் இன்று தவிடுபொடியாய்…..புலியே புலியைக்காட்டிக் கொடுக்கும் நிலமைக்கு வரக்காரணமானது எது….? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் பெயர்களைச் சொல்லிக்கூப்பிடக்கூப்பிட அவன் சொல்லுமிடத்தை நோக்கிப் பலர் போய்க் கொண்டிருந்தார்கள்.
XXXXஅக்கா XXXXXXஅண்ணை உங்களைத்தான் கூப்பிட்டனான்…. அவன் திருப்பியும் அழைத்தான்.

தொண்டைக்குழியில் மிதிச்சமாதிரியிருந்தது அவனது அழைப்பு. அந்த இடத்தில் நின்ற அனைவரும் அவனையும் அவளையும் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். இருவரும் சுருக்குக்கயிறு கழுத்தில் சுற்றுவதை உணர்ந்தார்கள்.

கணவனின் கையிலிருந்த குழந்தையைத் தான் வாங்கிக் கொண்டாள். தூறிக்கொண்டிருந்த மழைத்தூறலில் குழந்தையை நனையாது கையில் கொண்டு வந்த துவாயினால் போர்த்தினாள்.

நடவுங்கோ……

என சற்று அழுத்தமான தொனியில் சொன்னான் அவன். மாற்று வழியின்றி அவன் பின்னே சென்று கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த மறைப்பிற்குள் செல்லுமாறு கையைக் காட்டினான்.

உள்ளே போனவர்களை விசாரணை செய்ய 4பேர் இருந்தனர். அதிகம் கடவுளர்களை நம்பாதவள் அந்த நிமிடத்தில் எல்லாக்கடவுளர்களின் பெயர்களையும் உச்சரித்தாள். உள்ளுக்குள் ஆயிரம் வேண்டுதல்கள் செய்தாள். இந்தக் கைகளிடமிருந்து தப்பினால் தான் அழைத்த கடவுளர்க்கெல்லாம் நேர்த்திகள் செய்வேனென்று நினைத்துக் கொண்டாள்.
அங்கே அவர்களை விசாரிக்கவெனத் தமிழ் தெரிந்த அதிகாரியும் ஒருவன் இருந்தான். அவன் முஸ்லீம் இனத்தவனாக இருக்க வேண்டும். அவனது தமிழ் வித்தியாசமாக இருந்தது.
வட்டுவாகல் தாண்டி வரும்போது அந்த அதிகாரியைச் சிவிலுடையில் இவர்கள் கண்டார்கள். அவன் சரணடைய வந்தவர்களைத் திட்டிய திட்டுகளை இவளும் கேட்டுக்கொண்டுதான் நடந்தாள். அவன் முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. அங்கே பேசிய தூசணத்தால் இங்கே பேசாமல் இவர்களது விபரங்களைப் பதிவு செய்து கொண்டான்.

தூXXன் உள்ளே வந்தான் அவர்களைத் தன்னோடு வரச்சொல்லி அழைத்தான்…..அவளது அவனைத் தூXXனைக் கூட்டிப்போகச் சொன்னான்….அவளைத் தான் விசாரிக்கப் போவதாகச் சொன்னான்.

வட்டுவாகலில் சயனைட்டை அடிப்போம் அல்லது குண்டைக்கட்டி வெடிப்போமென்று கேட்டவளுக்கு….எல்லாரும் தான் போயினம் நாங்கள் ஏன் சாவான்….வா போவம்….எல்லாருக்கும் ஒத்ததுதான……என்றவன் மீது எரிந்து விழுந்தாள்.

அப்ப எங்கடை கொள்கையெண்டு நாங்க கத்தினதெல்லாம் ஆருக்காக…..?

எடியம்மா நீ அரசியல் செய்தனியடி….உன்னோடை கதைக்கேலாது……இந்தக் குழந்தையை என்ன செய்யிறது….? உன்ரை கையாலை உன்னாலை கொல்லேலுமே….? அதைச் செய் நான் நீ சொல்ற குப்பியை அடிக்கிறன் அல்லது குண்டைக்கட்டிறன்…..

அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. குழந்தை பிறந்து 7வது மாதமே காவலரணில் கடமையில் இருந்தவள். தான் இறந்து போனால் இயக்கம் தனது குழந்தையை வாழ வைக்குமென்ற தைரியத்தில் சென்ற மாதம் வரை ஒரு அணியை வழிநடத்திக் கொண்டிருந்தவள்.

கட்டாய ஆட்பிடியை எதிர்த்துக் குரல் கொடுத்து அரசியல்பிரிவினரிடம் எதிர்ப்புகளை வாங்கிய பின்னும்…, கடைசி முயற்சியாக ஸ்பீக்கரைச் சுமந்து பதுங்குகுளிகளிலும் குடும்பங்களுடனும் போய் ஒளிந்து கொண்ட தளபதிகள் போராளிகளையெல்லாம் இறுதி யுத்தம் செய்ய வாருங்கள் என அழைத்தாள்.

ஆனால் எதுவித அசுமாத்தமுமின்றிச் சுயநலமாய் பதுங்கியவர்கள் கட்டாயப்பிடியில் அகப்பட்ட பிள்ளைகளைப் பலிக்கு அனுப்பிவிட்டு ஒளிந்திருக்கும் உண்மையை அறிந்த போதுதான் கணவனையும் அழைத்துக் கொண்டு தானும் ஒதுங்கினாள்.

எல்லோரும் நம்புவது போல வெளிநாடுகள் வரும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு குழந்தையையும் கணவனையுமே காப்பாற்றத் துணிந்தவளால் அந்தக் குழந்தையைத் தன்கையால் அழிக்கத் தைரியம் வரவில்லை. அழுதாள் ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுதாள்.
000 000 000

வீட்டில் அவளோடு கூடப்பிறந்த 3அண்ணன்களும் அடுத்தடுத்து மாவீரர்கள் ஆனார்கள். அம்மா அப்பாவுக்கு மிஞ்சிய அவளும் கரும்புலியாக கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்த காலங்களில்…..,விதையாய் வீழ்ந்து போன 3 அண்ணன்களையும் விதைத்த துயிலும் இல்லங்களில் போயிருந்து அவர்களது கனவுகளை நனவாக்குவேனெனச் சத்தியம் செய்வாள். தானில்லாது போனால் அன்புச்சோலை மூதாளர் பேணலகம் தனது தாயாரையும் தந்தையையும் காப்பாற்றுமென்று நம்பினாள்.

கரும்புலியாகும் நாளுக்காக் காத்திருந்தாள். ஆனால் கரும்புலியாய் அவள் போகும் விருப்பை மாற்றிக் கொள்ளுமாறு தலைவவரிடமிருந்து பதில் வந்தது. வீட்டிலிருந்து 3வீரர்களைத் தந்த குடும்பத்திற்காக அவள் களப்பணிகளிலிருந்து விலகி காலம் முழுவதும் அரசியல்பணி செய்ய வேண்டுமென்ற அறவித்தலும் அவளுக்கான விசேட அன்பளிப்பு ஒன்றும் தலைவரால் வழங்கப்பட்டிருந்தது.

தலைவனின் சொல்லைத் தட்ட முடியாது அரசியல் களத்தில் ஊருராய் இறங்கிப் பணி செய்யத் தொடங்கினாள். பெண்கள் மட்டத்தில் பல வேலைகளை முன்னெடுத்துச் செய்து கொண்டிருந்தாள். தனது செயல்கள் தன்னைப்போலவே தூய்மையானதாயிருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே கவனத்துடன் இயங்கினாள். அவளது நேர்மையும் தைரியமும் பல தடவைகள் சோதனையாகவும் மாறிய அனுபவங்கள் நிறையவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அவள் நேசிக்கும் தூயதலைவன் உள்ளவரை யாவையும் வென்றுவிடுவேன் என்ற தைரியத்தோடு கடமையில் கவனமாக இருந்தாள்.

திருமணப்பேச்சு எழுந்த போது அதிகம் அக்கறைகாட்டவில்லை. ஊனமுற்றவர்களோடும் சமூகத்து ஊனங்களைச் சுமந்து வாழும் பெண்களுடனும் தனது வாழ்வை முடித்துவிடவே விரும்பினாள். ஆனால் அவளை ஒருவன் அவள் பணியாற்றிய பிரிவிலிருந்து காதலித்தான். அவனும் களத்தில் காயமடைந்து ஊனமுற்றிருந்தான். அவனோடு பேசும் வாய்ப்புகள் கிடைத்து அவளும் அவனை நேசித்தாள். ஒருநாள் பெரியவர்கள் முன்னிலையில் அவளுக்கும் அவனுக்கும் திருமணம் நிகழ்ந்தது.

ஒருமாதம் கிடைத்த விடுமுறையை இருவரும் மறுத்துத் தங்கள் வேலைகளில் கவனமாயிருந்தார்கள். காலையில் இருவரும் வீட்டை விட்டு வெளிக்கிட்டால் இரவுதான் திரும்பியும் வருவார்கள். சிலவேளைகளில் யாராவது ஒருவர் வீட்டுக்கு வருவதுகூட இல்லை. கடமைக்குப் போன இடத்திலிருந்து தகவலை அனுப்பிவிட்டு வாரக்கணக்ககாகக்கூட நின்று விடுவார்கள்.

எங்கே போனாலும் அவள் அந்த ஊர்களின் மகளாகிவிடுவாள். ஊரில் மிஞ்சியிருக்கும் ஆச்சிமாருடன் அடுப்படியில் போயிருந்து அவர்களது கடந்த காலங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். பல கிராமங்களில் அவள் செல்லப்பிள்ளை. அவளுக்காக கோவிலில் அரிச்சனை விபூதியென்று அவளுக்காக அனுப்புவார்கள். ஒரு அரசியல் போராளி எப்படி இயங்க வேண்டுமென்பதற்கு அவள்தாள் சிறந்த உதாரணம். சமாதான காலத்தில் ஊர்பார்க்கப் போன பலர் அவளிடமே சொல்லியிருக்கிறார்கள்.

சமாதானகாலத்தில் கிடைத்த வசதிகள் வாய்ப்புகளைப் பலர் பலவாறாகப் பயன்படுத்தினார்கள். காணிகள் வாங்கினார்கள் , வீடுகள் கட்டினார்கள் , வசதியான வாழ்க்கையை வாழ்ந்தர்கள் , வீடுகளில் வேலைக்கு ஆட்களைக்கூட வைத்திருந்தார்கள். ஆனால் அவளும் அவனும் திருமணமான போது போட்டுக் கொண்ட மண்வீட்டைத்தவிர எதையும் தங்களுக்காகச் சேர்க்கவில்லை. அவர்களுக்காகக் கிடைக்கவிருந்த வசதிகளையெல்லாம் தங்கள் இலட்சியத்திற்காகவே அர்ப்பணித்து அவர்கள் காணும் தாயகக்கனவுக்காகவே வாழ்ந்தார்கள்.

இயக்கக்காசிலிருந்து ஒரு சதம்கூட வீணாகக்கூடாதென்று கவனமாயிருப்பாள் அவள். மாதாந்தம் கைச்செலவுக்காகக் கிடைக்கும் 500ரூபாவைக்கூட அவள் சேமித்து ஆதரவற்ற குழந்தைகள் பெண்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறாள்.

கைச்செலவுக்காசு தவிர மேலதிக கணக்கெழுதி வரும் கணக்குகளை உரிய சான்றுகளைத் தேடி கடைகளெல்லாம் ஏறியிறங்குவாள். இயக்கம் இத்தனை வளர்ச்சிகாண தாம் உழைத்த உழைப்பு அர்ப்பணிப்புகளைப் பற்றி மூத்த போராளிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஒரு துப்பாக்கிக்காக ஒரு தோட்டாவுக்காக ஒரு நேர உணவுக்காக என எத்தனையோ கட்டுப்பாடுகள் சேமிப்புகள் செய்து இன்று இலகுவாய் வசதிகளைப் பெறும் நிலைக்கு இயக்கத்தை வளர்த்து விட்டவர்களைப் பற்றிப் பிள்ளைகளுக்கு வகுப்பெடுக்கும் நேரங்களில் சொல்லுவாள். ஒரு சதம்கூட வீணாகாக்கூடாது என்பதனை அடிக்கடி நினைவுபடுத்துவாள்.

ஒருத்தி அடிக்கடி மேலதிகமாகக் கணக்கு அனுப்புவாள். அவள் ஒரு பெண்கள் இல்லத்திற்காக செலவு செய்ததாகக் கணக்குக் கொடுப்பாள். அந்தத் தோழி தனது பிறந்தநாளுக்கு கேக்செய்வித்து மற்றையவர்களுக்குக் கொடுத்ததாக அறிந்தாள். அவ்விடயத்தை ஆராய்ந்தபோது குறித்த இல்லத்தின் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பிள்ளைகளுக்கு வழங்கப்படாமல் தனது பிறந்தநாளுக்கு கேக்குக்கு பயன்படுத்தியிருக்கிறாள் என்ற உண்மையை அறிந்த போது தோழியை எச்சரித்து விட்டாள்.

ஆனால் அந்தத்தோழி தனக்குள்ள அதிகாரத்தை வைத்துத் தொடர்ந்தும் பணவிடயத்தில் தவறுகள் செய்து வந்ததைப் பொறுக்காமல் ஒருநாள் உரியவளை அலுவலகத்தில் வைத்து அடித்துத் துரத்திவிட்டாள். அதற்கான தண்டனையைப் பொறுப்பாளர் கொடுத்தபோது சத்தமின்றிப் பெற்றுக் கொண்டாள். ஆனால் தவறுகள் நடப்பதனை மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினிக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் தெரிவித்துக் கொண்டிருந்தாள்.

ஒருமுறை ஒருபெரியவரின் தவறுகளை ஒருவர் மூலம் ஒளிப்பதிவு செய்து தலைவருக்குக் கொடுக்குமாறு அனுப்பினாள். ஆனால் அவள் அனுப்பிய விடயத்தை கொண்டு சென்றவன் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கொடுத்துவிட்டான். தமிழ்ச்செல்வனின் அன்புக்குரிய அந்த நபரே இவளிடம் வந்து சொன்னார்.
நல்ல பேட்டிதான் குடுத்திருக்கிறீர்…..! ஆர் பிழை செய்தாலும் பிழைதான்…. எனச் சொன்னவர் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளவுமில்லை…..அதனைத் தலைவருக்குச் செல்லவும் விடவில்லை. அவள் சொல்லவிரும்பிய விடயங்கள் எதுவும் தலைமைக்குப் போகாது இடையில் தங்கிவிட்டதோடு சற்றுச் சோர்ந்து தான் போனாள். ஆனாலும் கடைசிவரையும் தனது கடமைகளைச் சரியாகவே செய்தாள்.

2009ம் ஆண்டு தொடக்கத்தோடு ஓய்ந்து போனாள். கட்டாயப்பிடியை எதிர்த்தவர்களுள் அவளும் முக்கியமானவளாக இருந்தாள். மக்களுக்கான போராட்டம் மக்களிடமிருந்து தனித்துவிடக்கூடாதென்று விரும்பிய பலரைப்போல அவளும் அவ்விடயத்தில் அவதானமாக இருந்தாள். ஆனால் எது நடக்கக்கூடாதென்று கடைசிவரையும் கவனமாயிருந்தாளோ அது நடந்து கொண்டிருந்தது. மனசால் அவள் நொந்து போனாள். தனது காதல் கணவனுடன் அதுபற்றியெல்லாம் வாதிடத்தொடங்கினாள். ஒவ்வொரு விடயங்களையும் காணுகின்ற நேரங்களில் எல்லாம் அவளுக்குள் பொங்குகிற எரிமலையைக் கட்டுப்படுத்தி மெளனமாகினாள். அவர்கள் இருவராலும் மாற்றிவிட முடியாத மாற்றங்கள் அங்கு நடைபெறத் தொடங்கியது.

அண்ணை பாவம்….அவனுக்குச் சொல்லியழுவாள்……அவளுடன் சேர்ந்து அவனும் தான் அழுவான். அதைவிட எதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. ஏப்றல்மாதம் எல்லாக் கனவுகளையும் தனக்குள் புதைத்துக் கொண்டாள். தனது குழந்தையை மட்டும் காப்பாற்ற விரும்பியவள் தாயாருடன் அனுப்பிய குழந்தையைத் தன்னுடன் கூட்டிவந்தாள். மனவுளைச்சல் ஏமாற்றம் பதுங்குகுளி வாழ்க்கை இருக்கும் வரை இருந்துவிட்டுப் போவோமென்ற விரக்தி எல்லாம் சேர்ந்து அவளது அந்தநாள் துணிச்சல் வீரம் எல்லாம் தொலைந்து போய்விட்டது.
000 000 000

பிணங்களாலும் இரத்தத்தாலும் நிறைந்த மண்ணலிருந்து அவரவர் தங்கள் உயிர்களை மட்டும் காத்துக் கொண்டு அந்தக் கடைசி நிமிடம் வரை எதிர்த்தவர்கள் முன்னால் சரணாகதியாக வேண்டிய நிலமைக்கு ஆளானார்கள். வசதியிருந்தவர்கள் கடலால் புறப்பட்டார்கள்…..வசதியற்றவர்கள் வேறு வழியின்றி தரையால் சரணடையும் செய்தி இவர்கள் காதிலும் எட்டியது. அவளோடு வாழ்ந்தவர்கள் பலர் தங்களைத் தாங்கள் அழித்துக் கொண்டதையறிந்தாள். எதிரியிடம் சரணடைந்து சாவதிலும் பார்க்க தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது மேலெனக்கருதியவள் தனது முடிவைக் கணவனிடம் சொன்னாள்.

எல்லோரும் உயிருடன் போக நாங்கள் மட்டும் சாக வேண்டுமா என்றவனுடன் 2நாள் போராடினாள். கடைசியில் தான் பெற்ற குழந்தையைக் கொன்றுவிடு சாகிறேன் என்றவனின் வார்த்தைகளோடு அதையும் கைவிட்டாள்.

அன்றுவரை எதிரியாயிருந்தவர்களிடம் அவளும் அவனும் சரணடையும் முடிவோடு பதுங்குகுளியைவிட்டு வெளியேறினார்கள். எங்கும் சனக்கூட்டம் காணவில்லையென்றவர்கள் கூட வரிசைகட்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

எங்கையிருந்தடா வாறியள் பே….பூ…..மக்களே… உவ்வளவு பேரும் சேந்து கல்லாலை எறிஞ்சிருந்தாக்கூட நாங்க ஓடியிருப்பம்…. என்ன பூ…..போராட்டம் நடத்தினியள்…….உள்ளை போய் சாகப்போறியள் போங்கோ…..

அந்த அதிகாரி தூசணத்தால் பேசிக்கொண்டிருந்தான். அவன் அக்கறையுடன் சொன்னானா இல்லையா என்பது தெரியாது. ஆனால் ஏதோவொரு ஆதங்கம் அவனுக்குள்ளும் இருப்பது போலிருந்தது. அவன் சொன்னது போல இவ்வளவு பேரும் களத்தில் இறங்கியிருந்தால் கதை மாறியிருக்கும்…..அவளும் நினைத்தாள்……
000 000 000

அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் சனங்களுடன் அவளும் அவனும் காவலிருந்தார்கள். போராளிகள் தரம்பிரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் குழந்தையோடு பொதுவானவர்கள் வரிசையில் போயிருந்தார்கள்…..மக்களுடன் அதிகம் பணிசெய்தவளை மக்களே தங்களுடன் வைத்திருக்க கொள்கையோடு போராளியாக இருந்தவன் அவளையும் அவனையும் இனங்காட்டி பெயர் சொல்லியழைத்து இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான்.

