Friday, March 30, 2012

அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....!

அம்மா....!
தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்களாம்....!
ஏனம்மா எங்கடை அப்பாவை கூட்டியர நீங்கள் போறீங்களில்லை....!
இன்று முழுவதும் மகிழன் அபிராவை இப்படித்தான் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான்.
மகன் அம்மாட்டைக் காசில்லை....அதான அப்பாவைக் கூட்டியரப் போகேலா....!
தாயின் சமாதானத்தில் அமைதியடையாதவன் மேசையில் இருந்த கொப்பி புத்தகங்களை நிலத்தில் எறிந்தான்.
கன்னத்தைப் பொத்தி அறைந்தாள் அபிரா. என்னடா....! என்ன வேணுமிப்ப...!
பொறுமையின் எல்லை கடந்த நிலையில் அபிராவின் கைகள் அவனைத் தாக்கின.

அடியின் நோவில் அவன் நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தான். எப்போதும் போலன்றிய அவனது அடம்பிடித்தல் இன்று எல்லைமீறியதும் அவளது அடியையும் நினைக்க அவளுக்கும் அழுகை வந்தது.
மகன் அம்மா எவ்வள கஸ்ரப்படுறனெண்டது உங்களுக்குத் தெரியுமெல்ல....
அவனை அணைத்து அழுதான் அபிரா.

நீங்க போங்கோ....! அப்பா வரட்டுமன் எல்லாம் சொல்லுவன்....!
அவளை உதறிக் கொண்டு முற்றத்தில் போயிருந்து அழுதான்.
சரி நீங்க போங்க தம்பி அம்மா செத்துப்போறன்....!
வாசல் வரை அழுது கொண்டு போனவளை ஓடிப்போய் கையில் பிடித்தான்.
இல்லம்மா நான் கோவிக்கேல்ல...வாங்கம்மா....!

அவளைப்பிடித்து இழுத்து வீட்டிற்குள் கொண்டு போனான். அத்தோடு அம்மாவுக்கும் மகனுக்குமான கோபம் முடிந்து நிலமை வளமைக்குத் திரும்பியது.

முற்றத்தில் நின்ற வாழையொன்று குலைபோட்டிருந்தது. வாழைப்பொத்தியை வெட்டியெடுத்தாள். இன்றைய சோற்றுக்கு வாழைப்பொத்தி வறையே இன்றைய கறி. அபிரா சமைக்கத் தொடங்க அவளது மகிழன் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தான்.

அம்மா....!
என்ன மகன்.....!
சித்தி அப்பாவைக் கூட்டிவர காசுதரமாட்டாவோ...?
சித்தி பிள்ளைக்கு புதுவருசத்துக்கு உடுப்பு வாங்கச் சொல்லி காசனுப்பினவ....நாங்க நாளைக்கு கடைக்குப் போய் புதுவருசத்துக்கு உடுப்பு வாங்குவமென்ன...

அவனது அப்போதைய கதையை மாற்ற புதுவருடத்தை ஞாபகப்படுத்தினாள். புதுவருடம் பற்றிச் சொன்னதும் ஓடிப்போய் தோழில் கட்டி முத்தமிட்டான் மகிழன்.

என்ரை செல்லம்...!
அபிராவும் அவனைக் கட்டி முத்தமிட்டாள்.
தம்பி  போய் விளையாடுங்கோ அம்மா சமைச்சிட்டுக் கூப்பிடுறன்....
000           000          000

வெறுமையான தேங்காய்ச் சிரட்டைகளையும் உரித்துப்போட்ட வாழைப்பொத்தித் தோலையும் எடுத்துக் கொண்டு முற்றத்திற்குப் போனான் மகிழன். ஆரிசிப்பானை கொதித்துக் கொண்டிருந்தது.

நேற்றுப்போல எல்லாத் துயரங்களும் ஒன்றும் மறக்காமல் நெஞ்சுக்குள் கனலாக எரிந்து கொண்டிருந்தது. காணாமற்போன கணவன் தொடங்கி கடைசிக்கள முடிவு வரை எல்லாமே தலையைக் குடைந்து கொண்டிருந்தது.

ஒரு போராளியாக அவள் நிமிர்ந்த காலங்களும் அவளது சாதனைகளும் போய் இப்போ சாமானியப் பெண்ணிலும் பார்க்க மோசமானவளாக காலம் அவளது வாழ்வைத் துவைத்துப் போட்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மாற்றத்தின் எடுகோளாகவும் அடையாளமாகவும் எழுதப்பட்ட பெண்ணின் மாற்றமும் ஏற்றமும் அவளையும் வைத்தே வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் எழுதப்பட்டது.இன்று அவள் ? அவளது மாற்றம் ? அவளுக்கே அவள் மீது வெறுப்பாயிருந்தது.

அபிரா இன்னும் மாறுதில்லை.....அப்பிடியே இருக்குது...
ஊரில் பலர் அவளை தற்போதைய நிலமைக்கு ஏற்ப மாறாமல் அவளே தனது வாழ்வை வதம் செய்வதாய் கதைத்துக் கொள்ளும் அளவு அவள் இன்னும் தனது எழுச்சியை இன்றும் மறக்காமல் யாருக்காகவும் மாறாமல் இருக்கிறாள் என்றது அவளது குறையாகவே எல்லாரும் கதைப்பார்கள்.

அவளது மாற்றமின்மையே அவளது வீட்டில் வறுமையை தாராளமாக ஏற்றி வைத்திருக்கிறது என்பதும் பலரது குற்றச்சாட்டு. தன்னை வளர்த்த வாழ்வித்தவர்களின் நினைவுகள் உள்ளவரை தனது வாழ்வு இதுதான் என்றே நினைத்துக் கொள்வாள்.

15வயதில் அபிரா தனது ஊரைவிட்டுக் காணாமல் போனவள். 3வது பயிற்சிப்பாசறையின் மாணவியாய் பயிற்சி முடித்து 24வது பாசறைவரை பயிற்சியாசிரியையாயிருந்து அவள் கண்ட களங்களும் அவள் படைத்த சாதனைகளும் எங்கேயும் பதியப்படாக பக்கங்கள். பதிவுகளுக்குள்ளே வரையறுக்க முடியாத அதிசயங்களையெல்லாம் சாதித்த மகளீரணியின் வெற்றிகள் யாவிலும் அடையாளங்கள் யாவிலும் அவளும் எங்கோ ஒரு புள்ளியில் இருந்திருக்கிறாள்.

காதல் திருமணமென்றாகி 2குழந்தைகள் பிறந்து குடும்பமும் போராட்ட வாழ்வுமென அவள் வாழ்க்கை தளம்பலில்லாத நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது.

2004டிசம்பர் அவளது காதல் கணவன் கடமையின் நிமித்தம் தலைமையைச் சந்திக்கப்போயிருந்தான். 26.12.2004 தமிழர்களின் கரையோரங்களை அலைகளால் அள்ளிச்சுருட்டிப் போன அலைகள் அபிராவின் வீட்டையும் அவளையும் அவளது குழந்தைகள் இரண்டையும் அள்ளிக் கொண்டு போய் அவளை மரமொன்றில் செருகிவிட்டுத் திரும்பவும் கடலோடு அலைகள் கரைந்தது. அவள் காப்பாற்றப்பட்டு உயிர் மீட்கப்பட்டாள். அவளது சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டையும் சுனாமியலைகள் கொன்று தின்று பிணமாக்கிப்போட்டது.

தலைமையைச் சந்திக்கப் போன கணவன் சுனாமியடித்த பகுதிகளில் ஒன்றான வடமராட்சியில் சுனாமி கொன்ற இடங்களில் மக்களுக்கு ஆதரவாகப் பணி செய்து கொண்டிருந்தான். பணியில் நின்றவனுக்கு அடுத்த தொங்கலில் அவனது குழந்தைகளும் அலையோடு அள்ளுப்பட்ட துயரத்தைச் சொல்லவே ஆட்களில்லாது போனது.

விடயமறிந்து ஊர் வந்தவன் அபிராவை மட்டும்தான் உயிரோடு பெற்றான். அவனது அன்புக் குழந்தைச் செல்வங்கள் இரண்டும் அலைகளோடு அள்ளுப்பட்டுப் போயிருந்தனர். தன் குழந்தைகளைக் கொண்டு போன அலைகளைச் சபித்து அழுது புலம்பி அபிரா ஆறுதற்பட ஆண்டுகள் சில எடுத்தது.

குழந்தைகள் இல்லாத காலங்களின் கண்ணீரை மறைக்கவும் மறக்கவும் வைக்க 2006இல் மகிழன் வந்து பிறந்தான். அவன் பிறந்ததோடு அபிரா அரசியல்துறையில் பணிகளுக்காய் புறப்பட்டாள். தளிர் சிறுவர் காப்பகத்தில் மகிழனைக் காலையில் விட்டுவிட்டு மக்கள் பணிக்காய் மாலைவரை இயங்கிக் கொண்டிருந்தாள். அவளோடு வளர்ந்ததைவிட மகிழன் வளர்ந்தது தளிரில்தான். தாயக விடுதலைப்போராட்டத்தில் குடும்பம் குழந்தைகள் தடைகளாக இருக்கக்கூடாதென்ற எண்ணமும் தானில்லாது போனால் தன் குழந்தையை தாயகம் காக்குமென்ற தைரியமுமே அவளை அவ்வாறெல்லாம் இயக்கியது.

விடிவு வருவதாகக் காட்டப்பட்ட நம்பிக்கைகள் சிதைவுற்று முடிவு முள்ளிவாய்க்காலில் எழுதும் வரை அவள் வன்னிக்கள முனையில் தான் வாழ்ந்தாள். கடைசிச் சரணடைதல் என்றதும் அவளது காதல் கணவன் அவளையும் மகிழனையும் உள்ளே போகுமாறு அனுப்பி வைத்தான்.

நான் வருவன் நீ போ....பிள்ளையைக் கவனமாப் பார்...!
என்று சொல்லியே அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான். முகாம் போய் , தடுப்பில் இருந்து வெளியேறி இன்று 3வருடங்களாகியும் வருவேன் என்றவன் வரவேயில்லை..... கொழும்பு ஈறாக மனுவோடு அவள் திரிந்து அவனைத் தேடி ஓய்ந்து போனாள்.

வறுமையும் வாழ்வைக் கேள்வியாக்குகிற அவன் பற்றிய செய்திகளும் மனசைக் குலைத்துப் போட்டாலும் அவள் விதவையாகாமல் இன்னும் பொட்டும் தாலியும் சுமந்து கொண்டு அவன் வருவான் என்று நம்புகிறாள்.
000       000            000

அவளது நிலமையை அறிந்த வெளிநாட்டில் இருக்கும் அவளது கணவனின் நண்பன் மூலம் ஒரு தொடர்பு கிடைத்தது. அந்த உறவு அவளுக்கு மிக அருகாமையில் உரையாடி உறவாடி அவளது மனச்சுமைகளைத் தாங்கிக் கொண்ட போது கருகிய வாழ்வைப் புதுப்பிக்கவும் பழைய கதைகளைப் பகிரவும் பழைய வாழ்வை நினைக்கவும் ஒரு தோழமை கிடைத்ததாய் உணர்ந்தாள் அபிரா. கிடைத்த புது உறவிற்கு தனதும் தனது மகிழனிதும் படங்களை அனுப்பி வைத்தாள்.

அக்கா நீங்க அபிராக்காவெல்லோ ? நீங்க றெயினிங் மாஸ்ரரா இருந்தனீங்களெல்லோ...? அந்தப் புது உறவு அவளை இனங்கண்டு கொண்டது. அவள் பற்றி அந்த உறவு விசாரித்த விசாரணைகள் தேடல்கள் முதல் முதலில் கேட்ட போது அபிரா அழுதேவிட்டாள்.

ஆரம்மா...? ஏனம்மா அழுறீங்க.....? இது பிள்ளேன்ரை சித்தியடா....! நானும் கதைக்கத் தாங்கம்மா...அவளிடமிருந்து ரெலிபோனைப் பிடுங்கி அவளுக்கு ஆறுதலாய் கிடைத்த உறவைச் சித்தியென்று உரிமை கொண்டாடினான் மகிழன்.

சித்தி சுகமாயிருக்கிறீங்களே...? சித்தி சாப்பிட்டீங்களே ? அவளோடு கூடப்பிறக்காத உறவை அவன் தனக்குச் சித்தியாக்கிக் கொண்டு சித்திக்கு தனது சின்னக் கைகளால் கடிதம் எழுதத் தொடங்கியதில் ஆரம்பித்த சித்தியுறவு தான் அபிராவின் இப்போதைய ஆதாரம்.

ஏதோ வாழ்வோம் என்றிருந்தவளுக்கு இல்லை நீ வாழ வேண்டுமென்று நம்பிக்கை கொடுத்து அவளுக்குத் தங்கையாய் கிடைத்தவளிடம் தனது குறைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தாள்.

ஏன்னக்காச்சி வருமானம்....? 2500ரூபாய்க்கு ஒரு இடத்தில வேலைசெய்யிறன். துப்பரவாக்கிற வேலையொண்டு....பிள்ளேன்ரை படிப்புக்கு அதுதான் உதவி....ஆற்றையேன் வீடுகளில மா இடிக்கிறது உடுப்புத் தோய்க்கிறதெண்டு செய்யிறன் அதுதான் சாப்பாடு செலவுகளுக்கு....காணாதுதான் ஆனால் கவுரவமா வாழ வேணுமே....!
இந்த 3வரிசத்தில நான் பட்ட துன்பங்கள் இருக்கே அதுகளைவிட இந்த வேலை பெரிய கஸ்ரமேயில்லை....அவர் வந்தா நானும் பிள்ளையும் முன்னேறிடுவம் தான....இந்தா இப்ப நீங்க கிடைச்சமாதிரி அவரும் திரும்பிக் கிடைப்பாரெண்ட நம்பிக்கையிருக்கு....! அபிராவின் நம்பிக்கையைச் சிதைக்க விரும்பாத புதிய உறவும் சொல்லுவாள்.....,
அண்ணை வருவரக்காச்சி....! யோசிக்காதையுங்கோ....!

அபிராவின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவளது உடன் பிறவாத தங்கை அவளுக்கொரு உதவியை புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்றுக்கொடுத்தாள். களத்தில் நின்ற கால்கள் விளைநிலத்தில் வியசாயத்தில் கால்பதிக்கத் தொடங்கியது. அபிராவின் கனவு மகிழனின் எதிர்காலம் நோக்கியதாக உழைக்கத் தொடங்குகிறாள்.

30.03.2012 அபிராவின் தங்கையும் மகிழனின் சித்தியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அக்காச்சி...!
என்னேயிறீங்க...?
வாழைப்பொத்தி வறை செய்து சாப்பிட்டிட்டு இருக்கிறன்....!
மகிழன் ஓடிவந்து தொலைபேசியைப் பறித்தான்.
சித்தி....! சித்தி....! சுகமாயிருக்கிறீங்களோ ? சித்தி அம்மா எனக்கு அடிச்சவ இண்டைக்கு...
நீங்கென்ன குழப்படி செய்தீங்கள்....? அவன் அழத் தொடங்கினான்.
தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்கள்....! அம்மாட்டைக் காசில்லையாம் ..... அதான் எனக்கு அடிச்சவ...அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....!
வாறன் பொறுங்கோ....! ஆரைக்கேட்டு பிள்ளைக்கு அடிச்சவா....! அம்மாட்டைக் குடுங்கோ அவக்கு நல்ல பேச்சுக் குடுக்கிறன்....

அந்தக் குழந்தை தொலைபேசியைத் தாயிடம் கொடுத்துவிட்டுச் சிரித்தான்.

