Monday, December 31, 2012

கப்டன் றோய் 22 வது வருட நினைவுகளில்....!

"ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே....இசைநெஞ்சே"  இதுவொரு சினிமாப்பாடல். இந்தப்பாடல் போல பலரது நினைவுகளை பல பாடல்களும் அவர்கள் விரும்பிக் கேட்ட அல்லது விரும்பிப் பாடியவையும் நினைவுகளாய் தந்த ஞாபகங்கள் எல்லோருக்குமே இருக்கும்.

அந்த நினைவுகள் பலரது இழப்புகளை அவர்களது தியாகங்களை வரலாற்றில் பதித்து விட்டுச் சென்ற கதைகள் ஆயிரம். அத்தகையதொரு நினைவைத் தந்து சென்ற ஒரு மாவீரனை நினைவு தருகிற பாடல் :-
'வானுயர்ந்த காட்டிடையே
நான் இருந்து பாடுகின்றேன்
வயல் வெளிகள் மீது கேட்குமா-இது
வல்லை வெளி தாண்டிப் போகுமா
வயல் வெளிகள் மீது கேட்குமா'

இந்தப்பாடல் எனக்கு அறிமுகமான காலம் இந்திய இராணுவகாலம். ஈழத்தில் இந்தியப்படைகள் ஆக்கிரமித்திருந்த காலங்களில்  விடுதலைப்புலிப் போராளிகள் ஊர்களில் ஒவ்வொரு வீடுகளின் பிள்ளைகளாகவும் பிரியமானவர்களாகவும் அவர்களைக் காப்பாற்றிய கோவில்களாகவும் பல ஊர்கள் இருந்திருக்கிறது. அத்தகையதொரு காப்பிடமாக எனது ஊரும் இருந்திருக்கிறது.

பனைமரக்கூடல்களிலும் தோட்டங்களில் பசுமைவிரித்த மறைவுகளிலும் போராளிகள் உறங்கிய காலங்களில் எங்கள் ஊருக்குள் வந்து எங்கள் ஊரின் பிள்ளையாக வாழ்ந்த கப்டன் றோய் என்ற மாவீரனை எங்களுக்கு ஞாபகமாய்த் தந்த பாடல் இது.

இப்பாடல் தேனிசை செல்லப்பாவின் குரலில் பாடப்பட்டிருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்தப்பாடல் எனக்குள் நினைவில் நிறுத்தியிருப்பது றோயண்ணாவின் குரலையே.

அது 1989 – 1990 காலப்பகுதி. இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளே ஊர்களை ஆண்டவேளை. சயிக்கிள்களில் சாரம் கட்டிய புலிகள் உலாவிய காலமது. பெரும்பாலும் இரண்டு பேராகவே சயிக்கிளில் வருகிறவர்களின் கைகளில் இன்னொரு சாரத்தால் அல்லது உரப்பையால் மூடிமறைத்தபடியிருக்கும் துப்பாக்கி. உறக்கம் மறந்த விழிகளில் தெரிகிற பசிக்களைப்பும் நித்திரைக்களைப்பும் போக நம்பிக்கையான வீடுகளில் சிலமணிகள் உறங்கிவிடுகிற அந்த உறங்காத கண்களைக் காவல் காக்கிற வீடுகளில் அவர்கள் அப்போதைய கடவுளர்கள்.

ஒரு இரவு திடீரென நாய்கள் குரைக்க எங்கள் சமாதிகோவிலடி வீடுகளில் மெல்லிய அழுகைச் சத்தங்களும் ஆரவாரமுமாக இருந்தது. அம்மம்மாவோடு ஒட்டியிருந்த என்னை விட்டுவிட்டு அம்மம்மா கதவைத் திறந்து அடுத்தவளவில் இருந்த சின்னம்மா வீட்டை எட்டிப்பார்த்தா. அதற்கடுத்த அன்ரி வீட்டிலிருந்து அன்ரியின் பிள்ளைகள் அழுவது கேட்டது. அன்ரியும் பிள்ளைகளும் சின்ன அம்மம்மாவும் பாய்களோடு சின்னம்மா வீட்டுக்குள் வந்தார்கள்.

அன்று புதிதாக வந்திருந்த போராளிகளில் 20பேர்வரையில் எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்து அன்றைய இரவு அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். எப்போதுமே இறஞ்சி எதனையும் எங்கள் இனத்திடம் பெறமுடியாத நிலமை. அன்றும் அந்தப் போராளிகளின் கெஞ்சல் எதுவும் எடுபடாது போக கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குறித்த சில போராளிகள் புகுந்தார்கள்.

திடீர் திடீரென வருகிற இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவோமென்ற பயத்தில் அவர்களை ஏற்க மறுத்தவர்களின் கதைகளை உள்வாங்காமல் வெற்று நிலத்தில் படுக்கையை விரித்தார்கள்.
பின்வீட்டிலிருந்து அத்தை ஓடிவந்தா. காரணம் எங்கள் வீட்டுக்குள்ளும் 3போராளிகள். 2பேர் மலேரியாக்காச்சலோடு. அன்று பயத்தில் எல்லா வீடுகளும் சிவராத்திரி நித்திரை முளிப்பாகவே இருந்தது.

காலமை போயிடுவார்கள் என்ற நினைப்பும் போய் அத்தையின் வீட்டில் மலேரியாவோடு இருந்த போராளிகளுக்கு அன்று பகல் 11மணிவரையும் சுடுதண்ணீரும் குடுக்காமல் அத்தை விரதமிருந்தா.  அன்று காலையில் குப்பிளான் சந்திக்கு தெற்காக இந்தியப்படைகள் சுற்றிவழைத்து தேடுதலில் ஈடுபட்டார்கள். வடக்குப்பக்கம் வந்தார்களானால் எல்லா வீடுகளும் சுற்றிவழைக்கப்பட்டாலென்ற பயம் எல்லாருக்கும். தம்பியவை எப்ப போவியள் ? இதுதான் அத்தையின் தொடர் கேள்வி.

அப்போதான் உயர்ந்த மெல்லிய உருவமாக முதுகில் துப்பாக்கியைக் கொழுவியபடி வந்தார் றோயண்ணை. மலேரியாவில் இருந்த இருவருக்கும் குளிசை கொடுத்தார்.

அதற்கு மேல் அத்தை கல்லாயிருக்காமல் தேனீர் ஊற்றிக் கொடுத்து பாணும் வாங்கி வந்து குடுத்தா. இனி அவர்கள் எங்கள் பிள்ளைகள் என்ற நிலமைக்கு ஒவ்வொரு வீடும் தங்களை நம்பி இரவு அடாத்தாக புகுந்த போராளிகளை மறுநாள் உறவாக ஏற்றுக் கொண்டார்கள். அத்தோடு றவியண்ணாவும் (மாதகல் புலனாய்வுப்பிரிவு) வந்திருந்தார். றவியண்ணா 1990இல் விபத்தில் சாவடைந்தார்.

அன்று எங்கள் வீட்டில் காலடி வைத்த றோயல் என்ற போராளி எங்களுக்கு றோயண்ணாவாகினார். பாடக்கொப்பிகளில் தனது அழகான கையெழுத்தால் பெயர் எழுதிவிடுவார்.

தியாகி திலீபன் அவர்கள் சொல்லிச் சென்ற 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்' போன்ற வசனங்கள் உட்பட பல போராளிகளின் நினைவுகள் தாங்கிய வசனங்களை ஓவியம் போல கொப்பிகளில் வரைந்து விடுவார்.

அயலில் உள்ள வீடுகளிற்கெல்லாம் போய்வருகிற நேரங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பிள்ளைகளின் கொப்பிகளின் கடைசி அல்லது கடைசிக்கு முதல் பக்கத்தில் றோயண்ணாவின் கையெழுத்தில் ஏதாவதொரு வசனமாவது இருக்கும். அந்த வசனங்கள் எல்லாமே போராளியொருவனின் நினைவாக அல்லது அவனது நினைவுக்கல்லாக றோயண்ணா கீறிய ஓவியமாகவுமே அமைந்திருக்கும்.

றோயண்ணாவின் கையெழுத்தை எனது கொப்பிகளில் பார்த்துப் பார்த்து நானாகவே அந்த அழகான கையெழுத்தின் சாயலில் எனது எழுத்தை மாற்றி எழுதப்பழகினேன். ஓரளவு றோயண்ணாவின் எழுத்தா என மற்றவர்கள் கேட்கும்படி எனது கையெழுத்தினை மாற்றிக் கொண்டேன்.

கவிதைகள் மீது ஈடுபாடு கொண்ட றோயண்ணா தனது கவிதைகளையும் கிடைக்கிற கொப்பிகளில் எல்லாம் எழுதிவிடுவார். எனது சமூகக்கல்வி , தமிழ் கொப்பிகள் றோயண்ணாவின் கவிதைகளையும் தாங்கியிருக்கிறது.

முதல் முதலில் இயக்கப்பாட்டு கேட்டது கூட றோயண்ணா கொண்டு வந்த களத்தில் கேட்கும் கானங்கள் ஒலிநாடாவில் தான். சுற்றிவர நின்ற இந்திய இராணுவத்தின் காதுகளுக்குக் கேட்காமல் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்கள் எங்கள் மனங்களில் பதியமானதும் றோயண்ணாவினால்தான்.

இப்படி எங்கள் ஊரில் வாழ்ந்த எல்லாருக்குள்ளும் றோயண்ணாவின் ஞாபகம் எங்கோவொரு மூலையில் நிச்சயம் ஒட்டியிருக்கும். இந்திய இராணுவத்தின் கண்களுக்கால் தப்பித்து றோயண்ணாவும் அவருடன் வாழ்ந்த போராளிகள் பலருக்கும் அந்த நெருக்கடியான காலத்தில் கிடைத்த அனுபவங்கள் நிறைய.
அத்தகைய ஒரு அனுபவத்தை றோயண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார்:-
குப்பிளான் சந்தியிலிருந்து ஏழாலை செல்லும் வீதியில் முதலாவதாக பெரியசங்கக்கடையின் அருகால் வடக்காகப் போகிற சொக்கர் வளவுப்பிள்ளையார் கோவிலடிக்குக் கிட்டவான வீடொன்றில் நித்தியகல்யாணி மரங்கள் அதிகமாக இருந்தது.

கோட்டார்மனைக்கால் சொக்கர்வளவுப்பிள்ளையார் பின் வீதியை அடைந்த றோயண்ணாவிற்கு அங்கே இந்திய இராணுவம் படுத்திருந்தது தெரியாது. திடீரென நிலமையை உணர்ந்த றோயண்ணாவிற்கு தப்பிக்க காப்பிடமாய் அமைந்தது அந்த வீடொன்றில் இருந்த நித்தியகல்யாணி மரமொன்றே.
கையில் இருந்த தனது ஆயுதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை. ஏதிரி கண்டுவிட்டால் தன்னை அழித்துக் கொள்ள சயனைட்டையும் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்த இந்திய இராணுவம் திடீரென மறைந்த றோயண்ணாவையே தேடிக் கொண்டிருக்க பகைவரே நினைக்காத வகையில் தனது காப்பிடத்தை ஒரு நித்தியகல்யாணிக் கூடலுக்குள் படுத்திருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

இராணுவம் முழுமையாக ஊரைவிட்டு புன்னாலைக்கட்டுவன் முகாமுக்குப் போய்விட்டதாக உறுதியாகி வீதியில் ஆட்கள் நகரும் வரை 6மணித்தியாலங்களுக்கு மேலாக நித்தியகல்யாணி மரத்தின் கீழ் படுத்திருந்து வெளியில் வந்த போதுதான் அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவைக் கண்டார். குடும்பத்தோடை செத்திருப்பம் தப்பீட்டம் என சொக்கர்வளவுப்பிள்ளையாரை வேண்டிய அந்த வீட்டு அன்ரி றோயண்ணாவுக்கு தேனிரும் உணவும்  கொடுத்து அனுப்பி வைத்தார்.

எத்தனையோ இடர்களையும் சிரமங்களையும் தாங்கிய இந்திய இராணுவ காலம் முடிவுற்ற 1990. அப்போது விடுதலைப்புலகளின் மகளீர் அணிக்கான போராளிகள் சேர்ப்பு றோயண்ணா மூலமே முதலில் எங்கள் ஊரில் தொடங்கியது. றோயண்ணாவும் அவரது தோழர்களும் இருக்கின்ற புளியடியில் வருகிற வாகனங்களில் ஏறிச்சென்ற ஏழாலை , மல்லாகம் , சுன்னாகம் இருந்தெல்லாம் இயக்கத்தில் சேர வந்த பிள்ளைகளை போராளிகளாக்கியது றோயண்ணாவின் ஆழுமையும் முயற்சியுமே.

அப்போது யாழ்நகர் பகுதி , கோண்டாவில் ,திருநெல்வேலி, நல்லூர் என விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் உருவாகியிருந்தது. திடீரென ஒருநாள் எங்கள் ஊரிலிருந்த போராளிகள் காட்டுக்குப் போகப்போவதாகவும் புதிய போராளிகள் வரப்போவதாகவும் செய்தி வந்தது. செய்தி வந்த மறுநாள் மதியம் றோயண்ணா உட்பட அங்கிருந்த அனைவரும் எங்களைவிட்டு போய்விடப்போவதாக தயாராகினார்கள். ஒவ்வொரு வீடாக போய் நன்றி சொல்லி விடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

'அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்கு புலிகள் நன்றி.' அன்ரி வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டு பாடியது கேட்டது. அந்தக் குரல் வேறு யாருமல்ல எங்கள் நெஞ்சங்களில் நிறைந்த றோயண்ணாவே.
எங்களைவிட்டுப் போகிற அவர்களின் பிரிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்கள் போய்விடப்போகிற நேரத்தை தள்ளிப்போட முடியாது நேரம் மாலையாகியது.

அன்று எதையும் கதைக்க முடியாத மனநிலை எல்லோருக்கும். ஏதாவது எழுதித்தாங்கோ எனக் கொடுத்த கொப்பியின் பின் தாளில் இப்படித்தான் ஓவியம் போல சிவப்பு , நீல நிறங்களால் எழுதியிருந்தார்.
நான் சரியும் மண்ணில் நாளை
பூ மலர்ந்து ஆடக் கூடும்
தேனெடுக்கும் ஈக்கள் கூட்டம்
தேடி வந்து பாடக் கூடும்
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க் கூடுமோ?

நாளை தமிழ் ஈழ மண்ணில்
நாங்கள் அரங்கேறக் கூடும்
மாலை கொடியோடு எங்கள் மன்னன்
சபை ஏறக் கூடும்
இந்த நிலை வந்து சேருமோ-அதை
எந்தன் விழி காணக் கூடுமோ.....
எந்த நிலை வந்து சேருமோ-அதை
இந்த விழி பார்க்க கூடுமோ?

அடியில் அன்புடன் றோயண்ணா என தனது கையெழுத்தால் எழுதித்தந்தார். ஏற்கனவே என்னிடமிருந்த அந்தப்பாடலின் ஒலிநாடாவைத் திருப்பிக் கேட்க மறந்தாரோ தெரியாது நானும் சொல்லவில்லை. றோயண்ணாவின் ஞாபகமாய் கொடுக்காமல் வைத்துவிட்டேன்.

அவர்களை ஏற்றிப்போக வாகனம் வந்தது. றோயண்ணா போகும்போதும் எப்போதும் பாடுகிற „'வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் „'பாடலைப் பாடிக்கொண்டே வெளிக்கிட்டார். எங்களோடிருந்த உறவுகளை இழந்தது போல றோயண்ணாவும் அவரோடு கூடப்போனவர்களும் ஊரைவிட்டுப்போன பின்னர் புதியவர்கள் வந்தார்கள். ஆனால் பிரிந்து போன பழையவர்களின் ஞாபகங்களைத் தருகிறவர்களாக அதே உறவு சொல்லிய அழைப்புகளோடு....!

அவர்கள் தான் றோயண்ணா இப்போது நல்லூரடியில் ஒரு முகாமில் இருப்பதாகச் சொன்னார்கள். இந்த இடைவெளியில் சிலதடவைகள் றோயண்ணா எங்கள் ஊருக்கு வந்து போனார். பிறகு வரவேயில்லை. அதற்குள் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியிருந்தது. 1990 யூன் 16 எனது பிறந்தநாளில் நாங்கள் மீண்டும்; இடம்பெயரத் தொடங்கினோம். எங்களோடு சிலகாலம் வரை வாழ்ந்து எங்கள் வீடுகளில் சகோதரர்களாக பிள்ளைகளாக வாழ்ந்தவர்களே எங்கள் ஊரையும் காக்கும் புனிதப்போரில் காவலரண் அமைத்து கடமையில் இருந்தார்கள்.

மீண்டும் றோயண்ணா வசாவிளான் , கட்டுவன் ,குரும்பசிட்டி பகுதிகளில் கடமைக்கு வந்திருந்தார். பலாலியிலிருந்து முன்னேறிவரும் இராணுவத்தை எதிர்த்து சண்டையிடும் களவீரனாக மாறியிருந்தார். களங்களில் நிற்கின்றவர்களின் வாழ்வும் உத்தரவாதமில்லாதது. அவர்களுக்காக சாமிகளிடம் நேத்தி வைத்து அவர்கள் வாழ செய்த பிரார்த்தனைகளை அந்தச் சாமிகள் மட்டுமே அறியும்.

இப்போது றோயண்ணா சண்டைக்காரனாக....1990 தீபாவழி நாளில் இராணுவம் பலாலியிலிருந்து பெருமெடுப்பில் முன்னேறத் தொடங்கியது. றோயண்ணாவும் அவர்போன்ற பலநூறு போராளிகளும் இரவுபகல் பாராமல் அமைத்த தொடர் பதுங்குகுளிகளுக்கு பின்புறமாக இராணுவத்தினரின் துப்பாக்கிகள் இயங்கியது. சென்றியிருந்த போராளிகளைத் தாண்டி சில நூறுமீற்றர்கள் முன்னுக்கு வந்து உள்ளிருந்தவர்களை வளைத்ததில் பலர் காயமடைந்தார்கள் வீரச்சாவணைத்தார்கள். அத்தகைய பலருள் றோயண்ணாவும் கடும் காயமுற்று மானிப்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

றோய்க்கு காயமாம்....செய்தி காற்றாய் றோயண்ணாவை நேசித்த எல்லோரையும் சென்றடைந்தது. மானிப்பாய் மருத்துவமனையில் சென்று பார்த்த போது றோயண்ணா பேச்சு மூச்சின்றிக் கிடந்தார். எங்கள் முன் உலாவிய அழகன் றோயண்ணாவின் அழகிய முகம் வெளுறியிருந்தது. உயர்ந்த அந்த உருவம் என்றும் கண்ணுக்குள் நிறைகிற சிரிப்பு எல்லாம் ஒடுங்கி ஒற்றைக்கட்டிலில் விழுந்து கிடந்தது.