அவளை அந்த அதிகாரியுடன் விட்டுவிட்டு தூXXன் அவளது அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போனான்.

பிள்ளை கவனம்…..நான் விசாரணை முடியாத் திரும்பி வருவேன்……சொல்லிவிட்டு அவன் போனான்.

அந்த அதிகாரி அவளையும் குழந்தையையும் போராளிகளின் பதிவில் பதியாமல் சாதாரணமானவளாப் பதிவு செய்தான். என்னாலை உங்களுக்காக இதத்தான் தங்கைச்சி செய்ய முடியும்….மன்னிச்சுக் கொள்ளுங்கோ….சொல்லிவிட்டு அவளையும் அவளது குழந்தையையும் அனுப்பினான். அவன் செய்த அந்த உதவிக்குத் தனது கண்ணீரால் நன்றி சொல்லிவிட்டுப் போனாள்.

வேற்று இனத்தவன் ஒருவன் அவளைக்காப்பாற்றச் செய்த உதவியையும்……., அவளோடு ஒரே இலட்சியத்தைச் சுமந்து திரிந்த ஒருவனால் அவளுக்காகச் செய்ய முடியாது காட்டிக் கொடுக்கப்பட்டதையும் நினைத்துப் பார்த்தாள்.

தாயகத்துக்காக உயிர் விட்ட தனது 3அண்ணன்களையும் நினைத்துப் பார்க்க அடக்கமுடியாத அழுகை வந்தது. அவளது அண்ணன்களைப் போல எத்தனையோ அண்ணன்களை , தம்பிகளை , தங்கைகளை , தோழிகளைத் தோழில் சுமந்து போய் விதைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் ஏற்பட்ட ஓர்மமும் எழுச்சியும் இன்று வீணாய்விட்டதாய் உணர்ந்தாள்……எத்தனைபேரின் தியாகங்கள் கொடைகள் யாவும் அவர்கள் கண்ட கனவுகள் போலவே கனவாய்ப் போய்……அவளிடம் மிஞ்சிய இன்றைய சொத்த அவளது குழந்தை மட்டும் தான்……
000 000 000

முகாமிலிருந்து விடுதலையாகி ஊருக்குப் போனாள். அவளுக்கு ஆறுதலாய் இருப்பார்கள் என நம்பிய அம்மா அப்பா இருவரையும் தேடினாள். கடைசியாய் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் போன வழியில் அம்மா இறந்துவிட்டதாகவும்…...அவர்களே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போனதாகச் சொன்னாள் பெரியம்மாவின் சின்னவள். அப்பா வவுனியாவில் முதியோர் இல்லமொன்றில் இருப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரியம்மா சொன்னா.

எல்லாம் வெறுமை…..வாழ்ந்த வீடு அவள் இலட்சியம் சுமந்து திரிந்த தெருக்கள் யாவும் மாறிப்போயிருந்தது…..இலட்சியங்களுடன் அவளுடன் வாழ்ந்த பலரை வீதிகளில் சந்தித்தாள். யாரும் யாருடனும் பேசாது போனார்கள். ஆளையாள் தற்காத்துக் கொள்ளும் அவசரத்தை அவர்களது பார்வைகள் விளக்கியது. அவர்கள் விலகுவது போல அவளும் விலகிப்போனாள்…..எல்லாவற்றையும் மறந்துவிடுவோமென முயற்சிக்கிறாள். எதைத்தான் மறப்பது…? எல்லாம் நேற்றுப்போலவும் இன்று போலவும் கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கிறது.

அவள் கண் முன்னே கொண்டு செல்லப்பட்ட அவளது கணவனை 2வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறாள். அவனைப்பற்றி மனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச் சங்கம் என எல்லா இடங்களிலும் பதிவுகள் செய்து தேடிக்கொண்டிருக்கிறாள். அவன் இருப்பானென்ற நம்பிக்கை விடுபட்டுப் போகிறது……மனிதவுரிமைக்குழுவின் முன்னால் சாட்சியம் கொடுத்தால் சிலவேளை அவன் இருக்கும் இடத்தை அறியலாம் என்றார்கள்….விசாரணைக்குழுவின் நேர்மை பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படித்ததிலிருந்து அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டாள்.

இன்றைய அவளது பிரச்சனை வறுமை. வாழ எதுவுமற்ற வெறுமை. அன்றாடம் தனது குழந்தைக்கான உணவைக் கொடுக்கவே முடியாத தனது நிலமையை மாற்ற உதவிகளைத் தேடி நிறுவனங்களை நாடுகிறாள்…..

சுயதொழில் ஒன்றைச் செய்ய வேண்டும் தன்னை மட்டும் சொந்தமாய் நம்பியிருக்கும் தனது பிள்ளைக்கான ஒரு வாழ்வைக் கொடுக்க வேண்டுமென்ற கனவோடு உதவிகள் செய்வோரையெல்லாம் தொடர்பு கொள்கிறாள்.
000 000 000

அண்மையில் ஊனமுற்ற தனது கைமூட்டில் ஏற்படும் வலிக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தாள். அவளோடிருந்த இன்னொருத்தியைச் சந்தித்தாள்.
எப்பிடியக்கா இருக்கிறீங்கள்……? அவள் கேட்டாள். கண்ணீர் தான் முந்திக் கொண்டு வந்தது. அழுதாள். அங்கே சந்தித்தவளும் அழுதாள். விடைபெறும் போது ஒரு தொலைபேசியிலக்கத்தைக் கொடுத்துச் சொன்னாள்.

இந்த நம்பருக்கு எடுத்துக்கதை ஒரு அக்கா கதைப்பா….ஒராள் மூலம் தொடர்பு கிடைச்சுக் கதைச்சனான். அவையள் ஒரு நிறுவனம் நடத்துகினமாம்…..எங்களைமாதிரியாக்களுக்கு உதவுகினம்….வெளியில உள்ள ஆக்கள் ஆரையாவது உனக்கு ஒழுங்குபடுத்தித்தருவா….எனக்கு சுயதொழிலுக்கு உதவி செய்தவை…..உனக்கும் ஏதாவது செய்வினம்….கேட்டுப்பார்….

வீட்டுக்கு வந்ததும் முதல் அலுவலாக அந்தத் தொலைபேசியிலக்கத்துக்கு அழைத்தாள்.

அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்கோ….

சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள். அடுத்த 5நிமிடத்தில் அவளை அழைத்தது தொலைபேசி. எதிர்முனையில் பெண்குரல். அவளை யாரென விசாரித்தது. அவள் தனது சொந்தப்பெயரைச் சொல்லி அறிமுகம் செய்தாள். தனது தற்போதைய நிலமைகளை விபரித்தாள். அரைமணித்தியால உரையாடலின் பின்னர் பலரைப்பற்றி அந்தக் குரல் விசாரித்தது. அந்தப்பெயர்களில் அவளது இயக்கப்பெயரையும் விசாரித்தாள் மறுமுனையில் பேசியவள். அந்தப் பெயருக்கு உரியவள் தான் தான் என்பதனைக் கூறினாள்.
அடியே நீ இருக்கிறியா…உயிரோடை……முறுமுனையிலிருந்து கேட்டவள் அழுதாள்…..நீ செத்திட்டியெண்டு கேள்விப்பட்டனான்….கனபேரிட்டைக் கேட்டனான்…..ஒருதரும் இல்லையெண்டு சொல்லிச்சினம்….. என்றாள் அவள்.

