Wednesday, November 13, 2013

பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...!

முல்லைத்தீவு வீதிகளில்
நீயும் நானும்
மோட்டார் சயிக்கிளில்
காற்றள்ளும் வேகத்தில்
ஓடிய நாட்கள்.....!

முள்ளியவளை வீதியறிந்த எங்கள்
முன்னைய கால நினைவுகள்
இரவுகளில் நிலவு கரையும் வரை
விழித்திருந்து கதைகள் பேசி
கனவுகள் வளர்த்த இரவுகள்...!

நந்திக்கடற்கரை நிலவொளியில்
நின்றலைந்த நினைவுகள்
அதிகாலை வரையும்
அலுவலெனப் பொய்சொல்லி
அந்தக்கடற்கரைகளில்
நடந்த நாட்கள்....!

சேரன் பாண்டியன்
ஐஸ்கிறீம் இனிப்பும்
இன்னும் நாவில்
உலராத இனிமைகள்
எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள்
இதயத்தில் கனமாக....!

யுத்தப் பொழுதுகளில் உன்னை
உனது குடும்பத்தை
உனது குழந்தைகளை
தேடியலைந்த காலமொன்று
அது முள்ளிவாய்க்கால்
முடிந்த பின்னும்
முற்றாத தேடலாக...!

போராளிக்கணவனையிழந்து
நீயும் போhளியாய் வாழ்ந்த
கடைசிக்கணங்களின் நினைவுகளோடு
இன்னும் உறங்க முடியாது
நீயழுகின்ற துயர்களை
அறிவேனடி பெண்ணே....!

ஆனி 16ல் பிறந்தவுன் குழந்தையைப் போல
அதே ஆனி 16இல் பிறந்த என்னையும்
வருடம் தோறும் நினைவில் கொண்டவளே
ஆனி 16 என்றும் உனக்கு நினைவிருக்குமென்று
கடைசியாய் விடை தந்தவளே
இறுதிக்களத்தில் உன் குழந்தையின் இறப்போடு
எனக்கும் இனிப்பாயில்லையடி ஆனி 16...!

கையுக்குள் பூவைப்போல் உன் குழந்தை
புதைந்திருந்த காலத்தை நினைக்கிறேன்
பெயருக்கு ஏற்பவே ஒருநாள் பெருமை தருவான்
என்ற உனது கனவு பொய்யாகி
5வயதில் அவனை நீயிழந்த கதை
அவன்; மரணத்தை நீயே தனியனாய் சுமந்த கதை
முள்ளிவாய்க்கால் முனையில்
நீயழுத குரல் எட்டவேயில்லையடி நேற்றுவரை....!

நான்காண்டுத்  தேடலின் முடிவில்
கடவுளின் வரமாய் வந்தாய்
முகம் பார்க்காமல் உரையாடக் கிடைத்த
அலைபேசி மட்டுமே அறியும்
உனது கண்ணீரின் பாரத்தை...!

இரவு முழுவதும் உனது அழுகையொலியே
இன்னும் இதயத்தைப் பிழிகிறது
இறந்து போன ஆத்மாக்களின் குரலாக
உனது கண்ணீரும் கடைசிநேர முடிவுகளும்
இன்னும் முள்ளிவாய்க்கால் முனையில்
மிதக்கிறது ஞாபகங்கள்....!

„'தைரியமாயிரு''
உனக்குத் தைரியம் சொல்லிவிட்டுக்
கண்ணீரோடு மௌனிக்கிறேன்.
அந்த வாழ்வு என்று இனி எங்களுக்கு....?
உனது இறுதி ஏக்கம் எனக்குமாக....

மீண்டுமுன்னைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை
நேற்றோடு பின் நிற்கிறது
என் பழைய தோழியாக
உன்னைப் பார்க்க முடியாத நிலையிலான
இன்றைய உனது நிலை
நேரில் காணும் தைரியத்தை
இழந்து போயிருக்கிறேனென்பதை
எப்படிச் சொல்ல...?

நிமிர்ந்த நடை இரட்டைப்பின்னலை
உயர்த்திக் கட்டி வரிச்சீருடையில்
நடந்து வரும் உன் மிடுக்கில்
இருந்தது செருக்கல்ல
பிரபாகரன் என்ற
பெரு நெருப்பின் உருவமடி...!
பொசுங்கிப் போன கனவுகளிலிருந்து
மீண்டும் துளிர்க்கும் துணிச்சலோடு
இன்னும் நீ உறுதியோடிரு....

எரிமலைகள் ஒரு போதும்
உறங்கியதில்லை
அவை ஒருநாள்
பெருநெருப்பாய் விரிந்தெழும்
இது விதியல்ல
இயற்கையின் நியதி.

உனக்காய் உன் போன்றவர்களுக்காய்
உலகின் மனச்சாட்சியை எழுப்புவோம்
இன்றில்லையென்று ஏங்காதே
என்றைக்கோ ஒருநாள் எங்களுக்கான
ஒளிக்கீற்று வெளிக்காது போகாது.

இருளுக்கு ஒளி தந்து
பகலுக்கு வெயில் தந்து
இருளாப் பொழுதுக்காய் விழித்திருந்து
வீழ்ந்தோரின் கனவுக்குப் பொருளுண்டு
காலத்தின் பதிலுண்டு....!
அதுவரை காத்திருப்பாய்.

13.11.2013 (இறுதிவரை களமுனையில் வாழ்ந்து இருக்கிறாளா இல்லையா எனத்தேடிய தோழி திடீரென வந்து சேர்ந்துள்ளாள்.சொல்லுக்குள் அடங்காத் துயரைச் சுமந்த அவள் துயரின் ஒரு துளியின் நினைவோடு)

No comments: