Friday, July 31, 2009

என் ஞாபகப்பதிவிலிருந்து மீள் நினைவொன்று

)ஏற்கனவே சில வருடங்கள் முன்னர் எழுதப்பட்ட ஞாபகம் இப்போது மீளவும் பதிகிறேன்)


அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள் , ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதிகோவிலடி, குரும்பசிட்டி , கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் ஊரில் வடக்குப்பகுதியும் வெறிச்சோடியது. புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.

அன்று காலையே வசாவிளானிலிருந்து எறிகணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா கடையைத்திறந்தபடியேயிருந்தா. நாங்கள் தட்டுக்குக்கீழ் குந்தியிருந்தோம். எறிகணை ஏவும் சத்தம் சக்கெனமுன்னம் அடுத்த சத்தம் எந்த உயிரையாவது அல்லது ஏதாவது ஒரு வீட்டில் அல்லது எங்காவது ஒரு நிலத்தில் வீழ்ந்து வெடிக்கும். முத்தர்வளவு , காளிகோவிலடியெல்லாம் எறிகணைகள் விழுவதாக அந்தப்பக்கத்து மக்கள் தயிலங்கடவைக்கும் , கொலனி , சுன்னாகம் , இணுவில் , உடுவில் என ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு எறிகணையின் சத்தமும் எம் இதயத்தில் விழுவது போலான தவிப்பும் அச்சமும்.....காலைசாப்பிட்ட பாணைத்தவிர வேறு எதுவும் இல்லை. மதியம் தாண்டி மாலை நேரம் கொஞ்சம் சத்தங்கள் ஓய்வு காணத்தொடங்கியது. வியர்வையில் குளித்து பயத்தில் பிதுங்கிய விழிகளும் கொஞ்சம் சிரிக்க வீதி ஆட்களால் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

இளையதம்பியும் , இளையதம்பியின்ரை மூத்தபெட்டையும் செல் விழுந்து செத்துப்போட்டுதுகளாம்.....!

அந்தச்செய்தி என் செவிகளிலும் வந்து விழுந்தது. புன்னாலைக்கட்டுவன் நாச்சிமார் கோவிலடிக்குச் சற்றுத்தள்ளியிருக்கும் அந்த ஒழுங்கையும் பதுமநிதியும் அவள் அக்காவும் என் கண்ணில் வந்து நின்றார்கள். என்தோழி பதுமநிதியின் வீட்டிலும் இடிவிழுந்து அவள் அக்காவும் , அப்பாவும் செல்லடியில் செத்துப்போனார்கள். பதுமநிதியும் அவள் குடும்பமும் இந்நேரம் செத்தவீடு கொண்டாடிக் கொண்டிருக்கும்.

அந்தச்சாவுச்செய்தியிலிருந்து மீண்டௌ முன்னம் அடுத்தொரு துயர் எங்களைக் காவுகொண்டது. அதுவொரு மதியம் வானவெளியை உலங்கு வானூர்தியொன்று உழுது கொண்டிருந்தது. அழகிய நீலவானம் அந்த வானூர்தியின் இரைச்சலால் அமைதியிழந்து கொண்டிருந்தது. வானையுழுத உலங்குவானூர்தி தான் சுமந்து வந்த துப்பாக்கிகளால் வானைச்சல்லடை போட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே டொம்.....டொம்....என்ற பெருவெடியோசைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. வழமைபோல் அம்மா எங்களை தட்டுக்குக் கீழ் இருத்திவிட்டா. தயிலங்கடவைப்பக்கமாக உலங்குவானூர்தி பதிந்து வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டிருந்தது. வானூர்தி தயிலங்கடவைத் தோட்ட வெளியில் இறங்கிறதோவென்றுகூட எண்ணத்தோன்றயது. அந்தளவுக்கு உலங்குவானூர்தியின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. கடவுளே.....எங்களைக்காப்பாற்று....கடவுளே....கேணியடிவயிரவா.....எங்களைக்காப்பாற்று..... உதடுகளிலிருந்து எழுந்த அந்த வேண்டுதல் பொய்க்காது உயிர்தப்ப வேண்டுமென்ற அந்த நேரத்து அந்தரிப்பு எந்தக்கணங்களாலும் உணரப்படாத தவிப்பு அது.

வான் அமைதியையும் குலைத்து எங்கள் இதயங்களையும் கலங்கவைத்த உலங்குவானூர்தி பலாலி நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. வெறிச்சுக்கிடந்தவீதி உயிர்த்துக்கொண்டது. தயிலங்கடவை நோக்கி ஆட்கள் ஆரவாரித்து ஓடுவது தெரிந்தது. கடைக்கு வந்த முத்தனின் மனைவி சொன்னாள். மனோன்மணியும் பிள்ளையளும் கெலிகுண்டு போட்டுச்செத்துப்போச்சுதாம். ஏன்.....? என்னண்டு.....? கேட்ட அம்மாவுக்கு அவள் சொன்னாள்.

தோட்டவேலைக்குப்போன மனோன் மத்தியானம் பிள்ளையளுக்குச் சாப்பாடு குடுக்க வந்து சமைச்சுக் கொண்டிருந்ததாம் இளையபொடியன் கெலியைக்கண்டவுடனும் உலக்கையைத் தூக்கிக்காட்டினவனாம். அதைக்கண்ட கெலிக்காறன் சுத்தியடிச்சுச் சுட்டுக்குண்டு போட்டிட்டான். தனக்குத் தெரிந்த தகவலை அவள் சொன்னாள்.

மனோன்....! அந்தப்பெயரின் பின்னாலும் அந்தப்பெயருக்குரிய மனோனன்ரியின் இதயஆளத்தின் கீழ் உறைந்திருக்கும் துயரும் வலியும் அழுதவிழியோடு துயர்களையும் துணிந்து சுமந்து தன் பிள்ளைகளையும் இயலாத கணவனையும் தன்தோழிலேற்றி வாழ்ந்த அவரது வாழ்வு. ஈழத்துப்பெண்கள் பலரது வாழ்விலிருந்து ஒருதுளிதான். ஆனால் அந்த வாழ்வுடன் போராடிய மனோனன்ரியின் வேகமும் சுறுசுறுப்பும் என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனோனன்ரியின் கணவர் பரஞ்சோதி. குடிக்கே அடிமையானவர். அந்தக் குடியே அந்தப் பரஞ்சோதிமாமாவின் ஈரலைத்தின்று வயிறும் வீங்கி நோயாளியாகி மனோனன்ரிக்குச் சுமையைக்கொடுத்து இயந்திரமாய் மனோனன்ரியின் சிலமணித்தியால ஓய்வையும் வாங்கிவிட்டது. மனோனன்ரியின் மூத்தவள் நாகேஸ்வரி என்வயது. என்னுடன்தான் குப்பிளான் விக்னேஸ்வராவில் படிக்கிறாள். அம்மாவிடம் கடனுக்குச் சாமான் வாங்கும் மனோனன்ரியில் அம்மாவுக்கு நல்ல விருப்பம். கடன்வாங்கினாலும் சொன்ன திகதிக்குத் தந்துவிடும் நாவு மனோனன்ரியினது. சொல்லில் நாணயம் செயலில் துணிவு என எல்லாம் சேர்ந்த மனோனன்ரியின் குடும்பம் சிதைக்கப்பட்டு மனோனன்ரியும் அவரது இளைய மகனும் செத்துவிட்டார்கள்.

ஐயோ என்ர பிள்ளையள்....என்ர பிள்ளயளைக்காப்பாற்றுங்கோ.....! தன் காயத்தின் வலியையும் மறந்து தன் பிள்ளைகளையே காக்க நினைத்த அந்தத்தாயுள்ளம். ஊர் அவர்களைத் தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு போன வழியில்.....

மனோனன்ரியின் கடைசி மகன் கண்களை மூடி இவ்வுலகிலிருந்து நிரந்தரமாய் பிரிந்து.....

மனோனன்ரியும் மருத்துவமனையில் தன்னுயிர்த்துளியை விடுவித்து விழிமூட....ஒருவீட்டில் இருசாவு....மகள் நாகேஸ்வரி தன் காலொன்றையும் இழந்து.....அம்மாவையும் இழந்து நாகேஸ்வரியும் அவள் தம்பியும்....

உறவுகள் எனச்சொல்ல எத்தனையோ பேர் இருந்தும் மனோனன்ரியும் அவரது கடைசி மகனும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு கிரியைகள் செய்யப்படாது நேரே கொலனிச்சுடலையில் தீயோடு எரிந்து சாம்பராகி.....

6 comments:

Muniappan Pakkangal said...

Eezha penkalil oru thuli-nenju kanakitathu sahothari.

தேவன் மாயம் said...

புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்ததாகச் சொல்லப்படும் சிவகாமியம்மனும் , வயிரவரும் , நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.//

ஜெர்மனி சென்ற பின்னும் உங்கள் ஞாபகங்கள் அப்படியே இருக்கின்றனவே!!

வனம் said...

வணக்கம்

எப்ப உங்கள் பதிவை படித்தாலும் நெஞ்சு கணத்துப்போது.

ம்ம்ம் எனக்கு ஒரு சந்தேகம்

\\வியர்வையில் குளித்து பயத்தில் பிதுங்கிய விழிகளும் கொஞ்சம் சிரிக்க வீதி ஆட்களால் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. \\

அதெப்படி உங்களால் முடிகின்றது செல் விழுந்து சிதைந்த இடத்தில் இருந்து சிரிக்க ?!!!!

எந்த விதமான இடிபாடுகளில் இருந்தும் நம்பிக்கைகளை மீட்டெடுக்கும் பிடிவாதமா......

இராஜராஜன்

சாந்தி நேசக்கரம் said...

முனியப்பன் , தேவா , இராஜன் அனைவரின் பகிர்வுக்கும் நன்றிகள்.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

தேவன் மாயம் said...
ஜெர்மனி சென்ற பின்னும் உங்கள் ஞாபகங்கள் அப்படியே இருக்கின்றனவே!!
######################

எத்தனை யுகங்கள் சென்றாலும் எங்கள் ஞாபகங்கள் மாறாது தேவா. எங்களது கடந்த காலங்களை நினைவில் மட்டும் மீட்டுப்பார்க்கவே முடிகிறது.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

--வனம் said...
அதெப்படி உங்களால் முடிகின்றது செல் விழுந்து சிதைந்த இடத்தில் இருந்து சிரிக்க ?!!!!

எந்த விதமான இடிபாடுகளில் இருந்தும் நம்பிக்கைகளை மீட்டெடுக்கும் பிடிவாதமா......
''''''''''''''''''''''''''''''''''

ராஜன்,
நம்பிக்கைகள் மட்டுமே எம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. சாவும் துயரும் எம்மோடு ஒட்டிப்பிறந்தவை போல உள்ளது.
சாந்தி