Tuesday, February 15, 2011

அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக

பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது.

அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந்து தருவோர் போலிருந்தது அவர்களது கவனிப்பு. தேய்ந்து போன நம்பிக்கை துளிர்விட்டுச் செளித்து மதாளித்து வேர்பரப்புவது போல அவர்கள் மிகுந்த அக்கறையோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனது கடைசி நாட்களை அவள் சொல்லத் தொடங்கினாள்…..

°°° °°° °°°

நான் குப்பியடிக்கிறன் நீ பிள்ளையைக் கொண்டு போம்மா….எங்கடை பிள்ளை வாழ வேணும்…அவனைக் கொண்டு போ…..

அவளது இறுகப்பற்றிய கைகளிலிருந்து தனது கைகளை விலக்க முயன்றான்.

வேண்டாம் நானுங்களைச் சாகவிடமாட்டேன்…..எவ்வளவு பேர் போயிட்டினம்….நீங்க மட்டுமேன் சாக வேணும்…..?

அவளது கண்களிலிருந்து வடிந்த கண்ணீரின் கனம் நெருப்பிருந்தால் இவள் அவனுக்காக கண்ணகியாய் மாறுவாள் போலிருந்தது. தங்களது கணவர்களை இழந்த பெண்கள் பலர் அவர்களைத் தேடித்தேடி அழுத முகங்கள் இவன் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தது.

அவளது மறு கையில் நின்ற குழந்தையைப் பார்த்தான். அவன் முகமெங்கும் ஆயிரம் காலத்துத் துயரங்கள் அப்பியிருந்தது. தந்தையர்களை இழந்த பிள்ளைகளின் முகங்களில் நிறைந்திருக்கும் ஏக்கம் தனது குழந்தையின் முகத்திலும் நிரந்தரமாய்விட்டது போலிருந்தது.

அவன் தனது கதையை முடித்துக் கொள்ள வைத்திருந்தது பழுதடைந்ததாய் சொல்லப்பட்ட ஒரு குப்பியை மட்டும் தான். அதனையும் அவளுக்காக அவனது குழந்தைக்காக கழற்றி எறிந்தான். எல்லாம் இழந்த வெறுமை எல்லாரையும் இழந்து விட்ட துயரம் இனி எதுவும் இயலாதென்ற நிலமையில் நடப்பது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே விதியென்று நினைத்துக் கொண்டான்.

அவர்கள் வாழ்ந்த அவர்கள் போராடிய மண்ணைக் கடந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியாய் மண்ணைப் பாதம் தொடுகின்ற நொடியிலும் ஆயிரம் கத்திகள் நடுவில் நடப்பது போலிருந்jது உணர்வு. இரத்தமும் சதையுமாய் போரின் எச்சம் சாவுகளால் நிறைந்து கிடந்தது. ஏன்….? எப்படி….? எதற்கு….? எதற்கும் விடை தெரியாத மர்மமாய் எல்லாம்…..

எத்தனையோ தோழர்கள் இரத்தம் சிந்திய நிலம். எத்தனையோ மக்களின் உழைப்பால் உயர்ந்த நிலம் நெருப்பெரிந்து முடிந்த சாம்பல் மேடாய்……அவனது ஞாபகங்கள் யாவும் ஒவ்வொரு நினைவுகளையும் மீள மீள இழுத்து வந்து அவனது கண்ணுக்குள் புதைத்துக் கொண்டிருந்தது.

என்னையும் என்னையுமென காயமடைந்தவர்களின் கெஞ்சுதல்கள் கடைசிச் சொட்டு உயிரைக் காக்க யாராவது வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்புகளோடு குருதியில் குறையுயிரில் கிடந்த உயிர்கள் மனசை அரித்து உயிரைக் குடித்த வலியால் இதயம் துடித்தது.

°°° °°° °°°
அவர்களை நிராயுதபாணிகளாய் நிறுத்தி வைத்து ஆள்பிடி ஆரம்பித்தது. அவன் அவளைப் பார்த்தான். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவனையும் அழைத்தார்கள்.

என்னையங்கை சாகவிடாமல் இஞ்சை குடுத்திட்டுப் போறீங்களே….? நானந்த மண்ணுக்கை போயிருப்பன் என்னை வா வாழ வேணுமெண்டீங்கள்….? இனி நான் வரவேமாட்டன்….என்னைத் தேடித்தேடியழப்போறீங்களம்மா….சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் தோழைப்பிடித்து ஒரு கை தள்ளியது. ஒரு உலகத்திலிருந்து வேற்றுலகம் ஒன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். அவளது அழுகையொலி மட்டும் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. அவளால் காப்பாற்ற முடியாமல் அவன் அவளுக்குத் தெரியாத இடம் கொண்டு செல்லப்பட்டுவிட்டான்.

அவன் விரும்பியது போல் அன்று செத்துப்போவென்று விட்டிருந்தால் கூட அவனுக்கு நிம்மதியான மரணத்தையாவது கொடுத்திருக்கலாமென நினைத்தாள். குற்றமிழைத்தது போல மனச்சாட்சி அவளைக் கொன்று கொண்டிருந்தது.

ஆழிப்பேரலையின் கூத்து முடிந்த நிசப்பத்தால் நிறைந்தது பொழுது. அவர்கள் முன்னால் அவள் சாட்சியம் சொல்லி முடித்துவிட்டு வெளியில் வந்தாள்.

சுனாமி அடித்து ஓய்ந்த போது கரையோரம் முழுவதும் கேட்ட அவல ஒலிகளும் உறவுகளைத் தேடுவோரின் அழுகையொலிகளும் திரும்பி வருவது போலிருந்தது. தன்னையும் இழப்பின் வலி அழுத்துவதை உணர்ந்தாள். கையில் அவளது குழந்தை மட்டும் மிஞ்சி நின்றான். காணமற்போன அவனது அப்பாவை அம்மா கொண்டு வருவாளென்ற நம்பிக்கையை அழித்துவிட்டது போல் அவனை ஒற்றைக்கையால் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

°°° °°° °°°

தணலாய் கொழுத்திய வெயிலில் இருந்து சற்று ஆற வீதிக்கு மறுபுறமாய் அமைந்திருந்த குளிர்பானக்கடைக்குள் போனாள். குழந்தை விரும்பிக் கேட்ட ஐஸ்கிறீமையும் தனக்காக ஒரு சோடாவையும் வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியிருந்த இருக்கையில் குழந்தையும் அவளும் இருந்தார்கள்.

மகன் சிரித்துக் கொண்டு கடவாயில் ஐஸ்கிறீமைப் பிரட்டிப் பிரட்டிச் சாப்பிட்டான். அவனது மறுபிறவி போலிருந்தது மகனின் சிரிப்பு. குழந்தையின் தலையைத் தடவிவிட்டாள். இவனைப்பற்றி அவனும் எவ்வளவு கனவுகளைத் தனக்குள்ளே புதைத்திருப்பான்….? ஞாபகங்கள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பிக் கொண்டிருந்தது. கற்கள் இரும்பாய் திரண்டு தொண்டைக்குளிக்குள் புகுந்து நெஞ்சுக்கூட்டைப் பிழப்பது போல வலித்தது.

மகனை சயிக்கிளின் பின்புறம் ஏற்றிக் கொண்டு சயிக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். எப்பம்மா அப்பா வருவார்…? அவன் கேட்கத் தொடங்கினான். கெதியிலை வருவரய்யா…..பிள்ளையை சமாதானப்படுத்தினாள். எங்கம்மா அப்பா இருக்கிறார்….? தெரியேல்லயடா செல்லம்….அம்மா தெரிஞ்சா போய் கூட்டி வந்திடுவனெல்லோ…..இப்படித்தான் தருணங்கள் அறியாமல் அப்பாவைத் தேடும் குழந்தையை சமாளிக்க அவளுக்கு பொறுமையே செத்துவிடும்.

°°° °°° °°°

அவன் செத்துப்போயிருப்பான்…..இனிமே வரமாட்டான்…..என்னைக் கலியாணங்கட்டினா உனக்கான எல்லாத்தையும் தருவன்…முடிவைச் சொல்லுவியா….? 6வது நபராக அவளது முடிவை எதிர்பார்த்திருக்கும் அயல் ஊரவன் அருகாய் சயிக்கிளை மிதித்துக் கொண்டு வந்தான்.

ஆரம்பத்தில் இந்த முடிவு கேட்கும் முகங்கள் மீது கோபமும் எரிச்சலும் தான் வந்தது. இப்போது அதுவும் பழகிப்போயிற்று. புலியில்லா இடத்தில் நரிகள்.... அவளை அச்சுறுத்தியது….அவஸ்தைப்படுத்தியது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அவளை மட்டுமே உறவாய் நம்பியிருக்கும் தனது மகனுக்காக.

அடுத்த தெருவின் திருப்பத்தில் அயல் ஊரவன் திரும்பினான். இவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான். திரும்பவும் வருவேன் என்பது போல அவனது பார்வையும் சிரிப்பும் அவளைக் கலவரப்படுத்தியது.

ஊரவங்கள் காட்டான்களெண்டு யாழ்ப்பாணியைக் கட்டி அதுவும் யாழ்ப்பாணத்துப் புலியைக் கட்டி அதான் அந்தத்திமிர்தான் இப்ப உன்னை இஞ்சை கொண்டு வந்து விட்டிருக்கு….அதுவும் எங்கடை கண்ணுக்கு முன்னை நீ இருக்க வேண்டிய விதியைத் தந்திருக்கு….. அடுத்தொருவன் ஏளனமாய் சொன்னது அதற்கடுத்துக் கேட்டது.

அவமானத்தால் கூனியது மனசு. எண்டாலும் எங்களுக்குப் பெரிய மனசு மறுவாழ்வு தரத்தயாராயிருக்கிறோம்….சொல்லியபடி இரண்டாமவன் அவளை விலத்திக் கொண்டு போனான். ஒரு நரகத்தின் வாயிலுக்குள் மாட்டுப்பட்ட நிலமையில் அவனது ஏளனம் திரும்பத்திரும்ப புது வடிவங்களாய் துரத்திக் கொண்டிருந்தது.

வீட்டுப் படலையை விலத்திக் கொண்டு மகனை இறக்கிவிட்டாள். நான்கு பக்கக் கப்பின் துணையோடு உக்கிய கூரையால் காப்பிடப்பட்ட செத்துப்போன குடிசைக்குள் போனாள். அம்மா ஒரு ஓரமாய்க் கிடந்தாள். என்ன மகள்…? ஏதேன்….? கண்ணீர் தான் முன்னுக்கு வந்து விழுந்தது. அம்மா தனது நோயின் வலியோடு மகளுக்காக அழுதாள். அம்மா ஏதேதோ சொன்னாள். அம்மாவின் கண்ணீர் எப்போதும் போல அவளுக்கானதாயிருந்தது.

வெளியில் கிடந்த சுள்ளிகளை முறித்துக் கொண்டு வந்து அடுப்பை மூட்டி கேற்றிலை அடுப்பில் ஏற்றனாள். மகன் புதிதாய் வாங்கிக்கொடுத்த சித்திரக்கொப்பியை பாயில் விரித்து வைத்துக் கீறிக்கொண்டிருந்தான். அடுப்பு புகையத் தொடங்கியது. தலைக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் ஏதோ உருண்டு திரண்டு உலைத்துக் கொண்டிருந்தது மனசு. சொற்களால் வெளிப்படுத்திவிட முடியாதளவு துயரம் அடுப்பிலிருந்து நெளிந்து பரவிப்போகும் புகைக்குள்ளால் அவளை இழுத்துக் கொண்டிருந்தது.

°°° °°° °°°

2மாதங்களின்பின்னர்……

ஒரு வெள்ளிக்கிழமை மாலை அம்மா தனது கடைசி மூச்சினை தனது மகளிடமிருந்தும் இந்த உலகிலிருந்தும் விடுவித்துக் கொண்டு போய்விட்டாள். 1990இல் அப்பாவை ஆமியின் துப்பாக்கிகள் பிரித்துக் கொண்டு போய் பிணமாய்ப் போட்டது. வீட்டின் செல்லப்பிள்ளை ஒற்றைப்பிள்ளையவள் 1990ஆனிமாதம் அம்மாவைத் தனிக்கவிட்டுக் கொள்ளையோடு காடுகளில் கடுந்தவம் புரிந்து பாரதிகண்ட புதுமையின் அவதாரமாய் நாட்டுக்குள் உலவிய பெண்களோடு அவளும் போனாள்.

19வருடப்போராட்ட வாழ்வு. அதற்குள் எத்தனையோ மாற்றங்கள்….ஒன்றாய் களப்பணி செய்த கட்டத்தில் கொள்கையால் ஒன்றுபட்ட காதலில் அவனும் அவளும் காதலர்களாகி……அவர்கள் தாயினும் மேலாய் நேசித்தவர்களின் முன்னால் நடைபெற்றது திருமணம். இருவராய் சந்தித்தவர்கள் இன்னும் ஒரு உயிரை நேசிக்க வைத்த குழந்தையின் வரவு எல்லாம் இனிமையான அனுபவங்கள்.

இனிமைகள் தொலைந்து நினைப்புகளுக்கு மாறாய் நிகழ்வுகள் முடிந்து அவளுக்காய் அவளது குழந்தைக்காய் குப்பியை எறிந்துவிட்டுக் கூட வந்தவனும் போய்…. உறவென்று கொண்டாட உயிர்வாழ்ந்த அம்மாவையும் புற்றுநோய் கொன்று அம்மாவின் வரலாறு அந்த வெள்ளி முடிந்து போனது.

எத்தனையோ அர்த்தங்கள் குறிக்கப்பட்ட அவளது துணிச்சல் துடினம் இயல்பு எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். அவளுக்குள் இருப்பதாய் அவள் நம்பிய புரட்சிக்காரியைக் காணவில்லை. குழந்தைகளுக்காக வாழ்கிறோம் என்கிற பெண்களின் குரல்கள் அவளுக்குள்ளும் குடிகொண்டது. மிஞ்சிய பிள்ளைக்காக அவனது எதிர்காலம் நல்லவிதமாய் அமைய வேண்டுமென்ற ஒரு அம்மாவின் இயல்பு அவளுக்குள் தானாயே வந்து சேர்ந்தது.

அம்மாவின் முதிசம் அவளுக்காகவே விட்டுச் செல்லப்பட்டுள்ள குடிசையும் வேலியில்லாத ஒன்றரைப்பரப்பு வளவும் மிஞ்சிக்கிடந்தது. இரவுகள் இப்போது நிம்மதியாயில்லை. பகல்கள் இப்போது பசுமையாய் இல்லை. பயங்கரம் மிக்கதாய் எல்லாப் பொழுதுகளும் அவள் சிங்கத்தின் குகைக்குள் அடைக்கலம் புகுந்த மான்குட்டியின் நிலமையில்……சிங்கங்கள் பல அவளைத் துரத்திக் கொண்டிருக்கிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூடிய துணிச்சல் மிக்க ஒரு மனிசியாய் கூட நிமிர முடியாது சோர்ந்து போனாள்.

அவள் தோழில் கையிரண்டையும் இறுக்கி அப்பாவைப் பற்றிக் கேள்விகளால் குடையும் குழந்தைக்கான பதில்களைத் தேடுகிறாள். வெடியோசைகள் நின்றுபோன மண்ணிலிருந்து அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக……

05.02.2011

Friday, February 4, 2011

அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.

அம்மா அழுது கொண்டேயிருந்தாள். யுகங்களுக்கும் ஆறாத துரங்களும் வலிகளும் அம்மாவின் நெஞ்சுக்குளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

மூத்தவன் பற்றி இளையவன் பற்றி நடுவிலான் பற்றி அம்மா ஆயிரம் கதைகளைத் தனது ஞாகபச்சேமிப்பிலிருந்து மீட்டுக் கண்ணீரால் வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.

