Friday, January 31, 2014

இருள் வெளியின் விடிவெள்ளி.

காலிக்கடற்கரையின் அலைகள் அவனது கால்களை வந்து வந்து நனைத்துச் சென்று கொண்டிருந்தது. அலைகளோடு கரைந்து கனவுகள் நுரையாக கண் முன்னே பரந்து கொண்டிருந்தது. மக்களுக்காக மக்களின் வாழ்வுக்காக கரைந்து போகும் நஎண்ணத்தை அந்தக் கரைகளில் நின்றே பலமுறை உரக்கச் சொல்லியிருக்கிறான். மனிதர்களின் குரல்களைவிட அலைகளின் குரலே அவனது காதுகளை நிறைத்துக் கொண்டிருந்தது.

அந்தக் கரையோர மணலில் வெறும் கால்களைப் புதைத்துக் கொண்டு சற்று நேரம் எதையோ யோசித்தான். தான் பிறந்த கரையோரக் கிராமத்தின் நினைவுகள் வந்திருக்க வேண்டும். முகத்தில் அறைந்த கடற்காற்றின் மென்விரல்கள் அழகாய் வாரியிருந்த தலைமுடியைக் குழப்பியது. விரல்களால் தலைமுடியைக் கோதினான்.

அங்கங்கு காதல் சோடிகள் காதலால் மயங்கியிருந்தனர். அவர்களைத் தாண்டி நடந்தான். அன்னாசித் துண்டுகளுக்கு உப்பும் தூளும் தோய்த்து பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு அன்னாசியின் சுவைபற்றி வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தவனைத் தாண்டியவன் ஜஸ்கிறீம் காரனிடம் போனான். கோண் ஜஸ்கிறீம் வாங்கினான். மாலைப்பொழுதின் இனிமையில் கரைய மறுத்த மனசை மாற்றப் பிரயத்தனப்பட்டான். கையில் இருந்த ஜஸ்கிறீம் கரைந்து கைவிரல்களில் ஒழுகியது.

இருளும் வரையும் கடற்கரையில் கால்புதைத்து இருந்தவன் எழுந்து நடந்தான். மெலிதாகப் பாடலொன்றை உச்சரித்தபடி கடற்கரையைத் தாண்டி வீதியருகால் நடக்கத் தொடங்கினான். மனசுக்குள் ஏதோவொன்று கனத்துக் கொண்டிருந்தது. தாண்டிப்போன பொலிஸ் வாகனத்தை நிதானமாக அவதானித்தபடி வீதியின் மறுகரையை அடைந்தான். தெருவின் இரு மருங்கும் ஒளிச்சிதறல். முகத்தை நேருக்கு நேராய் அடையாளம் காண முடியாதிருந்தாலும் ஆளாளுக்கு முன்னால் வருகிற அல்லது அருகால் செல்கிறவர்களை விலத்திக் கொண்டு போக முடிந்தது.

தங்குமிடத்தையடைந்த போது இரவு 9.40ஆகியிருந்தது. தம்பி சாப்பிட வாங்கோ....! தங்க இடம் கொடுத்த வீட்டின் அம்மா கூப்பிட்டாள். பசிக்கேல்லயம்மா...! சொல்லிவிட்டு நேரே படுக்கைக்கு போனான். நித்திரை வரவில்லை. வெளியில் தொலைக்காட்சியில் படம் ஏதோ போய்க்கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் படம் பார்ப்போமென எழுந்தான்.

அறையின் வலது பக்க மூலையில் அவனுக்கான மேசையிருந்தது. அந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியின் மெல்லிய இசையின் அதிர்வு அவனை அழைத்தது. தொலைபேசியை எடுத்து காதில் வைத்தான். வெளிநாட்டிலிருந்து அக்கா அழைத்திருந்தாள்.

எப்பவும் போல அக்கா சுகம் விசாரித்துக் கொண்டாள். சாப்பிட்டியோ ? நித்திரை கொண்டியோ ? அக்காவின் கரிசனை அன்றைக்கும் இயல்பாயே இருந்தது. ஓமக்கா....விளங்குது....! வேறை என்னக்கா....? வேnறையென்ன சொல்லன் ? இன்று அதிகம் பேசத் தெரியாதவன் போல அக்காவின் கதைகளுக்கு பதில் சொல்ல முடியாது தவித்தான்.

என்னடா தடுமாற்றம்...? அக்கா கேட்டாள். காச்சலக்கா அதான்....பொய் சொல்லாதை சொல்லு என்ன ? அன்று அக்காவை சமாளித்து வென்றான். சரி கவனம் நாளைக்கு இரவு எடுக்கிறன். அக்கா தொடர்பிலிருந்து விடுபட்டாள்.
000         000             000

அவனது பயிற்சி முகமொன்றில் அக்காவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதல் அறிமுகமே அக்காவோடு அவனை நெருக்கமாக்கியது. அவனிலும் 4வயதால் மூத்தவள் அக்கா. தோற்றத்தில் அவள் அவன் சக வயது போலவே இருந்தாள்.

பணிகள் தவிர்ந்து எவரது தொடர்பையும் பேணிக்கொள்ளக்கூடாத இறுக்கத்தை தனக்குள் வைத்திருந்தவனின் எல்லா முறாலும் அக்காவின் முன்னால் காணாமல் போனது.. அம்மாவுக்குப் பிறகு அக்காவை அவன் அதிகம் நேசித்தான்.

அக்கா எங்கே பிறந்தாள் எங்கே வளர்ந்தாள் ? எதுவும் அறிய நினைத்ததுமில்லை அறிந்ததுமில்லை. ஆனால் அக்காவை அம்மாவாய் நேசித்தான். அக்கா அவனை முழுவதுமாகப் புரிந்தவள் அவனது மனக்குழப்பத்தை ஏதோவொரு உணர்வால் எப்போதுமே உணர்ந்து கொண்டவள்.

அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு அக்காவும் அவனுமே பயணித்தார்கள். போன இடத்திற்கு ஏற்ப இருவரும் உடையிலிருந்து சகல முறைகளையும் மாற்றிக் கொண்டார்கள். அக்காவுடன் தென்னிலங்கைத் தெருக்களில் சேர்ந்து திரிந்த காலங்களில் அக்காவின் ஆற்றலை அவன் வியந்து பாராட்டியிருக்கிறான். சரி பப்பாவில ஏத்தாதை வா....என்பாள் அக்கா.

சத்தியமா அக்கா....அவனது சத்தியத்தை அவள் நம்பியதேயில்லை.
உப்பிடி எத்தினை சத்தியமடா செய்திருப்பாய்...? ஏன் நீங்கள் பொய் சத்தியம் ஒருக்காலும் பண்ணேல்லயா ? எனக் கேட்பான். யாரிப்ப இல்லையெண்டா ? அக்கா திரும்பிக் கேட்பாள். பாசம் , பணி, இலட்சியம் இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அடிக்கடி சொல்லுவாள். சின்னச் சின்ன விடயங்களில் கூட நிதானத்தை அவனுக்கு கடைப்பிடிக்க வைத்தாள். சிலவேளைகளில் தடுமாறும் அவனது மனசை தலையில் குட்டி அல்லது கோபித்து மாற்றியிருக்கிறாள்.

மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று அவன் அழைக்கிற ஒவ்வொரு நொடியும் அக்காவின் அன்பை அவன்மீது அக்கா காட்டுகிற பரிவை அவன் முழுமையாக அனுபவித்திருக்கிறான். அவன் கண்களைக் கவர்ந்த அழகி(கை)களையும் அக்காவுக்குச் சொல்லியிருக்கிறான். பணிக்காக செல்லும் இடமெங்கும் அவனை அழகிகள் அலையாய் வந்து மோதிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த அலைகளின் அடிபடாமல் தனது கடமையை சாதுரியமாய் முடித்து திரும்பிவிடுவான்.

எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நெஞ்சில் தீயாய் மூட்டியவன். நெருப்போடு திரியும் அவனது இலக்கின் எல்லையைத் தொடும் கனவோடு மட்டுமே அவன் இயங்கிக் கொண்டிருந்தான். அந்த நெருப்பை ஒரு பூ தனது அழகிய இதழ்களால் காயப்படுத்தியிருந்தது.

பிரதான மையமொன்றில் எல்லையை அந்த மையத்தின் உள்ளே நிகழும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள தரவு சேகரிக்க அவளோடு அறிமுகமாக வேண்டியிருந்தது. இவனுக்கு முதல் சிலர் அந்த இடத்தை நெருங்க முடியாது இடையில் திரும்பியிருந்தார்கள். அவன் கண்டுபிடித்த வழியில் அவள் எதிர்பார்க்காத வகையில் அவனது பணிக்கு ஆதரவாய் மாறினாள்.

பெரும் பொறுப்பொன்றில் கடமையில் இருந்த அவனை அவள் காதலித்தாள். அக்கா சொன்னது போல காதல் எப்பவும் வரலாம். எனது எதிரியிலும் வரலாம் என்ற வாக்கு பொய்யாகாமல் ஐயர்வீட்டு அழகியில் அவனுக்குக் காதல் வந்தது அதிசயமில்லைத்தான். அக்காவுக்கு அவசரமாக அந்தக்காதல் பற்றிச் சொன்னான். நேரில் நின்றிருந்தால் அவன் மண்டை உடைந்திருக்கும் அக்காவின் குட்டில்.

என்ன கலியாணம் கட்டப்போறியோ ? அக்கா கோபமாய் கேட்டாள். இல்லை....சொல்லோணும் போல இருந்தது...நான் வேறையாரிட்டையும் இதைச் சொல்லேலுமோ ? என்ரை அக்காட்டைத்தானே சொல்லலாம்.....அக்காவுக்கு பனிக்கட்டிகளால் அரிச்சனை செய்து அக்காவை குளிர்விக்க முயன்றான். காணுமடா ராசா....நிப்பாட்டு....!

பாவமாயிருக்குதக்கா....அவன் குளைந்தான். அதுக்கு...? அக்கா கடுமையாகவே பேசினாள். உதையெல்லாம் விட்டுப்போட்டு வேலையைப் பாரடா....! பிறகு அக்கா ஆசிரியையாகினாள். அந்தப் புயல் காற்றிலிருந்து அவனைக் காப்பாற்ற அக்கா ஆலோசனைகள் சொன்னாள். பாவம் மனங்களை குழப்பாதையடா....! அளவோடை தொடர்பை வைச்சிரு...! அக்காவாணை நம்பு நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்ல....!

அவன் முற்றும் துறந்த முனிவனில்லை அவனும் எல்லா ஆசைகளையும் கொண்ட உணர்வும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதன் தான். அவனது கட்டுப்பாடு ஒழுக்கம் யாவையும் தாண்டி ஒருத்தி இதயத்தில் இடம் கேட்கிறாள். இலட்சியத்துக்காக தன்னை ஒட்டுமொத்தமும் தத்துக் கொடுத்துவிட்டானென்று அவளுக்குச் சொல்ல முடியாதிருந்தது.

நான் வெளிநாடு போகப்போறன்....! லண்டனில எனக்கொரு காதலி இருக்கிறாள்....சத்தியமா நான் உங்களை விரும்பேல்ல... என்று அவளுக்குப் பொய் சொன்னான். அவள் அழுது கொண்டே இறுதியாய் அவனைக் கடந்து போனாள். அந்த அழுகை ஆயிரங்காலத்துப் பாவச்சாபத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டுப் போவது போலுணர்ந்தான்.

அவள்  போய் 5மாதங்கள் கடந்திருந்தது. ஆனாலும் அவள் ஞாபகங்களைவிட்டு அகலாமல் அவன் இதயத்தில் கதிரை போட்டு உட்கார்ந்திருந்தாள். பிறகொருநாள் கதிரேசன் கோவிலில் எதேச்சையாக நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. தெரியாதவள் போலவே கடந்து சென்றாள். அனால் அவனால் அவளது மௌனத்தைக் கடந்து செல்ல முடியவில்லை. அவன் அன்றைக்கு அவளையே பார்த்தான்.

ஒருத்தியின் மனசில் ஆசையை வளரச் செய்து அதனைக் காதலாகக் துளிர்க்கச் செய்து  அவளை அழ வைத்து துயரைக் கொடுத்த தனது மூஞ்சி மீது சின்னக் கோபமும் வந்தது. எத்தனையோ பேரை பணிசார்ந்து பழகியதும் சந்தித்ததும் உறவுகள் நீடித்ததும் அவனது கடந்த பாதையில் பலரைக் கடந்திருக்கிறான். அவள் மட்டும் அவனைக் கடந்து போக விடாமல் கண்களில் கண்ணீரைப் பூக்க வைத்ததற்கான காரணத்தைத் தேடினான். மண்டையைக் குடையும் அந்த மர்மத்தை மட்டும் கடைசி வரையும் அவன் கண்டு பிடிக்கவேயில்லை.

இன்னொரு முறை இந்த உலகில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டினான். அவளைக் காதலித்து திருமணம் செய்து வாழ ஒரு பிறவிக்கு அப்போதே கடவுளிடம் விண்ணப்பித்துக் கொண்டான்.

பொhடியளுக்கு பெட்டையளில காதல் வாறதும் பெட்டையளுக்கு பொடியளில காதல் வாறதும் பெரிய புதினமில்லையடா தம்பி....காதலுக்காக ஒருதரும் உயிரை விடாயினம்....அங்கினைக்கை ஞாபகத்தில வைச்சு சிலவேளை அழக்கூடும்....உதெல்லாத்தையும் விட்டிட்டு தந்த வேலையைச் செய்....அக்கா இதைத்தான் கடைசியாய் சொன்னாள்.
000                   000               000

இலட்சியத்தின் முன்னால் அவனது காதல் தோற்றுப்போனது. தனக்கான பணியில் கவனமாக இயங்கத் தொடங்கினான். தனக்கான இலக்கைத் தேடிய பயணத்தில் அவனுக்கான நாள் இடம் தெரிவாகியது.

வாழ்வின் முழுமையும் அர்த்தமும் அன்றைய முடிவில் எழுதப்படுமென்று நம்பினான். அன்றைக்கு அவன் தெளிவாகவே புறப்பட்டான். தாயக மீட்பிற்கான தனது கடமையை முடிக்கும் கனவோடு தடையொன்றை அகற்றி அந்தக் காற்றோடு கல(ரை)ந்து போய்விடும் கடைசித் தருணமும் கடைசி வினாடியும் அது....!

அதிர்ந்த பேரோசையின் முடிவில் அவன் துகள் துகளாகிக் கரைந்தான். முகம் மறைந்தது முகவரி மறைந்தது குரலும் மறைந்தது அவன் கொள்கை மட்டும் உறுதியோடு வரலாற்றில் அவனை எழுதிக் கொண்டது. இருள் கலைந்து விடியும் நாளிலும் வெளியில் வராத அவனது வெற்றியும் வீரமும் மௌனமாக இருளின் வெளியில் ஒளியாய்....!

அவன் ஒளிபொருந்திய சூரியனாய் நட்சத்திர வெளிகளில் ஒளிப்பொட்டாகி அக்காவின் கண்ணில் ஈரமாக அவனது நினைவுகள் ஈர நினைவாக....பல்லாயிரம் மைல்கள் கடந்து ஒளிதரும் விடிவெள்ளியாய் அவன் அக்காவின் நெஞ்சிலும் அவனைப் பொத்தி வளர்த்து வழிகாட்டி வழியனுப்பியவர்கள் நினைவுகளிலும் நிரந்தரமாகினான்.....!

04.11.2012
- சாந்தி நேசக்கரம் -

No comments: