Friday, October 18, 2013

உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும்


மாலைநேரத்து வெயிலில்
காய்ந்து வழியும் இலுப்படி நிழல்
உனது அமைதியின் இருப்பிடம்
அங்கே தான் நீ
அதிக நேரத்தைச் செலவிடுவாய்
அங்கே தான் நாங்களிருவரும்
அறிமுகமாகினோம்.

சோளகம் உருவிப்போகும்
இலுப்பம் இலைகளின் உதிர்வில்
வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக்
கதைகள் சொல்வாய்
உதிர்ந்து காயும்
இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து
துளிர்க்கும் குருத்துகளின்
உயிர்ப்பைக் காட்டித்
தைரியம் தந்தாய்
தலைநிமிரச் செய்தாய்.

விடியலைக் காணவிடாத
சமூகச்சாவியை
உடைத்துவரும் வீரத்தையூட்டினாய்
விழியுடைந்துருகிக்
கன்னம் தொடும்
நீர் துடைக்கும்
தோழமை விரலாய்
வெற்றியைக் காட்டினாய்....!

அந்தக் குழந்தைக் காலத்தில்
என் முன்னோடி நீயாய்
நடமாடும் கடவுளாய்
அண்ணனில்லையென்ற குறையை
அன்பைக் கொட்டி
வெற்றிடம் நிரப்பிய
வேங்கையும் நீயானாய்.

சின்ன வயது நினைவுகளில்
உனது குழந்தையாய்
உனது கால்களைச்
சுற்றியலைந்த நாட்களெல்லாம்
இன்றும் தொடர்வது போல....!
என் குழந்தைகளில்
நீயும் ஒருவனாய்
நீளும் கரையெங்கும்
நடந்து வருகிறாய்....!

போர்ப்புலியின் வீரத்தை
போராடும் வீரியத்தை
நெஞ்சில் விதைத்த அருச்சுனனாய்
நினைவுகளில் அழியாத
கதை சொல்லியாய்
நீ சொன்ன வீரரின்
கதைகள் கேட்ட காலங்கள்
கனத்துக் கிடக்கிறது
கவிதைகளாக கதைகளாக உனது
போராட்ட கள அனுபவமாக....!

முதுகில் ஊஞ்சலிட்டுத்
தோழில் சுமந்த தோழன்
கைவிரல் பற்றிக் காலம் உரைத்துக்
காவலனாய் நீ கண்ணாயிருந்தாய்
அண்ணாவென்றொரு உயிரின் பெறுமதி
உன்னால் தானடா
உணர்வில் இன்னும்
உறவின் வாசனையை
நேசிக்க வைத்தாய்.

கனவுகளால் பூத்த இரவொன்றில் - நீ
களமுனையில் சாவடைந்து போனாய்
உயிரிதழ் வலிக்க
உனைத் தேடிய போது
அதிகாலையாய் வந்து சேர்ந்தாய்
அழியாத வரம்பெற்ற
ஆண்டவனாய் தானே
கடைசிப் பிரிவை பிறப்பித்த
மதியப் பொழுதில்
கைவிரல் பிடித்துச்
சத்தியம் செய்தாய்....!

பின் ஏனடா எனைப் பிரிந்து....?

வெறுமை தின்ற
இலுப்ப நிழல் வேரிலிருந்து
உனது தடங்களை
எதிர்பார்த்த காலங்கள்
திரும்பாத உன்னைப் போல
இறந்த காலமாக....!

உன் நினைவோடலையும்
உயிரின் குரல்
உனக்கு மட்டுமே கேட்கும்
எனக்கு மட்டுமேயான துயராய்....
இப்போதும் உனது
காலத்து நினைவுகளை
மீட்டுக் கொண்டேயிருக்கிறேன்.


 2003 மேமாதம். முள்ளியவளை துயிலுமில்லம் போய் வந்திருந்தேன். அந்தநாளின் இரவு தூக்கம் அறுந்து விழித்திருந்த விடியற்காலை எழுதப்பட்டது. )

No comments: