Monday, December 31, 2012

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

"ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே"  இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-
'வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா'

இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக்கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.

இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதிகோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.

திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.
பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3போராளிகள். 2பேர் மலேரியாக்காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது.

காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.
அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-
குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது.

கோட்டார்மனைக்கால் சொக்கர்வளவுப்பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்தியகல்யாணி மரமொன்றே.
கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப்பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப்புலகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை , மல்லாகம் , சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.

அப்போது யாழ்நகர் பகுதி , கோண்டாவில் ,திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப்போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

'அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.' அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.
எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப்போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது.

அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.
நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?

நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ.....
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப்பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும்போதும் எப்போதும் பாடுகிற „'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „'பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு....!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான் , கட்டுவன் ,குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக....1990 தீபாவழி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்குகுளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்....செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.
அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது.

பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா.

5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய்
வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி.....

இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்....ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கவுரவப்படுத்தியிருக்கிறது.

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார்.

அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.
எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்....

வணங்குகிறேன்....காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்...றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்....உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.
31.12.2012

Wednesday, December 19, 2012

ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும்

இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்னே ஓட வெளிக்கிட்டவள் இன்று 36வயதாகியும் ஓட்டம் நிற்கவில்லையென்றே அலுத்துக் கொள்கிறாள்.

அவள் காதலின் பரிசாய் 3 குழந்தைகளும் அவள் கணவனின் ஞாபகமாய் அவனது சில நிழற்படங்களுமே இப்போது அவளுக்கான சொத்துக்கள். ஒரு பெரும் அமைப்பின் முக்கியமான சொத்தாயிருந்த அவனது மரணம் அவளோடும் அவளுடன் கூடிய சில பேருடன் 2வருடங்களின் முன்னர் அன்னிய நாடொன்றில் அவன் வேறொரு மதத்தின் பிள்ளையாய் அன்னிய மதசம்பிரதாய முறைப்படி நிகழ்ந்து முடிந்தது.

அவன் இறப்பதற்குச் சிலமாதங்கள் முன் வரையும் அவனாலேயே வாழ்ந்த உறவுகள் , நட்புகள் எவருமே அவனது மரணத்திலும் கலக்கவில்லை. அப்படியொருவன் இருந்ததையும் மறந்து போனார்கள். எல்லாத் தொடர்புகளும் அற்றுப்போய் மரணத்தின் வாசலில் நின்றபோதும் தன்னைப்பற்றி தனது பூர்வீகம் தனது சொந்தப்பெயரைக்கூட அவளுக்குச் சொல்லாமலே மௌனமாகினான்.

தேவையின் நிமித்தம் அவன் வாயில் ஒருகாலம் பொய்யைத்தவிர எதுவும் வந்ததில்லை. அவளுக்குக்கூட அவனொரு கணணித்துறை நுட்பவியலாளனாய்தான் அறிமுகமானான். கடமையின் கனம் போன இடத்தில் ஒரு காதலை ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது. எல்லாம் தேசத்திற்காகவென்றே எல்லாவற்றையும் செய்தான்.

எல்லா முடிவுகளின் பின்னால் ஏதோவொரு நம்பிக்கை அவனில் ஒட்டியே இருந்தது. மீண்டும் துளிர்க்கும் ஈழக்கனவென்று நம்பியே இயங்கினான். ஒருநாள் அவனது கையிலிருந்து எல்லாவற்றையும் காலம் பறிக்க கைதியாகி அவனது காதல்துணையும் அவனைப் பிரிந்து சிறுகுழந்தைகளோடு அவள் மொழிதெரியாத ஊரொன்றில் ஒதுங்கினாள்.

சிலகாலங்களில் அவளும் கைதாகினாள். நீண்ட அலைவு துயரங்களின் பின்னர் இருவரும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்கியது. அவன் பற்றிய மர்மங்களை அவன் அப்போதும் சொல்லவேயில்லை. உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தவன் சோர்ந்து போகத்தொடங்கினான்.  இறுதியில் அவன் உயிர்கொல்லும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாய் மருத்துவர்கள் சொன்னார்கள்.

எல்லாம் இழந்த பின்னர் மனங்களை ஆற்றுப்படுத்தும் நிவாரணி இறுதியில் கடவுள் என்றாவது வளமை. அவன் கர்த்தரை துதிக்கத் தொடங்கினான். கர்த்தரின் மீட்பர்களே அவனைக் கடைசியில் கையிலேந்தியவர்கள். நாட்கள் ஒவ்வொன்றும் ஓட ஓட அவன் உயிர் சொட்டுச் சொட்டாய் பிரியத்தொடங்கியது.  அவனது உயிர் மீள்தலுக்காக அவள் அலைந்த அலைச்சலும் பட்ட துயரங்களும் அவனை மிகவும் வருத்தியது. அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளுக்கான காரணங்களைச் சொல்ல முடியாத நிலமைக்குப் போயிருந்தான்.

அவளுக்காக அவன் அப்போது அழுதிருக்கக்கூடும் அனாதரவாகிவிடப் போகிற தனது குழந்தைகளுக்காக அதிகம் அந்தரித்திருக்கக்கூடும். எங்காவது தன்னோடிருந்த ஒரு நட்பெனினும் கைகொடுக்குமென்ற நம்பிக்கையோடு ஒரேயொரு தொலைபேசியிலக்கத்தை மட்டும் அவளிடம் ஒருநாள் எழுதிக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் கைகள் பேனாவைப் பிடித்ததில்லை. கடைசியில் அவன் பைபிளை படித்தபடியே மனிதர்கள் பிரார்த்திக்க மரணித்துப் போனான்.

000                          000                        000

எல்லாம் முடிந்து போனபின்னரே அவளை வறுமை துரத்தத் தொடங்கியது. சொந்த உறவுகள் பிறந்த ஊர் அவளை ஏதோ தப்பானவளாகவே கருதியது. தந்தையின் பெயர் தெரியாத பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தாயாகவே அவளைப் பரிகசித்தது. அவளைப் பாவத்தின் மிச்சமாகவே ஒதுக்கியது.

பிள்ளைகளில் ஒன்றுக்கு  உலக விஞ்ஞானி ஒருவரின் பெயரையும் , மற்றைய இரு பிள்ளைகளுக்கும் கரும்புலி வீரர்களின் பெயரையும் வைத்திருந்தான். போகிற இடமெல்லாம் பிள்ளைகளின் பெயரை வைத்தே பெரிய உபத்திரவமாகியது. ஒரு சமயம் போதகர் ஒருவர் தங்கள் சமய முறைப்படியொரு பெயரை மாற்றுமாறு வேண்டினார்கள். அவன் வைத்த பெயர்களை மாற்ற விரும்பாமல் ஊரைவிட்டே விலகினாள். எல்லோரையும் விட்டு துரமாக ஒதுங்கினாள்.

அவனது இரத்த உறவுகளைத் தேடியழைத்தாள். எவரும் கைகொடுக்காமல் அவளை விலத்திக் கொண்டார்கள். ஆடைதுவைக்கும் நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். மாதாந்தம் கிடைக்கிற சம்பளம் 10நாட்களுக்கு மேல் நகர முடியாத இறுக்கத்தைத் தந்தது. அயலில் கடனும் அதிகமாகியது.

செத்துப்போய்விட வேண்டும் போலிருந்த நேரங்களில் அவன் கண்ணுக்குள் வந்து நின்று காதுக்குள் கேட்கிற அவனது குரல் கண்ணீரோடு எல்லா நினைப்பையும் அழித்துச் செல்லும்.

அப்பாவைப் பற்றிக் கேட்கிற குழந்தைகளுக்கு அப்பா வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாள். வெளிநாட்டில் உள்ள அப்பாக்களின் பிள்ளைகள் போல அவர்களால் எதனையும் அனுபவிக்க முடியவில்லை. போன ஊரில் அறிமுகமான ஒரு அக்காவிடம் குழந்தைகளைக் கொடுத்துவிட்டு நிரந்தரமாக வேலை செய்யத் தொடங்கினாள். சனிக்கிழமை மாலை வீடு வந்து ஞாயிறு மட்டும் குழந்தைகளோடு பொழுதைக் கழித்து மீண்டும் வேலை.

அம்மாவும் அருகிலில்லாமல் அப்பாவும் அருகிலில்லாமல் இன்னொருவரை அம்மாவாக்கிய அம்மா வரும் வார இறுதிநாளுக்காக காத்திருக்கிற 5,4 ,3 வயதுப்பிள்ளைகளின் குழந்தைக் கனவுகளில் வெளிநாட்டிலிருக்கிற அப்பா அத்தைவீட்டில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாய் நம்புகிறார்கள்.

ஒருவிடுறையில் வீடு வந்த போது மகள் கேட்டாள். அத்தைக்குப் போன் போட்டுக் கேளுங்கம்மா அப்பாவை பேசச்சொல்லி....எங்களையும் வெளிநாட்டுக்கு கூப்பிடச்சொல்லி....!

அன்று ஏதோ அலுவலாக அவன் கையெடுத்துடனான டயறியைத் திறந்த போது ஒரு பக்கத்தில் அவன் எழுதிய சிலவரிகளும் ஒருநாள் அவன் எழுதி வைத்த தொலைபேசியிலக்கமொன்றும் கண்ணில்பட்டது.

தான் இல்லாது போகிற காலத்தில் அந்த இலக்கத்தோடு தொடர்பைப் பேணுமாறு அவன் எழுதியிருந்த அந்த இலக்கத்தை எடுத்தாள். தொடர்பு கொள்ளவா விடவா என்ற குழப்பமாயிருந்தது.

இரத்த உறவுகளே ஒதுக்கியிருக்க எங்கோ முகம் தெரியாத அவனது நட்பொன்று மட்டும் இவளுக்கு கைகொடுக்குமா என்ற சந்தேகத்தோடே ஒருநாள் அந்த இலக்கத்தை அழைத்தாள்.

அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மறுமுனையில் கேட்ட குரல். புது உறவு துளிர்த்ததாய் நம்பினாள். அவனைத் தேடிய அந்தத் தோழமை அவன் எங்கோ வாழ்வதாயே அன்றுவரை நம்பியிருந்தது. அவள் சொல்லிழயழுத கதைகள் அவனை அந்த நிலமையில் இட்டுச் சென்ற விதியையே நோக வைத்தது.

எனக்கு உதவி செய்யாட்டிலும் பறவாயில்லை....நீங்க கதைச்சாலே போதும்.....அவள்  தனது துயரங்களைச் சொல்லிச் சொல்லியழுதாள்.

உயிருடன் இருந்த போது ஒருநாள் அவன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவன் உயிரைக் காத்திருக்கும் வாய்ப்புக்கூட வந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவனை மட்டுமே நம்பிய அவளுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்வையேனும் கொடுத்திருக்கலாம். எல்லாம் முடிந்து அவன் அநாதையாய் முடியும் வரையில் ஏனோ நட்பையும் அழைக்காமல் விட்டிருந்தான் என்பது தெரியாது.

வரவிருக்கிற நத்தார் தினத்தில் அப்பா வருவார் என நம்புகிற குழந்தைகளுக்கு இம்முறையும் அப்பா வரமாட்டார் வேலைகூடவென்று சொன்னாள். அப்பா வெளிநாட்டிலிருந்து அனுப்பியதாக கடந்தமுறை அவள் தானே ஒரு பாசலை தனது முகவரிக்கு அனுப்பி அப்பாவின் நத்தார் பரிசென்று பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். இம்முறையும் உடுப்புகளும் இனிப்புப்பண்டங்களையும் தயாரித்து வைத்திருக்கிறாள் நத்தார் பரிசு.

அப்பாவின் மரணத்தை இன்றும் அறியாத குழந்தைகளுக்காக அப்பா பற்றிச் சொல்ல ஆயிரமாயிரம் வரலாறுகளை அவன் விட்டுச் சென்றிருக்கிறான் எனினும் எதையும் அவளால் வெளிப்படுத்தவோ வரலாறு ஆக்கவோ முடியாது அவன் மரணமும் அவனது வாழ்வும் மர்மமாகவும் மௌனமாகவுமே புதைந்து போயிருக்கிறது.

நினைவுகள் தருகிற வலிகளை மறக்கவோ அவற்றை அழிக்கவோ இந்தக்கால விஞ்ஞானம் எதையாவது கண்டு பிடித்திருக்கலாம் போல.  பழைய நினைவுகளில் மனசு கனக்கிற போதெல்லாம் இப்படித்தான் நினைப்பாள்.

தமிழ் ஈழம் தமிழர்களின் கனவாய் மட்டுமன்றி ஈழப்போராளிகள் பணிசெய்த நாடுகளில் அவர்களது காதலிகளாய் காதலர்களாய் வாழ்கிற பலரது கனவாகவும் ஆகிவிட்ட தமிழீழம் ஒருநாள் வருமென்று நம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அவளும் ஒருத்தியாக....அவனது குழந்தைகளுக்கு அவனது தாயகத்தைப் பற்றிச் சொல்லும் நாளுக்காகவும் காத்திருக்கிறாள்.

19.12.2012

Monday, December 10, 2012

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"

இவன் தனது சிறு வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.

இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.

2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.

பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.

காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.

ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.

வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.

வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.

இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.

எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?