Friday, November 29, 2013

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர்


ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ?

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

வீட்டிலும் உறவுகளாலும் தம்பியென்றும் இமையாளன் என்றும் அழைக்கப்பட்ட இன்பசோதி நகைச்சுவையோடும் நட்போடும் எல்லோரது அன்பையும் பெற்றிருந்தான்.

குடும்பத்தில் செல்லப்பிள்ளையான அவனுக்கு சின்ன வயதில் இறைச்சி , மரக்கறி உணவுகள் பிடிக்காது. அவனது தந்தையார் அடைக்கலம் ஐயா தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட தமிழ்த்தேசியவாதி.

தனது மகனை மரக்கறி , இறைச்சி வகைகளைச் சாப்பிட வைப்பதற்கு அடிக்கடி சொல்லுவார். இவற்றையெல்லாம் நீ சாப்பிட்டால் தான் பலமுடையவனாவாய். உனது தாயகத்திற்காக போராட உனக்குப் பலம் கிடைக்கும். அப்போதுதான் நீ தமிழீழத் தாயகத்திற்காகப் போராட முடியும்.
அவன் சாப்பிட மறுத்த இறைச்சி ,மரக்கறி உணவை அவன் சாப்பிடத் தொடங்கியதே பலமுள்ளவனாகி தமிழீழ தேசத்துக்காகப் போராடுவேன் என்ற வைராக்கியத்தோடுதான் வளர்ந்தான். 

அப்பா சொன்னது போலவே அவன் பலமுள்ளவனாக வளர்ந்து ஒரு நாள் தமிழீழ தாயகத்திற்காகவே தனதுயிரையும் தருவானென்று அன்று யாரும் அறிந்திருக்கவேயில்லை.

வீட்டின் செல்லப்பிள்ளையை ஊரின் மதிப்புக்குரிய பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது. அவன் அப்படித்தான் வாழ்ந்தான் வரலாறாகினான். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணிதமேதையை அவனது குடும்பம் எதிர்பார்த்திருந்தது. அதே கனவோடுதான் யாழ் சென் பற்றிக்ஸ்சின் மாணவனாகினான்.

படிப்பில் திறமையான மாணவனான இன்பசோதி சென் பற்றிக்ஸ் கிறிக்கெற் விளையாட்டு அணியின் சிறப்பு வீரனாகவும் திகழ்ந்தான் என்பதை அந்தப்பாடசாலை தனது வெற்றிக் கிண்ணங்களில் நிச்சயம் நினைவு கொள்ளும்.

இடது கைப்பந்து வீச்சாளனான இன்பசோதியின் வேகப்பந்து வீச்சில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தை நடுவர்களே அசந்து போகும் வண்ணம் அவனது பந்துவீச்சும் வேகமும் ஆச்சரியப்படவைக்கும். இன்பசோதி களமிறங்கினால் வெற்றியை அவனது அணியே வென்று செல்லும். அவ்வளவு திறமையான கிறிக்கெட் விளையாட்டுக்காரன்.

வெடியோசைகளும் மரணங்களும் யாழ்மண்ணின் அமைதியைக் கலை(ரை)த்துச் சாவோலம் நிரம்பிய காலமது. சாதரணதரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்துறையைத் தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்த இன்பசோதியை அவனது அமைதியைக் கொன்றது யுத்தம்.

வாழ்வதற்கான சுதந்திர தேசம் இல்லாத வரை உயர்கல்வி கற்றும் தன்னால் நிம்மதியைப் பெற முடியாதென்ற உண்மையை உணர்ந்தான். துடினமும் அதே நேரம் கண்டிப்பும் மிக்கவனைக் காலம் அழைத்தது களம் நோக்கி.

சென்பற்றிக்ஸ் கல்லூரியிலிருந்து தாயகப்போரில் தங்களை இணைத்து தாயகம் மீட்கவெனப் புறப்பட்ட 30மாணவர்களில் இன்பசோதியும் ஒருவனாக 1991இல் விடுதலைப்புலியாக இணைந்தான். எதிர்காலம் பெறவிருந்த 30 கல்விமான்களை அடக்குமுறையாளர்கள் ஆயுதம் தரிக்கக் காரணமாகினார்கள். ஒவ்வொரு போராளியின் உருவாக்கத்தின் பின்னும் ஓராயிரம் கதைகளும் துயர்களும் இருக்கும். அந்தத் துயர்களும் கதைகளுமே அவர்களை விடுதலைப்போரில் வீச்சோடும் வீரியத்தோடும் வீழும் வரையும் வாழ வைத்தது வரலாறு.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு 3 இன்பசோதியையும் உள்வாங்கியது. இன்பசோதி ஊரான் அல்லது கௌதமன் என்ற பெயரோடு பயிற்சியை நிறைவேற்றி வரிச்சீருடை தரித்த புலியாகினான்.

தோற்றத்தில் கடுமையும் , பார்வையில் கடமையும் அந்தக் கண்ணில் இருந்த கர்வமும் ஒரு சிறந்த இராணுவ வீரனை எங்களுக்குத் தந்தது. ஊரான் என்ற இளம்புலிவீரனை சிறந்த ஆற்றலாளனை கடமையை மட்டுமே கவனத்தில் நிறைத்து ஈழக்கனவை இதயத்தில் சுமந்து திரிந்த எரிமலையை விடுதலைப்புலிகள் அமைப்பின் வேர்களில் ஒருவனாக ஊரானும் இருந்தான் என்றால் அது பெருமையே.

பயிற்சி முடித்து வெளியில் வந்த ஊரான் சண்டைக்களத்திற்கே செல்லும் கனவோடு வந்தான். ஆயினும் அவனது ஆற்றல் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் வல்லமை பொருந்தியது என்பதனை உணர்ந்தவர்களால் 1992இல் தோற்றம் பெற்ற வெளியக பாதுகாப்பணியின் முதலாவது அணியின் சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 30பேரில் ஊரானும் இணைக்கப்பட்டான்.

களத்தில் சென்று நேரடிச்சமராடும் போருக்கு நிகராக சவாலாக இருந்த பாதுகாப்பணியின் தேவையும் விரிவாக்கமும் உணரப்பட்ட பொது ஊரான் மிகவும் சாதுரியம் மிக்க போராளியாக பாதுகாப்பணியின் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டான்.

1993 – 1994 காலப்பகுதி விடுதலைப் போராட்ட காலத்தில் சவால்களையும் சதியையும் சந்தித்த காலப்பகுதிகளில் மறக்கப்படாத வடுக்களால் நிறைந்த காலம். அக்காலத்தில் ஊரானின் பங்கும் திறமையும் வெளிப்பட்ட விதம் தலைவராலேயே கௌரவம் பெற்றது.

அக்காலப்பகுதியில் தளபதிகளான சொர்ணம் , பொட்டு அம்மான் போன்றவர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஊரான் என்பது அவனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த வெற்றிதான். மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக்காலத்தில் ஊரானின் புத்திசாலித்தனமான செயற்பாடு வெற்றிகளை அவதானித்த தலைவர் 1995இல் வெளியகப் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக ஊரானை நியமித்தார்.

ஓவ்வொரு விடுதலைப்புலி வீரனுக்கும் உரிய வித்தியாசமான ஆற்றல்களில் ஊரானின் ஆற்றல் புலனாய்வுத்துறையில் மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாகவும் அமைந்திருந்தது. இயல்பிலே அமைதியான போராளி. அது வீட்டிலிருந்து வரும் போதே கூட வந்த இயல்பு. தோற்றத்தில் கம்பீரமும் பார்வையில் கூட அவனொரு புரியாத புதிர். ஆனால் அவனை நெருங்கி அவனோடு பழகியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஈரநெஞ்சுக்காரன்.

'கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் விழிகளில் நீர் வழிவதுமுண்டு'' என்பது பாடல் வரியொன்று. ஆனால் ஊரான் என்ற கடுமையான மனிதனுக்குள்ளும் ஈரமும் வீரமும் அந்தக் கண்களில் சுரந்த கருணையும் அவனோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வித்தியாசமான போராளி.

இவனின் நடையை,மோட்டார் சைக்கிள் ஓடும் திறனை ,உடை அழகைப் பார்த்து அவனைப் போல இருக்க ஆசைபட்டவர்கள் பலர். எல்லோரையும் தனது பார்வையால் கட்டிப் போடுகிற ஆளுமையால் வெல்லுகிற வல்லமையைப் பெற்றிருந்த ஒரு இரும்பு அவனென்றால் அது மிகையில்லை.

சிறந்த கிறிக்கெட் வீரனான அவன் மீளவும் கிறிக்கெட் விளையாட விரும்பினான். அவனது ஆசைக்குத் தடையின்றி அவனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிக்கெட் போட்டிக்கு அனுப்பியது. இடது கைப்பந்து வீச்சாளன் இன்பசோதி ஊரானாகி கிறிக்கெட் போட்டியில் பங்கெடுத்து பள்ளிக்காலத்து மாணவனாகி அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றியைத் தனதாக்கினான்.

அவன் பங்கேற்று விளையாடிய அணியே அந்தப் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற நாயகனாக வந்தான். அப்போது யாழ் மண்ணில் வெளியாகிய பத்திரிகைகளை ஊரான் நிறைத்திருந்தான். அவனது வெற்றிச் செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள் பெருமையடைந்தன. அந்தப் புலியின் விளையாட்டு வீரத்தை யாழ் மண்ணெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன பத்திரிகைகள்.
கிறிக்கெட் மட்டுமன்றி சதுரங்க விளையாட்டிலும் சாதனை படைத்தவன். போராளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளின் வெற்றி நாயகனாகவும் வலம் வந்தான்.

தான் பொறுப்பு வகித்த துறையில் பணியாற்றிய போராளிகள் விடுமுறையில் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களைத் தானே வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவது வளமை. ஒவ்வொரு போராளியுடனும் சென்று அவனது வீட்டு நிலமைகளை அவதானித்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தி சக போராளிகளிடத்தில் நீங்கா அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட போராளி.

எத்தனையோ சிறந்த போர்வீரர்களை உருவாக்கி சிறந்த புலனாய்வாளர்களை உருவாக்கி படையணிகளுக்குப் பணிக்கு அனுப்பிய ஊரானின் மனவுறுதியை அந்த இரும்பு நெஞ்சை உறைய வைத்து உருக வைத்த சம்பவம் அவனைக் களம் போகத் தூண்டுகோலானது.

சென்பற்றிக்ஸ்சிலிருந்து போராளிகளாக வந்த அவனது நண்பர்களில் அவனது ஆத்ம நண்பனான உதயச்சந்திரன் அல்லது கண்ணாடியின் வீரச்சாவு அவனையும் களம் சென்று எதிரியை வீழ்த்த வேண்டுமென்ற ஓர்மத்தை விதைத்தது.

1995ல் திருகோணமலை பன்குளம் இராணுவ மினிமுகாம் மீதான தாக்குதலில் களமாடி தனது இன்னுயிரை ஈகம் தந்து வீரச்சாவடைந்த மேஜர் உதயச்சந்திரனின் மரணம் ஊரானை உறங்க விடாமல் அலைத்தது. தன்னிடம் வழங்கப்பட்டிருந்த வெளியகப்பாதுகாப்பணியின் பொறுப்பை விட்டு சண்டைக்குச் செல்லப் போவதாக மேலிடத்திற்கு தொல்லைகொடுத்துக் கொண்டிருந்து ஒருநாள் தனது ஆசையை நிறைவேற்றும் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.

பாதுகாப்பணியின் பொறுப்பு ரட்ணம் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டு ஊரான் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் அணியில் இணைக்கப்பட்டான்.
யாழ்மண் புலிகளிடமிருந்து அரசபடைகளிடம் போனதோடு புலிகளின் பலமெல்லாம் போய்விட்டதென சந்திரிகா அரசும் ராணுவத் தளபதி ரத்வத்தையும் புலம்பித் திரிந்த காலமது. 

முல்லைத்தீவில் முகாமிட்டு கடல் பாதைக்கும் பெரும் சவாலாக இருந்த முல்லைத்தீவு முகாமின் அழிவில் புலிகளின் வீரம் மீண்டுமொருமுறை உணர்த்தப்பட வேண்டிய காலத்தை சந்திரிகா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.தமிழர்களும் போராட்டம் மீது சற்று அவநம்பிக்கையில் யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என மனச்சோர்வடைந்த காலமது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகள் பூனகரி படைத்தளத்தையண்டிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சிகளில் இணைந்திருந்த போராளிகளால் கூட அந்தப் பயிற்சியானது எந்த முகாமுக்கான தாக்குதலாக அமையப்போகிறதென்பது தெரியாமல் கடும் பயிற்சி ஆரம்பித்திருந்தது. அந்தப் பயிற்சிகளில் ஊரானும் இணைந்து முல்லைத்தீவு மீட்புச் சமருக்கு தயாராகினான்.

தொடர் பயிற்சி உறக்கம் மறந்து உண்ண மறந்து மண்ணை மீட்கும் போருக்கான பயிற்சியில் கலகலப்பும் காலத்தின் கட்டளையை ஒவ்வொரு போராளியும் நெஞ்சில் தாங்கியபடி பொறுமையோடும் கவனத்தோடும் பயிற்சியில் நின்றார்கள். கடுமையான பயிற்சி இலகுவான சண்டைக்கான சிறப்பு. ஒவ்வொரு போராளியின் கடுமையான பயிற்சியும் பெருமைமிகு வெற்றியைப் படைக்கும் பேராயுதமாகியிருந்தது.

ஓயாத அலைகள் 1 முல்லைத்தீவை மீட்கும் முனைப்போடு அதிகாலை இருளோடு அணிகள் நகர்த்தப்பட்டது. வெற்றி பெற்ற மிதப்பில் கனவோடிருந்த சந்திரிகா அரசு திகைத்துப் போனது. புலிகளால் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் மூர்க்கமான தாக்குதலில் முல்லைத்தீவு படைமுகாமிலிருந்த படைகள் வழங்கல் , விநியோகம் , தொடர்புகள் யாவும் அறுபட்டு செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தாக்குதல் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல திருகோணமலையிலிருந்து டோறா விசைப்படகுகள் முல்லைத்தீவு நோக்கி விரைந்தன. கடலில் வந்த பகைவனைக் கடற்புலிகள் மறித்துச் சமரில் ஈடுபட்டனர். கடற்சமருக்கு நிகராக தரையிலும் புலிகளணி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கடலில் விநியோகத்திற்கென வந்த ரணவிரு என்ற போர்க்கப்பல் கடற்கரும்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. வான்வழியாய் படையினரை தரையிறக்க முயன்று வான் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கந்தக வாசனையால் முல்லைமண் நிரம்பியது.

முல்லைத்தீவில் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளான படைகளைக் காக்கவும் படைத்தளத்தைக் காப்பாற்றவும் அரசபடைகளால் அவசரமாகத் தரையிறக்கமொன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் தளத்திற்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ள அளம்பில் கடல் வழியால் பெருமெடுப்பிலான தரையிறக்கத்தை மேற்கொண்டது இலங்கை அரசபடைகள்.

அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத் தரையிறக்கத்திற்கு திரிவிட பகர எனப்பெயர் சூட்டப்பட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெட்டைவெளியும் எவ்வித காப்பு வசதிகளும் இல்லாத அளம்பில் பகுதியில் சண்டையணிகளை இறக்கி சமரை நடாத்தினர் புலிகள்.

இப்பகுதியில் சமரிட்ட புலிகளின் படையணிகளுடன் தளபதி கேணல்.ராஜேஸ் தலைமையில் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்கு கொண்டது. தளபதி.கேணல்.ராஜேஸ் 2009ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆனந்தபுரம் சமரில் வீரகாவியமானார்.

தளபதி கேணல் ராஜேஸ் அவர்களது பொறுப்பிலான ஒரு பிளாட்டுனுக்கான அணிப்பொறுப்பாளனாக ஊரானும் ஊரானின் அணியும் தாக்குதலில் இறங்கியது. அளம்பில் பகுதியில் முழுமையான வலுவையும் பிரயோகித்தது அரசு. அளம்பிலில் மறிப்புச்சமரை மேற்கொண்ட புலிவீரர்களின் சமரையும் வெல்ல முடியாது தோற்றது படைகள்.

புலிகளின் அகோர தாக்குதலில் இலங்கையரச படைகள் அடைய நினைத்த வெற்றியும் அவர்களது கனவும் சிதைந்து போக இறுதியில் புலிகள் வென்றார்கள். முல்லைத்தீவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவ முகாமும் இராணுவப்படைகளும் அழிக்கப்பட்டு 3நாட்களில் முல்லைத்தீவு முகாம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்து முல்லைத்தீவு மண் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

புலிகளின் வரலாற்றில் முதல் முதலாக இருபெரும் ஆட்லறிகளையும் பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லைச்சமர் முடிந்தது. அந்த வெற்றிக்கு வித்தாக 400வரையிலான போராளிகள் தங்கள் இன்னுயிர்களை விதைத்து விழிமூடிப்போயினர்.

அந்த 400 வரையானவர்களில் ஒரு வீரனாக கப்டன் எனும் பதவிநிலையோடு ஊரான் அல்லது கௌதமனும் விழிமூடி மாவீரனாய் சந்தனப்பேழையில் நீட்டி நிமிர்ந்து உறங்கிப் போனான்.

சமருக்குச் செல்கின்ற வீரர்கள் யாவரும் சாகப்போவதில்லை. அவர்கள் சாதிக்கவே களம் போகிறார்கள். அதுபோலவே எங்கள் கௌதமனும் சாதனை புரிந்து வருவானென்றுதான் தளபதிகள் போராளிகள் காத்திருந்தனர். ஆனால் அவனோ யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனையை முடித்த திருப்தியில் முல்லைத்தீவு மண்ணின் மூச்சோடு நிறைந்து போனான்.

தான் வீரச்சாவடைகிற போது தனது வித்துடல் தன் ஆத்ம நண்பன் மேஜர் உதயச்சந்திரன் அல்லது கண்ணாடி விதைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட வேண்டுமென்று விரும்பியது போலவே கனகபுரம் துயிலிடத்தில் நிரந்தரமாய் துயின்றான்.
 விழிகள் கரைய உருகியுருகி (முல்லைத்தீவு வெற்றிக்காய் வீழ்ந்தவர்கள் நினைவுப்பாடல்

ஊரானை இழந்த போது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஒரு சிறந்த புலனாய்வாளனை சாதனையாளனை இழந்து போனோமெனத் துயர் கலந்த அவனது இழப்பின் கனதியை நினைவு கூர்ந்தார். அது போல தளபதி சொர்ணம் அவர்களும் ஊரானின் இழப்பை மிகுந்த துயரோடுதான் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு காலம் பெற்றிருக்க வேண்டிய பெறுமதி மிக்க போர்த்தளபதியை இழந்து போனது போலவே போராளிகளும் தளபதிகளும் ஊரானின் இழப்பை நினைவு கொண்டார்கள். அதிகம் அலட்டாத ஆனால் ஊரான் இருந்தால் கலகலப்பிற்கு குறைவில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியுமே நிறையும் நாட்களை நண்பர்கள் துயரத்தோடு கடந்து உறுதியோடு நிமிர்ந்தார்கள்.

கனகபுரம் துயிலுமில்லம் வருடாவருடம் ஊரானுக்காகவும் விளக்கெரித்து தன்மடியில் அவனைத் துயிலவைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தது. 

கல்லறைகளில் விளக்கேற்றி அவர்கள் கனவுகளை நனவாக்கும் உறுதியோடு வருடம் தோறும் போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவன் சென்ற வழி வெல்லும் வழி என்றோ ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அவனது நினைவுகளைச் சுமந்தபடி அவனது தோழர்கள் அவனோடு களமாடியவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இறைச்சி வேண்டாம் மரக்கறி வேண்டாமென்று அடம்பிடித்த குழந்தை ஒருநாள் உறுதியோடு தனது தாயகத்திற்கான பணி முடித்துப் பாதியில் போய்விடுவானென்று அறியாத அவனது அம்மா , அப்பா, அக்காக்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் நினைவுகளில் இன்பசோதி கப்டன் ஊரானாக , கௌதமனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தேசம் மீட்கப்போனவர்களின் நினைவோடு எங்கள் ஊரானும் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருப்பான் வரலாறாக....!

29.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 நிலமும் வானும் கடலும்நேற்று அழுதது அந்த நிலவும் இரவு வானில் அழுதது

No comments: