Wednesday, October 2, 2013

இழப்பின் துயரிலும் இழக்காத மனவுறுதியோடு...!

தொலைபேசியழைப்பு வருவதும் தொடர்பு அறுபடுவதுமாக இருந்தது. அந்த அழைப்பு 15வருடங்கள் தொடர்பறுந்து போனவளின் அழைப்பாக இருக்குமென்பதை அறியாத 01.10.2013 இன் தொடக்க நாள்.

நீங்கள் என்னோடை படிச்சனீங்கள் நீங்களும் மேனகாவும் தான் என்னை இயக்கத்துக்கு எடுத்தனீங்கள் என்ரை பேர்.....! இந்த நம்பருக்கு ஒருக்கா எடுங்கோ நான் உங்களோடை கனக்கக் கதைக்க வேணும்.

நானிப்ப வேலையில நிக்கிறேன் இரவு எங்கடை நேரம் 9மணிக்குத்தான் வீட்டை போவன் நாளைக்கு பகல் எடுக்கிறனே....? புறவாயில்லை நான் முளிச்சிருப்பன் மறக்காமல் எடுங்கோ.

அவளது குரலில் பதட்டமும் ஏதோவொரு கதையைச் சொல்லத் துடிப்பது போலவும் அவசரமாகச் சொல்லிவிட்டு தொடர்பை அறுத்தாள். முளிச்சிருப்பேன் என்ற சொல்லுக்குள் ஆயிரமாயிரம் துயரங்கள் புதைந்து கிடந்தது.

குரலில் அவளை யாரென அடையாளம் பிடிபடவில்லை. வேலை முடியும் வரையும் அவள்தான் நினைவில் மாறி மாறி வந்து கொண்டிருந்தாள்.
யாரோ நான் தேடினதுகளில ஒராளா இருக்கும் இவள் நினைத்துக் கொண்டாள். எனினும் ஏதோ ஒரு உறுத்தல் மனசை அலைக்கழித்தது.

வீடு வந்துசேர இரவு 9.40 ஆகியிருந்தது. தோழி மேனகாவை அழைத்தாள்.
எடி எனக்கிண்டைக்கு ஒரு ரெலிபோன் வந்தது...எங்களோடை படிச்ச மருதா போலையிருக்கு. உண்மையாவோடி நாங்ளெல்லோடி அவளை இயக்கத்துக்கு எடுத்தனாங்கள்...? எங்கை நம்பறைத் தா ! மேனகா அவசரப்படுத்தினாள்.

அவளுக்குக் கால் ஏலாதெல்லோடி...? மேனகாதான் ஞாபகப்படுத்தினாள். நான் நெடுக நினைக்கிறனான் நாங்கெல்லாம் வெளிநாடு ஓடியந்திட்டம் எங்களாலைதான் அவளுக்குக் கால் போனது. இவள் சொன்னாள். நானும் உதைத்தானடி நெடுக நினைக்கிறனான்.

சரி நில்லு இப்பிடியே உன்னையும் சேத்து எடுக்கிறேன் கதைப்பம் சரியோ ? மேனகாவையும் ஒரு அழைப்பில் வைத்துக் கொண்டு இவள் தொடர்பை ஏற்படுத்தினாள்.

முதலாவது அழைப்பிலேயே அவள் மறுமுனையில் குரல் தந்தாள். என்னைத் தெரியுமே ஞாபகமிருக்கோ ? அவள் தன்னை இவர்களுக்கு நினைவுபடுத்த முயன்றாள்.

நீங்க மருதாதானே ? மேனகாதான் கேட்டாள். ஓம் என்னை எல்லாரும் மறந்திட்டியள் என அவள் அழத்தொடங்கினாள்.

இதுகும் நான் யாழ்ப்பாணம் போன இடத்தில ஒராள் தான் நம்பரைத் தந்தது. நீங்கள் ரெண்டு பேரும் கதைக்கிறதைக் கேக்க கடவுளாணைச் சொல்றன் நான் கடவுளைத்தான் காணிறன் போலையிருக்கு. அவள் அவர்களது தொடர்பு கிடைத்ததையிட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

மருதாவும் மேனகாவும் இவளும் ஒன்றாகப் படித்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். பாலர் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் ஊர்ப்பள்ளியில் படித்த வரையும் 3பேருமே ஒன்றாகவே திரிவார்கள். ஆளாளுக்கு அந்த வயசுக்குரிய குறும்புகள் குழப்படி யாவற்றிலும் 3பேரின் பெயரும் அடிவாங்கியது அதிகம்.

86இல் இவள் 5ம் வகுப்பு முடித்து 6ம் வகுப்பிற்கு வெளியூர் பாடசாலைக்குப் போகத் தொடங்க மேனகாவும், மருதாவும் ஊர்ப்பாடசாலையைவிட்டு மாறாமல் அங்கேயே படித்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும் மாலைநேரங்களில் ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி தோட்ட வெளியில் இவர்கள் விளையாட்டு ஓட்டம் என நட்பு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஊர்களில் வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்க புரியாத அந்த வயதில் இயக்கம் என்றதை இவர்களும் புரிந்து கொண்டார்கள். விடுதலைக்காக பல இயக்கங்கள் திரிந்த அவர்களது ஊரில் இவர்களுக்கு பிடித்த போராட்ட இயக்கம் புலிகள்தான்.

பலாலியை அண்டிய இவர்களது ஊரில் காலையில் உணவு விநியோகத்திற்குச் செல்லும் விமானம் தரையிறங்கச் செல்ல முன்னும் பின்னும் பலாலியிலிருந்து ஏவப்படுகிற குண்டுச் சத்தங்கள் கேட்டே பொழுது தன்னைப் புதுப்பிக்கத் தொடங்கும்.

ஊர்களை உழுது திரிந்த இராணுவம் முகாம்களில் முடங்கிய பின்னர் இத்தகைய வெடியோசைகளே பல உயிர்களை எடுத்துக் கொண்டிருந்தது. இவர்களது ஊரிலும் பலர் காணாமல் போனார்கள்.

தோட்டவெளியில் பயற்றம் தறைகள் மிளகாய் தறைகளில் இருந்தெல்லாம் இவர்கள் போடும் திட்டங்கள் பெரியது. 3பேரும் சேந்து இயக்கத்துக்குப் போக வேணும். ஆமியைக் கொல்ல வேணும் என ஆளாளுக்கு திட்டமிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

87இல் இந்திய இராணுவம் வந்திறங்கி சண்டைகள் ஆரம்பித்து 88இன் தொடக்கம் இவர்களது ஊரில் புலிப்போராளிகள் வலம் வரத் தொடங்கினார்கள். இவர்களது வீடுகளுக்கும் போராளிகள் வரத்தொடங்கிய போது அவர்களுடனான அறிமுகம் விடுதலையின் தேவையை அவர்களது உறவு மூலம் கற்றுக் கொண்டார்கள்.

அப்படி வீட்டுக்கு வந்து போகும் ஒரு போராளியண்ணனிடம் தங்கள் 3பேரையும்  இயக்கத்திற்கு எடுக்குமாறு போய் நின்றார்கள்.
நீங்க முதல் படியுங்கோ படிச்சு இன்னும் கொஞ்சம் வளந்தாப்பிறகு வாங்கோ இயக்கத்துக்கு...! என அவர்களது விருப்பத்திற்கு முற்று வைக்கப்பட்டது. எனினும் 3பேரும் ஒருநாள் இயக்கத்துக்கு போவது ஆமியைச் சுடுவதென்ற கனவை மட்டும் விடவில்லை.

90களின் தொடக்கம் குழந்தைத்தனம் மாறியதாய் நம்பிய 16 வயதை அடைந்தார்கள். இந்தியப்படைகளின் வெளியேற்றம் ஊர்களில் திரிந்த போராளிகள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து போய் நிரந்தரமாய் இவர்களது நெஞ்சங்களிலும் இடம்பிடித்து பலர் 2ம் கட்ட ஈழப்போரில் வீரச்சாவடைந்து போக போராட வேண்டுமென்று எண்ணத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

2ம் கட்ட ஈழப்போரின் தொடக்கம் மேனகாவும் இவளும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். மருதா பயந்தாள். அவளைவிட்டுவிட்டு போராளிகளாகத் தங்களைத் தயார்படுத்தி பயிற்சிக்கென யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு பெண்போராளிகள் முகாமிற்குச் சென்றார்கள். சில வாரங்கள் திருநெல்வேலியில் அமைந்த பெண் போராளிகள் முகாமில் இருந்தார்கள். தேடி வந்த வீட்டாரைச் சந்திக்க மறுத்து ஒளித்தார்கள்.

மருதாவையும் சேர்க்கும் முயற்சியில் ஒருநாள் வென்று மருதாவையும் இருவருமே இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவர்களது களக்கனவுக்கான பயிற்சிக்கான நாளும் வந்தது. பயிற்சிக்கு சென்றவர்களில் ஒருத்தி நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டாள். இன்னொருத்தி கட்டுவன் காவலரணில் கடமைக்குச் சென்றிருந்தாள்.

3பேரும் ஒன்றாகவே போவோம் போராடுவோம் என்றிருந்தவர்களில் ஒருத்தி நோயுற்றாள் , இன்னொருத்தி களத்தில் , மருதாவும் பயிற்சி முடித்துத் தனது முதல் கள அனுபவத்தை ஆனையிறவு ஆகாய கடல்வெளிச் சமரில் சந்தித்தாள்.

ஆயுதப்பயிற்சி இல்லாமலும் தாயகத்துக்கான கடமைகளைச் செய்ய முடியுமென நம்பிக்கை கொடுத்தவர்களின் வழிகாட்டலில் பணிகளில் இணைந்தாள்.நோயுற்று வீடு திரும்பியவள் மீண்டும் தன்னை நாட்டுக்கான பணியில் இணைத்தாள்.

ஆனையிறவுச் சமர்க்காலத்தில்  அகிலன்வெட்டையில் பங்காளியாய் நின்ற போதுதான் மீண்டும் மருதாவைச் சந்தித்தாள். என்னடி நீயிங்கை ? மருதா இராணுவ மிடுக்கோடு சண்டைக்குப் பொருத்தமானவள் போல அவளது நிமிர்வு இவளுக்கே ஆச்சரியமாயிருந்தது.

களம் யாரையும் எங்கேயும் அழைக்கும். எப்போதும் இலக்கின் வெற்றி தேடிய பயணத்தில் கடமை எல்லோரையும் தனது தேவைக்கேற்ப அழைக்கும் என்பதனை ஆளாளுக்கு வீராப்பாய் கூறிக் கொண்டு பணிகளோடு வேகமாகினர்.

ஆளாளுக்கு பிரிந்து போனார்கள். அவரவரும் தங்களுக்கான பணிகளோடு எப்போதாவது எங்காவது சந்திக்கக் கிடைத்தால் சந்தித்தது மட்டும் தான். பெரும் கனவுகளைச் சிறுவயது முதலே வளர்த்து பெரிய தாக்குதல்களில் பங்கேற்க வேண்டுமென்ற கதைகள் திட்டங்கள் வயது மாற மாற வெவ்வேறு வடிவங்களில் பயணம் தொடங்கியது.

ஓன்றாயே போராடுவோம் என்ற சின்ன வயதுக் கனவை ஒருத்தி ஊடறுத்துக் கொண்டு காரணம் சொல்லாமல் புலம்பெயர்ந்தாள். கடைசியில் மருதா மட்டுமே தொடர்ந்து சொன்னபடி களம் கண்டாள். களமொன்றில் விழுப்பண்ணடைந்து ஒரு காலையும் இழந்தாள்.

காலம் யாரையும் பார்த்துக் காத்திருக்காமல் தன் பயணத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காலத்தோடு 3பேரின் கனவுகளும் வௌ;வேறாகி விதியென்றும் இதுவே வாழ்வென்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போனார்கள்.

ஒன்றாய் திரிந்த மருதா  ,மேனகா நினைவுகளில் வந்து போனாலும் அவர்களை மீளவும் சந்திக்கும் கனவோடு இவள் காத்திருந்தாள். எல்லாமே கனவு போல வாழ்வும் மாறிப்போனது வயதும் ஏறியது. ஆனால் சின்ன வயதில் நேசித்த தாயக விடுதலைப்பற்று மட்டும் எப்போதும் போலவே இதயத்தில் சுகமான சுமையாக....!

2000தொடக்கம் அறுபட்ட தொடர்புகள் கடிதங்களாகத் தேடி வந்து இவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. புலம்பெயர்ந்தாலும் நிலம் மறக்காதவர்களுக்கான அழைப்பாக அந்த மடல்கள்....!

அந்த நேரம் தாயகத்துக்கான பணிகளைச் செய்யும் கனவோடு இவள் தன்னையும் இணைத்தாள். மௌனமாக செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபட்டு நிறைவேற்றப்படாத களம் காணும் ஆசையை தற்கால பணிகள் மூலம் ஈடு செய்யலாம் என்ற எண்ணத்தில் நிலம் தாண்டிய புலத்தில்....!

2002 யுத்த நிறுத்த காலத்தில் ஊரை உறவை பழைய நண்பர்களை யாவரையும் காணும் கனவோடு விமானமேறினாள். சில வருட கால இடைவெளி பலவிதமான மாற்றங்கள் இழப்புக்கள் என எத்தனையோ பெரிய வரலாற்றையும் வலிகளையும் சுமந்த ஏ9 நெடுஞ்சாலை வழியே இழந்த கனவுகளை மீளப் பெறும் நினைவோடு போனாள்.

மீண்டும் சந்திக்க விரும்பிய மேனகா, மருதாவை இவள் தேடினாள். மேனகா 1997இல் துண்டு குடுத்து விலகி அரபு நாடொன்றில் இருப்பதாயும் மருதா 1996இல் சண்டையில் காயமடைந்து காலொன்றை முழுதாக இழந்து போனதாகவும் அறிந்தாள்.

மருதா இருப்பதாய் சொல்லப்பட்ட இடங்களிற்கெல்லாம் தேடிப்போனாள். மருதா வேறெங்கோ வேலையில் நிற்பதாகச் சொன்னார்கள். இப்போதைக்கு மருதா நிற்கும் இடத்திலிருந்து வெளியில் சந்திப்பதற்கு வரக்கூடிய சாத்தியம் இல்லையென்று சொன்னார்கள்.

ஆனால் மருதாவை மறக்காத ஒரு தோழி இன்னும் இருக்கிறாள் என்பதனை மட்டும் அவளுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றெழுதி அவள் திரும்பி வந்தால் பணியாற்றும் இடமெனச் சொல்லப்பட்ட இடத்தில் பொறுப்பாயிருந்தவரிடம் கொடுத்துவிட்டு புலம் திரும்பபினாள்.

ஏற்கனவே இருந்த தொடர்புகள் உறவுகளைச் சந்திக்கச் சென்று புலம் திரும்பும் போது மேலும் பலரின் நட்புகளைச் சுமந்து கொண்டு இவள் ஐரோப்பா வந்தாள். மருதா இந்தக்கால இடைவெளியில் எவ்வித தொடர்பும் எடுக்கவில்லை.

காலம் எல்லாக் கனவுகளையும் தின்று முடித்து 2009 எதை நினைக்க எதை மறக்க எவரை நினைக்க எவரை மறக்க ? என மனங்களைச் சோர வைத்த காலத்தில் அவள் நேசித்தவர்களுக்காக புலத்திலிருந்து செய்ய வேண்டிய மனிதாபிமானப் பணியை ஆரம்பித்த போது ஆளாளுக்கு அடித்த நக்கலும் நையாண்டியும் எத்தனையோ பொழுதுகள் அழுது கரைத்திருக்கிறாள்.
 ஆயினும் நிலத்தில் இருந்து வருகிற அழைப்புக்களும் குரல்களும் எல்லாவித அழுத்தங்களையும் உடைத்துக் கொண்டு எழ வைத்துக் கொண்டிருந்தது.

மேனகாவும் திருமணமாகி இவள் வாழும் நாட்டிலேயே வாழ்வதாக அறிந்தாள். மேனகா இவளது தொடர்பிலக்கத்தைத் வானொலியொன்றில் அறிந்து அறுந்து போன தொடர்பை மீண்டும் புதுப்பித்தாள். மருதாவை நினைப்பார்கள் ஆனால் அவள் எவ்வித தொடர்புகளும் இல்லாது போயிருந்தாள்.

பழைய நினைவுகளை மருதாவோடு பகிர்ந்தார்கள். இப்போது தங்கள் குடும்பங்கள் குழந்தைகள் பற்றிய விசாரணையில் வந்து நின்றார்கள்.
இப்ப என்ன நிலமையில இருக்கிறாய் ? அதைச் சொல்லன் மருதா என இவள் கேட்டாள்.

என்ரை பிள்ளையளுக்கு சோறு குடுக்க நான் இஞ்சை ஏறாத படியில்லையடி...! கோவிலுகள் சேச்செண்டு நான் தினமும் இந்த ஒற்றைக்காலை இழுத்துக் கொண்டு ஓடித்திரியிறதை யாருக்குச் சொல்லியழுறதெண்டு தெரியாமல் நான் துடிச்சனடி....!

நான் பட்ட  துன்பத்தை யாரிட்டைச் சொல்லியாறவெண்டு எத்தினை நாள் அழுதிருப்பன் தெரியுமே ? என்ரை பிள்ளையளும் ஏலாததுகளாப் போட்டுதுகள் கடைசிநேரம் விழுந்த எரி குண்டு பட்டு ஒண்டு போட்டுது மற்றதுகளும் காயங்கள் பட்டு ஏலாததுகள்...மனிசனும் காலும் கையும் இழுத்து படுக்கையில என்னாலை சமாளிக்கேலாதாம் ஏதாவது ஏலுமெண்டா உதவுங்கோ ? நான் உங்கள் ரெண்டு பேரையும் மட்டும்தான் உரிமையோடை கேட்கேலும்.

அவள் கண்ணீரால் தனது கடந்தகாலத் துயர்களையும் நிகழ்காலத் துன்பத்தையும் கழுவிக் கொண்டிருந்தாள். அவளது கதைகள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தது.

தாங்கள் மட்டும் கால் கையெல்லாம் குறைவில்லாமல் ஐரோப்பாவில் வாழ தாங்கள் போராளிகளாக இணைத்த மருதாவும் மருதா போன்ற பலரும் துயரங்களோடு வாழ்வது உறுத்தலாகவே இருக்கும். பலமுறை இவளும் மேனகாவும் அடிக்கடி நினைவுபடுத்திக் கதைப்பார்கள்.

ஒருமுறை ஒரு ஊரில் பல பெண்பிள்ளைகளை போராளிகளாக இவர்கள் சேர்த்தார்கள். சிலர் வீட்டார் போய் அழுததும் ஏதோ தங்களை கட்டாயமாக இவர்களே கொண்டு போனது போல வீட்டாருக்கு போட்டுக் கொடுத்த போது பல அம்மாக்கள் மண்ணள்ளியெறிந்து இவளையும் மேனகாவையும் திட்டினார்கள்.

அந்த மண்ணும் திட்டும் அப்போது பெரிதாக எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது அந்த அம்மாக்களின் கண்ணீரை இவள் நினைத்து மனம் குழம்பிப் போவதுண்டு. அதனை மருதாவுக்கும் சொன்னார்கள். இவள் அழுதுவிட்டாள்.

நானொரு நாளும் உங்கள் ரெண்டு பேரையும் மனம் நொந்ததில்லை...! அண்ணையாணைச் சொல்றன் நீங்கள் கூட்டிக்கொண்டு போனதாலைதான் என்ரை கால் போனதெண்டும் நினைக்கேல்ல என்ரை நாட்டுக்கு என்னாலை முடிஞ்ச எல்லாத்தையும் செய்தன் ஆருக்குத் தெரியும் இப்பிடி முடியுமெண்டு....! அண்ணையிருந்தா நாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கமாட்டம் இதைத்தான் நெடுக நினைக்கிறனான்.

இந்தா இப்ப நானிருக்கிற காணியில இருந்து 500மீற்றர் தூரத்தில மாவீரர் துயிலுமில்லம் இருந்த நிலம் இருக்கு....நினைச்சா நெஞ்சு வெடிக்கும்...எல்லாத்தையும் அழிச்சுத் துடைச்சு இப்ப குப்பை கூழம் கொட்டுறதும் மண் கொட்டுறதும்....கடவுளே அதுகளை நினைக்கத்தான் தாங்கேலாத வேதனை. யரிட்டைப் போய் கேக்கேலும் எப்பயெண்டாலும் ஒருநாள் வருமெண்ட நம்பிக்கையில இருக்கிறம்....!

மாவீரர்கள் பற்றி அவள் சொல்லத் தொடங்கிய போது குரலெடுத்துக் கத்தியழுதாள். தன்கையால் விதைத்த தோழமைகள் பற்றி அவர்கள் கனவுகள் பற்றியெல்லாம் சொல்லிச் சொல்லியழுதாள்....!

குடும்பம் முழுவதும் காயமுற்று ஊனமாகி அன்றாட உணவுக்கே வழியற்றுப் போன நிலமையிலும் தாயகத்தின் மீதான காதலும் காலம் அழைத்தால் மீண்டும் கடமைக்காக காத்திருக்கிற அவளது உறுதியும் எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த இவர்களை ஆச்சரியப்பட வைக்கவில்லை. தங்கள் கையறு நிலமையே உறுத்திக் கொண்டிருந்தது.

இரண்டரை மணித்தியாலம் கதைத்தும் முடியாத அவர்களது பல வருடங்களின் நினைவுகள் மருதாவின் இன்றைய நிலமையையே எண்ணிக் கொண்டிருந்தது.

நாட்டுக்காகத் தனது குடும்பத்தையும் ஊனமாக்கி இன்னும் உறுதி தளராத மருதாவுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணமே இருவர் மனசிலும் ஓடத் தொடங்குகிறது.

01.10.2013

No comments: