அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள்.
அக்கா….நான் முகாமிலயிருந்து வெளிய வந்திட்டன்….அவரைத்தானக்கா காணேல்ல…..தேடலாமெண்டு சொல்லீனமாக்கள்…ஆனா நான் எல்லா இடத்திலயும் தேடீட்டன் ஒரு தொடர்புமில்லை….இஞ்சை ஆக்கள் சொல்லீனமக்கா கனபேர் வெளிநாட்டிலை இருக்கினமாமெண்டு….இவரும் உங்கினேக்கை எங்கையும் இருப்பரோண்டு தேடேலுமேக்கா…..?
அவளது அப்பாவித்தனமான கேள்விக்கு எந்தப்பதிலைச் சொல்ல…..? ஆரிட்டையும் விசாரிச்சுப் பாப்பம்….அப்ப ஆரோடை இப்ப இருக்கிறீங்கள்……? எத்தினை பிள்ளையள் ? ஒரு தோட்டக்காணியில என்ரை பாவத்தைப்பாத்து ஒரு கொட்டிலொண்டு போட்டு ஒராக்கள் தந்திருக்கினம் அதிலதானிருக்கிறன்…..4பிள்ளையள்…..வீட்டாக்களின்ரை தொடர்புகளும் ஒண்டுமில்லை….இவற்றை தமக்கையும் நானும் தான் இதில பிள்ளையளோடை இருக்கிறோம்……அவாக்கு ஆரோ சொன்னவையாம் வெளிநாடுகளுக்கு கனபேர் போயிருக்கினமாமெண்டு…..இவரும் வெளிநாட்டுக்குப் போயிருப்பரெண்டு சொல்றா….உங்களுக்குப் புண்ணியம் கிடைக்குமக்கா ஒருக்கா தேடிப்பாருங்கோ…..என்ரை பிள்ளையளும் நானும் சரியா கஸ்ரப்படுறமக்கா….அவள் அழத்தொடங்கினாள்…..
எங்கே எந்தப் பெயரைச் சொல்லித் தேடுவது ? அவள் கண்ணீரின் கனம் மறுமுனையில் என் கண்களால் வடிந்தது. எத்தனையோ பேரின் கனவும் வாழ்வும் தியாகங்களும் ஒரு கனவின் விழித்தல் போல எல்லாம் முடிந்து போயிற்று. கனவுகள் தாங்கிக் களங்களில் நின்றவர்கள் ஆயிரமாயிரமாய் காணாமலும் தடைமுகாம்களிலும் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் வரை எல்லாம் எல்லாரும் எங்கிருந்தார்கள்…..?
அவள் அவன் இருப்பானென்ற நம்பிக்கையில் அவனைப்பற்றிச் சொல்லியது மட்டும்தான் அவன் பற்றிய தற்போதைய அடையாளம். அவள் இன்னமும் அழுதுகொண்டிருந்தாள்.
இயக்கத்தில் இணைந்த ஆரம்பமே அவனுக்குக் கள அனுபவமாகவே அமைந்தது. களங்களில் அனுபவம் காரியமாற்றலில் அவனுக்கிருந்த அசாத்தியம் எல்லாம் ஒருங்குசேர்ந்து அவன் புலனாய்வுப்பிரிவில் ஒரு பொறுப்பாளனாய் நியமனம் பெற்றான். அவன் பொறுப்பில் அவனது ஆழுமையில் பலநூறு புலனாய்வுப்போராளிகள் உருவாகினார்கள். ஒரு புலனாய்வாளனுக்குரிய எல்லாத்தகுதிகளும் அவனுக்கு வாய்த்திருந்தது. இந்த ஆழுமை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் இலகுவாய் சென்று வென்று வரும் வல்லமை வாய்த்தது.
வெளிவேலையில் இருந்த காலங்களில் அவனுக்கு ஆதரவாயிருந்த அவளது குடும்பத்துடன் அவனுக்குப் பரிச்சயமாகியது. அவன் மீது அந்தக்குடும்பம் வைத்திருந்த நம்பிக்கையும் அன்பும் அவளது பெற்றோரின் விருப்போடு அவளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.
ஆர்ப்பாட்டமில்லாமல் நடைபெற்று முடிந்த திருமணத்தில் உறவினர்களுக்கு பெரியளவு மகிழ்ச்சியைக் கொடுக்காதது ஒரு குறையென்றே இல்லாத அளவு அவள் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். முதல் குழந்தைபிறந்து நான்காவது மாதம் அவன் உள்ளே திரும்பியும் போகவேண்டிய வேளை வந்தது. அவனோடு அவளும் வன்னிக்குள் போய்ச்சேர்ந்தாள்.
2008 மூன்றாவது குழந்தையும் பிறந்தது. குழந்தைகளோடு அவள்….அவன் தனது கடமைகளோடு…..சில நேரங்களில் வீட்டுக்கும் வராமல் நின்றுவிடுவான். விரும்பி ஏற்ற வாழ்வு அவனுடனானது…அதில் முரண்பட அவளுக்கு எதுவுமிருக்கவில்லை. அவனுக்கு முரண்பாடு மிக்க கடவுள் நம்பிக்கை சாத்திர சம்பிரதாயங்கள் யாவையும் அவள் வீட்டிலிருந்து வரும்போதே தன்னோடு கூட்டிவந்தது பற்றி தெளிவுபடுத்தப் பலதரம் முயன்றும் தோற்றுப்போனான். அதற்குமேல் அது அவளது சொந்த விருப்பு வெறுப்பு என அவற்றில் தன் தலையை உடைக்காமல் தப்பித்தான்.
வெள்ளி செவ்வாய் தவறாது அவளது விரதங்கள் கெளரிநோன்பு கந்தசஷ்டி முதல் வருடத்தில் என்னென்ன விரத நாட்கள் இருக்கிறதோ அத்தனையும் அவள் பின்பற்றிவரும் விரதங்களாகியது. தனது கடவுள்களும் விரதங்களும்தான் அவனை வாழ்விப்பதாக அவளது நம்பிக்கை.
போரின் உக்கிரம் தினம் தினம் சாவும் அழுகையும் நிறைந்த நாட்களால் வன்னிமண் சூழப்பட்ட போது ஒருநாள் அவனிடம் கேட்டாள்….எல்லாத்தையும் விட்டிட்டு அம்மாவேட்டைப் போவமோ…..? வன்னியை விட்டு வெளியேறிவிடுவோமென்று விடாப்பிடியாய் நின்றாள். அவனது கொள்கைக்குள் அவளது கண்ணீரும் பிள்ளைகளின் வாழ்வும் அமிழ்ந்து போய்விட வாழும்வரை வன்னி மண்ணுக்குள்ளேயே வாழ்வு முடியுமென்று முடிவாகக் கூறியிருந்தான். அந்தச் சொல்லுக்குப்பின் அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென்பது முடிவாகியது.
இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இனி இடம்பெயர முடியாது முள்ளிவாய்க்காலில் போய்ச் சேர்ந்தவர்களோடு அவளும் குழந்தைகளுமாக ஓர் மூலைக்குள் ஒதுங்கிக் கொண்டாள். அவன் அவளையோ பிள்ளைகளையோ பார்க்கவும் வராமல் களங்களில் காவலிருந்தான்.
எழமுடியாத எறிகணைக்குள்ளும் அவனைத் தனது சாமிகள் தான் காக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் நம்பிய சாமிகளைத்தான் நம்பிக் கொண்டிருந்தாள். தன்னோடு கூடவே கொண்டு வந்த கந்தசஸ்டி கவசப்புத்தகத்தை இரவும் பகலும் பதுங்குகுளிக்குள்ளும் ஓதிக்கொண்டேயிருந்தாள்.
அதுவொரு வெள்ளிக்கிழமை. விடியப்பறம் வீட்டுக்கு வந்திருந்தான். நன்றாக மெலிந்திருந்தான். நித்திரை இழந்த கண்களும் , வெட்டப்படாத தலைமுடியும் , சேவிங் செய்யப்படாத தாடியும் மீசையும் அவனைப் பார்க்கவே ஏதோ போலிருந்தது. கனநாட்கள் வராமலிருந்தவன் அதிசயமாய் வந்திருந்ததை அவதானித்தவள்….. உதென்ன வேட்டைக்கு வளத்தமாதிரி தாடியும் மீசையும்….புறுபுறுத்தாள்…..இத்தினை அவலத்துக்கையும் இப்ப இதுதான முக்கியம் சொல்ல எழுந்த சொற்களை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டான்.
பிள்ளையளையெண்டாலும் கொண்டுபோயிருக்கலாம்…..எங்கை நான் சொல்றதில எதுதான் விளங்கியிருக்கு……சாவெண்டா சா சண்டையெண்டா சண்டையெண்டவைக்கு எங்கை புரியப்போகுது இதெல்லாம்…..உங்கா உந்தப் புள்ளையள் எத்தினைநாளா பங்கருக்கை கிடக்குதுகள்….வளமையாக அவள் வாய் திறக்க முதல் ஆயிரம் கதைசொல்லிச் சமாளித்து விடுகின்றவன் அன்று வாயே திறக்கவில்லை.
எல்லாரும் வெளியில போறதில நிக்கிறாங்கள்…. நானும் கடலால போகலாமெண்டு நினைக்கிறேன்…. சரணடையப்போறதா பொடியள் கதைக்கிறாங்கள்….தொடர்புகள் எல்லாம் விடுபட்டுப் போச்சுது….அரைவாசிச்சனம் போயிட்டுதுகள்….எங்கடை பக்கத்தாலையும் கனபேர் போயிட்டினம்….நீயும் பிள்ளையளைக் கொண்டு போ நான் கடலாலை பக்கத்து நாட்டுக்குள்ளை போகலாமெண்டு யோசிக்கிறேன்….போறதுக்கு காசு வேணும்…
அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்க்கும் தைரியம் துணிவு எதுவுமே அவனிடம் இருக்கவில்லை. ஒண்டுமில்லாம வெறுங்கையோடை நிக்கிறம்…இதில என்னண்டு காசு….? அவள் கேட்டாள். உம்மடை தாலிக்கொடியைத் தந்தா சமாளிப்பன்….தாலிக்கொடி….? ஏதோ உலகம் இடிந்து போனதைப்போல உறைந்து போனாள். வார்த்தைகள் வரவில்லை…..
சாமிகளும் சமயமும் மூச்சென வாழ்கின்றவளிடம் தாலிக்கொடியென்றதும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாள். வெள்ளிக்கிழமையில தாலி கழட்டினா தரித்திரமெண்டது தெரியாதோ…? உமக்குத் தாலி முக்கியமோ உயிர் முக்கியமோ….? கடுமையாகத்தான் கேட்டான். நான் சொன்னதை எப்ப கேட்டிருக்கிறியள்…?அழுதாள்….. வெள்ளிக்கிழமை தாலி கழற்றுவது பற்றித்தான் பக்கவீட்டிலும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. உயிரைக் கழற்றிக் கொடுப்பது போல கழுத்திலிருந்த தாலியைக் கழற்றிக் கொடுத்தாள். கையில் வாங்கிய அவனது கண்ணிலிருந்தும் கண்ணீர்ச் சொட்டுக்கள்…..அவளுக்காக எதையுமே செய்திருக்காது அவளது சாமி நம்பிக்கையில் ஒருநாளும் தலையிடாதவன் இன்று அவளது மனம் சஞ்சலப்படும்படி நடந்து கொள்வது வேதனையாகத்தானிருந்தது. எல்லாம் கைமீறிப்போன நிலமையில் இந்த மூடநம்பிக்கையையெல்லாம் பார்த்து என்ன பயனென்று நினைத்தவன் அவள் அறியாமல் கண்ணீரைத் துடைத்தான். பிள்ளையள் கவனம் கவனமா போ….அக்கா வாறனெண்டவா…..அவவோடை சேந்து போ….கடலுக்காலை கடந்திட்டா எப்பிடியும் நாங்கள் சந்திக்கலாம்…..சொல்லிவிட்டுப் போனான்.
அவளது அழுகையும் குழந்தைகளின் முகமும் கண்ணுக்குள் வந்து கொண்டிருந்தது. கடற்பயணத்துக்காக தயாரானவர்களோடு அவனும்….
உயிர்கள் பறிபோய்க் கொண்டிருந்த அந்தக் கடைசிநேரத்திலும் பணமே எங்கும் எல்லாவற்றுக்கும் முன்னணியில் நின்றது…பணமில்லாதவன் பிணமென்ற யதார்த்தம் நிறைந்த உண்மையை அந்தக்கணங்களில்தான் அவன் உணர்ந்து கொண்டான். கேட்கப்பட்ட பணத்தோடு சென்றவர்கள் மட்டும் கடல்கடக்கும் பயணத்தில் தெரிவாக….இவனும் இவன்போன்ற ஏழைகளும் கண்ணீரோடு திரும்பினார்கள்…..
