நிறவெறிக்கெதிராய்
நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
காலம் ஆபிரிக்க இருளகல
கைபிடித்தேற்றிய பேரொளி.
இருள் கொன்று ஆபிரிக்கர்
ஓளிகொண்டெழ உதித்த
மூத்தவன் மண்டேலா.
இனவிடுதலையை
உயிராய் கொண்டதால் - நீ
இருபத்தேழு வருடங்கள்
இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
வெளியில் வந்த போது நீயே
உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.
போராடும் தேசங்களின்
வழிகாட்டியாய்
ஒளியூட்டிய இரும்பு.
இறந்து போனாயாம்
இன்றைய செய்திகள்
உன்னையே நினைவில்
உடுத்திக் கொள்கிறது.
தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
உன்னையும் சொல்லியே
உருவாக்கினான் தமிழனை
தமிழீழ விடுதலைப்போரை
வரலாறாக்கினான்.
உனக்கு நிகராய் உனக்கு நேராய்
வாழ்ந்த எங்கள் தலைவனை
உன்னில் காண்கிறோம்
உலகில் வாழ்கிறோம்.
என்றோ நாங்களும்
இவ்வுலகை வெல்லுவோம்.
உண்மையின் குறியீடே
உலகின் ஒப்பிலா வீரனே
இருள் அகற்றிய ஒளியே
போய் வருக
போராடும் பூமியெங்கும்
போராடியவர்கள் யாவரின் சார்பாய்
உனக்கெங்கள் வீரவணக்கம்.
ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
உறங்கினாலும் ஓயாத வேகம்
கல்லறைக்குள்ளிருந்தும்
படைநடத்தும் அவன் வாழ்வு.
நீயும் காலமெல்லாம்
படை(கை) வெல்லும் வீரனாய்
இந்தப் பாருள்ளவரை
படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
போய் வருக மண்டேலா
உலகின் போர் விதியை வென்றவனே
போய் வருக.
06.12.2013
சாந்தி நேசக்கரம்
No comments:
Post a Comment