Friday, November 29, 2013

வித்தியாசமான வீரன் கப்டன் ஊரான் அல்லது கௌதமன் அழியாச்சுடர்


ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும்.

2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி.அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ?

இன்பசோதியென்ற பெயரிலுள்ள சோதியின் ஒளிபோல அவனது சாதனைகளும் அவன் இயல்புகளும் ஒளிபொருந்தியவையே. அதிகம் அலட்டாத அமைதியே உருவானவன். வாய் திறந்து பேசினால் கலகலப்பை மட்டுமே தரும் அவனது பேச்சும் சிரிப்பும் எப்போதுமே எல்லோருக்கும் பிடிக்கும்.

வீட்டிலும் உறவுகளாலும் தம்பியென்றும் இமையாளன் என்றும் அழைக்கப்பட்ட இன்பசோதி நகைச்சுவையோடும் நட்போடும் எல்லோரது அன்பையும் பெற்றிருந்தான்.

குடும்பத்தில் செல்லப்பிள்ளையான அவனுக்கு சின்ன வயதில் இறைச்சி , மரக்கறி உணவுகள் பிடிக்காது. அவனது தந்தையார் அடைக்கலம் ஐயா தமிழ் மீதும் தமிழ் மண்மீதும் மிகுந்த பற்றுக்கொண்ட தமிழ்த்தேசியவாதி.

தனது மகனை மரக்கறி , இறைச்சி வகைகளைச் சாப்பிட வைப்பதற்கு அடிக்கடி சொல்லுவார். இவற்றையெல்லாம் நீ சாப்பிட்டால் தான் பலமுடையவனாவாய். உனது தாயகத்திற்காக போராட உனக்குப் பலம் கிடைக்கும். அப்போதுதான் நீ தமிழீழத் தாயகத்திற்காகப் போராட முடியும்.
அவன் சாப்பிட மறுத்த இறைச்சி ,மரக்கறி உணவை அவன் சாப்பிடத் தொடங்கியதே பலமுள்ளவனாகி தமிழீழ தேசத்துக்காகப் போராடுவேன் என்ற வைராக்கியத்தோடுதான் வளர்ந்தான். 

அப்பா சொன்னது போலவே அவன் பலமுள்ளவனாக வளர்ந்து ஒரு நாள் தமிழீழ தாயகத்திற்காகவே தனதுயிரையும் தருவானென்று அன்று யாரும் அறிந்திருக்கவேயில்லை.

வீட்டின் செல்லப்பிள்ளையை ஊரின் மதிப்புக்குரிய பிள்ளையை யாருக்குத்தான் பிடிக்காது. அவன் அப்படித்தான் வாழ்ந்தான் வரலாறாகினான். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணிதமேதையை அவனது குடும்பம் எதிர்பார்த்திருந்தது. அதே கனவோடுதான் யாழ் சென் பற்றிக்ஸ்சின் மாணவனாகினான்.

படிப்பில் திறமையான மாணவனான இன்பசோதி சென் பற்றிக்ஸ் கிறிக்கெற் விளையாட்டு அணியின் சிறப்பு வீரனாகவும் திகழ்ந்தான் என்பதை அந்தப்பாடசாலை தனது வெற்றிக் கிண்ணங்களில் நிச்சயம் நினைவு கொள்ளும்.

இடது கைப்பந்து வீச்சாளனான இன்பசோதியின் வேகப்பந்து வீச்சில் வெற்றியைத் தீர்மானிக்கும் வேகத்தை நடுவர்களே அசந்து போகும் வண்ணம் அவனது பந்துவீச்சும் வேகமும் ஆச்சரியப்படவைக்கும். இன்பசோதி களமிறங்கினால் வெற்றியை அவனது அணியே வென்று செல்லும். அவ்வளவு திறமையான கிறிக்கெட் விளையாட்டுக்காரன்.

வெடியோசைகளும் மரணங்களும் யாழ்மண்ணின் அமைதியைக் கலை(ரை)த்துச் சாவோலம் நிரம்பிய காலமது. சாதரணதரத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்துறையைத் தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்த இன்பசோதியை அவனது அமைதியைக் கொன்றது யுத்தம்.

வாழ்வதற்கான சுதந்திர தேசம் இல்லாத வரை உயர்கல்வி கற்றும் தன்னால் நிம்மதியைப் பெற முடியாதென்ற உண்மையை உணர்ந்தான். துடினமும் அதே நேரம் கண்டிப்பும் மிக்கவனைக் காலம் அழைத்தது களம் நோக்கி.

சென்பற்றிக்ஸ் கல்லூரியிலிருந்து தாயகப்போரில் தங்களை இணைத்து தாயகம் மீட்கவெனப் புறப்பட்ட 30மாணவர்களில் இன்பசோதியும் ஒருவனாக 1991இல் விடுதலைப்புலியாக இணைந்தான். எதிர்காலம் பெறவிருந்த 30 கல்விமான்களை அடக்குமுறையாளர்கள் ஆயுதம் தரிக்கக் காரணமாகினார்கள். ஒவ்வொரு போராளியின் உருவாக்கத்தின் பின்னும் ஓராயிரம் கதைகளும் துயர்களும் இருக்கும். அந்தத் துயர்களும் கதைகளுமே அவர்களை விடுதலைப்போரில் வீச்சோடும் வீரியத்தோடும் வீழும் வரையும் வாழ வைத்தது வரலாறு.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு 3 இன்பசோதியையும் உள்வாங்கியது. இன்பசோதி ஊரான் அல்லது கௌதமன் என்ற பெயரோடு பயிற்சியை நிறைவேற்றி வரிச்சீருடை தரித்த புலியாகினான்.

தோற்றத்தில் கடுமையும் , பார்வையில் கடமையும் அந்தக் கண்ணில் இருந்த கர்வமும் ஒரு சிறந்த இராணுவ வீரனை எங்களுக்குத் தந்தது. ஊரான் என்ற இளம்புலிவீரனை சிறந்த ஆற்றலாளனை கடமையை மட்டுமே கவனத்தில் நிறைத்து ஈழக்கனவை இதயத்தில் சுமந்து திரிந்த எரிமலையை விடுதலைப்புலிகள் அமைப்பின் வேர்களில் ஒருவனாக ஊரானும் இருந்தான் என்றால் அது பெருமையே.

பயிற்சி முடித்து வெளியில் வந்த ஊரான் சண்டைக்களத்திற்கே செல்லும் கனவோடு வந்தான். ஆயினும் அவனது ஆற்றல் மேலும் பல திறமையாளர்களை உருவாக்கும் வல்லமை பொருந்தியது என்பதனை உணர்ந்தவர்களால் 1992இல் தோற்றம் பெற்ற வெளியக பாதுகாப்பணியின் முதலாவது அணியின் சிறப்புப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட முதல் 30பேரில் ஊரானும் இணைக்கப்பட்டான்.

களத்தில் சென்று நேரடிச்சமராடும் போருக்கு நிகராக சவாலாக இருந்த பாதுகாப்பணியின் தேவையும் விரிவாக்கமும் உணரப்பட்ட பொது ஊரான் மிகவும் சாதுரியம் மிக்க போராளியாக பாதுகாப்பணியின் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டான்.

1993 – 1994 காலப்பகுதி விடுதலைப் போராட்ட காலத்தில் சவால்களையும் சதியையும் சந்தித்த காலப்பகுதிகளில் மறக்கப்படாத வடுக்களால் நிறைந்த காலம். அக்காலத்தில் ஊரானின் பங்கும் திறமையும் வெளிப்பட்ட விதம் தலைவராலேயே கௌரவம் பெற்றது.

அக்காலப்பகுதியில் தளபதிகளான சொர்ணம் , பொட்டு அம்மான் போன்றவர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் ஊரான் என்பது அவனது ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த வெற்றிதான். மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக்காலத்தில் ஊரானின் புத்திசாலித்தனமான செயற்பாடு வெற்றிகளை அவதானித்த தலைவர் 1995இல் வெளியகப் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக ஊரானை நியமித்தார்.

ஓவ்வொரு விடுதலைப்புலி வீரனுக்கும் உரிய வித்தியாசமான ஆற்றல்களில் ஊரானின் ஆற்றல் புலனாய்வுத்துறையில் மிகவும் காத்திரமானதாகவும் அவசியமானதாகவும் அமைந்திருந்தது. இயல்பிலே அமைதியான போராளி. அது வீட்டிலிருந்து வரும் போதே கூட வந்த இயல்பு. தோற்றத்தில் கம்பீரமும் பார்வையில் கூட அவனொரு புரியாத புதிர். ஆனால் அவனை நெருங்கி அவனோடு பழகியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஈரநெஞ்சுக்காரன்.

'கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுமுண்டு கரும்புலிகள் விழிகளில் நீர் வழிவதுமுண்டு'' என்பது பாடல் வரியொன்று. ஆனால் ஊரான் என்ற கடுமையான மனிதனுக்குள்ளும் ஈரமும் வீரமும் அந்தக் கண்களில் சுரந்த கருணையும் அவனோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வித்தியாசமான போராளி.

இவனின் நடையை,மோட்டார் சைக்கிள் ஓடும் திறனை ,உடை அழகைப் பார்த்து அவனைப் போல இருக்க ஆசைபட்டவர்கள் பலர். எல்லோரையும் தனது பார்வையால் கட்டிப் போடுகிற ஆளுமையால் வெல்லுகிற வல்லமையைப் பெற்றிருந்த ஒரு இரும்பு அவனென்றால் அது மிகையில்லை.

சிறந்த கிறிக்கெட் வீரனான அவன் மீளவும் கிறிக்கெட் விளையாட விரும்பினான். அவனது ஆசைக்குத் தடையின்றி அவனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிக்கெட் போட்டிக்கு அனுப்பியது. இடது கைப்பந்து வீச்சாளன் இன்பசோதி ஊரானாகி கிறிக்கெட் போட்டியில் பங்கெடுத்து பள்ளிக்காலத்து மாணவனாகி அந்தப்போட்டியில் மீண்டும் வெற்றியைத் தனதாக்கினான்.

அவன் பங்கேற்று விளையாடிய அணியே அந்தப் போட்டியில் வென்றது. வெற்றி பெற்ற நாயகனாக வந்தான். அப்போது யாழ் மண்ணில் வெளியாகிய பத்திரிகைகளை ஊரான் நிறைத்திருந்தான். அவனது வெற்றிச் செய்தியைப் பிரசுரித்த பத்திரிகைகள் பெருமையடைந்தன. அந்தப் புலியின் விளையாட்டு வீரத்தை யாழ் மண்ணெங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன பத்திரிகைகள்.
கிறிக்கெட் மட்டுமன்றி சதுரங்க விளையாட்டிலும் சாதனை படைத்தவன். போராளிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகளின் வெற்றி நாயகனாகவும் வலம் வந்தான்.

தான் பொறுப்பு வகித்த துறையில் பணியாற்றிய போராளிகள் விடுமுறையில் வீடுகளுக்குச் செல்லும் போது அவர்களைத் தானே வீடுகளுக்குக் கொண்டு போய் விடுவது வளமை. ஒவ்வொரு போராளியுடனும் சென்று அவனது வீட்டு நிலமைகளை அவதானித்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வைப்பதிலும் தனது கவனத்தைச் செலுத்தி சக போராளிகளிடத்தில் நீங்கா அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொண்ட போராளி.

எத்தனையோ சிறந்த போர்வீரர்களை உருவாக்கி சிறந்த புலனாய்வாளர்களை உருவாக்கி படையணிகளுக்குப் பணிக்கு அனுப்பிய ஊரானின் மனவுறுதியை அந்த இரும்பு நெஞ்சை உறைய வைத்து உருக வைத்த சம்பவம் அவனைக் களம் போகத் தூண்டுகோலானது.

சென்பற்றிக்ஸ்சிலிருந்து போராளிகளாக வந்த அவனது நண்பர்களில் அவனது ஆத்ம நண்பனான உதயச்சந்திரன் அல்லது கண்ணாடியின் வீரச்சாவு அவனையும் களம் சென்று எதிரியை வீழ்த்த வேண்டுமென்ற ஓர்மத்தை விதைத்தது.

1995ல் திருகோணமலை பன்குளம் இராணுவ மினிமுகாம் மீதான தாக்குதலில் களமாடி தனது இன்னுயிரை ஈகம் தந்து வீரச்சாவடைந்த மேஜர் உதயச்சந்திரனின் மரணம் ஊரானை உறங்க விடாமல் அலைத்தது. தன்னிடம் வழங்கப்பட்டிருந்த வெளியகப்பாதுகாப்பணியின் பொறுப்பை விட்டு சண்டைக்குச் செல்லப் போவதாக மேலிடத்திற்கு தொல்லைகொடுத்துக் கொண்டிருந்து ஒருநாள் தனது ஆசையை நிறைவேற்றும் அனுமதியையும் பெற்றுக் கொண்டான்.

பாதுகாப்பணியின் பொறுப்பு ரட்ணம் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டு ஊரான் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் அணியில் இணைக்கப்பட்டான்.
யாழ்மண் புலிகளிடமிருந்து அரசபடைகளிடம் போனதோடு புலிகளின் பலமெல்லாம் போய்விட்டதென சந்திரிகா அரசும் ராணுவத் தளபதி ரத்வத்தையும் புலம்பித் திரிந்த காலமது. 

முல்லைத்தீவில் முகாமிட்டு கடல் பாதைக்கும் பெரும் சவாலாக இருந்த முல்லைத்தீவு முகாமின் அழிவில் புலிகளின் வீரம் மீண்டுமொருமுறை உணர்த்தப்பட வேண்டிய காலத்தை சந்திரிகா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.தமிழர்களும் போராட்டம் மீது சற்று அவநம்பிக்கையில் யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என மனச்சோர்வடைந்த காலமது.

முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பயிற்சிகள் பூனகரி படைத்தளத்தையண்டிய பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பயிற்சிகளில் இணைந்திருந்த போராளிகளால் கூட அந்தப் பயிற்சியானது எந்த முகாமுக்கான தாக்குதலாக அமையப்போகிறதென்பது தெரியாமல் கடும் பயிற்சி ஆரம்பித்திருந்தது. அந்தப் பயிற்சிகளில் ஊரானும் இணைந்து முல்லைத்தீவு மீட்புச் சமருக்கு தயாராகினான்.

தொடர் பயிற்சி உறக்கம் மறந்து உண்ண மறந்து மண்ணை மீட்கும் போருக்கான பயிற்சியில் கலகலப்பும் காலத்தின் கட்டளையை ஒவ்வொரு போராளியும் நெஞ்சில் தாங்கியபடி பொறுமையோடும் கவனத்தோடும் பயிற்சியில் நின்றார்கள். கடுமையான பயிற்சி இலகுவான சண்டைக்கான சிறப்பு. ஒவ்வொரு போராளியின் கடுமையான பயிற்சியும் பெருமைமிகு வெற்றியைப் படைக்கும் பேராயுதமாகியிருந்தது.

ஓயாத அலைகள் 1 முல்லைத்தீவை மீட்கும் முனைப்போடு அதிகாலை இருளோடு அணிகள் நகர்த்தப்பட்டது. வெற்றி பெற்ற மிதப்பில் கனவோடிருந்த சந்திரிகா அரசு திகைத்துப் போனது. புலிகளால் முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் மூர்க்கமான தாக்குதலில் முல்லைத்தீவு படைமுகாமிலிருந்த படைகள் வழங்கல் , விநியோகம் , தொடர்புகள் யாவும் அறுபட்டு செய்வதறியாது திகைத்துப் போனார்கள்.

தாக்குதல் ஆரம்பித்த அரைமணிநேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல திருகோணமலையிலிருந்து டோறா விசைப்படகுகள் முல்லைத்தீவு நோக்கி விரைந்தன. கடலில் வந்த பகைவனைக் கடற்புலிகள் மறித்துச் சமரில் ஈடுபட்டனர். கடற்சமருக்கு நிகராக தரையிலும் புலிகளணி தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

கடலில் விநியோகத்திற்கென வந்த ரணவிரு என்ற போர்க்கப்பல் கடற்கரும்புலிகளால் அழித்தொழிக்கப்பட்டது. வான்வழியாய் படையினரை தரையிறக்க முயன்று வான் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கந்தக வாசனையால் முல்லைமண் நிரம்பியது.

முல்லைத்தீவில் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளான படைகளைக் காக்கவும் படைத்தளத்தைக் காப்பாற்றவும் அரசபடைகளால் அவசரமாகத் தரையிறக்கமொன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் தளத்திற்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ள அளம்பில் கடல் வழியால் பெருமெடுப்பிலான தரையிறக்கத்தை மேற்கொண்டது இலங்கை அரசபடைகள்.

அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத் தரையிறக்கத்திற்கு திரிவிட பகர எனப்பெயர் சூட்டப்பட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெட்டைவெளியும் எவ்வித காப்பு வசதிகளும் இல்லாத அளம்பில் பகுதியில் சண்டையணிகளை இறக்கி சமரை நடாத்தினர் புலிகள்.

இப்பகுதியில் சமரிட்ட புலிகளின் படையணிகளுடன் தளபதி கேணல்.ராஜேஸ் தலைமையில் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்கு கொண்டது. தளபதி.கேணல்.ராஜேஸ் 2009ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆனந்தபுரம் சமரில் வீரகாவியமானார்.

தளபதி கேணல் ராஜேஸ் அவர்களது பொறுப்பிலான ஒரு பிளாட்டுனுக்கான அணிப்பொறுப்பாளனாக ஊரானும் ஊரானின் அணியும் தாக்குதலில் இறங்கியது. அளம்பில் பகுதியில் முழுமையான வலுவையும் பிரயோகித்தது அரசு. அளம்பிலில் மறிப்புச்சமரை மேற்கொண்ட புலிவீரர்களின் சமரையும் வெல்ல முடியாது தோற்றது படைகள்.

புலிகளின் அகோர தாக்குதலில் இலங்கையரச படைகள் அடைய நினைத்த வெற்றியும் அவர்களது கனவும் சிதைந்து போக இறுதியில் புலிகள் வென்றார்கள். முல்லைத்தீவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இராணுவ முகாமும் இராணுவப்படைகளும் அழிக்கப்பட்டு 3நாட்களில் முல்லைத்தீவு முகாம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்து முல்லைத்தீவு மண் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது.

புலிகளின் வரலாற்றில் முதல் முதலாக இருபெரும் ஆட்லறிகளையும் பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றி முல்லைச்சமர் முடிந்தது. அந்த வெற்றிக்கு வித்தாக 400வரையிலான போராளிகள் தங்கள் இன்னுயிர்களை விதைத்து விழிமூடிப்போயினர்.

அந்த 400 வரையானவர்களில் ஒரு வீரனாக கப்டன் எனும் பதவிநிலையோடு ஊரான் அல்லது கௌதமனும் விழிமூடி மாவீரனாய் சந்தனப்பேழையில் நீட்டி நிமிர்ந்து உறங்கிப் போனான்.

சமருக்குச் செல்கின்ற வீரர்கள் யாவரும் சாகப்போவதில்லை. அவர்கள் சாதிக்கவே களம் போகிறார்கள். அதுபோலவே எங்கள் கௌதமனும் சாதனை புரிந்து வருவானென்றுதான் தளபதிகள் போராளிகள் காத்திருந்தனர். ஆனால் அவனோ யாரும் எதிர்பார்க்காத வகையில் சாதனையை முடித்த திருப்தியில் முல்லைத்தீவு மண்ணின் மூச்சோடு நிறைந்து போனான்.

தான் வீரச்சாவடைகிற போது தனது வித்துடல் தன் ஆத்ம நண்பன் மேஜர் உதயச்சந்திரன் அல்லது கண்ணாடி விதைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட வேண்டுமென்று விரும்பியது போலவே கனகபுரம் துயிலிடத்தில் நிரந்தரமாய் துயின்றான்.
 விழிகள் கரைய உருகியுருகி (முல்லைத்தீவு வெற்றிக்காய் வீழ்ந்தவர்கள் நினைவுப்பாடல்

ஊரானை இழந்த போது புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஒரு சிறந்த புலனாய்வாளனை சாதனையாளனை இழந்து போனோமெனத் துயர் கலந்த அவனது இழப்பின் கனதியை நினைவு கூர்ந்தார். அது போல தளபதி சொர்ணம் அவர்களும் ஊரானின் இழப்பை மிகுந்த துயரோடுதான் ஏற்றுக் கொண்டார்.

இன்னொரு காலம் பெற்றிருக்க வேண்டிய பெறுமதி மிக்க போர்த்தளபதியை இழந்து போனது போலவே போராளிகளும் தளபதிகளும் ஊரானின் இழப்பை நினைவு கொண்டார்கள். அதிகம் அலட்டாத ஆனால் ஊரான் இருந்தால் கலகலப்பிற்கு குறைவில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியுமே நிறையும் நாட்களை நண்பர்கள் துயரத்தோடு கடந்து உறுதியோடு நிமிர்ந்தார்கள்.

கனகபுரம் துயிலுமில்லம் வருடாவருடம் ஊரானுக்காகவும் விளக்கெரித்து தன்மடியில் அவனைத் துயிலவைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்தது. 

கல்லறைகளில் விளக்கேற்றி அவர்கள் கனவுகளை நனவாக்கும் உறுதியோடு வருடம் தோறும் போராளிகள் உறுதியெடுத்துக் கொண்டார்கள். அவன் சென்ற வழி வெல்லும் வழி என்றோ ஒருநாள் விடியுமென்ற நம்பிக்கையோடு அவனது நினைவுகளைச் சுமந்தபடி அவனது தோழர்கள் அவனோடு களமாடியவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

இறைச்சி வேண்டாம் மரக்கறி வேண்டாமென்று அடம்பிடித்த குழந்தை ஒருநாள் உறுதியோடு தனது தாயகத்திற்கான பணி முடித்துப் பாதியில் போய்விடுவானென்று அறியாத அவனது அம்மா , அப்பா, அக்காக்கள் , உறவினர்கள் ,நண்பர்கள் நினைவுகளில் இன்பசோதி கப்டன் ஊரானாக , கௌதமனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தேசம் மீட்கப்போனவர்களின் நினைவோடு எங்கள் ஊரானும் என்றென்றும் எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருப்பான் வரலாறாக....!

29.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 நிலமும் வானும் கடலும்நேற்று அழுதது அந்த நிலவும் இரவு வானில் அழுதது

Monday, November 25, 2013

வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி

வீரத்திருவே
எங்கள் வேரின் தணலே
விடியாத வாழ்வுக்கு
வெளிச்சம் தந்த
ஈகப்பெரு நதியே....

அகவை ஐம்பத்து ஒன்பது காணும்
அணையாச் சுடரே
அன்பின் உருவே
அலையாய் கரையாய்
நிலவாய் நீராய் நெருப்பாய்
நீயே எங்களின் நிச்சயம்....

ஏன்றென்றும் எங்களின்
வழிகாட்டி ஒளிகாட்டி
வுரலாற்றின் திசைகாட்டி
எல்லாம் நீயே
எங்களின் தலைவனே....

பெருமைமிகு தோழனே
பெறுதற்கரிய பெருமையே
தலைநிமிரும் வீரத்தையும்
ஈகத்தையும்
தந்த பேரூற்றே....

தளபதியே எங்களின் தந்தையே
எல்லாமுமான வல்லமையே
நீ பிறந்த பின்னாலே
நாங்கள் வீரம் பெற்றோம்
விடுதலையின் சுவையறிந்தோம்...

நீயில்லாமலெங்களுக்கு
நிமிர்வில்லை நண்பனே
நீயே எங்களின்
வல்லமைச் சூரியனாய்
வழிகாட்டும் பேரொளி
வாழ்த்துகிறோமுன்னை.

