Monday, October 28, 2013

எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ.


சுற்றி நிற்கும்
இந்தியப்படைகளின்
முற்றுகைக்குள்ளால்
நீயும் உனது தோழர்களும்
இருள் கனத்த
பொழுதொன்றில் - எங்கள்
ஊரிலிறங்கினாய்....!சிகரங்கள் தொடவல்ல
வீரர்களின் முகமாய்
அந்த நாட்களில்
எங்களின் சூரியன்
எங்களின் தோழன்
எல்லாமுமாய்
எங்களின் வசந்தம் நீ.

பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை
யாரெவரெனினும் சினேகப் பார்வை
ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை
அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய்
வீடுகளில் உனக்காயென்றும்
காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ்
உன் வரவைத் தேடும் நாங்கள்....!

எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில்
வந்து குடியேறிய புலி
எங்கள் அன்புக்குரிய றோயண்ணா
உங்களின் வரவில் மகிழ்ந்ததும்
உங்களின் அன்பில் நனைந்ததும்
இன்று போலவே எல்லாம்
இதயத்தில் பசுமை தரும் நினைவுகள்....!

போனாய் ஒருநாள்
எங்களை அழவைத்துப்
போர்க்களம் நீ சென்றாய்
போனவுன் பஜீரோ வீதியில் சென்றால்
வானத்தில் மிதப்போம் - நீ
வருவாய் மீண்டுமென்ற நம்பிக்கையை
என்றும் நீ ஏமாற்றியதில்லை.

அப்படித்தான் 1990 ஐப்பசி
அந்த நாளும் நினைத்திருந்தோம்
காலம் எங்களை ஏமாற்றி
காலனின் கையில் நீ
காயமடைந்து மருத்துவமனையில்
நீட்டி நிமிர்ந்து பேச்சின்றி மூச்சின்றி
புலிவீர மிடுக்கோடு பேசாமல் கிடந்தாய்....!

மீண்டுமுன் நிமிர்வும் சிரிப்பும்
வேண்டுமெங்களுக்கென
நாங்கள் வேண்டிய கடவுளரும் கைவிட்டு
கடல் கடந்த மருத்துவம் காக்குமென்று
கொண்டு செல்லப்பட்ட
காந்திய மண்ணிலே – உன்
கடைசி மூச்சைக் கரைத்தாய்....!

மார்கழி 31 மாவீரனாய் கப்டன் றோயாக
அந்த மழைக்கால மாதம் போல
எங்கள் கண்களிலும் மாரி காலத்து ஈரம்
நீ காவியமாய் கடந்து போய்
காலச் சுழற்சியில் வெற்றிடமாய்
எங்கள் இதயங்களில்
இட்டு நிரப்ப முடியாத இழப்பாய்....!

இன்றும் உன் நினைவுகள்
என்றுமே வற்றாத கடலாய்
வந்து போகும் ஞாபகமாய்
அந்தச் சிரிப்பும் ஆழுமையும்
அனைவராலும் நேசிக்கப்பட்ட றோயண்ணா
உங்களின் கனவுகள்
எங்களின் மனங்களில்
என்றோ ஒருநாள்
தமிழ் ஈழமாய் மலரும்.

12.10.2013
 எனது படைப்புகளை பிரதியெடுத்துக் கொள்ளும் இணைய நடத்துனர்கள் ஊடகர்கள் முல்லைமண்ணுக்கும் யாழ் இணையத்திற்கும் ஒரு நன்றியிடுங்கள்.  பழைய உறவுகள் நண்பர்கள் இந்த படைப்புகள் ஊடாக மீண்டும் கிடைக்கவும் இந்தப் படைப்புகள் எனக்கு உதவுகிறது. மறக்காது இந்த உதவியைச் செய்யுங்கள்.

Friday, October 18, 2013

உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும்


மாலைநேரத்து வெயிலில்
காய்ந்து வழியும் இலுப்படி நிழல்
உனது அமைதியின் இருப்பிடம்
அங்கே தான் நீ
அதிக நேரத்தைச் செலவிடுவாய்
அங்கே தான் நாங்களிருவரும்
அறிமுகமாகினோம்.

சோளகம் உருவிப்போகும்
இலுப்பம் இலைகளின் உதிர்வில்
வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக்
கதைகள் சொல்வாய்
உதிர்ந்து காயும்
இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து
துளிர்க்கும் குருத்துகளின்
உயிர்ப்பைக் காட்டித்
தைரியம் தந்தாய்
தலைநிமிரச் செய்தாய்.

விடியலைக் காணவிடாத
சமூகச்சாவியை
உடைத்துவரும் வீரத்தையூட்டினாய்
விழியுடைந்துருகிக்
கன்னம் தொடும்
நீர் துடைக்கும்
தோழமை விரலாய்
வெற்றியைக் காட்டினாய்....!

அந்தக் குழந்தைக் காலத்தில்
என் முன்னோடி நீயாய்
நடமாடும் கடவுளாய்
அண்ணனில்லையென்ற குறையை
அன்பைக் கொட்டி
வெற்றிடம் நிரப்பிய
வேங்கையும் நீயானாய்.

சின்ன வயது நினைவுகளில்
உனது குழந்தையாய்
உனது கால்களைச்
சுற்றியலைந்த நாட்களெல்லாம்
இன்றும் தொடர்வது போல....!
என் குழந்தைகளில்
நீயும் ஒருவனாய்
நீளும் கரையெங்கும்
நடந்து வருகிறாய்....!

போர்ப்புலியின் வீரத்தை
போராடும் வீரியத்தை
நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்
நினைவுகளில் அழியாத
கதை சொல்லியாய்
நீ சொன்ன வீரரின்
கதைகள் கேட்ட காலங்கள்
கனத்துக் கிடக்கிறது
கவிதைகளாக கதைகளாக உனது
போராட்ட கள அனுபவமாக....!

முதுகில் ஊஞ்சலிட்டுத்
தோழில் சுமந்த தோழன்
கைவிரல் பற்றிக் காலம் உரைத்துக்
காவலனாய் நீ கண்ணாயிருந்தாய்
அண்ணாவென்றொரு உயிரின் பெறுமதி
உன்னால் தானடா
உணர்வில் இன்னும்
உறவின் வாசனையை
நேசிக்க வைத்தாய்.

கனவுகளால் பூத்த இரவொன்றில் - நீ
களமுனையில் சாவடைந்து போனாய்
உயிரிதழ் வலிக்க
உனைத் தேடிய போது
அதிகாலையாய் வந்து சேர்ந்தாய்
அழியாத வரம்பெற்ற
ஆண்டவனாய் தானே
கடைசிப் பிரிவை பிறப்பித்த
மதியப் பொழுதில்
கைவிரல் பிடித்துச்
சத்தியம் செய்தாய்....!

பின் ஏனடா எனைப் பிரிந்து....?

வெறுமை தின்ற
இலுப்ப நிழல் வேரிலிருந்து
உனது தடங்களை
எதிர்பார்த்த காலங்கள்
திரும்பாத உன்னைப் போல
இறந்த காலமாக....!

உன் நினைவோடலையும்
உயிரின் குரல்
உனக்கு மட்டுமே கேட்கும்
எனக்கு மட்டுமேயான துயராய்....
இப்போதும் உனது
காலத்து நினைவுகளை
மீட்டுக் கொண்டேயிருக்கிறேன்.


 2003 மேமாதம். முள்ளியவளை துயிலுமில்லம் போய் வந்திருந்தேன். அந்தநாளின் இரவு தூக்கம் அறுந்து விழித்திருந்த விடியற்காலை எழுதப்பட்டது. )

Sunday, October 13, 2013

போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ?

கடற்காற்றின் மௌனம்
உனது காலத்தை
எழுதிச்சென்ற தடங்கள்
கனவின் மீதத்தை
இந்தக் கரைகளில்
வந்தலையும் அலைகள்
வந்து சொல்லியலைகிறது....!

கால்புதையும் மணற்தரையில் 
உனது மௌனங்கள்
நீ கரைந்த காற்றோடு
வந்தலையும்
வார்த்தைகளின் அர்த்தங்கள்
ஒரு வரலாற்றின் சாட்சியாய்...!


வழி நீளக்கிடக்கிற
நினைவுத் துளிகளில் நீயும் நானும்
எழுதத் துடித்த வாழ்வு
ஈழக்கனவாய் ஆனபோது
இடைவெளியின் நீளம்
காலக்கரைவில் கண்ணீராய்....!

நீ(மீ)ழும் நினைவுகளில்
நிலையாய் காலம் கரையும்
இந்தக் கடற்காற்று
போய் வாவென்கிறது
போய்வரவா 
பிரியத்துக்கினிய தோழமையே  ?

மறுபிறவி உண்டென்றால்
மறுபடியும் இதே கரைகள் தொடும்
அலைகளோடு அலையாவோம்
ஆழக்கால் புதைத்து
அந்தப் பழைய முகங்களோடு
இ(பி)ன்னொரு முறை பிறப்போம்.

23.05.2003(முல்லைக்கடற்கரையில் ஒருநாள் நினைவோடு)

(எனது படைப்புகளை பிரதி பண்ணி போடுகிறவர்கள் முல்லைமண் வலைப்பூவிற்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு பிரிதியெடுத்துக் கொள்ளுங்கள்)

Thursday, October 10, 2013

காவல் தேவதை மாலதி.


வீரம் தந்தவள்
விடுதலைப் பயணத்தின்
வீரியம் சொன்னவள்
ஏங்களில் ஓர்மத்தை விதைத்த
எழுச்சியின் குறியீடு
எழுதிய வரலாறு மாலதி.

சுதந்திரப் பொருளுரைத்துப்
பெண்ணின் பெருமையை
பேறாக்கிய பெருமை
பெரும் பேறாய் எம்மினத்தில்
பிறந்த பெருந்தீ.

கோப்பாய் வெளிக்காற்று
ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம்
கண்ணகை தெய்வமாய்
அங்கெல்லாம் மாலதி
காவல் தேவதையாய்....!

காலநதி உன்
கலையா நினைவோடு
கரைகிறது தோழி
மாலதியென்றெம் மனங்களில்
மூட்டிய தீயின் அடையாளம்
மாலதி படையணியாய்....!

10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் )

Sunday, October 6, 2013

முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....!

ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது.

2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளையும் நந்திக்கடலில் பெருமையையும் ஊத்தங்கரைப் பிள்ளையாரின் மகிமையையுமே உச்சரிக்கும் புனிதம் மிக்க நாட்கள் அவை.

அதுவொரு செவ்வாய்க்கிழமை. பகல் 10மணி. தென்னைமரங்கள் சிலவும் மாமரமும் இன்னும் பெயர் நினைவில் வராத மரங்களும் சூழ்ந்த வீடு அது. குடிசையென்று சொல்ல முடியாத ஒரு அழகான குடிலென்று சொல்லலாம். மர நிழலில் ஈசிச்செயரில் சரிந்து ஏதோவொரு புத்கத்தில் மூழ்கியிருந்த முற்றத்துக் கவிஞனைக் குழப்பியது எனது குரல்.

வணக்கம் சொல்லி வரவேற்று....,என்ன பிள்ளை என்னமாதிரியிருக்கிறீங்கள் ? பிள்ளையள் வரேல்லேயா ?

அடுத்த வளவுப் போராளி குடும்பத்தின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளைக் காட்ட வேலிக்கால் அழைத்த போது...வேலிக்காலை நீ காட்ட வேண்டாம் போய் பிள்ளையளைக் கூட்டிவா...! உரிமையோடு கோபித்தான் எங்கள் ஊர்முற்றக் கவிஞன். பிள்ளைகளையும் அழைத்து புதுவையண்ணனின் முன்னால் நிறுத்தினேன்.

தம்பிக்கென்ன பேர் ? பார்த்திபன்.
தங்கைச்சிக்கென்ன பேர் ? வவுனீத்தா.
உங்களுக்கென்ன பேர் ? மகள் அவரிடம் கேட்டாள்.
அம்மா மாதிரி மோளுக்கும் வாய்தான் கூட.....! எனக்குப் பேர் புதுவை இரத்தினதுரை. எனது பிள்ளைகளைத் தன் பேரக்குழந்தைகளுக்கு நிகராய் அவர்களுடன் உரையாடி குழந்தைகளுடன் சில துளிகள் தானும் குழந்தையாகி.....!

உங்களை அம்மா சொன்னவா மாமாவெண்டு கூப்பிடச் சொல்லி....நீங்க பாக்கிறதுக்கு அப்பு மாதிரியிருக்கிறீங்கள் ? எப்பிடியுங்களைக் கூப்பிடுறது ? எனது மகளின் கேள்வி என்னையும் வாய்மூட வைத்தது. நீ அப்புவெண்டே கூப்பிடாச்சி....அம்மா இன்னும் என்னை இளைஞனெண்டு நினைக்கிறா....எனச் சிரித்த அந்த மகிழ்ச்சியான தருணம்.

வாசலில் தோழி மலரின் மோட்டார் சயிக்கிளின் கோண் சத்தம் அது என்னைத்தான் அழைத்தது. கோணடிக்கிறவையும் உள்ளை வரலாம் தானே.....? பின்னேரம் அம்புலியக்காட்டைப் போறது வெளிக்கிட்டு நில்....சொல்லிவிட்டு உள்ளே வராமல் போனாள் மலர்.

2மணித்தியால உரையாடல் அன்ரி தந்த தேனீரும் பலாகாரத்தோடும் போனது.

எங்கை நிக்கிறாய் ?

இதிலையிருந்து 500மீற்றர் தூரத்திலதான்....நான் இருக்கும் வீட்டை அடையாளம் சொன்னேன்.

நாளைக்கு வா பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு மத்தியானம்.....நான் வாகனம் அனுப்பிறன். கிளிநொச்சிக்கு இரவு போவேண்டியிருக்கு இன்னொருநாள் வாறனே...!

இண்டைக்கு கிளிநொச்சி நாளைக்கு யாழ்ப்பாணம் நாளையிண்டைக்கு மல்லாவியெண்டு தொடர்ந்து அலுவல்தான் பிறகு உன்னைப் பிடிக்கேலாது...., பறவாயில்லை நாளைக்கு எனக்காக வெளி அலுவலெல்லாத்தையும் ஒருநாள் நிப்பாட்டலாம்....!

நேற்றும்; சிலபேர் வந்தவங்கள் உன்னை எங்கை நிக்கிதெண்டு விசாரிச்சவங்கள். நாளைக்கு அவையளையும் கூப்பிடுறேன்...எல்லாப் பழைய சினேகிதங்களையும் ஒரேயடியாச் சந்திக்கலாம். பிள்ளையளோடை உன்னைப் பாக்க வேணுமெண்;டும் சொல்லீட்டுப் போயிருக்கினம் சிலர்.

சில மணித்துளிகளில் அன்று விடைபெற்றுக் கொண்டு போய்விட்டேன்.

மறுநாள் 11மணிக்கே வாகனம் வாசலில் வந்து நின்றது. ஒரு தம்பி உள்ளே வந்தான். வெளிக்கிட்டீங்களோ அக்கா ? அவன் எங்களை ஏற்றிக் கொண்டு போனான். ஊர் முற்றத்துக் கவிஞனின் வாசலில் இறங்கினோம். முற்றத்துக் கவிஞனின் முகத்தில் மாறாத புன்னகையும் பகிடியும் இடையிடை சின்னச் சின்னச் செந்தமிழோடும் அந்த மதியப்பொழுது மீளக் கிடைக்காது துயரே மிச்சமாகுமென்ற அசரீரி அன்றைக்குக் கேட்கவேயில்லை.

12.30இற்கு வாசலில் ஒரு வாகனம் வந்து நின்றது. மேலும் இரண்டு மோட்டார் சயிக்கிள்களும் வந்து நின்றது. வரிசைகட்டி வந்து முற்றத்தில் கூடிய முகங்களின் சிரிப்பும் சினேக விசாரிப்புக்களும் அந்த மதியப்பொழுதை மாலைப்பொழுதின் மெல்லிய காற்றின் இனிமை போலாக்கியது.

காலம் கடந்து போனாலும் ஞாபகங்களில் மறக்கப்படாத பல முகங்கள். வயதின் ஏற்றமும் காலத்தோடான போரில் இழந்த வசந்தமும் பலரின் கண்களிலும் கதைகளிலும் மீதமாய் கிடந்த நினைவுகளில் நினைவுகளாகிக் கொண்டிருந்தது.

பிள்ளை இஞ்சை மரக்கறிதான் வற்றாப்பளை திருவிழாக்காலம் எங்கையும் மரக்கறிதான். சொன்னார் புதுவையண்ணா. நானும் இப்ப மச்சம் சாப்பிடுறேல்ல பிடிச்சது மரக்கறிதான். சொன்ன போது ஒருவன் சொன்னான். முழு மீனைச்சாப்பிட்டதையெல்லாம் நானும் பாத்தனான். அது அப்ப இது இப்ப....! சொன்னேன். முழுமீன் பற்றியொரு குட்டி அரட்டை அதிலேயே தொடங்கியது.

வாழ்க்கையில் மீளக் கிடைக்காத நாளாய் அன்று ஆளாளுக்கு பகிடியும் சிரிப்புமாய் நாங்கள்...! அவர்களில் ஒருவன் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அதிகம் பேசாதவன் போல. ஏட தம்பி கதைக்க வேணும் பாக்க வேணுமெண்டு ரெண்டு கிழமையா சொன்னனியெல்லோ....? இந்தா பிள்ளை வந்திருக்கிறாளெல்லோ வுh கதைக்க வேண்டியதையெல்லாம் கதைச்சிடு. அவன் சிரிப்போடு அமைதியாக எட வாடா என ஒரு செந்தமிழ் வார்த்தையால் அழைத்தார்.

தங்கைச்சி உவர் மாமாவோ அல்லது அப்புவோணை ? என மகளைக் கேட்டார் முற்றத்துக்கவிஞன். அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள் நீங்கள் தான் அப்பு. பாருங்கோடா பிள்ளையளுக்கும் நான் அப்புவாகீட்டன்.

மகள் நேற்றுச் சொன்னது இன்று எல்லோருக்கும் சொல்லப்பட்டு மீண்டும் பகிடியும் சிரிப்புமாய்....! பிள்ளைகளோடு ஆளாளுக்கு நினைவுப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சரி அம்மாவும் வாங்கோவன் ஒரு படமெடுப்பம் என்றாள் ஒருத்தி. படமெடுத்தா ஆயுள் குறைஞ்சிடும் நான் எடுக்கேல்ல....! எனச் சொல்லி சமாதான காலத்தில் யாருடனும் நினைவுப்படம் எடுக்காமல் தவிர்த்தை இப்போதும் நினைத்து வருந்துவதுண்டு.

ஒன்றாய் சேர்ந்து படமெடுத்தவர்கள் பலர் நிரந்தரமாய் பிரிந்து போனதோடு புதிதாய் யாருடனும் படமெடுக்க வேணுமென்ற நினைப்பு வருவதில்லை. ஆனால் அவர்களெல்லாம் படங்களிலாவது மிஞ்சியிருக்கக்கூடிய வாய்ப்பை அன்று தவிர்த்ததற்கான தண்டனையைக் காலம் நிரந்தரமாய் தந்துள்ளது.
அது எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் நேரம். வருடக்கணக்கில் கிடைக்காது போன மகிழ்ச்சியை அன்ரியின் பரிமாறலில் பெற்றோம். எனக்கு நான் போடுறன் என எனக்கான சாப்பாட்டை கோப்பையில் போட்டதற்கு ஆளாளுக்கு நக்கலடித்தார்கள்.

உதென்ன சாப்பாடு...சரி சரி உடம்பைக் குறைக்கினம் போல....ஒரு குரல் இப்படியும் வந்தது. எல்லாருக்கும் மிச்சம் வைக்க வேணும் அதான் இவ்வளவு....! அது பறவாயில்லை நீ போட்டுச் சாப்பிடு பிள்ளை அன்ரி நிறையச் சமைச்சிருக்கிறா....! முற்றத்துக் கவிஞன் சிரிப்போடு சொன்னார். எனக்குப் பிடித்த வாழைக்காய் பொரியல் தொடக்கம் அறுசுவையென்றதற்கும் மேலாக அந்த மதியச் சாப்பாடு வாழ்வில் திரும்ப ஒருபோதும் கிடைக்காத உணவு.

சந்திக்க விரும்பியவர்கள் சந்திக்கக் காத்திருந்தவர்கள் என ஒரேநாளில் பலரை ஒரேயிடத்தில் சந்தித்துக் கொண்ட பசுமை நினைவு. ஒரு கட்டத்தில் சிலரின் திருமணம் காதல் பற்றியும் கதைகள் வந்தது.

அவர்களில் ஒருவன் முன் பக்கத்தால் தலைமுடி இதோ அதோ உதிர்ந்து முடியப்போகிறேன் என இரு பக்கத்தாலும் உள்ளே போயிருந்தது. அவனைக்காட்டிச் சொன்னார் முற்றத்துக்கவிஞன். எங்கேனும் ஒண்டைப்பாத்துக்கட்டடா எண்டா எங்கை கேட்கினம்...! அவன் சிரித்தான் பதில் சொல்லாமல்.

 பிள்ளை அங்கினை ஆரையும் பார் பாத்துப் பேசு கட்டி வைப்பம்....! என்னமாதிரி ஒரு நல்ல பிள்ளையைப் பாப்பமோ ? கேட்ட எனக்கும் அவன் சிரித்தான். அண்ணை தேறாது.... எனச் சொன்னேன் முற்றக்கவிஞனைப் பார்த்து.

வந்ததிலிருந்து அதிகம் கதைக்காமல் இருந்தவன் முதல் முதலாய் வாய் திறந்து சொன்னான். கலியாணம் தான் வாழ்க்கையை நிறைவாக்குமோ ? இல்லையே நாங்க ஆரும் அப்பிடிச் சொல்லேல்லயே...! சொன்னேன். திருமணம் , ஆண் , பெண் உறவு , காதல் என அவன் அந்த நேரத்தின் சிறுதுளியை ஒரு விவாதமாகவே மாற்றினான்.

துவங்கிட்டாங்களடாப்பா குறுக்கே புகுந்தான் ஒருவன். பிள்ளை எங்களைப் பாக்க வந்திருக்கு அதோடை கதையுங்கோ பிறகு நாங்க விவாதிப்பம். இன்னொருவன் அந்த விவாதத்தை முற்று வைத்து நிறுத்தினான். அந்த விவாதத்தின் நீளம் அதன் சுவாரசியத்தை ரிசக்க விடாமல் இடையில் நிறுத்தியவனைக் குறுக்கிட்டுச் சொன்னேன். விடுங்கோ கேப்பம் அண்ணையென்ன சொல்றாரெண்டதை....! அந்த விவாதம் வேண்டாமென ஏகமனதாய் தீர்ப்பு வழங்கப்பட்டு புலத்தில் தாயகச் செயற்பாடுகள் பற்றிய விவாதத்தில் வந்து நின்றது கதை.

அந்த நாட்களில் தனக்குக் கிடைத்த புலத்து உறவுகளின் சுவைமிக்க அனுபவங்களை முற்றத்துக் கவிஞன் பகிரத் தொடங்கினார். ஓவ்வொரு தேசப்பற்றாளர்களையும் மதித்து அவர்களது உணர்வுகளையும் மதித்து பலரை நன்றியோடு நினைவு கொண்டார்.

மதியம் தொடங்கிய சந்திப்பு பின்னேரம் 5மணியாகியது. இனி விடைபெறுவோம் என்ற போது வந்திருந்த எல்லோரின் ஞாபகமாகவும் அவர்களது பெயர்களை எழுதித்தருமாறு ஒரு வெள்ளை ரீசேட்டை எழுதக் கொடுத்தேன்.

அழகழகாய் கையெழுத்துக்கள் அத்தோடு சிலர் சில வாசகங்களையும் எழுதினார்கள். நாங்கள் பிரியும் நேரம் ஆளாளுக்கு வரவு சொல்லி சிறப்பான நன்றி அன்ரியின் சமையலுக்கும் சொல்லிப் புறப்பட்டேன். மனம் முட்ட அந்த நண்பர்களின் நினைவுகளை நிறைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கடவையைத் தாண்டினேன்.

சிலர் தொலைபேசியிலக்கம் முகவரியைப் பெற்றுக் கொண்டார்கள். தங்கள் தொடர்பு முகவரிகளையும் எழுதித் தந்தார்கள். அப்போது அனேகம் பாவனையில் இணைய வசதிகள் இருந்த போதும் கடிதங்கள் எழுதுவதையே விரும்பினேன்.

கடிதங்களே காலத்தில் அழியாத பொக்கிசங்கள். தொடர்போடு இருப்போம் எனச் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம். கையசைத்து விடைதந்தோர் கைகுலுக்கிக் காதருகே நினைவு சொல்லி விடைதந்தோரின் பிரிவோடும் அந்த மணல் முற்றம் விட்டு வெளியேறினேன்.

முற்றத்துக் கவிஞன் தனது கையெழுத்தால் சிவத்தமையால் நான் கொடுத்த ரீசேட்டில் அன்பன் புதுவை இரத்தினதுரையென்று எழுதியிருந்தார். பலரது கையெழுத்துக்கள் ஞாபகவரிகள் என 3ரீசேட்கள் அவற்றைப் பத்திரமாய் உடுப்புப்பெட்டியில் பத்திரப்படுத்தினேன்.

ஒருநாள் எல்லா ஞாபகச்சேமிப்புக்களையும் சுமந்து தாண்டிக்குளம் தாண்டிய போது மறித்தார்கள் சோதனை செய்ய வேண்டுமென. அறிவமுது புத்தகசாலையில் வாங்கிய 125புத்தகங்களில் பலதை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அத்தோடு எனது பொக்கிசமாய் காத்துக் கொண்டு போன கையெழுத்துக்கள் தாங்கிய 3ரீசேட்களையும் எடுத்துக் கொண்டார்கள்.

உயிரைப் பிடுங்கியது போலிருந்தது. யாருடனும் படம் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் நினைவுகளை எப்போதும் நிரந்தரம் தருமெனக் காவி வந்த கையெழுத்துக்களையும் சிவிலுடையில் வந்து பரிசோதனை செய்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அவர்கள் யாவரும் இலங்கையரச புலனாய்வுத்துறையினராம். அதிகம் கதைத்தால் அங்கே கொண்டு செல்ல முயன்ற அவர்களது விதிக்கு உட்படாத புத்தகங்களுக்காக எதையும் செய்ய முடியுமென்றான் ஒருவன். சரி கொண்டு தொலையென நினைத்துக் கொண்டு அந்தத் தடையைத் தாண்டினேன்.

காலம் எங்கள் வரலாறு மீது காயங்களோடு துயரங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. தினம் தினம் நாங்கள் நினைத்திருந்த ஊரும் எங்கள் உறவுகளும் சொட்டுச் சொட்டாய் சாகக்கொடுத்து அழுத நாட்களின் துயரங்கள் ஆறாமல் இன்னும் ஒவ்வொரு மனசையும் அரித்துக் கொண்டிருக்கிறது.

எத்தனையோ பேரை இழந்து போனோம். ஏத்தனையோ பேரை இன்னும் தேடுகிறோம். எங்காவது அவன் அல்லது அவள் வாழலாம் வாழுகிறார்கள் என்கிற சின்னச் சின்ன நம்பிக்கைகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இழப்பதற்கு எதுவுமற்று எல்லாவற்றையும் இழந்துவிட்ட வலியின் ரணங்களோடு தோற்றுப்போய் துவண்டு போயிருக்கிறோம்.

காலம் தனது கைகளிலிருந்து எமக்காய் மிச்சம் வைத்துப் போயிருப்பது ஞாபகங்களை மட்டுமே. அந்த ஞாபகங்களில் எம்மோடு வாழ்கிற மண்ணின் புனிதர்களின் முகங்களும் அவர்கள் குரல்களும் இன்றும் கனவு வெளிகளெங்கும் அவர்களின் நினைவில் எங்களைக் கரைக்கிறது.

வன்னிக்குள் வாழக்கிடைத்த அந்த மாதத்தையும் அந்த மண்ணுக்குள் மீளக் கிடைத்த உறவுகளும் நெஞ்சுக்குள் பத்திரமாய்....! எத்தனையோ புதிய உறவுகளையும் இணைத்துத் தந்த அந்த 2003. இனியொரு போதும் திரும்பாத வசந்தமாக மனசோடு பதிவாக...!

மே 2010

Wednesday, October 2, 2013

இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...!

தொலைபேசியழைப்பு வருவதும் தொடர்பு அறுபடுவதுமாக இருந்தது. அந்த அழைப்பு 15வருடங்கள் தொடர்பறுந்து போனவளின் அழைப்பாக இருக்குமென்பதை அறியாத 01.10.2013 இன் தொடக்க நாள்.

நீங்கள் என்னோடை படிச்சனீங்கள் நீங்களும் மேனகாவும் தான் என்னை இயக்கத்துக்கு எடுத்தனீங்கள் என்ரை பேர்.....! இந்த நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ நான் உங்களோடை கனக்கக் கதைக்க வேணும்.

நானிப்ப வேலையில நிக்கிறேன் இரவு எங்கடை நேரம் 9மணிக்குத்தான் வீட்டை போவன் நாளைக்கு பகல் எடுக்கிறனே....? புறவாயில்லை நான் முளிச்சிருப்பன் மறக்காமல் எடுங்கோ.

அவளது குரலில் பதட்டமும் ஏதோவொரு கதையைச் சொல்லத் துடிப்பது போலவும் அவசரமாகச் சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். முளிச்சிருப்பேன் என்ற சொல்லுக்குள் ஆயிரமாயிரம் துயரங்கள் புதைந்து கிடந்தது.

குரலில் அவளை யாரென அடையாளம் பிடிபடவில்லை. வேலை முடியும் வரையும் அவள்தான் நினைவில் மாறி மாறி வந்து கொண்டிருந்தாள்.
யாரோ நான் தேடினதுகளில ஒராளா இருக்கும் இவள் நினைத்துக் கொண்டாள். எனினும் ஏதோ ஒரு உறுத்தல் மனசை அலைக்கழித்தது.

வீடு வந்துசேர இரவு 9.40 ஆகியிருந்தது. தோழி மேனகாவை அழைத்தாள்.
எடி எனக்கிண்டைக்கு ஒரு ரெலிபோன் வந்தது...எங்களோடை படிச்ச மருதா போலையிருக்கு. உண்மையாவோடி நாங்ளெல்லோடி அவளை இயக்கத்துக்கு எடுத்தனாங்கள்...? எங்கை நம்பறைத் தா ! மேனகா அவசரப்படுத்தினாள்.

