Wednesday, July 22, 2009

எப்போதோ எழுதிய ஞாபகம் 1984 இல் ஒருநாள் 2


1984. அது எங்கள் வீட்டிற்கு முருகன் தம்பிவடிவில் வரப்போகிறான் என்ற கனவு. சன்னிதிக்கும் , மாவிட்டபுரத்துக்கு மனமெங்கும் நேத்தி. மூண்டும் பெட்டைக்குட்டி அடுத்ததாச்சும் பெடியனெண்டா அவனுக்கும் நிம்மதி. அப்பாவிற்கு நிம்மதியாம் அடுத்தது பெடியனானால். ஊரில் கனபேரின் கதை இதுதான்.


பெட்டையள் எண்டதாலை அப்பான்ரை ஆக்களுக்கும் எங்களிலை பெரிசா விருப்பமில்லை. அம்மான்ரை ஆக்கள்தான் எங்களிலை நல்ல விருப்பம். அந்தவருடப் பிள்ளையார் திருவிழாவுக்கு நான் விரதம் பிடிச்சு அடியளித்தேன். பிள்ளையாரே எங்களுக்குத் தம்பி பிறக்க வேணும்.....

அம்மா வயிற்றில் குடியிருந்த எங்கள் தம்பி பூமியைப் பார்க்கப்போகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த ஆடிமாதத்து வெய்யில் தணிந்து இரவு வந்து ஊர் உறங்கிக் கிடந்தது. வயிரவர் கோவில் ஆலடியில் ஊஞ்சலாடிக் களைத்துப்போன எனதும் என்னூர்ச் சின்னவர்களெல்லாம் உறங்கிவிட்ட இரவு அது. பெரியவர்களின் கதைகள் ஓயவில்லை. அம்பியப்பு வீட்டு வானொலியில் பீபீசி செய்தி கேட்பதற்காக அம்மம்மா , குஞ்சி , அம்பியப்பு , யூகே கிழவன் , வயிரவிமாமா , சிவமன்ரி எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

நித்திரையில் கிடந்த என்னை எழுப்பிய அம்மா.....
பிள்ளை போய் அம்மம்மாட்டைச் சொல்லிப்போட்டு வா அம்மாக்கு வயித்துக்கை நோகுதெண்டு....அந்த இருளில் அம்பியப்பு வீட்டுக்கு நடந்து போகப்பயத்தில் ஓம் கணபதே நமக சொல்லிக்கொண்டு ஓடிப்போய்ச் சொல்லிவிட்டு ஓடிவந்தேன். அம்மா நாரியைப்பிடிச்சு அழுது கொண்டிருந்தா...அம்மாவைச் சுத்தி நானும் தங்கைச்சிமாரும்....

இரவு பத்துமணிக்கு மேலாகிவிட்டது. அம்மா வேதனையில் துடித்தா....வவியன்மாமா கேணிடியக்குப் போய் புண்ணியன் சித்தப்பாவைக் கூட்டிவந்தார். புண்ணியன் சித்தப்பா மோட்டச்சயிக்கிளில் வந்து இறங்கினார். அம்மம்மா அவசரமாக அம்மாவை தெல்லிப்பழை ஆசுப்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடுகளை முடித்து....அம்மாவை புண்ணியன் சித்தப்பா மோட்டசயிக்கிளில் ஏற்றிக்கொண்டு முதலியார் வளவு ஒழுங்கைக்கால் போனார். பின்னால் வவியன்மாமாவும் , அப்பாவும் சயிக்கிளில் போனார்கள்.

தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வாசலையடைந்தவர்களைப் பார்த்த காவலாளி சொன்னானாம். நல்லகாலம் தப்பீட்டியள்... இப்பத்தான் 24ட்றக்கிலை ஆமி போறாங்கள். கண்டிருந்தாச் சுட்டுத்தள்ளியிருப்பாங்கள். தங்களைக்காத்த கடவுளுக்கு அம்மாவும் புண்ணியன் சித்தப்பாவும் நன்றி சொல்லிக்கொண்டு ஆசுப்பத்திரிக்குள் போனார்கள்.

கிறேசரடிக்குப் பக்கத்தில் வரும்போதே ஆமியின் வாகனத்தைக் கண்டுவிட்டவர்கள். சயிக்கிள்களை வீதிக்கு அருகில் போட்டுவிட்டு கிறேசர் வளவு மதிலுக்குப் பின்னால் ஒழித்திருந்தார்கள். வவியன்மாமாவுக்கும் , அப்பாவுக்கும் இனித்தாம் தப்புவோம் என்ற நம்பிக்கை இழந்து போயிற்று. சத்தமின்றி இருந்தவர்களுக்கு உயிர்வந்தது போல் 24வது ட்றக் போனதன் பின் அந்தத் தெல்லிப்பழை வீதி அமைதியாகியது. அவசரஅவசரமாக சயிக்கிளில் ஏறிய இருவரும் சைக்கிள் மிதியிலிருந்து காலையெடுத்தது ஆசுப்பத்திரி வாசலில்தான்.

அம்மாவுக்கு கொண்டு போன சாமான்களைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்து அப்பாவும் வவியன்மாமாவும் சொன்ன அந்தச் சம்பவம் கேட்டபோது மனசில் பரவிய நாங்கள் உயிருடன் வாழ்வோமா என்பதே கேள்வியாக்கியது ? அவர்களை ஆமிகண்டிருந்தால் அவர்களின் நிலை என்னவாயிருக்கும்.....! லங்கா பூவத்தின் ஒலிபரப்பில் செய்திதான் வந்திருக்கும் பயங்கரவாதிகள் இருவர் தெல்லிப்பழை வீதியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள்.

அந்தநாட்களில் கட்டுவனிலிருந்து தெல்லிப்பழை ஆசுப்பத்திரி வரையும் போய்வருவதென்றால் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டுதான் பயணங்கள் நடந்தன. ஆறாத்தை வயிரவர் கோவிலடி றோட்டால் ஆமி திடீரென்று புகுந்து கட்டுவனுக்கு வந்தால் காணும் மனிதர்கள் பிணம்தான். யாழ்நகரின் எந்தவீதியும் பயத்தில்தான் இருந்தது என்றாலும் எமக்கு ஆறாத்தை வயிரவர் ஒழுங்கையால் ஊருக்குள் பூரும் ஆமிக்குத்தான் பயம்.

ஒருமாதமாய் எங்கள் தம்பி இன்று பிறப்பான் நாளைபிறப்பான் என நாங்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த அந்தப்பொழுதுகளின் ஒரு விடியல் ஆவணி இருபது எங்கள் காதுகளில் இனித்தது. தம்பி பிறந்துவிட்டான். வீடுவீடாகச் சென்று எங்கள் வீட்டு முருகனின் வரவை நானும் தங்கைச்சிமாரும் சொல்லிக்கொண்டிருந்தோம். தம்பி பிறந்த சந்தோசத்தை அப்பா சாராயம் குடித்துக் கொண்டாடினார்.

மீள்பதிவு - 22.07.09

2 comments:

ஹேமா said...

//பெட்டையள் எண்டதாலை அப்பான்ரை ஆக்களுக்கும் எங்களிலை பெரிசா விருப்பமில்லை. அம்மான்ரை ஆக்கள்தான் எங்களிலை நல்ல விருப்பம்.//

எல்லா வீட்லயும் ஒரே கதைதானோ !

சாந்தி,உங்களுக்கு என்னைவிடப் போராட்ட காலங்களின் அனுபவங்கள் நிறைய.மறக்கமுடியாத நினைவுகள்.

சாந்தி நேசக்கரம் said...

இந்த ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில் நமது சொந்தங்கள் எல்லா இடத்திலும் ஒருமாதிரித்தான் யோசிக்கினம் ஹேமா.
எங்கடை பிள்ளைகளிடம் இதுகளையெல்லாம் தொடரவிடாமல் காப்பதுதான் நாம் இப்போ செய்யக்கூடியது.

சாந்தி