இருமுனையிலிருந்தும் அழுகையொலிதான்….. சில நிமிடங்கள்…..வார்த்தைகள் வரவில்லை……நாங்க நினைச்சது என்னவோ நடந்து முடிஞ்சது என்னவோ…..எல்லாம் போச்சு…..என மறுமுனையிலிருந்து அழுதவளுக்குச் சொன்னாள்…..

வேலுப்பிள்ளையற்றை மகனாலை முடியாதது இனி ஒருத்தராலும் முடியாதடி….அந்தாள் பேசாம தானும் தன்ரை குடும்பமுமெண்டு வாழ்ந்திருக்கலாம்…..சுயநலமில்லாமல் வாழ்ந்தது தான் அந்தாள் செய்த முதல் தப்பு…..முடிஞ்சா மிஞ்சினவையை வாழ வையுங்கோ…..

தெருவில் விடப்பட்ட தங்களது வாழ்வுபற்றிச் சொன்னாள்…..வன்னிக்குள் மலிந்து கிடக்கும் எல்லா அசெளகரியங்கள் சீர்கேடுகள் பற்றிச் சொன்னாள். அண்மையில் வீதியில் சென்ற போது அவளது உள்ளாடை பற்றி கிண்டலடித்து அவளது பின்சட்டையில் இழுத்த இளைஞர்கள் பற்றிச் சொன்னாள். அவளது மோட்டார் சயிக்கிள் வருவதை அறிந்தாலே ஒதுங்கியோடிய பலர் இன்று அவளைப் பாலியல் ரீதியாக இம்சிப்பதையெல்லாம் சொன்னாள்…..எல்லாம் முடிஞ்சுது….இப்ப என்ரை கனவு என்ரை குழந்தைதான்…..என்னைமாதிரியிருக்கிற கனபேரின்ரை கனவு இப்ப இதுதான்…..

நாளைக்கு நாங்கள் இல்லாமல் போனால் எங்கடை கனவுகளைச் சுமந்து எங்கடை இலட்சியத்தைக் நிறைவேற்ற எங்கடை குழந்தைகள் முன்வருங்களெண்டும் கனபேர் 4,5 பிள்ளைகளைப் பெத்தவையும் இருக்கினம்…..இண்டைக்கு அந்தப்பிள்ளையளுக்கு ஒரு நேரச்சோறு குடுக்க வழியில்லாமல் அந்தரிக்கிற கனபோராளியளெல்லாம் இஞ்சை வாழ்ந்து கொண்டிருக்கினம்….. எங்கை திரும்பினாலும் வறுமைதான் இப்போதைய எங்கடை பிரச்சனையாக்கிடக்கு….. ஏன் நான்கூட என்ர பிள்ளைக்காகத் தான் கையேந்தி நிக்கிறேன்…….

21வருசம் போராளியா இருந்தனான் இண்டைக்கு என்ரை நிலமையைப் பார்…..எல்லாம் இருக்கேக்கதான் இழந்தாப்பிறகு ஒருதரும் பாக்காயினம்…..அவள் தனது துயரங்களையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.

உண்மையளை எழுதித்தாவன்…..வெளியில போடுறன்……அவள் சிரித்தாள். இனி உண்மையைச் சொல்லி எங்களுக்கென்ன தங்கப்பதக்கமே கிடைக்குமெண்டு நினைக்கிறாய்…..வெளிநாட்டில இருக்கிற உனக்கு இங்கத்தைய உண்மைகளைச் சொல்லிப் புரியுமோ…? நான் எழுதிற நிலமையில இல்லையடி வேணுமெண்டா நான் சொல்றன் நீ எழுது…..என்ர நிலமையை முதலாவதா எழுது….எனக்காக யாரும் கருணை காட்டினாச் சொல்லு…..என்ரை பிள்ளையை வாழவைக்க ஒரு வழிசெய்து தா…..விம்மலுடன் கேட்டாள்……..

02.06.2011