நாட்கள் செல்லச் செல்ல றோயண்ணா உயிர்தப்பும் நம்பிக்கையும் குறைந்து கொண்டு போனது. றோயண்ணா யாழ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது யாழ் மருத்துவமனைக்கு போராளிகளைப் பார்வையிட எல்லோரையும் புலிகள் அனுமதிப்பதில்லை. அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்தியசாலைக்கு எதிர் வீதியில் சற்றுத் தூரத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் பதிவு செய்தே போக முடியும். பதிவுப் பிரச்சனையால் அடிக்கடி போக முடியாது.

அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு 4தடவை றோயண்ணாவை பார்த்திருக்கிறேன். 4வது முறை போனபோது றோயண்ணாவுக்கு படுக்கைப்புண் வந்துள்ளதாகச் சொன்னார்கள். அந்த முறை றோயண்ணாவின் ஒரு அண்ணன் றோயண்ணாவை பராமரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் றோயண்ணா தங்கள் வீட்டின் கடைக்குட்டியென்றதையும் அவர்மீதான தங்கள் குடும்பத்தின் நம்பிக்கையையும் அந்த அண்ணா சொன்னார்.

வசதியான குடும்ப வாழ்வு உயர்தரம் வரையான படிப்பு மேற்கொண்ட படிப்பைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் பல்கலைக்கழகம் போயிருக்க வேண்டிய றோயண்ணா தாயகக்கனவோடு போராளியாகி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கேயோ பிறந்த எங்களோடு உறவாகி அன்று பேச்சின்றி மூச்சின்றி நினைவுகள் தவறிக் கிடந்ததைப் பார்க்க அழுகைதான் வந்தது.
அம்மம்மா அந்த அண்ணாவிடம் றோயண்ணா பற்றி கதைத்துக் கொண்டிருந்தா. றோயண்ணாவின் தலைமாட்டில் நின்றபடி றோயண்ணா றோயண்ணா என அழைத்தேன். சின்ன அசைவு தெரிந்தது. ஆனால் கண்திறக்கவேயில்லை. கத்தியழ வேண்டும் போலிருந்தது. எனினும் உயிர் தப்புவாரென்றே உள் மனம் நம்பியது.

பார்வையாளர்கள் நேரம் முடிந்து எல்லோரையும் வெளியேறும்படி அறிவித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அசையவே முடியாதிருந்தது. அம்மம்மா வரும் வழியெங்கும் றோயண்ணா பற்றியே சொல்லிக் கொண்டு வந்தா. றோயண்ணா அதிகம் பகலில் இருப்பது எங்கள் பிள்ளையார் தேரடிதான். அந்தப் பிள்ளையார் றோயண்ணா காப்பாற்றுவாரென அம்மம்மா நம்பினா.

5வது முறையாக றோயண்ணாவை பார்க்க தோழி மேனகாவோடு ஏழாலை களவாவோடை அம்மனிற்குச் செய்த அரிச்சனை விபூதியுடன் போய் அனுமதிக்கு பதிவு செய்யக் காத்திருந்த போது அங்கே பதிவு செய்யும் போராளி சொன்னான் றோயண்ணா மேலதிக மருத்துவத்திற்காக இந்தியா கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக. இந்தியாவிலிருந்து றோயண்ணா சுகமாகி வருவரென்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

31.12.1990 இரவு புலிகளின் குரல் இரவுச்செய்தியில் கப்டன்.றோய்
வீரமரணம் என்ற செய்தியை வாசித்தார்கள். மீண்டும் வருவாரென்ற நம்பிக்கை பொய்யாகி றோயண்ணா மாவீரனாகி.....

இதேபோலொரு 31ம் திகதி பல நூறு போராளிகள் உலாவிய எங்கள் ஊருக்குள் மறக்கப்படாமல் நினைவுகளில் இருக்கிற குறிப்பிட்ட சில மறக்க முடியாதவர்களுள் றோயண்ணாவும் ஒருவராய்....ஒவ்வொரு வருட முடிவிலும் றோயண்ணாவின் நினைவோடு முடிகிற வருடங்கள் இன்றோடு றோயண்ணாவின்  நினைவுகள் சுமந்து 22வருடங்களைக் காலம் கவுரவப்படுத்தியிருக்கிறது.

றோயைத் தெரியுமா ? உங்கடை ஊரில இருந்த பொடியன் ? அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார். ஓம் ஏன் ? அந்த றோயை விரும்பின பிள்ளை இன்னும் கலியாணம் கட்டேல்ல இங்கைதான் இருக்கு போனமாதம் சந்திச்சனான் என்றார்.

அழகன் முருகனென்பார்கள் ஆனால் றோயண்ணாவின் அழகை முருகன் கூட பொறாமைப்படுவான். அத்தகைய அழகும் உயரமும் சுருள் முடியும் எல்லாரையும் கவர்கிற கதையும் ஓர் அழகனாய் எங்கள் ஊரில் உலவியவர். அந்த அழகன் பலரது நெஞ்சுக்குள் சின்னக் காதலாக அரும்பியிருந்ததை ஊரில் கேட்டிருக்கிறேன்.

இன்று றோயண்ணா இல்லாது போய் 22ஆண்டுகள் நிறைவாகிறது. ஆனால் றோயண்ணாவின் காதலை இன்றுவரை கௌரவப்படுத்தித் தனது வாழ்வை தனிமையாகக் கழிக்கிற அந்த அக்கா மீதான மதிப்பு மேலுயர்கிறது.
எங்களோடு எங்கள் ஊரோடு நினைவாகிப் போன றோயண்ணா 22வது வருட நினைவு நாளில் மீண்டும் உங்களை நினைக்கிறேன்....

வணங்குகிறேன்....காலம் தோறும் பலர் வருவார்கள் சிலர் மட்டும் காலங்கள் பல கடந்தாலும் நினைவுகளோடும் உறவுகளோடும் வாழ்வார்கள்...றோயண்ணா இன்றும் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றும் உங்கள் முகமும் சிரிப்பும் நீங்கள் பாடுகிற வானுயர்ந்த காட்டிடையே நான் இருந்து பாடுகின்றேன் பாடலும் உங்கள் ஞாபகங்களைத் தந்தபடி... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள்....உங்கள் கனவுகள் நனவாகும் கனவோடு உங்கள் நினைவுநாளில்..... உங்களுக்கு எங்கள் வீரவணக்கங்கள் றோயண்ணா.
31.12.2012

Wednesday, December 19, 2012

ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும்

இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்னே ஓட வெளிக்கிட்டவள் இன்று 36வயதாகியும் ஓட்டம் நிற்கவில்லையென்றே அலுத்துக் கொள்கிறாள்.

அவள் காதலின் பரிசாய் 3 குழந்தைகளும் அவள் கணவனின் ஞாபகமாய் அவனது சில நிழற்படங்களுமே இப்போது அவளுக்கான சொத்துக்கள். ஒரு பெரும் அமைப்பின் முக்கியமான சொத்தாயிருந்த அவனது மரணம் அவளோடும் அவளுடன் கூடிய சில பேருடன் 2வருடங்களின் முன்னர் அன்னிய நாடொன்றில் அவன் வேறொரு மதத்தின் பிள்ளையாய் அன்னிய மதசம்பிரதாய முறைப்படி நிகழ்ந்து முடிந்தது.

அவன் இறப்பதற்குச் சிலமாதங்கள் முன் வரையும் அவனாலேயே வாழ்ந்த உறவுகள் , நட்புகள் எவருமே அவனது மரணத்திலும் கலக்கவில்லை. அப்படியொருவன் இருந்ததையும் மறந்து போனார்கள். எல்லாத் தொடர்புகளும் அற்றுப்போய் மரணத்தின் வாசலில் நின்றபோதும் தன்னைப்பற்றி தனது பூர்வீகம் தனது சொந்தப்பெயரைக்கூட அவளுக்குச் சொல்லாமலே மௌனமாகினான்.

தேவையின் நிமித்தம் அவன் வாயில் ஒருகாலம் பொய்யைத்தவிர எதுவும் வந்ததில்லை. அவளுக்குக்கூட அவனொரு கணணித்துறை நுட்பவியலாளனாய்தான் அறிமுகமானான். கடமையின் கனம் போன இடத்தில் ஒரு காதலை ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டியிருந்தது. எல்லாம் தேசத்திற்காகவென்றே எல்லாவற்றையும் செய்தான்.

எல்லா முடிவுகளின் பின்னால் ஏதோவொரு நம்பிக்கை அவனில் ஒட்டியே இருந்தது. மீண்டும் துளிர்க்கும் ஈழக்கனவென்று நம்பியே இயங்கினான். ஒருநாள் அவனது கையிலிருந்து எல்லாவற்றையும் காலம் பறிக்க கைதியாகி அவனது காதல்துணையும் அவனைப் பிரிந்து சிறுகுழந்தைகளோடு அவள் மொழிதெரியாத ஊரொன்றில் ஒதுங்கினாள்.

சிலகாலங்களில் அவளும் கைதாகினாள். நீண்ட அலைவு துயரங்களின் பின்னர் இருவரும் இணைந்து கொள்ளும் வாய்ப்பை காலம் வழங்கியது. அவன் பற்றிய மர்மங்களை அவன் அப்போதும் சொல்லவேயில்லை. உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்தவன் சோர்ந்து போகத்தொடங்கினான்.  இறுதியில் அவன் உயிர்கொல்லும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாய் மருத்துவர்கள் சொன்னார்கள்.

எல்லாம் இழந்த பின்னர் மனங்களை ஆற்றுப்படுத்தும் நிவாரணி இறுதியில் கடவுள் என்றாவது வளமை. அவன் கர்த்தரை துதிக்கத் தொடங்கினான். கர்த்தரின் மீட்பர்களே அவனைக் கடைசியில் கையிலேந்தியவர்கள். நாட்கள் ஒவ்வொன்றும் ஓட ஓட அவன் உயிர் சொட்டுச் சொட்டாய் பிரியத்தொடங்கியது.  அவனது உயிர் மீள்தலுக்காக அவள் அலைந்த அலைச்சலும் பட்ட துயரங்களும் அவனை மிகவும் வருத்தியது. அவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளிகளுக்கான காரணங்களைச் சொல்ல முடியாத நிலமைக்குப் போயிருந்தான்.

அவளுக்காக அவன் அப்போது அழுதிருக்கக்கூடும் அனாதரவாகிவிடப் போகிற தனது குழந்தைகளுக்காக அதிகம் அந்தரித்திருக்கக்கூடும். எங்காவது தன்னோடிருந்த ஒரு நட்பெனினும் கைகொடுக்குமென்ற நம்பிக்கையோடு ஒரேயொரு தொலைபேசியிலக்கத்தை மட்டும் அவளிடம் ஒருநாள் எழுதிக் கொடுத்தான். அதற்குப் பிறகு அவன் கைகள் பேனாவைப் பிடித்ததில்லை. கடைசியில் அவன் பைபிளை படித்தபடியே மனிதர்கள் பிரார்த்திக்க மரணித்துப் போனான்.

000                          000                        000

எல்லாம் முடிந்து போனபின்னரே அவளை வறுமை துரத்தத் தொடங்கியது. சொந்த உறவுகள் பிறந்த ஊர் அவளை ஏதோ தப்பானவளாகவே கருதியது. தந்தையின் பெயர் தெரியாத பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தாயாகவே அவளைப் பரிகசித்தது. அவளைப் பாவத்தின் மிச்சமாகவே ஒதுக்கியது.

பிள்ளைகளில் ஒன்றுக்கு  உலக விஞ்ஞானி ஒருவரின் பெயரையும் , மற்றைய இரு பிள்ளைகளுக்கும் கரும்புலி வீரர்களின் பெயரையும் வைத்திருந்தான். போகிற இடமெல்லாம் பிள்ளைகளின் பெயரை வைத்தே பெரிய உபத்திரவமாகியது. ஒரு சமயம் போதகர் ஒருவர் தங்கள் சமய முறைப்படியொரு பெயரை மாற்றுமாறு வேண்டினார்கள். அவன் வைத்த பெயர்களை மாற்ற விரும்பாமல் ஊரைவிட்டே விலகினாள். எல்லோரையும் விட்டு துரமாக ஒதுங்கினாள்.

அவனது இரத்த உறவுகளைத் தேடியழைத்தாள். எவரும் கைகொடுக்காமல் அவளை விலத்திக் கொண்டார்கள். ஆடைதுவைக்கும் நிலையமொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். மாதாந்தம் கிடைக்கிற சம்பளம் 10நாட்களுக்கு மேல் நகர முடியாத இறுக்கத்தைத் தந்தது. அயலில் கடனும் அதிகமாகியது.

செத்துப்போய்விட வேண்டும் போலிருந்த நேரங்களில் அவன் கண்ணுக்குள் வந்து நின்று காதுக்குள் கேட்கிற அவனது குரல் கண்ணீரோடு எல்லா நினைப்பையும் அழித்துச் செல்லும்.

அப்பாவைப் பற்றிக் கேட்கிற குழந்தைகளுக்கு அப்பா வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாள். வெளிநாட்டில் உள்ள அப்பாக்களின் பிள்ளைகள் போல அவர்களால் எதனையும் அனுபவிக்க முடியவில்லை. போன ஊரில் அறிமுகமான ஒரு அக்காவிடம் குழந்தைகளைக் கொடுத்துவிட்டு நிரந்தரமாக வேலை செய்யத் தொடங்கினாள். சனிக்கிழமை மாலை வீடு வந்து ஞாயிறு மட்டும் குழந்தைகளோடு பொழுதைக் கழித்து மீண்டும் வேலை.

அம்மாவும் அருகிலில்லாமல் அப்பாவும் அருகிலில்லாமல் இன்னொருவரை அம்மாவாக்கிய அம்மா வரும் வார இறுதிநாளுக்காக காத்திருக்கிற 5,4 ,3 வயதுப்பிள்ளைகளின் குழந்தைக் கனவுகளில் வெளிநாட்டிலிருக்கிற அப்பா அத்தைவீட்டில் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாய் நம்புகிறார்கள்.

ஒருவிடுறையில் வீடு வந்த போது மகள் கேட்டாள். அத்தைக்குப் போன் போட்டுக் கேளுங்கம்மா அப்பாவை பேசச்சொல்லி....எங்களையும் வெளிநாட்டுக்கு கூப்பிடச்சொல்லி....!

அன்று ஏதோ அலுவலாக அவன் கையெடுத்துடனான டயறியைத் திறந்த போது ஒரு பக்கத்தில் அவன் எழுதிய சிலவரிகளும் ஒருநாள் அவன் எழுதி வைத்த தொலைபேசியிலக்கமொன்றும் கண்ணில்பட்டது.

தான் இல்லாது போகிற காலத்தில் அந்த இலக்கத்தோடு தொடர்பைப் பேணுமாறு அவன் எழுதியிருந்த அந்த இலக்கத்தை எடுத்தாள். தொடர்பு கொள்ளவா விடவா என்ற குழப்பமாயிருந்தது.

இரத்த உறவுகளே ஒதுக்கியிருக்க எங்கோ முகம் தெரியாத அவனது நட்பொன்று மட்டும் இவளுக்கு கைகொடுக்குமா என்ற சந்தேகத்தோடே ஒருநாள் அந்த இலக்கத்தை அழைத்தாள்.

அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக மறுமுனையில் கேட்ட குரல். புது உறவு துளிர்த்ததாய் நம்பினாள். அவனைத் தேடிய அந்தத் தோழமை அவன் எங்கோ வாழ்வதாயே அன்றுவரை நம்பியிருந்தது. அவள் சொல்லிழயழுத கதைகள் அவனை அந்த நிலமையில் இட்டுச் சென்ற விதியையே நோக வைத்தது.

எனக்கு உதவி செய்யாட்டிலும் பறவாயில்லை....நீங்க கதைச்சாலே போதும்.....அவள்  தனது துயரங்களைச் சொல்லிச் சொல்லியழுதாள்.

உயிருடன் இருந்த போது ஒருநாள் அவன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவன் உயிரைக் காத்திருக்கும் வாய்ப்புக்கூட வந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவனை மட்டுமே நம்பிய அவளுக்கும் குழந்தைகளுக்குமான ஒரு வாழ்வையேனும் கொடுத்திருக்கலாம். எல்லாம் முடிந்து அவன் அநாதையாய் முடியும் வரையில் ஏனோ நட்பையும் அழைக்காமல் விட்டிருந்தான் என்பது தெரியாது.

வரவிருக்கிற நத்தார் தினத்தில் அப்பா வருவார் என நம்புகிற குழந்தைகளுக்கு இம்முறையும் அப்பா வரமாட்டார் வேலைகூடவென்று சொன்னாள். அப்பா வெளிநாட்டிலிருந்து அனுப்பியதாக கடந்தமுறை அவள் தானே ஒரு பாசலை தனது முகவரிக்கு அனுப்பி அப்பாவின் நத்தார் பரிசென்று பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். இம்முறையும் உடுப்புகளும் இனிப்புப்பண்டங்களையும் தயாரித்து வைத்திருக்கிறாள் நத்தார் பரிசு.

அப்பாவின் மரணத்தை இன்றும் அறியாத குழந்தைகளுக்காக அப்பா பற்றிச் சொல்ல ஆயிரமாயிரம் வரலாறுகளை அவன் விட்டுச் சென்றிருக்கிறான் எனினும் எதையும் அவளால் வெளிப்படுத்தவோ வரலாறு ஆக்கவோ முடியாது அவன் மரணமும் அவனது வாழ்வும் மர்மமாகவும் மௌனமாகவுமே புதைந்து போயிருக்கிறது.

நினைவுகள் தருகிற வலிகளை மறக்கவோ அவற்றை அழிக்கவோ இந்தக்கால விஞ்ஞானம் எதையாவது கண்டு பிடித்திருக்கலாம் போல.  பழைய நினைவுகளில் மனசு கனக்கிற போதெல்லாம் இப்படித்தான் நினைப்பாள்.

தமிழ் ஈழம் தமிழர்களின் கனவாய் மட்டுமன்றி ஈழப்போராளிகள் பணிசெய்த நாடுகளில் அவர்களது காதலிகளாய் காதலர்களாய் வாழ்கிற பலரது கனவாகவும் ஆகிவிட்ட தமிழீழம் ஒருநாள் வருமென்று நம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அவளும் ஒருத்தியாக....அவனது குழந்தைகளுக்கு அவனது தாயகத்தைப் பற்றிச் சொல்லும் நாளுக்காகவும் காத்திருக்கிறாள்.

19.12.2012

Monday, December 10, 2012

அன்று போராளி இன்று போர்க்குற்றவாளி ?