அவளுக்குக் கால் ஏலாதெல்லோடி...? மேனகாதான் ஞாபகப்படுத்தினாள். நான் நெடுக நினைக்கிறனான் நாங்கெல்லாம் வெளிநாடு ஓடியந்திட்டம் எங்களாலைதான் அவளுக்குக் கால் போனது. இவள் சொன்னாள். நானும் உதைத்தானடி நெடுக நினைக்கிறனான்.

சரி நில்லு இப்பிடியே உன்னையும் சேத்து எடுக்கிறேன் கதைப்பம் சரியோ ? மேனகாவையும் ஒரு அழைப்பில் வைத்துக் கொண்டு இவள் தொடர்பை ஏற்படுத்தினாள்.

முதலாவது அழைப்பிலேயே அவள் மறுமுனையில் குரல் தந்தாள். என்னைத் தெரியுமே ஞாபகமிருக்கோ ? அவள் தன்னை இவர்களுக்கு நினைவுபடுத்த முயன்றாள்.

நீங்க மருதாதானே ? மேனகாதான் கேட்டாள். ஓம் என்னை எல்லாரும் மறந்திட்டியள் என அவள் அழத்தொடங்கினாள்.

இதுகும் நான் யாழ்ப்பாணம் போன இடத்தில ஒராள் தான் நம்பரைத் தந்தது. நீங்கள் ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேக்க கடவுளாணைச் சொல்றன் நான் கடவுளைத்தான் காணிறன் போலையிருக்கு. அவள் அவர்களது தொடர்பு கிடைத்ததையிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மருதாவும் மேனகாவும் இவளும் ஒன்றாகப் படித்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். பாலர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் ஊர்ப்பள்ளியில் படித்த வரையும் 3பேருமே ஒன்றாகவே திரிவார்கள். ஆளாளுக்கு அந்த வயசுக்குரிய குறும்புகள் குழப்படி யாவற்றிலும் 3பேரின் பெயரும் அடிவாங்கியது அதிகம்.

86இல் இவள் 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பிற்கு வெளியூர் பாடசாலைக்குப் போகத் தொடங்க மேனகாவும், மருதாவும் ஊர்ப்பாடசாலையைவிட்டு மாறாமல் அங்கேயே படித்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மாலைநேரங்களில் ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி தோட்ட வெளியில் இவர்கள் விளையாட்டு ஓட்டம் என நட்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஊர்களில் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்க புரியாத அந்த வயதில் இயக்கம் என்றதை இவர்களும் புரிந்து கொண்டார்கள். விடுதலைக்காக பல இயக்கங்கள் திரிந்த அவர்களது ஊரில் இவர்களுக்கு பிடித்த போராட்ட இயக்கம் புலிகள்தான்.

பலாலியை அண்டிய இவர்களது ஊரில் காலையில் உணவு விநியோகத்திற்குச் செல்லும் விமானம் தரையிறங்கச் செல்ல முன்னும் பின்னும் பலாலியிலிருந்து ஏவப்படுகிற குண்டுச் சத்தங்கள் கேட்டே பொழுது தன்னைப் புதுப்பிக்கத் தொடங்கும்.

ஊர்களை உழுது திரிந்த இராணுவம் முகாம்களில் முடங்கிய பின்னர் இத்தகைய வெடியோசைகளே பல உயிர்களை எடுத்துக் கொண்டிருந்தது. இவர்களது ஊரிலும் பலர் காணாமல் போனார்கள்.

தோட்டவெளியில் பயற்றம் தறைகள் மிளகாய் தறைகளில் இருந்தெல்லாம் இவர்கள் போடும் திட்டங்கள் பெரியது. 3பேரும் சேந்து இயக்கத்துக்குப் போக வேணும். ஆமியைக் கொல்ல வேணும் என ஆளாளுக்கு திட்டமிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

87இல் இந்திய இராணுவம் வந்திறங்கி சண்டைகள் ஆரம்பித்து 88இன் தொடக்கம் இவர்களது ஊரில் புலிப்போராளிகள் வலம் வரத் தொடங்கினார்கள். இவர்களது வீடுகளுக்கும் போராளிகள் வரத்தொடங்கிய போது அவர்களுடனான அறிமுகம் விடுதலையின் தேவையை அவர்களது உறவு மூலம் கற்றுக் கொண்டார்கள்.

அப்படி வீட்டுக்கு வந்து போகும் ஒரு போராளியண்ணனிடம் தங்கள் 3பேரையும்  இயக்கத்திற்கு எடுக்குமாறு போய் நின்றார்கள்.
நீங்க முதல் படியுங்கோ படிச்சு இன்னும் கொஞ்சம் வளந்தாப்பிறகு வாங்கோ இயக்கத்துக்கு...! என அவர்களது விருப்பத்திற்கு முற்று வைக்கப்பட்டது. எனினும் 3பேரும் ஒருநாள் இயக்கத்துக்கு போவது ஆமியைச் சுடுவதென்ற கனவை மட்டும் விடவில்லை.

90களின் தொடக்கம் குழந்தைத்தனம் மாறியதாய் நம்பிய 16 வயதை அடைந்தார்கள். இந்தியப்படைகளின் வெளியேற்றம் ஊர்களில் திரிந்த போராளிகள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து போய் நிரந்தரமாய் இவர்களது நெஞ்சங்களிலும் இடம்பிடித்து பலர் 2ம் கட்ட ஈழப்போரில் வீரச்சாவடைந்து போக போராட வேண்டுமென்று எண்ணத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

2ம் கட்ட ஈழப்போரின் தொடக்கம் மேனகாவும் இவளும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். மருதா பயந்தாள். அவளைவிட்டுவிட்டு போராளிகளாகத் தங்களைத் தயார்படுத்தி பயிற்சிக்கென யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு பெண்போராளிகள் முகாமிற்குச் சென்றார்கள். சில வாரங்கள் திருநெல்வேலியில் அமைந்த பெண் போராளிகள் முகாமில் இருந்தார்கள். தேடி வந்த வீட்டாரைச் சந்திக்க மறுத்து ஒளித்தார்கள்.

மருதாவையும் சேர்க்கும் முயற்சியில் ஒருநாள் வென்று மருதாவையும் இருவருமே இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவர்களது களக்கனவுக்கான பயிற்சிக்கான நாளும் வந்தது. பயிற்சிக்கு சென்றவர்களில் ஒருத்தி நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டாள். இன்னொருத்தி கட்டுவன் காவலரணில் கடமைக்குச் சென்றிருந்தாள்.

3பேரும் ஒன்றாகவே போவோம் போராடுவோம் என்றிருந்தவர்களில் ஒருத்தி நோயுற்றாள் , இன்னொருத்தி களத்தில் , மருதாவும் பயிற்சி முடித்துத் தனது முதல் கள அனுபவத்தை ஆனையிறவு ஆகாய கடல்வெளிச் சமரில் சந்தித்தாள்.

ஆயுதப்பயிற்சி இல்லாமலும் தாயகத்துக்கான கடமைகளைச் செய்ய முடியுமென நம்பிக்கை கொடுத்தவர்களின் வழிகாட்டலில் பணிகளில் இணைந்தாள்.நோயுற்று வீடு திரும்பியவள் மீண்டும் தன்னை நாட்டுக்கான பணியில் இணைத்தாள்.

ஆனையிறவுச் சமர்க்காலத்தில்  அகிலன்வெட்டையில் பங்காளியாய் நின்ற போதுதான் மீண்டும் மருதாவைச் சந்தித்தாள். என்னடி நீயிங்கை ? மருதா இராணுவ மிடுக்கோடு சண்டைக்குப் பொருத்தமானவள் போல அவளது நிமிர்வு இவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

களம் யாரையும் எங்கேயும் அழைக்கும். எப்போதும் இலக்கின் வெற்றி தேடிய பயணத்தில் கடமை எல்லோரையும் தனது தேவைக்கேற்ப அழைக்கும் என்பதனை ஆளாளுக்கு வீராப்பாய் கூறிக் கொண்டு பணிகளோடு வேகமாகினர்.

ஆளாளுக்கு பிரிந்து போனார்கள். அவரவரும் தங்களுக்கான பணிகளோடு எப்போதாவது எங்காவது சந்திக்கக் கிடைத்தால் சந்தித்தது மட்டும் தான். பெரும் கனவுகளைச் சிறுவயது முதலே வளர்த்து பெரிய தாக்குதல்களில் பங்கேற்க வேண்டுமென்ற கதைகள் திட்டங்கள் வயது மாற மாற வெவ்வேறு வடிவங்களில் பயணம் தொடங்கியது.

ஓன்றாயே போராடுவோம் என்ற சின்ன வயதுக் கனவை ஒருத்தி ஊடறுத்துக் கொண்டு காரணம் சொல்லாமல் புலம்பெயர்ந்தாள். கடைசியில் மருதா மட்டுமே தொடர்ந்து சொன்னபடி களம் கண்டாள். களமொன்றில் விழுப்பண்ணடைந்து ஒரு காலையும் இழந்தாள்.

காலம் யாரையும் பார்த்துக் காத்திருக்காமல் தன் பயணத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காலத்தோடு 3பேரின் கனவுகளும் வௌ;வேறாகி விதியென்றும் இதுவே வாழ்வென்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போனார்கள்.

ஒன்றாய் திரிந்த மருதா  ,மேனகா நினைவுகளில் வந்து போனாலும் அவர்களை மீளவும் சந்திக்கும் கனவோடு இவள் காத்திருந்தாள். எல்லாமே கனவு போல வாழ்வும் மாறிப்போனது வயதும் ஏறியது. ஆனால் சின்ன வயதில் நேசித்த தாயக விடுதலைப்பற்று மட்டும் எப்போதும் போலவே இதயத்தில் சுகமான சுமையாக....!

2000தொடக்கம் அறுபட்ட தொடர்புகள் கடிதங்களாகத் தேடி வந்து இவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புலம்பெயர்ந்தாலும் நிலம் மறக்காதவர்களுக்கான அழைப்பாக அந்த மடல்கள்....!

அந்த நேரம் தாயகத்துக்கான பணிகளைச் செய்யும் கனவோடு இவள் தன்னையும் இணைத்தாள். மௌனமாக செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபட்டு நிறைவேற்றப்படாத களம் காணும் ஆசையை தற்கால பணிகள் மூலம் ஈடு செய்யலாம் என்ற எண்ணத்தில் நிலம் தாண்டிய புலத்தில்....!

2002 யுத்த நிறுத்த காலத்தில் ஊரை உறவை பழைய நண்பர்களை யாவரையும் காணும் கனவோடு விமானமேறினாள். சில வருட கால இடைவெளி பலவிதமான மாற்றங்கள் இழப்புக்கள் என எத்தனையோ பெரிய வரலாற்றையும் வலிகளையும் சுமந்த ஏ9 நெடுஞ்சாலை வழியே இழந்த கனவுகளை மீளப் பெறும் நினைவோடு போனாள்.

மீண்டும் சந்திக்க விரும்பிய மேனகா, மருதாவை இவள் தேடினாள். மேனகா 1997இல் துண்டு குடுத்து விலகி அரபு நாடொன்றில் இருப்பதாயும் மருதா 1996இல் சண்டையில் காயமடைந்து காலொன்றை முழுதாக இழந்து போனதாகவும் அறிந்தாள்.

மருதா இருப்பதாய் சொல்லப்பட்ட இடங்களிற்கெல்லாம் தேடிப்போனாள். மருதா வேறெங்கோ வேலையில் நிற்பதாகச் சொன்னார்கள். இப்போதைக்கு மருதா நிற்கும் இடத்திலிருந்து வெளியில் சந்திப்பதற்கு வரக்கூடிய சாத்தியம் இல்லையென்று சொன்னார்கள்.

ஆனால் மருதாவை மறக்காத ஒரு தோழி இன்னும் இருக்கிறாள் என்பதனை மட்டும் அவளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றெழுதி அவள் திரும்பி வந்தால் பணியாற்றும் இடமெனச் சொல்லப்பட்ட இடத்தில் பொறுப்பாயிருந்தவரிடம் கொடுத்துவிட்டு புலம் திரும்பபினாள்.

ஏற்கனவே இருந்த தொடர்புகள் உறவுகளைச் சந்திக்கச் சென்று புலம் திரும்பும் போது மேலும் பலரின் நட்புகளைச் சுமந்து கொண்டு இவள் ஐரோப்பா வந்தாள். மருதா இந்தக்கால இடைவெளியில் எவ்வித தொடர்பும் எடுக்கவில்லை.

காலம் எல்லாக் கனவுகளையும் தின்று முடித்து 2009 எதை நினைக்க எதை மறக்க எவரை நினைக்க எவரை மறக்க ? என மனங்களைச் சோர வைத்த காலத்தில் அவள் நேசித்தவர்களுக்காக புலத்திலிருந்து செய்ய வேண்டிய மனிதாபிமானப் பணியை ஆரம்பித்த போது ஆளாளுக்கு அடித்த நக்கலும் நையாண்டியும் எத்தனையோ பொழுதுகள் அழுது கரைத்திருக்கிறாள்.
 ஆயினும் நிலத்தில் இருந்து வருகிற அழைப்புக்களும் குரல்களும் எல்லாவித அழுத்தங்களையும் உடைத்துக் கொண்டு எழ வைத்துக் கொண்டிருந்தது.

மேனகாவும் திருமணமாகி இவள் வாழும் நாட்டிலேயே வாழ்வதாக அறிந்தாள். மேனகா இவளது தொடர்பிலக்கத்தைத் வானொலியொன்றில் அறிந்து அறுந்து போன தொடர்பை மீண்டும் புதுப்பித்தாள். மருதாவை நினைப்பார்கள் ஆனால் அவள் எவ்வித தொடர்புகளும் இல்லாது போயிருந்தாள்.

பழைய நினைவுகளை மருதாவோடு பகிர்ந்தார்கள். இப்போது தங்கள் குடும்பங்கள் குழந்தைகள் பற்றிய விசாரணையில் வந்து நின்றார்கள்.
இப்ப என்ன நிலமையில இருக்கிறாய் ? அதைச் சொல்லன் மருதா என இவள் கேட்டாள்.

என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க நான் இஞ்சை ஏறாத படியில்லையடி...! கோவிலுகள் சேச்செண்டு நான் தினமும் இந்த ஒற்றைக்காலை இழுத்துக் கொண்டு ஓடித்திரியிறதை யாருக்குச் சொல்லியழுறதெண்டு தெரியாமல் நான் துடிச்சனடி....!

நான் பட்ட  துன்பத்தை யாரிட்டைச் சொல்லியாறவெண்டு எத்தினை நாள் அழுதிருப்பன் தெரியுமே ? என்ரை பிள்ளையளும் ஏலாததுகளாப் போட்டுதுகள் கடைசிநேரம் விழுந்த எரி குண்டு பட்டு ஒண்டு போட்டுது மற்றதுகளும் காயங்கள் பட்டு ஏலாததுகள்...மனிசனும் காலும் கையும் இழுத்து படுக்கையில என்னாலை சமாளிக்கேலாதாம் ஏதாவது ஏலுமெண்டா உதவுங்கோ ? நான் உங்கள் ரெண்டு பேரையும் மட்டும்தான் உரிமையோடை கேட்கேலும்.

அவள் கண்ணீரால் தனது கடந்தகாலத் துயர்களையும் நிகழ்காலத் துன்பத்தையும் கழுவிக் கொண்டிருந்தாள். அவளது கதைகள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தது.

தாங்கள் மட்டும் கால் கையெல்லாம் குறைவில்லாமல் ஐரோப்பாவில் வாழ தாங்கள் போராளிகளாக இணைத்த மருதாவும் மருதா போன்ற பலரும் துயரங்களோடு வாழ்வது உறுத்தலாகவே இருக்கும். பலமுறை இவளும் மேனகாவும் அடிக்கடி நினைவுபடுத்திக் கதைப்பார்கள்.

ஒருமுறை ஒரு ஊரில் பல பெண்பிள்ளைகளை போராளிகளாக இவர்கள் சேர்த்தார்கள். சிலர் வீட்டார் போய் அழுததும் ஏதோ தங்களை கட்டாயமாக இவர்களே கொண்டு போனது போல வீட்டாருக்கு போட்டுக் கொடுத்த போது பல அம்மாக்கள் மண்ணள்ளியெறிந்து இவளையும் மேனகாவையும் திட்டினார்கள்.

அந்த மண்ணும் திட்டும் அப்போது பெரிதாக எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த அம்மாக்களின் கண்ணீரை இவள் நினைத்து மனம் குழம்பிப் போவதுண்டு. அதனை மருதாவுக்கும் சொன்னார்கள். இவள் அழுதுவிட்டாள்.

நானொரு நாளும் உங்கள் ரெண்டு பேரையும் மனம் நொந்ததில்லை...! அண்ணையாணைச் சொல்றன் நீங்கள் கூட்டிக்கொண்டு போனதாலைதான் என்ரை கால் போனதெண்டும் நினைக்கேல்ல என்ரை நாட்டுக்கு என்னாலை முடிஞ்ச எல்லாத்தையும் செய்தன் ஆருக்குத் தெரியும் இப்பிடி முடியுமெண்டு....! அண்ணையிருந்தா நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கமாட்டம் இதைத்தான் நெடுக நினைக்கிறனான்.

இந்தா இப்ப நானிருக்கிற காணியில இருந்து 500மீற்றர் தூரத்தில மாவீரர் துயிலுமில்லம் இருந்த நிலம் இருக்கு....நினைச்சா நெஞ்சு வெடிக்கும்...எல்லாத்தையும் அழிச்சுத் துடைச்சு இப்ப குப்பை கூழம் கொட்டுறதும் மண் கொட்டுறதும்....கடவுளே அதுகளை நினைக்கத்தான் தாங்கேலாத வேதனை. யரிட்டைப் போய் கேக்கேலும் எப்பயெண்டாலும் ஒருநாள் வருமெண்ட நம்பிக்கையில இருக்கிறம்....!

மாவீரர்கள் பற்றி அவள் சொல்லத் தொடங்கிய போது குரலெடுத்துக் கத்தியழுதாள். தன்கையால் விதைத்த தோழமைகள் பற்றி அவர்கள் கனவுகள் பற்றியெல்லாம் சொல்லிச் சொல்லியழுதாள்....!

குடும்பம் முழுவதும் காயமுற்று ஊனமாகி அன்றாட உணவுக்கே வழியற்றுப் போன நிலமையிலும் தாயகத்தின் மீதான காதலும் காலம் அழைத்தால் மீண்டும் கடமைக்காக காத்திருக்கிற அவளது உறுதியும் எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த இவர்களை ஆச்சரியப்பட வைக்கவில்லை. தங்கள் கையறு நிலமையே உறுத்திக் கொண்டிருந்தது.

இரண்டரை மணித்தியாலம் கதைத்தும் முடியாத அவர்களது பல வருடங்களின் நினைவுகள் மருதாவின் இன்றைய நிலமையையே எண்ணிக் கொண்டிருந்தது.

நாட்டுக்காகத் தனது குடும்பத்தையும் ஊனமாக்கி இன்னும் உறுதி தளராத மருதாவுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணமே இருவர் மனசிலும் ஓடத் தொடங்குகிறது.

01.10.2013

Tuesday, October 1, 2013

தேசத்திற்கு விலைதந்த மகளுக்கு தேவையானது 5 பவுண்கள் மட்டுமே.

தேசத்தின் விடுதலைக்குக் கொடையளித்தவர்கள் பலருக்கு முகமில்லை முகவரியில்லை பெயரில்லை அவர்களுக்கு எந்தப் பெருமையும் இல்லை. அநாமதேயமாய் அவர்களது வரலாற்றை அவர்கள் பெற்றுத் தந்து வெற்றியும் அவர்களைப் பெற்ற தேசமும் மட்டுமே அறியும் கதைகள். ஈகத்தின் உச்சமாக இந்த மனிதர்களின் கொடை எங்கள் தேசத்தில் எழுதப்பட்ட பலரது வரலாற்றோடு வரலாறாக....!

இப்படித்தான் ஒரு வெற்றியைப் பெற்றுத்தர அந்தக் கரும்புலி தான் நேசித்து ஊரை உறவுகளை விட்டு விடுதலையமைப்பில் இணைந்து கொண்டது. அந்தப் போராளி ஒருநாள் கரும்புலியாகி தனது ஈகத்தின் உச்சத்தையடையும் நாளொன்றை காலம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை.

தேவைகளும் கடமைகளும் தமிழர் வாழ்நிலங்களுக்கும் அப்பால் இருந்ததை காலம் உணர்த்தியது. சிறப்புப் பணிக்கான பயிற்சிகள் தயார்படுத்தல்களும் கடினமானவை. அந்தக் கடினத்தையெல்லாம் அந்தக் கரியபுலி இலகுவாய் பயின்று தனது இறுதிப்பயணத்தையடையப் புறப்பட்டுத் தனது இலக்கமைந்த முற்றிலும் மாறுபட்ட சூலுக்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.

தனக்கான தேவைகளைச் சமாளிக்க வேலையொன்று எடுத்துக் கொண்டு தாயகத்தின் பணத்தில் தனக்காக ஒரு துளியையும் சிந்தாமல் இலக்கைத் தேடியே தினமும் பயணிக்கத் தொடங்கியது.

அந்தத் தியாகத்தின் இமயத்தைக் காத்துக் கவனித்து இலக்கையடையும் நாள்வரையிலும் பாதுகாத்த குடும்பமொன்றின் ஈகம் எல்லா ஈகங்களைவிடவும் உயர்ந்து நின்றது.

2சிறிய குழந்தைகளின் பெற்றோர்களான அவர்கள் தேசத்தின் வெற்றிக்காக எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்கவிருக்கும் கொடுமையையும் மறந்து தங்கள் தேசக்கடன் முடித்தார்கள்.

சின்னஞ்சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றவர்கள் எத்தனை கனவுகளோடு வளர்ப்பார்கள்...! அதே போன்று வீட்டில் அந்தக் கரும்புலியை தங்கள் மூத்த குழந்தையாக ஏற்றுக் கொண்டார்கள்.

இலக்கின் தூரம் இதோ அதோ என்றும் பின்னர் இல்லை இன்னொரு தருணம் என்றும் இலக்குத் தவறி துயரோடு திரும்பும் தேசத்தின் சொத்தான மூத்த குழந்தையின் வெற்றியையே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இறுதியாக தனது மூத்த பிள்ளைக்கு தானே வெடிபொருளை அணிவித்து வெளியில் அறியாமல் அலங்கரித்து வழியனுப்பும் போது கசிந்த கண்ணீரை மறைத்து அந்தக் கரும்புலியை வழியனுப்பி வைத்தார்கள்.

போன காரியம் வெல்லும் துணிவோடு அந்தப்புலி புறப்பட்டு இறுதிவிடை கொடுத்து அந்த முகவர் குடும்பத்தின் கைகளை விட்டு விலகித் தன் இலக்கை நோக்கிப் பயணித்தது.

மனசுக்குள் மூண்டெரிந்த நெருப்பில் விடியும் தேசத்தின் ஒளிக்கதிராகத் தன்னை வடிவமைத்து இலக்கையடைந்த போது எழுந்த பெரு நெருப்பில் அந்த வீரப்புலி தன்னைத் துகள்களாக்கி அன்னிய நிலத்தில் தன்னைக் கரைத்துக் காவியமாக்கி தேசத்தின் விடுதலையின் கனவோடு காவியமான முகமற்றவர்களோடு சேர்ந்து கொண்டது. காலம் ஒருபோதும் இந்தக் கரிய வேங்கைகளைக் கண்டு கொள்ளவே போவதில்லை.

உலகம் அந்த நாளை ஊடகங்கள் வாயிலாக உற்றுப் பார்த்தது. அவலத்தைத் தந்தவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுத்த திருப்தியில் தன்னைத் தீயாக்கிக் கரைத்த கரும்புலியின் கதையும் அன்றோடு வரலாற்றில் தனது ஈகத்தை மௌனமாக எழுதிக் கொண்டது.

வெளிநாட்டு நிபுணர்கள் ஓடிப்போயிறங்கினார்கள். தடயங்களை அறிய தடய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆராய்ந்தார்கள். யாரென்ற அடையாளம் காணப்படாது சிதைந்து போன உடல் துணிக்கைகளை எடுத்துக் கொண்டு பறந்தது மேற்குலக நாடொன்று.

அந்தப்பெரிய வெற்றியின் துணையாக நின்று கடமை புரிந்த முகவரின் குடும்பம் எதிர்பாராத நாளொன்றில் எங்கள் வாழ்வை அழித்தவர்களால் குடும்பத்தோடு சுற்றிவழைக்கப்பட்டார்கள். வாழ்வில் இனி மீள்வில்லையன்ற தருணம் அது.

எதுவுமறியத வயதுக் குழந்தைகள் யாருமற்ற அனாதைகளாகினர். உலகில் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்த கொடுமையை எந்தக் குழந்தையும் பெறக்கூடாது. ஆனால் அந்தக் குழந்தைகள் உலகில் எந்தக் குழந்தையும் அனுபவிக்காத கொடுமைகளைத் துயரங்களையெல்லாம் அனுபவிக்கத் தொடங்கியது.

உறவு நட்பு சுற்றம் என்ற எல்லாரின் இயல்புகளையும் அந்தக் காலமே உணர்த்தியது. யாரும் பொறுப்பேற்க முன்வராத நிலமையில் அந்தப் பிஞ்சு வயதில் அந்தக் குழந்தைகள் அனாதையாகி....அனாதையில்லமொன்றில்....!
காலங்கள் ஓடி அந்தப் பிஞ்சுகள் இப்போது திருமண வயதில் வந்து நிற்கிறார்கள். ஒரு வெற்றியின் வேராக நின்ற அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு யாராலும் மீட்கப்படாத இடமொன்றில் அனாதரவாக....!

குழந்தைக்காலம் முதலான அனாதை வாழ்விலிருந்து மீளக்கல்வியில் முன்னேறினாலும் பெற்றோரின் கடந்த காலச் செயற்பாட்டைக் காரணம் காட்டி எங்குமே தடையே அந்த இளவயதுப் பிள்ளைகளுக்கு இடைஞ்சலாக....!

வழியெதுவும் இல்லையென்ற நிலமையில் யாரோ ஒரு உறவின் அழைப்பில் தாய்நிலத்தைவிட்டு அந்தப் பெண்பிள்ளை அயல்நாட்டிற்கு அழைக்கப்பட்டாள். அந்தக் கருணையால் அந்தப் பெண்பிள்ளைக்கு திருமண ஒழுங்கொன்று நிச்சயமாகியிருக்கிறது.

அவளது கடந்த காலத்தைக் கேட்கிற எல்லோருமே பின்னே தள்ளி நிற்க எல்லா உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு அவளுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. அந்த நாட்டு வளக்கப்படி திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண் வீட்டிலிருந்தே பாத்திர பண்டங்கள் முதல் அனைத்தும் சீதனமாக வழங்கப்பட வேண்டுமாம்.

ஆதரவு கொடுத்து அந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்த கருணையாளனால் பாத்திர பண்டம் ஆடைகள் எல்லாம் தன் இயல்புக்கு மீறி ஒழுங்கு செய்து அப்பாடா என நிமிர்ந்த போது மேலதிகமாக எதிர்பார்க்கப்படும் 5பவுண் நகையை எங்கேயும் பெற முடியாத நிலமையில் இருக்கிறது.

தற்போது பவுண் போகிற விலையில் 5பவுண் கொடுப்பதென்பது பெரிய சவாலாக...! அந்தப் பிள்ளைக்கும் அவளது கல்விக்குமென உதவிக் கொண்டிருந்தவர்களை அழைத்துத் தனது இயலாமையை அவளும் அந்த வாழ்வை அவளுக்கு அமைத்துக் கொடுக்க உரிய குடும்பமும் முயல்கிறது. சிறுவயது முதலே தனிமையும் அனாதை வாழ்வுமான தனக்கு கிடைத்த புது உறவுக்கு 5 பவுணைத் தந்துதவுமாறு மன்றாடுகிறாள்.

அக்கா நான் உங்களுக்கும் மகள் தானே ? எனக்கு இவ்வளவு காலம் உதவினீங்கள் எங்களுக்கு முகம் தெரியாமல் உதவி செய்யிற அண்ணா அக்காட்டை கேளுங்கோ....! தனிச்சு வாழ்ந்து வாழ்க்கையில நான் பட்ட துன்பம் எவ்வளவோ கொடுமையானதக்கா....! எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கோ அக்கா....!

அந்த 23வயது மகள் கண்ணீரோடு தனது திருமணத்துக்குத் தேவைப்படும் 5பவுண்களையும் தந்துதவுமாறு வேண்டியுள்ளாள். திருமணம் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இந்த ஒருமாத இடைவெளியில் அவளுக்கு 5பவுண் கிடைத்தாலே அவளுக்கு வாழ்வு....!

பிஞ்சு வயதில் அனாதையாய் பெற்றவரைப் பிரிந்து தனித்து ஒரு பெண்ணாய் இதுவரை போராடி தாயக விடிவுக்காய் அவள் இழந்ததை இன்றுவரையும் மீள முடியாத துயரோடு அவள் அழுகின்ற பொழுதுகளை மாற்ற 5பவுண் போதுமென்றால் அதைக் கொடுக்க ஆரிடம் முறையிடுவது ?

காத்து வளர்த்த தேசமில்லை 30வருடத்துக்கு மேலாக ஒரு இனத்தின் வாழ்வையும் அதன் வரலாற்றையும் காத்துப் போராடிய தேசத்தின் தலைவனில்லை. அந்தத் தலைவன் நம்பிய தேசிய இனம் மட்டுமே இன்று இந்த மகளுக்குப் புதுவாழ்வை வழங்க வேண்டிய கடமையில் இருக்கிறது.

மகளே இந்த ஏழை அம்மாவிடம் உனக்குத் தர எதுவுமேயில்லை. உனக்காக உனது நிலமையை இந்த உலகில் வாழும் கருணையாளர்களிடம் எடுத்துச் செல்லவே முடியும். உனக்காய் உனது வாழ்வுக்காய் உலகில் வாழும் கோடித் தமிழர்களில் யாராவது நிச்சயம் கைதருவார் என் நம்பிக்கையில்.....!

01.10.2013