அங்கம் - 1
13வருடங்கள் கழித்து பிறந்த ஊரையடைந்திருந்தாள். பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட எல்லைக்குள் யாரையும் அனுமதிக்கமாட்டார்களென்ற உறவினர்களின் சொல்லையும் மீறி தான் பிறந்த வீட்டையும் நடந்த தெருவையும் பார்க்கப் போவதாய் அடம்பிடித்தாள்.
அவள் நடந்து திரிந்த நிலத்தைப் பிள்ளைகளுக்கு காட்ட வேணுமென்ற கனவோடு போயிருந்தவளுக்கு உறவினர் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒற்றையடிப்பாதையளவு தான் போகலாம்...கொஞ்சம் அரக்கினாலும் மிதிவெடியள் ஏன் இந்த வில்லங்கத்தை குழந்தையளோடை ? அம்மா புறுபுறுத்தா. அவள் தனது முடிவை மாற்றுவதாக இல்லை. கட்டாயம் பிறந்த வீட்டைப் பார்க்க வேணுமென்றே நின்றாள். கடைசியில் அவள்தான் வென்றாள்.
அன்று பிள்ளையாருக்கு அபிசேகம் செய்ய அம்மா ஐயருக்கு காசு கட்டியிருந்தா. காலமையே கோவிலுக்கு போனார்கள். 87இல் எரிந்த தேர் 2003இல் புதிதாய் நிமிர்ந்து நின்றது. அந்தத் தேரை அதேயூரைச் சேர்ந்த ஒருவர் சுவிசில் இருந்து 80லட்சரூபாய் கொடுத்து புதிதாக செய்து கொடுத்ததாகச் சொன்னார்கள்.
தேர் முட்டிக்கு வடக்காயிருந்த புளியமரம் தனது கிளைகளையும் தன்னோடு வாழ்ந்தவர்களையும் மறந்து உருக்குலைந்து கிடந்தது. இன்னும் அந்த மர அடியில் பல போராளிகளின் வாழ்வு பதியமிடப்பட்டிருக்கும் அடையாளமாக அந்த மரம் உயிரோடு நின்றது.
இந்திய இராணுவ காலம் அந்தப் புளியமரத்தடி பல போராளிகளின் பகல்நேர மாலைநேர தங்கிடமாகவும் விளையாட்டு மைதானமாகவும் மாறியிருந்தது. 1989இன் மழை நாளொன்றில் வெற்றியென்ற ஒரு போராளி அந்த மரநிழலில் நனைந்தபடி வந்திறங்கினான். சில வாரங்கள் வெற்றியை அந்த நிழல் காத்து வைத்திருந்தது. பின்னர் சில வீடுகளுக்கு வெற்றியென்ற போராளி வெற்றியண்ணாவாகப் போகத் தொடங்கினான்.
அவனுக்கு உறவுகள் யாருமில்லையென்றான். அவனது பூர்வீகம் மலையகமெனச் சொல்லப்பட்டது. கறுத்த இருட்டென்று சொல்ல முடியாத நிறம். கனக்க அலட்டாத ஆனால் தேவைக்கு கதைக்கும் ஒருவனாக அந்த வட்டாரத்தில் பலரை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
ஒருநாள் விடியற்பறம் வெற்றியண்ணா எங்கோ போய்விட்டானென சொல்லப்பட்டது. போகின்றவர்கள் கடமைகள் முடிய தாங்கள் நேசித்தவர்களைக்காண வருவார்கள் என்றுதான் நம்பியிருந்தார்கள் அந்த வட்டாரத்தில் வெற்றியை நேசித்தவர்கள். போய் சிலநாள் கழிந்த ஒரு பகல் வெற்றி வித்துடலாய் வந்து சேர்ந்தான்.
தொட்டிலடியில் ஈபிஆர்எல்எவ் கும்பலுடனான நேரடி மோதலில் அந்தக் கிராமத்தின் நேசத்துக்குரிய வெற்றி வீரச்சாவடைந்து போயிருந்ததாகச் சொன்னார்கள். புளியமரத்துக்கு கிழக்கேயமைந்த வேலியோடு கட்டப்பட்டிருந்த நாகேந்திரம் வீட்டு விறாந்தையில் வைக்கப்பட்ட வாங்கில் வெற்றி வளர்த்தப்பட்டான்.
தலைமாட்டில் சாம்பிராணி புகைத்துக் கொண்டிருந்தது. அவனோடு களமாடி அவனைச் சயிக்கிளில் ஏற்றிச் சென்ற தோழர்கள் அவனையிழந்த துயரில் மௌனித்து நின்றனர்.
அவசர அவசரமாக அவனுக்காகப் பூக்கள் பறிக்கப்பட்டது. அவனுக்கான மாலையை நித்தியகல்யாணிப்பூவில் கட்டிக் கொடுத்தது இவள்தான். வெற்றியண்ணா என இவளாலும் அழைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்ட அவன் கண்முன் கிடந்தான்.
கண்ணீரைத் தவிர வேறெந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாத நிலமை. முதல் முதலில் புளியடியில் வந்து உறவான போராளிகளில் முதலாமவனாக வெற்றி வீரச்சாவடைந்து போனது ஏற்றுக் கொள்ள முடியாத துயராகியது. ஆமி வருவதற்கிடையில் அந்த மாவீரனுக்கான அஞ்சலியை முடித்துவிட வேண்டுமென அவன் தோழர்கள் கடமையைச் செய்தார்கள்.
அம்மா அப்பா உறவுகள் எவரும் இல்லாது வெற்றியென்ற வேங்கையை நேசித்த அந்த வட்டாரத்தில் உறவானவர்களும் தோழர்களுமே அவனுக்கு இறுதி வணக்கம் செய்தார்கள். உறுதிமொழி சொல்லி அந்த வேங்கையைத் தோழில் தூக்கிச் சென்றார்கள் அவன் தோழர்கள்.
சிலவாரம் மட்டுமே வந்து உறவாகி அங்கு வாழ்ந்த நாட்களை மட்டும் நினைவு கொடுத்து அவன் போய்விட்டான். அவன் நடந்த அந்தப் பிள்ளையார் வடக்கு வீதியில் அவனது தடங்கள் அழிக்கப்பட்டது. ஆனால் அவனது கனவுகள் அந்த வீதியில் விதைக்கப்பட்டிருந்தது.
கட்டாயம் போக வேணுமே பிள்ளை ? அம்மா அவளது சிந்தனையைக் கலைத்தா. ஓம் என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னவள் பிள்ளைகள் இரண்டு பேரையும் கையில் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
கடுகுநாவல் பற்றைகள் தொட்டாற்சுருங்கி முட்கள் இரு மருங்கும் அங்கங்கே பூவரவு , வாதநாராணி , கிழுவையென மரங்கள் அழுது வடிந்து கொண்டிந்தது. முன்னுக்கு அப்பாவும் சின்னமாமாவும் போக அடுத்துப் பிள்ளைகளோடு அவள் , அவளைத் தொடர்ந்து பின்னால் அம்மா , தங்கைச்சி, அத்தை நடக்கத் தொடங்கினார்கள்.
அன்றொரு காலம் அந்தப் பாதை பெரிய லொறி போகக்கூடிய பாதை இன்று ஒற்றையடிப்பாதையாகி கொஞ்சம் அரக்கினால் மிதிவெடி எச்சரிக்கையோடு பழைய நிமிர்வை இழந்து குறுகியிருந்தது வீதி. ஓவ்வொரு காலடியும் ஓராயிரம் கதைகளை அவளுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
அந்த வீதியில் தெற்குக்கரையில் இருந்த இலுப்பை மரத்தைத் தேடினாள். அது அரைக்கம்பத்திற்கு இறக்கப்பட்ட கொடிபோல அவள் பார்த்த காலத்து நிமிர்வையும் உயர்வையும் இழந்திருந்தது. இலுப்பையோடும் அதனை அண்டியும் சூழ்ந்திருந்த பனைமரக்கூடல் வெட்டித் தறிக்கப்பட்டு அடையாளங்களையே காணவில்லை.
அந்த இலுப்படி நிழல் அவளது வாழ்வோடு மறக்காத பெரும் வரலாறொன்றைச் சுமந்தது ஒருகாலம். அவளுக்கு அன்பையும் ஒரு அண்ணனையும் அந்த மரம் தந்ததும் ஒருகாலம். அந்த மரத்தின் ஆழப்பரவிய வேரில் இருந்து அவள் தனது அண்ணனோடு கதைகள் பேசியிருக்கிறாள். பல கதைகள் கேட்டிருக்கிறாள்.
அவனது வீரம் விடுதலைப் போராட்ட வாழ்வென ஒரு சந்ததியின் வாழ்வையும் வரலாற்றையும் அவளுக்கு அறிவித்த ஆசானாக இருந்த அவனுக்கும் அவளுக்குமான கோபம் சண்டை சந்தோசம் என பல கதைகளை அந்த மரத்தடியே அறியும்.
அவளுக்குப் பல விடுதலை வீரர்களை அறிமுகம் செய்ததும் இதயத்தில் நீங்கா நினைவுகளை விட்டுச் சென்றவர்களின் அன்பும் கிடைத்தது 1988இன் இறுதிக்காலமே. ஊர்களை உழுது போகும் இந்திய இராணுவத்தின் கண்ணிலிருந்து தப்பித்து தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்த போராளிகளைக் காத்த ஊர்களில் அவளது ஊரும் ஒன்று.
ஒருநாள் இரவு வீடுகளில் அத்துமீறி நுளைந்து பின்னர் நிரந்தரமான அன்பையும் உறவையும் பெற்றுக் கொண்ட பலருள் அவன் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டான். அவனைச் சந்தித்த மறுநாள் அவள் பள்ளிக்கூடம் போகும் போது இலுப்பை மரத்தின் கீழ் அவன் தனித்திருந்தான். இவளைக் கண்ட போது சினேகமாகப் புன்னகைத்தான். பதிலுக்கு இவளும் புன்னகைத்தாள்.
இஞ்சை வாங்கோ ? அவன் கூப்பிட்டான். அவனிடம் போனாள். உங்களுக்கென்ன பேர் ? எனத் தொடங்கியவன் தனது பெயரையும் சொல்லி அவளோடு அறிமுகமானான். அவன் சொல்லும் பாதைகளில் ஆமியின் நடமாட்டத்தைப் பார்த்துச் சொல்லும்படி கேட்டான்.
அவன் சொன்ன பாதையில் போய் ஆமியின் நடமாட்டத்தை அவதானித்து வந்து சொன்ன போது அவள் அடையாளம் சொன்ன வழியால் அவனது தோழர்கள் அடுத்த ஊரையடைந்தார்கள். அவன் அந்த இலுப்பை மரத்தின் கீழேதான் இருந்தான். அவள் காணும் நெரமெல்லாம் அவன் அதிகம் இலுப்பையின் பெரிய வேரில் இருப்பான். ஏதாவது புத்தகம் ஒன்றை வாசித்தபடி அல்லது காதுக்குள் வோக்மனை வைத்து பாட்டு கேட்டபடி அல்லது வீதியில் போகின்றவர்களை அவதானித்துக் கொண்டிருப்பான்.
ஒரே நேரத்தில் தனது காதுக்குள் இசையையும் கண்ணுக்குள் புத்தகத்தையும் கிரகித்துக் கொண்டாலும் அந்த வட்டாரத்தைத் தாண்டிப் போகும் சயிக்கிளிலிருந்து மனிதர்கள் வரையுமான சகல தரவுகளையும் அவன் தனக்குள் சேமித்து வைத்திருந்தான்.
ஊரில் உலவும் எல்லோரைப்பற்றிய மதிப்பீடும் தனித்தனியாக ஒவ்வொருவரின் கண்ணையும் கதையையும் எடைபோடும் வல்லமையை அந்தப்புலிவீரன் கற்று வைத்திருந்தான். ஊரில் வாழ்ந்த ஒவ்வொருவரையும் சரியாக கணிப்பிட்டு அவர்களது இயல்புகளை ஒன்று விடாமல் சொல்லக்கூடியவனாக இருந்தது பலருக்கு ஆச்சரியம்; ஆக அவன் ஒரு அதிசயம்.
ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒளிந்திருந்த இதயத்தினுள்ளும் எரிந்து கொண்டிருந்த தாயகவிடுதலைத் தீ அந்தப் புலவீரனுக்குள் அதிகப்படியாகவே அவனது ஒவ்வொரு அசைவும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
தலைமைத்துவப்பண்பும் மற்றவர்களைத் தன் பார்வையால் சில வார்த்தைகளால் வெல்லும் வரமும் சிலருக்கே கிடைத்த பேறு. அந்தப் பேற்றை அந்தப் புலிவீரனும் பெற்றிருந்தான். பின்னாளில் அவனுடனான நெருக்கமான பழக்கம் அவனையொரு முன்னோடியாகவே அவளுக்கு அறிமுகப்படுத்தியது.
சில நாட்கள் கழிந்த ஒரு மாலைநேரம் மீண்டும் அவனை இலுப்படியில் கண்டாள். நிச்சயம் அவன் அங்கேயிருப்பான் என நம்பிய அவளது எண்ணம் பொய்யாகவில்லை. அன்று அவன் கூப்பிடாமலேயே அவனிடம் போனாள். வீட்டிலிருந்து எடுத்து வந்த இறைச்சிக்கறியையும் சோற்றையும் நீட்டினாள். அவன் சிரித்தான்.
அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்தீங்களே ? ஓம்....அவள் கொடுத்த அந்தச் சிறிய பாசலை வாங்கிக் கொண்டான். அது அவளது அன்பு அவனுக்காக வீட்டில் களவெடுத்துக் கொண்டு வந்த உணவு.
சாப்பிடுங்கோ....அவள் சொன்னாள். இன்னும் அண்ணாக்கள் இருக்கிறாங்கள் அவங்களோடை சேந்து சாப்பிடுறன் என்ன ? என்றான். எல்லாருக்கும் காணாது இப்ப நீங்க சாப்பிடுங்கோ. நாளைக்கு கூட எடுத்து வாறன். அவளது அன்பை மறுக்க முடியாது அவள் கொண்டு வந்து கொடுத்த உணவைச் சாப்பிட்டான்.
அன்றுதான் முதல் முதலாக ஒரு ஆண் அவள் சொன்ன சொல்லைத் தட்டாது ஏற்றுக் கொண்டது முதல் அனுபவம். உரிமையோடும் நம்பிக்கையோடும் அவள் ஏற்றுக் கொண்ட முதல் கதாநாயகன் அவன்தான். இப்போது அவனைத் தினமும் சந்தித்து கதைக்காமல் ஒருநாளையும் தவறவிட்டதில்லை. மாலைநேரம் அவன் இலுப்படி வேரில் அவளோடு பேசுவதற்காகக் காத்திருப்பான். வீட்டிலிருந்து ஏதாவது ஒரு உணவு அல்லது ஏதாவதொரு பாசல் அவனுக்காக கொண்டு போவாள்.
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள் -அங்கம் - 2
அவள் தனது பள்ளிக்கூடம் நட்பு வீடு தனக்குப் பிடித்தது பிடிக்காதது என யாவற்றையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள். அக்கறையோடு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பான். அண்ணா என்றவள் அழைக்கும் அவளது உரிமையோடு கூடிய அன்பும் அக்கறையும் பிடித்தது. அப்பாவித்தனமான அவளது கதைகள் விளக்கமற்ற கேள்விகள் யாவுக்கும் பொறுமையோடு பதில் சொல்வான்.
வீட்டில் யாரும் அவளது கதையை இப்படி ஆறுதலாகக் கேட்டதுமில்லை பதில் சொன்னதுமில்லை. அவனே அவளது ஆதாரமென்பது போல ஒன்றும் விடாமல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லுவாள். தாங்கத் தோழில்லையென்ற நினைவு போய் அவளது வெற்றியில் அவன் தோழாய் நிற்கிறான் என்பதனை தனது ஒவ்வொரு அக்கறையிலும் வெளிப்படுத்தியிருந்தான்.
அந்த நெருக்கடி மிக்க நாட்களில் அவர்களுக்கு இரவில் தங்குவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. அவளுக்குச் சொன்ன போது ‚'எங்கடை வீட்ட வாங்கோ அண்ணா...'என அழைத்தாள். அப்போதைய சூழலில் வீடுகளில் போராளிகளை வைத்திருக்கப் பயந்து கதவுகள் மூடிக்கொண்ட காலம். அவளது வீட்டிலும் அவர்களை விரும்பியேற்கப் பயந்தார்கள். அவள் அப்போது அம்மம்மாவுடன் வாழ்ந்து கொண்டிருந்தது வாய்ப்பாகியது.
அண்ணா அம்மம்மா நித்திரையானப் பிறகு நீங்க சாப்பாட்டறைப் பக்கத்துக் கதவாலை வாங்கோ நான் திறந்து விடுவேன். அவளது யோசனை பொருத்தமாகத்தானிருந்தது. சொல்லி மறுநாள் இரவு தங்குவதற்கு 3போராளிகளும் அவனும் அவளும் அம்மம்மாவும் வாழும் வீட்டுக்கு இரவு போவதாக முடிவெடுத்தார்கள். இரவு அக்கம் பக்கம் விளக்குகளை அணைக்கும் வரை இலுப்படி பனைவடலிகளுக்குள் இருந்துவிட்டு ஊரடங்கியதும் அவளது வீட்டுக்குப் போனார்கள்.
ஏற்கனவே சொல்லப்பட்ட சமிக்ஞையை அவன் அறிவித்தான். சாப்பாட்டறை யன்னலை ஏற்கனவே பாதி திறந்து வைத்திருந்தாள். அவனது சமிக்ஞை தெரிந்ததும் மெல்ல கதவைத் திறந்தாள். அவனும் 3போராளிகளும் உள்ளே மிகவும் அமைதியாக வந்து சேர்ந்தார்கள். அந்த வெறும் நிலத்தில் அவர்கள் படுத்துறங்கினார்கள். விடியப்பறம் 4மணிக்கு முன்வீட்டு அப்பு எழும்ப முதல் இவர்கள் வந்த வழியே எழுந்து சத்தமின்றிப் போய்விடுவார்கள்.
ஒருவருக்கு அளவான சாப்பாட்டை தினமும் வீட்டில் களவெடுத்து அவர்களுக்காக ஒளித்து வைக்கத் தொடங்கினாள். சிலவேளைகள் உணவு கிடைக்காமல் களைத்து வரும் நேரங்களில் அந்த உணவே உயிரைத் தந்ததாக அவன் பலமுறை சொல்லியிருக்கிறான்.
தோய்த்து மினுக்கி ஆடைகள் அணியக்கூடிய வசதியில்லாத அந்தக் கடினமான நாட்களில் அவள் அவர்களது ஆடைகளைத் தோய்த்து காய வைத்து சிரட்டைக்கரி மினுக்கியால் மினுக்கிக் கொடுத்த சேட்டை அணிகிற போது வீட்டில் வாழ்ந்த காலத்தையே நினைத்துக் கொள்வான்.
அந்த ஞாபகங்களை அவளோடு பகிர்ந்து கொள்வான். அந்த வருடத்துத் தீபாவழிக்கு அவளுக்கு வீட்டில் புதுச்சட்டை தைத்துக் கொடுத்தா அம்மா. அதனை அம்முறை அவள் அணியவில்லை. கோவிலில் போடப்பட்ட மாவிளக்குகளையும் பலகாரங்களையும் அவனுக்கும் அவனது தோழர்களுக்கும் கொண்டு போய் கொடுத்தாள்.
பிள்ளைக்கு புதுச்சட்டை வாங்கேல்லயா ? கேட்டவனுக்குச் சொன்னாள். நீங்கெல்லாம் புதுசேட் போடேல்ல அதாலை நானும் போடேல்ல. அன்று அங்கிருந்த 5பேரும் அவளது அந்த வார்த்தையில் சற்று நேரம் மௌனித்துப் போனார்கள்.
ஏனம்மாச்சி நீங்க சின்னப்பிள்ளைதானே புது உடுப்பு போட வேணும். நாங்க பெரியாக்கள் தானே அடுத்த வருசமும் போடுவம். என்றான் அவர்களில் ஒருவன். அம்மாச்சியென்ற வார்த்தை அவளுக்கு அன்று புதிதாக இருந்தது. அம்மாச்சியென்று அழைக்கும் வளமை அவளது ஊரில் ஒருநாளும் இருந்ததில்லை. வன்னியாரிடம் அந்த வளக்கம் இருந்ததையும் அந்த அண்ணா மூலமே அறிந்து கொண்டாள்.
கிட்டத்தட்ட 2மாதங்கள் அவனும் அவனது தோழர்கள் சிலரும் இரவு நித்திரை கொள்ள அவள் உதவியது தனது பெரிய சாதனைகளில் ஒன்றாகவே அவள் நினைத்து பெருமிதப்படுவதுண்டு. எல்லாம் அவன் தந்த துணிச்சலாகவே எண்ணினாள். தொடர்ந்து ஓரிடத்தில் தங்குவதில் உள்ள பாதுகாப்பு காரணங்களை உணர்ந்து பின்னர் இரவுகளில் வெவ்வேறு இடங்களைத் தெரிவு செய்து அவனும் அவனது தோழர்களும் அலைந்தார்கள்.
எங்கு போனாலும் எவ்வளவு அலைச்சல் என்றாலும் இலுப்படி வேரில் இருந்து தன்னை மறப்பது அவனுக்குப் பிடித்த விடயங்களில் ஒன்றாகியது. மரங்களோடும் மர நிழல்களோடும் ஓய்வில்லாத நிம்மதியில்லாத அலைவு தொடர்ந்தாலும் அந்த வாழ்வில் ஒரு திருப்தியிருந்ததை தனது வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் வெளிப்படுத்துவான்.
போராட்ட வாழ்வின் கடினங்களில் இதுவொன்றும் பெரிதில்லையென்றுதான் சொல்லுவான். அவர்கள் யாவரிலும் பாசம் இருந்தாலும் தனியாக அவள் நேசித்த அண்ணாமீது அவளுக்கிருந்த அன்பு அதீதம்தான். அவனுக்காக உயிரையும் விடச் சொன்னால் விடக்கூடியவளாகவே மாறிப்போனாள்.
அந்தப் பதின்மவயதில் அவளுக்கான அன்பை ஆதரவை வீரத்தை வெற்றியை சரியான வழியைக் காட்டியவனும் அவனாகினான். பதின்மவயதுக் கனவுகளைச் செப்பனிட்டு அவளுக்கு வழிகாட்டியாய் சிலநேரம் அதிகாரியாய் ஆசிரியனாய் அவளது குடும்பத்தில் பிறக்கவில்லையென்றதைத் தவிர அத்தனை உரிமையும் அவனுக்கிருந்தது.
000 000 000
அவள் மாலைநேர வகுப்புக்கு போய் வரும் வழியில் அயல் ஊரைச்சேர்ந்த ஒரு இளைஞன் அவளுக்கு பின்னால் சயிக்கிளில் வருவது பாடல்கள் பாடுவதென தொடர்ந்தது. அவளது மாமி ஒருவர் அந்த இளைஞன் அவளைத் தொடர்வதை அவதானித்து அப்பாவுக்குச் சொல்லிவிட்டிருந்தா. அதனை விசாரித்து அப்பா அவளுக்கு அடித்துவிட்டார்.
அவனைத்தான் தேடிப்போனாள். நடந்தது யாவையும் அவனுக்குச் சொல்லியழுதாள். அன்று நிகழ்ந்த சுவாரசியம் அவள் வாழ்வில் நினைத்து நினைத்துச் சிரிக்கும் விடயமாகியும் போனது. அருகில் இருந்த மற்றவர்களுக்கு அவளது அழுகை சிரிப்பாக.... அவன் கேட்டான் பிள்ளைக்கு அந்தப் பொடியனை விரும்பமோ ? இல்லை.
நான் சும்மா பகிடிக்குத் தான் அப்பிடிக் கேட்டனான் அப்பாவில கோவிச்சமாதிரி என்னிலயும் கோவிக்கிறேல்ல சரியா...? பாப்பம் இனிமேல் அந்தப் பொடியன் பின்னாலை வந்தா சொல்லுங்கோ நாங்க பாப்பம் எனச் சொன்னான். வீட்டில் வாங்கிய அடியின் வலி அவன் நாங்கள் இருக்கிறோம் என்றதொடு மறந்து போயிற்று.
சிலநாள் கழித்து ஒருநாள் பின்னேரம் அவனிடம் போனாள். அன்று 15இற்கு மேற்பட்டவர்கள் அங்கேயிருந்தார்கள். அண்ணா இஞ்சை வாங்கோ ஒரு கதை....! அவன் சற்றுத் தூரம் தள்ளி நின்றவளிடம் போனான். அண்ணா ஒரு கதை சொல்லப்போறன் ஒருதருக்கும் சொல்லப்படாது சரியோ ? சரி சொல்லுங்கோ என்ன கதை ?
அண்டைக்குச் சொன்னன் ஒருதன் எனக்குப் பின்னாலை வாறானெண்டு அவன் இண்டைக்கு நான் வரேக்க என்ரை கரியரில கடிதமொண்டைச் செருகீட்டுப் போயிட்டான். இந்தாங்கோ என அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள். ஏற்கனவே அந்தக் கடிதம் அவளுக்கு கொடுக்கப்பட்டதை இன்னொரு போராளி அவதானித்ததை அவனுக்குச் சொல்லியிருந்தான் என்பதனைக் காட்டிக் கொள்ளாமல் அப்பிடியா ? அவருக்குப் பொறுங்கோ நல்ல சாத்துக் குடுத்து விடுறன் எனச் சொல்லிக் கொண்டு கடிதத்தைப் பிரித்தான்.
என்னண்ணா அந்த லூசு எழுதியிருக்கு ? கேட்டாள். இந்தாங்கோ வாசிச்சு எனக்கும் சொல்லுங்கோ என கடிதத்தை திருப்பி நீட்டிச் சிரித்தவனுக்கு இல்லை நீங்களே வாசியுங்கோ என மறுத்தாள். கடிதத்தை வாசித்தபடி சிரித்தான்.
ஏன் சிரிக்கிறீங்கள் ? கடிதத்தை பொடியன் சரியான சீரியசா எழுதியிருக்கிறான். அது சனியன் அவள் கோபித்தாள்.
உங்களுக்கிப்ப எத்தின வயசு ? 15. பெரிய அக்கா. பிறகேன் பயம்....! அவள் அழுதாள். சரி அழப்படாது நீங்க பெரிய பிள்ளை இனி இப்பிடி கடிதம் வரும் பொடியள் பின்னாலை வருவாங்கள் இதுக்கெல்லாம் பயப்பிட்டு ஒளிக்கக்கூடாது. உங்களுக்குப் பிடிக்காததை உங்களுக்குச் செய்தால் இல்லது இப்பிடி கடிதம் யாரும் எழுதினா திருப்பி கதையுங்கோ இல்லது நானிருக்கிறன் அவைக்கு கதைக்க சரியோ ? படிக்கிறதில மட்டும் நல்ல மாக்ஸ் எடுத்தா காணாது எங்கடை உரிமையை மறுக்கிறவையை இல்லது எங்களுக்கு பிடிக்காததை எங்களுக்குச் செய்யிறவைக்கு எதிராயும் நாங்கள் கதைக்க வேணும்.
அப்போது அவன் பாரதியாரைப் பற்றிச் சொன்னான். புரட்சியின் அடையாளமாக குறுகிய தொகையில் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகள் பற்றிச் சொன்னான். ஒரு வித்தியாசமான சிந்தனையாளனாகவும் பெண்ணை அவன் போராடும் குணமுள்ளவளாகவும் விவரித்தான். பெண்ணியம் போராட்ட குணம் இதுவெல்லாம் அந்தப் 15வயதில் அவளுக்கு குழப்பமான சொற்களாகவே இருந்தது. ஆனால் அவன் சொன்ன போது அதுவே அவளில் வீரத்தை விதைத்த வார்த்தைகளாகக் கருதினாள்.
அப்ப என்னையும் இயக்கத்துக்கு எடுங்கோவனண்ணா ? உந்த அழுமூஞ்சியளை இயக்கத்துக்கு எடுத்திட்டு பிறகு அண்ணா நீங்கள் தான் எல்லாத்துக்கும் ஓடிப்போக வேணும். சற்றுத் தள்ளியிருந்த ஒரு போராளி சொல்லிச் சிரித்தான். அதற்கும் அழுதாள்.
முதல் முதல் அவள் முகத்தை நிமிர்த்திச் சொன்னான். இனிமேல் அழுது கொண்டு வரப்படாது எங்களுக்கு முன்னாலை அழவும் கூடாது. இனி நீங்கள் பெரிய பிள்ளை ஒருதருக்கும் பயப்பிடக்கூடாது. அப்பாட்டை அடிவாங்கீட்டும் இஞ்சை வந்து அழப்படாதெண்டும் சொல்லுங்கோண்ணை.... இன்னொருத்தன் சீண்டினான்.
உவர் நெடுகலும் என்னோடை கொழுவிறார் அண்ணா ஒருநாளைக்கு என்னட்டை அடி வாங்குவாரெண்டு சொல்லுங்கோ. இவ பெரிய சண்டியன் தான மறுபடியும் அவன் சொன்னான். இவன் இந்த கடிபாட்டை பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றான். ஒரு கட்டத்தில் அந்தப் போராளிக்கு முதுகில் அவள் அடித்தேவிட்டாள்.
பாருங்கோ உங்கடை தங்கச்சி வயசு மூத்த எனக்கே கைநீட்டிறாள்...! உப்பிடித்தான் அந்தப் பொடியனுக்கும் ஏதும் செய்திருப்பா. அவனும் வேண்டுமென்றே அவளைத் தொடர்ந்து சீண்டினான்.
அன்று தான் அவள் கோபத்தை அவர்கள் முன் காட்டினாள். சாதுவாய் அறிமுகமானவள் அன்று காளியாகினாள். அங்கிருந்த மரங்களைச் சுற்றியோடிய அந்தப் போராளியை கலைத்து கலைத்து அடித்தாள். அவன் நகைச்சுவையாக அவளைச் சீண்டியதை தன்மீதான வெறுப்பில் அவன் செய்வதாக நினைத்து நகத்தால் அவனது கைகளில் விறாண்டிவிட்டாள்.
ஐயோ காளி விறாண்டீட்டாளண்ணா காப்பாற்றுங்கோ...என அவனுக்குப் பின்னால் போயொழித்தான். உனக்குக் காணாது என்பது போல மற்றவர்கள் சொன்னார்கள். முகத்திலையும் விறாண்டிவிடு பிள்ளை உவனுக்கு வாய் கூட....சிலர் இவளுக்கு ஆதரவாகச் சொன்னார்கள்.
சரி விடுங்கோ பாவம் அவன் சும்மா பகிடிக்குத்தான் அப்பிடிக் கதைச்சவன். என சமாளித்தான். அவளுக்கு கோபம் குறையவில்லை. அவனைத் திருப்பியும் அடிக்கவே நின்றாள். இராணுவப் பயிற்சியெடுத்த ஒருவன் தன்னிடம் அடி வாங்குகிறான் என்றதே தனது துணிச்சல்தான் என பெருமிதப்பட்டாள்.
அவன் ஒற்றைக் கையால் பிடித்தாலே தாங்காத வலியை அவனால் தர முடியுமென்றதை அந்தச் சின்ன வயதில் அவள் நினைத்ததேயில்லை. அவளது அந்த அடியை அவன் ரசித்து வாங்கியிருந்ததை அவளுக்கு 17வயதான போது அவன் சொன்ன போது அவளால் சிரிப்பை மறக்க முடியவில்லை.
இந்திய இராணுவ காலத்தில் கிட்டத்திட்ட இரண்டரை வருடம் அந்த வட்டாரத்தில் வாழ்ந்த போராளிகள் பலரின் அன்பைப் பெற்றிருக்கிறாள். ஆனால் அவள் நேசித்த முதல் அண்ணாவும் முதல் கதாநாயகனுமானவன் அவனது அம்மா அவனைத் தேடி ஒருமுறை பார்க்க வந்த போது அவளைத் தன் அம்மாவுக்கும் அறிமுகப்படுத்தினான். இதென்ரை தங்கைச்சி...உங்கடை பிள்ளையம்மா.....!
அவன் சொன்னது போல அவனது அம்மாவிற்கும் அன்றைய சில மணித்தியாலத்திலேயே அவள் பிள்ளையாகினாள். அவனிடமிருந்து விடைபெறும் போது அவளை அணைத்து முத்தமிட்டுச் சொன்னா அம்மா ‚'வீட்ட வா மோன'. அம்மா தங்களது வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தா.
இவளை வீட்டில் ஆச்சி சொல்லுவா...உன்னை நாங்க மட்டக்களப்புச் சோனீட்டைத் தானே வாங்கினனாங்கள்...அந்தச் சோனிதான் உன்னை வித்தவன். ஆச்சி இவளது அரியண்டம் குழப்படி தாங்கேலாமல் சொன்னதை அப்போது நினைத்துப் பார்த்தாள். அப்ப நான் இவேட வீட்டதான் பிறந்தனோ ?
அவனது அம்மா வந்து போய் சிலநாளில் அவனிடம் இதுபற்றிச் சொன்னாள்.; நானும் உங்கடை வீட்டிலதான் பிறந்தனோ அண்ணா ? சிறு வயதில் பிள்ளைகளுக்குச் சொல்கிற வார்த்தைகள் பிள்ளைகளின் மனங்களில் வடுவாகக்கூட மாறிவிடும் வல்லமையை உணர்ந்தானோ என்னவோ ஆச்சி சும்மா சொல்றவா அப்பிடியெல்லாம் இல்லை. நீங்கள் குழப்படியெண்டு ஆச்சி அப்பிடிச் சொல்லியிருப்பா. அவன் சமாளித்தான்.
அவள் சொல்ல விரும்பும் கேட்க விரும்பும் எல்லாக் கதைகளையும் சொல்லவும் அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்கவும் அவளுக்காக எல்லாமுமாக அவனிருந்தான். ஒருநாள் அவன் அந்த ஊரைவிட்டு வேறு இடம் பொறுப்பேற்றுப் போவதாகச் சொன்னான். அதுவரையில் அவள் நினைத்திராத பிரிவு அது. பழையபடி அழத்தொடங்கினாள்.
காலம் அழைக்கும் போது கடமையை ஒவ்வொரு போராளியும் மறுத்து ஒதுங்கியதில்லை அதுபோல அவனும் தனது கடமைக்குத் தயாராகினான். அவன் பிரியப் போகும் ஒவ்வொரு நாளையும் அவள் தனது மனவேட்டில் துயரோடே பதிவு செய்து கொண்டிருந்தாள்.
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
அங்கம் - 3
--------------------------------------------------------------------------------------------------
அவன் அவளையும் அதுவரைகாலம் அடைக்கலம் கொடுத்த வீடுகளையும் விட்டுப் பிரியும் கடைசி நாளது. அவன் அவளுக்காக ஒரு புதிய நாட்குறிப்பேட்டைக் கொடுத்தான். இண்டையிலயிருந்து நீங்கள் இனி டயறி எழுதுங்கோ. திரும்பி நாங்க சந்திக்கேக்க இன்னும் பெரியாளா வளந்திருப்பீங்கள் அப்ப நான் வாசிச்கத் தரவேணும். எதுவும் எழுதப்படாத நாட்குறிப்பேட்டில் அவளது பெயரை முதல் பக்கத்தில் எழுதியிருந்தான்.
அவளது ஊரிலிருந்து 7மைல் தொலைவில் இருக்கும் தனது வீட்டுக்கு நேரம் கிடைக்கிற போது போகச் சொன்னான்.
யாரினது தொடர்பு அறுபட்டாலும் நிச்சயம் வீட்டாரின் தொடர்பு இருக்குமென்று நம்பினான் போல. 2தடவைகள் அவனது அம்மாவிடம் போய் வந்தாள். அவன் அங்கிருந்து போன பின்னர் ஒருமுறை விடுமுறையில் வந்து நின்றதாக அம்மா சொன்னா. அவள் வந்தால் தனது அன்பைத் தெரிவிக்கச் சொன்னதாக அம்மாவிடம் சொல்லியிருந்தான்.
குறுகிய காலத்தில் பழகி நிரந்தரமாய் அவளின் உலகமாய் ஆகியிருந்த அவன் அவளையும் விட்டு அந்தக் கிராமத்தையும் விட்டுப் போய்விட்டான். அவனில்லாத அந்த நாட்கள் அவனில்லாத இலுப்பமர வேர் அவனுக்காக அவள் மாற்றிக் கொண்ட அவளது இயல்புகள் எல்லாமே அவனில்லாத வெறுமையை ஒவ்வொரு கணமும் உணரத் தொடங்கினாள்.
அவன் மாலை வேளையில் இருக்கும் இலுப்பமர வேரில் போயிருப்பாள். அவனோடு பேசியபடி அவனுக்குச் செய்த குறும்புகள் குழப்படிகள் கோபித்த நிமிடங்களெல்லாம் கண்ணுக்குள் வரிசை கட்டி வந்து போகும். அவன் மீண்டும் வருவானென அந்த இலுப்பைமர வேர் சொல்லிக் கொள்வது போலிருக்கும் பிரமையை உணர்வாள். அவனது பெயரை கத்தியால் அந்த வேரில் ஒருநாள் எழுதிவிட்டாள். அவன் ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையோடு....!
அவன் போய் ஒருவாரத்தின் பின் அவன் கொடுத்த நாட்குறிப்பேட்டில் எழுத முதல் பக்கத்தை விரித்தாள். அவளது பெயரை எழுதி அதன் கீழ் அன்புள்ள என் தங்கைச்சிக்கு எனது ஞாபகமாக விட்டுச் செல்கிறேன். திரும்ப நான் வரும் போது எனக்குச் சொல்ல என்னோடு கதைக்க விரும்பும் எல்லாவற்றையும் இதில் எழுதி வைக்கவும்.
அடுத்த பக்கத்தை விரித்தாள். 11.04.1990. என வலது மூலையில் திகதியிட்டாள்.
என் அன்புள்ள அண்ணாவிற்கு, என ஆரம்பித்து எழுத வேணடும் போலிருக்கும் போதெல்லாம் எழுதத் தொடங்கினாள். அவன் திரும்பி வரும் போது அந்த நாட்குறிப்பை அவன் வாசிக்க வேண்டுமென்ற விருப்போடு எழுதத் தொடங்கியிருந்தாள். அவனில்லாது போன நாட்கள் ஒவ்வொன்றும் வெறுமையாகியது.
எங்கிருந்தோ வந்தான் இந்த இடைப்பட்ட காலத்தில் அவளது மாற்றங்கள் யாவுக்கும் காரணியாக இருந்தவன். வீட்டில் எவ்வளவோ பேர் உறவாக அன்பாக இருந்த போதும் அவன் காட்டிய அன்பு எல்லாரையும் விட மேலாயிருந்தது. அண்ணாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் அவனைப் போல் தான் இருப்பார்களோ ? தங்கள் தங்கைகள் மீது இவன் போலத்தான் ஆழுமையும் அன்பும் செலுத்துவார்களோ என பலமுறை யோசித்திருக்கிறாள்.
அவனைப் பார்க்க விரும்பும் தருணங்களில் அவன் உலவிய தெருவில் அவன் அமர்ந்து இவளோடு கதைத்த இலுப்படி வேரில் போயிருப்பாள். யாருக்கும் தெரியாது அவனுக்காக அழுதிருக்கிறாள்.
அவன் இறுதியாய் சொல்லிவிட்டுப் போனவற்றில் அவளது கல்வியையே அதிகம் கவனப்படுத்தியிருந்தான். அந்த முறை றிப்போட் வந்திருந்தது. அதனைப் பார்க்கவும் தனது அன்பைச் சொல்லவும் அவனில்லாது போனான்.
காலம் போய்க்கொண்டிருந்தது. அவன் போனதன் பின்னர் ஊரில் புதிதாய் வந்த போராளிகள் வீடுகளுக்கு வந்து போனார்கள். யாரோடும் அதிக அன்பைச் செலுத்தக் கூடாதென்பதில் அவதானமாக இருந்தாள். நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகியது அவன் திரும்பி வரவேயில்லை. அவனது அம்மாவும் சகோதரர்களும் இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து போனார்கள். அவர்களது தொடர்பும் இல்லாது போனது.
2ம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் அவளது ஊர் ஒட்டுமொத்தமாக மனிதர்களை இழந்தது. போராளிகள் மட்டுமே மிஞ்சி ஊரைக்காக்க மக்கள் இடம்பெயர்ந்து போனார்கள். அவளது குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. போன இடத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் படிக்கச் சேர்ந்தாள். அங்கே அறிமுகமான தோழன் ஒருவன் அவனது ஊர் இடப்பெயர்வு பற்றிச் சொன்னபோது இவள் அன்புக்குரிய அண்ணாவின் குடும்பமும் அடுத்த ஊரில் இடம்பெயர்ந்து வந்து இருப்பதனை அறிந்து கொண்டாள்.
அவனிடம் அவர்களது முகவரியைக் கேட்டாள். முதலில் யோசித்தவனுக்கு அவள் அந்தக் குடும்பத்தின் போராளி மகன் பற்றிச் சொன்னாள். தானே அவர்களது வீட்டுக்கு அவளைக் கூட்டிப்போவதாக வாக்குறுதியும் கொடுத்து ஒருநாள் பின்னேரம் மாலைநேர வகுப்பு முடிய அவளைக் கூட்டிக் கொண்டு போனான். திரும்பவும் தனக்குப் பிடித்தவனின் குடும்பத்தைச் சந்திக்க போவதையிட்டு மனசுள் ஊறிய மகிழ்ச்சியை சொல்லால் புரிவிக்கத் தெரியவில்லை.
அவன் தான் முதலில் அவர்களது வீட்டிற்குள் போனான். பெரியம்மா....! என அவன் அழைக்க அம்மா வெளியில் வந்தா. அவளைக் கண்டதும் அம்மா வா மோன என அழைத்தா. வாணை உள்ளைவா என அவளை விறாந்தையில் இருக்க வைத்தா. பிள்ளை பிளேன்ரி குடிக்காது கடையில போய் சோடா வாங்கிவா தம்பி...! என அவளது வகுப்புத் தோழனை அனுப்பினா.
அவள் பிளேன்ரீ குடிப்பதில்லை. சிறுவயது முதலே அந்தப் பழக்கத்தை விட்டிருந்தாள். பிளேன்ரீ குடிக்கும் பழக்கம் விடுபட்டுப் போனது பற்றி அவள் ஒருமுறை அவனுக்குச் சொன்னது நினைவில் வந்து போனது. அதைக்கூட நினைவில் வைத்து அம்மாவுக்குச் சொல்லியிருக்கிறான். அவளை அந்த வீடு தனது மகளாக ஏற்றுக் கொண்டதற்கு சான்றாக அம்மா அவளைக் கவனித்தா.
அண்ணா வாறவரே ? அவள் யோசித்து யோசித்துக் கேட்டாள். அண்ணா போனாப்பிறகு ஒரு நாளும் எங்கடை வீட்டை திரும்பி வரேல்ல. சொல்லி முடிக்க முதல் முன்னுக்கு வழிந்தது கண்ணீர். அம்மா அதிர்ந்து போனா. ஏனடா பிள்ளைக்குத் தெரியாதே ? போனமாதம் அவன் வீரச்சாவெல்ல ? என்ரை பிள்ளை சேதி அறிஞ்செல்லோ வந்ததெண்டு நினைச்சனடா.....!
அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் உயிரை இடுங்கியெடுத்தது போலிருந்தது. அதிர்ச்சி , அழுகை , ஏமாற்றம் , என உணர்வுக் குழையலாய் அவன் பற்றிய அவளது எண்ணங்கள் கண்ணீராய் வழிந்தது. அம்மா அவளுக்காக வாங்குவித்த சோடாவைக் குடிக்கவோ அதன் சுவையை உணரவோ முடியவில்லை. அவள் நேசித்த அவளது அண்ணா அவளுக்குத் தெரியாமலேயே வீரச்சாவடைந்து போனதை அவனது வித்துடலைக் கடைசியாய் பார்க்கவும் கிடைக்காத தனது இராசியில்லா முகம் மீது கோபமாக இருந்தது.
என்ரை பிள்ளையை நான் நினைக்கேல்லயடா இப்பிடி கெதியிலை போயிடுவனெண்டு....! அம்மாவும் அவளோடு சேர்ந்து அழுதா. அந்த விறாந்தையில் மூடப்பட்டிருந்த பலகை அலமாரியை அம்மா திறந்து காட்டினா. அந்த அலமாரிக்குள் அவளது அண்ணா சிரித்தபடி வரிச்சீருடையில் மாலையணிந்து வீரவணக்கம் என எழுதப்பட்டிருந்த படமாய் தொங்கினான்.
லீவில வீட்டை வந்தானெண்டா வீடு கூட்டிறதில இருந்து சமையல் மட்டும் என்ரை பிள்ளை எல்லாம் செய்து தரும். ஒரு தங்கைச்சியிருந்தா அம்மாக்கு உதவியா இருந்திருக்குமெண்டு அடிக்கடி சொல்லும் என்ர பிள்ளை. தம்பிமாருக்கெல்லாம் அவன் தான் உடுப்பெல்லாம் தோச்சுக் குடுப்பான். என்ரை பிள்ளை இயக்கத்துக்கு போக முதலும் எனக்கு நல்ல உதவி நாட்டு நிலமை அவனை எங்களோடை இருக்கவிடாமல் பிரிச்சுப் போட்டுது.
இயக்கத்துக்கு போன பிள்ளைக்கு களத்தில மரணம் வருமெண்டு நினைச்சனான் தான் ஆனா இப்பிடி 24வயதில வருமெண்டு நான் கனவிலயும் நினைக்கேல்ல...!
பிள்ளையைப் பற்றி நெடுகக் கதைக்கிறவன். நீங்கள் என்ரை வயித்தில பிறந்தமாதிரித்தான் அவனுக்கு நல்ல பாசம். நெடுகலும் தங்கைச்சி தங்கைச்சியெண்டு உங்களைப் பற்றி இந்த வீட்டை வந்து நிண்ட நாளெல்லாம் கதைக்க மறந்ததில்லை. சாகிறதுக்கு முன்னம் ஒரு 4நாள் லீவில வந்து நிண்டவன். உங்களைத் தேடினவனாம் நீங்கள் இடம்பெயர்ந்து போட்டீங்களாமெண்டு யாரோ சொன்னவையாமெண்டு சொன்னவன்.
அந்த வீட்டில் அவளுக்கான தொடரும் உறவுகளையும் அன்பையும் அவன் மீதமாக விட்டுச் சென்றிருந்தான். எங்காவது தேடி அவனது குடும்பத்தைக் கண்டு பிடிப்பாள் என நம்பினானோ என்னவோ அவளைப்பற்றி அந்த வீட்டில் சொல்லி வைத்ததோடு நின்றுவிடாமல் தனது குடும்பத்தில் ஒருத்தியாகும் தகுதியையும் கொடுத்துவிட்டு மறைந்திருந்தான்.
அவன் திரும்பி வரும் போது அவன் வாசிப்பானென அவள் எழுதிய நாட்குறிப்பேட்டை அம்மாவிடம் கொடுத்தாள். இதானம்மா எனக்குக் கடைசியா அண்ணா தந்தது. சொல்ல முதலே அழுகை முந்திக் கொண்டது. அம்மா அவளைத் தன்னோடு அணைத்து அவளை ஆறுதல்படுத்தினா.
கருவிலிருந்த காலம் தொடக்கம் இறுதிச் சந்திப்பு வரையும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தவன் மீதான அம்மாவின் பாசத்துக்கு நிகராக குறுகியகால அறிமுகத்தில் அவன்மீது கொண்ட பாசத்தைச் சொல்லத் தெரியாதவளாக அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவளது அழுகையில் அம்மாவும் கலங்கித்தான் போனா.
அம்மா அவன் பற்றி தனது கருவிலிருந்த காலம் முதல் கடைசியாய் அவனைச் சந்தித்தது வரையும் கதைகளை தனது நினைவுகளை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தா. அந்த வீட்டில் அம்மாவுக்கு எல்லாமே ஆண்பிள்ளைகள் அம்மாவுக்கு அவனே எல்லாமுமாயிருந்திருக்கிறான்.
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
பாகம் 4
அம்மாவிடமிருந்து விடைபெற்ற போது அவனது படங்களில் சிலவற்றை அம்மாவே அவளுக்கு கடித உறையில் வைத்துக் கொடுத்தா. அத்தோடு அவள் அம்மாவிடம் கொடுத்த நாட்குறிப்பேட்டையும் திருப்பிக் கொடுத்தா அவன் தந்தது அவன்ரை ஞாபகமா வைச்சிரம்மா. கிட்டத்தான இருக்கிறீங்கள் ஏலுமான வேளை வா ராசாத்தி.
அம்மாவிடமிருந்து விடைபெற்றாள். வீதி வழியே அழுகையாகவே இருந்தது. விதியை கடவுளை எல்லாரையும் நொந்தாள். அவள் நேசித்த முதல் உறவு அவள் வாழ்வில் பெரும் பங்கையும் பாதிப்பையும் தந்த பெருமைக்குரிய அவனைக் கொண்டு போன காலத்தை திட்டினாள். கடவுளெல்லாம் கல்லென்று மனசுக்குள் மறுகினாள்.
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத துயரை மனசுக்குள் சுமந்து கொண்டு காலத்தைக் கடத்தினாள். காலங்கள் மாறியது. இடப்பெயர்வுகளும் எறிகணைகள் விமானத் தாக்குதல்கள் என யாழ்மாவட்டம் தனது இயல்பை இழந்தது. தினசரி ஒவ்வொரு ஊர்ச்சந்தியிலும் சோக இசையோடு யாரோ ஒரு வீரனின் மரணத்தை அல்லது நினைவுநாளை நினைவு கூரும் ஒலிபெருக்கிகள்.....!
புலிகளின்குரல் ஒலிபரப்பு அன்றாட மக்களின் வாழ்வை அவலத்தை தொடரும் விடுதலைப் போராட்டத்தின் வீரத்தைத் தனது குரலால் பகிர்ந்து கொண்டிருந்தது. ஈழநாதம் நாளேடு அன்றைய காலத்தில் மண்ணுக்கானவர்களின் கதைகளைச் சொல்லும் பத்திரிகையாக மக்களிடம் சென்று கொண்டிருந்தது.
படிப்பு அலைவு என அவளது காலமும் தன்வழியே....! காலவோட்டம் அவளது வாழ்விலும் மாற்றங்கள். நினைத்தவை வேறாயும் நடந்தவை வேறாயும் காலம் எழுதிய கதைகளில் பலரது வாழ்வும் மரணமும் அவலத்தின் உச்சகாலம் போலாகியது.
அவளது அண்ணாவின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து வந்த இடப்பெயர்வில் இடம்மாறிப்போனார்கள். அவர்களது தொடர்புகள் விடுபட்டுப் போனது. என்றாவது அவர்களை மீளவும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்குள் பெருமரமாய் விரிந்தது.
ஒரு உயிரை இழந்து போனாள் ஆனால் மேலும் பலர் அவள் இழந்து வருந்திய உயிரை நினைவில் தருமாப்போலவும் மீளுயிர் தந்தாற்போலவும் ஆண் பெண் போராளிகளில் அவளும் ஒருத்தியாக அவர்களின் விருப்பத்துக்கு உரியவளாக பலர் மீண்டும் வந்தார்கள்.
ஒருமுறை உம்மோடை கதைச்சா பிறகு அவையளை உம்மடை ஆக்களாக்கீடுவீர் என்ன ? ஒரு போராளி சொன்னான். நீர் அரசியல் செய்யலாம் அதையும் அவன்தான் சொன்னான். சிரிச்சுச் சிரிச்சு ஆக்களை விழுத்தீடுவீங்கள் இன்னொரு போராளி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.
தனக்கான கடமைகளைப் புரிந்து தன்னால் முடிந்ததைச் செய்யும் கனவில் அலைந்தாள். புதிய புதிய தொடர்புகள் உறவுகள் அவளைத் தங்கள் வீடுகளில் ஒருத்தியாக உறவில் ஒருத்தியாக சேர்த்துக் கொண்டார்கள்.
அந்தப்பயணத்தில் ஒரு போராளி வந்தான். அடிக்கடி அவனைச் சந்தித்துக் கொள்ளும் தேவைகள் இருந்தது.எல்லோரையும் போலல்லாது எல்லாவற்றிற்கும் மேலான உறவாய் அது மலர்ந்தது. நெஞ்சுக்குள் சத்தமின்றி வந்தமர்ந்தான் அந்தப்புலிவீரன்.
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
பாகம் 5
அவளது வாழ்வில் அடுத்த பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் கொடுத்த இரண்டாவது ஆண் அவன். நட்புக்கு அர்த்தம் சொன்னவனும் அவனேயாகினான். நண்பனாய் , நல்லாசானாய் அவனுடனான நாட்கள் வித்தியசமானவை.
அவளிலும் 3வயதால் மூத்தவன். வடபகுதியில் கடற்கரைக் கிராமமொன்றில் பிறந்து பெரு நகரமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவனை காலம் புலியாக்கியது. திறமையான மாணவனாகவும் அதேநேரம் பல்கலைக்கழகம் செல்லும் கனவையும் மனசுக்குள் எழும்பிய கோட்டையில் ஆயிரமாயிரம் கனவுக் கூடுகள் அவனது வாழ்வு பற்றிய எண்ணங்களை விதைத்திருந்தான்.
அவனது கனவுகளில் 1989 பகுதியில் இடியிறங்கியது. பாடசாலை விடுமுறையில் ஊரில் போய் நின்றவனை தேசத்துரோகக்கும்பல் தேசிய இராணுவத்தின் இணைக்க முற்பட்டு அவனைக் கொண்டு போனது. நாட்கணக்காய் அவர்கள் அடித்த அடியும் சித்திரவதைகளும் அந்த வதையிலிருந்து மீண்ட போது அவனை ஒருநாள் புலிகளோடு இணைத்தது.
போராடும் குணத்தையும் தமிழீழ தேசத்தின் விடுதலையையும் விடுதலைப்புலிகளால் மீட்டுவர முடியுமென்று நம்பிய போராளிகளோடு மணலாறு காட்டில் பயிற்சி முடித்து யாழ்மாவட்டத்தில் வந்திறங்கியவன். விடுதலைப் போராட்டத்தின் வீரம் மிகுந்த பக்கங்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பலரது வாழ்வின் இழப்பும் ஈடு செய்ய முடியாத தியாகமும் இறைந்து கிடப்பதை வினாடிக்கு வினாடி ஞாபகப்படுத்தியவன்.
உலக விடுதலைப் போராட்ட வரலாறுகள் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் அப்போது யாழில் வெளிவந்த பத்திரிகைகள் அவர்களுக்காக சிறப்பாகப் போகும் நூல்கள் வரையும் வாசிக்கவும் வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளவும் அவளுக்கு வழிகாட்டிய நண்பன் அவன்.
ஒரு முதுகுப்பையில் பத்திரப்படுத்த வேண்டிய தனது டயறி , தனது பொருட்களில் பலவற்றை அவளிடமே கொடுத்து வைத்திருந்தான். அழகான தனது கையெழுத்தில் எழுதப்பட்ட டயறியில் அவனால் எழுதப்பட்ட ஒவ்வொரு விடயமும் தேசத்திற்கான பயனுடைய விடயங்களாகவும் தன்னோடு வாழ்ந்து மறைந்தவர்களின் நினைவுகளாலுமே நிறைந்திருந்தது.
நீழும் போராட்ட வாழ்வில் மரணத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு மடியும் தத்துவத்தைத் தனக்குள்ளே வரித்துக் கொண்ட அந்தப் புலவீரனின் மனசுக்குள்ளும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகளும் இளவயதுக்குரிய கனவுகளும் கரையாமலேயே நிரப்பப்பட்டிருந்தது. இளவயதின் கனவுகளோடும் இலட்சியக் கனவுகளோடும் போராட்ட வாழ்வில் பயணித்துக் கொண்டிருந்தான்.
தனது கனவுகள் விருப்பங்கள் யாவையும் அவளோடு பகிர்ந்து கொள்வான். நீண்ட நேரம் உரையாடல் சிலவேளை சண்டையாக , கோபமாக , அவளைச் சினப்படுத்துவதாக எத்தனையோ முறை அவள் கோபித்துப் போனாலும் தனது சிரிப்பால் சீண்டல்களால் மீண்டும் ஆற்றுப்படுத்திவிடுவான்.
மகிழ்ச்சியின் காலம் எப்போதும் அவளுக்கு நீடித்ததில்லை. ஒரு இழப்பின் கனம் அவனது புதிய உறவின் துளிர்ப்பில் மெல்ல மெல்ல மாற்றம் வருவதாய் நம்பிய காலம் களம் அவனையும் கடமைக்கு அழைத்து அவனும் தூர இடம் மாறிப்போவதாய் ஒருநாள் வந்து நின்றான். போகாதேயென தடுத்து நிறுத்த முடியாத பயணம் ஒவ்வொரு போராளியின் வாழ்வும். அவள் மௌனமானாள்.
தனியே அழுது தனியே துயரில் கரைந்து வாழ்வில் முதல் வந்த நட்பை ஒரு பொழுது அள்ளிக் கொண்டு போகவென விடிந்தது. இறுதிச் சந்திப்பு. மீண்டும் வருவேன் என்றுதான் சொல்லிவிட்டுப் போனான். போகும் போது பெறுமதி மிக்க தனது டயறியை அவளிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
அவனுக்குப் பிடித்த அவன் விரும்பியணியும் ஒரு சேட் தனக்கு வேணுமென அவள் அடம்பிடித்த போது என்ன நினைத்தானோ தெரியாது 'சரி வைச்சிரு' எனச் சிரித்துவிட்டுக் கொடுத்தான். அதிக நெருக்கத்தையும் நேசத்தையும் கொட்டி நேசித்தவர்களில் ஒருவன் அண்ணாவாய் மற்றொருவன் நண்பனாய் இருவருமே இடையில் பிரிந்து போனார்கள். ஒருவன் மாவீரனாக மற்றையவன் மரணத்தைத் தேடிக் களத்தில்....!
இனி யார் மீதும் அதிக அன்பைச் செலுத்துவதில்லையெனத்தான் முடிவெடுத்தாள். தான் அதிகம் அன்பைக் கொட்டி நேசித்தால் அந்த உறவைக் காலம் நிரந்தரமாய் தன்னிடமிருந்து பிரித்துப் போவதாக நினைத்தாள். அவளைப் பலர் நேசித்தார்கள். உறவாகினார்கள். அவள் கதை அல்லது சிரிப்பு இரண்டில் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் பிடித்துப் போனது.
மெல்ல மெல்லத் தன்னை வருத்தும் துயர்களிலிருந்து விடுபட்டு வெளியேறி இயல்பாக விரும்பினாள். ஆனால் இழந்து போன இரு பிரிவும் அவளை யார் மீதும் அதிக அன்பைச் செலுத்தவிடாது தடுத்துக் கொண்டிருந்தது. இந்த இடைவெளியில் அவளும் மாறிப்போனாள். புதிய பாதைதேடிய பயணத்தில் அவளது கனவுகளும் ஆயிரமாயிரம் பேரின் நினைவுகளோடு....!
000 000 000
திடீரென புதிய மாற்றமாய் காலம் எல்லாரையும் போல அவளுக்கான பாதையைத் தீர்மானித்தது. பாதைகள் மாறியது பயணங்களும் மாறியது. அவளது வாழ்வுப் பயணமும் மாறியது. அது புலப்பெயர்வாக பல்லாயிரம் மைல்கள் கடந்து ஐரோப்பிய நாடொன்றில் அவளும் அகதியாகினாள்.
நாட்டைவிட்டு வெளியேறும் போது நண்பனைத் தேடியலைந்தாள். அவனைக்காணவும் தனது பயணத்தைச் சொல்லவும் தேடினாள். அவன் நின்ற இடத்தை அவளால் அடைய முடியாத தொலைவில் இருந்தான். அவன் கொடுத்த அவனது டயறியை நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கொடுத்து தான் சென்றடையும் நாட்டின் விலாசம் தரும் போது அதனை அனுப்புமாறு சொல்லிவிட்டு வெளியேறினாள். அவனுக்குப் பிடித்த சேட் மட்டும் தன்னோடு கொண்டு சென்றாள்.
பயண முகவர்கள் அலைத்த நாடுகளில் அலைந்து திரிந்த போது அவள் காவித்திரிந்த அவளது பிரியத்துக்கினிய தோழனின் சேட் யாரோ கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அவனையே இழந்தமாதிரியான துயரோடு அழுத நாட்களை மறக்க முடியாது.
என்றாவது தேவைப்படின் தொடர்பு கொள்ளுமாறு அவன் கொடுத்த முகவரிதான் கடைசியில் கைகொடுத்தது. அவனுக்காக அவள் எழுதிய கடிதங்கள் சில அவனுக்குக் கிடைத்து தனது பதிலையும் எழுதியிருந்தான். என்றும் மாறாத மண்ணின் பாசத்தோடும் அவன் எழுதிய கடிதங்கள் ஒரு காலத்தின் பதிவாக....!
மாதக்கணக்காகக் காத்திருந்து வரும் அந்தக் கடிதங்கள் ஊரை உறவை அவளது நேசிப்புக்கு உரிய யாவரையும் கண்முன்னே நிறுத்திவிடும் வல்லமையின் வடிவாக...! ஒருமுறை தனது நிழற்படங்கள் சிலவற்றை அனுப்பியிருந்தான். அவனது டயறி இருக்கும் இடத்தின் முகவரியை ஒருதரம் எழுதிவிட்டாள். அதனை எடுத்து தனக்கு அனுப்புமாறு கேட்டும் எழுதியிருந்தாள்.
திடீரென அவனது தொடர்புகள் விடுபட்டுப் போனது. காரணம் சொல்லப்படாது அவன் மௌனமாகியதாகத்தான் நினைத்தாள். ஆனால் அவன் ஒரு களத்தில் வீழ்ந்தானென்ற செய்தி பல மாதங்கள் கழிந்த ஒரு காலத்தில் வெளி வந்தது. புலத்தில் வெளியாகிய ஒரு சஞ்சிகையில் அவனது படமும் நினைவுப்பகிர்வும் வெளியாகியிருந்தது.
நாட்கணக்காய் அந்தச் செய்தியைப் படித்தாள். பலநாள் தனியே இருந்து அழுதாள். ஆற்றவோ தேற்றவோ ஆட்களற்று அந்த இழப்பை நம்ப முடியாது....!அவன் தனது ஞாபகங்களை மட்டும் அவளுக்கு நிரந்தரமாக்கிவிட்டு மாவீரனாய் துயிலிடம் ஒன்றில் கல்லறையாக....!
மலரும் நினைவுகளில் மறக்காத மனிதர்கள்
பாகம் 6 - இறுதிப்பகுதி
அவளுக்கானதொரு குடும்பம் குழந்தைகள் என ஒரு உலகம். விதிப்பயனோ அல்லது வாழ்வின் தொடரோ அகதி வாழ்வோடு அவளது உலகம் இன்னொன்றாகியது.
என்னதான் வாழ்வும் வாழும் நாடும் மாறினாலும் அவள் பிறந்த நாட்டின் நினைவையும் அந்த நிலத்தில் அவளோடு வாழ்ந்தவர்களின் நினைவுகளையும் காலம் ஒருபோதும் பிரித்துப் போட்டதில்லை. அகதியானாலும் அழியாத தாயகத்தின் நினைவுகளைச் சுமக்கும் ஆயிரமாயிரம் பேரைப்போல அவளுக்கும் ஒருநாள் ஊர்போகும் கனவுகளே வந்து கொண்டிருந்தது.
காலநதி வேகவேகமாக தன் கரைகளை அரித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இழப்புகளின் துயர் இதயத்தை நிறைத்தாலும் இறந்தகாலத்தில் போயிருந்து அந்த நாட்களோடு அலைதலும் உலகை மறத்தலும் சிறய ஆற்றுதல் தான்.
அவ்வப்போது மனசை அலைக்கும் தருணங்களில் ஏதாவதொரு வகையில் ஏதோவொரு நிறைவில் காலங்கள் பயணித்துக் கொண்டிருந்தது. நீழும் காலவோட்டத்தில் நீண்டு செல்லும் வாழ்வின் நீளமும் மாற்றங்களோடு அவளும் பயணித்துக் கொண்டிருந்தாள்.
000 000 000
நிரந்தர சமாதானம் வந்துவிட்டதாக நம்பிய 2003இல்; நடைமுறையில் இருந்த யுத்த நிறுத்தத்தில் பிறந்தமண்ணை தனது உதிரத்தில் விளைந்த தனது குழந்தைகளுக்குக் காட்டுவதற்காகச் சென்றிருக்கிறாள். அவள் பிறந்து அளைந்து அள்ளித்தின்று விளையாடி மகிழ்ந்த நிலம் மிதிவெடிகள் கவனம் என எச்சரிக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகைகளைத் தாங்கியபடியிருந்தது.
சூனியத்தெருவில் நிற்பது போல அவள் தனது பிறந்த வீட்டின் காணிக்குள் போக முடியாதென்ற எச்சரிக்கைப் பலகையின் ஓரத்தில் நின்றாள்.
அதுதான் அம்மா பிறந்த வீடு எனப் பிள்ளைகளுக்குச் சொன்னாள். அம்மா நீங்க காட்டிலயோ பிறந்த நீங்கள் ? 5வயது மகள் கேட்டாள். ஏனம்மா ? காடாக்கிடக்கு ஒரு வீட்டையும் காணேல்ல ? சொன்ன மகளுக்குச் சொன்னாள்.
அம்மா பிறந்து வளர்ந்து உங்களைப் போல வயசில திரிஞ்ச இடம் ஆமிக்காறங்கள் வந்து அழிச்சிட்டாங்கள் அதாலை காடாகீட்டுது செல்லம்.....! அந்தப் பிஞ்சுக்குழந்தைகளுக்கு அவள் சொன்ன விளக்கங்கள் திருப்தியைக் கொடுக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்கள்.
இனிக்காணும் உதுக்கங்காலை போனா ஆமிக்காறன் வந்திடுவன்....அம்மா அத்தோடு திரும்பச் சொன்னா. அடுத்து 50மீற்றர் போனால் இன்னும் அவள் வாழ்வில் மறக்காத தடயங்களைச் சுமக்கும் வயிரவ கோவில் சிவகாமியம்மன் கோவில்களின் சிதைவுகளைக் காணலாம். ஆனால் அதற்குமேல் போக முடியாதபடி எச்சரிக்கைப்பலகை தடுத்து நிறுத்தியது.
ஆயிரம் வருடங்கள் போனாலென்ன ஐயாயிரம் வருடங்கள் போனாலென்ன கடந்த காலங்களை மீளப்பெறத்துடிக்கும் மலரும் நினைவுகளாக மனசை அலைக்கழிக்கும் நினைவாக எந்த மனித மனத்தாலும் மறுத்து வாழ முடியாதென்பதற்கு அவளே உதாரணமாகினாள்.
பிறந்த வீட்டின் வீதிவரையும் சென்று திரும்பிக் கொண்டிருந்தது கால்கள் அவள் மனசு மட்டும் அந்தத் தெருவில் படர்ந்து கிடந்த முட்செடிகளின் கீழும் மிதிவெடிகளின் கீழும் போய்த் தொலைந்தது.
திரும்பும் போது இலுப்படி வேரைப்பார்த்தாள். அங்கே அவள் வாழ்வில் முதல் பாதிப்பைத் தந்த அண்ணாவென்ற அற்புதம் உயிர்த்துக் கொண்டிருந்தான். அவள் சொல்லை மதித்த அவளுக்கு ஒருகாலத்தின் கைவிளக்காக இருந்த அந்த உயிர் காலம் முழுவதும் விடிவிளக்காக வந்து கொண்டிருந்தது.
காலம் எவ்வளவுதான் தன்னைப் புதிது புதிதாய் பிறப்பித்துக் கொண்டாலும் காலநகர்வில் கைபற்றி வந்து மனசின் அடியில் புதைந்து கிடக்கும் நினைவுகள் ஒவ்வொரு மனித மனத்தையும் ஆயுள் முழுவதும் அலைத்துக் கொண்டிருக்கும் என்பதனை அனுபவிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு காலடியின் கீழும் ஆயிரக்கணக்காக கோடிக்கணக்காக் நினைவுகளால் சுற்றிப் பிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்.
பழைய நினைவுகளை அழித்துப் புதிய காலத்தை மட்டுமே ஞாபகம் கொடுக்கும் பழசையெல்லாம் அழிக்கும் ஒரு அழிகருவி இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்....? என்ற ஆசை அவளையும் விடவில்லை.
போன உயிரையே திரும்ப உயிர்ப்பிக்கும் வசதிகளை விஞ்ஞானம் கொண்டிருக்கும் இக்காலம். நொடிக்குநொடி புதிய புதிய கண்டுபிடிப்புகள் சாதனங்கள் வெளியீடு நிறைந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் மனித மனங்களைத் தின்று தொலைக்கும் நினைவுகளை அழிக்க.... ஒரு அழிறப்பர் கண்டு பிடியுங்கடா விஞ்ஞானியளே உங்களுக்கு காலம் முழுக்க நன்றியுடனிருப்பேன் எனச் சொல்லிக் கொள்கிறாள்.
இத்தோடு இத்தொடர் நிறைவடைகிறது.

No comments:
Post a Comment