அபிரா கட்டி வைத்திருந்த கண்ணீர் தொலைபேசிக்கால் உடைந்தது.
நேற்றைக்கு விடுதலையானவங்கள் ஊருக்கு வந்திருக்கிறாங்கள்....இவரைப் பற்றி ஒண்டும் தெரியுதில்ல....இவன் ஒரே கேட்டுக் கொண்டிருக்கிறான்.....எங்க தேடுறதெண்டு தெரியேல்ல....காலம் போகப்போக பயமாக்கிடக்கு.....தாங்கேலாமப் புள்ளைக்கு அடிச்சப் போட்டன்.

அபிராவின் அழுகை யேர்மனி வரையும் ஒலித்துக் கொண்டிருந்தது. என்னக்காச்சி செய்யேலும் பொறுமையா இருங்கோ....அவன் குழந்தை அவனுக்கென்ன தெரியும்....அண்ணை கட்டாயம் வருவரக்கா.....அண்ணை இனித் திரும்பமாட்டாரென்றதை அறிந்தும் அபிராவைச் சமாதானப்படுத்த அண்ணை வருவர் எனப் பொய் சொன்னாள் அபிராவின் உடன்பிறவாத்தங்கை....

புள்ளையளைக் கொண்டு போன சுனாமி என்னையும் கொண்டு போயிருக்கலாம்.....! முதல் முதலாய் அவளது நம்பிக்கைகள் சிதைந்து கொண்டதன் அடையாளமாக அபிரா சத்தமிட்டு அழுத்தொடங்கினாள்....

30.03.2012

Monday, March 26, 2012

இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு.....!


(குறிப்பு :- இவ்வாக்கம் சுயசரிதமில்லை. விடுதலைக்காக வாழ்ந்த ஒருவரின் நிலமையைப் புரிந்து கொள்ளாமல் கிடைக்கவிருந்த உதவியைத் தடுத்தாட்கொண்ட ஒரு குழுவின் போக்கினைப் பதியவும் , தனித்தே இயங்குகிற நேசக்கரம் அமைப்பினை எவரோ இயக்குவதாக பொய்யுரைக்கும் பொய்யர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கவுமே எழுதியுள்ளேன். ஸ்கைப்பிலும் தொலைபேசியிலும் சிலருக்குள் நடைபெறுகிற உரையாடல் பக்கசார்பற்ற உதவிகளையும் கேள்விக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பொய்யான நம்பிக்கைகளையும் விதைத்துவிடுகிறது. ஆயிரம் வார்த்தைகள் பேசி பெரிய தலைகளின் விமர்சனத்தை வாங்குவதிலும் பார்க்க பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களின் வாழ்வுக்கு உதவிபுரிகிற மனிதநேயர்களும் உண்மையைப் புரிந்து கொள்ளவே இதனை எழுதியுள்ளேன்)

**** அண்ணையை தெரியுமா ? கேட்டான் லீமா. அவனது நிறம் உயரம் முதல் அவன் பற்றிய அடையாளங்களை லீமா ஞாபகப்படுத்தினான். அந்தப் பெயரை நினைவுகள் எட்டும் வரையும் தேடியும் பிடிபடவில்லை.

உங்களுக்குத் தெரியுமக்கா....இதுதான் நம்பர் எழுதுங்கோ....ஒருக்கா எடுத்துக் கதையுங்கோ.....
லீமாவிடமிருந்து பெற்ற இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தினேன். எதிர்முனையில் கதைத்த நபருக்கு நான் கதைக்க வேண்டிய ஆளைக் கேட்டேன். பொறுங்கோக்கா.....சொல்லிவிட்டு அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டான்.

கலோ....அண்ணை நான் யேர்மனியில இருந்து***.
ஓம் நான் **** சொல்லுங்கோ....குரல் திக்கித்திக்கி வந்தது. சுகமாயிருக்கிறியளே ? ஒவ்வொரு சொல்லை உச்சரிக்கும் முன்னம் சில வினாடிகள் திக்கித்திக்கியே கதை வந்தது. தன்னை அடையாளம் சொல்லவே சில நிமிடங்கள் எடுத்தது.

லீமா சொல்லியிருப்பான் தான என்னைப்பற்றி....? வடிவாக் கதைக்கேல்ல....உங்களோரைட கதைக்கச் சொன்னவர். என்னை மறந்து போனீங்கள் போல....எனச் சிரித்தான். இல்ல....என்ற எனது இழுவையைப் புரிந்தானோ என்னவோ.....தன்னைப்பற்றி சொல்லத் தொடங்கினான்.

நம்பவே முடியாதிருந்தது....கடைசிச்சண்டை நேரம் காயம்பட்டிருந்து அவன் இறந்துவிட்டதாகவே தகவல் இருந்தது. இப்போது உயிருடன்....!

2009 தைமாதம் காயம்பட்டனான். 2மாதத்துக்குக்கிட்ட கோமாவில இருந்தனான்....பிறகு ஏப்றல் மாதம் பிள்ளையளும் மனிசியும் கொஸ்பிற்றலுக்கு பாக்க வந்ததுகள்.....என்னைப்பாக்க வந்து அதுகளும் காயம்பட்டிட்டுதுகள்....அதோடை பிள்ளையளை றெட்குறோஸ் கப்பலில ஏத்தினவை....அந்த நேரம் நானும் திரும்பியும் காயம்பட்டிட்டன்....எனக்கொண்டும் தெரியாது திரும்பியும் கோமாவுக்குப் போட்டன்....பிறகு நான் கண் முளிச்ச நேரம் புல்மோட்டையில இருந்தன்.....அப்ப ஒருநாள் ரீஐடிக்காறர் வந்து விசாரணையெண்டு 4ம்மாடியில இருந்து எல்லா இடமும் ஏத்தியிறக்கி.....இந்தா நான் பரலைசா இருக்கிறன்.....முள்ளந்தண்டு வடம் பாதிச்சு இடுப்புக்கு கீழ உணர்வில்ல....நடக்கவும் மாட்டன்....ஆரேன் எழுப்பிவிட்டுக் கையில தடியைத் தந்தாத்தான் தெண்டித் தெண்டி ஒரு பத்து மீற்றர் நடப்பன்.....அதுக்குப் பிறகு கால் விறைப்புமாதிரியாகீடும்....உணர்வொண்டும் தெரியாமல் அப்பிடியே விழுத்தீடும்.....அழுகையின் ஒலியை உணர்த்தியது அவனது குரல்.

துலைக்காயத்தால தான் உடனும் சொல்லுகள் சொல்ல வராது....அதுதான் திக்குவாயாப் போச்சு....யோசிப்பீங்கள் இவனென்னடா இப்பிடிக் ககைத்கிறானெண்டு....அப்பிடியொண்டும் நான் நினைக்கேல்லண்ணை.....

எனக்கென்ன கவலையெண்டா.....என்ர மகள் அம்மாதான வச்சுப்பாத்தவ....நவம்பர்மாதம் அம்மாவும் கான்சரில செத்துப்போட்டா அப்ப பிள்ளையை சொந்தக்காறாக்கள் ஒரு அனாதையில்லத்தில விட்டிட்டினம்....புள்ளை பாவம் தனிச்சுப்போனாள்....ரெண்டுதரம் ரெலிபோனில கதைச்சனான்.....அது சின்னன் தான எப்பவப்பா வருவீங்களெண்டு அழுகுது....

ஏத்தின வயசு மகளுக்கு...? 8வயது. அக்கா எங்கையிருக்கிறா ? அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லைப் போல.... அவளும் என்னை வந்து பாக்கிறேல்ல....என்னால அவளுக்கும் ரீஐடி சரியா கஸ்ரப்படுத்தீட்டாங்கள்.....மூத்தவன் காயம்பட்டு கப்பல்ல ஏத்தினவங்கள் அவனைக்காணேல்லயாம்....பிள்ளையையும் இழந்த கவலை அவளும் என்னேயிறது....என்னை வேண்டாமெண்டிட்டாள்....மகளைத்தான் நினைக்க கவலையா இருக்கு....குரல் மாறி அழுகிறான் என்பதனை உணர்ந்தேன்.

ஏன்ன செய்யிறது....? ஆர் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....? யோசிக்காதையுங்கோ....ஏதாவது செய்வம்....!

அம்மா கடைசியா வந்து பாக்கேக்க சொல்லீட்டுப் போனவ...தான் சாக முன்னம் என்னை வந்து பாப்பனெண்டு...அவாவும் கடைசீல என்னப்பாக்காமல் செத்துப்போட்டா....அம்மா இருந்தா என்ர புள்ள அனாதையாகீருக்கமாட்டுது.....

தாயைச்சாகும் நேரம் காணாத துயரம் தன் 8வயது மகள் அனாதையான துயரம் ஒரு தாயின் மகனாகவும் ஒரு மகளின் அப்பாவாகவும் அவன் மனசை அரித்துக் கொல்கிற துயரங்கள் கண்ணீராகிக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு கதையையும் சொல்லச் சொல்ல அழுகைதான் வந்தது. தனது துயரைச் சொல்லியழுகிறவனுடன் சேர்ந்து அழ முடியவில்லை.

என்னெண்டா எனக்கு அடுத்தமாதம் வழக்கு வந்திருக்கு....! லோயருக்கு காசுகட்ட வேணும்....ஒருதரும் எனக்கில்ல... அதான்.... நான் வெளிய வந்திட்டா உழைச்சுத்தருவன்.... என்ரை பிள்ளையையும் பாப்பன்..... திக்கித் திக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

நீங்க யோசிக்காதையுங்கோ.....! ஏதுமெண்டா கேளுங்கோ.....பாப்பம்.....!

000 000 000

தொடர்பு அறுபட்டு நெடுநேரமாகியும் மனம் சஞ்சலமாகவே இருந்தது. எப்படி வாழ்ந்த மனிதன்...இன்று தனக்கு உதவுமாறு கெஞ்ச வைத்தது எது.....?

2002 தான் முதல் முதலில் அவனைச் சந்தித்தேன். பெரும் பொறுப்புக்கு உரிய கடமையுணர்வோடும் அதேயளவு மக்களுடனான தொடர்பாடலும் கொண்ட ஒரு கடமை வீரனையே அந்தப் பிரமனாலங்குளத்தில் பார்த்தேன். அவனைப்பற்றிப் பின்னர் பல கதைகள் சொன்னார்கள். அவன் நிற்கிறானென்றால் எதிரி எவ்வளவு பீதியடைவான் என்றெல்லாம்; அந்தக் கறுத்த நெடிய முறுக்கேறிய உடலும் நிமிர்வும் சொன்ன கதைகள் பல்லாயிரம். அவை ஒவ்வொன்றும் ஒருகாலம் பதிய வேணுமென ஒருநாள் இரவு தோழியொருத்தி கதையோடு கதையாய்ச் சொன்னாள்.

