Friday, July 31, 2009

என் ஞாபகப்பதிவிலிருந்து மீள் நினைவொன்று

)ஏற்கனவே சில வருடங்கள் முன்னர் எழுதப்பட்ட ஞாபகம் இப்போது மீளவும் பதிகிறேன்)


அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள் , ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதிகோவிலடி, குரும்பசிட்டி , கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் ஊரில் வடக்குப்பகுதியும் வெறிச்சோடியது. புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.

அன்று காலையே வசாவிளானிலிருந்து எறிகணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா கடையைத்திறந்தபடியேயிருந்தா. நாங்கள் தட்டுக்குக்கீழ் குந்தியிருந்தோம். எறிகணை ஏவும் சத்தம் சக்கெனமுன்னம் அடுத்த சத்தம் எந்த உயிரையாவது அல்லது ஏதாவது ஒரு வீட்டில் அல்லது எங்காவது ஒரு நிலத்தில் வீழ்ந்து வெடிக்கும். முத்தர்வளவு , காளிகோவிலடியெல்லாம் எறிகணைகள் விழுவதாக அந்தப்பக்கத்து மக்கள் தயிலங்கடவைக்கும் , கொலனி , சுன்னாகம் , இணுவில் , உடுவில் என ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு எறிகணையின் சத்தமும் எம் இதயத்தில் விழுவது போலான தவிப்பும் அச்சமும்.....காலைசாப்பிட்ட பாணைத்தவிர வேறு எதுவும் இல்லை. மதியம் தாண்டி மாலை நேரம் கொஞ்சம் சத்தங்கள் ஓய்வு காணத்தொடங்கியது. வியர்வையில் குளித்து பயத்தில் பிதுங்கிய விழிகளும் கொஞ்சம் சிரிக்க வீதி ஆட்களால் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

இளையதம்பியும் , இளையதம்பியின்ரை மூத்தபெட்டையும் செல் விழுந்து செத்துப்போட்டுதுகளாம்.....!

அந்தச்செய்தி என் செவிகளிலும் வந்து விழுந்தது. புன்னாலைக்கட்டுவன் நாச்சிமார் கோவிலடிக்குச் சற்றுத்தள்ளியிருக்கும் அந்த ஒழுங்கையும் பதுமநிதியும் அவள் அக்காவும் என் கண்ணில் வந்து நின்றார்கள். என்தோழி பதுமநிதியின் வீட்டிலும் இடிவிழுந்து அவள் அக்காவும் , அப்பாவும் செல்லடியில் செத்துப்போனார்கள். பதுமநிதியும் அவள் குடும்பமும் இந்நேரம் செத்தவீடு கொண்டாடிக் கொண்டிருக்கும்.

அந்தச்சாவுச்செய்தியிலிருந்து மீண்டௌ முன்னம் அடுத்தொரு துயர் எங்களைக் காவுகொண்டது. அதுவொரு மதியம் வானவெளியை உலங்கு வானூர்தியொன்று உழுது கொண்டிருந்தது. அழகிய நீலவானம் அந்த வானூர்தியின் இரைச்சலால் அமைதியிழந்து கொண்டிருந்தது. வானையுழுத உலங்குவானூர்தி தான் சுமந்து வந்த துப்பாக்கிகளால் வானைச்சல்லடை போட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே டொம்.....டொம்....என்ற பெருவெடியோசைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. வழமைபோல் அம்மா எங்களை தட்டுக்குக் கீழ் இருத்திவிட்டா. தயிலங்கடவைப்பக்கமாக உலங்குவானூர்தி பதிந்து வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டிருந்தது. வானூர்தி தயிலங்கடவைத் தோட்ட வெளியில் இறங்கிறதோவென்றுகூட எண்ணத்தோன்றயது. அந்தளவுக்கு உலங்குவானூர்தியின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. கடவுளே.....எங்களைக்காப்பாற்று....கடவுளே....கேணியடிவயிரவா.....எங்களைக்காப்பாற்று..... உதடுகளிலிருந்து எழுந்த அந்த வேண்டுதல் பொய்க்காது உயிர்தப்ப வேண்டுமென்ற அந்த நேரத்து அந்தரிப்பு எந்தக்கணங்களாலும் உணரப்படாத தவிப்பு அது.

வான் அமைதியையும் குலைத்து எங்கள் இதயங்களையும் கலங்கவைத்த உலங்குவானூர்தி பலாலி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. வெறிச்சுக்கிடந்தவீதி உயிர்த்துக்கொண்டது. தயிலங்கடவை நோக்கி ஆட்கள் ஆரவாரித்து ஓடுவது தெரிந்தது. கடைக்கு வந்த முத்தனின் மனைவி சொன்னாள். மனோன்மணியும் பிள்ளையளும் கெலிகுண்டு போட்டுச்செத்துப்போச்சுதாம். ஏன்.....? என்னண்டு.....? கேட்ட அம்மாவுக்கு அவள் சொன்னாள்.

தோட்டவேலைக்குப்போன மனோன் மத்தியானம் பிள்ளையளுக்குச் சாப்பாடு குடுக்க வந்து சமைச்சுக் கொண்டிருந்ததாம் இளையபொடியன் கெலியைக்கண்டவுடனும் உலக்கையைத் தூக்கிக்காட்டினவனாம். அதைக்கண்ட கெலிக்காறன் சுத்தியடிச்சுச் சுட்டுக்குண்டு போட்டிட்டான். தனக்குத் தெரிந்த தகவலை அவள் சொன்னாள்.

மனோன்....! அந்தப்பெயரின் பின்னாலும் அந்தப்பெயருக்குரிய மனோனன்ரியின் இதயஆளத்தின் கீழ் உறைந்திருக்கும் துயரும் வலியும் அழுதவிழியோடு துயர்களையும் துணிந்து சுமந்து தன் பிள்ளைகளையும் இயலாத கணவனையும் தன்தோழிலேற்றி வாழ்ந்த அவரது வாழ்வு. ஈழத்துப்பெண்கள் பலரது வாழ்விலிருந்து ஒருதுளிதான். ஆனால் அந்த வாழ்வுடன் போராடிய மனோனன்ரியின் வேகமும் சுறுசுறுப்பும் என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனோனன்ரியின் கணவர் பரஞ்சோதி. குடிக்கே அடிமையானவர். அந்தக் குடியே அந்தப் பரஞ்சோதிமாமாவின் ஈரலைத்தின்று வயிறும் வீங்கி நோயாளியாகி மனோனன்ரிக்குச் சுமையைக்கொடுத்து இயந்திரமாய் மனோனன்ரியின் சிலமணித்தியால ஓய்வையும் வாங்கிவிட்டது. மனோனன்ரியின் மூத்தவள் நாகேஸ்வரி என்வயது. என்னுடன்தான் குப்பிளான் விக்னேஸ்வராவில் படிக்கிறாள். அம்மாவிடம் கடனுக்குச் சாமான் வாங்கும் மனோனன்ரியில் அம்மாவுக்கு நல்ல விருப்பம். கடன்வாங்கினாலும் சொன்ன திகதிக்குத் தந்துவிடும் நாவு மனோனன்ரியினது. சொல்லில் நாணயம் செயலில் துணிவு என எல்லாம் சேர்ந்த மனோனன்ரியின் குடும்பம் சிதைக்கப்பட்டு மனோனன்ரியும் அவரது இளைய மகனும் செத்துவிட்டார்கள்.

ஐயோ என்ர பிள்ளையள்....என்ர பிள்ளயளைக்காப்பாற்றுங்கோ.....! தன் காயத்தின் வலியையும் மறந்து தன் பிள்ளைகளையே காக்க நினைத்த அந்தத்தாயுள்ளம். ஊர் அவர்களைத் தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு போன வழியில்.....

மனோனன்ரியின் கடைசி மகன் கண்களை மூடி இவ்வுலகிலிருந்து நிரந்தரமாய் பிரிந்து.....

மனோனன்ரியும் மருத்துவமனையில் தன்னுயிர்த்துளியை விடுவித்து விழிமூட....ஒருவீட்டில் இருசாவு....மகள் நாகேஸ்வரி தன் காலொன்றையும் இழந்து.....அம்மாவையும் இழந்து நாகேஸ்வரியும் அவள் தம்பியும்....

உறவுகள் எனச்சொல்ல எத்தனையோ பேர் இருந்தும் மனோனன்ரியும் அவரது கடைசி மகனும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு கிரியைகள் செய்யப்படாது நேரே கொலனிச்சுடலையில் தீயோடு எரிந்து சாம்பராகி.....

Thursday, July 23, 2009

உள்ளிருந்து ஒரு குரல்


'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள்

'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்

(உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)

Wednesday, July 22, 2009

எப்போதோ எழுதிய ஞாபகம் 1984 இல் ஒருநாள் 2


1984. அது எங்கள் வீட்டிற்கு முருகன் தம்பிவடிவில் வரப்போகிறான் என்ற கனவு. சன்னிதிக்கும் , மாவிட்டபுரத்துக்கு மனமெங்கும் நேத்தி. மூண்டும் பெட்டைக்குட்டி அடுத்ததாச்சும் பெடியனெண்டா அவனுக்கும் நிம்மதி. அப்பாவிற்கு நிம்மதியாம் அடுத்தது பெடியனானால். ஊரில் கனபேரின் கதை இதுதான்.


பெட்டையள் எண்டதாலை அப்பான்ரை ஆக்களுக்கும் எங்களிலை பெரிசா விருப்பமில்லை. அம்மான்ரை ஆக்கள்தான் எங்களிலை நல்ல விருப்பம். அந்தவருடப் பிள்ளையார் திருவிழாவுக்கு நான் விரதம் பிடிச்சு அடியளித்தேன். பிள்ளையாரே எங்களுக்குத் தம்பி பிறக்க வேணும்.....

அம்மா வயிற்றில் குடியிருந்த எங்கள் தம்பி பூமியைப் பார்க்கப்போகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆடிமாதத்து வெய்யில் தணிந்து இரவு வந்து ஊர் உறங்கிக் கிடந்தது. வயிரவர் கோவில் ஆலடியில் ஊஞ்சலாடிக் களைத்துப்போன எனதும் என்னூர்ச் சின்னவர்களெல்லாம் உறங்கிவிட்ட இரவு அது. பெரியவர்களின் கதைகள் ஓயவில்லை. அம்பியப்பு வீட்டு வானொலியில் பீபீசி செய்தி கேட்பதற்காக அம்மம்மா , குஞ்சி , அம்பியப்பு , யூகே கிழவன் , வயிரவிமாமா , சிவமன்ரி எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நித்திரையில் கிடந்த என்னை எழுப்பிய அம்மா.....
பிள்ளை போய் அம்மம்மாட்டைச் சொல்லிப்போட்டு வா அம்மாக்கு வயித்துக்கை நோகுதெண்டு....அந்த இருளில் அம்பியப்பு வீட்டுக்கு நடந்து போகப்பயத்தில் ஓம் கணபதே நமக சொல்லிக்கொண்டு ஓடிப்போய்ச் சொல்லிவிட்டு ஓடிவந்தேன். அம்மா நாரியைப்பிடிச்சு அழுது கொண்டிருந்தா...அம்மாவைச் சுத்தி நானும் தங்கைச்சிமாரும்....

இரவு பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அம்மா வேதனையில் துடித்தா....வவியன்மாமா கேணிடியக்குப் போய் புண்ணியன் சித்தப்பாவைக் கூட்டிவந்தார். புண்ணியன் சித்தப்பா மோட்டச்சயிக்கிளில் வந்து இறங்கினார். அம்மம்மா அவசரமாக அம்மாவை தெல்லிப்பழை ஆசுப்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடுகளை முடித்து....அம்மாவை புண்ணியன் சித்தப்பா மோட்டசயிக்கிளில் ஏற்றிக்கொண்டு முதலியார் வளவு ஒழுங்கைக்கால் போனார். பின்னால் வவியன்மாமாவும் , அப்பாவும் சயிக்கிளில் போனார்கள்.

தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வாசலையடைந்தவர்களைப் பார்த்த காவலாளி சொன்னானாம். நல்லகாலம் தப்பீட்டியள்... இப்பத்தான் 24ட்றக்கிலை ஆமி போறாங்கள். கண்டிருந்தாச் சுட்டுத்தள்ளியிருப்பாங்கள். தங்களைக்காத்த கடவுளுக்கு அம்மாவும் புண்ணியன் சித்தப்பாவும் நன்றி சொல்லிக்கொண்டு ஆசுப்பத்திரிக்குள் போனார்கள்.

கிறேசரடிக்குப் பக்கத்தில் வரும்போதே ஆமியின் வாகனத்தைக் கண்டுவிட்டவர்கள். சயிக்கிள்களை வீதிக்கு அருகில் போட்டுவிட்டு கிறேசர் வளவு மதிலுக்குப் பின்னால் ஒழித்திருந்தார்கள். வவியன்மாமாவுக்கும் , அப்பாவுக்கும் இனித்தாம் தப்புவோம் என்ற நம்பிக்கை இழந்து போயிற்று. சத்தமின்றி இருந்தவர்களுக்கு உயிர்வந்தது போல் 24வது ட்றக் போனதன் பின் அந்தத் தெல்லிப்பழை வீதி அமைதியாகியது. அவசரஅவசரமாக சயிக்கிளில் ஏறிய இருவரும் சைக்கிள் மிதியிலிருந்து காலையெடுத்தது ஆசுப்பத்திரி வாசலில்தான்.

அம்மாவுக்கு கொண்டு போன சாமான்களைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்து அப்பாவும் வவியன்மாமாவும் சொன்ன அந்தச் சம்பவம் கேட்டபோது மனசில் பரவிய நாங்கள் உயிருடன் வாழ்வோமா என்பதே கேள்வியாக்கியது ? அவர்களை ஆமிகண்டிருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்.....! லங்கா பூவத்தின் ஒலிபரப்பில் செய்திதான் வந்திருக்கும் பயங்கரவாதிகள் இருவர் தெல்லிப்பழை வீதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

அந்தநாட்களில் கட்டுவனிலிருந்து தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வரையும் போய்வருவதென்றால் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டுதான் பயணங்கள் நடந்தன. ஆறாத்தை வயிரவர் கோவிலடி றோட்டால் ஆமி திடீரென்று புகுந்து கட்டுவனுக்கு வந்தால் காணும் மனிதர்கள் பிணம்தான். யாழ்நகரின் எந்தவீதியும் பயத்தில்தான் இருந்தது என்றாலும் எமக்கு ஆறாத்தை வயிரவர் ஒழுங்கையால் ஊருக்குள் பூரும் ஆமிக்குத்தான் பயம்.

ஒருமாதமாய் எங்கள் தம்பி இன்று பிறப்பான் நாளைபிறப்பான் என நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அந்தப்பொழுதுகளின் ஒரு விடியல் ஆவணி இருபது எங்கள் காதுகளில் இனித்தது. தம்பி பிறந்துவிட்டான். வீடுவீடாகச் சென்று எங்கள் வீட்டு முருகனின் வரவை நானும் தங்கைச்சிமாரும் சொல்லிக்கொண்டிருந்தோம். தம்பி பிறந்த சந்தோசத்தை அப்பா சாராயம் குடித்துக் கொண்டாடினார்.

மீள்பதிவு - 22.07.09

Monday, July 20, 2009

'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''லெப்.கேணல்.அருணன்1983 தமிழர் வரலாற்றில் கறுப்பு யூலையாய் தமிழர் மனங்களில் பதிவாகியது. அந்த நினைவுகளைத் தனது எழுத்துக்களால் பதிவு செய்து 27.02.09 அன்று வன்னியில் வீரச்சாவடைந்த லெப்.கேணல்.அருணன் அவர்களது பேனாவிலிருந்து பதிவான
'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி'' என்ற பதிவு மீளும் நினைவாகிறது.

2001இல் கட்டுநாயக்கா விமானத்தாக்குதலின் வெற்றியின் மறுநாள் லெப்.கேணல்.அருணன் அவர்களால் எழுதப்பட்ட இந்நினைவானது எட்டுவருடம் கழித்து நினைவுகொள்ளப்படுகிறது.

'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''நிகழ்ச்சியைக்கேட்க இங்கே அழுத்துங்கள்.

'வீரயூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி''தரவிறக்கம்செய்து கேட்க இங்கெ அழுத்துங்கள்.


**********************************************************************************

லெப்.கேணல்.அருணன் அவர்களின் இன்னொரு மீழும் நினைவுகள் கீழுள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

நவாலிப்படுகொலையின் மீழும் நினைவுகள். (எழுதியவர் லெப்.கேணல்.அருணன்)

இந்நிகழ்ச்சியைத் தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

தமிழர்கள் மீதான இலங்கையரின் படுகொலைகளைத் தனத எழுத்துக்களால் பத்திரப்படுத்திய மாவீரர் லெப்.கேணல்.அருணன் அவர்களது எழுத்திலான பதிவுகள் ஒலிவடிவாக உங்களை வந்தடைய உள்ளது. ஈழவிடுதலைப்போரில் தன்னை இறுதிவரை கொடைதந்து 27.02.09 அன்று நிரந்தரமாக உறங்கிவிட்ட லெப்.கேணல்.அருணன் அவர்களால் 2001இல் எழுதப்பட்ட 'நவாலிப்படுகொலை' மீழும் நினைவுகளாக இன்று மீளவும் மீட்டப்படுகிறது.

சந்திரிகா அரசால் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்து தனது எழுத்துக்களால் உயிர் தந்த லெப்.கேணல் அருணன் அவர்களது கையெழுத்துக்கள் காலக்கிரமத்தில் பதியப்படவுள்ளது.

Friday, July 17, 2009

எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய்


1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார்.

புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள்.
ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாமாக்களுக்கு அம்மா சாப்பாடு கொடுப்பா. அவர்களது மோட்டார் சயிக்கிள் சத்தம் கேட்டால் அப்பாவும் , அம்மாவும் விழித்துவிடுவார்கள்.

அப்படித்தான் ஒரு இரவு. புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அந்த மாமா இந்தியாவிலிருந்து வந்துவிட்டதாக அப்பாவும் அம்மாவும் கதைத்தார்கள். எனக்கு அந்தமாமாவைப் பார்க்க வேணும்போலிருந்தது. ஏனெண்டா எனக்கு காலிலை முக்கிழுவை குத்தி ஏற்பாக்கியிருக்கேக்கை அந்தமாமாதான் கனநாள் மருந்துகட்டத் தெற்குப் புன்னாலைக்கட்டுவன் ஆசுப்பத்திரிக்குத் தன்ரை சயிக்கிளிலை கூட்டிக் கொண்டு போறவர். மருந்து கட்டேக்கை நான் அழாமல் இருக்க வேணுமெண்டு சொல்லி தெய்வேந்திரம் கடையிலை இனிப்பு வாங்கித்தருவார். பின்சிலகாலம் அவரைக் காணவில்லை. அப்பா ஒருநாள் சொன்னார். பாவம் தாய் அவனை நினைச்சு ஒரே அழுகையா இருக்குது....
ஏன் அந்த அம்மா அழுகிறாவாம் ? எனக்கு விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டேன். ஏனப்பா அவேன்ரை அம்மா அழுகிறா ? அவர் இயக்கத்துக்குப் போட்டார் அதுதான். எந்த இயக்கத்துக்கு ? இது நான். புலிக்குப் போட்டார். அப்பா அடிக்கடி சொல்வார் புலிகள் தான் நல்ல இயக்கமாம். எனக்கு அந்தப்புலிமாமாக்களைப் பார்க்க வேணும்போலிருக்கும். ஒண்டும் பேசாமல் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருப்பன் நான்.

அம்மா இடியப்பமும் அவிச்சு ஆட்டிறைச்சிக்கறியும் வைச்சுப்போட்டு இருந்தவ. அந்த இரவு நானும் நித்திரை முளிச்சு இருந்தனான். அந்த மாமாவைப்பாக்க. ஆனா நித்திரை என்னை விடேல்ல. நீ படுபிள்ளை அவைவர நான் எழுப்பிறனுன்னை....அம்மாவின் சொல்லை நம்பி நான் நல்ல நித்திரை. ஆனா விடிய எழும்பினாப் போலைதான் தெரியும் அவை ராத்திரி வந்து போட்டினமெண்டு. அம்மாவிலை சரியான கோவந்தான் வந்திது. நீங்கென்னை வேணுமெண்டுதான் எழுப்பேல்ல....இல்லைப் பிள்ளை நீ எழும்பமாட்டனெண்டு அழுதனீ அதுதான் விட்டனான். நீங்க பொய் சொல்றீங்க....இல்லை....சரி அடுத்த முறை அவை வரேக்கை கேட்டுப்பார்.....

அப்படி வந்து போன அந்த மாமாக்களில் ஒருமாமாவை யாழ்ப்பாணத்திலை ஆமி சுட்டுப்போட்டுதாம். அதையும் அப்பாதான் வந்து சொன்னார். ஆனால் அந்தமாமாவின்ரை மரணவீட்டுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல அப்பா. சின்னப்பிள்ளையள் அங்கையெல்லாம் போகக்குடாது. அவை ஆவியா என்னட்டை வருவினமாம். ஆனா கோயிலுக்கைதானாம் அவையள் இருப்பினம். அந்த மாமாவை எரித்த பின்னர் அவர்கள் வீட்டுக்கு அப்பாவுடன் போனேன். அந்த மாமாவின் அம்மா அப்பாவுக்கு மாமாவைப்பற்றிச் சொல்லிச் சொல்லியழுதா.

வீட்டை வந்தாப்போலையும் மாமாதான் ஞாபகமாய் இருந்தார். என் நினைவறிந்து நான் நேசித்த முதல் புலிமாமாவை இழந்த மரணமது.

கோவிலில் அவர் இருப்பார் என அப்பா சொன்னதைக் கேட்டு நான் எங்கடை கற்கரைப்பிள்ளையாருக்கு கனநாள் கற்புரமும் கொழுத்தி , பூவும் குடுத்துக் கும்பிட்டனான். அப்பனே பிள்ளையாரே என்னை அந்த மாமாட்டைக் கொண்டு போய்விடு....பிள்ளையாரெங்க கேட்டார்.....அந்தாள் என்ரை கற்பூரத்தையும் , பூவையும் வாங்கினதுதான் மிச்சம். நான் கேட்ட ஒண்டும் தரவுமில்லை , செய்யவுமில்லை. அப்பிடியே அந்தக்கதை போட்டுது....ஆமியின் வருகையும் , அவர்களின் பிடித்துச் செல்லலும் தொடர்கதைகளாக....

(எப்போதோ எழுதியது இப்போது மீள்நினைவாய்....17.07.09)

Saturday, July 11, 2009

நவாலிப்படுகொலை மீழும் நினைவுகள்

நவாலிப்படுகொலையின் மீழும் நினைவுகள். (எழுதியவர் லெப்.கேணல்.அருணன்)

இந்நிகழ்ச்சியைத் தரவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்துங்கள்.

தமிழர்கள் மீதான இலங்கையரின் படுகொலைகளைத் தனத எழுத்துக்களால் பத்திரப்படுத்திய மாவீரர் லெப்.கேணல்.அருணன் அவர்களது எழுத்திலான பதிவுகள் ஒலிவடிவாக உங்களை வந்தடைய உள்ளது. ஈழவிடுதலைப்போரில் தன்னை இறுதிவரை கொடைதந்து 27.02.09 அன்று நிரந்தரமாக உறங்கிவிட்ட லெப்.கேணல்.அருணன் அவர்களால் 2001இல் எழுதப்பட்ட 'நவாலிப்படுகொலை' மீழும் நினைவுகளாக இன்று மீளவும் மீட்டப்படுகிறது.

சந்திரிகா அரசால் பலியெடுக்கப்பட்ட தமிழர்களின் அவலம் குறித்து தனது எழுத்துக்களால் உயிர் தந்த லெப்.கேணல் அருணன் அவர்களது கையெழுத்துக்கள் காலக்கிரமத்தில் பதியப்படவுள்ளது.

Saturday, July 4, 2009

அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..?
இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்…..

வணக்கம்....
தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று.
யாரெண்டு தெரியுதா?
இல்லை...
என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள் , குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை.

செய்தியேதும் அறிஞ்சியளோ ?
என்ன வளமையான செய்திதானே... சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்.....?
என்ற எனக்கு…
நேற்று "அருணாண்ணை" வீரச்சாவு என்றான் அந்தத் தோழன்.
உண்மையாவா ?
நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்....

'அருணாண்ணை' இழந்தோமா உங்களை ....? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன.

அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

அடுத்ததென்ன நடக்கப்போகுது ?
கேட்ட எனக்குச் சொன்னான்.
யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது…..
எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான்.

ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது.

அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான்.


இமை விட்டிறங்காமல் முட்டிய கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அருணாண்ணை நினைவுகளை விட்டிறங்காமல் எங்களுக்குள் நிரந்தரமாகிப் போனாரா? நம்பவே முடியவில்லை.

கதைப்பதை விட அதிகம் கடிதங்களில் தான் அருணாண்ணை பேசுவது நிறைய….2006 வரை அவ்வப்போது கடிதங்களோடு களம் நிலம் காவியம் மாவீரம் என அருணாண்ணை எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் கனமான பொழுதுகளில் மீளவுமான உயிர்ப்பையும் எழுச்சியையும் தரும் வல்லமை மிக்கவை. „மீழும் நினைவுகள்“ என அரசபயங்கரவாதம் செய்த இன அழிவுகளையெல்லாம் தன் எழுத்துக்களுக்குள் சேமித்து அவர் அனுப்பிய தொலைமடல்கள் கையெழுத்துப் பிரதிகள் ஏராளம். ஐரோப்பிய வானொலிகள் பலவற்றில் அருணாண்ணையின் எழுத்துக்கள் ஒலிவடிவாக உயிர்த்து அவலங்களையெல்லாம் ஆவணமாக்கியது.

தமிழ்வெப்றேடியோ என்ற இணைய வானொலியின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அருணாண்ணையின் ஆக்கம் இருக்காது போகாது. தமிழினம் மீதான சிங்களப்பயங்கரவாதப் புடுகொலைகள் 1956 முதல் 2001 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் வரை எழுதிய ‘மீழும் நினைவுகள்‘ இன்றுவரையும் மீட்கப்படக் காரணமாய் தனது எழுத்துக்களால் பதிந்த ஒரு போராளி.

போர்க்குணம் மிக்க அந்த மனிதனுக்குள் அரசியல்ஞானம் உலகியல் விஞ்ஞானம் என எதைக்கேட்டாலும் இலகுவாய் புரிவிக்கும் திறன்மிக்க ஆழுமையென அருணாண்ணையின் அமைதியான தோற்றத்திற்கும் பின்னாலும் பேச்சுக்குப் பின்னாலும் ஆல்போல் விழுதேற்றிப் பரவியிருக்கிறது.

சட்டென்று மூக்குநுனியில் நிற்கும் அவரது கோபம்….சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் செய்து கொடுக்கப்படாவிட்டால் தனது அமைதியால் அதையுணர்த்தி அடுத்த வேலையை அவர் கேட்கும் அவகாசத்துக்கு முன்னால் செய்வித்துவிடுகின்ற சாதுரியம் எல்லாம் அருணாண்ணையின் ஆழுமை தான்.

2001 அக்கினி கீல நடவடிக்கையில் இலங்கையரச படைகள் ஆயிரமாயிரமாய் செத்துடிந்து வல்லமை பொருந்தியதாய் நம்பப்பட்ட அரச இராணுவபலம் புலிகளின் காலடியில் விழுந்தபடியிருக்க ஒரு கடிதம் எழுதியிருந்தார்…..அந்தக் களமுனையின் நுனியிலிருந்து களமாடிக் காவியமான தனது தோழர்கள் பற்றியும் உலகு அந்தக்கள முனையை எப்படிப் பார்க்கப்போகிறது என்பதையெல்லாம் தனது எழுத்துக்குள் நிரப்பியனுப்பிய நீலக்கடித உறைக்குள் நான் கண்டது ஒரு சாமானியக் குணத்தையல்ல…..ஒரு போராளியின் இதயத்தை…..அக்கடிதத்திலிருந்து சில வரிகள் இவை……உலகே வன்னிக்கு உலாப்போய்வரக் கிடைத்த சமாதான காலம் ஊர் போன போது அருணாண்ணையைச் சந்தித்தது கதைத்தது சேர்ந்து உணவருந்தியது மாவீரர் துயிலிடங்கள் சென்றது என நினைவுகள் யாவும் அருணாண்ணையுடனான அந்து நாட்களைத்தான் மீளமீளக் கொண்டு வந்தது.

தனது தோழர்கள் தனது தொடர்பில் உள்ளவர்களென அருணாண்ணையை நேசிக்கும் அனேகருக்கு எங்களை அறிமுகம் செய்து அவர்களுடனான உறவுகளை ஏற்படுத்தித் தந்து விட்டதெல்லாம் ஒருநாள் இப்படி இழந்து போவதற்கா…..?

மறுமுறை சந்திப்பதாய் பயணம் சொல்லிய அந்தக் கடைசிச் சந்திப்பு……வன்னிப் பெருநிலப்பகுதியிலிருந்து வவுனியா வர வெளிக்கிட்ட நேரம்….பிள்ளைகள் ஒவ்வொருவராய் மாமா அக்கா அன்ரி அண்ணாவென விடைபெற்று கடைசியில் அருணாண்ணையிடம் விடைபெறப் போனார்கள்.

பிள்ளையள் நல்லாப்படிச்சு கெட்டிக்காறரா எங்கடை நாட்டுக்குத் திரும்பி வரவேணுமென்ன…..
எனச்சொல்லி என் மகன் பார்த்திபனை கட்டிப்பிடித்துக் கொஞ்சினார். எனது மகள் வவுனீத்தா மட்டும் ஏதோ கோபித்துக் கொண்டு நின்றாள்.
மாமாக்குச் சொல்லீட்டு வாங்கோம்மா….
என்ற எனக்குப் பின்னால் வந்து நின்றாள்.
என்னம்மா என்ன சொல்லீட்டு வாங்கோவன்…..
இல்லையென்பதைத் தலையசைப்பால் உணர்த்தினாள்.
ஏன் ? என்னம்மா ?
மாமா மருதன்மாமாவைப் பேசினவர். அதான் நான் அவரோடை கோவம். ஆக்களைப் பேசக்குடாது…அவருக்ககொண்டும் தெரியாது……என்றாள். காலையில் ஏதோ அருணாண்ணை சொன்னவிடயமொன்றை மருதன் மறந்து போனதற்காக விழுந்த பேச்சு அது.
அது மாமா சும்மா பேசினவரென்னை….என மருதன் சொன்ன சமாதானத்தையும் அடம்பிடித்தாள்.
பிள்ளையைக் கொண்டு போய் யாழ்ப்பாணத்தில விட வேணும் கனபேருக்குப் பாடம் நடத்தப்பிள்ளைதான் சரி….என்றான் இன்னொரு போராளி…..
இறுதியில் எல்லாரும் சேர்ந்து அவளைச் சமாதானம் செய்து வாகனத்தில் ஏற்றிவிட்டு கையசைத்து விடைதந்து அனுப்பி வைத்தனர்.

மாலையில் அருணாண்ணையின் இருப்பிடம் வந்து சேரும் போது பிள்ளைகளை ஒருதரம் மோட்டார் சயிக்கிளில் ஏற்றிச் சுற்றி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் ஒரு மாமாவாய் அருணாண்ணை எத்தனையோ அவதாரங்களாய்……பணம்மட்டுமே குறியாய் கடிதங்களால் குதறியும் காசைமட்டுமே கறந்த உறவுகளின் சபித்தலால் சோர்ந்து போய்விடும் வேளைகளில் அருணாண்ணைக்கு அதையெல்லாம் கடிதங்களாய் எழுதுவேன். எனது கடிதங்களுகெல்லாம் தனது பதில்களால் துணிவையும் மீண்டும் எழுகைக்கான எழுத்துக்களாக எழுதிய கடிதங்கள் யாவும் ஒரு நல்ல தோழமையின் அண்ணணின் ஆதரவைத் தரும் வல்லமை மிக்கவை…..எதை மறந்து எதை நினைத்து……இனி எங்கள் அருணாண்ணையை எங்கே தேட……

ஆட்கள் வந்து சந்தித்துச் செல்லவென அமைக்கப்பட்ட ஒற்றையறை மர நிழலில் பேசியவை……பகிர்ந்தவை…….அவர் அனுப்பிய வைத்த ஈழநாதம் வெள்ளிமலர்…..முதல் முதலாகப் பதிப்பித்த “சாள்ஸ் அன்ரனி“ படையணியின் சிறப்ப நூல் என்னையும் வந்தடைய வழிசெய்த அருணாண்ணையிடமிருந்து விடைபெற்று அவரை அவரது தோழர்களை நினைக்க நேசிக்கவென நிறையவே அறிமுகங்கள் தந்த அந்தத் தோழனின் ஆழுமையைச் சொல்ல பல்லாயிரம் பக்கங்கள் நீட்ட வேண்டும்.

தொடர்ந்த தொலைபேசி உரையாடல்….கடிதங்கள்…..என தொடர்ந்தது உறவு. என் குழந்தைகளின் நினைவுகளுக்குள் நிற்கும் பலருக்குள் அருணாண்ணைக்குத் தனியிடம் உண்டு. எங்கே நின்றாலும் மறக்காமல் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்துமடல் அனுப்ப மறப்பதில்லை. யார் அனுப்புகிறார்களோ இல்லையோ அருணாண்ணையின் வாழ்த்துமடல் வந்தால் போதும் என்ற நிலைக்கு என் குழந்தைககளின் மனசுக்குள் குடியிருந்த இராஜகுமாரன் அருணாண்ணை.

பிள்ளைகளுக்குத் தனித்தனியே கடிதம் எழுதி அவர்களின் கடிதம் மாமாவாகி…….எங்களுக்கும் கடிதம்மாமாவென்றே நினைவுகொள்ள வைத்த அருணன் என்ற ஆழுமை……27.02.09 அன்று நிரந்தரமாய் பிரிந்துவிட்டதாய் வந்த செய்தி…..செய்தி கேட்டதும் என் மகன் பார்த்திபன் உடைந்து கலங்கியதும்…மகள் வவுனீத்தா மெளனமாகி அருணாண்ணை எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாய் எழுத்துக்கூட்டி வாசித்ததும்…..மாவீரர் துயிலிடத்தில் மாமாவை சந்திப்போமென்று சமாதானம் கூறியதும்……பொய்த்து எல்லாம் எங்கள் கைகளைவிட்டுத் தொலைவாகிக்கிடக்கிறது……

காலம் அருணாண்ணையையும் குடும்பமாக்கி ஒரு குழந்தைச் செல்வத்துக்குத் தந்தையுமாக்கியது……அந்தச் செல்வத்தைச் சிரித்தபடி தூக்கி வைத்திருந்த படம் மட்டும்தான் இன்று அருணாண்ணையின் ஆழுமையைச் சொல்லியபடி நினைவுகள் நீண்டு விரிந்து நிழல்பரப்பிக் கிடக்கின்றன……
03.07.09