Sunday, May 31, 2009

சிங்கம் சீமானும் சிறுத்தை திருமாவும் பேசாமல் இருங்கோ.



//இதுவரை நடந்தது முன்னோட்டம்தான். இனி தாண்டா போர் நடக்கப் போகிறது. 5ஆம் கட்டப் போரில் பிரபாகரன் கடைப்பிடித்த மரபுகளை நாங்கள் கடைப்பிடிக்கப் போவதில்லை. ஒரு சிங்களவன் கூட நிம்மதியாக உறங்க முடியாத அளவிற்கு தாக்குவோம். கொழும்பு நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். மானமுள்ள கடைசி ஒரு தமிழன் இருக்கும்வரை சிங்களவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.//


இப்படிச் சீறியிருப்பவர் இயக்குனர் சீமான். இதைப் பார்த்து அழுவதா ? அனுதாபப்படுவதா ? எதைச் செய்ய ?

இறுதிக்கட்டப்போரென்று சிங்களவன் நடத்திய போரில் நாங்கள் இழந்தது ஐ.நா கணக்கெடுப்பின்படியே 20ஆயிரத்தைத் தாண்டுகிறது. ஐ.நாவின் பதிவைத் தாண்டி 50ஆயிரம் வரையில் இறுதி யுத்தம் கொன்று குவித்துத் தின்ற உயிக்கள் , மிஞ்சிய 3லட்சம் பேரின் எதிர்காலத்தின் கதியையெண்ணிச் சாகாத பிணங்களாகத் தமிழர் துடிக்கிறோம்.

இதுவரை தமிழீழ விடுதலைப்போரில் இழந்த உயிர்களின் தொகை லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. எங்கள் இலட்சியங்களை விட்டுவிட்டு எங்கள் மக்களின் ஏதிலியான நிலைமை மாற ஏது செய்வோமென்று உலகையும் உள்நாட்டில் உள்ளவர்களையும் நம்பி ஏமாந்து போயிருக்கிறோம். மே17…18..19…வரையில் நந்திக்கடல் முனைவரை சிந்திய குருதியின் நெடில் ஆறாமல் நொந்து போயிருக்கிறோம். ஏன் ? எப்படி ? எதற்காக ? இப்படியாக்கப்பட்டோம் என்றெல்லாம் ஆலோசிக்க அவகாசமின்றி அந்தரிக்கிறோம்.

கோட்டையைத் தகர்ப்போம் கொடுங்கோலை முறிப்போமென்ற கோசங்களை மறந்து கொள்ளைபோன எம்மவரின் நினைவுகளில் தினமும் சாகிறோம். யுத்தத்தின் கோரம் எதுவென்பதை வீரம்பேசிய யாவரும் எங்களுக்காய் இறுதிவரை களமாடிச் சரிந்தவர்களையும் இழந்து போய் இனியேது என்ற துயரில் ஓடிந்து போயிருக்கிறோம்.

எங்களுக்காகக் குரல் கொடுத்துச் சிறைசென்று வந்த தோழர் சீமானின் சீற்றத்தை எத்தனையோ தரம் மீளமீளக் கேட்டு வியந்து போயிருந்த நாம் இப்போது நிரந்தரமான அமைதியொன்றுக்கான கதவுகளைத் திறக்க திறவுகோல்களைத் தேடிக் கொண்டிருக்க.., இப்போது சிங்களவனை விடோம் , கொழும்புக்குள் புகுந்து தாக்குவோம் , மானமுள்ளவர்கள் சிங்களவரோடு போராடுவோம் என்று கர்ச்சித்து என்னத்தை வாங்கித் தரப்போகிறீர்கள் சீமான் ?

இது சினிமாவில் வந்து ஒருவர் நூறுபேரை அடித்து வீழ்த்தி வெற்றிபெறும் களமென்று நினைக்கிறீர்களா சீமான் ? மேடையில் ஏறி உணர்ச்சி சொட்டப்பேசிக் கைதட்டல் வாங்கும் கைங்கரியமென்றா கனவுகாண்கிறீர்கள் ? இது தமிழக அரசியலில் தேர்தல் வாக்குறுதிகள் போல் வார்த்தைகளால் வசியம் பண்ணும் விசித்திரமா ? சொல்லுங்கள் சீமானே ?

எங்களுக்கென்றொரு தலைவன் இருந்தான். எங்களுக்கு எல்லாமுமாக அவன் இருந்தான். சூரியனாய் எங்களில் சுடர்விட்டெரிந்தான். வாழும்வரை போராடுவேனென்றபடி வாழ்ந்து முடியும் வரை எங்களுக்காகவே போராடி மடிந்தான் அல்லது மறைந்தான். எங்கள் தலைவனின் பின்னே ஆயிரமாய் ஆயிரமாய் அணிசேர்ந்த தோழரும் தோழியரும் கொத்துக்கொத்தாய் செத்துமடிய நாங்கள் எதுவுமே செய்ய இயலாதோராய் அழுதோம்.
அதற்கடுத்து இந்த உலகத்தை ஊரெங்கும் கூடி நின்று உலுப்பியும் எவருமே கண்ணெடுத்தும் காணாமல் கண்மூடியிருந்தார்கள். கடைசி நிமிடம் வரை நம்மைநாமே சமாதானப்படுத்திச் சர்வதேச அரங்கையும் அசைத்துக் கடைசியில் கண்ணீரஞ்சலி கூடச் செலுத்த முடியாமல் எங்களுக்கு எல்லாமுமானவர்களை இழந்து போனோம். உங்கள் உணர்ச்சிமிகு பேச்சுக்கள் எங்கள் தளபதிகளை தலைவனைக் காப்பாற்றவுமில்லை. கரை சேர்க்கவுமில்லை. நட்டாற்றில எங்களை நாதியற்றுப் போகும் நிலையில் விட்டுள்ளது.

இப்போதெல்லாம் நாங்கள் விரும்புவது எங்கள் சூரியதேவனும் அவனைச் சுற்றிவந்த சுதந்திரப் போராளிகளும் நேசித்த மக்களின் ஒரு நிம்மதியான வாழ்வு மட்டுமே. அதிகபட்ச உரிமையாக அவர்களுக்கான பாதுகாப்புடன் கூடிய ஒரு தீர்வையே. அதற்கும் அப்பால் எதையும் எங்களால் எண்ணிப்பார்க்க எதுவுமில்லை. போதும் எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

நேதாஜியைத் தொலைத்துவிட்டு இந்திய தேசம் சத்தியாக்கிரகம் என்று சுற்றிய காந்தியால் சுதந்திரம் பெற்றதாய்க் காட்டி இந்திய சுதந்திரப்போராளியை வெள்ளையன் விழுங்கினான். அதுபோல் எங்கள் வல்லமைத் தலைவனைத் தளபதிகளை வஞ்சத்தால் அழித்தது வல்லரசுக்கூட்டம்.போராடும் இனங்களுக்குப் பரிசாய்க் கிடைப்பது எதுவென்பதை வரலாறுகள் தந்த பாடங்களிலிருந்து புரிந்து கொள்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள்.

அயலில் களக்கொலை நடக்க உங்கள் ஊரில் கள்ள மெளனம் சாதித்து எங்கள் காவியங்களைக் கொன்ற கள்வர்களுக்கெல்லாம் சாட்சியாய் இருந்தவர்களைத் திருத்துங்கள். அவர்களது நிம்திமதியைத் தட்டி எங்கள் அழிவுக்கு நீதி கோருங்கள். அதுவே எங்கள் தலைவனுக்கும் தளபதிகளுக்கும் ஆயிரமாயிரம் போராளிகளுக்கும் , அழிந்து போன மக்களுக்கும் நீங்கள் செய்யும் கடைமையாகும். எங்களுக்காய் குரல் கொடுக்கும் உங்களை உதாசீனம் செய்வதாய் எண்ண வேண்டாம். இழந்து போன வலி தீர இன்னும் சில தசாப்தங்கள் தேவையெங்களுக்கு. பசித்தவனுக்கு பசிமாற முதலில் உணவழித்துவிட்டுச் சுதந்திரத்தைப் பற்றிச் சுவையாக உரைக்காலம் என்பதை அனுபவத்தால் பட்டறிந்துள்ளோம். ஆக அனல் கக்கும் பேச்சுகள் கேட்கவும் கைகொட்டிக் கூச்சலிடவும்தான் பயன் மற்றப்படி ஏதுமில்லை.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ! சீமானுக்கு ஓர் படிமேலே போய் `´நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4 ஆவது கட்ட போர் முடிந்து விட்டது. 5 ஆவது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும்`´ எனச் சிறுத்தை போர்வெடிக்கும் நாளை பேராவேசத்துடன் பேசியுள்ளார்.

