Wednesday, September 21, 2011

காலம் கரைத்துவிட்ட வசந்தங்கள்.

வேலை முடித்து வீட்டுக்குள் கால் வைத்த போது * காதுக்குள் நுளைந்த பாடல் அது….வானுயர்ந்த சோலையிலே நானிருந்து பாடுகிறேன்*. இதயக்கோவில் படத்தில் மோகன் அம்பிகாவின் நடிப்பில் வெளியான படம். இதுவரை படத்தைப் பார்க்கவில்லை. எனது 13வது 14வது வயதில்1987 – 1988 வரையான காலத்தில் கேட்ட பாடலென்றுதான் ஞாபகம்.

அந்தப்பாடல்களை அந்தப்படங்களை எனக்கு வரிதப்பாமல் சொல்ல ஒருத்தியிருந்தாள். படிப்பு அது தவிர்ந்தால் எதுவும் அனுமதியில்லாத எனது வீட்டுச் சூழலிலிருந்து அவளது வீடு வித்தியாசமானது.

அவளது அயல்வீட்டில் வாரஇறுதி நாட்களில் விடிவிடிய சினிமாதான். அந்தக்கால அமலா , நதியா ,மோகன் , சுரேஸ் , கார்த்திக் என எல்லாருடைய படங்களும் ஓடும். அவளது அம்மா அப்பா எல்லாரும் கூடியிருந்து அயல்வீட்டில் படம் பார்ப்பார்கள். சிலவேளைகளில் சினிமாக் கொட்டகைகளுக்கும் அவள் போனதாகச் சொல்வாள். அவளுக்குத் தெரியாத பாடல்களே இல்லையெனும் அளவு அவள் எல்லாப்பாடல்களையும் ஞாபகம் வைத்துப் பாடிக்காட்டுவாள்.

அவளும் நானும் அதிகம் பேசத் தொடங்கியது உறவாடத் தொடங்கியது 6ம்வகுப்பு சித்தியடைந்து1986 வசாவிளான் மத்திய மகாவித்தியாலத்திற்குப் போன நேரம்தான். நான் குப்பிளான் விக்னேஸ்வராவிலிருந்து போக குரும்பசிட்டி பரமானந்தாவிலிருந்து அவளும் வசாவிளானுக்கு வந்தாள். எனது வகுப்பிற்கே அவளும் வந்தாள். புதிய முகங்கள் நடுவில் எனது ஊர்க்காரி அவளுடன் தான் போயிருந்தேன். உயரவமானவர்களை பின்வரிசையில் இருத்தினார்கள். அத்தோடு நானும் அவளும் இன்னும் 3பேரும் எங்கள் வகுப்பில் அதிக உயரமாகையால் கடைசி மேசையில் எங்கள் படிப்பு ஆரம்பமானது.

அவள் குரும்பசிட்டியால் வசாவிளானுக்கு வந்துவிடுவாள். நான் பலாலி வீதியால் போய்விடுவேன். கிடைக்கின்ற இடைவெளிகளில் அவளிடமிருந்து படக்கதையும் பாட்டும்தான் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவள் சொல்லும் படங்களை நானும் பார்க்க விரும்புவேன். வீட்டில் சினிமாவென்று சொன்னாலே சொல்லத் தேவையில்லை. அம்மா அடிக்கடி படிப்பு படிப்பென்றுதான் ஓதிக்கொண்டிருப்பார்.

அப்பா வசந்தமாளிகை படத்தில் சிவாஜி கணேசனின் , வாணிசிறியின் நடிப்பையும் வசனங்களையும் பாடமாக்கி கள்ளடித்துவிட்டு ஊரெல்லாம் கேட்கப் பாட்டுப்பாடுவார். தனது இழந்துபோன காதலியின் வேலியில் போய் நின்று வெறியில் வசந்தமாளிகையை புதுபுதுப்பித்து உரைப்பார். வேலியைப் பிரித்துக் கொண்டு வந்து வெட்டு விழும்போல வேலிக்கால் குரல்கள் வரும். பின்னர் அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் அம்மாவும் நாங்களும் அப்பாவின் வாயைமூடுவிக்க ஆயிரம் வழிகளைத் தேடுவோம். ஆனாலும் அப்பா ஆளையறியாத வெறியிலும் கண் விழிக்கும் நேரமெல்லாம் காதலியின் பெயரை உச்சரிக்க மறப்பதேயில்லை.

அப்பாவின் சினிமாப்பயித்தியம் எங்களில் ஒட்டிவிடாமல் நாங்கள் படிக்க வேணும் என்பதும் தமிழர்களால் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் டொக்கர் தொழிலையுமே அம்மா கனவு காணுவா. காதில கொழுவி அம்மாவை நாங்கள் வருத்தம் சோதிக்க வேணுமெண்டது அம்மாவின் கனவு. அயல் பிள்ளைகள் அல்லது பாடசாலை நண்பர்கள் எவருடனும் பழக்கம் வைத்துக் கொள்ள அல்லது போய்வர எதுவித அனுமதியுமில்லை. காலமை பொழுது விடிய முதல் எழும்பிப்படிப்பு , விடிஞ்சா வீட்டு வேலைகளுக்கு உதவிவிட்டு 7.30இற்கு பள்ளிக்கூடம் போய் மதியம் 2மணிக்கு வந்து ரியூசன் படிப்பு மாலை இருளில் வீடு வந்து வளமையான சுழற்சி. அந்த வயதுக்கான விளையாட்டு அயல் பிள்ளைகளுடன் ஓடியாடி உலாத்தல் எதுவுமில்லை.

அம்மாவில் கடும் கோபம்தான் வரும். அதுவொரு சிறைச்சாலை போலவேயிருந்தது. எங்கள் வீட்டுக்கு ஒரு வளவு தாண்டியிருந்த வயிரவர் கோவில் ஆல்விழுதில் ஊஞ்சல் ஆடியும் வாசகசாலையின் முன்னுக்கு கிளித்தட்டு விளையாடுவதற்கும் அனுமதியில்லை. ஊர்ப்பிள்ளைகள் அங்கே விளைாயடுவதை வடக்குப் பக்க வாசல் கதவாலும் யன்னல் கம்பிகளாலும் நானும் தங்கைகளும் வரிசையில் நின்று பார்ப்போம். சிலவேளைகளில் அம்மா வரும் நேரத்தை முன்கூட்டி அறிந்தால் அம்மா வர முதல் ஆலடியில் போய் விளையாடுவோம். அம்மாவின் அரவம் கேட்டால் ஓடிப்போய் புத்தகங்களை எடுத்துப் படிப்பது போல் நடிப்போம். ஆனாலும் அம்மாவின் அந்தச் சிறைச்சாலைக் காவலுக்குள்ளும் அம்மா அறியாமல் தோழிகளுடன் சுற்றியது கீரிமலைக்குப் போனது பலாலிக்கடற்கரை பார்த்தது பலாலி விமான ஓடுதளம் பார்த்ததென நிறைய சொல்லாத சேதிகள். அதெல்லாம் போகட்டும். எனக்குள் இன்று மீண்டும் ஞாபகமாய் வந்த அவளைப்பற்றி அவள் கதைபற்றிச் சொல்லப்போறன்.

அவள் தான் அழகாயில்லையென்று தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தை வைத்திருந்தாள். தான் உருவத்தால் பெருத்தவள் என்ற தாழ்வுச்சிக்கலை அவளது சினிமாக் கதைகளுக்கு நடுவில் சொல்லிக் கொள்ள மறக்கமாட்டாள். அவளது வரிசையான நேர்த்தியான பற்களும் அவளது நீண்ட தலைமுடியை இரட்டைப்பின்னலாய் கறுத்த றிபனால் கட்டி வரும் அழகை மடிப்புக்கலையாத அவளது வெள்ளைச்சட்டையில் அவள் ஒரு தேவதையென்று சொன்னாள் நம்பவேமாட்டாள்.

முதலாவது றிப்போட் வந்தது. எல்லாப்பாடங்களுக்கும் அவளும் சிறந்த புள்ளிகள் பெற்றாள். சினிமாவும் பார்த்து சினிமாப்பாடல்களையெல்லாம் பாட்டுப்புத்தகம் வாங்கி படித்து எப்படி சிறந்த பெறுபேறுகளையும் பெற்றாள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.
சிலருக்கு இயல்பாயே எல்லாவற்றையும் கிரகிக்கவும் செய்யவும் கூடிய வரத்தை இயற்கையின் கொடையாய் இறைவனாக நம்பும் சக்தி கொடுத்துவிட்டிருக்கிற வரத்தை அவளும் பெற்றிருந்தாள்.

படங்களில் வந்த நகைச்சுவைக் காட்சிகளையெல்லாம் சொல்லுவாள். அவள் வகுப்பில் இருந்தால் அது எனக்கு புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும். அவள் பார்த்த சினிமாப்படங்களையெல்லாம் எனது கொப்பிகளில் குறித்து வைப்பேன். படிச்சு முடிய அம்மா சொன்னமாதிரி எல்லாப்படங்களையும் பாக்க வேணுமென்ற ஆசையில். அந்தக் கொப்பிகளுக்குள் ஆயிரமாயிரம் கதைகளை கதைகளுக்கான தலைப்புகளையெல்லாம் எழுதி வைத்ததெல்லாம் அம்மா அறியவேயில்லை.

எங்கள் ஊரில் இயங்கியது இரண்டு தனியார் கல்வி நிலையங்கள். அதில் ஒன்றில் அவள் படித்தாள். மற்றையதில் நான் படித்தேன். இரண்டு நிலையங்களிலும் படிப்போருக்கு ஆளாளுக்கு அவர் பெரிசு இவர் சிறிசென்று சண்டையும் வரும். ஆனால் எங்களுக்குள் எவரைப்பற்றியும் பிரச்சனையில்லை. மாலைநேர வகுப்புகளுக்குச் செல்லும் சாட்டில் அவளோடு நானும் சேர்ந்து போவேன். கிடைத்த தருணங்களை அவளோடு செலவளிப்பதில் அத்தனை பிரியம்.

அடுத்த றிப்போட்டுக்கு முதல் பலாலியிலிருந்த ஆமி வசாவிளான் பள்ளிக்கூடத்தை ஆக்கிரமிக்கப் போவதான அசுகைகள் வெளியாகியது. கேணல்.கிட்டுவின் அறிவிப்பில் வசாவிளான் மத்தியமகாவித்தியாலயத்தின் கூரைகளும் கதவுகளும் கழற்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு மாலைநேரம் அந்தச் செய்தி எங்கள் ஊர்வரையும் வந்தது. பாடசாலைப் பொருட்கள் புன்னாலைக்கட்டுவன் வழியாய் இடம்மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் அழகான பள்ளிக்கூடத்தின் நாங்கள் ஆசையுடன் ஏறியிறங்கும் மேல்மாடிக்கட்டடம் குரோட்டன்கள் அழகான தாமரைக்குளம் எல்லாம் தனித்து எங்கள் கனவுகள் புதைந்த பள்ளிக்கூடம் அகதியாகிப்போனது. நாங்களும் அகதியாகினோம். எங்கள் சமாதிகோவிலடி வீடுகளெல்லாம் உயர்பாதுகாப்பு வலயமாகி நாங்களெல்லாம் இடம்பெயர்ந்தோம்.

அடுத்து வந்த மாதங்கள் எறிகணை வீச்சு எங்களுடன் படித்த புன்னாலைக்கட்டுவன் பதுமநிதியும் அவளது அப்பா இளையதம்பியும் அவளது அக்காவும் இறந்து போன துயரம் அத்தோடு மட்டுமில்லாது எங்கள் ஊரிலும் பல உறவுகள் ஆமியின் செல்லிற்கும் கெலியின் சூட்டிற்கும் இறந்து போனார்கள்.

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம். இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.
அகதியான எங்கள் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் மீண்டும் புதிதாய் பிறந்தது. அவளும் பாடசாலைக்கு வந்தாள். திரும்பவும் வகுப்புப் பிரிப்பில் அவளும் நானும் ஒரே வகுப்பில் தான். அவளுக்கும் எனக்கும் 14வயதாகியிருந்தது. அவள் ரியூசன் போய்வரும் வழியில் சில சயிக்கிள்கள் அவளைச் சுற்றுவதாகச் சொன்னாள். அவள் பாடிய பாடல்களையெல்லாம் மிகுந்த இரசனையுடன் படித்தாள். பாடநேரங்களில் புத்தகத்துக்கு நடுவில் பாட்டுப்புத்தகத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

அவளைச் சுற்றியோர் கோட்டையை உயர்த்தி அந்த உலகில் அவள் சஞ்சரிக்கத் தொடங்கினாள். நல்ல கெட்டித்தனமாகப் படித்தவள் படிப்பிலிருந்து கவனத்தைச் சிதைக்கத் தொடங்கினாள். பலர் தனக்கு கடிதங்கள் எழுதுவதாகச் சொன்னவள். ஒருநாள் எங்கள் ஊரவன் ஒருவனின் பெயரைச் சொல்லி அவன் தன்னைக் காதலிப்பதாய் சொன்னாள். தானும் அவனைக் காதலிப்பதாய் சொல்லிச் சிரித்தாள். அவளது காதல் கதைகள் கேட்கப்பயமாயிருந்தது. அம்மா அறிந்தால் அவளுடன் பழகுவதையும் நிறுத்திவிடுவா. நான் பார்க்க முடியாத சினிமாக்கதைகளைச் சொல்ல அவள் இல்லாமல் போய்விடுவாள் என்ற சுயநலம் என்னை ஆட்கொண்டது.

அவளது அந்தக் காதலன் 5ம் வகுப்பு வரையும் தான் படித்திருந்தாகக் கேள்விப்பட்டேன். அவனது குடும்பத்தில் படிப்பு வாசனை சற்றுமில்லை. அவனது அண்ணன்கள் அக்காக்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொண்டிருந்தனர். அவனது அக்காக்களுக்கும் அண்ணன்களுக்குள் 4,5,6,7 என குழந்தைகள் பிறந்திருந்தனர். காலையில் தோட்டங்களுக்குக் கூலிவேலைக்குப் போவார்கள். மாலையில் மம்மலுக்குள் வருவார்கள். புழுதியில் குளித்துக் குழந்தைகள் இருக்க சமைப்பார்கள் சாப்பிடுவார்கள் வீட்டின் ஆண்கள் சில நேரம் அதிகம் குடித்துவிட்டு சண்டை பிடிப்பார்கள். பெண்கள் ஆண்களின் அடிதாங்காமல் ஓலமெடுத்து அழுவார்கள் ஒப்பாரி வைப்பார்கள். இரவுகளில் 10வீடு தாண்டியும் அவர்களது சண்டைச் சத்தம் கேட்கும். அத்தகையதொரு குடும்பத்தில் வாழும் ஒருவன் 16வயதில் கூலிவேலைக்குச் சென்றுவரும் அவனை இவள் காதலித்தாள். அவனது வீட்டு ஆண்கள் போல் உன்னை அடிக்கமாட்டானா என்று கேட்டதற்குச் சொன்னாள். அவன் றெம்ப நல்லவன். என்னைக் கண்கலங்காமல் பாப்பனெண்டு சொன்னவன்.

இப்போது அவளது பள்ளிக்கூடப் பாதையில் ரியூசன் பாதையில் எல்லாம் அவன் வரத் தொடங்கினான். அவள் அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். அவனது தமிழ்க்கொலைக் காதற்கடிதங்களைத் திருத்தி வாசித்துக் கொண்டிருப்பாள். தனது அழகான கையெழுத்தால் அவனுக்காக பாடநேரங்களில் கடிதம் எழுதினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாய் நடமாடினாள். அதிகமான காதல் பாடல்களையெல்லாம் அழகாகப் பாடக்கற்றுக் கொண்டாள்.

உங்கடை அம்மா பேசமாட்டாவோ ?

கேட்ட எனக்குச் சொன்னாள்.

எங்கடையம்மாவும் காதலிச்சுத்தான் கலியாணங்கட்டினவா….

என்னுடைய அம்மாவும் அப்பாவை காதலிச்சுத்தானே கலியாணம் கட்டினவை…?
ஆனால் அவையளுக்குள் அந்தளவு அன்பு இருந்ததாய் தெரியேல்ல…?

அம்மாவின் அழுத முகம் , தனது வாழ்வை அப்பாவுக்காக தியாகம் செய்ததாய் சொல்லிக் கொள்ளும் தோல்வியும்தான் அம்மாவின் கதைகள் பற்றிய எனது அறிதல். இவள் எப்படி….? எனக்குள் பெரும் குழப்பத்தை உருவாக்கியது அவளது காதல்.

000 000 000

மீண்டும் போன எங்கள் பாடசாலையில் கட்டடங்கள் வெறுமையாகி கூரைகள் இல்லாது மொட்டையாகியிருந்தது மண்டபங்கள். தற்காலிக ஓலையால் வேயப்பட்ட கூரைகளின் கீழ் எங்கள் கல்வியும் கற்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1988ம் ஆண்டு தைமாதம் எனது வெள்ளைச் சட்டையில் சிவப்புகறைகள் படிந்ததை அவள்தான் முதலில் காட்டினாள். அதைக்கேட்டு அழுத என்னைச் சமாதானப்படுத்தி சிவபாதம் ரீச்சரிடம் சொல்லி ஏ.எல் அக்காக்கள் இருவரோடு என்னை வீட்டுக்கு அனுப்ப வைத்ததும் அவள்தான்.

எனது ரியூசன் தோழிகளுக்கெல்லாம் அவள் தகவல் சொன்னாள். எனக்குள் இன்று வரையும் காயமாய் கடிதமாய் கதைகளாய் கவிதைகளாய் இனிய ஞாபகமாய் இருக்கிற என் அந்தநாள் தோழி ஏழாலை நதியாவுக்குக்கும் புதினம் சொல்லியதும் அவள்தான்.

ஊரைக்கூட்டி பந்தல் போட்டு மணவறை வைத்து கம்பளம் விரித்து ஆராத்தியெடுத்து அழகான சேலையுடுத்தி போட்டோ எடுத்து எனக்கு அம்மாவினதும் அப்பாவினதும் ஏற்பாட்டில் நடந்த கொண்டாட்டத்திற்கும் அவள் எனது பிரத்தியேக அழைப்பின் பேரால் வந்திருந்தாள். கனகாம்பரமாலை கட்டி சிவத்தப்பாவாடை சட்டையும் வெள்ளைத் தாவணியும் போட்டு எனக்குப் பக்கத்தில் வந்து நின்றாள். என்றும் போல அவளது நகைச்சுவையும் சிரிப்பும் எனக்குள் புத்துயிர்ப்பைத் தந்தது.

கொண்டாட்டம் முடிந்து பள்ளிக்கூடம் செல்லத் துவங்கினேன். அவள் எங்கள் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருந்த காதல் கதைகளையெல்லாம் சொன்னாள். கோவில் திருவிழாவில் காணாமற்போன சோடிகள் பற்றியெல்லாம் சொன்னவள் ஒரு நாள் அவளும் அவனோடு ஓடிப்போனாளென்ற செய்தி எனக்கும் வந்தது.

அவள் ஓடிப்போவதற்கு முதல் ஒருநாள் எனக்கு ஒரு பரிசு தந்தாள். ரகுமானின் படம் போட்ட பாட்டுப் புத்தகம் அது. என்னை வைச்சிருக்கச் சொன்னாள். அத்தகைய புத்தகம் என்னிடம் இருப்பதை அம்மா அறிந்தால் சர்வாதிகாரி கிட்லராக மாறிவிடுவதுடன் அம்மாவின் கையில் எட்டும் எல்லாவற்றாலும் சாத்துவாங்க வேண்டுமென்று சொன்னேன். அவள் என்னை நக்கலடித்துச் சிரித்தாள். பயந்தாங்கொள்ளியென்று பரிகசித்தாள்.

சர்வாதிகாரி கிட்லரின் அடிக்குப்பயந்து அழகான ரகுமானின் படம்போட்ட பாட்டுப்புத்தகத்தை வாங்கவில்லை. அந்தப்புத்தகத்தில் முன்பக்கத்தில் இருப்பது ரகுமானென்றும் ரகுமானின் படப்பாடல்கள் அவையெனவும் சொன்னாள். படம் பார்க்காமல் முதல் பிடித்த நடிகராக ரகுமானுக்கு நான் ரசிகையாகிவிட்டேன்.

அடுத்த வருடத்துச் சிவராத்திரியில் எங்கள் வயிரவர் கோவிலில் ஓடிய சினிமாப்படத்தில் ரகுமான் , பிரபு நடிப்பில் வெளியான ஒருவர் வாழும் ஆலயம் படம் போட்டார்கள். வதனிமாமி ஊடாகக் கேள்விப்பட்டேன். எப்பிடியும் ரகுமானின் அந்தப்படத்தைப் பார்க்க வேணுமென்ற ஆசை. அம்மாவுக்குத் தெரியாமல் அம்மம்மாவிடம் இரகசிய அனுமதி வாங்கி வதனிமாமி இதயம்மாமியாக்களுடன் படம்பார்க்கப் போனேன்.

ஊர்ப்பிள்ளைகள் பெரியவர்கள் படம்பார்க்கக் காத்திருந்தார்கள். எனது முதலாவது சினிமாக்கனவு நிறைவேறிய நாள். நான் எதிர்பார்த்த ரகுமானின் படம் வராமல் பழசுகளின் விருப்பத்தில் கறுப்பு வெள்ளைப்படம் பராசக்தி தான் முதலில் ஓடியது.

2வதாக ரகுமானின் படம் துவங்கியது. அந்தச் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிக்குள்ளிருந்து கலர்கலராய் நடிகர்கள் வந்தார்கள். அவள் எனக்குக் கதைசொன்ன சினிமாக்களில் நான் கண்ட சினிமாவுலகம் மிகவும் பெரியதாய் என் முன்னால் விரிந்தது. ஒற்றைச் சிறுபெட்டிக்குள்ளிருந்து இத்தனை அதிசயங்களா ?

அந்த வயிரவர் கோவில் முன் வெளியில் இருளில் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளியை மட்டும் பரவவிட்டிருந்தார்கள். முன்வரிசையில் வதனிமாமிக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னிலும் 3வயது மூத்த வதனிமாமி தியேட்டரெல்லாம் போய் படம்பாத்திருக்கிறாள். வதனி மாமிக்கும் பாட்டு படமெண்டால் பயித்தியம்தான். ரயில் பயணம் தியேட்டரில் பாத்திட்டு வந்து ஒருநாள் எங்களுக்கெல்லாம் கதைசொல்லி பாட்டெல்லாம் பாடிக்காட்டியிருக்கிறாள். பிரபுவின் ரசிகர்கள் பிரபுவுக்குக் கைதட்டி ஆரவாரிக்க சிவகுமாரின் ரசிகர்கள் சிவகுமாருக்குக் கைதட்ட ரகுமானின் ரசிகை நானும் ரகுமானுக்குக் கைதட்டினேன்.

வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் யாவும் இறங்கி எங்கள் வைரவர் கோவில் வெளியில் கொட்டிக் கிடப்பது போலிருந்தது. அந்த இரவின் அமைதியையும் அழகிய நட்சத்திரங்களை அள்ளி வைத்திருக்கும் மேகத்தின் நடுவில் நடக்கின்றதான மிதப்பு. முதல் பார்க்கும் சினிமாவின் நாயக நாயகிகள் அந்த வெளியில் இறங்கி வந்திருப்பது போலிருந்தது.
எடியே எழும்படி…..! எழும்பு…! வதனிமாமியின் குரல் கேட்டு எழும்பிய போது பொழுது விடிந்துவிட்டிருந்தது. என்னைப்போல பல சிறுவர்கள் அங்கே அந்த மண்ணுக்குள் நல்ல நித்திரை. வதனிமாமி இதயம் மாமி இன்னும் சிலரும் நித்திரையான எல்லாருக்கும் கரியால் மீசை வைத்து விட்டிருந்தார்கள். *ஒருவர் வாழும் ஆலயம்* பார்க்கும் ஆசையில் போய் கடைசியில் மண்ணுக்கை நித்திரை கொண்டதுதான் மிச்சம். ரகுமானின் படம் பார்க்கும் கனவு நிறையாமல் போனது சோகம் தான்.

வீட்டுக்கு ஒளித்து வந்தேன். ஆனால் கிட்லர் அம்மாவுக்கு இரகசியம் தெரிஞ்சு கிழுவங்கட்டையோடு அம்மா நிண்டா. சர்வாதிகாரி கிட்லர் அம்மாவிடம் அடிவாங்காமல் தப்ப அன்னை தெரேசாவின் வடிவான அம்மம்மாவிடம் அடைக்கலமானேன்.

கிட்லர் அம்மா அம்மம்மாவைப் பேசிக்கொண்டு போனா. குமர்ப்பிள்ளையை இரவில படம்பாக்க விட்டிருக்கிறா. படம்பாத்தா படிப்பெங்கை ஏறப்போகுது….ஓமடியாத்தை போ நீ படிச்சுக் கிழிச்சனிதானே….அம்மம்மா புறுபுறுத்துக் கொண்டிருந்தா.

அது இந்திய இராணுவ காலம். காலையும் மாலையும் அவர்களது ஒலிபரப்பிலும் இலங்கை வானொலியில் பொங்கும் பூம்புனலிலும் புதுப்புதுப்பாடல்கள் வரும். எங்காவது வானொலிச் சத்தம் கேட்டால் அந்தத் திசைநோக்கியே எனது செவிப்புலன் வேரூன்றிவிடும். அன்றோடு அம்மாவின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டு செல்லப்பட்டேன்.

அவளை வீதியில் காணுவேன். அவள் சேலையுடுத்துக் கொண்டு போவாள். அவளுடன் ககைக்க முடியாது தடைச்சட்டம் அம்மாவிடமிருந்து பிறந்திருந்தது. அவள் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறாள் எனச் சொன்னார்கள். அவளை அம்மாவாகப்போகிற பெரிய வயிற்றுடன் பார்க்க வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நிறைவேறியது. அவள் கிளினிக் போய்விட்டு ஒரு நாள் பகல் 11மணிபோல் எங்கள் வீட்டடியால் நடந்து போனாள். என்னைப் பாத்திட்டுத் தெரியாதமாதிரிப் போனாள்.

இந்திய இராணுவம் முளத்துக்கு முளம் சென்றிபோட்டு இருந்த வீதிகள் தாண்டி அவள் ஒருநாள் குழந்தைப்பேற்றுக்காக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அவளது முதல் பிரசவம். அவளது குழந்தை உலகைக்கண்திறந்து பார்த்த மறுநாள் அந்தப் பெரியாஸ்பத்திரியில் ஒரு மனிதப்படுகொலை நிகழ்ந்தேறியது. பல உயிர்கள் அங்கு பலியெடுக்கப்பட்டது. தங்கியிருந்த நோயாளிகள் ஆளாளுக்குத் தப்பியோடினர்.
அவள் தனது குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீட்டை வந்திட்டாளாம்….பஞ்சாய் செய்தி ஊரெல்லாம் பரவியது. பின்னர் அவளது அம்மாவும் வேறு பெரியவர்களும் குறுக்குப் பாதைகளால் போய் யாழ் பெரியாஸ்பத்திரியில் அவளது குழந்தையைக் கொண்டு வந்துவிட்டதாய் 5வது நாள் செய்தி அடிபட்டது.

000 000 000

காலம் யாரினதும் இடைஞ்சலுமின்றித் தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் அதன் பின்னான எங்கள் ஊர்பிரிவு…..இடம்பெயர்தல் என எங்கள் பயணங்களில் 1992 மார்ச்மாதம் 5குடும்பம் இணைந்திருந்த அவள் இருந்த வீட்டுக்கு முன்னால் நாங்களும் போயிருந்தோம். அவள் 3பிள்ளைகளுக்கு அம்மாவாகியிருந்தாள்….. அவளது பழைய முகம் அவளிடமில்லை. வயதிற்கு மீறிய முதுமையும் குடும்பபாரமும் அவள் மீது விழுந்து கிடந்தது. அவளது வாழ்வு மாறிப்போனது.

000 000 000

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடந்த 2002…சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட நேரம். வவுனியாவிலிருந்து வன்னிக்குப் போவதற்கான பாஸ் அனுமதிக்காக பிறவுண் கொம்பனியில் காத்திருந்த நேரம் அவளது சித்தியை அங்கே கண்டேன். அவளது சித்திக்கு என்னை ஞாபகமில்லை மறந்துவிட்டிருந்தா.

உறவினர் ஒருவரிடம் அவளைப்பற்றி விசாரித்த போது இப்படிச் சொன்னார்கள்.….,
அவளது காதல் கணவன் தற்கொலை செய்துவிட்டானாம். இவள் உயிரோடு இருக்க அவனை நம்பி பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் அவனை மட்டும் நம்பித் தனது எதிர்காலத்தை இருளாக்கிப் போனவளை விட்டு ஊரில் ஒருத்தியுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாம். அவன் குடித்துவிட்டு அவளை நெடுலும் அடிப்பானாம்.

அவனது கள்ளத் தொடர்பு அவளுக்குத் தெரிய வந்து அவளுடன் முரண்பட்டானாம். கள்ளக்காதலி நல்ல வடிவான பெட்டையாம். அவளும் அவனோடு வாழ வேணுமெண்டு அடம்பிடித்தாளாம். கடைசியில் கள்ளம் ஊரெங்கும் தெரியவர அவன் தற்கொலை செய்து கொண்டானாம். அவள் தனது குழந்தைகளுடன் தனித்துப் போனாள். இளவயதுக்காதல் திருமணம் அவளை இளவயதிலேயே விதவையாக்கி குழந்தைகளோடு கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளைப் பராமரித்தாளாம்.

2004இல் அவளது பெண்குழந்தை நோயுற்றிருப்பதாகச் சொன்னார்கள். கண்டுபிடிக்கப்படாத நோயால் வலிதாங்கியது அவளது குழந்தை. ஓடியாடிய குழந்தை படுக்கையில் போனது. அதன் பின்னர்தான் அவளது பெண் குழந்தையின் எலும்பில் புற்றுநோயென்று அறியப்பட்டது. அவளது குழந்தையும் நோயின் கடைசி எல்லையைத் தொட்டு இறந்துபோனது. 30வயதிற்குள் அவள் வாழ்வு எல்லாச்சுமைகளையும் தாங்கி துயரப்பட ஏதுமில்லாமல் நொந்து போனாள்.
2010இல் முகப்புத்தகத்தில் உறவு ஊரவர் என நண்பர்களாக்கிய ஒரு உறவின் அல்பத்தில் அவளைப் பார்த்தேன். திரும்பி அவளைப்பற்றித் தேடியதில் கிடைத்த விடை. அந்தப் படத்தில் நல்ல அழகான ஒரு இளைஞனைக் காட்டிச் சொன்னார்கள். அதுதான் அவளது மகன். தகப்பன் மாதிரி நல்ல வெள்ளைப்பொடியனெல்லே…? அடையாளம் காட்டிய நட்பு எனக்குச் சொல்லியது. அந்த மகன் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகியிருக்கிறானாம். பண உதவி தாராளமாகக் கிடைக்கிறதாம். வெளிநாட்டில் உள்ள உறவுகளால் அவள் நல்ல வசதியோடு வாழ்கிறாளாம்.

உவ லேசுப்பட்ட ஆளில்லைத் தெரியுமோ…? ரெண்டு மூண்டு வருசத்துக்கு முன்னை காசைக்கண்டவுடனும் பெட்டைக்கு கால்கை புரியேல்ல…..ஆரோ ஒரு வான்காரனோடை தொடர்பிருந்ததாம்…..பிறகு ஆக்கள் பேசி அவனை விட்டிட்டுதாம்…..ஊரவர் ஒருவரின் வாயிலிருந்து இந்தச் செய்தி வந்தது.

திருமண வயதை எட்டாத வயதில் அவள் காதலித்தாள். காதலுக்கான அர்த்தம் பரியாத அவளது காதலுக்கு ஆதரவு கொடுத்த அவளது அம்மா அப்பாவின் அக்கறையீனம்….திருமணம் என்றால் வாழ்க்கையென்றால் புரிந்து கொள்ள முடியாத வயதில் அவள் குழந்தையைப் பெற்ற போது....காதல் கணவன் கள்ளத் தொடர்பு தற்கொலை வரை பேசாமலிருந்தவர்கள்……

இப்போது எல்லாம் அறிந்த வயதில் அவள் ஒருவன் மீது காதல் கொண்டிருந்தாள் என்பதனை ஏற்கமுடியாது அவளை விமர்சித்து கலாசாரம் பண்பாடு பேசுகின்ற எல்லார் மீதும் கோபம் வருகிறது. அவள் துன்பத்தோடு வாழ்ந்த போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்…..?

08.06.2011

Tuesday, September 13, 2011

தொடரும் துயரங்கள்…..!

இரவு ரண்டு மணியிலிருந்து அந்த அழைப்பு வந்து வந்து கட்டாகிக் கொண்டிருந்தது. சத்தத்தை நிறுத்தி வைத்திருந்த தொலைபேசியின் வெளிச்சம் அடிக்கடி மின்னி மின்னி மறைந்தது. இரவு பகல் என வித்தியாசம் பாராமல் இப்படித்தான் இப்போது வீட்டுத் தொலைபேசியும் கைபேசியும் புதியபுதிய குரல்களால் நிறைகிறது.

பகல் பலரது இலக்கங்களுக்கு அழைத்து அவர்களது தேவைகள் அவசரங்களை பதிவு செய்து கொண்டேன். ஆனால் அந்த இலக்கத்தை மறந்து போனேன். அன்று மாலை 17.44மணிக்குத் திரும்பவும் அந்த இலக்கம் வந்தபோதுதான் ஞாபகம் வந்தது.

000 000 000


எதிர்முனையில் ஒரு பெண்குரல்...
நான் யேர்மனியிலிருந்து***……என நான் ஆரம்பிக்க…..
நான் உங்கடை ******* பெறாமகள் *****…. அவள் தன்னை ஒரு அன்னியமான ஒருத்தியை அறிமுகம் செய்வது போல் அறிமுகம் செய்தாள். அடியாச்சி….என்ன இது ஆரோ பிறத்தியார் மாதிரி கதைக்கிறியே…? அவள் குரல் உடைந்து தடுமாறியது……

சரி அம்மா என்ன செய்யிறா…? நான் அவளது கதைகளைத் திசைமாற்றினேன்.

அம்மா தான் உதவி…கொழும்பில ஒரு கடையில நிக்கிறா….அவாக்கும் வயசு போட்டுத்தான….
எத்தின பிள்ளையள்….? 4பேர்….மூத்தவன் இந்த வருசம் ஏ.எல் எடுக்கப்போறான்….மகள் ஓ.எல் எடுக்கப்போறாள் கடைசிக்கு 9வயது….. மாமியாக்களோடைதான் இருக்கிறேன்…. அவர் பூசாவில….. ஆளைப்பாக்கவும் கனநாள் போகேல்ல….எங்கை வருமானமொண்டும் இல்லைத்தானே….மாமா மாமியும் வயசுபோனாக்கள்….பிள்ளையளின்ரை படிப்பு செலவுகளெண்டு ஒரே தலையிடி…..
அவள் தனது கதைகளைச் சொல்லிக் கொண்டு போன பாதியில் கேட்டேன்….
அப்ப தம்பி என்னேயிறான்….?
அவன் உதவியில்லையோ…?
அதவிடு….ஒருதரும் உதவியில்லை….சலிப்போடு சொன்னாள்.

என்னை உதவிசெய்யென்று கேட்காமல் தனது வாழ்வுப்பாடுகளைச் சொன்னாள். கிட்டத்தட்ட 52நிமிடம் கதைச்சேன்.
சரி பிள்ளையளுக்குச் சமைக்க வேணும்…..இன்னொரு நாள் எடுக்கிறனே…..
மறக்காம எடு கனக்க கதைக்க வேணும்போலையிருக்கு…..கேட்டுக் கொண்ட அவளது வேண்டுதலுக்கு ஓம் சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.

000 000 000


காலம் 1986…..

எங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம்..அவளது மாமாவுக்கு நிச்சயமானது. அவளது ஊர் தென்மராட்சியின் ஒரு கிராமம். கொடிகாமத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு பழக்கமான ஒருவரின் ஏற்பாட்டால் அந்தத் திருமணம் ஒழுங்காகியது. யேர்மனியில் இருக்கும் அவளது மாமாவுக்கு எங்கள் வீட்டிலிருந்து மணமகள் யேர்மன் போக காத்திருந்தது.

சம்பந்தபகுதிக்கலப்பில் இரு வீடுகளும் பேச்சுகள் முடிந்து சம்பந்தம் கலக்கும் நாள் வந்தது. எங்கள் ஊரிலிருந்து பஸ் எடுத்து நெடுந்தூரத்தில் இருந்த அவர்களது ஊருக்குப் பயணமானோம். அந்த ஊரின் எல்லையை அடைந்ததும் குரங்குகள் தாவித்திரிந்தன. குளங்கள் வெளிகள் மணல் நிலம் வடலிகள் என ஒரு புதிய ஊரின் அறிமுகம்……அங்கேயே தங்கிவிடலாமென்ற ஆசையை அந்த ஊரின் அழகு ஏற்படுத்தியது…..

வாசலில் கும்பம் வைத்துப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்து எங்கள் வீட்டு மணமகளை வரவேற்று ஆராத்தி எடுத்தார்கள். அங்கேதான் அவள் முதல் முதலில் அறிமுகமானாள்….அவளின் பின்னொரு சிறுவன்…..அவர்களோடு நாங்கள் விளையாடினோம்…..அவளும் அந்தச் சிறுவனும் என்னை மச்சியென்றார்கள்.

மச்சிமுறையுள்ளவர்கள் நிறைய இருந்தும் யாரையும் அந்த முறைசொல்லியழைக்காத என்னை அவர்கள் மச்சியென்று அழைத்தது எனக்குப் பிடிச்சிருந்தது. அவளும் நானும் அன்றிலிருந்து நல்ல சினேகிதமானோம். அவள் என்னைவிட ஒரு வயதால் மூத்தவள். எங்கள் ஊருக்கு இனிமேல் தான் வருவேனென்றும் சொன்னாள். அவளோடு சேர்ந்து அவளது ஊரின் அழகை அன்று தரிசித்தேன். அவள் வீட்டுக்கு கிட்டவுள்ள குளமொன்றுக்கு கூட்டிப்போனாள்…..அங்கே அவள் நீந்துவதாகவும் சொன்னாள். கிணற்றைத் தவிர எங்கள் ஊரில் குளம் என்பது இல்லை. வீட்டுக்கிணறு தாண்டினால் தோட்டக்கிணறு தோட்டங்களுக்குப் பாயும் தண்ணீர் வாய்க்கால்களைத் தவிர நீரோடைகள் தெரியாத எனக்கு அவளோடு நின்றுவிட வேண்டும் போலிருந்தது. எனது ஆசையை அம்மாவிடம் போய்க்கேட்டாள். அம்மா பார்த்த பார்வையோடு எனக்கு அவளோடு நிற்கும் ஆசையே போய்விட்டது.

திருமணக்கலப்பு முடிந்து எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமாவிடம் போய்விட்டா. அவளும் அவளது குடும்பமும் எங்களிடம் வந்து போவதும் அவள் பாடசாலை விடுமுறையில் எங்களுடன் வந்து தங்கிவிடுவதும் நடைபெறத் தொடங்கியது.

அவள் தனது அம்மாவைப்பற்றித் தான் அதிகம் சொல்லுவாள். அவளது அம்மா மத்தியகிழக்கு நாடொன்றுக்குப் போய்விட்டதாகவும் காசும் உடுப்புகளும் தனது அம்மா அனுப்புவதாகவும் சொல்லுவாள். அழகான ஆடைகள் அணிந்து வருவாள். கட்டை ஜீன்ஸ் போட்டு பூபோட்ட சட்டையும் போட்டு நல்ல வடிவாக வருவாள். வாசனை மிக்க வாசனைத்திரவியமும் அடித்துக் கொண்டு வருவாள். மத்தியகிழக்கு போன அம்மாவிற்கு நிகராக அவளுக்கான தேவைகள் யாரையும் அவளுக்குப் பெரியம்மாவும் அம்மம்மாவும் செய்வார்கள்.

உங்கடை அப்பா எங்கை….? ஒரு விடுமுறையில் அவள் வந்து நின்ற நேரம் கேட்டேன்.
அவர் அவற்றை அக்காவோட இருக்கிறார்…..யாரோ காதலிச்சவையாம்….அதுக்கு உதவிசெய்ததில அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆரோ வெட்டீட்டினமாம்…..பிறகு அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டினம்…..நானப்ப சின்னப்பிள்ளையாம்…..ஆனா நான் அப்பாவோடை கதைக்கிறனான்….அப்பாவும் எனக்கு உடுப்பெல்லாம் வாங்கித்தாறவர்…..சந்தோசமாகச் சொன்னாள்.

காலம் 1987….

எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரான குரும்பசிட்டி வரையும் ஆமி வந்துவிட்டதால் எங்கள் ஊரிலிருந்து இடம்பெயர்ந்து போனோம். அம்மா அப்பா எங்கள் ஊரின் தெற்கில் இருக்க பிள்ளைகள் எங்களை சின்னமாமா வாடகைக்கு எடுத்த மல்லாகம் கல்லாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இவளும் எங்களோடு அங்கு வந்து நின்றாள். சின்னமாமாவைக்குப் பிறந்த இரட்டைப்பிள்ளைகளில் ஒருவன் இறந்து போக மிஞ்சிய ஓங்காரனை நாங்களும் அவளும் தூக்கி வைச்சிருப்போம். விளையாடுவோம். அவனுக்கு பால்மா கரைத்துக் கொடுக்க அத்தை எங்களுக்குப் பழக்கிவிட்டா.

எங்கள் கையில் பால்மா வந்ததோடு பால்மா கெதியில முடியத் துவங்கீட்டுது. அத்தைக்கு சந்தோசம் தனது மகன் நாங்கள் பால் பருக்குவதால் அதிகம் பால் குடிக்கிறானெண்டு. குழந்தையின் பால்மாவை அவளும் நானும் வாயில் போட்டு விழுங்கிவிடுவதால் தான் பால்மா கெதியில் முடியுதெண்டதை அறியாத அத்தை பலதரம் எங்களிடம் குழந்தையை பால் பருக்கத் தந்துவிடுவா. அவளும் நானும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவோம் சமையலுக்கு காய்கறி வெங்காயம் வெட்டிக் கொடுப்போம். விடுமுறை முடிய அவள் தனது ஊருக்குப் போய்விடுவாள்.

காலம் 1987 ஆடி….

1987 “ஒபரேசன் லிபரேசன்“ நெல்லியடியில் கரும்புலி மில்லரின் தாக்குதலோடு முடிந்து இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. அகதியான நாங்கள் திரும்பவும் எங்கள் வீடுகளுக்குப் போனோம். பற்றைகள் மண்டிய வளவுகளைத் துப்பரவாக்கி புதிய மரங்களை நட்டோம். புதிய புதிய அழகிய பூக்கன்றுகளை நட்டோம். நம்பிக்கைகள் எங்கள் மனங்களில் சிகரமாக உயர்ந்தது. சண்டையில்லை சமாதானம் வந்துவிடுமென்று நம்பினோம்.

கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடியில் கரும்புலியாகி வெடித்ததோடு சொன்னார்கள்……இந்திய இராணுவம் வரப்போவதாகவும் அமைதிகாக்கும் படைகளால் எங்களுக்கு தாயகம் வந்துவிடப்போவதாகவும் பேசிக்கொண்டார்கள் சனங்கள்…..

ஒருநாள் மாலை வானத்தில் விமானங்கள் பறந்தது…..மேலிருந்து ஆடியாடி வந்து பொட்டலங்கள் விழுந்தது….அது இந்தியன் ஆமி சாப்பாடு போட்டதாமெண்டு சொன்னார்கள்…..அதையெல்லாம் இயக்கம் தேடித்தேடி எடுத்துக் கொண்டு போனார்கள். கொஞ்சநாளில் புலிகள் ஆயுதங்களை கையளிப்பதாக பல இடங்களில் ஆயுதக்கையளிப்பு நடந்தது. இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் படிக்கப்போனார்கள். பலர் வெளிநாடுகளுக்கு வெளிக்கிட்டார்கள்.

இந்தியஇராணுவ வாகனங்கள் எங்கள் வீதிகளில் வலம்வந்தன. அந்த நேரம் எங்கள் ஊரில் உலவிய புலிமாமாக்களின் சொற்படி வந்திருந்த இந்தியப்படைகளை வீதிகளில் தோரணம் கட்டி வாழைமரம் கட்டி வீதிகளை அழகாகத் துப்பரவாக்கி வரவேற்றோம். வீதியில் வருகிற அவர்களுக்கு கைகாட்டி எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.

1984ம் ஆண்டின் பின்னர் ஆமியை வீதியில் காணுவது அப்போதுதான். அதுவும் இன்னொரு நாட்டு இராணுவம். இனிமேல் எங்கள் கனவுகளில் கெலிகொப்டர் வந்து குண்டு போடாதுஎறிகணை வெடிக்காதென்ற எத்தனையோ கற்பனைகள் எங்கள் சின்ன மனங்களுக்குள் துளிர்விடத் தொடங்கியது.

அமைதிகாக்க வந்த படையோடு யுத்தம் வரப்போகிறதாமென ஊரில் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் குழந்தைக்கனவுகள் கருகத் தொடங்கியது. எங்கள் குழந்தைக்கனவுகளையும் உயிர்களையும் இந்திய இராணுவ டாங்கிகள் கொன்று போடத் தொடங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தது.

15-09-1987அன்று தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஊரெங்கும் கதைத்தார்கள். ஊர்கூடி அரசியல் கதைக்கத் தொடங்கினார்கள். எங்கள் பிள்ளையார் கோவிலடியிலிருந்து வாசகசாலைவரையும் அந்தக் கதைகள் ஆளாளுக்கு ஏற்ற ஞானத்தின் படி ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.


தியாகி திலீபனின் மரணத்தோடு ஒக்ரோபர் 5 பன்னிரு வேங்கைகள் பலாலியில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்த செய்தி வந்து எங்கள் கனவுகளில் திரும்பவும் துப்பாக்கிகளும் யுத்த டாங்கிகளும் ஒக்ரோபர் மாதமே இந்திய இராணுவம் புலிகளுக்குமிடையில் யுத்தம் ஆரம்பித்தது.

இரத்தமும் மரணமும் எங்கள் நிலமெங்கும் நிரம்பத்தொடங்கிய மாதமொன்றில் அவளும் அவளது பெரியம்மாவும் எங்கள் ஊருக்கு வந்தார்கள். அதுவும் ஒரு பாடசலை விடுமுறைதான். அவள் தனது ஊரில் நிகழும் இந்திய இராணுவம் புலிகள் சண்டை பற்றியெல்லாம் சொன்னாள்….

அவளது வீட்டில் அவர்களோடு பழகி அவர்கள் வீட்டில் உண்டு உறங்கி வீரச்சாவான பலரது கதைகளைச் சொன்னாள். தக்காளியென்ற போராளி அவளது அம்மம்மாவுடன் வந்து அவர்களது மாட்டுக்கொட்டிலில் தங்கியது மலேரியாவில் பாதித்தது….பின்னர் தக்காளி வீரச்சாவானதையெல்லாம் கண்ணீரோடு சொன்னாள். இந்தியன் ஆமியை ஒவ்வொரு குழந்தையும் வெறுத்து ஒதுக்கியதற்கான சாட்சியமாக அவள் தனது வெறுப்பையெல்லாம் சொன்னாள்.

காலம் 1990….

இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து யாழ்தேவியில் ஊருக்கு வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினார்கள். அவளது தம்பி ஒருநாள் காணாமல் போய்விட்டான். அவனது சயிக்கிள் வீட்டுக்கு வந்தது. அவன் இயக்கத்துக்குப் போய்விட்டான். அவள் அழுதாள். தம்பியைத் தேடித் திரிந்தாள். அவன் பயிற்சிக்கு போய்விட்டான். மத்தியகிழக்கிலிருந்து திரும்பிய அவளது அம்மாவுக்கு அவனில்லாமல் போனது பெரும் துக்கமாகியது.

யேர்மனி போன எங்கள் வீட்டு மணமகள் அவளது மாமியாக ஒரு குழந்தையுடன் வந்திறங்கினா. குழந்தைக்கு நேர்த்தி செய்ய நைனாதீவுக்கு போகப் போவதாகவும் வீட்டில் பேசிக்கொண்டார்கள். வெளிநாட்டு வரவான அந்தக் குழந்தையை நாங்கள் ஆளாளுக்குப் போட்டி போட்டுத் தூக்குவது விளையாடுவது என இரண்டு குடும்பமும் ஒரேயிடத்தில் சிலவாரங்கள் கூடினோம்.

ஒருநாள் பின்னேரம் அம்மா சொன்னா அவளும் நானும் வீட்டிலை நிண்டு சமைக்கட்டாம் மற்றவையெல்லாரும் நைனாதீவுக்குப் போகினமாம்…..நைனாதீவுக் கடலில் பயணிக்கும் எங்கள் இருவரது் ஆசையும் நாசமாப்போனது. அவளும் நானும் அழாக்குறை….காலமை விடிய வெள்ளண எல்லாரும் எழும்பி இருட்டோடு பஸ்சேறிப் போக வெளிக்கிட அம்மாவுக்குச் சொன்னேன்…..

போட்டு வாங்கோ உப்புக்கறி சமைச்சு வைக்கிறோம்……

எங்கள் இருவரின் கண்ணீர் சோகம் எல்லாத்தையும் ஒருவரும் கவனிக்கேல்ல….அவையெல்லாரும் போட்டினம்….
அன்றுதான் முதல் முதலாக அவளும் நானும் வீட்டுக்காறருக்கு சமைக்கப்போகிறோம். அவளும் நானும் சமையலுக்கு அடுப்பு மூட்டி ஆரம்பமானோம். சோறு புக்கையாப் போச்சு…..அதை பானையோடு கொண்டு போய் கிணற்றடியில் நிண்ட மாதுளமரத்து வேருக்கு கிட்ட கிடங்கு கிண்டி புதைச்சோம்…புதிசா சோறு அவிய பக்கத்தில நிண்டு பாத்து அவள்தாள் வடித்தாள்.

கத்திரிக்காய் பால்கறியை நான் இலகுச்சமையலென எனது கையில் எடுத்து கத்தரிக்காயை அவளோடு கதைச்சுக் கதைச்சு மசிக்கத் தொடங்கினேன். சட்டி அடியாலை உடைஞ்சு அடுப்புக்கை கத்தரிக்காய் பால்கறி போக மிஞ்சியதை அடுப்பிலிருந்து அள்ளி ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தேன்.

எங்களுடைய முதல் சமையலை அன்று இருவரும் சேர்ந்து முடித்தோம். எங்கள் இருவரின் சமையலைச் சாப்பிட பகல் வீட்டை வந்தவைக்கு அன்று சோதனைதான். நான் சொன்னமாதிரி நான் செய்த எல்லாத்திலும் உப்பு கூடவாம்….ஏதோ கோவத்தில சொன்னது உண்மையானதுக்கு அம்மா பேசினா…..

எங்கள் ஊருக்கு அவள் வந்தால் நானும் அவளும் சைக்கிளில் டபிள் போவோம். தோட்டம் துரவு முழுக்க சுற்றி வருவோம்…..அவள் ஊருக்கு நாங்கள் புத்தூரால் வாதரவத்தை வெளி வண்ணாத்திப்பாலம் தாண்டி சயிக்கிளில் போயவரத் தொடங்கினோம்.

காலம் 1990 ஆனி….

இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம். எங்கள் ஊர் மீளவும் இடம்பெயரத் தொடங்கியது. பலாலியிலிருந்து வருகிற எறிகணைகள் எங்கள் ஊருக்குள்ளும் வீழத்தொடங்கியது. முதல் சண்டை ஆரம்பமாக அவளது ஊருக்கு நானும் எனது தங்கைகளும் அவளது வீட்டுக்கு போனோம். அம்மா அப்பா ஊரில் கொஞ்சத் தூரம் தள்ளியிருந்தார்கள்.

அவளது ஊரின் குளத்திலும் தரவைகளிலும் குளித்து நீச்சல் பழகி அந்த மணல் நிலமெங்கும் விளையாடித் திரிந்தோம். அவளது இயக்கத்துக்குப் போன தம்பி ஊருக்கு வந்தான். தென்மராட்சிப் பொறுப்பாளராக இருந்த பாப்பாவுடன் மோட்டசயிக்கிளில் திரிந்தான்.

மீசாலையில் இருந்த முகாமொன்றில் அவன் இருப்பதாகத் தகவல் அறிந்து அவள் அவனைப் பார்க்கப்போகப் போவதாய் சொன்னாள். ஒருநாள் சாவகச்சேரி சந்தைக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போனாள். வீதிகளில் அவளைத் தெரிந்த பலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

சந்தையில் மாம்பழம் இன்னும் சில இனிப்புப்பண்டங்களும் வாங்கினாள். அது தம்பிக்கு அன்று மாலை சந்திக்கும் போது கொடுக்க வேணுமென்றாள். அவள் கல்வி கற்கும் சாவகச்சேரி இந்து மகளீா் கல்லூரிக்கு அவளது ஊரிலிருந்து போய்வருவது தூரம் என்பதால் அங்கேயொரு வீட்டில் தங்கியிருந்துதான் படிப்பதாய் சொன்னாள். தான் தங்கியிருந்த வீட்டிற்கு கூட்டிப்போனாள். அங்கே ஒரு அன்ரியும் 2பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியும் இவளும் ஒரே வகுப்பாம். அவர்களுக்கு என்னைத் தனது மச்சாள் என சொன்னாள். தனது தம்பி மீசாலையில் வந்து இருப்பதாக அன்ரிக்குச் சொன்னாள். அன்று அவனைப் பார்க்கப் போவதாகவும் சொல்லிவிட்டு வெளிக்கிட்டாள்.

000 000 000

அன்று மாலை அவளது தம்பியை பார்க்க அவன் இருந்த மீசாலை காம்பிற்குப் போனோம். வரியுடுப்போடு எங்கள் முன் வந்திருந்தான். வேறும் 3பேர் வந்தார்கள்.

இது அக்கா…. இது மச்சாள்….

எங்கள் இருவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவர்களை ஏற்கனவே வீதிகளில் கண்டிருக்கிறேன். இன்று அவர்களுடன் கதைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

நீங்க ரெண்டுபேரும் எப்ப இயக்கத்துக்கு வரப்போறியள்…?
அவர்களில் ஒருத்தன் எங்களுடன் கதையை ஆரம்பித்தான்.

இப்பவே வரலாம்…..? எடுப்பீங்களோ….? என்ற எனது பதிலை அவன் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ…..சிரித்துச் சமாளித்துக் கொண்டு…..

மட்டுவிலில இருக்கிற அக்காக்களிடை காம்புக்கு போங்கோ….அவைக்குச் சொல்லிவிடுறம்…..
அடுத்தவன் அவனுக்கு முதுகில் அடித்தான். வாயை வைச்சுக் கொண்டு சும்மாயிருக்கமாட்டியே…?

அடுத்தவன் எங்களுக்குத் தேனீர் கொண்டு வந்து தந்தான். நாங்கள் அமர்ந்திருந்த மேசையில் பல புத்தகங்கள் பத்திரிகைகள் இருந்தது. அதிலிருந்து ஈழநாதம் ஒன்றை எடுத்தேன். மச்சான் , மச்சாள் , மற்றையவர்கள் 3பேரும் கதைக்க ஈழநாதம் பத்திரிகையில் வந்திருந்த கவிதைப்பக்கத்தைத் தேடி வாசித்தேன்.

அக்காக்கு கவிதை பிடிக்குமோ…..? இல்ல உங்கடை கதையும் பிடிக்கும்…..சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் பத்திரிகையை மேசையில் வைத்தேன்.

அவன் போரியல் வரலாற்று நூலொன்றைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். தான் படித்த புத்தகங்கள் சிலவற்றைப் படிக்குமாறும் சொன்னான். நல்லதொரு இலக்கிய ரசனைமிக்கவனாக அவனது நூல்கள் பற்றிய அறிதல் இருந்தது. போராட்டம் போர்க்களம் தாயகம் பற்றிய அவனது ஆதங்கம் கருத்துக்கள் மனசுக்குள் ஒரு களத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் போராட வேண்டுமென்ற கட்டாயத்தை தனது அனுபவத்தால் அறிந்த யாவற்றையும் சொல்லி விளக்கிக் கொண்டிருந்தான்.

அந்தச் சந்திப்பு சில நல்ல பண்பாளர்களையும் தாயகப்பற்றாளர்களையும் தந்திருந்தது. இரண்டரை மணித்தியாலம் கதையும் சிரிப்புமாய் கழிந்தது. சயிக்கிள் நிறுத்திய மரத்தடிக்குப் போனேன். அவள் கண்ணீரோடு அவள் தம்பியிடமிருந்து விடைபெற்றாள்.

நாங்களும் தம்பிதானக்கா உங்களுக்கு….என அவர்களில் ஒருத்தன் சொன்னான். வாசல்வரை அவன் வந்து அக்காவை வழியனுப்பிவிட்டான். இங்காலை வரேக்க வா அக்கா என்றான் அவன்…..

அவர்களது முகாமைவிட்டு வீதிக்கு ஏறினோம். அவள் அவனைப் பற்றிச் சொல்லியழுதாள். அவன் வீட்டை வரமாட்டானாம்…..அம்மா பாவம்….எனத் தாயை நினைத்துக் கலங்கினாள்.

000 000 000

நாங்கள் பிரதான வீதியில் ஏறினோம். அவள் தனது மனசுக்குள்ளிருந்த பல கதைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளைத் துரத்துகிற சயிக்கிள்கள் பற்றி…அவளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் பற்றி….அந்த இடைக்குள் வேம்பிராய் தாண்டி றோட்டுக்கரையை அண்டிய ஒரு வீட்டடியில் சயிக்கிளை நிப்பாட்டச் சொன்னாள்…..அவளுடன் படிக்கும் ஒரு தோழி அந்த வீட்டில் இருப்பதாகச் சொன்னாள். அவர்கள் எனக்கு அறிமுகமில்லாதபடியால்….

நான் வரேல்ல….நீ போட்டு வா நான் வெளியில நிக்கிறேன்…..

நான் அந்த வீதியில் காவல் நிற்க அவள் அந்தவீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் களித்து வந்தாள். வரும்போது அருநெல்லிக்காய் ஒரு பைநிறையக் கொண்டு வந்தாள். நான் ஒரு அருநெல்லிக்காய் சாப்பிடும் கெடு என்பதை அவளுக்குச் சொல்ல….எனக்கு இனிமேல் இலவச அருநெல்லி கிடைக்க அவள் வழிசெய்வதாய் சொன்னாள்.

நான் சயிக்கிள் மிதிக்க அவள் கரியரில் இருந்து கதைத்துக் கொண்டு வந்தாள். வறணிக்கு கிட்டவாக 2பொடியள் எங்கடை சயிக்கிளைத் துரத்திக் கொண்டு வந்தினம். அவளோடு அவை கதைச்சினம். ஒருத்தன் நாமப்பொட்டு வைத்து நடுவில் கும்குமம் வைத்து சாமிபக்தனாய் வந்தான். அவன் தான் இவளோடு அலட்டிக்கொண்டு வந்தான். அவளும் கனநாள் பழகினவையோடை கதைக்கிறமாதிரி அவனோடு கதைத்துக் கொண்டு வந்தாள்.

காட்டுத்தேன் வேணும்….உங்கடை பக்கம் எடுக்கலாமெல்லோ….? நாளைக்கு அங்காலை வருவம்…. வீட்டை வரலாமோ…எனக் கேட்டான்.

அதுக்கென்ன வாங்கோ….அம்மம்மாக்குத் தெரிஞ்ச தேன் விக்கிறவையும் இருக்கினமெண்டாள். அப்ப அம்மம்மாட்டை கேட்டு வையுங்கோ…என்றான் அவன்.

அவளது வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்குள் நாங்கள் இறங்க அவர்கள் நேரே போனார்கள். ஒழுங்கையில் இறங்கிய பின்னர் சொன்னாள். நாமப்பொட்டு வைச்சிருந்தவன் அவளது அப்பாவின் உறவாம்….ஏற்கனவே தெரியுமாமெண்டாள்.

000 000 000

மறுநாள் வெள்ளிக்கிழமை சுட்டிபுரம் அம்மன்கோவிலுக்குப் போவமென்றாள். எனக்கும் புதிய ஊரில் ஒரு கோவிலுக்குப் போக விருப்பமாயிருந்தது. பின்னேரம் நாங்கள் குளத்தில் போய் குளிச்சிட்டு வந்தோம். முதல்நாள் சந்தித்த 2பொடியளும் அவளது வீட்டு ஒழுங்கையில் வந்து அவளது வீட்டையடைந்தார்கள். அம்மம்மா வீட்டில் இல்லாததால் அவர்களுக்கு தேன் வாங்க முடியாமல் போனது. தேனீர் போட்டுக் கொடுத்தாள்….குடித்துவிட்டுப் போனார்கள். வீட்டில் நடந்த இந்த நிகழ்வுகளை அவதானித்த ஒரு நல்லுறவு அவளது அம்மம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் போட்டுக் குடுத்துவிட….மாடுகளை பட்டியில் அடைத்த குறையில் விட்டுவிட்டு ரெண்டு பேரும் அவளிடம் வந்தார்கள்.

யாரவங்கள்….? இஞ்சையெப்பிடி வருவாங்கள்….? என திட்டு விழுந்தது. அவள் பெரியம்மா என்னையும் கேட்டா…
உனக்கும் அவங்களைத் தெரியுமா…?

அவா கேட்டு முடிக்க முதல் நான் இல்லையெனத் தலையாட்டினேன். என்ரை அம்மா இதெல்லாம் அறிஞ்சா என்ர நிலமையை நினைக்க குளத்தில குளிச்சு வந்த சந்தோசமே போய்த் தோலைந்தது.

000 000 000

வேம்பிராய் அருநெல்லிக்காய் வீட்டடி வாசலில் நான் காவல் நிற்க அவள் அங்கே போய் கனநேரத்துக்குப் பிறகு நிறைய நெல்லிக்காயோடு வருவாள். நெல்லிக்காய்க்கெடு நான் புளிக்கப்புளிக்க நெல்லிக்காயைச் சப்புவேன்.

அந்த வீட்டுக்கு வெளியில் வீதிக்கரையில் நான் பலதரம் நின்ற போது அதாலை போய்வரும் மோட்டார் சயிக்கிளொண்டு அடிக்கடி முறாய்ச்சுப் பாத்துக் கொண்டு போகும்…..நானும் அந்தக்கண் பார்வை என்னைவிட்டு விலகும் வரை ஏலுமெண்டா பார் பாப்பமெண்டு பார்ப்பேன். அந்த மோட்டார் சயிக்கிளில் போகும் போராளி நான் றோட்டில் நிக்கிற விசயத்தை அவளது அம்மம்மாவுக்கு ஒருக்கா சொல்லிவிட்டது போதாமல் என்னையும் ஒருக்கா வந்து கேட்டிச்சுது…..

உதிலை என்ன அலுவல்…..? அவள் தனது சினேகிதியைப் பாக்கப் போட்டாள். அவளுக்காக நான் காத்திருப்பதாய் சொன்னேன்.

உதிலை நெடுக நிக்க ஆக்களென்ன நினைப்பினம்….? என்றான் அவன்.
பாவமெண்டு நினைப்பினம்….இது நான்.

அதற்குள் அவள் நெல்லிக்காயோடு வந்து சேர்ந்தாள். அண்ணை எப்பிடியிருக்கிறீங்கள்….? தம்பியையெப்பிடி இருக்கிறான்……? அவர்கள் கதைக்க அவள் கொண்டு வந்த அருநெல்லிக்காயை நான் சப்பத்தொடங்கினேன்.

பேக்கோவம் வந்திச்சு எனக்கு…. முறால்…முறால்…..மனசுக்குள் அவனைத் திட்டினேன். வளமையா அந்த முறால் மூஞ்சையின் பார்வை மறையும் மட்டும் பாக்கிறனான் அண்டைக்கு நிமிந்தும் பாக்கேல்ல….

அவன் அவளுக்குச் சொன்னான்….அந்த வீட்டை போகேக்க என்னையும் உள்ளை கூட்டிப்போகச் சொல்லி….நெடுகலும் உப்பிடி தெருவில நிண்டா ஆக்கள் என்ன நினைப்பினம்…..இவள் தான் ஆக்களைத் தெரியாதெண்டு வரமாட்டனெண்றவள்….அதான் நானும் விட்டிட்டுப் போறனான்…..

அவன் என்ன நினைத்தானோ சிரித்தான். நெல்லிக்காய் மரத்தை குப்பிளானில கொண்டு போய் நடுங்கோ…..சொல்லிவிட்டுப் போனான். அண்டையிலயிருந்து எனக்கு அந்த மோட்டார் சயிக்கிளைக் கண்டால் கீரியைப் பாம்பு கண்ட நிலமைதான்.

அப்பிடித்தான் ஒருநாள் அவளது ஊரிலிருந்து எனது ஊருக்கு தனியப்போய்க்கொண்டிருந்தேன். மட்டுவில் அம்மன்கோவில் தாண்டினதோடை என்ர சயிக்கிள் தன்ரை மூச்சைவிட்டிட்டுது. இடையில ஒரு சயிக்கிள் கடையும் இல்லை. புத்தூர் வந்தால் தான் காற்றடிக்கலாம். நடைக்கோச்சில சயிக்களை உருட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்க….. வண்ணாத்திப் பாலத்தாலை முறால் இன்னொரு ஆளையும் ஏத்திக் கொண்டு மோட்டார் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தது.

கிட்ட வந்து நிப்பாட்டி….அருநெல்லி….எனச் சொல்லீட்டுப் போச்சுது. அருகில கிடந்ததாலை தூக்கியெறிய வேணும்போலையிருந்தது. அது போதாதெண்டு…..“நடடா ராசா மயிலைக்காளை நல்ல நேரம் வருகுது….“ பாட்டையும் பாடிக்கொண்டு போய்ச்சுது.

000 000 000

காலம் 1991….ஆடி…

ஆனையிறவு “ஆகாயக்கடல் வெளிச்சமர்“ அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்த அச்சமருக்கு முன்னர் உப்பளவெளி முகாமையண்டிய இடங்களில் எல்லாம் பதுங்குகுளிகள் அமைத்துக் கொண்டிருந்தனர் புலிகள்.

அந்த உப்பளவெளிக் கள நாயகர்களுக்கு உதவியாக பதுங்குகுளி அமைத்தல் மண்மூடை கட்டுதலை அவள்கூடச் சேர்ந்து நானும் அந்த இடங்களுக்குச் சென்றேன். அந்த நிகழ்வுகள் எனக்குள்ளும் ஒரு நிமிர்வையும் தைரியத்தையும் தந்தது.

பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட விதியை மாற்றியெழுதிய அக்காக்கள் பலர் அங்கே அறிமுகமானார்கள். அவளும் நானும் அக்காக்களுடன் நிற்பதனை அறிந்த வீட்டுக்காறார் ரெண்டு பேரையும் தனித்துப் பிரித்தார்கள். அவளது ஊருக்கு நான் போவதற்குத் தடையுத்தரவு விழுந்துவிட்டது.

1990 மாவீரர் வாரத்தில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்த புலிகளின் குரல் வானொலியில் வீரம் மிக்க எழுச்சிமிக்க படைப்புகளும் அஞ்சலிகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். இரவு ஒலிபரப்பில் வரும் சோகத்தையெல்லாம் சயிக்கிள் சில்லைச் சுற்றி டைனமோவில் வானொலியை இணைத்து புலிகளின் குரலைக் கேட்போம்.

ஆனையிறவுச்சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. நாங்கள் குடியேறிய மேற்கு ஏழாலையில் அமைந்துள்ள உத்தமன் சிலையடியில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி இரவு ஒலிபரப்பை ஊரெங்கும் கேட்க வைக்கும். ஒலிபரப்பு ஆரம்பமாக நாங்கள் இருந்த வீட்டின் முன்தென்னையில் போயிருந்து புலிகளின் குரலைக் கேட்டுக் கொண்டிருப்பேன். சொல்லிப்புரிவிக்க முடியாத உணர்வலைகளை அந்த ஒலிபரப்புத் தந்து கொள்ளும்.

ஆனையிறவில் தமிழர்படை மும்முனைகளாலும் பலம் பொருந்திய இராணுவத்தின் பலத்தையெல்லாம் தாக்குப்பிடித்து சமர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த அக்காக்கள் பற்றி அந்தச் சமர்முனையின் அண்ணாக்கள் பற்றி எழுதத் தொடங்கினேன்.

கவிதைகளாக கதைகளாக எழுதியவற்றையெல்லாம் தெருக்களில் செய்திப்பலகையின் அருகில் உள்ள தபாற்பெட்டிக்குள் எழுதிப் போட்டுவிடுவேன். அவை வானொலியில் ஒலிபரப்பாகின்ற போது பெருமிதமாக இருக்கும்.
ஒருநாள் அப்பாவின் நண்பர் எனது பெயரை வானொலியில் கேட்டுவிட்டு….

உங்கடை மகள் கவிதையெழுதுவாவோ….? நேற்று றெடியோவில கேட்டனான்…..என்றதோடு நான் சங்கக்கடைக்குப் போன நேரம் எனக்கும் எனது கவிதையைக் கேட்டது பற்றிச் சொன்னார். அப்பாவுக்குத் தெரியாத கவிதைகள் எனக்குள் இருப்பதை அப்பா அறியாமல் இருந்தார். அதனால் அது அவளாயிருக்காது…..வேறையாரும் அவளின்ரை பேரில எழுதியிருக்குங்கள்….என்றிருக்கிறார்.

என்னண்ணை எனக்குத் தெரியாதே உங்கடை பேருமெல்லொ வந்தது என்ற அவரது விளக்கம் வேலையால் அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மாவின் காதுக்குள் போடப்பட்டது. ஒலிபரப்பு ஆரம்பமானதும் நான் தென்னைமரத்தோடு ஒட்டிப்போவது ஏனென்ற காரணங்களை அம்மாவும் அப்பாவும் கண்டுபிடித்து விட்டார்கள்.

படிக்கிற வழியைக் காணேல்ல…கவிதை எழுதுறாவாம்….அம்மா பேசினா…..பக்கவாத்தியம் அப்பாவும் சேர்ந்தார்…..

அப்போது நான் கற்றுக் கொண்டிருந்த வாணி கல்வி நிலையத்தில் கற்கும் சக தோழிகள் தோழர்கள் வரையும் எனது கவிதைகள் போயிருந்தது. வீட்டுத் திட்டுகளையெல்லாம் எங்கள் நண்பர் குளாமுக்கு அறிவிக்க அங்கே என் கண்ணீர் துடைக்கப் பல கைகள் எனக்குப் பலமாயிருந்தன……ஆனையிறவுச் சமர்க்களத்தில் நிற்கிற அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் நாங்கள் ஆதரவாய் பின்தள ஆதரவுகளை வழங்கிக்கொண்டிருந்தோம்…..

காயமடைந்து வருகிறவர்களுக்கான பராமரிப்பு உலர் உணவு சேகரிப்பு…..என எல்லாக் கல்வி நிலையங்களும் செய்து கொண்டிருந்தது. எங்கள் பங்களிப்பும் கோரப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து ஒரு குழு தயாரானது. வீட்டுக்காரருக்குப் பயப்பிடாமல் வேலைகளில் இறங்கினோம். அதுவொரு பொற்காலம் அப்படித்தான் நினைப்பதுண்டு.

1500போராளிகள் வரையில் அங்கவீனர்களாகவும் 600இற்கு மேற்பட்டோர் வீரச்சாவடைந்தும் ஒன்றரை மாதச்சமர் முடிவுக்கு வந்தது.

000 000 000

அவள் இப்போது எங்கள் வீட்டுக்கு வருவதில்லை. காரணம் சொல்லாமல் அவள் வரவு நின்று போனது. ஒருநாள் அவளது மாமா நாங்கள் இடம்பெயர்ந்திருந்த மல்லாகம் கல்லாரைக்கு சயிக்கிளில் வந்தார். பெரியவர்களுக்குள் குசுகுசுத்தார்கள்.

விடயம் மெல்ல மெல்லப் பரவியது. அவள் ஓடிப்போய்விட்டாளாம். 17வயதில் அவள் ஒருவனைக் காதலித்து அவனோடு வாழப்போய்விட்டாளாம். அம்மா என்னைக் கூப்பிட்டா…..கோவத்தோடு கேட்டா….
உனக்குத் தெரியாதோ…..? அவள் ஆரை விரும்பினதெண்டு….?

எனக்குத் தெரியாதென்று ஊரிலிருந்த எல்லாச்சாமிகள் மீதும் சத்தியம் செய்தேன். அம்மாவும் நம்பவில்லை. அவளது மாமாவும் நம்பவில்லை. நெல்லிக்காய் வீடும் அவள் போக்குவரத்துப் பற்றியும் சொன்னேன். ஒரு சீவனும் நான் சொன்னதை நம்பவேயில்லை. அவள் யாரோடு ஓடிப்போனாள் என்பது எனக்குத் தெரியும் என்றுதான் எல்லாரும் அடம்பிடித்தார்கள்.

அத்தோடு அவளது கதை முடியாமல் யேர்மனி வரையும் கதை கடிதமாகப் போய்….அவளது மூத்தமாமா எனது சித்தப்புவுக்கும் நான்தான் வில்லியாகினேன். அவளை யாரோடோ நான்தான் இணைச்சு விட்டமாதிரி கதைபோய்…..நான் தான் அவளை அனுப்பிய துரோகியாகிவிட்டேன். காரணமில்லாமல் நான் துரோகியாக்கப்பட்டேன்.
வீட்டில விழுந்த திட்டுக்கும் நம்பிக்கையீனத்துக்கும் ஆறுதல் தேடி வாணியில் படித்த நட்புகளுக்கே சொல்லியழுதேன். அதற்குப் பின்னர் அவள் பற்றி எதுவும் தெரியாது. எங்கோ குடும்பமாக குழந்தைகளுடன் வாழ்கிறாள் என்றது மட்டும்தான் எனக்கும் தெரிஞ்ச தகவல்.

அதற்கும் பின்னால் நானும் புலம்பெயர்ந்து அவளை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தேன். எப்போதாவது ஞாபகம் வரும்போது அவளை ஒருகாலம் சந்திக்க வேணுமென்று நினைச்சுக் கொள்வேன்.

காலம் 2011 யூன்மாதம்…..

அண்மையில் அம்மா சொன்னா…****உன்ரை ரெலிபோன் நம்பர் கேட்டவளாம்….? குடுக்கவோ…? எங்கை…எப்பிடி…என்ன செய்யிறாள்….? என்ற எனது கேள்விகளுக்கு அம்மா சொன்னா….

அவளின்ரை புரிசன் பூசாவிலயாம்…..கலியாணம் கட்டின பிறகு பொடியன் இயக்கத்தில சேந்ததாம்…. …..4பிள்ளையளாம்….இப்ப முகாமிலயிருந்து போய் மாமியாரோடை இருக்கிறாளாம்……சரியான கஸ்ரமாம்….உன்னோட கதைக்க வேணுமெண்டு கேட்டவளாம்…..

அவள் நிச்சயம் உதவிக்காகத் தான் எனது தொடர்பைக் கேட்டிருப்பாள் என்பது புரிந்தது. அவளைப்போல தங்களது கணவர்களை , மகன்களைத் தடுப்பில் விட்டுவிட்டுத் துடிக்கிற பெண்களும்…..

காணாமற்போன தங்கள் உறவினர்களைத் தேடும் குடும்பங்களும் உதவி உதவியென்று வருகிற விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாமல் ஒவ்வொருவரிடமும் உதவுங்கள் உதவுங்கள் என்ற இறைஞ்சல் எனது இரவுகளையும் பகல்களையும் நிம்மதியையும் பறித்துவிட்டிருக்கிற இந்த நாளில் இவளும் உதவிக்காகவே உறவை மீளப்புதுப்பிக்கிறாள்…..

வேலையை இழந்து 5மாதங்களாக எனது சுமைகளைத் தாங்க முடியாத இக்கட்டோடு அல்லாட இவளுக்கு உதவ என்ன செய்ய…? அவள்பற்றிப் பிள்ளைகளுக்குச் சொன்னேன்.

ஏனம்மா நேசக்கரத்துக்கு உதவிற ஆக்களிட்டை கேளுங்கோவன்….? அந்த அன்ரியும் சண்டையில தானேயம்மா கஸ்ரப்பட்டவா…?

சொந்தக்காரருக்கெல்லாம் நேசக்கரம் உதவேலாது பிள்ளையள்….!
அம்மா வேலைசெய்துதான் செல்லங்கள் அவாக்கு உதவ வேணும்…..
அதெப்பிடியம்மா….?
பிள்ளைகள் தங்கள் பக்க நியாயங்களை அடுக்கிக் கொண்டு போனார்கள்…..

வெறுங்கையாய் நிற்கிற என்னிடம் உதவி வேண்டுகிற அவளுக்கு உறவாக மச்சினியாக நான் கட்டாயம் உதவ வேண்டும். ஒரு குறுகிய காலத்தில் நல்லுறவாகத் தோழியாக இருந்த அவளுக்காக அவளது பிள்ளைகளுக்காக அடிக்கடி கரம் தருகிற Barclays Bank கிறடிற்காட்டையே நம்பியிருக்கிறேன்.

துயரங்கள் தொடரும்……