Friday, July 17, 2009

எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய்


1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார்.

புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள்.
ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாமாக்களுக்கு அம்மா சாப்பாடு கொடுப்பா. அவர்களது மோட்டார் சயிக்கிள் சத்தம் கேட்டால் அப்பாவும் , அம்மாவும் விழித்துவிடுவார்கள்.

அப்படித்தான் ஒரு இரவு. புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அந்த மாமா இந்தியாவிலிருந்து வந்துவிட்டதாக அப்பாவும் அம்மாவும் கதைத்தார்கள். எனக்கு அந்தமாமாவைப் பார்க்க வேணும்போலிருந்தது. ஏனெண்டா எனக்கு காலிலை முக்கிழுவை குத்தி ஏற்பாக்கியிருக்கேக்கை அந்தமாமாதான் கனநாள் மருந்துகட்டத் தெற்குப் புன்னாலைக்கட்டுவன் ஆசுப்பத்திரிக்குத் தன்ரை சயிக்கிளிலை கூட்டிக் கொண்டு போறவர். மருந்து கட்டேக்கை நான் அழாமல் இருக்க வேணுமெண்டு சொல்லி தெய்வேந்திரம் கடையிலை இனிப்பு வாங்கித்தருவார். பின்சிலகாலம் அவரைக் காணவில்லை. அப்பா ஒருநாள் சொன்னார். பாவம் தாய் அவனை நினைச்சு ஒரே அழுகையா இருக்குது....
ஏன் அந்த அம்மா அழுகிறாவாம் ? எனக்கு விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டேன். ஏனப்பா அவேன்ரை அம்மா அழுகிறா ? அவர் இயக்கத்துக்குப் போட்டார் அதுதான். எந்த இயக்கத்துக்கு ? இது நான். புலிக்குப் போட்டார். அப்பா அடிக்கடி சொல்வார் புலிகள் தான் நல்ல இயக்கமாம். எனக்கு அந்தப்புலிமாமாக்களைப் பார்க்க வேணும்போலிருக்கும். ஒண்டும் பேசாமல் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருப்பன் நான்.

அம்மா இடியப்பமும் அவிச்சு ஆட்டிறைச்சிக்கறியும் வைச்சுப்போட்டு இருந்தவ. அந்த இரவு நானும் நித்திரை முளிச்சு இருந்தனான். அந்த மாமாவைப்பாக்க. ஆனா நித்திரை என்னை விடேல்ல. நீ படுபிள்ளை அவைவர நான் எழுப்பிறனுன்னை....அம்மாவின் சொல்லை நம்பி நான் நல்ல நித்திரை. ஆனா விடிய எழும்பினாப் போலைதான் தெரியும் அவை ராத்திரி வந்து போட்டினமெண்டு. அம்மாவிலை சரியான கோவந்தான் வந்திது. நீங்கென்னை வேணுமெண்டுதான் எழுப்பேல்ல....இல்லைப் பிள்ளை நீ எழும்பமாட்டனெண்டு அழுதனீ அதுதான் விட்டனான். நீங்க பொய் சொல்றீங்க....இல்லை....சரி அடுத்த முறை அவை வரேக்கை கேட்டுப்பார்.....

அப்படி வந்து போன அந்த மாமாக்களில் ஒருமாமாவை யாழ்ப்பாணத்திலை ஆமி சுட்டுப்போட்டுதாம். அதையும் அப்பாதான் வந்து சொன்னார். ஆனால் அந்தமாமாவின்ரை மரணவீட்டுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போகேல்ல அப்பா. சின்னப்பிள்ளையள் அங்கையெல்லாம் போகக்குடாது. அவை ஆவியா என்னட்டை வருவினமாம். ஆனா கோயிலுக்கைதானாம் அவையள் இருப்பினம். அந்த மாமாவை எரித்த பின்னர் அவர்கள் வீட்டுக்கு அப்பாவுடன் போனேன். அந்த மாமாவின் அம்மா அப்பாவுக்கு மாமாவைப்பற்றிச் சொல்லிச் சொல்லியழுதா.

வீட்டை வந்தாப்போலையும் மாமாதான் ஞாபகமாய் இருந்தார். என் நினைவறிந்து நான் நேசித்த முதல் புலிமாமாவை இழந்த மரணமது.

கோவிலில் அவர் இருப்பார் என அப்பா சொன்னதைக் கேட்டு நான் எங்கடை கற்கரைப்பிள்ளையாருக்கு கனநாள் கற்புரமும் கொழுத்தி , பூவும் குடுத்துக் கும்பிட்டனான். அப்பனே பிள்ளையாரே என்னை அந்த மாமாட்டைக் கொண்டு போய்விடு....பிள்ளையாரெங்க கேட்டார்.....அந்தாள் என்ரை கற்பூரத்தையும் , பூவையும் வாங்கினதுதான் மிச்சம். நான் கேட்ட ஒண்டும் தரவுமில்லை , செய்யவுமில்லை. அப்பிடியே அந்தக்கதை போட்டுது....ஆமியின் வருகையும் , அவர்களின் பிடித்துச் செல்லலும் தொடர்கதைகளாக....

(எப்போதோ எழுதியது இப்போது மீள்நினைவாய்....17.07.09)

10 comments:

கண்டும் காணான் said...

வணக்கம் சாந்தி அக்கா , உங்களுக்கு மட்டுமல்ல , ஈழத்தமிழரில் பெரும்பாலோனோருக்கு ஏதோ ஒன்றை இழந்த இந்த நினைவுகள் தான் சுற்றி சுற்றி வருகின்றன.

வனம் said...

வணக்கம்

ம்ம்ம் கதைகள் நிறைய கிடக்கு, உங்களிடம், தூயாவிடம், சந்திரவதனா....... இப்படி நீண்டுகிட்டே போகுது.

ஆனா இக்கதைகள் கதைகேட்கும் விருப்பங்களுடன் கேட்பவை அல்லவே, கண்னிலும் நெஞ்சிலும் இரத்தம் கசிபவை.

தீர்வு நொக்கி செல்வோம் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்து.

இராஜராஜன்

ஹேமா said...

சாந்தி,எங்கட கதைகள் சொல்லச் சொல்ல நிறைய வரும். சொல்லலாம்.ஆனா கேக்கத்தான் யாருமில்லை !

சாந்தி நேசக்கரம் said...

கண்டும் காணான்,வனம் இராஜன்,மற்றும் ஹேமாவுக்கு,

தங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

சாந்தி

குரும்பையூர் மூர்த்தி said...

சாந்தி, ஹேமா : கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட எங்கள் கதைகளை தேடித்தேடி ஆட்கள் கேட்கும் காலம் வரும். வியற்னாம் பற்றி இப்ப எத்தனை படங்கள், கதைகள்?

சாந்தி நேசக்கரம் said...

வியட்நாம் பற்றி படங்கள் பல.ஆனால் வியட்நாமில் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் போன்றவர்களது அவலங்களை எந்தக் காலத்தாலும் கழுவ முடியாதவை. அதுபோல எங்கள் இனம் மீதான அவலமும் அக்கிரமம் புரிந்தவர்கள் மீதான எமது வெறுப்பும் எத்தனை யுகங்கள் ஆனாலும் அழியாது.

கருத்திட்ட மூர்த்திக்கு நன்றிகள்.

சாந்தி

Muniappan Pakkangal said...

Nalla Eezha tamil nadai. Like you Ramesh Santhi,i also remember the LTTE people whom i've treated at Madurai in 1985.Ungal thirunbi paarthal nandraaha irukkirathu.

ஆ.ஞானசேகரன் said...

/// ஹேமா said...

சாந்தி,எங்கட கதைகள் சொல்லச் சொல்ல நிறைய வரும். சொல்லலாம்.ஆனா கேக்கத்தான் யாருமில்லை///

இப்படி எல்லோருடைய கதையும் எதோ தொலைத்த ஒன்னை சொல்லும்..

என்ன செய்வோம் அழுகதன் முடியும்...
தொலைந்த கதை தொலைந்தாகவே இருக்கட்டும் இனி வரும் காலம் நமக்காக இருக்கட்டும்,,,...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சாந்தி நேசக்கரம் said...

முல்லைமண் வலைப்பூவுக்குள் மணியடிச்சுக் கொண்டு வாற மாண்புமிகு மணி அவர்களுக்கு,
(இவருக்கு கனக்க புனைபெயருகள்)

புலிகளால் துரத்தப்பட்ட , ஐரோப்பாவில் வந்து ஒளித்திருந்து புலிகளின் புலனாய்வுத் தலைவன் தானென்று கனவு கண்டு , இணையங்களை இயக்குவோருக்கெல்லாம் சுட்டுத் தள்ளுவேன். 5லட்சம் யூரோக்களுக்கான ஆயுதம் தன்னிடம் உள்ளதாக மெயில் போட்டு வெருட்டிக் கொண்டிருக்கும் மணி துரோகத்துக்கும் நம்பிக்கைக்கும் இப்போதாவது வித்தியாசம் புரியும் என நம்புகிறேன்.

இந்த மொட்டைக்கடிதம் எழுதுவது ஆக்களை மிரட்டிறது எல்லாத்தையும் உங்களுக்கு மிரளும் சாதுக்களுக்கு எழுதுங்கோ.

உம்மையெல்லாம் புலிகள் புலானய்வுப்பொறுப்பில் வைத்துத்தான் புலிகள் அழிந்தார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

அவனவன் போய் சாக பின்னாலை நின்று காட்டிக் குடுத்து புலனாய்வு செய்த உமக்கெல்லாம் புதிய புறநிலையரசில் புலனாய்வுப்பதவி ? புறநிலையரசும் இனி கவிண்டுவிழும்போலதானிருக்கு.