இந்த மண்ணுக்காகத்தான நாங்கள் இருவது முப்பது வருசமா எல்லாத்தையும் விட்டுக்கிடந்தம் எங்களுக்கே இந்த நிலையெண்டா…..சாதாரண சனங்களின்ரை நிலமை….அவனோடு கடைசிவரையும் நின்றிருந்த ஒருதோழன் சொன்னான்….அவனது வார்த்தைகளின் உண்மையை அங்கே யாவரும் மெளமனமாக உணர்ந்து கொண்டார்கள். போனப்போகுது இந்த உயிர்தானே போகட்டும் என்ற அந்தத்தோழன் கழுத்தில் கட்டியிருந்த குப்பியைக் கையில் எடுத்தான்…..இது கூட எங்களைக் காப்பாற்றத்தான்…..அந்தக்குப்பியை அவன் மென்று கொண்டான்….அவன் தனது உயிரை மாய்த்துக்கொள்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் தடுக்கவேயில்லை.
காலையில் அவனது மனைவியும் இவனது மனைவிபோலவே 4குழந்தைகளோடு தாலியைக்கழற்ற அடம்பிடித்து அழுதது ஞாபகம் வந்தது. குப்பி கடித்தவனைக் காப்பாற்ற மருத்துவமும் இல்லை மனிதர்களும் இல்லை….கூவிவந்த எறிகணை நடுவில் அந்தத் தோழனின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. இவனால் தன்னை அழிக்கவும் தைரியமில்லாது தளர்ந்தது மனம். கழற்றிய அவளது தாலியைக் கொடுத்துவிட்டு இனிச் சாகும்வரை அவளோடும் பிள்ளைகளோடும் இருப்போமென்ற நினைவோடு இருள் பரவிய மைம்மலில் வீட்டுக்குப் போனான்….
அவனது மூத்தக்காவும் அவனது பிள்ளைகளும் பதுங்குகுளிக்குள் படுத்திருந்தனர். அவள் பதுங்குகுளி வாசலில் மெழுகுதிரியில் கந்தசஸ்டி கவசம் உச்சரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளது பெயரைக் கூப்பிடும் வரைக்கும் அவன் வரவைக்கூட அவதானிக்காது கந்தசஸ்டி கவசத்திலேயே கவனமாயிருந்தாள். அவளிடமிருந்து எதுவித சொற்களும் எழவில்லை…..
என்ன ? போகேல்லயா ? அவளுக்கு அவன் பயணம் தடைப்பட்டது பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவன் தடைகளின்றி கடல் கடக்க வேண்டுமென்று கந்தசஸ்டி கவசம் உச்சரித்து முருகனை வேண்டியவளின் நம்பிக்கையில் முதலாவது தோல்வி….அதுவரையும் தனது கடவுள்களால் அவன் காப்பாற்றப்பட்டானென்ற நம்பிக்கைகூட பொய்த்துப்போனது போலிருந்தது…..
செத்துப்போகலாம் போலையிருக்கு…..அங்கையே செத்திருப்பன்….ஆனால் நான் இருக்கிறதும் தெரியாமல் இல்லாததும் தெரியாம நீ கவலைப்பட்டுக் கொண்டிருப்பாயெண்டுதான் திரும்பி வந்தனான்….முதல் முறையாக அவளிடம் மன்னிப்புக் கோரினான்….நாங்கள் நினைச்சது நாங்கள் நேசிச்சது எல்லாம் சுயநலங்களுக்குப் பலியாகீட்டுது….
சனத்தோடை சனமா அவனிட்டைப்போவம்…..என்னைச் சிலவேளை அடையாளங்கண்டாலும் தனித்தனியாவே போவம்….வாழ விதியிருந்தா பாப்பம்….
கனக்க அவளுடன் கதைக்க வேணும் போலிருந்தது….அவள் தனக்காகக் காத்திருந்த காலங்களையெல்லாம் மறந்து இலட்சியங்களுக்காக வாழ்ந்ததும்…..இன்று நம்பிய இலட்சியம் கனவு யாவையும் யாரோவெல்லாம் கொள்ளையிட்டு எல்லாம் கையைவிட்டுப்போன நிலமையில் நிற்கின்ற துயரத்தைச் சொல்லியழ வேணும்போலிருந்த இன்றைய விருப்பங்களையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டான்.
சாவின் கணங்களாகவே ஒவ்வொரு கணமும் கழிந்து கொண்டிருந்தது. எல்லாம் எல்லாரும் மறந்து இப்போ அவரவரைக் காக்கும் அவசரத்தில் ஆளாளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். அந்த அதிகாலை நெருப்பு மண்டலாமாகவும் புகையால் அழிந்த இடங்களாகவும் இருந்த நிலத்திலிருந்து கடைசிக் கனவுகள் தீய்ந்து கொண்டிருந்தது.
அவளது கைகளைப்பற்றியபடி பிள்ளைகள் , அவனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். காயங்களும் அழுகையும் பிணங்களும் நிறைந்த இடங்கள் தாண்டி அவர்கள் வந்தடைந்த போது அந்தப் பெருநிலம் ஆயுத ஓசைகளிலிருந்து விடபட்டு அச்சத்தால் சூழப்பட்டிருந்தது.
வரிசையில் நின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனித்தனியாக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லாம் பழகிய முகங்களும் கடைசிவரை தங்கள் காலங்களை களங்களில் கழித்தவர்களுமாக தரம்பிரிக்கப்பட்டு ஏற்றப்பட்டார்கள். உறவுகளின் அழுகுரல்களும் பிரிவின் கதறல்களும் நிறைந்த அந்தக்கணங்களின் நிகழ்வுகளை நினைவுக்குள்ளிருந்து தூக்கியெறிய முடியாதபடி ஒவ்வொரு மனதிலும் ஓராயிரம் துயரம்.....ஆளையாள் நிமிர்ந்து பார்க்கவே அச்சப்பட்ட வினாடிகள் அவை…..
ஒரு இளம் சந்ததி தனது தாய்களுக்காகவும் தந்தைகளுக்காகவும் உறவுகள் தங்கள் சொந்தங்களுக்காகவும் கதறக்கதற பிரிப்பும் ஏற்றலும் நிகழ்ந்து கொண்டிருக்க அவனும் தனியே அழைக்கப்பட்டான். அவன் கொண்டு செல்லப்படுவதைக் கண்டவள் பெருங்குரலெடுத்து அழுதாள்…. அவனது பிஞ்சுக் குழந்தைகள் பயத்தில் உறைந்து போயினர்….வாகனமொன்றில் அவனும் அவன்போன்ற பலரும் அள்ளிச் செல்லப்பட்டார்கள்.
அவனில்லாது தனித்து அவள் முகாமிற்குச் சென்று அவனைத் தேடி பதிவுகள் தேடல்கள் என எத்தனையோ முயற்சிகள் எதுவும் பயனில்லாமல்…. அவன் எங்கே….எப்படி….இருக்கிறானா…இல்லையா… எதுவித முடிவுகளும் இல்லாத தொடர்கதையாய் அவன் அவளால் தேடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான் யாரோ அவன் வெளிநாடு போயிருக்கலாமென்று சொன்னதை நம்பிக் கொண்டிருக்கிறாள்.
சில ஆயிரங்கள் இல்லாமையால் கடல்கடக்க முடியாது ஏமாந்து திரும்பியவனை வெளிநாட்டிற்கு யார் அழைத்திருப்பார்கள்…..? ஆயிரமாயிரமாய் அடையாளமில்லாமல் அழிக்கப்பட்டவர்களோடு அவனும் அழிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் தகவலை அவளுக்கு யாரால் சொல்ல முடியும்….? அல்லது அவன் வெளிநாட்டில் வாழ்வதாகவும் கடமையின் நிமித்தம் தொடர்பில்லாமல் இருப்பதாகவும் அவளுக்குச் சொல்லப்பட்ட கதைகளை நம்பியிருக்கும் அவளது நம்பிக்கையைச் சிதைப்பதா….? எங்கேனும் இருந்தால் வருவானென்ற நம்பிக்கையோடு.....நாங்களும் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறோம்…..
02.09.10
No comments:
Post a Comment