ஒண்டெண்டாலும் மிஞ்சியிருந்தா நான் எப்பன் நிம்மதியா இருந்தருப்பனெல்லோம்மா….? உழைக்கிற வயதுப்பிள்ளையளை சாகக்குடுத்திட்டு நானிப்ப தனிச்சுப் போனன் தாயே….! என்ரை சின்னப்பிள்ளையும் நானும் கடைசியானெண்டாலும் வருவனெண்டுதான் காத்திருந்தமம்மா….! என்ர குஞ்சு அவனும் வரேல்ல….! நானென்ன செய்வன் இந்தப்பிள்ளைக்கும் நஞ்சைக்குடுத்து நானும் சாவமெண்டு கூட ஒருதரம் நினைச்சனான். ஆனால் இந்தப் பிஞ்சின்ரை முகத்தைப் பாக்க அதுவும் ஏலேல்ல…..
ஒரு சமுத்திரத்தின் அலைகள் குமுறுமாப்போல அம்மா குமுறிக்கொண்டிருந்தாள். அவளது நம்பிக்கைகள் பொய்யாகி அவள் தனித்துப் போன துயரம் அவளை ஆறவிடாமல் அழ வைத்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் திருமணம் கூட அம்மாவுக்கு விருப்பமாயில்லாமல் கட்டாயமாகத்தான் நடந்தது. குடிகாரக்கணவன் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காத சோம்பேறிக் கணவனுக்காகவும் அம்மாதான் உழைக்க வேண்டிய நிலமையில் திருமண முடிச்சு அம்மாவுக்கு இயமனின் கயிறாக முடிச்சிடப்பட்டது.

மூத்தவன் பிறந்த நேரம் ஒரு நேரப்பத்தியச்சோற்றுக்காகவும் அம்மாதான் உறவினர்களை நாடியிருந்தாள். தனது விதி இதுதானென்று தனக்குள் சமாதானமாகி 4 பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டாள். மூத்த 3பேரும் ஆண்பிள்ளைகளாகவும் கடைசிச் செல்லம் இன்று மிஞ்சிய 9வயதுப் பெண் குழந்தையாகவும் போக அம்மாவின் நம்பிக்கை பிள்ளைகள் தான். ஊரில் உள்ள வீடுகளில் வேலை செய்து கிடைக்கிற மீத நேரங்களில் எல்லாம் பலகாரம் சுட்டு விற்று பிள்ளைகளைப் படிப்பித்து குடிகாரனுக்கும் சோறு போட்டுக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் தன்னிலும் பெரியவர்களாய் வளர்ந்த பின்னும் பிள்ளைகளை அடிப்பது வாயில் வரும் தூசணங்களால் திட்டுவது அம்மாவின் குடிகாரக் கணவனுக்கு மாற்ற முடியாத குணங்களாகிப் போனது. அப்படித்தான் ஒருநாள் மூத்தவன் ஏ.எல் வரை படித்து பல்கலைக்கழகம் தெரிவாகியிருந்த நேரம் குடிச்சுப்போட்டு மகனை அடித்தான். இரவிரவாய் அழுத பிள்ளை சில நாட்களில் காணாமல் போய்விட்டான்.

அம்மாவின் முதல் நம்பிக்கை அவளை விட்டுப்போனது. தனது சுமைகள் நீங்கப்போகிறதென்ற கனவில் இருந்தவளின் கனவுகள் நொருங்கி அவள் கூலிக்காரியாய் தொடர்ந்தும் அலையத் தொடங்கினாள்.

சற்றுக்காலம் கழித்து வீடு திரும்பிய மகன் அம்மா அறிந்திராத பல கதைகளைச் சொன்னான். இலட்சியம் வெற்றியென்றெல்லாம் புதிதுபுதிதாய் ஒரு ஞானிபோல் அம்மா முன் வந்திருந்தான். உன்னைப்போல ஆயிரமாயிரம் அம்மாக்கள் எனக்கு இருக்கின்றார்களென்றான். என்னைப்போல் ஆயிரமாயிரம் மகன்கள் அம்மாவுக்கு இருக்கின்றனர் என்றான். இனத்தைக் காக்கும் அடையாளம் இதுவென தன்னோடு கொண்டு வந்திருந்த ஆயுதத்தைக் காட்டினான். தனது சகோதரர்களுக்கும் தனது வழியில் அவர்களும் பயணப்பட வேண்டுமென்று கதைகள் சொன்னான். ஏதோவொரு பாடலை அடிக்கடி தனக்குள் உச்சரித்துக் கொண்டேயிருந்தான். ஒரு வாரம் கழிய விடைபெற்றுக் கொண்டு போனான்.
சிலவருடங்கள் கழித்து மீண்டும் வந்தான். சீருடையில்லாமல் சாதாரண உடையோடு வந்தான். ஊரில் தான் இயக்கத்திலிருந்து விலகிவந்திருப்பாகச் சொன்னான். ஊருக்குள் பழையபடி உலவித்திரிந்தான். ஊரில் தொல்லை கொடுத்த அதிரடிப்படையினர்கள் பலர் அழிந்து போக அவன் காரணமாயிருந்தான். யாருக்கும் அவன் மீது சந்தேகம் வரவில்லை.
அவன் அம்மாவின் மகனாக அம்மாவுக்காக உழைக்கக் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தான். தனது உழைப்பில் சேமித்து அம்மாவுக்குச் சங்கிலி வாங்கிக் கொடுத்தான் தங்கைக்கு சட்டைகள் வாங்கிக் கொடுத்தான் தம்பிகளுக்கு சயிக்கிள் வாங்கிக் கொடுத்தான். மாதம் முடிய அம்மாவிடம் தான் வேலைக்குச் சென்று வந்து சம்பளத்தைக் கொடுத்தான். அம்மாவின் கையால் சாப்பாடு சாப்பிட்டான். மாலை நேரங்களில் அம்மாவின் மடியில் கிடந்து தம்பிகளுடன் சண்டையிடுவான்.

அம்மாவுக்குள் இன்னும் மறக்க முடியாத அவனது பல்கலைக்கழகக்கல்வியை அவன் தொடர விரும்பினாள். அதை அவனிடமும் தெரிவித்தாள். இனி அம்மாவை தான் உழைத்துப் பார்க்கப்போவதாகச் சொல்லி அந்தக் கதைக்கு முற்று வைத்தான். பிள்ளை திரும்பி வந்ததில் மகிழ்ந்தாலும் அவனுக்கு காலம் முழுவதும் நன்மை கொடுக்கக்கூடிய கல்வியை அவன் தொடராமை அம்மாவுக்கு வருத்தம்தான்.

ஒரு விடுமுறை நாள். அவன் நெடுநேரம் நித்திரையில் கிடந்தான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அதிரடிப்படையினருடன் அவனது குடிகார அப்பாவும் வந்திருந்தார். அவன் படுத்திருந்த அறையை அவனது தந்தையே திறந்துவிட்டு அவன் தான் அது என அடையாளமும் காட்டப்பட்டான்.

நெடுநேரம் நித்திரை கொள்கிற பிள்ளைக்காகவும் மற்றைய பிள்ளைகளுக்காகவும் சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை அவன் கூப்பிட்டான். அம்மாவின் மகன் அம்மாவுக்கு முன்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டான்.

கையில் விலங்கிடப்பட்டு அவன் அவர்களால் அம்மாவின் முன்னால் அடித்து உதைக்கப்பட்டு இறுதியில் விலங்கிடப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுக்காகச் சமைக்கப்பட்ட உணவு அவனது குருதித்துளிகளால் சிவந்தது. அம்மாவின் நம்பிக்கை அவன், அம்மா முன்னே துடித்துத் துடித்து இறந்து போனான்.

கண்முன்னால் அம்மாவின் பிள்ளை கொல்லப்பட அவளது கணவன் நிறைவெறியில் கூத்தாடினான். சொந்தப்பிள்ளைக் கொலைஞர்கள் கொல்ல குடியில் மட்டும் கவனமாயிருந்தவனுடன் அன்றோடு அம்மா உறவை அறுத்துக் கொண்டு தனித்து வாழத் தொடங்கினாள்.

மூத்தவனை இழந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது போனது. அவன் துடித்துத் துடித்து இறந்த காட்சி அம்மாவை அவனது சகோதரர்களை அங்கே வாழ விடவில்லை. மிஞ்சிய பிள்ளைகளுக்காக அம்மா வன்னிக்குக் குடிபெயர்ந்தாள். தனது பிள்ளையுடன் வாழ்ந்த பிள்ளைகளையெல்லாம் தேடித்தேடிச் சந்தித்தாள். அவன் சொன்னது போல அவர்களுக்குள் அவன் வாழ்வதாக நம்பினாள்.

அண்ணாவை அழிச்சவையை விடப்படாதம்மா….அடிக்கடி சொல்லிக்கொள்வான் இரண்டாவது மகன். அவனுக்கு நிகராக கடைசியும் சொல்லுவான். அம்மாவால் அவர்களை இழக்க முடியாது. அவர்கள் தன்னைவிட்டுப் போகக்கூடாதென்பதில் அதிகம் அக்கறை செலுத்தினாள். ஆனால் ஒருநாள் அம்மாவின் இரண்டாவதும் மூன்றாவதும் மகன்களும் போராடப்போனார்கள். அம்மாவிற்காக மிஞ்சியது மகள் மட்டும் தான்.

இரண்டாவது மகன் கடற்புலியாகி களத்தில் நின்றான். நீலவரியுடுத்தி அம்மாவைப் பார்க்க வந்தான். கடைசிமகன் பச்சைவரியுடுத்தி வந்தான். தமிழீழம் பிடிச்சு வருவமெண்டு சொல்லிக் கொண்டே போவார்கள். அம்மாவும் நம்பினாள்.

யுத்தம் அகோரமடையத் தொடங்கியது. அம்மாவின் பிள்ளைகள் அம்மாவிடம் வருவதேயில்லை. அம்மா நம்பிய சாமிகளிடம்தான் தனது பிள்ளைகளுக்காக இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.

2008இன் இறுதிப்பகுதியது. அம்மாவுக்கும் மகன்களுக்கும் இடையிலான தொடர்பாக வானொலி மட்டும்தான். அயலவர்கள் வாங்கும் ஈழநாதம் பத்திரிகையையும் விடாமல் பார்ப்பாள். ஊருக்குள் வாழ்ந்த பிள்ளைகள் வீரச்சாவாகி வீடுகளுக்கு வருகின்றதை அறிந்தால் அம்மா ஓடிப்போய் பார்த்துவிடுவாள். தனது மகன்களும் அப்படி வந்துவிடுவார்களோ என்ற பயத்தில். இரவுகளில் நிம்தியற்ற தூக்கம் எப்போது எங்கே யாரை எறிகணை எடுக்குமோ என்ற அச்சம் அத்தனைக்குள்ளும் தனது மிஞ்சிய மகளை பதுங்குகுளிக்குள்ளேயே பாதுகாத்து வந்தாள்.

ஒருநாள் பதுங்குகுளிக்குள்ளிருந்த மகள் அம்மா என அழுது கொண்டு எழும்பி வந்தாள். அம்மா அண்ணா வீரச்சாவடைஞ்சி…..அவள் தொண்டைக்குள்ளால் சொற்கள் வெளிவராமல் அந்தரித்தாள். எங்கம்மா கேட்டனீ….அம்மா மகளை உலுக்கினாள். அவள் கையிலிருந்து வானொலிப்பெட்டியைக் காட்டி அழுதாள்.

அம்மாவின் இரண்டாவது நம்பிக்கை சரிந்தது. எந்தச் செய்தியைக் கேட்கக்கூடாதென்று இருந்தாளோ அந்தச் செய்தியை அம்மா கேட்டாயிற்று. அம்மாவின் பிள்ளை வீட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. கடலில் அவன் காவியமாய் போனான்.

2009 வருட ஆரம்பத்தில் அண்ணனின் செய்தியறிந்து 3வது மகன் அம்மாவிடம் வந்தான். தனது கண்ணீரால் தனது கடைசி மகனைக் கட்டியழுதாள். அழுவதற்காகக் இனி ஈரமில்லாதவரை அவனைக் கண்ணீரால் நனைத்தாள். அவனைத் தங்களோடு வந்துவிடும்படி கெஞ்சினாள் அவனது ஒற்றைத் தங்கை. தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாய் சொன்னான். வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வருவதாய் விடைபெற்றுக் கொண்டு அவனும் போனான்.

அம்மா நொந்து போனாள். இழப்பதற்கு எதுவும் அவளிடம் இல்லாது போனது. இருந்த இடங்களை விட்டு ஒவ்வொரு இடமாய் அம்மாவும் அம்மாவின் ஒற்றை மகளும் இடம்பெயரத் தொடங்கினர். புதுமாத்தளன் வரை போனவர்களை ஒருநாள் மீட்பர்கள் என அழைத்தவர்கள் சுற்றிக் கொண்டனர்.

அம்மா தனது மூன்றாவது மகன் புதுமாத்தளனில் காயமடைந்து இருப்பதாக யாரோ சொன்னதை நம்பி அந்த இடத்தை விட்டுப் போகமாட்டேனென அடம்பிடித்துக் குழறினாள். அம்மாவின் பிள்ளையை அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் சொன்னார்கள். அந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் அம்மா புதுமாத்தளனில் மனிதர்களின் தலைதெரிந்த எல்லோருக்குள்ளும் தனது மகனைத் தேடினாள்.

இறுதியில் அம்மாவும் அவளது மகளும் முகாமில் சென்று சேர்ந்தனர். தனது கடைசி நம்பிக்கை தனது கடைசிகால நம்பிக்கையாக தனது மகனைத் தேடத் தொடங்கினாள். எல்லோரிடமும் தனது மகனைப்பற்றி விசாரித்தாள் பதிவுகள் கொடுத்தாள். எதுவித பதிலும் கிட்டவில்லை.

முகாமில் உள்ளவர்கள் மனநலப் பாதிப்புகளிலிருந்து மீட்கவென நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்வுகளில் அம்மாவின் ஒற்றை மகள் பாடல்கள் பாடினாள் , நடனங்கள் ஆடினாள். எங்கே நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் அம்மாவையும் கூட்டிக் கொண்டு போய்விடுவாள். அந்த நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வோரிடமெல்லாம் சொல்லுவாள் எங்கடை அண்ணா இதைப்பாக்கக் காட்டுங்கோ….நாங்கள் இருக்கிறம் அண்ணாவை எங்களிட்டை வரச்சொல்லுங்கோ…என்ற கோரிக்கைகளை வைப்பாள். அவளது வேண்டுதல்களைக் கேட்டு அழுகின்ற அம்மாவுக்கு அவளே ஆறுதல் சொல்வாள்.

எங்கையும் தடுப்பில அண்ணா இருப்பான் என்னைப் பாப்பான் எங்களிட்டை வருவானம்மா…..அந்தச் சின்னவளின் நம்பிக்கை அம்மாவின் நம்பிக்கை எல்லாம் பொய்யாகும்படி ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் அம்மாவின் மகன் பற்றி எதுவித தகவலும் இல்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் மனிதவுரிமைகள் ஆணையகம் தொண்டர் நிறுவனங்கள் என எல்லாரிடமும் தனது மகனைத்தேடி விண்ணப்பங்கள் அனுப்புகிறாள் அம்மா. சாட்சியங்களை வழங்கிக் கொண்டிருக்கிறாள். அம்மாவின் பிள்ளை இன்னும் வரவில்லை. எங்கும் இருப்பதற்கான அடையாளங்களும் இல்லை. ஆனாலும் அம்மா காத்திருக்கிறாள்.
தனது மகன் வருவான் தன்னையும் தனது மகளையும் உழைத்துக் காப்பாற்றுவான். என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடவில்லை. காணாமற்போன பிள்ளைகள் வருவார்கள் என்று நம்புகிற அம்மாக்களின் வரிசையில் அம்மாவும் காத்திருக்கிறாள்.

மரணித்த தனது இரண்டு பிள்ளைகள் போல் தனது கடைசி மகன் மரணித்துப் போகவில்லையென நம்புகிற அம்மா எங்களிடமும் தனது கடைசி மகனின் விபரங்களைத் தந்து வைத்திருக்கிறாள். தனது மகன்கள் வாழ்ந்த மண்ணில் மீண்டும் குடியேறியிருக்கிற அம்மா தனது பிள்ளைகளின் கனவுகள் பற்றிக் கதைகள் சொல்கிறாள். ஆயிரமாயிரமாய் புதைக்கப்பட்ட பிள்ளைகள் வாழ்ந்த மண்ணுக்குள் மிஞ்சிய வரலாறுகளாக வாழும் அம்மா போன்ற ஆயிரக்கணக்கான உறவுகளின் துயரங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம்.

அம்மாவின் வேண்டுகைக்காக நாங்களும் அம்மாவின் மகனைத் தேடுகிறோம். அவன் வரமாட்டான் அல்லது அவன் இல்லையென்று சொல்லும் தைரியமில்லை. அம்மாவின் பிள்ளைகள் வரமாட்டார்கள் இப்போதல்ல இனி எப்போதுமே வரப்போவதில்லை…ஆனாலும் அம்மாவும் நாங்களும் அம்மாவின் பிள்ளையைத் தேடுகிறோம்.
24.12.10