பெயரோடு இணைந்த சோதிபோல்
நீயும் ஒளிபொருந்தியவன்.
காற்றிலேறிக் கைவீசிச் செல்லும்
வண்ணத்துப் பூச்சியாய்
உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில்
நீயொரு ராசகுமாரன்.
காலம் உனக்காய்
கட்டியெழுப்பிய கோட்டையில்
நீயே கடவுளாய்
காலவிதியின் கதையாய்....!
நிலவாய் நீல வானமாய்
நீயுருவாக்கிய காலத்தின் கோலம்
உனது எண்ணங்கள் போல
வர்ணங்களாய்.....!
காலச்சக்கரம்
மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி
உனது வர்ணங்களாலான உலகை
இரத்தச் சிவப்பாக்கிய போது
நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி
தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....!
ஊரான் உனது பெயர் போலவே
ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ.
உன் போல உருவாக
உன்போல உடையுடுக்க
உன்போல வாகனமோட
உன் போல் வாழ ஆசைப்பட்ட
உன் சக தோழர்களின் கனவு நாயகன் நீ.
கண்களில் சூரியப்பெருநதி
என்றென்றும் கருணையை மட்டுமே
சுமந்த ஈரநிலம் உன்னிதயம்.
ஆதனால் தானே எல்லோரையும்
உன்னை நேசிக்க வைத்த
வித்தியாசமானவன் நீ.
உன் ஆற்றலும் ஆழுமையும்
உன்னை வித்தியாசப்படுத்தியது
அதனால் தானே
வித்தியாசமான வேங்கையாய் - நீ
புலியாய் புலனாய்வாளனாய்
சக போராளிகளுக்கெல்லாம் ஆசானாய்
அறிவியல் ஞானியாய் நீயொரு அவதாரம்.
முல்லைமண் கொள்ளையிட்ட பகைவர்கள்
முகாம் மீது தீமூட்ட நீயும் தீயாகி
வந்த பகைவிரட்டிச் சமராடி
அளம்பில் மணல்வெளியில்
ஆகுதியாய் போனாய்.
கனபுரம் துயிலிடத்தில்
ஓய்வெடுத்துறங்கிய வேங்கையே....!
சொல்வதற்கு உன் சாதனைகள்
பெருமை கொள்ளும் செயல் வீரன் நீ.
ஆண்டுகள் பல சென்று - நீ
அமைதியாய் போனாலும்
ஆறாது அலையும் அலகைளின்
ஓசையாய் ஒலியாய்
என்றுமே வாழ்வாய்
கப்டன் ஊரானாய் கௌதமனாய்
காலமுள்ள வரையும் உன் சாதனைகள்
வாழந்து கொண்டேயிருக்கும்.
- சாந்தி நேசக்கரம் - Email :- rameshsanthi@gmail.com
No comments:
Post a Comment