பின்னர் புதுக்குடியிருப்பில் கிளிநொச்சியில் பரந்தனில் மன்னாரில் என அந்த மனிதனின் ஆழுமை ஆற்றல் என அவனது பன்முகத்திறமைகளையெல்லாம் பலரது வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அவனது பிரிவின் பொறுப்பாளர் ஒரு சந்திப்பில் மற்றவர்களுக்கு அவன் பற்றி ஒரு உதாரணம் சொன்னார். அத்தகையளவு எல்லாராலும் நேசிக்கப்பட்ட ஒருவன் இன்று...??? நினைக்கவே முடியவில்லை.

இது விதியா ? இல்லை தமிழன் செய்த ஊழ்வினையா ? எதுவென்று பிரித்தறிய முடியவில்லை.
அன்றைய தொலைபேசியழைப்பும் அவனது கண்ணீர் முட்டிய கதைகளும் தான் நெஞ்சு முட்டிக்கனத்துக் கொண்டிருந்தது. நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது. கத்தியழுதால் தான் மனம் ஆறும்போல அந்தரமாயிருந்தது.

தாங்க முடியாத வேதனைகளை கொட்டித்தீர்க்கும் இடமாக நிலக்கீழ் அறையொன்றுதான் இருக்கிறது. உடுப்புகள் தோய்க்கப்போட்டு வருவதாக பிள்ளைகளுக்குச் சொல்லிவிட்டு உடுப்புக் கூடையைத் தூக்கிக்கொண்டு நிலக்கீழ் அறைக்குப் போனேன். உடுப்புத்தோய்க்கும் மெசினில் உடுப்புக்களைப் போட்டு சவர்க்காரப்பவுடரைப் போட்டு மெசினை இயக்கிவிட்டேன். மெசின் சுழல ஆரம்பித்தது. கதவைச் சாத்தினேன். நெஞ்சுக்குள் குவிந்திருந்த துயர் கண்ணீராய் வழிந்தது. வெளியில் சத்தம் போகாத நிலக்கீழ் அறையின் ஒவ்வொரு அணுவும் எனது கண்ணீரைத் தாங்கிக் கொண்டது. எப்படியோ எல்லாம் வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று....ஏதிலிகளாகவும் ஊனமாகவும் முடமாகிக்கிடக்க எங்கள் புலத்து அரசியல் புடுங்குப்பாடுகளும் இடுங்குப்பாடுகளுமாகியிருப்பதன் மர்மம் புரியவேயில்லை.

அந்தநாள் மட்டுமல்ல அடுத்து வந்த சில நாட்கள் வரை அண்ணையின் ஞாபமும் அவரது நிலமையும் தான் நிம்மதியைப் பறித்திருந்தது.

இரண்டாவது நாள்.....

அம்மா...அம்மா......மகள் கூப்பிட்டாள். என்னம்மாச்சி...? உங்களுக்கு ரெலிபோன்....மகள் ரெலிபோனைக் கையில் தந்தாள். லீமாதான் அழைத்திருந்தான். ஒருக்கா எடுங்கோ....சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான்.
அக்கா அண்ணைக்கு லோயருக்கு ஒரு ஒழுங்கு செய்ய வேணும்....காசு கட்டாட்டி எங்கடை லோயர்மார் கோட்டுக்கு போகமாட்டினம்.....அண்ணேன்ரை நிலமை ஆள் சொன்னவர்தான....ஒரு லச்சம் தயார்பண்ண வேணும்....ஏற்கனவே அவனுக்கு வழக்குக்கு உதவுவதாக வாய்மொழி நம்பிக்கை கொடுத்தவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது பற்றி தயக்கத்துடன் சொன்னான்.
2கிழமையில காசு றெடிபண்ணினாத்தானக்கா....

ஏற்கனவே அவனுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்த லண்டனில் இருந்து இயங்கும் நிறுவனத்தின் பங்காளி போன தவணைக்கு காசு கொடுட்பதாகச் சொல்லிவிட்டு தொடர்பில்லாமல் போனது போல இம்முறையும் பிசகினால் சட்டத்தரணியைச் சமாளிக்கேலாதென்ற உண்மையையும் லீமா சொன்னான்.

ஏன்னெண்டாலும் ஒரு ஒழுங்கு செய்வம்...சொல்லிவிட்டு லீமாவின் தொடர்பைத் துண்டிக்கிறேன். அவசரத்துக்கு ஆதரவு வழங்குகிற லண்டனில் வாழும் ஒரு அன்பரைத் தொடர்பு கொண்டு நிலமையைச் சொன்னேன். பெயரை வெளியில் சொல்லி உதவி கோரமுடியாத நிலமையையும் விளக்கினேன்.

பிள்ளை...நான் ஒருலட்சம் அனுப்பிவிடுறன் விபரத்தை தாங்கோ....அந்த அன்பர் பணம் அனுப்புவதற்கான விபரத்தை என்னிடம் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே உதவுவதாக கடைசியில் தொடர்பையறுத்தவரும் இவரும் தத்தமது தொழில் சார்ந்து உறவு இருப்பதால் ஏற்கனவே வாக்குறுதியழித்து ஏமாற்றப்பட்ட விபரத்தையும் சொன்னேன். அவரிடம் இதுபற்றி விளக்கம் கேட்பதாகவும் அந்த அன்பர் சொன்னார்.

ஒருவழியாய் உதவி ஒழுங்கானதில் நிம்மதியாகியது மனசு. அடுத்த 20நிமிடம் கழித்து உதவுவதாக விபரம் பெற்றவர் அழைத்தார். பணம் அனுப்பிய விபரம் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விழுந்தது இடி.

பிள்ளை என்னெண்டா நான் அவரிட்டைக் கதைச்சனான்....அவர் சொல்றார் தான் குறைஞ்ச காசிலை இந்த வழக்கைச் செய்ய தன்னிட்டை ஆளிருக்கெண்டு....தான் இவற்றை வழக்குக்கு காசு குடுப்பராமெண்டு.....ஒரு கிழமை பாருங்கோ அவர் செய்யாட்டி சொல்லுங்கோ...நான் தாறன்....

உதவ முன்வந்த மனிதனையும் குழப்பிய அந்த மொட்டந்தலை உபகாரியை ஸ்கைப்பில் அழைத்தேன்.
என்னெண்டா ழூழூழூ நான் ஒரு லோயரை வைச்சிருக்கிறன் அவருக்கொரு ஐயாயிரம் ரூபா குடுத்தா ஒரு தவணைக்கு கோட்டுக்குப் போவார்.....நீங்களேன் ஒரு லட்சத்தை வீணாக்கிறியள்...மிச்சத்தை வைச்சிருந்து நாங்கள் அவர் வெளீல வர ஒரு கடைபோட்டுக் குடுத்தமெண்டா அவருக்கொரு வேலையுமாகீடுடெல்லோ....?

அவற்றை குற்றப்பத்திரிகை என்னமாதிரியெண்டது தெரியுமோ ? கேட்ட எனக்குச் சொன்னார் அது கஸ்ரமானது தான் ஆனால் என்ரை லோயர் முடிச்சுத் தருவார். அவர் விளக்கங்களை நீட்டிக்கொண்டு போனார். அவரது விளக்கங்களிலிருந்து அண்ணைக்கு அவர் பெரிதாய் எதையும் செய்யப்போவதில்லையென்றதை உணர முடிந்தது. அதற்கு மேல் அவருடன் கதைப்பதில் எவ்வித பலனுமில்லையென்பது புரிந்தது. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

லீமாவை அழைத்தேன்.....ஐயாயிரத்தோடு அவனை வெளியில் எடுக்கலாம் என்ற லண்டன் உபகாரியின்; கதையில் அவனுக்கும் நம்பிக்கையில்லை என்பதை அவன் ஏற்கவே ஊகித்திருந்ததை அப்போது சொன்னான். அப்போதுதான் லீமா அண்ணை மீதான வழக்குகள் பற்றிச் சொன்னான்.

லண்டன் உபகாரி நினைப்பது போல அந்த வழக்கு இலகுவாக முடிகிற வழக்கில்லையென்பது புரிந்தது. அவைக்கு இப்போதைக்கு ஒண்டையும் வெளிப்படுத்தாதையுங்கோ லீமா எங்கடை பக்கத்தாலை லோயருக்கான காசை ஒழுங்கு பண்ணுவம்.... ஆளையனுப்பி முதல் அட்வான்சை குடுப்பிப்பம்.... ஓமக்கா அதான் சரியெண்டுபடுது...

நம்பிக்கையானவர்கள் பலரைத் தொடர்பு கொண்டு எல்லாம் இழந்து இன்று ஊனமாகி திக்குவாயாகிப் போன அண்ணனுக்கு உதவி கோரத்தொடங்கினேன். கடைசியில் கனடாவிலுள்ள நண்பர் ஒருவர்தான் மிச்சமாக இருந்தார்.

இரவு கனடா நேரம் 9.40இற்கு அந்த நண்பரை அழைத்து விடயத்தைச் சொன்னதும் கொடுத்த விபரத்துக்கு மறுநாள் ஒரு லட்சத்தை போட்டுவிட்டு வெஸ்ரேன் யூனியன் பணம் பெறும் 10 இலக்கங்களை குறுஞ்செய்தியிட்டிருந்தார். முகம் காட்டாமல் அவ்வப்போது அவசரங்களுக்கு உதவுகிற அந்த உறவு ஒருகாலம் நாட்டுக்காக இயங்கிய இதயம். சிறைகளில் எல்லாம் இருந்த அனுபவம் நிறைந்த அந்த மனிதர் தன்போன்ற இன்னொரு போராளியின் சிறையின் வதையைப் புரிந்து உதவியது.

கோடி நன்றிகள் அண்ணா...! என்ற மின்னஞ்சல் மட்டுமே அப்போதைய எனது பதில் நன்றியானது.

000 000 000

குறித்த திகதிக்கு முன்னர் 25ஆயிரம் சட்டத்தரணிக்கு கட்டி அந்த நாள் விடிந்தது. வழக்கிறஞரின் தொலைபேசி அன்று உறங்க முடியாது தொடர்ந்து எனக்காக ஒலித்துக் கொண்டிருந்தது. எதிர்பார்த்தைவிடவும் ஒரு விடிவுக்கான பாதையை 25ஆயிரம் செய்திருந்தது. அடுத்த 50ஆயிரத்துக்கு அலுவல்கள் நிறைய வழக்கறிஞர் தரப்பிலிரந்து தரப்பட்டது. இன்னும் ஒரு லட்சம் கேட்டாலும் அதையும் செலுத்தி அந்த வீரனை வெளியில் எடுக்க வேண்டுமென்ற வைராக்கியம் மனசுக்குள் இறுக்கமாகியது.

ஐயாயிரத்தோடு ஏதோ அல்வா விற்கலாம் போல ஆலோசனை சொல்லி ஏமாற்றிய மொட்டந்தலைக்கு அந்த அண்ணனின் விடுதலையைச் சொல்ல வேண்டுமென்ற ஆவல். தவணைகள் குறிக்கப்பட்டு எங்களுக்காக தனக்கான குடும்பம் வாழ்வு சந்தோசம் எல்லாவற்றையும் இழந்த அண்ணனுக்கு ஒளி கிடைக்கும் வாய்ப்பொன்று கிட்டவுள்ள செய்தியை அண்மையில் லீமா தந்திருந்தான்.

ஐயாயிரத்தோடு ஆளை வெளியில எடுத்து கடைபோட்டுக் குடுப்பம்....என்றவர் இன்று வரையும் அந்த அண்ணனின் வழக்குப்பற்றியோ அவனது விடுதலைக்கான முயற்சி பற்றியோ எதையுமே கதைக்கவுமில்லை. அதற்காக ஒரு சதத்தையும் கொடுக்கவுமில்லை.

அண்மையில் ஒருவர் லண்டனிலிருந்து பேசியபோது....லண்டன் உபகாரி பற்றிக் கதைத்தார். அவங்கள் கனபேரை வெளியில எடுத்து விட்டிருக்கிறாங்களாம்....உங்களையும் அவங்கள் தானாம் காசைத் தந்து இயக்கிறாங்கள்....நீங்கள் றேடியோவுக்கு வந்துதானாம் அவேடை சனத்தை உங்கடை பக்கம் எடுத்திட்டியளாம்....என்றார்.

வாயில் கெட்டவார்த்தைகள் தான் வந்து குவிந்தது. யாரோ வலிப்பட்டு துயரப்பட்டு யாரிடமோ எல்லாம் கெஞ்சி பிச்சையெடுத்துக் கொடுக்கிறதையும் தங்கள் சுய அரசியல் வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துகிற இந்த வியாபாரிகளை இன்னும் நம்புகிற மனிதர்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அண்ணை நான் ஒரு தனிமனிசி றேடியோவில போய் நிண்டு உதவுங்கொ உதவுங்கோண்டு கத்தியும் இன்ரநெட்டில ஆளாளுக்கு திட்டிற திட்டெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு தான் இந்தளவு உதவியளையும் ஒழுங்கு செய்திருக்கிறன்....இதைச் சொன்னாலும் விலாசமெடுக்கிறனெண்டு சொல்லுவினமண்ணை....ஆனா உந்தக் நாட்டைக் கடந்தவையும் புதுச்செயலகத்தைத் திறந்தவையும் இல்லாமத்தானண்ணை இவ்வளவு உதவியும் போகுது....

அட அப்பிடியே....? ஈலிங் அம்மனுக்குப் போன கிழமை போனனான்....அங்கை அவங்கடை அவங்கடை ஆக்களைக் கண்டனான்....அவை அப்பிடித்தான் கதைக்கினம்....எனக்கும் உங்களில சந்தேகம்தான்....அதெப்பிடி உங்களுக்கு உவ்வளவு தொடர்புகளும் வந்தது...? சந்தேகம் சந்தேகமெனப் பல கேள்விகள் கேட்டவர் கடைசியில் சொன்னார். கோவிக்காதையுங்கோ கனபேர் உப்பிடித்தான் கதைக்கினம் அதத்தான் கேட்டனான்... கோவிக்காதையுங்கோ என்ன....சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். இப்படித்தான் சந்தேகங்களும் கேள்விகளும் நம்பிக்கைகளை உடைத்து நொருக்கிவிடுகிறது.

கடந்த 5மாதங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்ப நலனுக்காகவும் சட்ட உதவிகளுக்காகவும் நேசக்கரம் ஒருங்கமைத்துக் கொடுத்த உதவிகளின் தொகையை 4நாட்கள் தேடித்தொகுத்து 15.03.2012 கணக்கெடுத்த போது நம்ப முடியாதிருந்தது. ஐந்து மில்லியன் ரூபாவுக்கு மேலாக (5328517,50 ரூபா) உதவிகள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வருகிற விமர்சனங்கள் வரட்டுமென்ற முடிவோடு கைதிகள் நலன் கணக்கறி க்கையை தயார் செய்தேன்.

அன்று லீமாவுடன் பேசுவதற்கு தொடர்பெடுத்து லீமாவுக்கு விடயத்தைச் சொல்ல லீமா மிகவும் வேதனைப்பட்டான். நாங்க இஞ்சைபடுற துயரம் ஒருதருக்கும் விளங்காதக்கா....இனியெண்டாலும் ஒற்றுமையா நிண்டு ஏதாவது செய்வமெண்ட சிந்தனை உங்கை வராது போல....

16.03.2012


தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய 5மில்லியன் ரூபா உதவி கணக்கறிக்கை விபரத்தினை பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்:-


http://tamilnews24.com/nesakkaram/ta/?p=1381