"இறுதியுத்தத்தின் போது தமிழ் மக்களை மனிதக்கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள். கட்டாய ஆட்சேர்ப்பை நடாத்தினார்கள். கட்டாயமாக களத்தில் கொலை செய்தார்கள் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்தினார்கள்.இப்படியான மனிதகுலத்துக்கு எதிரான காரியங்களை புலிகள் செய்தார்கள்.அதனால் அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு அந்த அமைப்பில் இருந்ததற்காக இவை எதிலும் அவன் சம்மந்தப்பட்டது கூறப்பட்ட குற்றங்கள் ஒன்றுகூட நிரூபிக்கப்படாதிருந்தும் அந்த இளைஞன் ஜனநாயகத்தின் வாசலான நாடு ஒன்றில் அகதித்தஞ்சம் கோரியபோது போர்க்குற்றவாளியாக்கப்பட்டு அகதியாக ஏற்றுக் கொள்ளப்படாது நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் இவனுக்கு மருத்துவம் இல்லை , உணவுக்கான உதவியில்லை  , தொழில் செய்ய முடியாது வீட்டுக்காவலில் இருப்பதுபோல நிலமை. இன்றோ நாளையோ என்றோ திருப்பியனுப்பப்படும் நிலமையில் உள்ள மகனை நினைத்து ஊரிலிருந்து தினமும் ஏங்குகிற பெற்றோர்களின் துயர் மட்டுமன்றி ஏற்கனவே களத்தில் காயமுற்ற உடல்வலி மனவலியும் கூட தினம் தினம் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓர் இளம் போராளியின் நிலமையே கீழ் வரும் உண்மை"

இவன் தனது சிறு வயதில் புலிகள் அமைப்பில் இணைந்து இறுதி வரையும் வன்னிக்கள முனையிலே இருந்தவன். விடுதலைப்புலிகளின் பல முக்கியமான படைப்பிரிவுகளில் அவன் தன்னை அர்ப்பணித்து ஆற்றிய பணியென்பது விடுதலைப்பாதையில் வரலாறுகளாய் பதியப்பட வேண்டிய ஆயிரமாயிரம் கதைகளைக் கொண்டவை. இவனுடைய போராட்ட வாழ்க்கையில் இவன் சந்தித்தவை துன்பங்களும் துயரங்களும் மட்டும்தான். ஆனால் எல்லாவற்றையும் அவன் சவாலாகச் சந்தித்து முறியடித்து அத்தகைய பெரும் ஆபத்துகளிலிருந்தும் அவன் வெளியேறிய பாங்கு வியப்புக்குரியது.

இவனது ஆழுமை ஆற்றல் பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது. ஆயுதங்களோடு சமராடிக்கொண்டிருந்தவனை கல்வி கற்க வைத்து இன்றைய உலகம் எதிர்பார்க்கிற கல்வியையும் அவன் கற்க வேண்டுமென்று அவனை வளர்த்த தளபதியின் விருப்பத்தையும் நிறைவேற்றி கல்வியையும் கற்றான். பல முக்கிய இராணுவ நகர்வுகளில் இவனது பங்கும் வெற்றியும் வரலாற்றில் எங்கும் பதியப்படாதவை.

2008 இறுதிப்போர் கிளிநொச்சியை அண்மித்த வேளையில் தலைவரின் விசேட பணிப்பிற்கமைய 100பேர் கொண்ட அணியொன்றை எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இரகசியமாக ஊடுருவி பின்புறமாக வழிநடத்தியபடி முன்னேறிக்கொண்டிருந்த போது எதிரியின் எதிர்த்தாக்குதலில் காயமுற்றான். உடலின் பாகங்களில் கணிசமானவை பாதிப்புற்று பிணங்களோடு அடுக்கப்பட்டவன்.

பின்பு தனது வாழும் கணங்களை எண்ணிக் கொண்டிருந்த போது எதிர்பாராத அதிசயமாக மருத்துவர் ஒருவரின் கவனமும்  கடவுளின் கருணையாலும் அவனின் தன்னம்பிக்கையும் இவனைக் காத்து இன்றுவரையும் வாழ வைத்துள்ளது.

காயமடைந்ததும் அனேகம் போராளிகள் குப்பியடிக்கவே முயற்சிப்பார்கள் இதன் காரணமாக முற்கூட்டியே அருகில் நிற்பவர் முதல் பணியாக குப்பியை அறுத்தெடுத்துவிடுவது வளமை. இவனும் காயத்தின் தாக்கம் உயிர் தப்புவது சிரமம் என்ற நிலமையில் குப்பியைத் தருமாறு தோழர்களிடம் வேண்டினான். காயமடைந்த களத்திலிருந்து அகற்றி மருத்துவத்துக்காகக் கொண்டு செல்ல 13மணித்தியாலங்கள் வரையும் காத்து போராடி இவனைக் காக்க வேண்டுமென்று முயற்சித்தவர்கள் குப்பியை கொடுக்கவேயில்லை.

அப்ப குப்பிடியச்சிருந்தா இப்ப தினம் தினம் சாக வேண்டி வந்திராது. இப்படித்தான் இப்போது அடிக்கடி சொல்லிக் கொள்கிறான். இப்போது அந்தக் குப்பியைத் தராத தோழர்கள் மீது கோபம் வருகிறது. தாயகம் என்ற கனவோடு கல்வியை நல்வாழ்வை குடும்ப உறவுகளை வெறுத்த தாயகக்கனவுக்கு இந்தக்காலமும் இந்தக்கால மனிதர்களும் கொடுத்துள்ள தண்டனையை நினைக்கும் போதெல்லாம் வெளியிட முடியாது வெறுப்பும் கோபமும் மிஞ்சுகிறது....!

2009 மே 17 அன்று கடும்காயத்தோடு சரணடைந்து முகாம் வாழ்வு அன்றாட உணவுக்கு வரிசையில் நின்று மயங்கிவீழ்ந்து மீண்டும் காயம் கடுமையாகி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பலமுறை கிழித்து சீர் செய்யப்பட்ட வயிற்றுக்காயம் உறவுகளை எங்கேயென்று தேட முடியாத அவலத்திலும் ஏதோ வளியாய் குடும்ப உறவுகளின் தொடர்பு கிடைத்தது. சிறைக்கு கொண்டு செல்லப்பட இருந்த வேளையில் ஒரு சிங்களமருத்துவத்தாதியின் மனிதநேய உள்ளத்தால் காப்பாற்றப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற உதவி கிடைத்தது.

பிணங்களோடு குறையுயிரில் புதைக்கப்படாது காப்பாற்றப்பட்டவனை பெற்றோரும் வெளிநாட்டில் இருந்த உறவொன்றின் மூலம் ஐரோப்பா அனுப்பி வைத்தனர். ஐரோப்பியநாடு அமைதியையும் பாதுகாப்பையும் தருமென்ற நம்பிக்கையோடு அகதி விண்ணப்பம் நிரப்பினான்.

ஐரோப்பாவில் வழக்கு நடத்துவதில் தற்போது தமிழ் சட்டத்தரணிகள் நிறைய நிறுவனங்களாக இயங்குகின்றன. தமிழ் சட்ட வல்லுனர்களால் மட்டுமே தன்னைக்காப்பாற்ற முடியுமென்று நம்பிய இந்த இளைஞன் தமிழ்சட்ட வல்லுனர் ஒருவரிடம் தனது வழக்கை தாக்கல் செய்ய ஆதரவை நாடினான். அந்தத் தமிழ்சட்ட வல்லுனர் தானே வழக்கை எழுதி இவனுக்கான வாழ்வு வருமென்று நம்பிக்கை கொடுத்தார். அந்த நாட்டில் அவன் தடைசெய்யப்படும் வரை தனது தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் பயன்படுத்தி மேற்படிப்பை தொடர்ந்தான். தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை உருவாக்கினான். ஆனால் காலம் அவனை விடாமல் கலைத்தது.

வலுவற்ற உடலின் காய வலியும் இரவுகளைத் துரத்துகிற பயங்கரம் மிக்க கனவுகளும் மன அழுத்தத்தைக் கொடுத்து ஓய்ந்து உறங்க முடியாத அவலத்தோடு அல்லப்பட்டுக் கொண்டிருந்தவன் போர்க்குற்றவாளி என அவன் வாழ்கிற நாடு தீர்ப்பு வழங்கியது.

வந்தநாள் முதல் இன்று வரை சமூக உதவிக் கொடுப்பனவும் இல்லை மருத்துவம் இல்லை வேலைசெய்ய முடியாத தடை இப்படி எல்லா வழிகளையும் ஜனநாயக நாடொன்று மறுத்து இவனைப் பயங்கரவாதியாய் பட்டியலிட்டு வைத்திருக்கிறது.

இப்போது மறுமுறையீடு நிராகரிக்கப்பட்டு தினம் தினம் நாடுகடத்தப்படுவேனோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவன் ஒரு போர்க்குற்றவாளியாக கருதப்பட்டு(ஆனால் நிரூபிக்கவில்லை) அடிப்படை மனிதவுரிமைகளும் மீறப்பட்டு மருத்துவமும் கிடைக்காது அவதிக்குள்ளாகியுள்ளான்.

இந்த இனத்தை நம்பி இந்த இனத்துக்காக போராடிய பலரது வாழ்வு இன்று ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய நாடுகளால் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்படுகிறது. தாயகக்கனவோடு போன எங்களுக்கு உலகமும் எங்களினமும் கொடுத்திருக்கிற வாழ்வின் கொடுமையை அனுபவிக்கிற ஒவ்வொரு போராளிக்கும் தினம் தினம் மரண வேதனையாகவே கழிகிறது.

எங்களுக்கென்றொரு நாடு வேண்டி தங்கள் காலத்தை தந்தவர்கள் எங்கள் கண்முன்னால் எதுவுமேயற்றுத் தவிக்கிறார்கள். புலம்பெயர்ந்து பயங்கரவாதிகள் எனப்படுகிற முன்னாள் போராளிகளுக்கான ஆதரவை வழங்க எங்கள் மனக்கதவைத் திறப்போமா ?

Monday, November 26, 2012

மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்.

தாயக விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு இதய அஞ்சலிகள்.

Saturday, November 3, 2012

காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும்

சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான்.

அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை மாற்றி சிவிலுடைக்கு மாற்றப்பட்டான். சீரியசான போராளி சிரித்துச் சமாளித்து சாதிக்கும் வல்லமையை அவனது வசீகரம் மிக்க கதையும் அவனை நிரந்தரமாக வன்னியைவிட்டுப் பிரித்து பகைகுகையில் நிரந்தரமாக்கியது.

சாகசங்கள் செய்வது போல சாதனைகள் செய்தான். லட்ச லட்சமாய் குறையாத பணவளம் வசதிகள் யாவையும் அமைப்பு அவனுக்கு வழங்கியது. தாய்மண்மீதான பற்று பணிகளுக்காக மட்டுமே நாட்டுக்காசைப் பயன்படுத்துவான் தனது தேவைகளுக்கும் தனது பணியைச் சந்தேகமின்றியும் சாதுரியமாகவும் வெல்ல கடைகளில் பணியாளனாய் விடுதிகளின் வேலைக்காரனாய் அவன் எடுத்த அவதாரங்கள் ஆயிரத்தையும் தாண்டும்.

பொறுப்பானவர்களைச் சந்திக்க இடையிடை தாண்டிக்குளம் தாண்டி ஓமந்தை சோதனைச்சாவடியில் அவனும் சாதாரணமானவனாகவே வரிசையில் நின்று அங்கே கடமையிலிருக்கிற காவல்துறையினர் சிலரின் பொறுப்பற்ற தன்மைகளையும் போட்டுக்குடுத்து திருத்தியிருக்கிறான். இறுக்கம் மிகுந்த சோதனைச்சாவடிக்காலும் உரியவர்களுக்கு வழங்க வேண்டியவற்றையும் ஏதோ வழியாக கொண்டு போய்ச் சேர்ப்பான்.

பணியின் கனம் அவனுக்கு அதிகரிக்கப்பட்டது. பகை இனத்திலேயே அவனை யாரையாவது காதலிக்குமாறு சொல்லப்பட்டது. வேலையாளாய் நின்ற விடுதியிலேயே வந்து போன ஒரு குடும்பத்தை நட்பாக்கி அவர்களது வீட்டுக்கு இவன் விருந்தாளியாய் ஏற்கப்பட்டான். அங்கே ஒரு அழகியிருந்தாள். அவன் வெல்ல அவனது இலட்சியம் வெல்ல அந்த அழகியை அவன் காதலித்தான். காதல் நெருக்கமாகி அவனில்லையென்றால் அவளில்லையென்ற நிலைக்கு அந்த அழகி வந்துவிட்டாள்.

அவனது பணியிடத்தில் அவன் நிரந்தரமான இருப்பிட அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள அவளைத் திருமணம் செய்து கொண்டான். வேகவேகமாய் அவன் படைத்த வெற்றிகளின் தடயங்களையும் வெளித்தெரியாமல் மறைத்துவிடுகிற விவேகத்தையும் அவன் கற்று வந்த கற்பித்தலைவிட அதிவிசேடமாகவே செய்தான். அவனுக்கு மேலே இருந்தவர்களையும் மிஞ்சிய ஆற்றலும் ஆழுமையும் அவனை வசப்படுத்தி வைத்திருப்பதாக கடைசியாகப் புதுக்குடியிருப்புக்கு போய் திரும்பிய போது அவனது துறைக்குப் பொறுப்பானவர் தோழில் தட்டிச் சொன்னதைப் பலமுறை நினைத்துத் தன்மீதே பெருமைப்பட்டிருக்கிறான்.

ஒருபுறம் அவன் குடும்பத்தலைவன். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாயும் ஆகினான். மறுபுறம் அவனது தேசக்கனவை நனவாக்கும் பாதையில் தடைகள் அகற்றும் தடையகற்றியாக இயங்கிக் கொண்டிருந்தான். ஒருநாள் தானும் காற்றாகும் கனவோடு கடமையில் கலந்தான்.

ஒரு பெரும் தடையை அகற்ற அழிக்க அவனுக்கு கட்டளை வந்தது. காற்றும் அந்தத்தடையைத் தாண்டுவதானால் ஒன்றுக்குப் பலமுறை பரிசோதனை செய்யப்படும் குகையது. ஆயினும் அவனது சாதுரியமும் கெட்டித்தனமும் அந்தக் குகையை உள்ளடைந்து வேவுபார்த்து இலக்கையடைய உயிராயுதத்தையும் தயார்படுத்தி அந்த இலக்கையடையும் நாளுக்காக காத்திருந்து எல்லா ஒழுங்கும் முடித்து தடையுடைக்கும் பொழுதுக்காய் காத்திருந்தான்.

அந்தக்கடைசி நாள் அவனே எல்லாவற்றையும் இரவுபகலாய் கவனித்து உயிராயுதத்தையும் தயார் செய்து கடைசி ஒத்திகையும் முடித்து வழியனுப்பிவிட்டு போகிற ஆயுதம் பிழைத்தால் அடுத்து தன்னையும் தணலாக்க தயார்படுத்திக் கொண்டு போயிருந்தான்.

வரிசையாக வந்து கொண்டிருந்த வாகன நெருக்கத்தில் உரிய இலக்கை அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதம் சிதறடிக்கும் கனவோடு அந்தக் கண்ணில் தெரிந்த பிரகாசம் அன்றைய சூரியக்கதிர் ஒளியையும் மிஞ்சியது போலிருந்தது அவனுக்கு. அவனுக்கு தொலைவாய் நின்ற உயிராயுதம் அவன் கண்முன்னே தீயாகித் தணலாகிப் பெருநெருப்பாகியெரிந்தது. அகற்ற நினைத்த தடையும் தொலைந்ததென்றே நினைத்தான். ஒரு கணம் எல்லாம் ஸ்தம்பித்து தீப்பிழம்பே அவனது கண்களையும் மறைத்தது.

அடைய நினைத்த வெற்றியும் அழிக்க நினைத்த தடையும் அன்று அழியவில்லை. அந்த வெற்றியை எதிர்பார்த்திருந்தவர்கள் அவன் மீது கோபமாயிருந்தனர். அவனது கவனக்குறைவே அந்தத் தோல்வியின் காரணம் எனப்;பட்டது. உலகெங்கும் அந்தச் செய்தி பரவியது. உலக ஊடகங்களில் அவன் தயார்படுத்தியனுப்பிய உயிராயுதத்தின் உடற்கூறுகளை ஐரோப்பிய நிபுணர் குழு பரிசோதனை செய்யப் போவதாகவும் குற்றவாளிகள் மீது கடும் விமர்சனத்தையும் வைத்து பயங்கரவாதத் தாக்குதல் அதுவென்றும் சொல்லப்பட்டது.

பயங்கரமானவர்களாக நாங்கள் மாற யார் காரணமான பயங்கரவாதிகள் என்பதனை ஏனிந்த உலகம் புரிந்து கொள்ளாதிருக்கிறது. அவனும் வீட்டில் எல்லோருடனும் சேர்ந்து தொலைக்காட்சி பார்த்தான். அந்த நெருப்பை அந்த இலக்கைச் சென்றடைய அவன் பட்ட வலிகள் கண்ணீராய் பெருகியது. அவனது அழகி சந்தேகப்படாதிருக்க சாதாரணமானவனாய் காட்டிக் கொண்டான். இரவுகளில் தூக்கத்தைத் தொலைத்தான். அடைய முடியாது போன இலக்கை இனித்தானே அழிப்பதென்ற ஓர்மத்தை நெஞ்சில் விதைத்தான். அந்தத் தோல்வியின் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருந்த அவனது ஆட்களுக்குத் தகவல் சொன்னான். அந்த இலக்கை நான் அடைவேன்.

ஒருநாளில் நெருப்புப்பற்றிய தெருவும் வாகனங்களும் அன்றைய பகைக்கான இழப்புக்களையும் எண்ணியெண்ணி அதன் காரணமானவர்களைத் தேடும் நடவடிக்கையை பகைவன் தொடர்ந்து கொண்டிருந்தான்.

000              000                    000

ஒருநாள் அவனது வீடு முற்றுகைக்கு உள்ளானது. ஏப்போதுமே தடயங்களை விட்டு வைக்காமல் அழித்துவிடுகிறவனின் வீட்டைச் சூழ்ந்தவர்கள் அவனையும் அவனது மனைவியையும் மகளையும் மாமியாரையும் கைது செய்தனர். அவனைக் காதலித்து அவனில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் அவனை நம்பியவளுக்கம் அவளது குடும்பத்திற்கும் இருண்டது விடிஞ்சது எதுவும் தெரியாது. ஏதோ தங்கள் இனத்தவர் அவனை வீணாக சந்தேகித்துத்தான் அவனையும் தங்களையும் கைது செய்கின்றனர் எனவே நினைத்தார்கள்.

நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமொன்றை எட்டியபோதுதான் அவன் ஒரு விடுதலைப்போராளியென்றது தெரிய வந்தது. அவனைக் கொன்று போட்டுவிடும் கோபம் அவளுக்கு.

சட்டத்தின் முன் அவளும் அவளது குடும்பமும் அவன் தங்களை ஏமாற்றியது தமக்கும் நடந்து முடிந்த சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று வாதாடினார்கள். இருந்த வசதிகளையெல்லாம் விற்று அவளும் அவளது குடும்பமும் விடுதலையானது. 3வயதில் பச்சைக் குழந்தையாக சிறையில் அவலப்பட்ட அவனது குழந்தை மீதும் அவளுக்கு வெறுப்பு அதிகமாகியது. அவனை உரித்து ஒட்டியது போலவே தமிழும் சிங்களமும் கலந்த பெயரால் அழைக்கப்பட்ட அந்தக் குழந்தையில் ஓடும் தமிழ் இரத்தம் அவளுக்கு எரிச்சலையும் வெறுப்பையுமே அதிகரித்தது.

000            000               000

என்றாவது ஒருநாள் எங்காவது தெருவிலோ வாகனநெரிசலிலோ காற்றாய்விடுகிறவனே தானென்று நினைத்திருந்தவனுக்கு தனது குழந்தையின் மேல் சொல்லியளவிட முடியாத அன்பு. அவளோடு கழிகிற பொழுதுகளை அவன் அதிகம் விரும்பிய தருணங்கள் நிறைய. குழந்தை எதையெல்லாம் விரும்பும் என்பதனையெல்லாம் தானாகவே முடிவு செய்து வாங்கிக் கொடுப்பான். இரவுகளில் உறங்கப்போனால் குழந்தை நித்திரையாகும் வரை அவளோடிருப்பான் கதைகள் சொல்லுவான். எல்லோரும் உறங்கிய பின்னர் உறங்கச் செல்வான்.

பின்னிரவில் உறங்கப் போகிறவன் எல்லோருக்கும் முன்னம் முதல் ஆளாய் எழும்பிவிடுவான். காலை எழுந்ததும் யோகாசனம் முதல் உடற்பயற்சிகள் செய்து காலையுணவை மகளுக்கும் மனைவிக்கும் தயார் செய்து கொடுத்துவிட்டே வீட்டைவிட்டு வெளியேறுவான். அவனது நடமாட்டம் ஒவ்வொன்றும் இலக்குகள் தேடியதாகவே அமையும்.

ஓன்றாயிருந்து களமாடி உறங்கிப்போன ஒவ்வொருவரின் இறுதிக் கணங்களையும் திரும்பத்திரும்ப நினைவு கொள்ளும் அவனது மனசுக்குள் மூண்டெரியும் தீயில் அவனது பணிகளை விரைவுபடுத்துவான். பெயர் , புகழ் , முகம் , முகவரி எதுவுமற்று ஒருநாள் எரிந்து போவதற்காயே அவன் கனவோடலைந்தான்.

கம்பிகளின் பின்னால் அடைபடக் காரணமாயிருந்த தாக்குதலைத் திட்டமிட்டு முடிக்க அவன் பட்ட சிரமங்கள் யாவையும் ஒரு தடயம் அழித்து இன்று அவன் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முடக்கி சிறையில் அடைத்திருப்பது பற்றி அதிகம் சிந்தித்திருக்கிறான். எனினும் எல்லாம் விடுதலைக்கே என்ற நினைப்பில் கொடும் சித்திரவதைகளையும் மின்பாச்சிகளின் இரக்கமற்ற தாக்குதல் வரை அவன் அனுபவித்த சித்திரவதைகள் மாதக்கணக்காய் அவனைப் பிணமாய் போட்டது. எனினும் இலட்சிய நெருப்பு நெஞ்சுக்குள் சூரிய நெருப்பாய் கனன்று கொண்டேயிருந்தது.

000               000                   000

காலம் 2009மே. நம்பியவர்களும் அவன் நேசித்தவர்களும் துடைத்தளிக்கப்பட்டு அவன் அடைக்கப்பட்ட சிறையில் கடைசிக்களமாடியவர்கள் பலர்; வந்தடைந்தனர். இழப்பதற்கு இனியெதுவுமே இல்லை உயிர்கள் தப்பினால் போதுமென்றதாக வந்திருந்தவர்கள் சொன்ன கதைகள் அவனையும் கலங்க வைத்தது.

தனியே போயிருந்து யோசித்துக் கொண்டிருப்பான். விடுதலையாகிப் போன மனைவி அவனைப் பார்க்க வருவதில்லை. அவள் அவனால் ஏமாந்து போன கோபம் அவன் வெளியில் வந்தால் தன்கையாலேயே அவனுக்கான சாவு எழுதப்படுமென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். அவனது குழந்தையை அவனது உயிரை அவள் வேண்டாமென்று வெறுத்தாள். அவனைக்காண வருகிற அவன் அம்மா அவனது குழந்தை பற்றிச் சொல்லியழுவாள்.

வெளிநாட்டில் 3உணவகங்களுக்குச் சொந்தமாயிருக்கிற வசதி படைத்த உடன்பிறப்புடன் தொடர்பு கொண்டான். தனது பிள்ளைக்கும் தாய்க்கும் ஏதாவது உதவுமாறு கேட்டான். உடன்பிறந்தவளோ அவனது மைத்துனனோ அவனது குழந்தை சிங்களக் குழந்தையென்றும் அதற்கு தங்களால் எதுவும் செய்ய இயலாதென்று மறுத்தார்கள்.

நாடுமில்லை நாடென்று வாழ்ந்தவர்களுமில்லை. அவனுக்காக யாருமில்லை. இருண்டுபோனது அவன் வாழ்வு மட்டுமல்ல அவனது கனவுகளும்தான். முடிவற்று இழுபட்டுக் கொண்டிருந்த வழக்கு உள்நீதி மன்றுக்கு 4வாரம் ஒருமுறை போய் வந்து கொண்டிருந்தவனின் வழக்கு உயர்நீதிமன்றம் வந்த போது மீண்டும் உடன்பிறந்த உறவுடன் தொடர்பு கொண்டான்.

பணம் கொடுத்து சட்டத்தரணியை வைத்து அவனது வழக்கை வாதாடுவதென்றால் அதற்கான பணச்செலவு அதிகம். எதுவுமற்று எவருமற்றுப் போனவனைக் கட்டாயம் உடன்பிறப்பு காக்குமென்று நம்பிய அவனது நம்பிக்கையில் விழுந்தது பேரிடி.

சரி என்ரை பிள்ளைக்கெண்டாலும் மாதம் ஒரு ஆயிரம் ரூபா குடுத்தீங்களெண்டா அவள் படிக்க உதவியா இருக்கும். கடைசியாக தனது பிள்ளைக்கான கல்வியுதவியையாவது செய்யுமாறு கேட்டான். எதுவும் தம்மால் முடியாது இனிமேல் இப்படி தொடர்பு கொண்டு தம்மை தொந்தரவு பண்ணக் கூடாதென்று எச்சரித்து விட்டார்கள்.

அவனது இரத்தத்தை அவனது கனவின் தேவைதையை அவனது குழந்தையை அவனது காதல் மனைவி உதறிவிட்டாள். அவனது வயதான அம்மாவே தன்னால் இயன்றதைக் கொடுத்து அவனது மகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்தார். இலட்சியம் தோற்று சிறையில் அடைபட்டு வாழ்வு இனி இருளெண்டு ஆகியது.

000            000                000

அப்போதுதான் நேசக்கரம் அமைப்பின் தொடர்பு அவனுக்கு இன்னொரு சிறையிருக்கும் அவனோடு கூடவிருந்த தோழன் ஒருவனால் கிடைத்தது. ஒருநாள் இரவு அவனுடன் தொடர்பு கொண்டேன். நீண்டகாலம் அவன் சேர்த்து வைத்திருந்த சோகங்களை அன்று ஒன்றரை மணித்தியாலங்கள் அவனோடு கதைக்கக் கதைக்க கொட்டித் தீர்த்தான். கதைவாக்கில் கேட்டேன்.
எந்த ஊர் நீங்கள் ?

அவன் தனது ஊரைச் சொன்னான். அவனது ஊரில் அவனது ஒழுங்கையில் எனது சயிக்கிள் ஓடியிருக்கிறது. அவனது உறவுகள் எனது நட்புகள் ஆகியிருக்கின்றனர். அவன் சொல்லச் சொல்ல சிறுவனாய் பார்த்த அவனது முகம் மெல்ல மெல்ல மங்கலாய் ஞாபகம் வந்தது. எவனோ ஒருவனாய் அறிமுகமானவன் என்னோடு உறவான அவனது வீதியும் வீடும் அவனையும் என் குடும்பத்தில் ஒருவனாய் நிறுத்தியது.

சிறைக்கு வந்த பின்னர் தான் காணாத தனது மகளின் எதிர்காலம் அவளது வாழ்வ பற்றியே அவனுக்குள்ளிருந்த கற்பனைகளையெல்லாம் சொன்னான். ஒரு அப்பாவாக அவன் ஆசைகள் கனவுகள் அவனது மகள் பற்றியே எழுப்பியிருக்கிற கோட்டையில் ஒரு சதம் சேமிப்பும் இல்லாமல் மிகவும் பெரியதாய் உயர்ந்திருந்தது.

என்ரை மகளுக்கு ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாய் படிப்பு உதவியாக உதவினீங்களெண்டா அது பெரிய உதவியா இருக்கும். நான் ஒருநாள் வெளியில வருவன் எனக்கு நம்பிக்கையிருக்கு.....எனக்கு உதவமாட்டமெண்ட என்ர சகோதரத்தின்ரை கண்ணுக்கு முன்னாலை நானும் உழைச்சு முன்னுக்கு வந்து காட்டுவன் என அன்று சபதமுரைத்தான்.

அவன் கேட்டது போல அவனது மகளுக்கு மாதாந்தம் கல்வியுதவியாக 1500ரூபாய் ஒழுங்கு செய்து அந்த உதவி மாதம் போய்க் கொண்டிருக்கிறது. ஒருமுறை மகளின் படமும் தனது படமும்  ஒருவர் மூலம் அனுப்பியிருந்தான். இடையிடை பேசக்கிடைக்கிற போது தொடர்பு கொண்டு கதைப்பேன். வழக்கின் நிலமைபற்றி நல்ல முடிவொன்று கிடைக்குமென்றுதான் சொல்லுவான். தன் வசதிக்கு ஏற்ப இலவச சட்டத்தரணியொருவரையே அவனது வழக்கை வாதாட வைத்திருந்தான்.
000          000             000

கடந்த ஆறுமாதங்கள் அவனோடு பேசவும் முடியவில்லை. வழக்கு பற்றிய தகவல்களையும் அறியவில்லை. தொடர்பில் உள்ளவர்களுடன் கதைக்கிற போது வழக்கு நடக்கிறது என்றே சொல்லிருந்தார்கள்.

அவனுடன் கூடவிருந்த ஒரு நண்பன் யாழ் சிறைக்குச் சென்றிருந்தான். அவனிடம் கதைத்த போது கேட்டேன்.

அவன் என்னமாதிரியிருக்கிறான் ? வழக்குத் தெரியும் தான இலவச சட்டத்தரணியை வைச்சிருக்கு....ஆனால் அவன் நம்பிறான் தனக்கு நல்ல முடிவு கிடைக்குமெண்டு.....போன கிழமை வழக்கிற்காக ஏத்தீட்டாங்கள். என அந்த நண்பன் சொன்னான். தனது வழக்குக்கும் எவ்வித ஆதரவுமில்லாமல் இருப்பதாக அந்த நண்பன் வேதனைப்பட்டான்.

000              000               000

கனவுகளோடலைந்தவனுக்கு 35வருடகடும் சிறைத்தண்டனையென்பதை அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்தியொன்று எல்லா இணையங்களையும் நிறைத்தது. தான் விடுதலையாவேன் உழைத்து முன்னேறிக்காட்டுவேன் என்றவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நம்பவே முடியவில்லை.

இன்னும் அவன்மீது 129 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. மீதக்குற்றச் சாட்டுகளுக்கும் தீர்ப்புகள் கொடுக்கப்பட்டால் அவன் காலம்....! ஆயுள் முழுவதும் கொடுஞ்சிறையாகவே போகப்போகிறது. செய்திகள் அவனை இப்போது மறந்து விட்டது.

சில நாட்கள் முன் வந்த அழைப்பொன்று அவனைப் பற்றி விசாரித்த போது சொன்ன சேதி.
பாவம் சரியா உடைஞ்சு போயிருக்கிறான். காசிருந்திருந்தா அவனுக்கொரு நல்ல சட்டத்தரணியைப் பிடிச்சிருக்கலாம்.....எங்கை காசில்லாததில இப்பிடியே கிடக்கப்போறம்....! ஒருக்கா கதையுங்கோ அவனோடை ஆறுதல் சொல்லுங்கோ.....!

அவனது 35வருட தண்டனைக்காக வேதனைப்பட்டு தகவலைச் சொன்னவனுக்கு இம்மாதம் இறுதியில் வழக்குத் தவணை வருகிறது. சில லட்சங்கள் இருந்தால் இவன் வெளியில் வருவதற்கான விதி மாற்றம் இருக்கிறது. இவனுக்கும் இத்தகையதொரு கொடிய தீர்ப்பு வந்துவிடக்கூடாதென்று விதியைத் தான் வேண்டுகிறேன். ஆனால் விதியை மாற்ற எதிர்பார்க்கிய லட்சங்களை என்னால் வழங்க முடியாதுள்ளது.

இள வயதில் தங்கள் வாழ்வைத் தந்தவர்கள் சிறைகளின் பின்னால் ஒளியிழந்த சூரியன்களாய் தங்களது விடுதலைக்கான நாளை எதிர்பார்த்தபடியிருக்கிறார்கள். தங்கள் விடுதலைக்கான கதவுகள் திறபட காசுக்கடவுளர்களைத் தேடுகிறார்கள்  காசுக்கடவுளர்களின் கண்கள் இவர்களுக்காய் திறக்காதா ?

28.10.2012

Saturday, October 27, 2012

நேசக்கரத்தை முடக்கும் கருணாகுழு(TMVP) உறுப்பினரும் அருண்தம்பிமுத்துவின் காரியதரசியுமான ராயேந்திர பிரசாத்தின் அடாவடித்தனம்.

 "எனது ஆயுதத்தை தீர்மானிக்கப்போவது யார் ?"
நேசக்கரம் தற்போது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களையே அதிகம் செய்து வருகிறது. புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளை நேரடியாகவே உரியவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டு வருகிறது.

எமது மக்களுக்கான இந்த மனிதநேயப்பணியை கடந்த 2மாதங்களுக்கு மேலாக கருணாகுழுவுடன் இயங்கி வந்தவரும் கருணாவின் தேன்FM வானொலியில் பணியாற்றியவரும்   இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அவர்களின் காரியதரசியாகவும் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களால் நேசக்கரம் பணியாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர்.

நேசக்கரம் பணியாளர்கள் சிலரது வீடுகளுக்கு நேரில் சென்று கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ள ராயேந்திர பிரசாத்திற்கு பயந்து தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலமையில் எமது 4உறுப்பினர்களும் இலங்கைக்கான நேசக்கரம் இணைப்பாளரும் இன்று தமது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளனர்.

இன்னும் ஒருமாத காலத்தில் நேசக்கரத்தின் முழுமையான செயற்பாட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்திவிடுவதாகவும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்று எமது இணைப்பாளரை மிரட்டியுள்ளார்.

நாம் எவ்வித அரசியல் வேலைகளையும் செய்யவில்லை. எங்களது மக்களுக்கான உதவிகளை எங்கள் இளம் சந்ததிக்கான கல்வியையுமே கொடுக்க இதுவரையில் எவ்வளவோ சிரமங்களை எதிர் கொண்டு இயங்கி வருகிறோம். ஏந்த அரசியல்வாதியுடனோ அதிகாரமுள்ளவர்களுடனோ நாம் எவ்வித மோதலிலும் ஈடுபடாமல் முழுமையாக மக்களுடனேயே நிற்கிறோம்.
ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களுடன் இன்று காலையில் தொடர்பு கொண்டு இவரது தொடர்ந்த அச்சுறுதல்கள் மொட்டைக்கடிதங்கள் பற்றி விசாரித்ததும் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் கடும் தூசண வார்த்தைகளால் பேசினாரே தவிர எனது கேள்விகளுக்கான பதிலைத் தரவேயில்லை. பொறுப்பும் அதிகாரமும் மிக்க அரச அதிகாரியான இவர்  பேசிய அநாகரிகமற்ற பேச்சுக்களின் ஒலிப்பதிவிலிருந்து ஒருபகுதியை இங்கே தருகிறேன். நாகரீகம் கருதி அவரது தூசணவார்த்தைகளை தணிக்கை செய்கிறேன்.


ராயேந்திரபிரசாத்திற்கு நேசக்கரத்துடன் முரண்பாடு ஏன் ?

நேசக்கரம் மூலம் தாயகத்திற்கு அனுப்பப்படுகிற உதவியில் 10சதவீதத்தை தனக்குத்தர வேண்டுமென்றும் தன்னால் இனங்காட்டப்படுகிற வேலைத்திட்டங்களையே நாம் மேற்கொள்ள வேண்டுமென்றும் பலமுறை தொல்லைத் தந்து வந்திருந்தார். அனுப்பப்படுகிற உதவியில் 10சதவிகிதம் தனக்குத் தரப்பட்டால் எம்மை சுதந்திரமாக இயங்க விடமுடியும் எனவும் கேட்டிருந்தார்.

எனினும் இவரது அடாவடித்தனங்களை மீறிய எமது பணியாளர்களின் மீது அவதூறுகளைப் பரப்பியும் அவர்களது மனைவிமாரை தன்னுடன் உறவுக்கு வறுமாறு அழைத்தும் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டிருந்தார்.

எமது பணியாளர்களின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளைக் கொண்டு செல்தல் ஆகையால் இவரது எல்லாவகையான அட்டகாசங்களுக்கும் பொறுமை காத்து தமது பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது நிரந்தரமாக இயங்க முடியாத அபாய நிலமையில் தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள ராயேந்திரபிரசாத்தின் கொலை மிரட்டல் நேரடித்தாக்குதலினால் பணிகளைத் தொடர்ந்து செய்ய முடியாத இடைஞ்சலும் எமது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைகளின் உயிர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் அமைந்திருக்கிறது.

மக்களுக்கான பணிகளை முடக்கும் ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவர்களை மக்கள் முன் இனங்காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எமது பணியாளர்கள் யாவரும் ஊதியம் பெறாது தங்களது சமூகத்திற்கான கடமையாகவே இதுவரை எம்மோடு இயங்கி வருகின்றனர்.

எமது உறவுகளாகிய புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெறப்படுகிற உதவிகளிலிருந்து ஒரு துளியும் எமது பணியாளர்களுக்கோ அல்லது நிருவாகச் செலவுகளுக்கோ எடுக்கப்படுவதில்லை. கிடைக்கிற முழு உதவியும் எங்கள் மக்களையே சென்றடைய வைத்துள்ளோம். உதவிகளை வழங்கியவர்களின் விபரங்கள் உதவியின் பயன் போன்றவற்றையும் மாதம் மாதம் எமது கணக்கறிக்கையில் வெளிப்படையாகவே நேசக்கரம் இணைத்தில் இணைத்து வருகிறோம். இதனை எமது பங்களிப்பாளர்களும் பார்வையாளர்களும் நன்கறிவர்.

ஆனால் அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கொள்ளையடித்து கொழுத்திருக்கிற பணமுதலை ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) இன்னும் பணத்தைப் பெருக்க ஏன் நாம் 10சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் ? உடல் நோகாமல் கொள்ளையடித்தே வாழ்கிற இவருக்கு குளிரிலும் நெருப்பிலும் நாங்கள் கடின வேலைகள் செய்தும் எங்கள் மக்களுக்கு கொடுக்கிற உதவிகளில் பங்கு கேட்க ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) யார் ?

மட்டு மக்களே சிந்தியுங்கள்!

உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைத் தரவும் ஓயாது பணியாற்றிய எமது பணியாளர்களின் உயிர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குமானது கவனிப்பீர்களா? உங்கள் குழந்தைகளின் கல்வியை முடக்கவும் எமது பணிகளைத் தடுக்கவும் தனது அதிகாரத்தை பயன்படுத்தும் இந்த ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) என்ற கொள்ளையனை இனியும் மட்டு மாநகரசபையில் உறுப்பினராக வைத்திருக்கப் போகிறீர்கள் ?

ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) அவரது கொள்(கை)ளைகளும் :-

ராயேந்திரபிரசாத் (கலிங்கன்) கருணா குழுவின் பொறுப்பொன்றில் அங்கம் வகித்தவர். கருணாவின் வானொலியான தேன் FM வானொலியில் வேலைசெய்து கருணாவின் வருமானத்தில் பலகோடிகளைச் சுருட்டியதால் கருணாவால் வானொலியை விட்டு வெளியேற்றப்பட்டவர். அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களின் வாழ்வை அழித்தது மக்களுக்கு பணி செய்த நல்லிதயங்களை ஒதுங்க வைத்தலென தனது பணியாகச் செய்து வருகிறார்.

தற்போது இலங்கையில் இலாபம் கொடுக்கக்கூடிய தொழில்களில் வானொலி தொலைக்காட்சி ஆரம்பித்தல் வருமானத்தை ஈட்டும் தொழிலாக இருக்கிறது. மொழி FM என்ற பெயரில் வானொலியொன்றை ஆரம்பிக்க அருண் தம்பிமுத்துவின் ஆதரவில் மொழி FM வானொலி ஆரம்பிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார். மொழி FM வானொலிக்கான முதலீட்டை மட்டக்களப்பு மகிந்த ராஜபக்சவின் இணைப்பாளரான அருண் தம்பிமுத்து செய்யவுள்ளார். வரவிருக்கிற மொழிFM வானொலியிலிருந்து கிடைக்கிற இலாபம் தவிர மாதாந்தம் தனக்கு 3லட்சரூபாய்களை கொள்ளையடிக்க அதற்கான திட்ட வரைபும் கணக்காளர் ஒருவர் மூலம் செய்து கொண்டுள்ளார்.

வீதிபோடும் ஒப்பந்தக்களுக்கான ஒப்பந்தகாரர்களை இவரே தெரிவு செய்வார். வீதி போட வழங்கப்படும் நிதியொதுக்கீட்டிலிருந்து ஒப்பந்தகாரரிடமிருந்து 10சதவிகிதத்தை கொள்ளையாக பெற்றுக்கொண்டே வேலையை ஆரம்பிக்க அனுமதிப்பார். ஒரு வீதிக்காக அரசு ஒதுக்குவது 10லட்சமாயின் அதிலிருந்து ஒரு லட்சத்தை தனக்கு வாங்கிவிடுவார். 4லட்சம் ஒப்பந்தகாரருக்கு போக மீதி 5லட்சத்தில் தான் வீதி போடப்படும். வீதியின் விதி ராயேந்திரபிரசாத்தின் (கலிங்கன்) பணப்பையையே நிறைக்கும். இது மட்டுமன்றி ஊரில் நடக்கும் இதர பொது விடயங்களிலும் தனக்கான பங்கினை சுருட்டிய பின்னரேயே ஒரு பங்கு ஊருக்கு வழங்கப்படும்.

மட்டக்களப்பில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இவரது கையில் அகப்பட்டு பாகப்பிரிப்பில் தம்மையும் பங்காளிகள் ஆக்கியுள்ளனர். அத்தோடு புலம் பெயர்நாடுகளில் இயங்கும் தமிழ்த்தேசிய ஆதரவு இலத்திரனியல் ஊடகங்களில் தனது உண்மை முகத்தை மறைத்து தொடர்புகளைப் பேணி வருகிறார்.

இப்படி கொள்ளையடித்து மக்களின் வருமானத்தையும் மக்களுக்கான வளமேம்பாட்டுக்கான அரச ஒதுக்கீடுகளிலிருந்து கொள்ளையடித்து கலராக வலம் வருகிற கலிங்கனின் (ராயேந்திரபிரசாத்தின் அட்டகாசங்களை மட்டு மக்களே நீங்கள் தான் முடிவு கட்ட வேண்டும்.

உங்கள் பிள்ளைகளது எதிர்காலம் வளம்பெற கிடைக்க வேண்டிய கல்வியையே முடக்குகிற இந்தக் கொள்ளையனை அகற்ற வேண்டியதும் முகமூடியை கிழிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பே.

 எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்திற்கான நேசக்கரம் பணிகள் தொடர்ந்து முடக்கப்படுகிற அபாயத்தை இவரது செயற்பாடுகள் கொண்டு வந்துள்ளது. எனினும் எம்மீதானதும் எமது பணியாளர்கள் மீதானதுமான அடாவடித்தனங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய நிலமையில் இவ்விடயத்தை வெளிக்கொண்டு வருகிறோம்.

Monday, September 24, 2012

போராளிகளுக்கான உதவிகளும் தொடர் குழப்பங்களும்.

23.09.2012 அன்று முகப்புத்தகத்தில் திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் (நோர்வே) அவர்களால் ஒரு முன்னாள் பெண் போராளியின் யுத்த முடிவின் பின்னரான அவரது நிலமையும் பற்றி எழுதப்பட்டிருந்தது. குறித்த பெண்போராளியின் புகைப்படமும் வந்திருந்தது.

அந்தப்பெண் பற்றிய விபரங்கள் ஏற்கனவே எனக்கு அறிமுகமானது போலிருந்தது. அதுபற்றி சஞ்சயனுக்கு ஒரு மின்மடலிட்டேன். மின்மடலை வாசித்த சஞ்சயன் அவர்கள் உடனடியாகத் தொடர்பு கொண்டிருந்தார். அந்தப்பெண் பற்றிய மேலதிக விபரங்கள் கூறினால் தான் வெளியிட்டுள்ள பெண்போராளி பற்றி தகவல் தர முடியுமென்றார்.

நானும் அந்தப் பெண்ணின் பெயர் சதீஸ் ஜெயக்குமாரி (வேணுகா) மற்றும் அவரது நிலமை உதவி ஒழுங்குகள் பற்றியும் அவரது கணவரை நவம்  அறிவுக்கூடத்தில் சந்தித்திருக்கிறேன் போன்ற விபரங்களையும் தெரிவித்த போது எனது தரவுகள் சரியாக இருந்ததைக் உறுதிப்படுத்திய சஞ்சயன் அப்பெண்ணுக்கான உதவி பற்றியதும் அவரைச் சந்தித்தது பற்றிய தகவலையும் பரிமாறிக் கொண்டார்.

குறித்த பெண்போராளிக்கு ஏற்கனவே த.தே.ம.மு கயேந்திரன், மற்றும் வேறு சிலரும் உதவிகளை வழங்கியிருந்தனர். தொடர்ந்து மாதாந்த உதவியாக அல்லாமல் பெரியதொரு தொகையினை அவர்கள் வழங்கியிருந்தார்கள். அந்த உதவியிலிருந்து குறித்த பெண்போராளி தனக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொண்டார்.

2012 பெப்ரவரிக்குப் பின்னர் அவருக்கான உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென்பதனை நமது தொடர்பாளர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு தனக்கு உதவுமாறு வேண்டியிருந்தார். ஆனால் வேறு உதவி அமைப்புகள் தன்னிடம் விபரங்கள் பெற்றதாகவும் மேலதிகமாக எதனையும் செய்யவில்லையென்று தெரிவித்துமிருந்தார்.

அவரது நிலமையின் தன்மையை உறுதிப்படுத்திய பின்னர் 02.04.2012 அன்று 58100,00 ரூபாய்களை உடனடி உதவியாகவும் வழங்கி மேமாதத்திலிருந்து மாதாந்தம் ஒரு உறவு மூலம் 8ஆயிரம் ரூபாய்களையும் இம்மாதம் வரை வழங்கிக் கொண்டு வருகிறோம்.

இத்தோடு இப்பெண்ணுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊனமுற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு 3ஆயிரம் ரூபாவும் மேலும் ஒரு உதவித்திட்டத்தின் மூலம் 500ரூபாவும் கிடைத்துக் கொண்டிருந்தது. எமது உதவியோடு மாதாந்தம் இப்பெண் 11500ரூபாய்களை மாதாந்த உதவியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இது ஒரு தாயும பிள்ளையும் பசியின்றி வாழப் போதுமானது.

இத்தோடு இப்பெண்ணுக்கான சிகிச்சைக்கு பிரத்தியேக வைத்தியர் ஒருவரிடம் போனால் தனது கை மீளவும் சரியாக இயங்க முடியுமென்று கோரியதன் அடிப்படையில் நேரடியாக யாரும் தொடர்பு கொள்ள முடியாத பணியில் உள்ள அந்த மருத்துவரை அவரது நெருங்கிய நட்பொன்றை அணுகி அவரைச் சந்திக்க மருத்துவம் பெறவும் ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

இத்தோடு தனது மருத்துவ தேவைக்காக ஒன்றரை லட்சரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். அந்தக் கடனையும் குறித்த உதவும் உறவு கட்ட முன்வந்ததோடு இப்பெண்ணுக்கு உதவிக்கு ஒருவரை வைத்து இவரை கவனிக்கவும் தன்னால் உதவ முடியுமென்ற தனது ஆதரவையும் அந்த உறவு வழங்க முன் வந்ததோடு எதிர்காலத்தில் அவருக்கான சுயதொழிலுக்கும் உதவுவதாக முன்வந்து தனது தற்போதைய மாதாந்த உதவியையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இந் நிலமையில் சஞ்சயனின் செய்தி வெளியாகியிருந்தது.

உதவி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவருக்கு இன்னொரு இடத்தாலும் உதவிக்கு விண்ணப்பித்து விளம்பரங்கள் வருவதனை உதவுகிற எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இச்செய்திகளானது உதவுகிறவர்களுக்கு பயனாளிகள் மீதான அவநம்பிக்கையையே தோற்றுவிக்கும்.

இத்தகைய இருபக்க அல்லது பலபக்க உதவிகள் ஒருவருக்கு செல்வதன் மூலம் உதவிகளை ஒருங்கிணைப்பவர்களுக்கும் நடைமுறைச் சிக்கல்களைத் தரும். இத்தகைய சிக்கல்களில் பலமுறை நானும் மாட்டுப்பட்டுள்ளேன். இதனால் பல அரசியல் தலைவர்கள் முதல் பெரும்புள்ளிகள் வரை கோபித்து ஏதோ தங்களது பணிகளை இடையறுப்பதான தவறான புரிதல்களும் நிகழ்ந்துள்ளது. தவறாக  சஞ்சயன் புரிந்து கொண்டு என்னுடன் சண்டைக்கு வரமாட்டார் என்ற நம்பிக்கையிருக்கிறது. பொதுவாக பெற்ற அனுபவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

சஞ்சயனுடன் இதுபற்றி பேசிய பின்னர் ஜெயக்குமாரியிடம் விசாரித்த போது ஜெயக்குமாரியின் கருத்தும் கதைகளும் சஞ்சயனின் உதவிகோரலுக்கு மாறாகவே இருக்கிறது. தனக்கு 20ஆயிரம் ரூபா பணம் தந்துவிட்டு தன்னையொரு படம் எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகவும் தனக்கான உதவியை தொடர்ந்து செய்வதாக எவ்வித உத்தரவாதமும் தரவில்லையெனவும் அவரை சஞ்சயன் நேரில் சந்தித்த பின்னர் ஒருமுறைதானும் தன்னுடன் பேசவில்லையென்றும் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். நேசக்கரம் தன்னை கைவிடாமல் தொடர்ந்த உதவியை ஏற்கனவே தருவதுபோல தருமாறும் கேட்டிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க இப்போராளி பற்றி சஞ்சயன் எழுதிய பின்னர் சில மின்னஞ்சல்கள் வந்திருந்தன. அவற்றில் வேறொரு உதவி அமைப்பின் தொடர்பாளர் ஒருவரும் மடலிட்டிருந்தார். தம்மிடமும் மேற்படி பெண்ணின் விபரம் உதவிகோரி வந்திருப்பதாக.

ஆயினும் குறித்த பெண்போராளிக்கான சஞ்சயனின் உதவிகோரல் முகப்புத்தகத்தில் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. நேசக்கரம் தன்னுடன் இதுபற்றி தொடர்பு கொண்டு பேசியதாகவும் எழுதியுள்ள சஞ்சயன், எனினும் ஜெயக்குமாரிக்கு நிரந்தர வருமானத்தை கொடுக்கும் வழிவகையினை தாங்கள் ஆராய்வதாகவும் பின்னூட்டமிட்டுள்ளார்.

சஞ்சயனின் இம்முயற்சிக்கு 100பேர் விருப்பிட்டும் 112பேர் செய்தியை பகிர்ந்தும் இருக்கிறார்கள். கருத்தெழுதிய பெரும்பாலானோர் தங்களது உதவிகளை ஜெயக்குமாரிக்கு வழங்க முன் வந்திருக்கிறார்கள்.

ஜெயக்குமாரிக்கு உதவியை வழங்குகிற உறவுக்கு இத்தகவலைத் தெரிவித்தேன். குறித்த உறவு தனது உதவியை உதவியற்ற இன்னொரு குடும்பத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

சஞ்சயன் ஜெயக்குமாரிக்கு நிரந்தரமான வாழ்வாதார உதவியை வழங்க ஆலோசிப்பதன் மூலம் நிச்சயம் அவருக்கான நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

நேசக்கரம் அடுத்த மாதத்தோடு ஜெயக்குமாரிக்கான உதவியை நிறுத்துவதோடு அவருக்காக செய்ய முன்வந்த இதர உதவிகளையும் உதவி தேவைப்படுகிற வேறு போராளிகளுக்கு உதவுகிற உறவின் அனுமதியோடும் விருப்பத்தோடும் வழங்க முடிவெடுத்துள்ளது.

இச்செய்தியை பகிர்ந்த விருப்பளித்த செய்தியை மின்னஞ்சல்களில் பரப்பிய அனைவருக்கும் எமது முடிவினை இத்தால் அறியத்தருகிறேன்.

ஜெயக்குமாரி தொடர்பாக சஞ்சயன் எழுதிய பகிர்வும் படமும்  கீழே இணைக்கிறேன் :-
நண்பர்களே! இப்படத்தினை பகிர்வதன் மூலம் முன்னாள் போராளிகள் பற்றிய பிரஞ்ஞையை எம்மக்களிடமும், மக்களமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவர்களிடமும் உருவாக்க உதவுங்கள்.

இவர் முன்னாள் போராளி. அவரின் ஒரு கை சிதைந்து, உருக்குலைந்து, எலும்புகளுக்கு பதிலாக தகடுகள் வைக்கப்பட்டு இயங்கமுடியாதிருக்கிறது.

மற்றைய கையினாலும், வாயினாலுமே தண்ணீர் அள்ளுகிறார். உடைமாற்றுதற்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. மூன்றரை வயதான மகனை பராமரிக்கவும் உதவி தேவைப்படுகிறது.

தனது சிதைந்துபோயிருக்கும் கை
யினை அகற்றாது காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு அறுவைச்சகிச்சைக்காக தனது கிராமத்தில, 20.000 ரூபாய் வட்டிக்கு எடுத்தார். மாதாந்த வட்டி 1200 ரூபாய் கொடுக்கிறார். அவருடைய மாதாந்த வருமானம் 2000 ரூபாய். அதுவும் நிரந்தரமில்லை. ஒரு மாதத்திற்கு 800 ரூபாயே அவர்களிடம் இருக்கிறது.

அறாவட்டிக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள்; போராட்டத்தின் பெயரால் சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்ட புலம்பெயர் அமைப்புக்களோடும், அதற்குப் பொறுப்பாக உட்கார்ந்திருக்கும் பெரு மைந்தர்களோடும் ஒப்பிடும் போது.
 

Friday, September 14, 2012

காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்...

இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே தருகிறேன்.

இவனுக்கு இப்போது நான் சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன்.

இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும் களவாழ்வும் கடைசியில் இவன் நேசித்த காதலி காற்றோடு காற்றாய் முள்ளிவாய்க்காலில் கரைந்ததும் இவனை இன்றுவரை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறது.

நேசக்கரம் மூலம் அறிமுகமான இவனுக்குள் இத்தனை சோகங்கள் புதைந்திருக்குமென நம்பியிராத ஒருநாள் இவன் தன்னை தனது கதைகளைச் சொல்லத் தொடங்கினான்.

இனி வசந்தனின் கடைசிக் களம் பற்றிய கதையைப் படியுங்கள்.....

கதையை ஒலிவடிவில் கேட்க விரும்புவோர் ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.
Posted Imagehttp://www.tamilnews24.com/parthipan/nesakkaram/nesakkaram/audios/anu.mp3

காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்...


சூறாவளியாய் வந்து மனதுக்குள் புகுந்து சுழன்றடித்து இதயத்தை ரணமாக்கும் அவளது நினைவுகள். அவளை அந்த மரணபூமியில் தனிமையில் விட்டுவிட்டுத் தப்பித்து வந்த என்மீது கோபம் கோபமாய் வந்தது.

ஒரே கொள்கை ஒரே இலட்சியம் என்று வாழ்ந்த நமக்குள் நாமே எழுப்பி உயர்த்திய புனிதம் என்ற கற்பிதம் எல்லாம் கவிழ்ந்து நொருங்குவது போல மனசைத் துயர் காவிக் கொண்டு போய்விடுகிறது.
என்னால் மட்டும் எப்படி எல்லாவற்றையும் மறந்து லண்டன் வரை தப்பியோடி வரமுடிந்தது...?

ஓன்றாய் நாம் கழித்த எங்கள் வசந்தகாலம் எங்கே தொலைந்து போனது??????

இறந்த காலத்தில் மட்டுமே வசந்தத்தைக் காணுகிற என்னை இன்னும் இறந்து போகாத நினைவுகளை மட்டும் இழுத்து வைத்திருக்கிற இதயத்தை அவள் நினைவுகள் கூர்மிகு கத்தியாய் பலமுறை பிழந்து போட்டு விடுகிறது.

எத்தனை தான் பாதுகாப்பை எனக்கு லண்டன் அள்ளித் தந்தாலும் எப்போதும் ஒரு அச்சம் இரவுகளையும் கனவுகளையும் கழவாடிச் சென்றுவிடுகிறது.

000     000 000

யாரைத்தேட யாரை விட...? எதுவும் புரியாத வினாடிகள் அவை. எங்கள் பூர்வீக பூமியைக் கண்முன்னாலே யாரோ ஒருவனிடம் பறிகொடுத்துவிட்டு, 17.05.2009 அன்று அந்த முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வீதிவழியே சனத்தோடு சனமாக நானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நடைப்பிணமாகப் போய்க் கொண்டிருந்தேன். எவ்வளவோ தோழ தோழியரின் இரத்தத்தால் சிவந்த மண்ணை விட்டுப் பிரியும் கடைசிச் கணங்களவை.


அந்தத் தாய் மண்ணில் நாங்கள் தோழில் சுமந்து விதைத்த எங்கள் மாவீரக்குழந்தைகளைத் தனியே விட்டு , அவர்களை விதைத்த ஒவ்வோரு முறையும் அவர்கள் கல்லறைகள் மன் உறுதிமொழியெடுத்துக் கொண்டு நிமிர்ந்த நாங்கள் பெற்ற உறுதியும் வலுவும் அன்று உருவழிந்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தது.

எங்கள் இயலாமையும் துயரமும் கண்ணீராய் அந்த மண்ணை நனைத்துக் கொண்டிருக்க கால்கள் மட்டும் நடக்க மாற்றான் தேசம் நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.....

எல்லோருக்கும் கடைசியில் ஏதோவொரு நிறைவு இருந்தது போல எனக்குள்ளும் ஒரு நிறைவு. கடைசியாக அவளை வட்டுவாகலில் சந்தித்த நிறைவு. மௌனமாக எங்கள் இருவருக்கிடையில் பரிமாறிக்கொண்ட மௌனமொழி என் கால்களிற்கு ஓரளவிற்கு வலுச்சேர்த்துக் கொண்டிருந்தது. 6முறைக்கு மேல் கிழிக்கப்பட்ட எனது உடலைச் சுமந்து கொண்டு ஊன்றுதடியின் துணையோடு அவளிடமிருந்து அவளது பார்வைகளிலிருந்தும் விலகுகிறேன்.

000    000     000

எங்கள் இருவரது குடும்பத்திற்குமிடையில் துளிர்த்த குடும்ப நட்பு மூலம் நாங்களும் நட்பாகிக் கொண்டோம். சிறுவயது முதலே துளிர்த்த அந்த உறவு நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகியும் மிக நெருங்கிய நட்புறவாக மலர்ந்தது.

நாங்கள் பதின்மவயதை எட்டிய காலப்பகுதியில் அந்த நட்பு இன்னோர் உறவை உருவாக்கி நாங்கள் நமக்குள்ளே அவரவரையும் சுமக்கத் தொடங்கினோம். எங்கள் பதின்மக்காலம்  மிகுந்த நெருக்கடி நிறைந்த காலம்.

அந்நியப்படைகள் எம்மைச்சுற்றி வளையமிட்டு எங்கள் தாய் மண்ணின் குரல் வளையை நெரித்துக் கொண்டிருந்த காலமது. உயிர் வாழ்வதற்கே எங்களுக்கு ஒரு வழிதான் ஒளியாய் தெரிந்தது. அந்தத் தெரிவை நானே முடிவு செய்து கொண்டேன். எனது முடிவை யாருக்கும் தெரிவிக்க அவகாசம் வைக்காமல் நான் காடுகளில் பயணிக்கத் தொடங்கினேன். கடும் பயிற்சி காவலரண் என ஆரம்பித்து களங்களில் நான் துப்பாக்கியோடு காவலிருக்கத் தொடங்கினேன். எனது கனவு ஒன்றே அது சுதந்திரதாயகமென்பதாகவே முடிவெடுத்துக் கொண்டேன்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தது. அவள் பற்றிய ஞாபகங்களும் வருவதில்லை. களமுனை காவலரண் தோழர்களென எனது கவனம் முழுவதும் களம் தான். ஒரு களமுனையில் ஏற்பட்ட விழுப்புண். பொறுப்பாளரால் கட்டியனுப்பாத குறையாய் ஒரு வார விடுமுறை தந்தனுப்பினார்.

விடுமுறையில் வீட்டிற்குச் சென்றபோது அவளும் எங்கள் வீட்டில் இருந்தாள். அப்போது அவள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்றுக் கொண்டிருந்தாள்.

கடுமையான பயிற்சிகளினால் இறுகிப் போன உடம்பை மறைத்து அணிந்திருந்த சேட் கழுத்தில் கட்டியிருந்த கறுப்பு நூல் என்னையே எனக்குள் பெருமைப்பட வைத்த நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட அலட்சியப்பார்வையுமென மாறியிருந்த  எனது தோற்றம் அவளை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

அடிக்கடி என்னையே பார்ப்பதும் தனக்குள் ஆச்சரியப்படுவதும் ஏதோ ஒரு சந்தோசத்தில் மூழ்குவதும் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. மறந்து போன ஞாபகங்களை அந்தக் குறிகய விடுமுறையில் புதுப்பித்துக் கொண்டோம். குனகாலம் வெளிமனித முகங்களைக் காணாமல் இருந்ததோ என்னவோ அவளை மீளச் சந்தித்ததோடு அவளுடன் அடிக்கடி கதைக்க வேண்டும் போலிருந்தது. சொல்லாமல் ஒளித்து வைத்திருந்த ஆயிரம் கதைகள் அவளுக்குச் சொல்ல வேண்டும் போல ஆயினும் எங்களுடைய கதைகள் பல்வேறுபட்ட துறைகளைச் சார்ந்ததாக முடிந்தது.

விடுமுறை முடிந்து எல்லோரிடமும் நான் பிரியாவிடை பெறும்நேரம்!! அவள் கண் கலங்குவதை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவளிடம் சொல்வதற்கு என்னிடம் நிறைய இருந்தது ஆனால் ஒரு சிறு புன்னகையை மாத்திரம் உதிர்த்துவிட்டு வாசலிற்கு வந்தேன். அவளும் வாசல்வரை வழியனுப்ப வந்தாள்.

அவளுடைய மௌனம் ஏதோ ஒன்றை என்னிடம் சொல்ல எத்தனிப்பதை புரிந்து கொண்டும் நான் ஏதும் கேட்கவில்லை. ஆனாலும் எல்லாவற்றிற்கும் முன்னால் எனது கடமை வந்து நின்று என்னை வேறு பக்கங்களில் சிந்திப்பதைத் தடுத்தது. அன்று விழிகளால் கதைபேசி மௌனங்களால் விடைபெற்றேன் அவளிடமிருந்து....

அதற்குப் பிறகு அவளைச் சந்தித்தது ஆனையிறவுக் களமுனையில் தான். அவள் சீருடை தரித்து
ஒரு அணியை வழி நடத்திக் கொண்டிருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த சீருடையில் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தாள். கிடைத்த ஒரு வாய்ப்பில் அவளுடன் கதைத்தேன். அதன் பிறகு பல தடவைகள் அவளுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்திப்புகளின் போதெல்லாம் எங்களுடைய போராட்ட வாழ்க்கையின் அனுபவங்களை, நாம் சுமந்த இனிய நினைவுகளை, நண்பர்களை, துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டோமே தவிர ஒருமுறைகூட எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் எதிர்காலக் கனவுகள் பற்றியும் கதைத்துக் கொள்ளவேயில்லை.

ஆனாலும் இருவருக்கும் எங்கள் எதிர்காலம் பற்றிய ஏராளம் கற்பனைகள் மனதுக்குள் சிறகடித்துக் கொண்டிருந்தது. எமக்குள்ளான ஆழமான புரிந்துணர்வுடன் இருவரும் பிரிந்து செல்வோம்.

அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ள முடியாது போய்விட்டது. இறுதியுத்தம் தொடங்கி எல்லாரும் கள முனைகளில் கவனமாகியிருந்தோம். விருப்பு வெறுப்பு எதையும் தெரிவிக்க முடியாத களநிலை மாற்றம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் நமது கால்கள் களமே எங்கள் வாழ்வாகிப்போன நாட்களவை.

10.10.2008 ஈழப்பெண்களின் வரலாற்றில் மாலதியென்ற அத்தியாயம் எழுதப்பட்ட 21வருட நினைவுநாள் அது. எனது வாழ்நாளையும் அந்த அதிகாலை மாற்றிவிடுமென்று நான் எண்ணா விடியல் அது.

வன்னேரிக்குளப்பகுதியில் எனக்கான அணியோடு ஒரு முற்றுகைக்கான அணியை ஒழுங்குபடுத்தி முடித்தேன். தலைநிமிர முடியா வெடிச்சத்தங்கள் நடுவில் அந்தக் களநிலமை. எனது அணியை நெருங்கும் முயற்சியில் குண்டுமழைக்குள்ளால் தவண்டு சென்ற நான் களநிலமையில் உக்கிரத்தைப் புரிந்து எழுந்து ஓடுகிறேன். எனது ஓட்டம் விரைவாகி எனது அணியும் நானும்   ஒரு முனையைக் கைப்பற்றிவிடுவோமென்ற நம்பிக்கை என்னுள் பதிகிறது.

ஓடிய எனது கால்கள் தொடர்ந்து இயங்காமல் ஓரிடத்தில் விழுந்துவிட்டேன்.  உடல் களைத்து என்னால் நகர முடியாதிருந்ததை அப்போதுதான் உணர்கிறேன். எனது வயிற்றில் நெஞ்சில் எதிரியின் குறிச்சூட்டாளின் இலக்கு என்மீது நிகழ்ந்ததை. வயிற்றைத் தொட்டுப் பார்த்தேன். இரத்தமும் உள்ளிருந்த உடற்பாகங்களும் வெளியில் வந்து சாவின் நுனியில் நான். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. என்னைக் காக்க எனது அணியால் கூட எனது இடத்திற்கு வரமுடியாதளவு எறிகணை துப்பாக்கிச் சன்னங்கள் முழுவதும் எமது நிலைகள் யாவையும் சல்லடையாக்கிக் கொண்டிருந்தது.

என்னிடமிருந்து சாரத்தை எடுத்து வயிற்றைச் சுற்றிக் கட்டுகிறேன். இரத்தப் போக்கை சற்று நிறுத்தி வைக்கும் கடைசி முயற்சி. அத்தோடு உடலை இழுத்து இழுத்து 500மீற்றருக்கு மேல் தொலைவைச் சென்றடைந்தேன். எனது சக போராளிகளில் ஒருவன் எங்கோ கண்டுபிடித்த கயிற்றுச் சுருளொன்றை என்னிடம் எறிந்தான். அதனை என்னுடலில் கட்டுமாறு கூறினான். அதன் துணையோடு என்னை அவர்களது இடத்திற்கு எடுத்து மருத்துவத்துக்கு அனுப்பும் முடிவில் அவன் செய்த முயற்சிக்கு எனது ஒத்துழைப்பைத் தருமாறு கெஞ்சினான். காயத்தின் வலி அத்தனை தூரமும் உடலை இழுத்து வந்த காயம் எல்லாம் இனி என்னால் இயலாதென்று சொன்னது உடல். அப்படியே செத்துவிடவே விரும்பினேன். நான் கயிற்றைக் கட்டாது விட்டால் தான் என்னிடம் வந்துவிடுவதாகக் கத்தினான் அவன். உயிர் பிழைக்கிற முடிவில்லை ஆனாலும் அவனையும் சாகடிக்க விரும்பாமல் என்னைச் சுற்றிக் கயிற்றால் கட்டினேன்.

அவர்கள் என்னை கயிற்றின் துணையோடு இழுத்தார்கள். காயத்தின் வலியை விட அந்தக் கயிற்றில் இழுபட்ட வலி என்னை நானே அழித்துவிடலாம் போன்ற வலியாயிருந்தது. அயினும் அவர்களது முயற்சிக்கு என் வலியை நான் சகித்து அவர்களது காலடியில் போய்ச் சேர்ந்தேன்.

விடிகாலை 6.30 மணிக்குக் கயாமுற்ற நான் மதியம் ஆகியும் மருத்துவத்திற்கு செல்ல முடியாது மழையாய் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது. நண்பர்கள் தம்மிடமிருந்த சாரங்களை எனக்குச் சுற்றி மாலை ஏழுமணிவரை எனது உயிரைக்காத்து இரவு 8மணிக்குக் கிளிநொச்சி மருத்தவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

எனது உடலிலிருந்து இரத்தம் வெளியேறி நான் பிணம் போலானேன். மனிதர்கள் நடமாட்டம் காயக்காரரின் வருகை சாவுகளின் அழுகை எல்லாம் எனது உணர்வுக்கு கேட்டுக் கொண்டிருந்தது. ஒருவர் எனது உடலைத் தட்டிப் பார்த்தார்.

ஆள் முடிஞ்சுது.....அனுப்புங்கோ...என்றார். எனது உயிர் என்னில் மிஞ்சியிருக்கிறதென்று சொல்லத் துடித்தேன். ஆனால் என்னால் ஒன்றும் சொல்ல முடியாதிருந்தது. என்னைப் பிணங்களோடு சேர்த்துவிட்டார் அந்த மனிதர்.

இரவு 9மணி தாண்டிவிட்டது. என்னைத் தாண்டிப் போன மருத்துவர் சுயந்தன் திரும்பி வந்து என்னைத் தொட்டுப் பார்த்தார். எனது உயிர் இன்னும் இருப்பதனை உணர்ந்து என்னை அங்கே போட்டுப்போனவர்கள் மீது சீறினார்.

உது தப்பாது டொக்ரர்...! இதைவிட தப்பக் கூடிய கேசுகள் கனக்க இருக்கு...அதுகளைப் பாப்பம்....விடுங்கோ....எனச்சிலர் ஆலோசனை கூறினார்கள்.

ஆனால் மருத்துவர் சுயந்தனோ எல்லாரினதும் ஆலோசனையையும் விலக்கிவிட்டு நான் படுத்திருந்த கட்டிலை இழுத்துக் கொண்டு அவசர சிகிச்சையறைக்குள் போனார். துணையாக 3பிள்ளைகளையும் அழைத்தார். என்னை உயிர்ப்பிப்பேனென்ற நம்பிக்கையில் புது இரத்தம் ஏற்ற ஏற்பாடு செய்து தனது சிகிச்சையை ஆரம்பித்தார்.

சிறுகுடல் பெருங்குடல் மண்ணீரல் சிதைந்து சமிபாட்டுத் தொகுதி முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறுநீரகம் முற்றாகச் செயலிழந்து மற்றையதும் உரிய முறையில் இயங்காது போனது. மார்பில் இரு எலும்புகளும் உடைந்து மார்புக்கூட்டில் இரத்தம் நிறைந்து சுவாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். அருகருகே தப்பிவிடுமென்று நம்பிய உயிர்களின் கடைசி நிமிடங்கள் ஏமாற்றமாகிக் கொண்டிருக்க சாவின் கடைசி விளிம்பில் நின்ற என்னை மருத்துவர் சுயந்தன் உயிர்ப்பிக்கத் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளிலும் இறங்கினார். இறுதியில் சுயந்தனின் முயற்சி வென்று நான் உயிர் பிழைத்தேன். சுயந்தன் போன உயிர்களில் 90வீதமானவற்றைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்ற பலரது நம்பிக்கையை மீளவும் எனது உயிர்ப்பு உறுதிப்படுத்தியது.

ஆயினும் தொடர்ந்தும் இயங்க முடியாத அளவிற்குப் போய்விட்டேன். மருத்துவமனையில் கடுமையான நிலையில் வாழ்வா சாவா என்ற நிலமையில்  போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவள் பலமுறை என்னைப் பார்க்க வந்தாள். ஆறுதடவைகள் கீறப்பட்ட வயிற்றையும் என்னையும் பார்த்த எல்லோரும் நான் சாகப்போகிற நாட்களைத் தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவள் மட்டும் எனக்குச் சாவில்லை வாழ்வு வருமென்று நம்பிக்கை தந்து கொண்டிருந்தாள்.

அவளுடைய ஆறுதலான பேச்சும் என்னை உயிர்ப்பிப்போமென நம்பிய மருத்துவர்களின் ஆறுதலும்  எனக்குத் தெம்பும் நம்பிக்கையையும் ஊட்டி என்னைத் தேறவைத்தது. அவள் தனக்குக் கிடைக்கிற நேரங்களில் எனக்காகப் பிரார்த்திப்பதாகச் சொன்னாள். எனது உயிர் செத்துச் செத்துத் திரும்பி ஒருவாறு நான் நடக்கும் அளவிற்குத் தயாராகிவிட்டிருந்தேன்.

000     000     000

இறுதியுத்தம் கடைசிப் பிரதேசத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லாம் முடிவிற்கு வந்து கொண்டிருந்தது. அடுத்தகட்ட முடிவை எடுக்கும் பொறுப்பு சுயமாக அனைவரிடமும் விடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்குரிய முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தனர். நான் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் தான் அவள் இன்னும் சிலருடன் தங்கியிருந்தாள்.

அந்த இடம் எறிகணையும், துப்பாக்கிச்சன்னங்களும் மாத்திரம் நிறைந்த மயான பூமியாக இருந்தது. காயமடைந்து நடக்கமுடியாதவர்கள், இறந்தவர்கள் தவிர மக்கள் கூட்டம் அங்கு குறைந்து கொண்டிருந்தது.

நான் அடுத்து என்ன செய்வதென முடிவெடுக்க முடியவில்லை. எனது கழுத்தில் அந்தக் கறுப்புநூல்; தொங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக ஊன்றுகோல் உதவியுடன் அவளிடம் சென்றேன்.

யார் முதலில் கதைப்பது என்ன கதைப்பது என்ற குழப்பம். இருவரும் சிறிது நேரம் மௌனமாக ஒருவரையொருவர் பார்த்தவாறு நின்றிருந்தோம். அவள்தான் மௌனத்தைக் கலைத்தவாறு

'நீங்கள் சனத்தோட சனமாக போங்கோ' என்றாள்.

'அப்ப நீர் வரேல்லையோ' அவளிடம் கேட்டேன்.

அதற்கு அவள் ஒரு புன்னகையை மாத்திரம் உதிர்த்தாள். அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது. அப்போது அவள் எம்மிலிருந்து மறு திசையை சுட்டிக் காட்டினாள். அங்கு ஒரு போராளித் தந்தை தன் போராளி மகளுடன் நின்றிருந்தான். அவனுடைய மனைவியும் இன்னொரு மகளும் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அது அவர்கள் இறுதி விடைபெறும் நேரம். தந்தையும் மகளும் அங்கு நின்று கொண்டு தாயையும் தன் கடைசி மகளையும் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் சிறிது தூரம் சென்றதும், அந்தக் குடும்பத்தின் கடைசி வாரிசு திரும்பவும் ஓடிவந்து தந்தையைக் கட்டிப்பிடித்து...

'என்ரை கடைசித்துளி இரத்தமும் இந்த மண்ணில தான் சிந்தவேணும் நான் இந்த மண்ணைவிட்டு எங்கையும் போகமாட்டேன்'  என அடம்பிடித்து நின்றாள்.

அந்த பதின்மவயதுப் பெண்ணை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு 'மகள் ! நீ அம்மாவோட
கட்டாயம் போக வேண்டும். எங்கட சரித்திரங்களைச் சொல்றதுக்காகவாவது நீ கட்டாயம்
இஞ்சையிருந்து போகத்தான ;வேணும்' என அவளைத் தேற்றி முத்தமிட்டு அனுப்பி வைத்தார்.

அவள் பேசநினைத்ததையெல்லாம் அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியிருந்தது. அதனால் நான்
ஒன்றும் திருப்பிக் கதைக்கவில்லை. சிறிது நேரத்தில் அந்த இடம் இரத்தச் சேறாகிவிடும். அங்கிருக்கிற உயிர்கள் எம் தேசத்துக் காற்றுடன் கலந்துவிடும்...ஆனால் அங்கு எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத ஒரு கலகலப்பு நிலவியது.

றொட்டி சுடுபவர்கள் ஒருபுறம் தேனீர் வைப்பவர்கள் ஒருபுறம் என ஏதோ வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பது போல அவர்களின் மணித்துளிகள் கரைந்து கொண்டிருந்தது. அவள் தன்கையால் சுட்ட ஒரு றொட்டியை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து..
'இது நான் சுட்டது... எப்பிடி ரேஸ்ற்' என்று சிரித்தபடி கேட்டாள். நான் மௌனமாக அதை வாங்கிச் சாப்பிட்டேன்.

அவள் எனக்காய்ச் சொல்ல வைத்திருந்தது போல வாய் திறந்து சொல்லத் தொடங்கினாள். 'என்ரை வாழ்வோ, சாவோ அது இந்த மண்ணிலை தான். நாங்கள் சின்ன வயதிலயிருந்து ஒருத்தருக்கொருவர் மனதளவில நாங்கள் கனவு கண்டபடி வாழ்ந்திட்டம். ரெண்டு பேரும் இந்த தேசத்திற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்தோம...; எங்கடை போராட்டம் வாழ்க்கை, காதல், எல்லாம் நாங்கள் இல்லாமப் போனாலும் உயிரோடை வாழ வேணும்...அதுக்கு நீங்கள் கட்டாயம் இங்கையிருந்து தப்பிப் போகத்தான் வேணும்'
அவள் எவ்வித தளம்பலுமின்றிச் சொல்லி முடித்தாள்.

துப்பாக்கிச் சத்தங்கள் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் எப்படியாவது என்னை அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தாள். தனது நாட்குறிப்பிலிருந்து ஒரு காகிதத்தைக்
கிழித்து அந்த வீரம்விழைந்த பூமியில் தான் சங்கமிக்கப்போகும் மண்ணில் கொஞ்சம் எடுத்து
சிறுபொதியாகச் சுற்றித்தந்தாள்.

முதல் முதலாய் அன்று அந்த நொடியில் அழுதேன். அவளையும் அவளும் நானும் சேர்ந்து காதலித்த அந்தத் தாய்மண்ணைப் பிரிய முடியாத கொடுவலி என் கண்ணீராய் பெருகிக் கொண்டிருந்தது.

அவள் என்னை விட்டுத் தள்ளிப் போனாள். திரும்பிப் பார்க்காமல் கையசைத்தாள். அத்துடன் எங்கள் தாயகத்திடமிருந்தும் அவளிடமிருந்தும் பிரிய மனமின்றி இறுதி விடைபெற்றேன்.

துப்பாக்கிச் சத்தங்கள் நெருங்கிவிட்டது. சிறிது நேரத்தில் அந்த இடம் புகைமண்டலமாக மாறும்,
அந்தப்புகையில் அவளும் அவளுடைய தோழிகளும் கரைந்து அவள் என்னைவிட அதிகமாய்
நேசித்த தாய் மண்ணுடன் கலந்து விடுவாள். நான் நடக்கிறேன். எனது உயிர் எனது காதல் எனது நேசிப்புக்குரிய அவள் நான் நடந்து கொண்டிருந்த அந்தக் காற்றோடு கலக்கிற சத்தத்தை உணர்கிறது என் காதுகள்.....திரும்பிப் பார்க்கத் துடித்த விழிகளை சனங்களுக்கு நடுவில் எறிகிறேன். கடைசிப் பிரிவில் அவள் கலங்காமல் போக நான் கண்ணீரோடு அவள் கலந்த காற்றைச் சுமந்து கொண்டு போகிறேன்.

ஒருகாலம் எமது எதிரிகள். எதிரியாகவே எம்மோடு போர் புரிந்தவர்கள் முன் நிராயுதபாணிகளாய் நிற்கிறோம். கேள்விகள் விசாரணைகள் என நாம் பிரிக்கப்படுகிறோம். எம்மிடம் எஞ்சியிருந்த எல்லாவற்றையும் சோதனையென்ற பெயரால் அவர்கள் கைப்பற்றுகிறார்கள். எனது காற்சட்டைப் பையில் பத்திரமாயிருந்த அவள் அள்ளித் தந்த மண்ணை ஒருவன் தட்டி விழுத்துகிறான்....என்னுயிரின் கடைசி நினைவும் கடைசி ஞாபகமும் அந்த இடத்தில் கால்களில் மிதிபடுகிறது.....

அவள் கொடுத்த ஒரு பிடி மண் சுற்றப்பட்டிருந்த அவளுடைய நாட்குறிப்பின் தாளில் எழுதப்பட்டிருந்த வரிகள் அவள் உரைத்த கீதையாக!!!! எனக்குள் நெருப்பை விதைக்கிறது....

காலமள்ளிக் கனவைக் களவாடிச் சென்றாலும் காதலியே என்னினிய  கனவின் தேவதையே நீ விட்டுச் சென்ற காதலையும் உனது தேசப்பற்றையும் விடுதலையுணர்வும்  எனது உயிரணுக்களில் சுமந்து கொண்டு போகிறேன்.....

வருடங்கள் இரண்டைக் காலம் எட்டித் தொட்டுவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அவளது நினைவுகள் வந்து நெஞ்சைத் துளைக்கிறது. அவளைத் தனியே விட்டுக் கடல் கடந்து வந்தது சுயநலம் என்று என் முகமே என்னை வெறுப்பது போல் என்னுள் ஆயிரம் கனவுகள் இரவுகளைக் கொல்கிறது....

(போராட்ட வரலாற்றில் பதியப்படாத உண்மை நிகழ்வு.)

17.05.2011

Wednesday, September 5, 2012

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!

காலம் எழுதிய வெற்றிகளில்
நெருப்பாய் இயங்கிய வரலாறு.
இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும்
அசையாத இரும்பின் இருதயம்
உனக்காய் படைக்கப்பட்டிருந்தது.

ஒருகாலம் உனக்கான விலை
உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.
கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த
காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்
ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

‘செயலின் பின் சொல்’
அதிகாரியாய் , பணியாளனாய்
இலட்சியப் போராளியாய் – நீ
இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து
இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான்.

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க
ஓயாதலைந்த பெருநெருப்பு.
எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.
ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு
வழியனுப்பியோர் கனவில் விளைந்த                                                                                                                                                                       வெற்றிகளை அள்ளித் தந்து
விலாசங்கள் விசிலடிக்க                                                                                                                                                                                           வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

23.08.2012 ,
கடைசியாய் கதைபேசி
கண்ணீரோடு விடைபெற்ற போதும்
மீண்டும் கனவுகள் விதைத்துத்தானே
கண்ணுறங்கிப் போனாய் !

வாழ்ந்த போது உனக்கு விலையில்லை
வரலாறுகள் நீ படைத்த போதுன்
பெயருக்கு விலாசமில்லை….!

அன்றைய வீரன் !
காய்ந்து போன உதட்டின் உணர்வையோ
உயிரின் வலியையோ உணர முடியாப் பிணமாய்
இன்று வீழ்ந்து கிடக்கிறாய்
விழிகளில் ஈரம் எதையோ சொல்லத் துடிக்கிறது
விளங்கிக் கொள்ள முடியவில்லை……!

‘வீழ்வதெல்லாம் எழுவதற்கே’
இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி
விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!
நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

அப்பாவின் குரலுக்காய் சாகித்யன்
கணவனின் மீட்சிக்காய் கவிதா
தோழனின் உயிர்காப்புக்காய் நாங்கள்
உன்னைக் காக்க மட்டுமே இறைஞ்சுகிறோம்….!

கண்ணில் தெரியாக்கடவுளே
முன்னால் வாழ்கிற தமிழர்களே
எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!                                                                                                                                                           எந்நாளும் உங்களுக்கு நன்றியுடனிருப்போம்.
01.09.2012

Monday, August 27, 2012

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்....காப்பாற்றுங்கள்...

2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான்.

வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ?

அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் சிறையில் அனுபவித்த துயரின் காயங்கள் ஆற முன்னர் இன்று கோமாநிலையில் கிடக்கிறான்.
காரணம் அறியப்படாத மர்மம் சதீசின் காயங்களிலிருந்து வழிகிறது.

சதீஸ் காப்பாற்றப்பட வேண்டும். அவனுக்கான உதவி தேவைப்படுகிறது. ஈரமுள்ள இதயங்களிடமிருந்து சதீஸின் உயிர்காக்க உதவியை வேண்டுகிறேன்.

உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ள :-

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany :–
தொலைபேசி - 0049 6781 70723
கைபேசி - 0049 162 8037418

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

தொடர்புபட்ட செய்தி இணைப்புகள் :-
http://www.thinakkathir.com/?p=40675
http://www.yarl.com/...howtopic=107143

http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_04.html 

Friday, August 10, 2012

மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.

பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது.
மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது.

போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந்த போராளி சிட்டுவின் நினைவுகளைத் தாங்கிய நிகழ்வில் நிகழ்வை தலைமையேற்று சிறப்புரையாற்றி நிகழ்வைத் தொகுத்து வழங்கிய சந்திரிக்கா சிட்டுவைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிட்டுவுடன் ஒன்றாகப் பயிற்சி முடித்து ஒன்றாக அரசியல் பணி செய்த காலங்களை சந்திரிக்கா தனதுரையில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை ஜெயக்குமார் மகாதேவன் ஆற்றினார்.

கவிதைநூலின் முதல் பிரதியை லெப்.செல்லக்கிளியம்மானின் சகோதரரும் தொழிலதிபருமான சூரி அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் கண்ணன் அவர்கள் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

சிறப்புப்பிரதிகளை ரமேஷ் வவுனியன் வழங்க மூத்த பெண் போராளிகளில் ஒருவரான சீதா ஜீவன், சுதாஜினி றவி, எல்லாளன் திரைப்பட இயக்குனர் சந்தோஸ், வல்வை நண்பர்கள் சார்பில் உதயணன் ,லெப்.கேணல்.ராதாவின் சகோதரி சகிலா,மானுடவியல் ஆய்வாளர் விசாகன் , மூத்த பெண் போராளி சந்திரிக்கா,  தமிழ்த்தகவல்நடுவம் நிறுவனர் வரதகுமார், மற்றும் கணேஸ்,  திருமலை பாலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரையினை நவஜோதி யோகரட்ணம் அவர்கள் வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக நூலாசிரியரின் பதிலுரையுடன் நேசக்கரம் மனிதாபிமானப் பணிகள் பற்றிய அறிமுகத்தோடும் தொடர்ந்த தாயக மக்களுக்கான பணிகள் பற்றிய விபரங்களும் பகிரப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.


Tuesday, July 17, 2012

ஆமிக்காறர் போட்டுக்குடுத்த அம்மாவின் வீடு

2010....,
அம்மா வீட்டிலிருந்து நாட்டுக்காக 4பிள்ளைகளைக் கொடுத்தாள். இன்று அம்மாவுக்காக ஒரு பிள்ளையும் அம்மாவோடு இல்லை. அம்மா உழைச்சுக் கட்டிய கனகபுரம் வீடும் போய் இப்ப பரந்தனில் அம்மாவின் முதிசமான அரை ஏக்கர் வயல் நிலத்தில் ஒரு குடிசைதான் அம்மாவின் வசந்தமாளிகை.

7தகரத்தோடும் ஒரு சின்ன உரப்பையோடும் 2நாளாக காணியில் போயிருந்தாள் அம்மா. ஆண்துணையும் இல்லை ஆட்களின் துணையும் இல்லாமல் தன்கையே தனக்குதவியென்ற முடிவில் புல்லைச் செருக்கி ஒரு பாயை விரித்துப் படுத்துறங்கக்கூடிய அளவுக்குத்தான் நிலத்தைத் துப்பரவாக்கினாள். கதியால் இறுக்கி கிடைச்ச தகரங்களைப் போட்டு வீடாக்கி வாழக்கூடிய வல்லமையில்லாமல் கண்ணீரோடு யாராவது உதவுவார்களா என அம்மா காத்திருந்த நேரம் தான் அது நிகழ்ந்தது.

என்னம்மா ? வீடு போடலயா ?

அம்மாவை வந்து பாத்த ஆமிக்காறங்கள் கேட்ட போது அம்மா அழுதாள். எனக்குப் பிள்ளையளுமில்லை புரிசனுமில்லைத் தம்பியவை நான் தனிய எனக்கொருதரும் உதவியில்லை....அம்மாவோடு பேசிய ஆமிக்காரன் நல்லவனா கெட்டவனா என்றெல்லாம் அம்மா யோசிக்கேல்ல. அந்த நேரத்தில் அம்மாவை ஒருவன் அக்கறையோடு விசாரிச்சதுதான் பெரிசாயிருந்தது.

கொஞ்ச நேரத்தில் அம்மாவின் காணிக்குள் ஆறு ஆமிக்காறர் வந்தாங்கள். ஒரு கொட்டில் போடக்கூடியளவு தடியளும் சாமான்களும் கொண்டு வந்தாங்கள். அம்மா பாத்துக் கொண்டிருக்க அம்மாவுக்குக் குடிசை போட்டு முடித்தார்கள் நடக்க இயலாத ஒற்றைக்காலை மடித்துக் குந்திருந்து வேலைகளைச் செய்ய முடியாத அம்மா நின்று சமைக்கவும் ஒரு ஒழுங்கு செய்து குடுத்தார்கள். அம்மாவுக்கு அந்த உதவியைச் செய்த ஆமிக்காறருக்கு அம்மா நன்றி சொன்னாள். அவர்களில் ஒருவன் அம்மாவோடு சரளமாகத் தமிழில் கதைத்தான். அம்மாவின் பிள்ளைகள் பற்றி விசாரித்தான்.

தடுப்பில் இருக்கிற அம்மாவின் மகளைப் பற்றியும் மாவீரராகிவிட்ட 2மகள்களைப் பற்றியும் காணாமல் போன கடைசி மகள் பற்றியும் சொன்னாள் அம்மா. அம்மாவுக்காக மிஞ்சியிருக்கிற தடுப்பிலிருக்கும் மகளை விடுதலை செய்ய அவனை உதவுமாறு கேட்டழுதாள். அம்மாவின் அழுகை அவனைச் சங்கடப்படுத்தியிருக்க வேணும்.

அம்மா நான் ஒரு சிப்பாய்தானம்மா என்னாலை உங்கடை மகளை வெளியில எடுத்துத்தர ஏலாதம்மா....பெரிய இடங்களிலதானம்மா முடிவெடுப்பாங்க....அவன் தனது இயலாமையை அம்மாவுக்கு வெளிப்படுத்தினான். அப்பாவி அம்மா ஒரு சாதாரண சிப்பாயால் தனது மகளை மீட்டுத்தர முடியுமென்று நம்பி அவனிடம் கெஞ்சியழுதாள்.

000      000       000
மார்கழி 2011.....
மண்ணிறுக்கி வெள்ளம் நுளையாமல் போடப்பட்ட குடிசையைச் சுற்றி 2மீற்றர் தூரத்திற்கப்பால் மழைவெள்ளக்காடாய் நிறைந்து கிடந்தது. மலசலம் கழிப்பதென்றாலும் அவ்வளவு நாளும் வெட்டைகளில் போயிருந்த அம்மாவால் இந்த வெள்ளத்துக்கால் எங்கேயும் போக முடியவில்லை. குடிசைத் தாவாரத்தில்தான் 3நாளாக அம்மாவின் இயற்கைக்கடன் கழிப்பும் நிகழ்ந்து கொண்டிருந்தது. 50தரத்துக்கு மேலாக அலைந்து யூ.என்.எச்.சி.ஆரிடம் வாங்கிய கட்டிலும் மெத்தையும் போர்வையும் அம்மாவை குளிரிலிருந்து காத்தது.

சுடுதண்ணி வைச்சுக் குடிக்கக்கூட முடியாமல் ஈரமான விறகை மூட்டிப் பார்த்தாள். கண்ணுக்குள் புகைமுட்டி கண்வீங்கினதே தவிர சுடுதண்ணி வைக்க முடியேல்ல. ஈரமான விறகைத்தான் திட்டித்தீர்த்தாள். முந்தநாள் வேண்டி வைச்ச பாணில் மிச்சத்தைச் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடித்தாள். தனிமையின் கொடுமை பிள்ளைகள் இல்லாத வெறுமை காரணமில்லாமல் அம்மாவின் கண்களை நனைத்துக் கொண்டேயிருந்தது.

அயலட்டைச் சனங்கள் கோவில்களை நாடிப்போய்க் கொண்டிருந்தார்கள். அம்மா அம்மளவையும் வாசலில் நின்று பாத்துக் கொண்டிருந்தாள். முளங்காலுக்கு மேலை நிக்கிற தண்ணியாலை சாமான் சக்கட்டுகளோடை சனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.

என்னணை நீயும் வாவன் ? சனமெல்லாம் கொயிலுக்குப் போகுதுகள். இரவைக்கு வெள்ளம் கூடப்போகுதாமெண்டு கதைக்குதுகள்....அங்கினை ஒரு தேண்தண்ணியெண்டாலும் குடிக்கலாம் வாணை....பக்கத்து வளவு புவனேசக்கா கேட்டா.

நீ போணை நான் வரேல்ல. எனக்கென்னணை பிள்ளையோ குட்டியோ கொண்டு போற விதி வெள்ளத்தாலை வந்தா வரட்டுமணை....நீ பேரப்பிள்ளை பிள்ளையளெண்டு சொந்தங்களோட இருக்கிறனீ போணை என்னைப் பாக்காதை....

ஏடியாத்தை வாடி வெள்ளத்தில அடிபட்டியெண்டா ஆனையிறவுக்கைதான் மிதக்கப் போறாய்...சனத்தோடை சனமாப் போவம் வா....புவனேசக்காவின் கெஞ்சலுக்கு அம்மா மசியேல்ல. நீ போணை....சொல்லீட்டு கட்டிலில ஏறிப்படுத்தாள். வாறவெள்ளம் அள்ளிக்கொண்டு போய் ஆனையிறவுக்கடலில போட்டாலும் போடட்டுமெனப் புறுபுறுத்துக் கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள் அம்மா.

இடி முழக்கம் மின்னல் காதைப்பிழக்குமாப்போலிருந்தது. மெல்லிய சங்கீதம் போலிருந்த மழை மேலும் பெலத்து ஊவென்ற பேரிரைச்சலோடு காற்றடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் குடிசையின் தகரங்கள் மீது விழுகிற பெரிய மழைத்துளிகளின் சத்தம் துப்பாக்கிச் சத்தங்கள் போலிருந்தது.

இப்படித்தான் ஒரு மழைகாலம் 1989ம் ஆண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்த தனது பிள்ளைகளின் கல்வி மட்டுமே தனது கடைசிக்கனவாக பிள்ளைகளின் கல்விக்கனவில் மூழ்கியிருந்த அம்மாவின் கனவைக் கலைத்துக் கொண்டு போய்விட்டாள் மூத்தவள். வெள்ளைச்சட்டையுடன் காலமை போனவள் வீடு திரும்பவில்லை.

அவளும் அவளுடன் இன்னும் பல பிள்ளைகள் ஊரைவிட்டுக் காணாமற்போயினர். அவர்களோடு அம்மாவின் மூத்தவளும் காடுகள் நோக்கிப் போய்விட்டதாகத் தகவல் வந்தடைந்தது. எங்கை போய் ? யாரைக் கேட்டு ? அம்மாவுக்கு எதுவும் செய்யத் தெரியவில்லை. அவளை நினைத்து அம்மா தினமும் அழுதாள். அவளுக்காக இறைவனைப் பிரார்த்தித்தாள்.

000                  000                   000
ஓன்றரைவருடம் கழித்து வெள்ளைச்சட்டையுடன் போனமகள் வரிச்சீருடையில் வந்து சேர்ந்தாள். உள்ளுக்குள் பெருமிதமும் வெளியில் கோபத்தையும் காட்டி மகளை வரவேற்றாள் அம்மா. அம்மாவின் பேச்சுக்கு மறுகதை கதைக்காதவள் அம்மாவுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தாள். போடி நீயும் உன்ரை அரசியலும்...அம்மா சினத்த போதும் அவள் அம்மாவின் மடியில் கிடந்து ஆயிரம் கதைகள் சொன்னாள்.

அந்த முன்னேற்றமில்லாத கிராமம். பெரிய உத்தியோகத்தில் இவள் வருவாளென்ற கற்பனை கலைந்தது அம்மாவின் ஒவ்வொரு பேச்சிலும் ஒட்டியிருந்தது. வந்தவள் வந்தாள் வீட்டில் மிஞ்சியிருந்த பிள்ளைகளையும் தன் வழியில் வருமாறு கோரிக்கை விடுத்துவிட்டுப் போனாள்.

அதற்குப் பிறகு அவள் தனது தோழிகளோடு சயிக்கிளில் வரத் தொடங்கினாள். சில காலங்களில் மோட்டார் வாகனத்தில் வரத்தொடங்கினாள். பின்னொரு நாள் அவளுக்கு பாதுகாப்பணியோடு பிக்கப்பில் வந்திறங்கினாள். அம்மா அப்பாவி ஆனாலும் தனது மகள் பெரிய பொறுப்பாளரானது அம்மாவுக்கு பெருமையாகத்தானிந்தது. அவளைப் பற்றி எங்கும் கதைத்தார்கள்.

அவள் இப்போது தனியே வருவதில்லை. அவளுக்கான காவலாளருடன் தான் வருவாள். அவளது திறமையால் அவள் ஓர் படையணியையே தாங்குகிற வல்லமையைப் பெற்றுக் கொண்டாள். மேடைகளில் அவளது பேச்சுக் கேட்க ஆயிரமாயிரம் பேர் குவிந்தார்கள்.அம்மாவின்  மகள் பேரொளி பொருந்திய தலைவனின் கனவை மெய்யாக்கப் புறப்பட்ட மகளீரணியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிக் கொண்டிருந்தாள்.

காலம் தன் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்க ஒருநாள் அம்மாவின் கடைசிச் செல்லம் அக்கா போன இடத்திற்குப் போய்விட்டாளென்று பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய மூன்றாமவள் சொன்னாள். அம்மாவுக்கு அழுகை வரவில்லை. தனது பிள்ளைகளின் தெரிவு சரியானதென்று நம்பினாள். அப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பிள்ளைகளும் அக்காவின் வழியில் போய்விட அம்மா தனித்துப் போனாள்.

ஆனாலும் தனக்கென்றொரு வீடு கட்ட வேணுமென்ற ஆசையை அம்மா தனித்து நிறைவேற்ற வேண்டுமென்ற முயற்சியில் சிறுசிறுகச் சேர்த்த பணத்தில் 2அறையில் ஒரு வீடு கட்டி முடித்துவிட்டு மகள்களை குடிபுக அழைத்தாள். மூத்தவளைத் தவிர மற்றவர்கள் அம்மாவின் குடிபுகுகைக்கு விடுமுறை கேட்டு வந்து அம்மாவின் சந்தோசத்தில் பங்கெடுத்துவிட்டுப் போனார்கள். மூத்தவள் மட்டும் வரவில்லை. உதிப்ப முக்கியமோணை உனக்கு ? என ஒருமுறை கேட்டுவிட்டுப் போனாள்.

ஒருநாள் சின்னவள் வீட்டுக்கு வந்தாள். அம்மாவுடன் ஒரு கிழமை நிற்கப்போவதாகவும் சொன்னாள். அன்று அம்மா அடைந்த ஆனந்தத்தினை இப்போதும் நினைத்துப் பார்ப்பதுண்டு. அம்மாவைப் பிரியும் கடைசி விடையது என்றதை அம்மா அறிந்திருக்காத காலமது. அம்மாவை இருக்க வைத்து வீட்டு வேலைகள் எல்லாம் செய்து அந்த ஒரு கிழமையும் அவள் அம்மாவை மகாராணியாகவே வாழ்வித்தாள். கடைசி நாள் அவளை அழைத்துப் போக வாகனம் வந்து நின்றது. மூத்தவளும் அந்த வாகனத்தில் வந்திருந்தாள்.

என்னணை கடைக்குட்டியைக் கண்டோடனும் என்னை மறந்திட்டா போல....? அம்மா சிரித்தாள். அன்றைக்கு அம்மாவுக்கு அவளுக்க ஒரு பதிலும் சொல்லத் தெரியவில்லை. தங்கையை ஏற்றிக் கொண்டு போய்விட்டாள் மூத்தவள்.
ஒரு மாவீரர் வாரத்தில் வீட்டுக்கு வந்தார்கள் சில போராளிகள். அம்மாவின் கடைக்குட்டி அன்னியத் தெருவொன்றில்  தன்னைப் பிச்செறிந்து காற்றாகிவிட்டதாய் அம்மாவுக்குச் சொல்லப்பட்டது. முதல் விழுந்த அடியும் இடியும் அது. செய்தியறிந்து அம்மாவை ஆறுதல்படுத்த வந்த மூத்தவள் சொன்னாள்....அவள் பேர் சொல்ல முடியாத வேர்களோடை தன்னைக் கொடையாக்கீட்டுப் போயிற்றாளம்மா...அவளின்ரை உயிர் எங்களுக்குப் பெரிய வெற்றியைத் தந்ததம்மா....

அம்மாவின் கடைசிக்கனவு கடைசிச் செல்லம் வாய்விட்டுப் பெயர் சொல்லியழ முடியாதவளாய் போய்விட்டாள். கருவறை தீப்பற்றியெரிவது போல அவளது ஞாபகங்கள் அம்மாவைச் சுற்றும் போதெல்லாம் உணர்வுகள் தீயாகும். அவளைப் பார்க்க வேண்டும் போல அவளைக் கட்டியணைக்க வேணும் போல...எவ்வளவோ உணர்வுகள் அம்மாவின் உயிரை இறுக்கி அழுத்தும். அம்மா தொடமுடியாத தூரத்தில் நின்று சிரிக்கிற அம்மாவின் கடைசிச் செல்லத்தின் குரல் மட்டும் தான் அம்மாவுக்கு மிச்சமாய் கேட்கும்.....

5பிள்ளைகளை நாட்டுக்காகக் கொடுத்துவிட்ட அம்மாவின் கொடையை ஊரில் பெருமையோடு சொல்லுவார்கள். ஆனால் ஒண்டெண்டாலும் என்னோடை இருக்கலாம்....என்ற சின்ன வருத்தம் எப்போதும் இதயமூலையில் வலியைக் கொடுத்தபடியே இருந்தது.

000       000           000
2000ம் ஆண்டு அம்மாவும் பி;ள்ளைகள் போன வழியில் மெல்லத் தன்னையும் இணைத்துக் கொண்டாள். 2001 சமாதானக் கதவுகள் திறபடும் அத்தியாயத்தை எழுதிய பெருஞ்சமரில் ஒன்றான வடமுனையை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த தீச்சுவாலை நடவடிக்கையில் அம்மாவின் மூத்தவள் காயமடைந்தாள்.

விழுப்புண்ணடைந்த மகளுக்கு மருத்துவம் பார்க்க அம்மாவும் போனாள். அங்கே அவள் போன்ற பல பிள்ளைகள் அம்மாவின் மகள்களாயினர். அம்மாவிற்கு அந்த உலகம் பிடித்திருந்தது. அம்மா செய்யாத செய்யத் துணியாத எத்தனையோ வெற்றிகளைச் செய்துவிட்டு அங்கே அம்மாவின் குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுக்குத் தனது காலங்கள் பற்றியெல்லாம் கதை சொல்லுவாள். ஒரு பெரிய பொறுப்பாளரின் அம்மாவென்ற எண்ணம் ஏதுமில்லாத ஒரு சாதாரண அம்மாவாய் அவர்களோடு அம்மா ஒன்றாகினாள்.

ஆடி 2001 கொழும்பைத் தாக்கிய புலிகளணியின் வெற்றி பற்றி அம்மாதான் பிள்ளைகளுக்கு ஒடியோடிச் செய்தி சொன்னாள். தானே கட்டுநாயக்காவில் நின்று தாக்குதல் செய்தது போலிருந்தது அம்மாவின் ஆரவாரம். அம்மாவின் கடைக்குட்டி கரைந்த தெருவில் ஒருநாள் காலாற நடந்து அவள் கடைசி மூச்சின் வாசனையை நுகர வேணுமென நினைத்துக் கொண்டாள்.

2002 பெப்ரவரி சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டது. எல்லா அம்மாக்களைப் போல அம்மாவும் நம்பினாள். இனிச் சண்டையில்லை சமாதானமென்று. ஒரு பொழுது அன்னியத் தெருவில் காற்றோடு காற்றாய் கலந்த சின்னவள் கடைசியாய் தன்னுயிரை வீசிய தெருவைப் பார்க்க ஆசைப்பட்டாள் அம்மா. அம்மாவின் ஆசையும் ஒருநாள் நிறைவேறியது. சின்னவளை கடைசியாக வழியனுப்பியவன் அம்மாவை அவள் கரைந்த தெருவிற்கு கூட்டிப்போனான்.

அம்மாவின் செல்லக்குழந்தை கரைந்த தெருவில் அன்னியமொழியும் அன்னியப் பழக்க வழக்கங்களும் சிந்திக்கிடந்தது. ஒரு தடையை உடைத்து வெற்றியைக் கொடுத்து பேருமில்லை கல்லறையுமில்லாமல் கரைந்தவளின் நினைவில் கரைந்து ஊர் திரும்பியதிலிருந்து சின்னவள் கலந்த தெருவே அம்மாவை இடைஞ்சல்படுத்திக் கொண்டிருந்தது.  அந்த நினைவுகளிலிருந்து விடுபட அம்மாவுக்கு பலமாதங்கள் சென்றது.

சின்னவள் கரைந்த நாளைக்கேட்டு அவளுக்காக அம்மா விளக்கெரிக்கத் தொடங்கினாள். ஊமையாய் அம்மா இரவுகளில் வடித்த கண்ணீர் பகலில் பெண்போராளிகளுடன் புன்னகைத்தபடி வேலையில் நிற்பா.

போராளிகளுடனான அம்மாவின் வாழ்வு முள்ளிவாய்க்கால் வரையாகி 18.05.2009 ஓய்ந்து போனது. கண்ணீரோடு கடைசிவிடை பெற்றுப் போன அம்மா நேசித்த பிள்ளைகளின் பிரிவோடும் துயரோடும் அம்மா அந்தரித்தாள்.

மோனை வாணை நாங்களும் போவம்....நான் வரேல்ல நான் குப்பிடியடிக்கப்போறன்....இவ்வளவு பேரையும் சாகக்குடுத்திட்டு எங்கேயணை வரச்சொல்றீங்கள் ? மூத்தவள் அம்மாவுடன் இப்படித்தான் முரண்டுபிடித்தாள். என்ரை குஞ்சு அம்மாக்கு நீ மட்டும்தானணை மிச்சம்.....வா ராசாத்தி எல்லாரும் தான போகினம் நாங்களும் போவம்......

அம்மாவின் கண்ணீரும் அம்மா நேசித்த அம்மாவின் மூத்தவள் வளர்த்த பிள்ளைகளின் கண்ணீரும் அம்மாவின் மூத்தவளை உயிர் காத்து ஓமந்தையில் நிறுத்தியது.

ஒருகாலம் மூத்தவளை அக்காவென்றவர்கள் அவள் பெயரைச் சொல்லியழைத்து தலையாட்டிகளாய் அவளைச் சிறைக்கனுப்பிய துயரம் அம்மாவால் மறக்க முடியாத துயரமாய் தொடர்கிறது.

ஓமந்தையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூத்தவள் தான் இப்ப அம்மாவை அதிகம் வாட்டுகிற துயரமாகிப்போனாள். மகள் சிறைவாசம் முடித்து வர அவளுக்கொரு கலியாணம் கட்டி வைக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. ஒவ்வொரு முறையும் மூத்தவளைக் காண கொழும்பு போகிறபோதெல்லாம் விடைபெறச் சில நிமிடங்கள் திருமணம் பற்றித்தான் சொல்லியழுதுவிட்டு வருவாள்.

அம்மாவின் மகள் தன்சகபோராளிகள் எத்தனையோ பேருக்கு திருமணம் செய்து வைத்தாள். ஆனால் தனக்கொரு துணையை அவள் தேடாமல் விட்டது பற்றி அம்மாவுக்குச் சரியான கவலை.

எணயம்மா  40வயதாகீட்டுதணை இந்தா பாரணை எத்தின நரைமுடி இனி எனக்கொரு மாப்பிளை தேடி நான் கலியாணங்கட்டி...சும்மா போணை....அம்மாவின் திருமணக்கதை கேட்டால் இப்படித்தான் அலுத்துக் கொள்வாள் மூத்தவள். ஆயினும் மூத்தவளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டே தான் கண்மூடுவேனெண்ட வைராக்கியத்தோடு அம்மா காத்திருக்கிறாள்.

000          000           000

அன்று சனிக்கிழமை. வெளியில் மழை ஓயாது பேயடையாகப் பெய்து கொண்டிருந்தது. அம்மாவின் வசந்தமாளிகையையும் அள்ளிக் கொண்டு போய்விடுமோ என்ற கணக்கில் வெளியில் வெள்ளக்காடாயிருந்தது.
அம்மாவை மாதம் இருமுறை தொலைபேசியில் அழைத்து சுகம் விசாரிக்கும் மூத்தவளின் தோழி அழைத்திருந்தாள்.

அம்மா ! என்ற அவளது அழைப்புக்கு முன்னம் 'அம்மாச்சி சொல்லணை' என்று அவளை அடையாளம் கண்டுவிட்ட பெருமையில் அம்மா அவளை அழைத்தாள்.

என்னம்மா எப்பிடியிருக்கிறீங்கள் ? இருக்கிறன் செல்லம். என்னம்மா ஒரே மழையாம் உங்கடை பக்கம் ? ஓமடா செல்லம் தெரியும்தான பிள்ளைக்கு அம்மான்ரை நிலமை....ஊத்திற மழை அம்மாவையும் பரந்தனுக்காலை ஆனையிறவிலை கரை சேர்க்குதோ தெரியாது.....!
ஏன் குஞ்சு கனநாள் எடுக்கேல்ல ? அம்மாவோடை மாதம் ஒருக்கால் கதை மோன... என்ரை செல்லம் கதைச்சியெண்டா எனக்கும் ஆறுதலாயிருக்குமெல்லே....

எங்கை ஒரே வேலையம்மா.... அதான் கனநாள் கதைக்கேல்ல....
அவளெப்பிடியம்மா இருக்கிறாள் ? ரெண்டு கிழமை முன்னம் போனனான்....இருக்கிறாள்....சரியா மனசுடைஞ்சு போயிருக்கிறாள்....அவளுக்கு என்ர கவலைதானணை....நான் கிழவி இண்டைக்கோ நாளைக்கோ போயிருவன்.....ஆனா என்ர பிள்ளைதானம்மா தனிக்கப்போறாள்.... அவளை நினைச்சாமல் தண்ணி வென்னியும் இறங்காதாம் மோன....என்ரை பிள்ளையைக் கைவிட்டிராதையணை என அழத்தொடங்கினாள் அம்மா.

அவ்வளவு கெதியில நீங்க போகேலாதம்மா....அவளுக்கு கலியாணங்கட்டி வைச்சு பேரப்பிள்ளையளெல்லாத்தையும் வளத்து விட்டிட்டுத்தான் நீங்கள் போகலாம்....அம்மாவின் கண்ணீருக்கு இப்படித்தான் ஒவ்வொரு முறையும் அம்மாவின் வயிற்றில் பிறக்காத மகள் சொல்லிச் சமாளிப்பாள்.
மழை பெலத்துக் கொண்டிருந்தது. அம்மா 2வாரம் சேர்த்து வைத்து அவளுக்குச் சொல்லியாற நினைச்ச எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். அம்மா கதைத்தவை துண்டம் துண்டமாய் முறிந்து முறிந்து கேட்டுக் கொண்டிருந்தது....

அம்மா நீங்கள் கதைக்கிறது விளங்கேல்ல....பொறுங்கோ கட்பண்ணியெடுக்கிறன்.... மூத்தவளின் தோழியின் தொடர்பு அறுபடுகிறது....தனது கதைகளை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அம்மா தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள்.....

அம்மாவின் குடிசையின் கூரைத்தகரம் ஒரு கரையால் அடித்த காற்றில் எத்துப்பட்டு அம்மா படுத்திருந்த கட்டிலிலை மழைத்துளிகள் நனைத்துக் கொண்டிருந்தது. சுடுதண்ணி வைக்க அம்மா சேமித்து வைத்திருந்த சுள்ளி விறகுகள் ஈரமாகிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் யுத்த முனைபோல சத்தமும் கண்ணைப்பறித்தெடுக்கும் ஒளியாயும் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு ஆமிக்காரர் போட்டுக் கொடுத்திருந்த வசந்தமாளிகையை மழைகொண்டு போகத் தொடங்க வெள்ளம் உள்ளே புகுந்தது. அம்மாவின் மிச்சமாய் இருந்த சில பாத்திரங்களும் தேனீர் கேற்றிலும் மிதந்தது. அம்மா தலையிலடித்து அழத் தொடங்கினாள்....

தை 2012