Saturday, April 24, 2010

எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில்

நீ வருவதாய் கனவுகள்
நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்....
நினைவுகள் தின்று
நெஞ்சில் துயர்
மீதமாய்க் கனக்கிறது.....

இரத்தம் செறிந்த புழுதியில் நீயும்
புழுதியாய் கலக்கையில்
யாரை நினைத்து நீ
துகள்களாய் உதிர்ந்தாயோ....?
வருவேன் என்றதும்
துயர் தொலையும் என்றதும்
மறந்தா தோழனே
முள்ளிவாய்க்கால் முனையிலே - உன்
முடிவை மாற்றினாய்.....?

வருடம் ஒன்று முடியப் போகிறது
நீ வருவாயென்ற நம்பிக்கை
வலுவிழந்து செயலிழந்து
செல்லாது போகிறது.....

கடைசிவரை நீ கதைத்த சொற்கள் ஒவ்வொன்றும்
கனவையும் காலத்துயரையும் பெயர்த்து
நிலம் மீது வேரோடுகிறது....
நீ நிழற்படமாய் சிரிக்கிறாய்
நினைவினில் நிறைகிறாய்.....
அழுவது தவிர்த்து
அதற்கப்பாலொரு தீர்வில்லாத்
துயர் நிறை வெளியினில்
நலிந்து போயுளோம்.....

நடந்தவை கதைகளாய்....
நாங்கள் நினைத்தவை
வெறும் கனவுகளாய்
வருவேன் வருவேன் என்ற உனது சொற்கள்
நீ வராமல் தனித்துத் தவிக்கிறது.....

நீ வருவாயா.....?
வந்தெம் உயிர் நனைத்துப்
புத்துயிர் தருவாயா....?
வசந்தம் நிறைந்த உனது பெயரில்
ஒளியான சோதி நீ
எங்கேனும் இருந்தால்
எழுது ஒரு பதில்.....
17.03.10

1 comment:

VijayaRaj J.P said...

உங்கள் கனவுகள் நனவாக வேண்டும்.
நீங்கள் வர வேண்டும் என்று
விரும்புபவர் வந்து சேர வேண்டும்.

கவலைகள் தீரவேண்டும்.

உங்கள் சேவைகள் தொடர வேண்டும்