Saturday, February 1, 2014

கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....!

கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974
வித்தாய் :- 01.02.2000 
சொந்த இடம் - முள்ளியவளை.


வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது.

வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும்.

03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது. 

வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.

யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.

1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.

மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.

தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.

1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.

களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.

1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.

முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.

எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.

ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.

ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது.
கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.

எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.

08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.

இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.

எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.

விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24  உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.

புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.

பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.

எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.

வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன்.
சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.

பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது.
சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.

தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.

எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.

எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.

தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக....!

தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.

தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக....! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக...!

நினைவுப்பகிர்வு :- - சாந்தி நேசக்கரம் -
01.02.2014
Email :- rameshsanthi@gmail.com


Friday, January 31, 2014

இருள் வெளியின் விடிவெள்ளி.

காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான்.

அங்கங்கு காதல் சோடிகள் காதலால் மயங்கியிருந்தனர். அவர்களைத் தாண்டி நடந்தான். அன்னாசித் துண்டுகளுக்கு உப்பும் தூளும் தோய்த்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு அன்னாசியின் சுவைபற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவனைத் தாண்டியவன் ஜஸ்கிறீம் காரனிடம் போனான். கோண் ஜஸ்கிறீம் வாங்கினான். மாலைப்பொழுதின் இனிமையில் கரைய மறுத்த மனசை மாற்றப் பிரயத்தனப்பட்டான். கையில் இருந்த ஜஸ்கிறீம் கரைந்து கைவிரல்களில் ஒழுகியது.

இருளும் வரையும் கடற்கரையில் கால்புதைத்து இருந்தவன் எழுந்து நடந்தான். மெலிதாகப் பாடலொன்றை உச்சரித்தபடி கடற்கரையைத் தாண்டி வீதியருகால் நடக்கத் தொடங்கினான். மனசுக்குள் ஏதோவொன்று கனத்துக் கொண்டிருந்தது. தாண்டிப்போன பொலிஸ் வாகனத்தை நிதானமாக அவதானித்தபடி வீதியின் மறுகரையை அடைந்தான். தெருவின் இரு மருங்கும் ஒளிச்சிதறல். முகத்தை நேருக்கு நேராய் அடையாளம் காண முடியாதிருந்தாலும் ஆளாளுக்கு முன்னால் வருகிற அல்லது அருகால் செல்கிறவர்களை விலத்திக் கொண்டு போக முடிந்தது.

தங்குமிடத்தையடைந்த போது இரவு 9.40ஆகியிருந்தது. தம்பி சாப்பிட வாங்கோ....! தங்க இடம் கொடுத்த வீட்டின் அம்மா கூப்பிட்டாள். பசிக்கேல்லயம்மா...! சொல்லிவிட்டு நேரே படுக்கைக்கு போனான். நித்திரை வரவில்லை. வெளியில் தொலைக்காட்சியில் படம் ஏதோ போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் படம் பார்ப்போமென எழுந்தான்.

அறையின் வலது பக்க மூலையில் அவனுக்கான மேசையிருந்தது. அந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியின் மெல்லிய இசையின் அதிர்வு அவனை அழைத்தது. தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான். வெளிநாட்டிலிருந்து அக்கா அழைத்திருந்தாள்.

எப்பவும் போல அக்கா சுகம் விசாரித்துக் கொண்டாள். சாப்பிட்டியோ ? நித்திரை கொண்டியோ ? அக்காவின் கரிசனை அன்றைக்கும் இயல்பாயே இருந்தது. ஓமக்கா....விளங்குது....! வேறை என்னக்கா....? வேnறையென்ன சொல்லன் ? இன்று அதிகம் பேசத் தெரியாதவன் போல அக்காவின் கதைகளுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான்.

என்னடா தடுமாற்றம்...? அக்கா கேட்டாள். காச்சலக்கா அதான்....பொய் சொல்லாதை சொல்லு என்ன ? அன்று அக்காவை சமாளித்து வென்றான். சரி கவனம் நாளைக்கு இரவு எடுக்கிறன். அக்கா தொடர்பிலிருந்து விடுபட்டாள்.
000         000             000

அவனது பயிற்சி முகமொன்றில் அக்காவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதல் அறிமுகமே அக்காவோடு அவனை நெருக்கமாக்கியது. அவனிலும் 4வயதால் மூத்தவள் அக்கா. தோற்றத்தில் அவள் அவன் சக வயது போலவே இருந்தாள்.

பணிகள் தவிர்ந்து எவரது தொடர்பையும் பேணிக்கொள்ளக்கூடாத இறுக்கத்தை தனக்குள் வைத்திருந்தவனின் எல்லா முறாலும் அக்காவின் முன்னால் காணாமல் போனது.. அம்மாவுக்குப் பிறகு அக்காவை அவன் அதிகம் நேசித்தான்.

அக்கா எங்கே பிறந்தாள் எங்கே வளர்ந்தாள் ? எதுவும் அறிய நினைத்ததுமில்லை அறிந்ததுமில்லை. ஆனால் அக்காவை அம்மாவாய் நேசித்தான். அக்கா அவனை முழுவதுமாகப் புரிந்தவள் அவனது மனக்குழப்பத்தை ஏதோவொரு உணர்வால் எப்போதுமே உணர்ந்து கொண்டவள்.

அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அக்காவும் அவனுமே பயணித்தார்கள். போன இடத்திற்கு ஏற்ப இருவரும் உடையிலிருந்து சகல முறைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அக்காவுடன் தென்னிலங்கைத் தெருக்களில் சேர்ந்து திரிந்த காலங்களில் அக்காவின் ஆற்றலை அவன் வியந்து பாராட்டியிருக்கிறான். சரி பப்பாவில ஏத்தாதை வா....என்பாள் அக்கா.

சத்தியமா அக்கா....அவனது சத்தியத்தை அவள் நம்பியதேயில்லை.
உப்பிடி எத்தினை சத்தியமடா செய்திருப்பாய்...? ஏன் நீங்கள் பொய் சத்தியம் ஒருக்காலும் பண்ணேல்லயா ? எனக் கேட்பான். யாரிப்ப இல்லையெண்டா ? அக்கா திரும்பிக் கேட்பாள். பாசம் , பணி, இலட்சியம் இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அடிக்கடி சொல்லுவாள். சின்னச் சின்ன விடயங்களில் கூட நிதானத்தை அவனுக்கு கடைப்பிடிக்க வைத்தாள். சிலவேளைகளில் தடுமாறும் அவனது மனசை தலையில் குட்டி அல்லது கோபித்து மாற்றியிருக்கிறாள்.

மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று அவன் அழைக்கிற ஒவ்வொரு நொடியும் அக்காவின் அன்பை அவன்மீது அக்கா காட்டுகிற பரிவை அவன் முழுமையாக அனுபவித்திருக்கிறான். அவன் கண்களைக் கவர்ந்த அழகி(கை)களையும் அக்காவுக்குச் சொல்லியிருக்கிறான். பணிக்காக செல்லும் இடமெங்கும் அவனை அழகிகள் அலையாய் வந்து மோதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த அலைகளின் அடிபடாமல் தனது கடமையை சாதுரியமாய் முடித்து திரும்பிவிடுவான்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நெஞ்சில் தீயாய் மூட்டியவன். நெருப்போடு திரியும் அவனது இலக்கின் எல்லையைத் தொடும் கனவோடு மட்டுமே அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அந்த நெருப்பை ஒரு பூ தனது அழகிய இதழ்களால் காயப்படுத்தியிருந்தது.

பிரதான மையமொன்றில் எல்லையை அந்த மையத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள தரவு சேகரிக்க அவளோடு அறிமுகமாக வேண்டியிருந்தது. இவனுக்கு முதல் சிலர் அந்த இடத்தை நெருங்க முடியாது இடையில் திரும்பியிருந்தார்கள். அவன் கண்டுபிடித்த வழியில் அவள் எதிர்பார்க்காத வகையில் அவனது பணிக்கு ஆதரவாய் மாறினாள்.

பெரும் பொறுப்பொன்றில் கடமையில் இருந்த அவனை அவள் காதலித்தாள். அக்கா சொன்னது போல காதல் எப்பவும் வரலாம். எனது எதிரியிலும் வரலாம் என்ற வாக்கு பொய்யாகாமல் ஐயர்வீட்டு அழகியில் அவனுக்குக் காதல் வந்தது அதிசயமில்லைத்தான். அக்காவுக்கு அவசரமாக அந்தக்காதல் பற்றிச் சொன்னான். நேரில் நின்றிருந்தால் அவன் மண்டை உடைந்திருக்கும் அக்காவின் குட்டில்.

என்ன கலியாணம் கட்டப்போறியோ ? அக்கா கோபமாய் கேட்டாள். இல்லை....சொல்லோணும் போல இருந்தது...நான் வேறையாரிட்டையும் இதைச் சொல்லேலுமோ ? என்ரை அக்காட்டைத்தானே சொல்லலாம்.....அக்காவுக்கு பனிக்கட்டிகளால் அரிச்சனை செய்து அக்காவை குளிர்விக்க முயன்றான். காணுமடா ராசா....நிப்பாட்டு....!

பாவமாயிருக்குதக்கா....அவன் குளைந்தான். அதுக்கு...? அக்கா கடுமையாகவே பேசினாள். உதையெல்லாம் விட்டுப்போட்டு வேலையைப் பாரடா....! பிறகு அக்கா ஆசிரியையாகினாள். அந்தப் புயல் காற்றிலிருந்து அவனைக் காப்பாற்ற அக்கா ஆலோசனைகள் சொன்னாள். பாவம் மனங்களை குழப்பாதையடா....! அளவோடை தொடர்பை வைச்சிரு...! அக்காவாணை நம்பு நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல....!

அவன் முற்றும் துறந்த முனிவனில்லை அவனும் எல்லா ஆசைகளையும் கொண்ட உணர்வும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். அவனது கட்டுப்பாடு ஒழுக்கம் யாவையும் தாண்டி ஒருத்தி இதயத்தில் இடம் கேட்கிறாள். இலட்சியத்துக்காக தன்னை ஒட்டுமொத்தமும் தத்துக் கொடுத்துவிட்டானென்று அவளுக்குச் சொல்ல முடியாதிருந்தது.

நான் வெளிநாடு போகப்போறன்....! லண்டனில எனக்கொரு காதலி இருக்கிறாள்....சத்தியமா நான் உங்களை விரும்பேல்ல... என்று அவளுக்குப் பொய் சொன்னான். அவள் அழுது கொண்டே இறுதியாய் அவனைக் கடந்து போனாள். அந்த அழுகை ஆயிரங்காலத்துப் பாவச்சாபத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டுப் போவது போலுணர்ந்தான்.

அவள்  போய் 5மாதங்கள் கடந்திருந்தது. ஆனாலும் அவள் ஞாபகங்களைவிட்டு அகலாமல் அவன் இதயத்தில் கதிரை போட்டு உட்கார்ந்திருந்தாள். பிறகொருநாள் கதிரேசன் கோவிலில் எதேச்சையாக நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தெரியாதவள் போலவே கடந்து சென்றாள். அனால் அவனால் அவளது மௌனத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் அன்றைக்கு அவளையே பார்த்தான்.

ஒருத்தியின் மனசில் ஆசையை வளரச் செய்து அதனைக் காதலாகக் துளிர்க்கச் செய்து  அவளை அழ வைத்து துயரைக் கொடுத்த தனது மூஞ்சி மீது சின்னக் கோபமும் வந்தது. எத்தனையோ பேரை பணிசார்ந்து பழகியதும் சந்தித்ததும் உறவுகள் நீடித்ததும் அவனது கடந்த பாதையில் பலரைக் கடந்திருக்கிறான். அவள் மட்டும் அவனைக் கடந்து போக விடாமல் கண்களில் கண்ணீரைப் பூக்க வைத்ததற்கான காரணத்தைத் தேடினான். மண்டையைக் குடையும் அந்த மர்மத்தை மட்டும் கடைசி வரையும் அவன் கண்டு பிடிக்கவேயில்லை.

இன்னொரு முறை இந்த உலகில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டினான். அவளைக் காதலித்து திருமணம் செய்து வாழ ஒரு பிறவிக்கு அப்போதே கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டான்.

பொhடியளுக்கு பெட்டையளில காதல் வாறதும் பெட்டையளுக்கு பொடியளில காதல் வாறதும் பெரிய புதினமில்லையடா தம்பி....காதலுக்காக ஒருதரும் உயிரை விடாயினம்....அங்கினைக்கை ஞாபகத்தில வைச்சு சிலவேளை அழக்கூடும்....உதெல்லாத்தையும் விட்டிட்டு தந்த வேலையைச் செய்....அக்கா இதைத்தான் கடைசியாய் சொன்னாள்.
000                   000               000

இலட்சியத்தின் முன்னால் அவனது காதல் தோற்றுப்போனது. தனக்கான பணியில் கவனமாக இயங்கத் தொடங்கினான். தனக்கான இலக்கைத் தேடிய பயணத்தில் அவனுக்கான நாள் இடம் தெரிவாகியது.

வாழ்வின் முழுமையும் அர்த்தமும் அன்றைய முடிவில் எழுதப்படுமென்று நம்பினான். அன்றைக்கு அவன் தெளிவாகவே புறப்பட்டான். தாயக மீட்பிற்கான தனது கடமையை முடிக்கும் கனவோடு தடையொன்றை அகற்றி அந்தக் காற்றோடு கல(ரை)ந்து போய்விடும் கடைசித் தருணமும் கடைசி வினாடியும் அது....!

அதிர்ந்த பேரோசையின் முடிவில் அவன் துகள் துகளாகிக் கரைந்தான். முகம் மறைந்தது முகவரி மறைந்தது குரலும் மறைந்தது அவன் கொள்கை மட்டும் உறுதியோடு வரலாற்றில் அவனை எழுதிக் கொண்டது. இருள் கலைந்து விடியும் நாளிலும் வெளியில் வராத அவனது வெற்றியும் வீரமும் மௌனமாக இருளின் வெளியில் ஒளியாய்....!

அவன் ஒளிபொருந்திய சூரியனாய் நட்சத்திர வெளிகளில் ஒளிப்பொட்டாகி அக்காவின் கண்ணில் ஈரமாக அவனது நினைவுகள் ஈர நினைவாக....பல்லாயிரம் மைல்கள் கடந்து ஒளிதரும் விடிவெள்ளியாய் அவன் அக்காவின் நெஞ்சிலும் அவனைப் பொத்தி வளர்த்து வழிகாட்டி வழியனுப்பியவர்கள் நினைவுகளிலும் நிரந்தரமாகினான்.....!

04.11.2012
- சாந்தி நேசக்கரம் -

Tuesday, January 14, 2014

மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)

இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)



அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.



அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.


என்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....?
இது என்னவனின் குரல்.
நித்திரை வரேல்ல....
வாரும் வந்துபடும்...
இல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...
சொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.



ஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.


இன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.


இல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


அக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.
எனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....!
சொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....
என் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.



அவனது தொடர்பிலக்கத்தைக் குறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா.......? இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா.....? இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்....! வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....


அவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.


என்னவாமக்கா....?
உங்களைக் கவனமா இருக்கட்டாம்...!
கண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.
கவனமா இருக்கட்டாமோ....?
சொல்லுங்கோ கவனமா இருக்கிறனாமெண்டு.



சிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.


அந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.


முதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.


இடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்துபோய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.



அன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.


அந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் ,அவர்கள் அள்ளிக் கொட்டிய குண்டுகளின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.


ஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு...! அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.


அவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.


பொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...?


அன்பான நண்பா....,
எங்கிருக்கிறாய் நீ...!
கல்லறையிலிருக்கிறாயா......?
அல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......?
ஊர்; சொல்லாமல் ,
உறவுகள் தெரியாமல்
உறங்கிடுவோர் வரிசையில் நீயும்
அமைதியாய் துயில்கிறாயா.....?
எங்கிருக்கிறாய் நீ.....?
உனது குரல், உனது சிரிப்பு ,
உனது துணிந்த பேச்சு ,
உனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.
நீ எங்கிருக்கிறாய்....?



* 19.03.03 
 சாந்தி நேசக்கரம்

Monday, January 13, 2014

தேசத்தின் புயல் மாதவன்.



பச்சை வயல் நிறைந்த 
தென்மராட்சி மண்ணில் 
மாதவமாய் வந்துதித்த 
மனோரஞ்சன்.

தொண்ணூறுகளின் தொடக்கம்....,

யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும்
வீரனாய் புலி வேங்கையாய்
போர்க்காலமொன்றில் 
யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான்.

'மாதவன்'
மறக்க முடியாத நினைவுகளில் 
அவன் புன்னகையும் ஆழுமையும்
ஆற்றலின் பன்முகமும் 
அழியாச்சுடர் அவன்.....!

நெருப்பைச் சுமந்தான் 
சிரிப்பில் மட்டும் 
இனிப்பாய் கரைந்தான்.
இனிமையான போராளியாய்
இதயங்களில் நிறைந்தான்....!

இசையூடக வழியே பாடகனாய்
திரையூடக வழியே நடிகனாய்
கவியூடக வழியே கவிஞனாய்
கலையின் மொத்த வடிவம் - மாதவன் 
கலைபண்பாட்டுக்கழகத்தில்
இவனொரு வரலாறு.

இவனின்றிய வரலாறொன்று 
இருந்தறியாத நாட்களில் 
கலைகடந்து கனரகம் சுமந்து
களம் கண்ட போர் வீரன்
ஓய்வின்றி உழைத்தவன் 
ஒருநாள் ஓய்ந்து போனான்.

வீரனாய் விழிமூடி வுpத்தாய் 
ஓயாத அலை மூன்றில்
காயாத வீரத்தின் கதையாக
கண்மூடித்துயின்றான்....!

தென்றலாய் வளர்ந்து தேசத்தின் புயலாகி
கண்களில் என்றும் போல் 
கனதியான புன்னகை
கடைசிவரையிலும் கனலாய் திரிந்து
கடைசி விடியலின் பூவிதழ் நுனியில்
வாசனையாய் வரலாறாய்
சென்றான் மாதவன் வென்றான்....!

ஏன்றுமே மாறாத அன்பொடு 
போனான் வீரனாய் மேஜர் மாதவன்
இன்றுமுன் நினைவுகள் நேற்றுப் போலவே 
நீதிரிந்த தெருக்களில் உனது சுவடுகள்
நீ நேசித்தவர்கள் நெஞ்சுகளில் 
நீங்கா நினைவாய் தேங்கியிருக்கிறாய்
தேசத்தின் புயலாய்....!


- சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Tuesday, December 10, 2013

பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான்

இன்பசோதி'
பெயரோடு இணைந்த சோதிபோல்
நீயும் ஒளிபொருந்தியவன்.

காற்றிலேறிக் கைவீசிச் செல்லும்
வண்ணத்துப் பூச்சியாய்
உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில்
நீயொரு ராசகுமாரன்.

காலம் உனக்காய்
கட்டியெழுப்பிய கோட்டையில்
நீயே கடவுளாய்
காலவிதியின் கதையாய்....!

நிலவாய் நீல வானமாய்
நீயுருவாக்கிய காலத்தின் கோலம்
உனது எண்ணங்கள் போல
வர்ணங்களாய்.....!

காலச்சக்கரம்
மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி
உனது வர்ணங்களாலான உலகை
இரத்தச் சிவப்பாக்கிய போது
நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி
தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....!

ஊரான் உனது பெயர் போலவே
ஊரைக்கவர்ந்த புலிவீரன்  நீ.
உன் போல உருவாக
உன்போல உடையுடுக்க
உன்போல வாகனமோட
உன் போல் வாழ ஆசைப்பட்ட
உன் சக தோழர்களின் கனவு நாயகன் நீ.

கண்களில் சூரியப்பெருநதி
என்றென்றும் கருணையை மட்டுமே
சுமந்த ஈரநிலம் உன்னிதயம்.
ஆதனால் தானே எல்லோரையும்
உன்னை நேசிக்க வைத்த
வித்தியாசமானவன் நீ.

உன் ஆற்றலும் ஆழுமையும்
உன்னை வித்தியாசப்படுத்தியது
அதனால் தானே
வித்தியாசமான வேங்கையாய் - நீ
புலியாய் புலனாய்வாளனாய்
சக போராளிகளுக்கெல்லாம் ஆசானாய்
அறிவியல் ஞானியாய் நீயொரு அவதாரம்.

முல்லைமண் கொள்ளையிட்ட பகைவர்கள்
முகாம் மீது தீமூட்ட நீயும் தீயாகி
வந்த பகைவிரட்டிச் சமராடி
அளம்பில் மணல்வெளியில்
ஆகுதியாய் போனாய்.

கனபுரம் துயிலிடத்தில்
ஓய்வெடுத்துறங்கிய வேங்கையே....!
சொல்வதற்கு உன் சாதனைகள்
பெருமை கொள்ளும் செயல் வீரன் நீ.

ஆண்டுகள் பல சென்று - நீ
அமைதியாய் போனாலும்
ஆறாது அலையும் அலகைளின்
ஓசையாய் ஒலியாய்
என்றுமே வாழ்வாய்
கப்டன் ஊரானாய் கௌதமனாய்
காலமுள்ள வரையும் உன் சாதனைகள்
வாழந்து கொண்டேயிருக்கும்.

- சாந்தி நேசக்கரம் - Email :- rameshsanthi@gmail.com

Friday, December 6, 2013

ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா !


நிறவெறிக்கெதிராய்
நெருப்பெடுத்த கறுப்புச் சுடர்.
காலம் ஆபிரிக்க இருளகல
கைபிடித்தேற்றிய பேரொளி.

இருள் கொன்று ஆபிரிக்கர்
ஓளிகொண்டெழ உதித்த
மூத்தவன் மண்டேலா.
இனவிடுதலையை
உயிராய் கொண்டதால் - நீ
இருபத்தேழு வருடங்கள்
இரும்புக்கம்பிகளில் அடைபட்டு
வெளியில் வந்த போது நீயே
உலக விடிவெள்ளியாய் ஆகினாய்.

போராடும் தேசங்களின்
வழிகாட்டியாய்
ஒளியூட்டிய இரும்பு.
இறந்து போனாயாம்
இன்றைய செய்திகள்
உன்னையே நினைவில்
உடுத்திக் கொள்கிறது.

தங்கச் சூரியன் எங்கள் தலைவன்
உன்னையும் சொல்லியே
உருவாக்கினான் தமிழனை
தமிழீழ விடுதலைப்போரை
வரலாறாக்கினான்.

உனக்கு நிகராய் உனக்கு நேராய்
வாழ்ந்த எங்கள் தலைவனை
உன்னில் காண்கிறோம்
உலகில் வாழ்கிறோம்.
என்றோ நாங்களும்
இவ்வுலகை வெல்லுவோம்.

உண்மையின் குறியீடே
உலகின் ஒப்பிலா வீரனே
இருள் அகற்றிய ஒளியே
 போய் வருக
போராடும் பூமியெங்கும்
போராடியவர்கள் யாவரின் சார்பாய்
உனக்கெங்கள் வீரவணக்கம்.

ஓய்வில்லை வீரனுக்கு - அவன்
உறங்கினாலும் ஓயாத வேகம்
கல்லறைக்குள்ளிருந்தும்
படைநடத்தும் அவன் வாழ்வு.
நீயும் காலமெல்லாம்
படை(கை) வெல்லும் வீரனாய்
இந்தப் பாருள்ளவரை
படைநடத்திக் கொண்டேயிருப்பாய்.
போய் வருக மண்டேலா
உலகின் போர் விதியை வென்றவனே
போய் வருக.

06.12.2013
சாந்தி நேசக்கரம்