26.11.2013

சாவை வென்ற தளபதி லெப்.கேணல்.விமலன்/அன்பழகன்

லெப்.கேணல் அன்பழகன் (பலாலி – கைலாயபிள்ளை ஜெயகாந்தன்)

விவசாயமும் கடல் வளமும் மிக்க அழகான நிலம் பலாலி. இராணுவ கேந்திர மையமாக அறியப்பட்ட பலாலியென்ற கிராமத்தை உலகில் அறியாதவர்களே இருக்க முடியாது. இந்தப் பலாலி இராணுவ முகாமானது இலங்கையின் பிரதான முகாம்களில் ஒன்றாகவும் இலங்கை இராணுவத்தின் யாழ் மாவட்டத்துக்கான வழங்கலுக்கான பிரதான தளமாகவும் அமைந்தது. யாழ் கோட்டை முகாம் புலிகளால் முடக்கப்பட்ட நேரத்தில் கோட்டை இராணுவத்திற்கான உணவு முதல் அனைத்து வழங்கலுக்கும் பலாலியே தளமாகியிருந்தது.

எத்தனை வசதிகளை வளத்தை பலாலியில் இருந்த படைகள் கொண்டிருந்தாலும் புலிகளின் உறுதியின் முன்னால் எல்லாமே தூசாகிப்போனது தான் விடுதலைப்புலிகளின் வெற்றியின் ஆதாரம்.

ஈழ விடுதலைப் போராட்ட வளர்ச்சியின் ஆரம்பம் முதல் பலாலி மண்ணுக்கும் போராட்ட வீரர்களுக்கும் இடையிலான உறவும் தொடர்ந்து கொண்டேயிருப்பதற்கான சாட்சியமாக பலாலி மண்ணும் தனது புதல்வர்களை விடுதலைக்காய் விலையாய் தந்து எத்தைனையோ இழப்புகளின் வலிகளையும் விலைகளையும் கொடுத்திருக்கிறது.

1986களிலிருந்து இடப்பெயர்வும் இழப்புகளும் இந்த மண்ணுக்குப் பழகிப் போனதாயினும் இந்த மண்ணின் வீரர்களின் தடங்களில் எழுதப்பட்ட வீர வரலாறுகளை காலம் ஒரு நாள் இந்த உலகத்திற்குச் சொல்லியே தீரும் நாளை இன்றே எழுதிக் கொள்வோம்.

ஒவ்வொரு குழந்தையும் பூமியில் பிறக்கின்ற போது சாதனைக்குரிய இயல்புகளோடும் சாதனையாளருக்குரிய பண்புகளோடுமே பிறக்கின்றது. ஆனால் காலமே ஒவ்வொரு குழந்தையின் கனவுகளை வெல்லச் செய்யும் திறனையும் கொண்டிருக்கிறது.

எல்லாத் திறன்களையும் ஒருங்கே கொண்ட ஒரு குழந்தையாக தனது ஊரின் இழப்பை சிறுவயது முதல் பார்த்து அதனது பாதிப்புகளோடு வளர்ந்த ஜெயகாந்தன் என்ற சிறுவனையும் இந்தப் பலாலி மண்ணே பெற்றெடுத்தது.

இவன் பிறந்த போது யாருமே கனவில் கூட நினைத்திருக்கமாட்டாத சாதனையாளனாக வாழ்ந்து முடிந்த வரலாற்றை இவன் எழுதிச் செல்வானென்று கூட யாரும் அறிந்திருக்கவில்லை. போரின் ஆரம்பம் வடக்கில் ஆரம்பிக்கிற போது முதலில் இடம்பெயரும் ஊர் பலாலியும் பலாலியை அண்டிய பிரதேசங்களுமே முதலாவதாக இடம்பெயரத் தொடங்கும்.

இப்படித்தான் ஜெயகாந்தன் குடும்பமும் இடம்பெயர்ந்து போனது. ஊரைப்பிரிகிற துயரை அனுபவிக்கிற உலகில் நாடற்றுப் போயிருக்கும் மில்லியன் கணக்கான மனிதர்களின் துயருக்கு நிகராக அதையும் விட மேலாக துயரத்தை அனுபவித்த ஈழத்தமிழர்களின் வலியை பலாலி மண்ணும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துயர் இன்றுவரையும் மாறாமல் அப்படியே....!

அண்ணாக்கள் இருவரோடும் அக்கா , தம்பி , தங்கையென குடும்பத்தின் மகிழ்சிக்கு குறையில்லாத குடும்பத்தில் 18.08.1972அன்று கைலாயபிள்ளை தம்பதிகளுக்கு மகனாய் வந்து பிறந்தான் ஜெயகாந்தன்.

தனது ஆரம்பக்கல்வியை பலாலியிலும் பின்னர் 5ம் வகுப்பிலிருந்து வசாவிளான் மத்திய மகாவித்தியாலய மாணவனாகி கல்வியைத் தவிர கனவுகள் ஏதுமில்லாத மாணவனின் கல்வியில் தடை வீழ்ந்தது 1989ம் ஆண்டில் தான்.

அப்போது இந்திய இராணுவ காலம். தேசிய இராணுவம் என்ற பெயரில் அப்போது சிறுவயதுப் பிள்ளைகளை EPRLF என்ற மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த இயக்கம் யாழ்மாவட்டத்திலும் இதர பகுதிகளிலும் பிள்ளைபிடியில் இறங்கியிருந்தது.

வீடுகளில் பயமும் அடுத்த வினாடி எந்த வீட்டின் பிள்ளை வதைக்கப்பட்டுப் பிடித்துச் செல்லப்படுவான் என்ற ஏக்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தரமான காலமாகியிருந்தது. திறமையான மாணவனாக கல்வி கற்றுக் கொண்டிருந்த ஜெயகாந்தனையும் EPRLF இயக்கத்தின் பிள்ளைபிடி விட்டு வைக்கவில்லை.

எதிர்காலம் கனவு கண்ட ஒரு சிறந்த கல்விமானை EPRLF பிள்ளைபிடி சிதைத்துப் போட்டது. தனது பாடசாலைக் காலத்தை நிறுத்தி ஊரூராய் ஒளித்துத் திரியத் தொடங்கி இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறி EPRLF தொலைந்து போன போதிலும் அந்தக்காலம் அனுபவித்த அவலத்தை அவனது மனசிலிருந்து யாராலும் அழித்துப் போட முடியவில்லை.

வருடக்கணக்கான அலைவு படிப்பு பாதியில் பறிக்கப்பட்டதோடு சோர்ந்து ஒதுங்காமல் 1993 வரையிலும் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக்கல்லூரியில் மின்னியல் கல்வியைத் தொடந்து கொண்டிருந்தான். நாடே போராடிக் கொண்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்மண். ஆயினும் முழுமையாக மீட்கப்பட வேண்டிய சுதந்திர தமிழீழக் கனவோடு ஒருநாள் எங்கள் ஜெயகாந்தனும் புலியாகினான்.

இம்ரான் பாண்டியன் படையணியின் பயிற்சி முகாமான சரத்பாபு7 ஜெயகாந்தனையும் வரவேற்றது. அன்பழகன் என்ற இயக்கப் பெயரைப் பெற்று பயிற்சியைத் தொடங்கினான். மிகவும் உயரமான தோற்றம் பலவேளைகளில் பயிற்சியில் சிரமங்களைக் கொடுத்த போதும் தன்னை வருத்தி தனது இலட்சியத்தில் உறுதியோடு பயிற்சியை முடித்துக் கொண்டு தனது முதல் கள அனுபவத்தை 11.11.1993அன்று பூனகரி தவளைப்பாச்சல் தாக்குதலில் பெற்றுக் கொண்டான்.

விளையும் பயிரை முளையில் தெரியுமென்றது தமிழ்ப்; பழமொழியொன்று. பழமொழிக்கே புதுமொழி வகுத்த வீரனாக முதல் கள அனுபவமே அன்பழகனை ஒரு சிறந்த போர் வீரனாக அடையாளம் காட்டியது. முதல் களம் முடிந்து வந்த அன்பழகன் இம்ராம் பாண்டியன் வெளிப் பாதுகாப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

பாதுகாப்பணிப் பிரிவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தனது கடமைகளை கவனத்தோடும் நேர்மையோடும் செய்து கொண்டிருந்ததோடு மட்டுமன்றி சக போராளிகளோடு இனிமையாகவும் பொறுப்புணர்வோடும் அதேநேரம் எல்லோரையும் நேசிக்கும் பண்போடும் தன்னை வெளிக்காட்டிய வீரன்.

எல்லா விடயங்களிலும் நிதானமும் பணியின் தேவை காத்திரம் யாவையும் புரிந்து தேவைக்கேற்ப தனது ஆற்றலை வழங்கி அன்பழகன் இயங்கிய காலமும் பணிகளும் காலத்தால் அழியாதவை.

திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் விடுதலைப்புலிகள் அமைப்பில் அன்பழகனும் முன்னுரிமையைப் பெற்ற போராளியாகவே இருந்தார். அதற்கு நல்லுதாரணமாக 2000ம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டு வரையும் வெளியகப்பாதுகாப்புப் பணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். தலைவரின் வெளியகப் பாதுகாப்பணியில் தனது கடமைகளை கவனமாகச் செய்து கொண்டிருந்தார்.

2002இல் திருமணம் நடைபெற்றது. குடும்ப வாழ்வும் போராட்ட வாழ்வும் எப்போதும் புலிகளின் வரலாற்றில் வேறு வேறாக இருந்ததில்லை. அன்பழகனின் குடும்ப வாழ்வும் போராட்டத்திற்கான பலமாகவே இருந்தது.

குடும்பத்தோடு செலவிடும் நேரத்தைவிட கடமைக்காய் நாட்கணக்காக , வாரக்கணக்காக , மாதக்கணக்காக இரவுபகல் பராது உறங்காது உழைத்த போராளி. மிகவும் நெருக்கடி மிக்க காலங்களிலெல்லாம் தனது அயராத பணியால் உயர்ந்து விடுதலைப் போராளியென்பவன் எப்படி வாழ வேண்டுமென்ற உதாரணமாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப்புலிகளின் மரபை மீறாத சத்தியனாக வாழ்ந்த கடமை வீரன்.

தலைவரின் நம்பிக்கையை அன்பை மதிப்பைப் பெற்றவர்களுள் அன்பழகனும் ஒருவர். 2005 ஆரம்பத்தில் நிதிப்புலனாய்வுக்குத் தலைவரால் நியமிக்கப்பட்டார். வழங்கப்பட்ட கடமையை மதித்தும் கவனத்தோடு பொறுப்போடும் தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு நடைமுறை அரசை நிறுவி ஒரு சிறந்த நாடு எப்படி அமைய வேண்டும் எப்படி அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் வரையப்பட வேண்டும் நடைமுறையில் இருக்க வேண்டும் இராணுவ அரசியல் கட்டமைப்புகள் மக்கள் மயப்படுத்தப்பட்ட சுதந்திரமான அரசொன்றிற்கான அனைத்துத் தகுதிகளையும் உலகிற்குச் சொல்லிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அபரிமித வளர்ச்சியின் வெளிப்பாடு உலகையே உறுத்திக் கொண்டிருந்தது.

தனது காலில் வீழாத எந்த விடுதலைப் போராட்ட அமைப்பையோ அல்லது சிறுபான்மையினத்தையோ உலகின் பெரியவீட்டுக்கார அரசியல் விட்டு வைத்ததில்லை. அங்கங்கே விடுதலையடைந்த ,விடுதலை வேண்டிப் போராடும் தேசங்களிலெல்லாம் ஏதோ ஒரு வகையிலான தலையீட்டைச் செய்து தலையிடியைக் கொடுத்து தனது காலில் வீழ வைத்த வரலாற்றை விடுதலைப்புலிகளுக்கும் எழுதிவிட சமாதானம் என்ற பெயரில் உலகம் கட்டுப் போட்டது.

மெல்ல மெல்ல உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்து ஈழவிடுதலைப்போரை அழிக்கத் தொடங்கி 2008 இன் இறுதிக்காலங்கள் வன்னி நிலத்தின் வளமும் வல்லமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது மட்டுமன்றி தினமும் மரணமும் தொடர் இராணுவ நகர்வும் யுத்தகாண்டமாக மாறியது வன்னிக்களம்.

பணியாதோரை வஞ்சத்தால் பணிய வைத்தல் அல்லது இல்லாதொழித்தல் இவ்விரண்டில் ஒன்றை இலங்கையரசிற்குத் துணையாகி உலகம் புலிகள் மீதும் தமிழர் நிலம் மீதும் கடும் போர் தொடுத்தது.

தமிழரின் வீரத்தையும் தமிழரின் நிலத்தையும் அழிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கில் நடாத்தப்பட்ட போரில் புலிகளின் மனவுறுதி மட்டுமே அன்றைய நாட்களில் என்றும் போல இறுக்கமாகவே இருந்தது. அந்த உறுதியே இறுவரையும் கலை(ரை)யாதிருந்தது.

2009 தொடக்கம் அன்பழகன் தானாகவே சண்டைக்களத்திற்கு போனார். தேவிபுரத்தில் சண்டையில் காயமடைந்தும் களத்தைவிட்டு விலகாது காயத்திற்குக் கூட மருந்திடவோ மாற்றுச் சிகிச்சை செய்யவோ இயலாத அந்த இறுக்கம் மிகுந்த காலத்தில் அன்பழகன் களத்தைவிட்டு விலகவேயில்லை.

போராளியாக இணைந்த போது எத்தனை வேகமும் வீரமும் இருந்ததோ அதே வீரத்தோடு களமாடி 2வது முறையும் காயமடைந்து அதுவும் சரியாக ஆறாத நிலமையில் 3ம் முறை உடல் முழுவமும் காயமடைந்தும் கடைசி வரை களத்திலே நின்று சாவெனென்ற உறுதியோடு களமாடிய புலிவீரன்.

2009 மேமாதம். வாழ்வெனிலும் போராடுவோம் சாவெனிலும் சமராடுவோமென்ற உறுதியோடு குண்டுமழைக்குள்ளும் தலை நிமிர்த்த முடியாத எறிகணை வீச்சுக்குள்ளும் உறுதி குலையாத இறுதி வரையும் போராடுவோமென்ற புலிகளின் உறுதியோடு களத்தில் நின்ற அன்பழகன் 05.05.2009 அன்று தான் நேசித்த மண்ணுக்கான கடமையை நிறைத்த நிறைவில் உயிரைக் கொடுத்து உறங்கிப் போனார்.

அந்த மாவீரன் கண்ட கனவை தன்வழி நின்றோர் நிறைவேற்றுவார்களென்ற நம்பிக்கையோடு சண்டையில் சமர்க்கள வீரனாக உயிர் மூச்சை நிறுத்திக் கொண்ட அன்பழகனின் கனவுகள் அந்த முல்லை மண்ணில் வியாபித்துப் பரந்தது.

முள்ளிவாய்க்கால் முடிவைக் காணாமல் தனது இலட்சியப்பாதையில் உறுதியோடு பயணித்து உயிரைத் தந்து இன்று எங்கள் முன்னால் மாவீரனாகி வரலாறாகிவிட்ட லெப்.கேணல் அன்பழகனுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகிற சம நேரத்தில் அன்பழகனதும் அன்பழகன் போன்ற ஆயிரமாயிரம் வேங்கைகளதும் கனவுகள் நனவாக ஒவ்வொருவரும் பயணிப்போம் பணிசெய்வோம்....!

அன்பழகன் கனவு பலாலிக் கிராமத்தின் கடலலைகளோடும் கரைந்து நிறைந்து ஈழதேசமெங்கும் உலவும் காற்றாய் உலகத் தமிழர் வாழும் நாடெங்கும் வேங்கை மாவீரரின் கனவுகள் சுமந்து விடுதலை வேண்டி நகர்கிறது....!

காரியம் பெரிது தோழா
http://thesakkaatu.com/uploads/2013/03/09-Track-913.mp3
22.11.2013
நினைவுப்பகிர்வு – - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Wednesday, November 20, 2013

வெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை.

விடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும்.

இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை.

Thesakaatru
1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்த ஜெயதீபன் ஒரு சாதாரண குழந்தையாகவே பிறந்தான். சாதாரணமானவர்களின் பிறவியே பெரும் சரித்திரங்களை உருவாக்கிவிட்டுச் செல்லும் சக்தி கொண்டவையென்பதற்குச் சாட்சியமாய் ஜெயதீபனின் வரலாறும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத பெயர்களில் ஒன்று.

அம்மா ஆசிரியை அப்பா வங்கி ஊழியர் வீட்டில் அண்ணாவுக்கும் தங்கைக்கும் நடுவில் வந்து அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியின் பிறப்பாய் பிறந்த பிள்ளை படிப்பில் ஒரு சாதனையாளனுக்குரிய ஆற்றலோடு தான் ஊரில் ஆரம்பக்கல்வியை முடித்து யாழ் இந்துக்கல்லூரியின் மாணவனாகினான்.

70களில் பிறந்த எல்லாப்பிள்ளைகள் போலவும் போரின் காயங்களையும் போராயுதங்களில் ஒலிகளையும் கேட்டுக் கொண்டே உலவிய ஜெயதீபனை காலத்தின் தேவை புலிவீரனாக்கியது. தனது 16வது வயதில் 1990களின் இறுதியில் சொல்லாமல் கொள்ளாமல் போராளியாகிய மாணவன் ஜெயதீபனை சரத்பாபு 2 பயிற்சி முகாம் வரவேற்றுக் கொண்டது.

றட்ணம் என்ற பெயர் சூட்டப்பட்டு ஆரம்பப்பயிற்சியை முடித்துக் கொண்டு களமாடும் வீரனாகவே ஆனையிறவுச் சமரில் பங்கெடுத்தார். வெட்டைவெளியும் மணல்தரையும் , வெளிகளையே அதிகமாய் கொண்ட ஆனையிறவின் உப்பள வெளியில் கனவுகளோடு கரைந்தவர்கள் நினைவோடு களமாடிக் கொண்டிருந்தனர் புலிவீரர்கள்.

ஆனையிறவை நோக்கிய பல்முனை இராணுவ முன்னேற்றத்தில் இயக்கச்சிப் பகுதியில் நடந்த சமரில் றட்ணம் விழுப்புண்ணடைந்தார். களம் காணுதல் காயமடைதல் மீள களமடைதல் என்பது விடுதலைப்புலிகளுக்கே உரித்தான இயல்போடு றட்ணம் தனது காயம் ஆறி மீண்ட போது அவரது ஆற்றலின் மீதான நம்பிக்கையும் திறமையும் அவரைப் பிரதான பயிற்சியாசிரியனாக்கியது.

சரத்பாபு 04 தொடக்கம் சரத்பாபு 09 வரையுமான பயிற்சியணிகளின் சிறப்புப் பயிற்சியாசிரியனாகி பலபோராளிகளை போர் வீரர்களாக உருவாக்கி றட்ணம் என்ற பெயரோடு மாஸ்ரர் என்ற அடைமொழியும் சேர்ந்து றட்ணம் மாஸ்ரராகினார்.

விடுதலைப் பயணத்தில் ஒன்றாக இணைந்த போராளிகள் ஒவ்வொருவரும் தேசத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அந்தப் போராளிகளின் இயல்புகள் கூட வேறுபட்டவை. ஆனால் எல்லா வகையான குணவியல்புகளைக் கொண்டிருந்த போராளிகளையெல்லாம் அவரவருக்கு ஏற்ப அவர்களோடு தானும் ஒருவராகி எல்லாப் போராளிகளையும் அரவணைக்கும் பண்பானது றட்ணம் மாஸ்ரரை போராளிகளிடத்தில் மேலுயர்த்தி வைத்தது.

ஏற்கனவே தலையில் காயமடைந்து மருத்துவம் பெற்றிருந்தும் அதிக வெயில் அல்லது வேலைப்பழு கூடினால் இரத்த வாந்தியெடுத்து முடிந்ததும் பழையபடி இயல்பாகிவிடும் கடமை வீரனை போராளிகளே வியந்து பார்த்தது வரலாறு.

பயிற்சியில் போராளிகளோடு ஓடிக்கொண்டு வரும் மனிதன் திடீரென எங்காவது ஓரிடத்தில் நின்றுவிடுவார்.

ஓடிக்கொண்டு வந்தவர் எங்கே காணவில்லையென போராளிகள் தேடுகிற போது மீளவும் வரிசையில் இணைந்து ஓடி வருவார். தனது வலிகளையும் தாங்கிக் கொண்டு போராளிகளோடு இணைந்திருக்கும் அற்புதமான அதிசயமான போராளி.

இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளக வெளியக கட்டமைப்புகளுக்கான பயிற்சிகளை சரத்பாபு பயிற்சி முகாமிலிருந்தே உருவாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தப் பயிற்சிகளை வழங்கி இம்ரான் பாண்டியன் படையணிக்கான வலுவை வழங்கியதில் றட்ணம் மாஸ்ரரின் பங்கும் திறமையும் அளப்பரியது.

இவரது திறமையை அவதானித்து ஆளுமையை அறிந்து கொண்ட தளபதி சொர்ணம் அவர்களால் மாஸ்ரர் தலைவரின் வெளிப்பாதுகாப்பு அணியில் நியமிக்கப்பட்டார். 95இறுதிப்பகுதியில் வெளிப்பாதுகாப்பு அணியிலிருந்து விசேட கொமாண்டோவாகத் தெரிவாகி ஆறு மாதங்கள் நடைபெற்ற விசேட கொமாண்டோ சிறப்புப்பயிற்சியில் பங்கெடுத்தார்.

இப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பணியின் பொறுப்பாளராயிருந்த கப்டன் கௌதமன் (ஊரான்) முல்லைத்தீவு சமரில் பங்கெடுக்க தானாகவே விரும்பிப் போயிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக றட்ணம் மாஸ்ரர் தளபதி கடாபி அவர்களால் நியமிப்பட்டார்.

முல்லைச்சமரில் வெற்றிகளைப் பெற்றுத் திரும்பிய வீரர்களோடு எங்கள் வீரர்கள் பலர் திரும்பி வராமல் அந்த வெற்றியின் வேர்களாக களத்தில் வீழ்ந்தார்கள். வெற்றின் விழுதாக வீரச்சாவடைந்த வெற்றி நாயகர்கள் வரிசையில் கப்டன் கௌதமன் (ஊரான்) வீரச்சாவடைந்தார்.

தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் பொறுப்பில் உயர்ந்த மாஸ்ரர் தனது வாழ்விலும் மிகவும் எளிமையாகவே இறுதிவரை வாழ்ந்த பெருமைக்குரியவராகினார். இயக்கத்தின் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்ட கடமைகளை சரியான முறையிலும் தவறாமலும் செய்து முடித்துக் கொள்ளும் கடமையுணர்வை முதன்மையாகக் கொண்டவர்.

பொதுவாக போராளிகளுக்கு வெளியில் பொதுமக்களின் வீடுகளுடன் தொடர்புகளும் பழக்கமும் இருக்கும். அவர்களுக்கான உணவு முதல் பலரது அன்பை நிச்சயம் ஒவ்வொரு போராளியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக கடைசி வரை வாழ்ந்த போராளியென்று குறிப்பிட்டால் அது றட்ணம் மாஸ்ரராகவே இருக்கும்.

சக போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுக்காக மட்டுமே வெளியில் வீடுகளுக்குச் சென்றிருந்ததைத் தவிர தனக்காக வெளியில் எவ்வித உறவுகளையும் வைத்துக் கொள்ளாத வளர்த்துக் கொள்ளாத முற்றிலும் நாட்டையும் தலைவரையும் சக போராளிகளையுமே உலகாகக் கொண்டு வாழ்ந்தார்.

அன்பைக் கொடுத்த தம்பியாகவும் அண்ணாவாகவும் வீட்டின் செல்லப்பிள்ளை ஜெயதீபன் .அண்ணா தங்கை மீது மிகவும் அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்த போதும் தங்கை மீது அதிகம் அன்புடைய அண்ணனாகவே வாழ்ந்தார். எனினும் தனக்கு கிடைத்த விடுமுறை நாட்களைக் கூட தனது பாசத்துக்கினிய தங்கையோடு அல்லது குடும்பத்தினரோடு கழித்ததில்லை.

94ம் ஆண்டில் கிடைத்த விடுமுறையில் 2நாட்கள் மட்டுமே குடும்பத்தினரோடு தங்கிவிட்டு நீண்ட விடுமுறையை அனுபவிக்காமல் முகாம் திரும்பியிருந்தார். அந்த விடுமுறையின் பின்னர் சமாதான காலத்தில் குடும்பத்தார் வந்து சந்தித்தது தவிர வீட்டாருடனான தொடர்பு என்பது வேறெந்த வகையிலும் இருக்கவில்லை. வீட்டாருடனான தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளவில்லை. தனக்காக காத்திருக்கும் பணிகளையே என்றும் மனதில் கொண்டு ஓயாது இயங்கிய எரிமலை.

வெளியில் எங்கு சென்றாலும் தனது பணிகளை முடித்து அது எத்தனை மணியானாலும் தனது முகாமிற்கு வந்த பின்னரே தனக்கான சாப்பாட்டைத் தேடுவார். வெளியில் எங்கும் கடைகளிலோ அல்லது வேறெந்த இடங்களிலோ ஒரு போதும் சாப்பிட்டது வரலாறில்லை. முகாமிற்குத் திரும்புகிற போது சிலவேளைகளில் உணவு இல்லாது போயிருக்கும். ஆனால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கிவிடும் இயல்பு கொண்ட போராளி.

தனது போராட்ட வாழ்வுக் காலத்தில் தனக்காக எதையுமே ஆசைப்பட்டதோ அனுபவித்ததோ இல்லையெனும் அளவு மிகவும் எளிமையாக வாழ்ந்து முடித்த பெருமைக்குரிய வீரன். தனக்கான உடைகள் கூட இயக்கம் கொடுக்கும் வரையும் காத்திருந்து பெற்று அணிவதையே வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டிருந்தார்.

ஒரு தளபதியாக உயர்ந்த பின்பும் ஆடைகளிலிருந்து தனக்கான எதையும் மேலதிகமாகப் பெற்றதில்லை. வழங்கல் பகுதியிலிருந்து வரும் உடுப்புகளைத் தவிர வெளியிலிருந்து ஒரு போதும் உடைகள் பெற்றதுமில்லை அணிந்ததுமில்லை. மறுமுறையும் வழங்கலில் இருந்து உடுப்புகள் வரும் வரையும் முதல் முறை கிடைத்த உடுப்பையே தொடர்ந்து அணிவார்.

தளபதி சொர்ணம் கூட பலமுறை கடிந்திருக்கிறார். ஒரு தளபதியாக உயர்ந்துள்ளாய் அதற்கேற்ப மாறிக் கொள்ளென. ஆனால் தனது எளிமையான வாழ்விலிருந்து ஒருதுளியும் மாறாமல் எல்லாவற்றிற்கும் சிரிப்பாலே பதில் சொல்லி மௌனமாகி தனது கடமைகளில் கவனமாக இருக்கும் காரியக்காரன்.

இயக்கத்தின் மீதான தனது நேசத்தை என்றென்றும் தனது பணிகள் மூலமே வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீரத்தளபதி. தானொரு பொறுப்பாளர் தளபதியென்ற நிலையில் என்றும் சக போராளிகளுடன் பழகியதில்லை. ஒவ்வொரு போராளியின் இயல்புக்கும் ஏற்றவாறு அவர்களாகவே தான் மாறியிருந்து சகலத்தையும் சரி சமானமாகப் பகிர்ந்து அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வார். எளிமையும் இனிமையும் கடமையும் மட்டுமே றட்ணம் மாஸ்ரர் என்ற போராளியின் அடையாளமாகியது.

1999 ஆரம்ப காலத்தில் இம்ரான் பாண்டியன் படையணியில் சிறப்பாகச் செயற்பட்டமையின் அடிப்படையில் தலைவரின் பணிப்பின் பேரில் தளபதி கடாபி அவர்களால் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக மேலுயர்த்தப்பட்டார். 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் தலைவரால் இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2002 வரையிலும் புதிய பழைய போராளிகளை வைத்தே தனது பணிகளைத் திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்து கொண்டிருந்தார்.

2002காலத்தில் மீண்டும் தலைவரின் வெளி பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமனம் பெற்று உறங்காது இரவு பகலென்ற வேறுபாடு காணாத உறங்காத சூரியனாக வெளியில் வராத வெளியில் தெரியாத வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.

பின்னர் 2003 இறுதிப்பகுதியில் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புத்தளபதியாக உயர்வடைந்தது தொடக்கம் 2008 தளபதி சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடையும் வரையும் சிறப்புத்தளபதியாக இருந்து கடமையைக் கவனித்த பெருமைக்குரிய மனிதர்.

2004கருணா பிரிவின் காலம். மிகவும் இறுக்கமான சூழல். எனினும் தனது சிறப்பான வழிநடத்தலால் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்த தளபதி. தலைவருக்கு எவ்வித இடைஞ்சலோ தடைகளோ வரக்கூடாதென்ற உறுதியில் தடைகள் நீக்கிய தடைநீக்கியாய் தலைவரை பாதுகாத்த தளபதியாய் தலைவரின் பிள்ளைகளின் கல்வியில் தடைகள் வராவண்ணம் பணியாற்றி உறங்காத விழியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த நெருப்பு.

காலம் மறைத்து வைத்திருந்த பேரொளியாகவே வாழ்ந்திருந்த தளபதி.
05.01.2008 அன்று எங்கள் தேசத்தின் பெறுமதி மிக்க தளபதிகளில் ஒருவரான தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைகிறார்.

புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக இயங்கிக் கொண்டிருந்த கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவு பேரிழப்பாகியது. புலனாய்வுத்துறையின் ஆளுமைகளில் ஒருவராகவும் பல வெற்றிகளின் வேராகவும் இருந்த இயங்கிய தளபதி சாள்ஸ் அவர்களின் வீரச்சாவின் பின்னர் அவரது பொறுப்பை றட்ணம் மாஸ்ரரே ஏற்றுக் கொள்கிறார்.

2007இல் உலகிற்கு ஆச்சரியத்தையும் இலங்கையரசிற்கும் அழிவையும் கொடுத்த அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையின் வெற்றியின் வேராக மூலமாக அந்தத் தாக்குதலின் ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைத்து எல்லாளன் நடவடிக்கையின் ஆதாரமாக இருந்த வெற்றியின் பெருமைகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்கென்பது முக்கியமானது.

எப்போதும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி திறமையானவர்களை வளர்த்துவிடுவதில் றட்ணம் மாஸ்ரருக்கு நிகர் அவரேதான். வயது தோற்றம் எதையும் பார்த்து திறனை எடைபோடாமல் ஒவ்வொரு போராளிக்குள்ளும் உள்ள ஆற்றலை அறிந்து அவர்களை அவர்களது ஆற்றலுக்கு ஏற்ப வழிகாட்டியாகி றட்ணம் மாஸ்ரரால் உயர்த்தப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரே எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான இளங்கோவும் அடங்குகிறார்.

இராணுவப் புலனாய்வு காலத்தில் எடுக்கப்பட்ட தரவொன்றை அடிப்படையாக வைத்தே எல்லாளன் நடவடிக்கையைத் திட்டமிட்டு நெறிப்படுத்தி அத்தாக்குதலை வெற்றிபெற வைத்தார் மாஸ்ரர். எத்தனையோ மௌனமாக நடந்து முடிந்த சமர்கள் வெற்றிகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்களிப்பும் முழுமையான உழைப்பும் இருந்ததை காலம் ஒரு பொழுதும் வெளியில் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவரது தாயகம் மீதான நேசிப்பின் முன்னால் காலம் கூட மௌனமாகவே கௌரவப்படுத்தி வைத்திருந்தது.

தலைவரின் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியதிலிருந்து தலைவரின் அனைத்து விடயங்களையும் இவரே கவனித்து காப்பாற்றி தலைவரின் நிழலாக ஒளியாக நெருப்பாக இயங்கிய காலத்தை இயற்கையே அறியும்.

தலைவரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற தளபதிகளில் இவரும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.தலைவரின் பணிகளில் பாதிக்குமேல் கண்காணிப்பு நெறிப்படுத்தல் திட்டமிடல் என எல்லாத்தளங்களிலும் இவரது பங்கு மிகவும் காத்திரமானது. தலைவரின் அனைத்து விடயங்களையும் தானே கவனித்து செயற்படுத்துவதற்கான தலைவரின் சிறப்பான அனுமதியையும் பெற்று அனைத்துத் தளபதிகள் போராளிகளின் அனுமதியோடும் தலைவருக்குத் தேவையான சகலத்தையும் கவனித்த பெறுமதி மிக்க போராளி.

பல போராளிகளுக்கு எழுத்தறிவித்த ஆசானாக கல்வியில் முன்னேற்றமடையக் காரணமாக தனது ஆற்றலுக்கும் மேலாக ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் நேசித்தார். எதையும் முடியாது அல்லது இயலாது என ஒதுங்கியதே இவரது வரலாற்றில் இல்லையெனலாம்.
இதயத்தில் நெருப்பின் இருப்பு கண்ணில் கடமையின் கவனமும் எல்லாவற்றையும் தனது பார்வையாலேயே கணிப்பிட்டு திறனறியும் ஆற்றல் பெற்றவர்களில் இவரும் அடங்குகிறார்.

எல்லாமே எங்களால் முடியுமெனத் துணிந்து எல்லாவற்றிற்கும் வெற்றியைக் காட்டிய வெற்றியைத் தந்த அமைதியான தளபதியாக எளிமையோடும் எல்லோராலும் நேசிக்கப்பட்ட எல்லோரையும் நேசித்த தளபதி.

உலக விடுதலை வரலாறுகளுக்கெல்லாம் உதாரணமாயும் ஆதர்சமாயும் இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் வீரம் மிக்க தளபதிகள் வெற்றி கொள்ளப்பட முடியாத பலத்தையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினை சதியால் மட்டுமே வெல்ல முடியுமென்று உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்தது.

அந்த இறுதிக் கால நாட்களில் கூட தளபதிகள் தொடக்கம் போராளிகள் வரை றட்ணம் மாஸ்ரரையே தேடுவார்கள். படையணிகள் தங்களது செயற்திட்டங்கள் திட்டமிடல்கள் தொடக்கம் அனைத்துத் திசையிலும் ரட்ணம் மாஸ்ரரின் ஆளுமையும் இரண்டறக்கலந்திருந்தது.

ஆயுதங்களை விட மனவலிமையால் 30வருடகால போராட்டத்தை நடாத்திய உலகிற்கே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலத்தையும் கொள்ளையிடும் வஞ்சத்தோடு வன்னிமண் மீது அனைத்துலகமும் ஒன்றிணைந்து போர் தொடுத்தது.

கிழக்கில் மாவிலாற்றில் தொடங்கி பிறகு மன்னாரை உலக வல்லரச பலம் தின்று கொண்டு நகர்ந்து செல்லத் தொடங்கியது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் வரையிலும் வஞ்சம் எங்களது வரலாற்றையும் வீரத்தையும் கொன்று முடித்துக் கொண்டு போனது.

வெளியில் வராத சூரியனாய் வெளிச்சம் காணாத ஆனால் வேருக்கு நீராய் வெற்றிகளின் வேராய் வாழ்ந்து மடிந்து போன மாவீரர்கள் வரிசையில் மே18 நந்திக்கடல் முனையில் முடிந்து ஆனாலும் முற்றுப்பெறாத கனவுகளோடு மீண்டும் துளிர்க்கும் விடுதலை வீச்சோடு றட்ணம் மாஸ்ரர் என்ற சமுத்திரமும் ஓயாது அடித்துக் கொண்டிருந்த அலைகளின் மௌனத்தோடு ஓய்ந்து போனது.

பருவக்காற்றின் அலைவு ஆழக்கடல் அலைகளை ஒருபோதும் அள்ளிக் கொண்டு தொலைந்து விடுவதில்லை. அதுபோலவே றட்ணம் மாஸ்ரரும் ஒரு பெரும் ஆழக்கடல். அந்தக்கடலின் அமைதியான அலைகளின் அழகை மட்டுமே உலகறியும் ஆனால் எங்கள் றட்ணம் மாஸ்ரரை உலகம் கூட அறிந்ததில்லை. ஏன் ஊர்கூட அதிகம் அறிந்ததில்லை. காலக்கடல் தனது கதைகளை எழுதிக் கொண்டு நகர்கிறது றட்ணம் மாஸ்ரரின் ஆழுமையை இன்றும் காலம் கௌரவித்தபடியே நகர்கிறது.

கண்ணீரஞ்சலியென்றுங்கள் புனிதம் மிகுந்த தடங்கள் மீது நாங்கள் காயங்களைத் தரமாட்டோம். தலைநிமிரும் தமிழ் வீரத்தின் குறியீடாய் எங்களின் இனிய தளபதியாய் இறுதிவரை வாழ்ந்த உங்களுக்கு வீரமுடன்  வீரவணக்கத்தையே தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊழிப்பெருந்தீயாய் எங்கள் தளபதியே நீ ஒருநாள் காலப்பெருவெளியில் மட்டுமல்ல இந்த ஞாலப்பெரு விதியின் போராயுத ஆய்வாய் , அறிவாய் அறிவியலாய் நீளக்கிடக்கும் காலவிதியின் பதிவாய் எங்கள் தாயகத்தின் கடைசிக் காற்றின் மூச்சுள்ள வரை வாழ்ந்து கொண்டேயிருப்பாய்….

எங்கள் வரலாற்றின் பொக்கிசமாய் உலகின் கடைசி இராணுவ வல்லமையின் வடிவாய் எங்களோடும் எங்கள் கனவுகளோடும்; பார்த்திபனாய் படைநடத்திய அருச்சுனனாய் றட்ணம் மாஸ்ரராய் என்றென்றும் விடுதலையின் கதைகளாய் வீரமாய் வாழ்ந்து கொண்டே எங்களோடு…வெளியில் வராத சூரியனாய் காலத்தின் கதையோடு பயணித்தபடி வருவாய்….!

 வெஞ்சமர் கொல்லாத புலியானவன் இன்று வஞ்சகம் வென்றதே  பலியாகிறேன்.
20.11.2013
நினைவுப்பகிர்வு –- சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

 காலத்தின் மாற்றம் அறியாத உள்ளங்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கும் காலமிது. தாயகத்துக்காக என்றும் ஓயாமல் இயங்கிய  ஓர் வீரனின் வரலாறு  போய்விடக்கூடாது எனும் ஆதங்கத்தின் இந்த வீரன் பற்றிய படைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, November 15, 2013

புன்னாலைக்கட்டுவன் பெற்ற புலிவீரன் மேஜர் தமிழரசன் (டொச்சன்)

(இயற்பெயர் -  கந்தசாமி.ஜெயக்குமார்)
வீரப்பிறப்பு- 21.06.1966 – வீரச்சாவு – 24.11.1992
Mejar Tamilarasan
வடக்குப்புன்னாலைக்கட்டுவன் 80களில் விடுதலைப்புலிகளை ஆதரித்த ஊர்களில் ஒன்று. இங்கு பல ஆரம்பகால விடுதலைப்புலிகளின் வரலாறும் பலரது வரலாற்றின் வேர்களும் பரவியிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் வந்து தங்கி வாழ்ந்து அவரைப் பாதுகாத்த ஊர்களில் வடக்குப்புன்னாலைக்கட்டுவனும் ஒன்று. தலைவருடன் வாழ்ந்த போராளிகளில் ஒருவர் தலைவர் நன்றியுடன் ஞாபகம் கொள்ளும் ஒருவர் பற்றி ஒருமுறை உரையாடிய போது சொன்னவை :

புன்னாலைக்கட்டுவனில் தலைவரை பாதுகாத்த குடும்பங்களில் ஒன்று சுவிஸ்  குலம் (குலம்மாமா) அவர்களது. 80களில் இராணுவ கெடுபிடிகளின் அலைச்சலும் அச்சுறுத்தலும் நிறைந்த காலப்பகுதியில் குலம்மாமா தனது வீட்டில் தலைவரை காத்து கவனித்தது பற்றி தலைவர் அடிக்கடி நினைவு கூருவாராம்.

வசதிகள் குறைந்த தனது வீட்டில் தனது 3 தங்கைகளையும் வீட்டின் வெளியே இராணுவ நடமாட்டத்தை அவதானிக்க விட்டு தலைவரை வீட்டினுள் நித்திரை கொள்ள இடம் கொடுத்து தலைவனைக் காக்க தான் உறங்காமல் குலம்மாமா விழித்திருப்பாராம். அவரைப் போல அவரது தங்கைகளும் தலைவரைக் கண்ணாகக் கவனித்துப் பாதுகாத்து அனுப்புவதாக கூறுவாராம்.

தனது ஆரம்பகால வாழ்வு பற்றி தலைவரின் நினைவுகளில் அடிக்கடி நினைவு கொள்ளப்படும் மனிதராக குலம்மாமா இருந்தார். தலைவரால் நினைவு கொள்ளப்படும் உயர்ந்தவர்களுள் தலைவரின் மதிப்பையும் அன்பையும் பெற்றிருந்த குலம்மாமா பிறந்ததும் இதே புன்னாலைக்கட்டுவன்தான்.

80களில் அவ்ரோ விமானம் மீதான குண்டுவெடிப்புத் தாக்குதலின் சந்தேகத்தின் பெயரால் அரச படைகளால் கைது செய்யப்பட்டு குலம்மாமா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு சிறந்த முன்னுதாரணமான போராளியும் கூட. இயக்கம் நாடு இவ்விரண்டையும் தன்வாழ்வாக வாழ்ந்து இன்று கடனாளியாக ஆனாலும் தேசத்தின் இழப்பின் முன்னால் தனது இழப்பொன்றும் பெரிதில்லையென வாழும் அற்புதமனிதன்.

இவரைப் பற்றி இவரது ஆரம்பம் இயக்கம் விசுவாசம் நேர்மை பற்றி அறியாதவர்கள் சிலர் சிலகாலங்கள் முதல் துரோகிப்பட்டம் வழங்கியது இங்கு நினiவுகூரத்தக்கது. எவர் எத்தகைய விமர்சனத்தை குலம்மாமா மீது கொண்டிருந்தாலும் இன்றும் தான்நேசித்த தலைவனை , தேசத்தை இதயபூர்வமாக நேசித்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கும் குலம் என்ற மனிதனை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து யாராலும் விலக்கிவிட முடியாது.

இந்த ஊரில் குறிப்பிடத்தக்க போராளிகளில் முதல் வீரச்சாவடைந்த போராளி லெப்.குவிசாசன். 85 காலமென நினைவு. யாழ் நகரப்பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலொன்றில் வீரச்சாவடைந்த மாவீரர். இவரது குடும்பமும் முழுமையாகத் தங்களை ஈழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தியாகங்களைப் புரிந்த குடும்பங்களில் ஒன்று.

லெப்.குவிவாசன் மாமாவின் அம்மா புனிதமன்ரி. எங்கள் தலைவனின் குழந்தைகளான துவாரகா , சாள்ஸ் இருவரையும் குழந்தைகளாய் இருந்த காலத்தில் பராமரித்து வளர்த்தது எல்லோராலும் வீரத்தாய் என 80களில் மதிக்கப்பட்ட புனிதமன்ரி என்பதனை வரலாறு ஒரு போதும் மறந்துவிடாது.

இவர்கள் வரிசையில் புன்னாலைக்கட்டுவனில் இருந்து போராளிகளாக புறப்பட்ட பலரில் வீரச்சாவடைந்தவர்கள் வரிசையில் கப்டன் லோலோ (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு)  , கப்டன் றங்கன் (இந்திய இராணுவகாலத்தில் வீரச்சாவு) வரிசையில் 1992இல் வீரச்சாவடைந்து தனது இலட்சியத்தில் உறுதியோடு பயணித் மாவீரர் மேஜர் டொச்சண்ணாவும் ஒருவர்.

குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்த டொச்சரண்ணாவின் இயற்பெயர் ஜெயக்குமார். ஊரில் ஜெயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட இளைஞன். புன்னாலைக்கட்டுவன் தொடக்கம் குப்பிளான் , ஏழாலை , குரும்பசிட்டி , வசாவிளான், பலாலி என அயல் ஊர்களெங்கும் அறியப்பட்ட ஜெயாண்ணா இராணுத்தின் கெடுபிடிகள் அதிகரித்த காலங்களில் அந்தக் கொடுமைகளைத் தானும் அனுபவித்தான்.

ஊரைச் சுற்றிவளைக்கும் இராணுவத்தினரால் ஊரிலிருந்து இழுத்துச் செல்லப்படும் இளைஞர்களின் துயரில் அலையும் அம்மாக்களின் கண்ணீரின் கனதியும் பள்ளிமாணவனாக இருந்த ஜெயாண்ணாவையும் போராட்டம் பற்றிச் சிந்திக்க வைத்தது.

எல்லாக் கொடுமைகளுக்குமான தீர்வு தானும் விடுதலைப் போராட்டத்தில் இணைவதே தீர்வென்றெண்ணித் தன்னையும் விடுதலைப்புலிகளுடன் இணைத்து தனது பிரதேசத்துக்கே ஆயுதம் தரித்துத் திரும்பி வந்தார்.
86களில் இராணுவத்தினர் முழுமையாக முகாம்களில் அடக்கப்பட்ட காலம். அப்போது பலாலி முகாமிலிருந்த இராணுவத்தினர் வசாவிளான் நோக்கி முன்னேற முயன்ற காலம்.

திடீரென காணாமற்போன ஜெயாண்ணா போராளியாக ஊரில் வந்திறங்கினார். இரவுகளில் வசாவிளான் பகுதியில் சென்றியிருக்கும் போராளிகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க கேணியடியில் அமைந்த எங்கள் கடைக்கு வந்து போவார். அப்பாவோடு அதிக நெருக்கத்தைக் கொண்ட போராளிகளில் டொச்சண்ணாவும் ஒருவர்.

டொச்சண்ணாவுக்கு அப்பாவின் பிரத்தியேக கவனிப்பு எப்போதுமே காத்திருக்கும். எங்களோடு அடிபட்டு எங்கள் வீட்டிலும் ஒருவனாக வந்து போன போராளி. அம்மா இல்லாத பிள்ளையென்றதால் அதிகம் அன்பை எங்களிடத்திலும் பெற்றுக் கொண்டார். பதின்ம வயதுகளில் தனது வீட்டிற்காகவும் தன்னை வளர்த்த அம்மம்மாவுக்காகவும் உழைத்த பொறுப்புள்ள பிள்ளை.

விவரிக்க முடியாத துயரையும் வெளியில் தெரிவிக்க முடியாத இழப்பின் கனத்தையும் இதயத்தில் சுமந்து திரிந்த தென்றல் அது. மெல்லிய உயர்ந்த உருவமான டொச்சண்ணா அன்றைய காலத்து நினைவுகளில் எப்போதுமே சிரித்தபடி சயிக்கிளில் வந்திறங்கும் இனிமையான போராளி.

நாய்க்குட்டியென டொச்சண்ணாவை சொல்வார்கள். நாய்க்குட்டியென்ற அடைமொழி ஏன் அவரது பெயருக்குப் பின்னால் வந்ததெனத் தெரியாத வயது அது. கோபம் வந்தால் நாய்க்குட்டியென்று சொல்லிச் சினத்தாலும் சிரிப்போடு ஏற்றுக் கொண்டு போய்விடும் மனிதன்.

ஒருமுறை நாய்க்குட்டியென்ற பெயருக்கான காரணத்தை அந்த வீரனின் தோழன் ஒருவனிடமிருந்து அறிந்த போது அந்த இனிமையான போராளி மீதான மதிப்பு மேலுயர்ந்தது.

வீதியில் கண்டெடுத்த நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து அந்த நாய்க்குட்டியைத் தன்னோடு கொண்டு திரிந்து அன்பைப் பொழிந்த இளைஞனின் கருணையை காலம் ஒரு போதும் தனது நன்றியால் நினைவு வைத்திருக்கும்.

பலாலியிலிருந்த இராணுவத்தினரால் ஏவப்படும் எறிகணைகள் புன்னாலைக்கட்டுவன் குப்பிளான் ஏழாலையென நீண்டது. உலங்குவானூர்தியின் தாக்குதல் தொடர் மரணத்தின் கொடிய கையால் பலரது உயிர்கள் இடுங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வாசவிளான் மத்தியமகா வித்தியாலயம் மாணவர்களின் நடமாட்டம் கலகலப்பு எதுவுமின்றி அனாதையானது. டொச்சண்ணாவையும் சிறந்த மாணவனாக உருவாக்கியதும் அதே பாடசாலைதான்.

இரவிரவாக தொடர் தாக்குதல். வெடிச்சத்தங்கள் இரவை அறுத்து எங்கள் அமைதியைக் கொன்றது. வசாவிளான் மத்தியமகாவித்தியாலத்தைக் கைப்பற்றும் கனவோடு  இராணுவத்தின் இலக்கும் நகர்வும் ஆரம்பித்தது.

டொச்சண்ணா படித்த பாடசாலையான வசாவிளான் மத்தியமகா வித்தியாலயத்தினைக் கைப்பற்றும் முயற்சியில் புறப்பட்ட இராணுவத்தினரோடு சமராட எங்களது டொச்சண்ணாவும் இணைந்து கொண்டது வரலாறு. எல்லோருக்கும் கிடைக்காத வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சியோடு தனது பாடசாலையை தான் நேசித்த ஊர்களைக் காக்கும் கனவோடு களமாடிய வேங்கை.

வசாவிளான் மத்தியமகா வித்தியாலயம் இராணுவத்தினரிடம் பிடிபடுகிற போது அவர்களுக்கான வசதிகள் எதையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் போராளிகள் ஈடுபட்டார்கள். மெல்ல மெல்ல இராணுவத்தின் முன்னேற்றம் தொடர் எறிகணைகள் விமானத்தாக்குதல் ஒரு கட்டத்தில் வசாவிளான் பகுதி இராணுவத்தினரிடம் பறிபோக வேண்டிய நிலமை வந்தது. புலிகள் பின்வாங்கி நின்று வசாவிளானில் தங்கியிருந்த இராணுவத்திற்குப் பெரும் தலையிடியாகினர்.

சமரொன்றின் போது களத்தில் நின்று கழுத்துப் பகுதியில் காயமடைந்து டொச்சண்ணா விழுப்புண்ணடைந்தார். என்றும் மாறாத இலட்சியக்கனவோடு காயமென்ன கடுமையென்ன எதுவும் அந்த இரும்பின் உறுதியின் முன் வெறும் துகள்களாக….!

1987 அமைதி காக்க வந்தார்கள். ஆயுதங்கள் கையளிப்பு நிறைவாகி. நிராயுதபாணிகளாய் புலிகள் நின்ற நேரம் தியாகி திலீபனண்ணா உண்ணாவிரத காலத்தில் ஓயாமல் ஓடித்திரிந்து இயங்கிய புலியாய் டொச்சண்ணா.

10.10.1987 அமைதிகாக்க வந்தபடையுடனான யுத்தம் ஆரம்பம். ஆறாத விழுப்புண்ணோடு அலைந்து களங்களில் விழியுறக்கம் மறந்த வேங்கை இந்தியப்படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையென்ன பெரிதென்ற எங்கள் புலி எல்லா வதைகளையும் தாங்கியபடி காங்கேசன்துறை தடுப்பு முகாமில் சிறைவாசத்தை அனுபவித்தது. தான் கொண்ட கொள்கைளில் கறையில்லாமல் புனிதத்தோடே டொச்சண்ணா சிறை வாழ்வை ஒரு போராளியின் உறுதியோடு வாழ்ந்து காட்டினார்.

இந்தியப்படைகள் ஈழத்தைவிட்டு வெளியேறிய போது சாரத்தோடு எங்கள் முன் சாறக்கட்டுப்புலியாகாத் திரிந்த புலி வரிச்சீருடையோடு எங்கள் ஊருக்குள் வந்திறங்கிய போது யாராலும் நினைக்காத வளர்த்தியும் மாற்றமும் ஆனாலும் நாங்கள் அன்று பார்த்த பழகிய பழைய அதே டொச்சண்ணாவாக எங்களோடு மீண்டும்….!

ஒவ்வொரு போராளியும் தனது மரணத்தின் நாளை தனது மனவேட்டில் பதிவு செய்து கொண்டேயிருப்பார்கள்.  ஆனால் அவர்களது பயணத்தில் எவ்வித பயமும் இல்லாது தொடர்வார்கள். அப்படியே டொச்சண்ணாவும்…!

குப்பிளான் பிரதேசப் பொறுப்பாளனாக பதவியேற்று வந்த டொச்சண்ணா தான் பழகிய வீடுகளை மறக்காமல் எங்கும் வந்து போவார். 1990மேமாதம் புன்னாலைக்கட்டுவன் பெற்ற வீரப்புதல்வர்களுக்கான நினைவுநாள் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி அந்த நினைவு நாளில் அந்த ஊரில் புலியாகி வீரச்சாவடைந்த லெப்.குவிவாசன் , கப்டன் லோலோ, கப்டன் ரங்கன் ஆகியோரின் திருவுருவப்படங்கள் தாங்கிய மேடையில் நடந்த நிகழ்வில் டொச்சண்ணா தனது தோழர்கள் பற்றி நினைவு கூர்ந்த போது ஒரு சிறந்த பேச்சாளனாகவும் எங்களது மதிப்பைப் பெற்றார்.

1990யூன் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். எங்கள் ஊரில் முகாமிட்டிருந்து தனது அரசியல் பணியை அக்காலத்தின் தேவையையெல்லாம் டொச்சன்  என்ற இளம் போராளியின் வேகத்திலும் விவேகத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம்.

தனது அலுவலகத்திற்கு அண்மையில் அமைந்திருந்த வெளியில் பந்தலிட்டு கோட்டை இராணுவத்தினரை துரத்திய கோட்டை வெற்றி விழாவை தியாகி திலீபண்ணாவின் நினைவு நாளன்று நடாத்திய பெருமையும் எங்கள் டொச்சண்ணாவையே சாரும்.

காலமாற்றம் எங்கள் ஊரில் திரிந்த டொச்சண்ணாவை போர்வல்லுனராய் தளபதியாய் மாற்றியது. அரசியல் பணியிலிருந்து விடுபட்டு களத்தில் மீண்டும் சண்டைக்காரனாக…! களமே வாழ்வாக அவரது களங்கள் எங்கும் விரிந்து பரந்தது.

ஊர்கள் வெறிச்சோடி மனிதர்களை இழந்தது ஆனாலும் தான் ஓடித்திரிந்த ஊர்களைக் காக்கும் பணியில் டொச்சண்ணா மீண்டும்….! தமிழரசன் என்ற பெயர் யாருக்கும் நினைவில்லை ஆனால் டொச்சன் என்ற பெயரை அப்போது தெரியாத குழந்தையே இருக்கவில்லை. அவ்வளவுக்கு அந்தப் பெயர் யாழ்மாவட்டத்தின் அனேக இடங்களில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு படையணியை வழிநடத்தும் திறன் மிக்க தளபதியாய் மாற்றம் கொண்ட வீரன்.

வலிகாமம் தாக்குதல் தளபதியாய் உயர்ந்து நின்ற போர்த்தளபதி. பலாலி,கோட்டை,மின்னல் (மணலாறு) என களங்கள் கண்ட ஓயாதபேரலை. 8தடவைகளுக்கு மேல் விழுப்புண்ணடைந்தும் இலட்சியத்தில் தனது இலக்கில் பின்னடைவைக் காணாத புன்னகைமாறாத போர்வீரன்.

களமும் காயமடைதலும் அந்தப்புலி வீரனுக்குப் புதியதில்லை. சமரொன்றில்  காயமடைந்து (மின்னல் சமரென நினைவு) முழுமையாக குணமடையாத நிலமையிலும் பலாலி இராணுவத்தின் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலில் தானும் கூடவே சண்டையில் நின்றார். அச்சண்டையின் தேவையை உணர்ந்து களத்தில் நின்றவர்களோடு தானும் ஒரு வீரனாகி நின்றார்.

அத்தாக்குதலில் புலிகளணி பெரும் வெற்றியைப் பெற்றது. பெற்ற வெற்றியில் மகிழ்ந்து ஆரவாரித்த போராளிகளின் மகிழ்ச்சியின் தருணம் அது.

டொச்சண்ணாவும் இன்னும் தளபதிகள் போராளிகள் கூடி திசையெங்கும் நின்ற வேளையது. தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிரி பலாலியிலிருந்து தலைநிமிர முடியாத அளவுக்கு எறிகணைகளை ஏவிக் கொண்டிருந்தான்.

இதே களத்தில் நின்ற கப்டன் மலரவன் என்ற உன்னதமான போராளியின் உயிர் மூச்சும் வளலாய் பகுதிமீது எதிரி ஏவிய எறிகணையில் தனது மூச்சை நிறுத்தி கப்டன் மலரவனாக தன்னை வரலாற்றில் பதிவு செய்து கொண்டது.

23.11.1992 ஈழவிடுதலைப் போராட்டத்தின் போர் இலக்கியமாக போற்றப்படும் ‘போர்உலா’ என்ற இலக்கியப் பொக்கிசத்தை எங்களுக்குத் தந்த போராளி. எத்தனையோ களங்களில் தனது கள அனுபவங்களை எழுத்தாக்கிய வீரன்.

ஒரு கையில் பேனாவோடும் மறுகையில் துப்பாக்கியோடும் களமெங்கும் திரிந்த கப்டன் மலரவன் அவர்களின் இழப்பு பேரிழப்பாக அமைந்தது. அன்று மலரவனோடு மண்மீட்பில் 57மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் தந்து தங்கள் இறுதி மூச்சை பலாலிப்பகுதியில் கரைத்துக் காவியமானார்கள்.

அதேபோல எங்கள் டொச்சண்ணாவும் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று 24.11.1992 அன்று வீரச்சாவடைந்து மேஜர் தமிழரசனாக (டொச்சன்) தான் நேசித்த இலட்சியத்தின் பாதையில் தனது கடமையை நிறைத்த மகிழ்வோடு மாவீரனாக….!

முதல் சண்டையனுபவம் கண்ட பலாலிப்பகுதியே அந்த இனிய போராளியின் இறுதிக்களமாகி எங்கள் நெஞ்சங்களில் ஆறாத துயரைத் தந்து சிரித்தபடியே நினைவுகளில் இன்றும் ஞாபகமாய்….கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் உறங்கிப் போனார்.

சிறுவனாக பின்னர் இளைஞனாக இருந்த காலத்தில் அந்தப்புலிவீரன் சயிக்கிளில் சுற்றிய மயிலிட்டி  , பலாலி , வசாவிளான் , ஒட்டகப்புலம் , அச்சுவேலி , வளலாய் என ஊர்களைக் கொள்ளையிட்டு வைத்திருந்த படைகள் மீது தாக்குதல் தொடுக்கும் போர் வீரனாய் டொச்சனென எல்லாராலும் நேசிக்கப்பட்ட வீரன் இறுதி மூச்சுக் கரைந்ததும் அந்த வீரன் திரிந்த பழகிய இடங்களில் ஒன்றான வளலாய் தான் என்பது வரலாற்றின் அதிசயம் தான்.

ஒவ்வொரு போராளியின் இறுகிய இதயங்களுக்குள்ளும் ஈரமான ஒவ்வொரு காதல் நினைவும் காதலும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. மெல்லிய , நெடிய அந்தச் சிரித்தபடி திரியும் வீரனின் இதயத்திற்குள்ளும் ஒருத்தி குடியேறியிருந்தாள் என்பதனைப் பின்னாளில் கூடவிருந்த ஒரு போராளி நினைவு கூர்ந்திருந்த போது நாங்கள் நேசித்த எங்கள் அயல் ஊரவனாகப் பிறந்து எங்கள் ஊரையும் காத்த பெருமைக்குரிய அந்தப்புலி வீரனை என்றென்றும் பெருமையோடே நினைவு கூரும் வகையில் அவனது வாழ்வும் வரலாறும் உயர்ந்து நிற்கிறது.

காதலைவிடவும் கடமையை தாயகத்தின் மீதான பாசத்தை தனது ஒவ்வொரு செயலாலும் வெளிப்படுத்தி தனது சொல் ஒவ்வொன்றின் முன்னாலும் செயலாய் வாழ்ந்து காட்டிய விடுதலைப் போராளிகளில் ஒருவராக எங்கள் நினைவுகளோடு சேர்ந்தே பயணிக்கும் தமிழரசன் அல்லது டொச்சன் என்ற மாவீரனின் நினைவுகளையும் சுமந்தபடி….அவர்களது கனவுகளை எட்டும் காலமொன்றின் வரவிற்காய்….!

கார்த்திகை 2010 (18வருட நினைவு நாளில்)
சாந்தி நேசக்கரம்

http://thesakkaatu.com/doc11653.html 

Wednesday, November 13, 2013

பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...!

முல்லைத்தீவு வீதிகளில்
நீயும் நானும்
மோட்டார் சயிக்கிளில்
காற்றள்ளும் வேகத்தில்
ஓடிய நாட்கள்.....!

முள்ளியவளை வீதியறிந்த எங்கள்
முன்னைய கால நினைவுகள்
இரவுகளில் நிலவு கரையும் வரை
விழித்திருந்து கதைகள் பேசி
கனவுகள் வளர்த்த இரவுகள்...!

நந்திக்கடற்கரை நிலவொளியில்
நின்றலைந்த நினைவுகள்
அதிகாலை வரையும்
அலுவலெனப் பொய்சொல்லி
அந்தக்கடற்கரைகளில்
நடந்த நாட்கள்....!

சேரன் பாண்டியன்
ஐஸ்கிறீம் இனிப்பும்
இன்னும் நாவில்
உலராத இனிமைகள்
எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள்
இதயத்தில் கனமாக....!

யுத்தப் பொழுதுகளில் உன்னை
உனது குடும்பத்தை
உனது குழந்தைகளை
தேடியலைந்த காலமொன்று
அது முள்ளிவாய்க்கால்
முடிந்த பின்னும்
முற்றாத தேடலாக...!

போராளிக்கணவனையிழந்து
நீயும் போhளியாய் வாழ்ந்த
கடைசிக்கணங்களின் நினைவுகளோடு
இன்னும் உறங்க முடியாது
நீயழுகின்ற துயர்களை
அறிவேனடி பெண்ணே....!

ஆனி 16ல் பிறந்தவுன் குழந்தையைப் போல
அதே ஆனி 16இல் பிறந்த என்னையும்
வருடம் தோறும் நினைவில் கொண்டவளே
ஆனி 16 என்றும் உனக்கு நினைவிருக்குமென்று
கடைசியாய் விடை தந்தவளே
இறுதிக்களத்தில் உன் குழந்தையின் இறப்போடு
எனக்கும் இனிப்பாயில்லையடி ஆனி 16...!

கையுக்குள் பூவைப்போல் உன் குழந்தை
புதைந்திருந்த காலத்தை நினைக்கிறேன்
பெயருக்கு ஏற்பவே ஒருநாள் பெருமை தருவான்
என்ற உனது கனவு பொய்யாகி
5வயதில் அவனை நீயிழந்த கதை
அவன்; மரணத்தை நீயே தனியனாய் சுமந்த கதை
முள்ளிவாய்க்கால் முனையில்
நீயழுத குரல் எட்டவேயில்லையடி நேற்றுவரை....!

நான்காண்டுத்  தேடலின் முடிவில்
கடவுளின் வரமாய் வந்தாய்
முகம் பார்க்காமல் உரையாடக் கிடைத்த
அலைபேசி மட்டுமே அறியும்
உனது கண்ணீரின் பாரத்தை...!

இரவு முழுவதும் உனது அழுகையொலியே
இன்னும் இதயத்தைப் பிழிகிறது
இறந்து போன ஆத்மாக்களின் குரலாக
உனது கண்ணீரும் கடைசிநேர முடிவுகளும்
இன்னும் முள்ளிவாய்க்கால் முனையில்
மிதக்கிறது ஞாபகங்கள்....!

„'தைரியமாயிரு''
உனக்குத் தைரியம் சொல்லிவிட்டுக்
கண்ணீரோடு மௌனிக்கிறேன்.
அந்த வாழ்வு என்று இனி எங்களுக்கு....?
உனது இறுதி ஏக்கம் எனக்குமாக....

மீண்டுமுன்னைச் சந்திக்க வேண்டுமென்ற ஆசை
நேற்றோடு பின் நிற்கிறது
என் பழைய தோழியாக
உன்னைப் பார்க்க முடியாத நிலையிலான
இன்றைய உனது நிலை
நேரில் காணும் தைரியத்தை
இழந்து போயிருக்கிறேனென்பதை
எப்படிச் சொல்ல...?

நிமிர்ந்த நடை இரட்டைப்பின்னலை
உயர்த்திக் கட்டி வரிச்சீருடையில்
நடந்து வரும் உன் மிடுக்கில்
இருந்தது செருக்கல்ல
பிரபாகரன் என்ற
பெரு நெருப்பின் உருவமடி...!
பொசுங்கிப் போன கனவுகளிலிருந்து
மீண்டும் துளிர்க்கும் துணிச்சலோடு
இன்னும் நீ உறுதியோடிரு....

எரிமலைகள் ஒரு போதும்
உறங்கியதில்லை
அவை ஒருநாள்
பெருநெருப்பாய் விரிந்தெழும்
இது விதியல்ல
இயற்கையின் நியதி.

உனக்காய் உன் போன்றவர்களுக்காய்
உலகின் மனச்சாட்சியை எழுப்புவோம்
இன்றில்லையென்று ஏங்காதே
என்றைக்கோ ஒருநாள் எங்களுக்கான
ஒளிக்கீற்று வெளிக்காது போகாது.

இருளுக்கு ஒளி தந்து
பகலுக்கு வெயில் தந்து
இருளாப் பொழுதுக்காய் விழித்திருந்து
வீழ்ந்தோரின் கனவுக்குப் பொருளுண்டு
காலத்தின் பதிலுண்டு....!
அதுவரை காத்திருப்பாய்.

13.11.2013 (இறுதிவரை களமுனையில் வாழ்ந்து இருக்கிறாளா இல்லையா எனத்தேடிய தோழி திடீரென வந்து சேர்ந்துள்ளாள்.சொல்லுக்குள் அடங்காத் துயரைச் சுமந்த அவள் துயரின் ஒரு துளியின் நினைவோடு)

Tuesday, November 5, 2013

ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...!

காலம் 2003 ஆடி...,

இரவு கரையும் ஈரத்தில்
நந்திக்கடல் ஆழத்தில்
நிலவு கரையும் நாளொன்றில்
அர்த்த இரவொன்று....!

அமைதியாய் ஓடியலைந்த
அலையில் முகம் நனைத்த
அன்றைப் பொழுதின் இனிமை
இதய அறைகளில்...!

காலம் 2009 மேமாதம்....,

காலழைந்த அந்தக்
கன இருளின் திரையூடே
களமாடியகதை சொன்ன தோழியின்
காலடிகள் மீளத் தேடியது நினைவு....!

ஆழத்தொலைந்த அலைகளோடு
என் ஆத்மா நிறைந்த
ஆயிரமாயிரம் பேரின் முகங்களின்
ஞாபகம் கண்ணீராய்....!

மீளத்தொலைந்து போனது
கடைசிக் கதைகளும்
காலம் மறைத்த துயர்களும்
பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....!


பிரியம் நிறைந்த தோழி
இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர்
படமாய் ஒருநாள்
பலநாள் இரவைத் தின்றது.

பாவத்தின் கையிலிருந்து வழிந்த இரத்தம்
அவள் ப(நி)லத்திலிருந்து எழுந்த
ஓலத்தின் சாட்சியாய்
அவள் நிர்வாணம்....!

பாவங்களைக் கழுவ முடியாத
பொறுப்பிலிருந்து மீள முடியாக் கண்ணீர்
இரவுகளில் அவளே கனவுகளாய்
கண்ணகித் தெய்வத்தின் கடைசிப் பிறவியாய்....!

காலம் 2013...,

ஈழப்பெண்களின் இறுதி நிலமையின்
மொத்த உருவாய் மீள மீள வந்து
முகத்தில் அறைகிறாள் இசைப்பிரியா - இதோ
இன்று சேற்றிலிருந்து இழுத்து வரப்படுகிறாள்....!

கருணையை வேண்டிய கண்களால்
அவள் கடைசிக் குரல்
கடற்கரையோரச் சேற்றோடு கரைகிறது
ஒரு கனவு போல் எங்கள் தோழியின்
கடைசிக் கணங்கள்.....!

பழிதீர்க்கும் பகைமை மட்டுமே
மனிதமற்ற மிருகங்கள் மீது
கோபமாய் நெஞ்சு மூட்டும் நெருப்பாய்
இந்த இரவையும் தின்கிறது....!

'அவலத்தைத் தந்தவனுக்கு அதைத்திருப்பிக் கொடு'
அந்தச் சொல்லின் வலிமையே
சத்தமின்றி நிரம்புகிறது
இன்றல்லாது போயினும் என்றோ ஒருநாள்....!!!!!

01.11.2013 (நள்ளிரவு 1.40)
(இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்ட ஒளிநாடாவை சனல்4 வெளியிட்ட நாளில் இப்பகிர்வு பதிவு செய்யப்படுகிறது)


(கண்ணகி தெய்வமென இசைப்பிரியாவை ஒப்பிட்டதற்கான காரணம் :- வற்றாப்பளை அம்மன் கோவிலும் நந்திக்கடற்கரையும் வரலாற்றில் பல வீரக்கதைகளைக் கொண்டது. வற்றாப்பளை அம்மனை போராளிகள் கூட நம்பிய கடவுள். அந்தக் கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அநியாயமாக அழிக்கப்பட்டாள். அதற்காகவே கண்ணகை தெய்வத்தின் கடைசிப் பிறவியென குறிப்பிட்டுள்ளேன்.

கற்பு நெறி சார்ந்த அடையாளமான கருத்தில் இல்லை. மற்றும் கண்ணகி என்ற ஒரு பாத்திரத்தின் வடிவமாக இங்கு இசைப்பிரியாவை குறிப்பிடவில்லை.

வற்றாப்பளை திருவிழா காலத்தில் பல போராளி குடும்பங்களின் வீடுகளில் கூட விரதம் மரக்கிற சமையலே இருக்கும். அந்தளவு அவர்களும் கண்ணகையம்மனை மதித்தார்கள்.  நந்திக்கடல் நீரில் விளக்கெரியும் மகிமை மிக்கதாய் சொல்லப்படும் கண்ணகை கடவுளே கைவிட்ட நிலமையில் இசைப்பிரியா அவலமாய் சிதைக்கப்பட்டாள். வெறும் புராணக்கதையின் கண்ணகியோடு இசைப்பிரியாவை தராசிட்டு நிறுத்துப் பார்க்க வேண்டாம்)