திருமாவின் தலைவரும் தலைவரின் மகளும் முள்ளிவாய்க்காலில் களக்கொலை நடைபெறும்வரை டில்லியுடன் என்னத்தைக் கதைத்தார்களென்ற மர்மம் திருமாவே உங்களுக்கும் தெரியாதா ? உங்கள் அரசியல் எழுச்சிகளுக்காக எங்களின் உயிர்களோடு இனியும் இறுமாப்புக் கதைகள் பேசாதீர்கள். நீங்கள் செய்திகளில் சாவைப் பார்ப்பவர்கள் ,சினிமாவில் சண்டியர்களைத் தோற்கடிப்பவர்கள். களநிலையும் தமிழர் கடந்த நாட்களின் கடைசி நிலையும் அனுபவித்து அழிந்தோர் தமிழர். அண்ணே ! பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்.

இதுவரை எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவுகளுக்கு நன்றிகள். நாங்கள் செத்துப்போகும் வரை காத்திருந்து மீண்டும் சாகடிக்க உங்கள் தலைவர் காத்திருக்கிறார். உங்கள் அன்பும் ஆதரவும் இனி உங்கள் ஊரிலுள்ள பொய்களைக் கிழிக்கட்டும் எங்களை உசுப்ப வேண்டாம். எங்களை வாழவிடுங்கள். இனிச்சாகவோ சண்டித்தனம் பண்ணவோ சக்தியில்லை.. எந்தச்சனியின் காலில் வீழ்ந்தாயினும் எங்கள் மக்களுக்கான நிம்மதியை நாங்கள் பெற்றிடுவோம். இனிமேல் உங்கள் ஈழ ஆதரவு உணர்ச்சிகள் நிறைந்தாய் இல்லாமல் உணர்வோடு வளரட்டும்.

31.05.09

14 comments:

சங்கே முழங்கு said...

வழிமொழிகிறேன், வேறேதும் செய்யவியலாமல்.

சாந்தி நேசக்கரம் said...

கருத்திட்ட நண்பரே வணக்கம்,

எங்களுக்கு ஆதரவாகக் குரல் தந்தவர்களையே இப்படி எதிர்த்து எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். நொந்து போனவர்களுக்கு மீண்டும் துயர் தருவது போன்ற இந்த உணர்வாளர்களை யதார்த்த்தைச் சிந்திக்கும்படி சொல்கிறேன். நிச்சமயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில்.

தங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

சாந்தி

தமிழ்நதி said...

சீமானின் சீற்றத்திலாவது ஒரு நியாயம் இருக்கிறது. திருமாவளவனை நம்பித்தானிருந்தோம். கடைசியில் என்னவாயிற்று? தேர்தல் மேடையில் காங்கிரஸை நம்புவதாகச் சொன்னவர் அல்லவா அவர்? என்னவோ நடக்கட்டும். நாங்கள் மனம் விம்மி வெடித்துச் சாகவேண்டியதுதான். கடைசியில் அவர்கள் எல்லோரும் முடிந்தே போய்விட்டார்களா...? நம்ப மறுத்தாலும்...

சாந்தி நேசக்கரம் said...

நாங்கள் நம்பியவர்கள் எல்லோரும் நாடகர்களாகி நாங்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளோம் தமிழ்நதி.

இன்னும் நம்புங்கள் என்று நம்மை எமாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மனம் விம்மி மனநோயாளர்கள் போல நாங்கள் சாவதைத்தான் இந்த நம்பிக்கையின் சிகரங்கள் விரும்புகின்றனவோ என்னவோ?????

சாந்தி

Anonymous said...

இப்பிடி உசுப்போத்தி உசுப்பேத்தியே நாங்கள் உருக்குலைந்து பொய் நிக்கிறம்

சாந்தி நேசக்கரம் said...

//Anonym Anonym hat gesagt...

இப்பிடி உசுப்போத்தி உசுப்பேத்தியே நாங்கள் உருக்குலைந்து பொய் நிக்கிறம்

1. Juni 2009 12:31//

எங்களை உசுப்பி உசுப்பிய அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாந்தி

ராகவன் பாண்டியன் said...

வலி வந்தால் மட்டுமெ அதன் வலிமை தெரியும்! உண்மையில் இங்கு இருப்பவர்கள் வலியினை முழுவதுமாய் உணர்ந்திருக்கவில்லை! செல்வம் கொழிக்கும் சினிமாத்துறையை விடுத்து அரசை எதிர்த்து பேசும் சீமானை குறைசொல்லதெரியவில்லை...தேர்தல் முன்பு வரை காங்கிரசை எதிர்த்த திருமா,பின்பு கட்சி மாறி இப்படி பேசுவது வெட்கக்கேடு!இங்குள்ள தமிழன் எவனும் தங்களை போல் நினைப்பது இல்லை,மீண்டும் அந்த மக்கள் தலைவன் வருவான்..பெரிய போராட்டம் ஒன்று வெடிக்கும் என்றே நம்புகிறார்கள்,ஏன் நானும்! தங்கள் கருத்தின் மூலமாக எங்கள் நோக்கங்களை மாற்றிகொள்கிறோம்...
எனினும் நம்பிக்கை இருக்கிறது..என் சகோதரன்,சகோதிரிகளை நாசம் செய்தவன்,தண்டனை அனுபவிப்பான்..

Anonymous said...

*எங்களை உசுப்பி உசுப்பிய அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- சாந்தி*
100% வீத உண்மை.

சாந்தி நேசக்கரம் said...

அன்புடன் இராகவன் பாண்டியனுக்கு,
தங்களை எனது எழுத்துக்கள் மனம் நோகப்பண்ணியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

கடைசிவரை ஈழத்தமிழருக்காகவே இதயம் துடிப்பதாகச் சொன்ன திருமா அவர்கள் திசைமாறி எங்கோ நிற்கிறார். ஆனாலும் புலிகளாக தாம் இருப்பதாக வாயால் மட்டும் சொல்கிறார். உண்ணாவிரதத்திலிருந்து திருமா மீண்டு எங்களுக்காக வாழ வேண்டுமென நாங்கள் வேண்டினோம். ஏனெனில் எங்களுக்காகக் குரல் கொடுத்தவர்.ஆனால் அவரது அரசியல் நிலைப்பாடு ???? நாங்கள் செத்துச்சரியச் சரிய உணர்ச்சிப் பேச்சுகளால் நிறைந்தது தவிர எதையும் அசைத்துப் போடவில்லை.இது ஒரு வகையில் அவரது நிலமையை நாம் புரியவில்லையோ என்னவோ.

எங்களுக்காக என்றென்றும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர் சீமான்.ஆனால் இப்போது சிங்களவனைக் கொல்வோம் இதோ 5ம் கட்டப்போரில் வெல்வோம் என வீர முழக்கமிடுவதால் நடைமுறையில் செய்யப்பட வேண்டிய விடயங்கள் தள்ளிப்போய் மீளவும் கனவுகளுக்குள் விழுத்தப்பட்டு விவோமோ என அச்சமாயிருக்கிறது.

3லட்சம் பேரின் வாழ்வு சிங்களவர் கையில் ஊசலாடும் இவ்வேளையில் இப்படியெல்லாம் கனவு காண்பதைத் தவிர்த்துவிட்டு அவர்களின் வாழ்வுக்காக எதையாவது செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.

என் குடும்பத்திலிருந்தே பலர் மிஞ்சிய 3லட்சத்தினுள் தவிக்கிறார்கள். அவர்கள் காக்கப்பட வேண்டும். கனவுகளால் அவர்களது வாழ்வை நிரப்பமுடியவில்லை எங்களால்.

எனது ஆதங்கம் எல்லாத் தமிழர்களுக்குமானது. தயைகூர்ந்து செய்து புரிந்து கொள்ளுங்கள். தங்களைப் புண்படுத்தியிருப்பின் மன்னியுங்கள்.

சாந்தி

வனம் said...

வணக்கம் சாந்தி ரமேஷ்

\\வலி வந்தால் மட்டுமெ அதன் வலிமை தெரியும்\\

எங்களுக்கு வலி வராமல் வலியை உணரமுடிந்தவர்கள் சிலர் இருக்கின்றோம் -- என்ன எங்கள் எதிர்பை, ஆற்றாமையை எவ்வாறு வெளிப்படுத்துவது என தெரியாமல்

என்ன இந்நிலை தொடராது எனும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்

இராஜராஜன்

சாந்தி said...

Blogger வனம் hat gesagt...

வணக்கம் சாந்தி ரமேஷ்

\\வலி வந்தால் மட்டுமெ அதன் வலிமை தெரியும்\\

எங்களுக்கு வலி வராமல் வலியை உணரமுடிந்தவர்கள் சிலர் இருக்கின்றோம் -- என்ன எங்கள் எதிர்பை, ஆற்றாமையை எவ்வாறு வெளிப்படுத்துவது என தெரியாமல்

என்ன இந்நிலை தொடராது எனும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்

இராஜராஜன்
*************************************

ஈழத்தமிழினத்துக்காக என்றும் உணர்வோடும் உண்மையோடும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் போன்ற உணர்வாளர்களை அன்போடு பற்றிக் கொள்கிறோம்.

உங்கள் ஆற்றாமையை எதிர்ப்பை எங்களை ஏமாற்றிய இந்திய அரசை உலகத்தை நோக்கியதாக வெளிப்படுத்துங்கள்.

துயரை அனுபவித்துத்தான் துயரை அறிய வேண்டுமென்பதில்லை இராஜன். உடன்பிறந்தோர் உயிர் நண்பர் துயருறும் போது இயல்பாய் வரும் வலியும் வேதனையும். இந்த உறவுகளாக எங்களை ஏற்றுக் கொண்ட உங்களது உணர்வுகளை என்றென்றைக்கும் மறக்கமாட்டோம்.

எதிர் எதிராக நின்ற ஆசிய வல்லாதிக்க அரசுகள் இன்று ஒன்றாய் நின்று எம்மினத்தைப் பலிகொண்டிருக்கின்றன. அவர்கள் மீதான உலக நீதிமன்றின் விசாரணைக்காக உங்கள் குரல்களை உயர்த்துங்கள். அது எங்களினத்திற்கான அடுத்த பாதையை வழிவகுக்கும்.

ஆயுதம் மூலமான போர் ஈழத்தில் முடிந்துவிட்டது. இனி நாம் செய்யும் போர் எவரையும் அச்சுறுத்தாக வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்கள் ஆதரவுகளுக்காக என்றென்றும் ஈழத்தமிழினம் நன்றியுமையதாகும்.

சாந்தி

கண்டும் காணான் said...

ஆம் சாந்தி , இந்த வீராவேசப் பேச்சுக்களுக்கு ஒன்றும் குறைவில்லை. சீமானைக் கூட விட்டுவிடலாம் . ஆனால் இந்த சிறுத்தைகள் ??? திமுக கூட்டணியில் இருந்து ஈழப் பிரச்னையை தேர்தல் வரை அடக்கி வாசித்து , இப்பொழுது தேர்தல் முடிந்ததும் வந்து விட்டார்கள் . இவ்வாறு அறைகூவல் விட்டு என்னத்தை கிழித்தார்கள்? ஒரு நினைவு கூறல் அந்த ஐம்பது ஆயிரம் மக்களுக்கு ? உங்கள் இந்த அரசியல் தில்லு முள்ளுகளால் எனது என்சயுள்ள மக்களை பலிவாங்கி விடாதீர்கள்

வனம் said...

வணக்கம் சாந்தி ரமேஷ்

\\அவர்கள் மீதான உலக நீதிமன்றின் விசாரணைக்காக உங்கள் குரல்களை உயர்த்துங்கள்.\\

அட இதுகூட செய்யவில்லை எனில் நாங்கள் மனிதர்கள் இல்லை.

\\ஆயுதம் மூலமான போர் ஈழத்தில் முடிந்துவிட்டது. இனி நாம் செய்யும் போர் எவரையும் அச்சுறுத்தாக வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
\\

முடிந்தால் என் வலைபூவில்
புதிய ஆயுதம் கொள்வோம்
படித்துப்பாருங்கள்

இராஜராஜன்

சாந்தி நேசக்கரம் said...

Blogger கண்டும் காணான் hat gesagt...
ஒரு நினைவு கூறல் அந்த ஐம்பது ஆயிரம் மக்களுக்கு ? உங்கள் இந்த அரசியல் தில்லு முள்ளுகளால் எனது என்சயுள்ள மக்களை பலிவாங்கி விடாதீர்கள்
3. Juni 2009 17:39
*************************
முட்கம்பிகளுக்குப் பின்னால் தம் எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் தோழ தோழியரின் துயரம் காலகாலங்களுக்கும் எமக்குள் காயங்களைத் தருமே தவிர மகிழ்ச்சிகளையல்ல.

கருத்துக்கு நன்றிகள் கண்டும் காணான்.

சாந்தி