Sunday, May 24, 2009

சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர்

இயலாப்பொழுதின் புலர்வாய்
ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி
இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்….
எதை இழக்க எதை மறக்க ?
எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை….
எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை
கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய்
கடைசிக்கணங்களின் நுனியில்
சாவின் நொடிகளை நுர்கின்றன….

சந்திப்புகள் சரித்திரக் கதைகள்
சாதனைகளின் நீளமாய்
ஒவ்வோர் நினைவும் முகமும்
கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து
கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும்
மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு
கவிதையும் கடந்தகால நினைவுகளும்
கசங்கிக் காற்றள்ள முன்னம்
கடைசியாய் ஏவப்பட்ட
நவீனக் குண்டின் அதிர்வோடு அழிகிறது…….

நந்திக்கடல் நினைவும்
நிழல்விரித்த வீர வன்னிக் களமுனையும்
நெல்மணிகள் நிரம்பிய வயல்வெளியும்
தோழதோழியரின் கைபற்றி நடந்த தெருமுனையும்
யாருமற்றுத் தனிக்க
முள்ளிவாய்க்காய் முனையில் மிதக்கிறது ஞாபகங்கள்.
கடைசிவரையும் அந்தக் கந்தகப்புகை நடுவே
கடவுளர்களுக்காகக் காத்திருந்து
கனவுகளோடு கிடந்த ஆயிரமாயிரம் உயிர்களின்
கடைசிக்கணங்கள் உலகின் முனையெங்கும்
அவலப் பேரலையாய் ஓங்கி ஒலிக்கிறது.

உலகே வரும் ஒன்றாயெம்மை அள்ளிப்போய்
சொர்க்கம் தரும் கடைசிவரை கனவாக எல்லாம்
கடவுளுமில்லைக் கண்ணகையம்மனுமில்லை
தனியனாய் பதுங்குகுழி மூடிப் பாறைகள் விழுத்திப்
பாதாளம் திறந்து இரத்தமும் சதைகளும்
சகதிக்குவியலில் இலையானின் எறும்புகளின்
உயிர்ப்பசி போக்கி எல்லாம் முடிகிறது…..

நாங்கள் நினைத்திருந்த தாயகமும் விடுதலையும்
ஏதோ ஒரு கையில் இடம்மாறி விழுகிறது.
அது இனி எங்களுக்கானதில்லை
விலைபேசி விரோதிகளின் வாய்களில்
அமெரிக்க டொர்களாய் ஐரோப்பிய யூரோக்களாய்
எங்கெங்கோ விலையாகிக் கொண்டிருக்கிறது.
இலங்கைத் திருநாடு இனி உலகத் திருநாடுகளின்
உற்பத்திக் கழிப்பிடமாய் சீனனின் ஜப்பானியனின்
இந்தியனின் ரஸ்யனின் அமெரிக்கனின்
ஐரோப்பியனின் நிரந்தர நுகர்வாகும்.
நாடற்ற நமது துயரமும் இழப்பும்
யுகங்களுக்கும் மாறாத் துயராய்
பெயர் தெரியா வீதிகளில்
பெயர் தெரியா ஊர்களில் பிணங்களாய்க் குவியும்....

போர்க்குற்றம் உண்மையா பொய்யா ?
உலகின் உயிர்ப்பு உள்ளவரைக்கும்
ஆய்வுகளும் அறிக்கைகளும் நிரம்பி வழியும்.
நீதியரசர்கள் மாறிமாறி வருவார்கள்
ஐ.நா என்றும் அமெரிக்கா என்றும்
கொலைகாரர்கள் சாதாரணமாய்
சென்றுவரச் செத்தவர் நினைவில்
சவங்களாய் நாங்கள்…..

நீதிசாகாதென்று நம்பும் நாங்கள் உள்ளவரை
இன அழிப்பும் இறப்புகளும்
குறையாத செல்வங்களாய்
அள்ள அள்ள நிறையும் அட்சயங்களாகும்.
துரோகங்களும் கூடவிருந்து
குழிபறிக்கும் குணங்களும் கொடையாக
எங்களினம் சாகும்.

காசுக்கும் நல்வாழ்வுக்கும் விலைபோகும்
காக்கை வன்னியர்கள் விளைச்சல் பெருக்கெடுக்க
அவதாரங்கள் அவ்வப்போது பிறந்து வந்து
அழிவோரைக் காப்பாற்ற ஆயுளை முடித்துக் கொள்வர்.

காலம் தந்த கொடைகளைக் கயமைகள் காவுகொள்ளத்
தோற்றுத் தம்மை தீயில் கருக்கிச் சூரியப்பேரொளி
மடியில் அணையும் சூரியக் குழந்தைகள்
காலப்பெருநதியில் கடவுளராய்ப் பிறப்பர்.

கடவுளையே காலில் மிதித்தவராய் போகும்
கண்கெட்டோருக்காய் காவியப் போராளிகள்
காடுகள் மலைகள் யாவிலும் தம் வாழ்வினைத் திரித்துச்
சுதந்திர வாழ்வின் சுகத்தினை எழுதுவர்.
எழுச்சியும் வீழ்ச்சியும் மாறி மாறி
எழும் சூரியப்பேரொளியைச் சுற்றி வரும்.
எங்களின் இனிய தோழரும்தோழியரும்
தவமியற்றி வனங்களிலே தாயகக் கனவுகளோடு வருவர்….
19.05.09

No comments: