Tuesday, January 14, 2014

மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு)

இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)



அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.



அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிகள் விழித்திருக்க இருக்கிறேன். திரும்பத் தூங்க முடியாது அந்தக்குரல் அடிக்கடி வந்து போனது.


என்ன நித்திரை கொள்ளாம எழும்பியிருக்கிறீர்....?
இது என்னவனின் குரல்.
நித்திரை வரேல்ல....
வாரும் வந்துபடும்...
இல்லை கொஞ்சநேரம் இருக்கப் போறன்...
சொல்லிவிட்டு அதே இடத்தில் இருக்கிறேன்.



ஏதோ அந்தரமாய்..... யாரையோ பறிகொடுத்து விட்டதான உணர்வில் மனம் துடிக்கிறது. எழுந்து போய்ப்படுக்கிறேன். மீண்டும் உறங்க எடுத்த முயற்சி தோற்றுப் போய் எழுகிறேன்.


இன்று அவன் தொடர்பு கொள்வான். அது ஏதோவொரு சோகத்தை எனக்குத் தந்துபோகும். என் ஆன்ம உணர்வின் அதிர்வு அது. அந்த அதிகாலையில் முகம் கழுவி விபூதி பூசிக் கடவுளைக் கும்பிடுகிறேன். கடவுளே ஒருத்தருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது. அவர்கள் யாரையும் நமது தேசம் இழக்கக்கூடாது. இழப்பில்லாத வெற்றியை அவர்கள் பெற்று அவர்கள் வெல்ல வேண்டும். ஆண்டவரே அவர்களை அந்தச் சிங்கங்களின் கண்களிலிருந்து காத்துக்கொள்.


இல்லை. அவன் ஒரு சேதியைக் சொல்லப்போகிறான்.....நீ.... அந்தச்சேதியில் உடைந்து.....நொருங்கப் போகிறது உனது ஆன்மா.....ஏதோவொரு அசரீரீ என்மனமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.


அக்கா சொல்லுங்கோ நேற்று நடந்த சம்பவத்திலை அது உண்மையாமெண்டு.
எனக்கும் சரியான காச்சலெண்டும் சொல்லுங்கோக்கா....!
சொல்லீட்டு ஒருக்கா என்னண்டு சொல்லுங்கோ நான் நிக்கிறன்....
என் பதிலுக்குக் காத்திராது தன் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான்.



அவனது தொடர்பிலக்கத்தைக் குறித்த கடதாசியில் அவனது பெயரைப் பதிவாக்கியது பேனா. அவர்களின் இலட்சியம் சுமந்து பாதியில் ஒருவன் பயணம் முடியமுன்னரே பலியாகிவிட்டான். அவனது இழப்பில் அவனது அவர்கள் இடிந்து போவார்களா.......? இதயம் முட்ட சோகம் சுமந்து ஊமையாய் அழுவார்களா.....? இல்லை அவர்கள் கொண்ட கொள்கையில் இன்னும் வீச்சடைவார்கள்....! வீரமுடன் இன்னும் பலர் அவன்வழியில் எழுவார்கள்....


அவனின் அவர்களின் மனங்கள் துடிக்கும் அந்தச்செய்தியை அவர்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன். அவன்தான் அவனின் குரல்தான்.


என்னவாமக்கா....?
உங்களைக் கவனமா இருக்கட்டாம்...!
கண்டபாட்டுக்கு வெளியளிலை திரிய வேண்டாமாம்.
கவனமா இருக்கட்டாமோ....?
சொல்லுங்கோ கவனமா இருக்கிறனாமெண்டு.



சிரித்துக் கொண்டு சொன்னான். அவனது அவர்களில் பலரது இறுதி ஊர்வலத்தில் கலந்து , அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகள் எத்தனையோ கடந்த நாட்களில் கரைந்துள்ளது. ஆனால் இத்தனை உறுதியாக , இத்தனை துணிவாக , என்காதுகள் இப்படியொரு செய்தியை இதுவரை கேட்டறியவில்லை. இதுவே முதல்தடவையாகக் கேட்கிறேன்.


அந்தப்பகல் என் நினைவையெல்லாம் அள்ளிக் கொண்டு போனது. அடிக்கடி அவன் குரல் என் செவிப்பறைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. எந்த வேலையையும் செய்யமுடியாது அவனது குரலும் , அவன் தந்த செய்தியும் என் சிந்தை முழுவதும் சிறகடித்துக் கொண்டிருந்தது.


முதல் நாளைய பொங்கலுக்கான வாழ்த்துக்கள் அன்றும் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவனது செய்தியே என் மனசெங்கும் பரந்து கிடந்தது. அநாமதேயமாய் நேற்று சிங்கப்படைகளின் சன்னங்கள் துளைத்து அந்த நகரின் தெருவில் அணைந்து போன அவர்களது அவனுக்காக இதயம் அழுதது.


இடையில் சிலதடவைகள் செய்தி தரும் அவன் குரல் அக்கா என்றழைக்கும். ஏதாவது செய்தியோடு வரும். நாளடைவில் அவன் குரல் வருவதேயில்லை. ஆனால் என் நினைவையெல்லாம் ஆக்கிரமித்துப் போன அந்தக்குரல். அடிக்கடி என்னை அழவும் வைத்து விடும். இடையிடை அவன் நினைவில் பாதியில் தூக்கம் அறுந்துபோய் ஏதோ துயரின் கனவுகள் மனவெளியெங்கும் அலையும். அதிலிருந்து மீழ்வதற்கு அடுத்துச் சில வாரங்கள் கூட ஆகும். பின் அவனது அவர்களின் குரல்கள் வருகின்ற போது அமைதியாகும்.



அன்றொரு அதிகாலை அந்தப்பெரு நகரின் பெரிய மையமொன்று அவனது அவர்களால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனந்தத்தில் மனம் துள்ளிக் குதித்து ஆரவாரித்தது. உலகே அன்று வாய்பிழந்து பார்க்க அவர்கள் செய்த தியாகத்தில் சிங்கப்படையும் கலங்கிப்போனது. அந்தக்களத்தில் அவர்கள் தீயாகி , தியாகத்தின் இமயம் ஏறி காற்றாகி , குருதியில் குளித்துக் கிடந்தசிலரது முகங்களையும் , உடலங்களையும் உலக ஊடகங்களெல்லாம் தலைப்புச் செய்தியாக்கி அடிக்கடி அந்த ஒளிப்பதிவினை ஓடவிட்டுக் கொண்டிருந்தது.


அந்தப்பெரும் மையத்துள் புகுந்து சிங்கப்படைகளையும் ,அவர்கள் அள்ளிக் கொட்டிய குண்டுகளின் ஆணவத்திற்கு அடிகொடுத்து அடங்கிப்போன மூச்சுகளின் முகங்களை இணையங்களும் பதிந்திருந்தது. அவர்களின் முகங்களுக்குள் அவனின் நினைவுகள் ஆன்மாவைப் பிடுங்கியெடுத்துக் கொண்டிருந்தது.


ஏதோ உடன்பிறந்தவர்களை , ஊரில் தெரிந்தவரை , உறவாயிருந்தவர்களை இழந்து போனதான உணர்வில் உயிர் வலித்தது. அந்த மானமறவர்களை ஈன்றவரின் , உடன்பிறந்தவரின் , அவர்களை வீரத்தின் வேர்களாய் ஆக்கி உலகே வாய்பிழக்குமளவிற்கு உயர்த்தி விட்ட உயர்ந்தவர்களுக்கு எத்தனை துயரைக் கொடுக்கும் அவர்கள் நினைவு...! அதேபோல் என் ஆன்மாவும் அவர்களை அடிக்கடி நினைவில் ஆழ்த்தி நெஞ்சு கலங்கியது.


அவன் குரல் இப்போ வருவதேயில்லை. வருடம் ஒன்றும் முடிந்து போனது. அவர்களின் தியாகங்களின் பெறுமதி எல்லோரும் ஊர் காணும் அமைதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஊர் போயிருந்தேன். அவனின் அவர்களுடன் கதைத்து , சிரித்து அவர்களுக்குள் அவனது குரலைத் தேடியது என் ஆன்மா. யாருக்குள்ளும் அந்தக் குரல் இருக்கவில்லை. அவர்கள் நினைவுகளோடு வந்தாயிற்று.


பொங்கல் , வருடம் , தீபாவழி , பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் , நலம் விசாரித்து அவர்கள் எழுதுகின்ற கடிதங்கள் எல்லாம் வருகிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளைத் தருகின்ற அந்த எழுத்துக்கள் இதய அறைகளிலும் , எனது நாளேட்டிலும் பத்திரமாயிருக்கின்றன. அவனது குரலும் அவனும் அமைதியாயே..... வந்து போகிறது பொங்கல் தினம். அவனது குரல் இப்போதும் என் இதயத்தில்க் கேட்கிறது. அவன் எங்கிருப்பான்...?


அன்பான நண்பா....,
எங்கிருக்கிறாய் நீ...!
கல்லறையிலிருக்கிறாயா......?
அல்லது யாரும் காணாமல் வெடித்தாயா......?
ஊர்; சொல்லாமல் ,
உறவுகள் தெரியாமல்
உறங்கிடுவோர் வரிசையில் நீயும்
அமைதியாய் துயில்கிறாயா.....?
எங்கிருக்கிறாய் நீ.....?
உனது குரல், உனது சிரிப்பு ,
உனது துணிந்த பேச்சு ,
உனது நினைவுகள் எல்லாமே நினைவிருக்கிறது.
நீ எங்கிருக்கிறாய்....?



* 19.03.03 
 சாந்தி நேசக்கரம்

No comments: