Wednesday, May 14, 2014

விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்)

தளபதி ஜெயம்
(பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு)

வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன்.

கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி.  திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே ஜெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான விலாசங்களும் தகுதிகளும். 

வன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன் என்ற ஜெயமண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார். 

சிங்களம் திட்டமிட்டு தொடர்ந்த தமிழின அழிப்பானது வன்னிக் கிராமங்களையும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. சிங்கள எல்லைக் கிராமங்களிலிருந்து வருகிற சிங்களத்தினால் பாவற்குளம் போன்ற கிராமங்களின் வாழ்வுரிமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. 
விவசாயத்தையே பலமாகக் கொண்ட இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் கால்நடைகளை திருடுவது முதல் இங்கு வாழ்ந்த தமிழர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத காலம் அது. ஒவ்வொரு தமிழரையும் போராடு என்ற விதியையும் எழுதிய காலமும் அதுவே. 

காலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறை போராளியாய் புடம்போட்டு வளர்த்துத் தாயகம் அனுப்பியது. அச்சுறுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக ஜெயமண்ணா ஆயுதம் தாங்கிய வீரனாய் தோழர்களுடன் நிலத்தில் வந்திறங்கிய போது அந்தப் பாதங்கள் பதிந்த இடங்களெங்கும் தலைநிமிர்ந்தது. வன்னியின் வீரவரலாற்றுக் கதைகளாக வீழ்ந்த வீரத்தின் நிமிர்வாக ஜெயமண்ணாவின் பணி வன்னி நிலத்திலும் வன்னிக் காடுகளிலும் ஆரம்பித்திருந்தது. 

இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய ஜெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டது. இங்கிருந்தே ஜெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார்.

ஆரம்பகால சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி பூனகரி 4ம் கட்டைச் சண்டை , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் என பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்ப காலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான ஜெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு தானும் கைகோர்த்துக் கொண்டே நடந்தது.

000       000           000

1987 யாழ்மாவட்டம் மிகுந்த சிக்கலை எதிர் நோக்கியிருந்த காலமது. „'லிபரேசன் ஒபரேசன்' நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் நிலப்பரப்பு இலங்கையரச படைகள் வசமானது. யாழ்மண்ணின் இதர பகுதிகளும் சிங்களத்தின் கைகளில் போய்விடும் என்ற நிலமையைத் தோற்றுவித்து மக்களின் மனங்களில் யுத்தத்தின் பாதிப்பு உள ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காலம் யாழ்மண் உணவு தொடக்கம் மருந்துகள் அடிப்படைத் தேவைகளுக்கெல்லாம் மிகவும் அவதிப்பட்டகாலம். 
அயல் நாடான இந்தியா தனது பிராந்திய நலனில் எப்போதுமே அடுத்த நாடுகளையோ அல்லது அயல்நாடுகளையோ அண்டவிடாதது. இக்காலத்தில் இந்தியா திடீரென யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளில் வானிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

காப்பதற்கு இந்தியா கட்டாயம் வருமென்று நம்பிய தமிழர்களின் நம்பிக்கைக்கு உற்சாகத்தை வழங்கியது போல 04.06.1987 இந்திய விமானங்கள் போட்ட உணவுப்பொதியில் ஈழத்தமிழரின் விடிவின் காலமும் நெருங்கியதாகவே உணர்ந்தது தேசம். புலிகள் மட்டும் இந்திய அரசின் போலி இரக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். 

04.06.1987 அன்று யாழ்குடாவில் இந்திய வான்படையினரால் போடப்பட்ட உணவுப்பொதிகளும் அதன் ஏற்பாடுகளும் பற்றிய செய்தியானது அப்போதைய இந்திய ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயமாகும்.
‚'ஒப்பிரேசன் பூமாலை' என பெயரிடப்பட்டு நடைபெற்ற மேற்படி உணவுப்பொருட்களை இந்தியா போடுவதற்கான காரணத்தை இப்படித்தான் அந்நாளில் சொல்லப்பட்டது.

'கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.'

இப்படித்தான் அன்றைய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தியா எங்களைக் காக்கும் எங்களின் நேச சக்தியென்றுதான் நம்பியது தமிழினம். 
000           000              000

புலிகளின் வீரமும் இக்கட்டு நிறைந்த காலங்களையெல்லாம் தங்கள் மனபலத்தால் வென்ற தைரியமும் அந்த இக்கட்டு மிகுந்த காலத்தை கப்டன் மில்லர் என்ற மாவீரனின் தியாகத்தால் மீட்டுத் தந்தது. 

05.07.1987 அன்று வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது உயிராயுதமாக மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் உட்சென்று வெடித்து பெரும் அழிவை இராணுவப் படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்திய பேரிடியில் சிங்களத்தின் மனபலமும் உடைந்து போனது. 

அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவை உடைத்து கரும்புலியின் வரலாற்றை எழுதிய முதல் கரும்புலி வீரன் கப்டன்.மில்லரின் அந்தத் தாக்குதலோடு அதுவரை திமிரோடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணுவ வல்லமையின் ஆணவமும் அடங்கிப்போனது. 

புலிகளின் வரலாற்றில் குறைந்த இழப்பின் மூலம் எதிரி மீதான பெரும் அழிவைக் கொடுக்கும் உயிராயுதங்களின் திறனை ஆடி 5, 1987 உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்தியிருந்தது. இனி போர் மூலம் வெற்றியைப் பெற முடியாத உண்மையை ஜனாதிபி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டார். 

புலிகளுடன் தோற்றுப்போன ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்களுக்குமிடையில் 29.07.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல.

ஓப்பந்தம் எழுதப்படுவதற்கு முதல் விடுதலைப்புலகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்பியது இந்திய அரசு. இப்பேச்சுவார்த்தையில் தலைவர் பிரபாகரனை பங்கேற்ற வேண்டுமென இந்தியா வேண்டிக் கொண்டதற்கு அமைவாக தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றும் போராளிகள் சிலரும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அசோகா கொட்டலில் தங்கவைக்கப்பட்ட தலைவரும் போராளிகளும் அங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்பட்டனர். 16வயதில் தன் இனத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்து கடினங்கள் துரோகங்களையெல்லாம் தாங்கிப் போராட்ட வாழ்வையேற்று தன்னினத்தின் விடுதலையை மட்டுமே நேசித்த தலைவன் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்தார். ஆனால் பலம் மிக்கவர்கள் வென்றார்கள். இந்தியாவினால் தமிழினம் ஏமாற்றப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது. இந்திய இராணுவம் ஈழத்தில் குவிக்கப்பட்டது.

எனினும் நேசநாடான இந்தியாவைத் தொடர்ந்தும் நம்பிய புலிகள் மக்களைக் காக்க ஏந்திய ஆயுதங்களையும் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு தமிழர்களுக்கான நியாமான தீர்வை பேச்சுவார்த்தைகள் தருமென்று நம்பி மக்களுக்காக தங்கள் கைகள் சுமந்த ஆயுதங்களையெல்லாம் இந்தியப்படைகளிடம் ஒப்படைத்து நிராயுதபாணிகளாயினர். 

இந்தியா வாக்குறுதியளித்தபடி தமிழர்களுக்கான எந்தவிதமான தீர்வையும் எட்டும் வழிகளைத் தரவில்லை. இன அழிப்பும் தமிழரின் நிலப்பறிப்பும் நடந்து கொண்டேயிருந்தது. ஆயுதம் ஏந்தி களத்தில் விழுப்புண்ணடைந்தும் தனது பணியை அரசியலில் நிலைநாட்டிய தியாகி திலீபன் அவர்கள் இந்தியாவின் கபடத்துக்கு முன்னால் 5அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் மேற்கு வீதியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை பசித்தீமூட்டியெரித்து பாடையில் ஏறினார்.  இந்தியா பேசாதிருந்தது. 

கடலில் போன கடற்புறாக்களான தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளும் பலாலியில் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவியும் இந்தியா மௌனமாயே இருந்தது. தமிழின அழிப்பும் தமிழர் நிலப்பறிப்பும் தொடராகவே....!

தன்னினம் காக்கப்பட ஏந்திய துப்பாக்கிகளை மீண்டும் புலிகள் தமிழினம் காக்கப்பட ஏந்த வேண்டிய விதியை எழுதியது இந்தியா. குறைந்தளவிலான போராளிகளோடு பெரும் படைபலமும் ஆயுத பலமும் கொண்ட இந்தியப் படைகளுடன் புலிகள் சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவே ஏற்படுத்தி 10.10.1987இன்று இந்தியப்படைகளுடன் யுத்தம் மூண்டது.
காக்க வந்த படைகளால் தமிழினம் அழிக்கப்படத் தொடங்கியது. வயது வேறுபாடின்றி கொன்று குவித்து பெண்களை பாலியல் வன்புணர்வு புரிந்து ஈழம் மறந்து போகா வடுவை இந்தியப் படைகள் ஈழத்தில் செய்து கொண்டிருந்தது. பெரும் படையின் பெரும்பலத்தோடு புலிகள் போராடத் தொடங்கினார்கள். 

மக்கள் பலம் புலிகளுக்கு எப்போதுமே பெரும்பலமாய் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து போராளிகளைப் பாதுகாத்து சமராடும் புலிகளுக்கு ஆதரவழித்தனர். ஆதரவு கொடுத்தவர்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்னிய இராணுவத்தின் கையில் எங்கள் தேசம்....!

87களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராயிருந்த ஜெயமண்ணாவின் பணிகளானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள்.  அக்காலத்தில் காட்டில் தலைவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த போராளிகள் தளபதிகளுடன் தளபதி ஜெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் நியமனம் பெற்று தலைவனின் அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

புதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்தல் செயற்படுத்தல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி. பல சண்டைகளில் தனது ஆழுமையை சாதுரியத்தை வெளிப்படுத்திய சத்தமில்லாத சாதனையாளன். இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது. 
000             000             000

1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 90இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். தலைவனின் நம்பிக்கை , தலைவனின் பாதுகாப்பு , போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியாகத்திற்குச் சவாலாக 1993காலப்பகுதி அமைந்தது. 

தலைவனை தலைவனின் பாதுகாப்பை தமிழரின் விடிவையுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஜெயமண்ணா அக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை துயர்களையும் தாங்கினார். தனது கொள்கையில் என்றுமே தலைவனுக்குரிய போராளியாகவே வாழ்ந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் யாவையும் உறுதியோடு கடந்தார். தளபதியாக என்றும் கோலோச்ச விரும்பாத தளபதி. ஒரு வீரவேங்கையாக இறுதி வரை வாழ்ந்து வன்னியில் அமைந்த துயிலிடம் ஒன்றில் தன்னை விதையாக்கவே விரும்பிய சுயநலம் மறந்த மக்கள் மனங்களை வென்ற மாவீரன்.

‚'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே'' என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார். அரிச்சந்திரன் கதையை மட்டுமே அறிந்த போராளிகள் முன்னே அரிச்சந்திரனாய் வாழ்ந்து காட்டிய அதிசயம் ஜெயமண்ணா.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது என்ற உண்மையை ஜெயமண்ணாவின் காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருந்தது. அமைதியோடு ஏற்பட்ட கசப்புகளை கவலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து மெல்லெனப் பாய்ந்தோடிய ஜெயம் என்ற நதியின் கால்கள் உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் இலக்கில் உறுதியோடு பயணித்தது.
000         000      000

காலம் 1997....,
வன்னியை இரு துண்டமாகப் பிரித்து உட்புக முயன்று கொண்டிருந்த சிங்களப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்களத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான சகல விநியோகமும் கடல் மார்க்கமாகவே நடந்து கொண்டிருந்தது. அதுவும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தது. 

சிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வவுனியா நகருக்கும் யாழ்ப்பாணத்திற்குமான வழியான ஏ9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தினை ஏ9 ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றினால் மட்டுமே சிங்களத்தால் இலகுவான வழங்கலை யாழ்பகுதிக்கு செய்ய முடியும். 

ஏ9 பாதையை கைப்பற்றுவதற்கு முதல் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையைப் பிடிப்பதற்கான முயற்சியில் „'எடிபல' என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது சிங்களம். அந்நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் பெரும் அழிவை எதிர்கொண்டு இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தைவிட்டு இடம்பெயர்ந்தார்கள். 
அடுத்த கட்டமாக 13.05.1997அன்று ஜெயசிக்குறு பெயரிடப்பட்டு சிங்களம் ஏ9பாதை கைப்பற்றும் நோக்கில் 20ஆயிரம் படைகளைக் கொண்டு சமரைத் தொடங்கியது. 

இந்நடவடிக்கையானது ஒரேநாளில் இருமுனைகளின் ஊடாக சிங்களம் படைநகர்வை ஆரம்பித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தையை நோக்கிய ஒரு நகர்வும் , மணலாற்றிலிருந்து நெடுங்கேணி நோக்கிய மறு நகர்வாகவும் சிங்களப்படைகள் நகர்வை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கை மூலம் ஓமந்தையை கைப்பற்றி அதன் ஊடாக ஏ9 பாதையூடாக முன்னேறும் படைகளும் , நெடுங்கேணியிலிருந்து முன்னேறி வரும் படைகள் புளியங்குளம் வரையும் கைப்பற்றி இரு நகர்வும் புளியங்குளத்தில் சந்தித்து கிளிநொச்சியை கைப்பற்ற ஏ9 பாதைவழியே முன்னேறும் திட்டமிடலுடன் தொடங்கப்பட்டது. அரசின் உச்ச பலமும் இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது. வான், தரை உள்ளிட்ட சகல ஆதரவோடும் நகரத் தொடங்கியது சிங்களம்.

புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நிகழ்ந்த பெரும் சமர்களாகும். நீண்டகாலம் நீடித்த இச்சமரில் எதிரியால் மாங்குளம் வரையுமே நகர முடிந்தது. 

புலிகளின் போராட்ட வரலாற்றில் ஜெயசிக்குறு சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத்தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயமண்ணாவின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியது.

அடுத்து புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக ஜெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளினால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் ஜெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை முடித்தார்கள். மீண்டது கிளிநொச்சி. 

எப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாகவே ஜெயமண்ணா வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்பிலும் பங்காற்றியிருந்தார்.

அடுத்து வீழ்ந்தது ஆனையிறவு முகாம். எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக இழந்ததற்கான பலன் 2000ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் ஜெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தது. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாச்சலிலும் ஜெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்திருந்தது. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் ஜெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் தனது கடமையில் பின்செல்லாமல் முன்னேறிச் சென்ற சாதனையாளன். 

காலஓட்டம் ஜெயமண்ணாவின் திறனையும் தன்னோடு எழுதிக் கொண்டே சென்றது. புலிகளின் வேவு அணியின் வளர்ச்சியானது புதிய பரிமாணத்தையும் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டிய காலத்தின் வேகத்தில் வேவு அணியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் ஜெயயமண்ணா. 

அதிகளவிலான போராளிகளை உள்வாங்கி உருவாக்கி வேவு அணியின் வீரியத்தை வேகப்படுத்திய பெருமையின் வேரில் ஜெயமண்ணாவின் அர்ப்பணிப்பும் தியாகமும் வெளியில் தெரியாத ஆனால் வேங்கைகளின் வரலாற்றில் மாற்றத்தைக் கண்ட அணியாகும்.
000                  000                     000

1998காலம் மன்னார் மாவட்டத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னாரில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தார். போராட்டத்தில் இன்னொரு இக்கட்டான காலத்தை புலிகள் எதிர் கொண்ட காலமாக அமைந்த அக்காலத்தில் ஜெயமண்ணாவின் ஆற்றலும் சாதனைகளும் காலங்களால் மறக்க முடியாத பதிவுகள். 

அப்போது தலைவரால் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாவீரர் துயிலுமில்லங்கள் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்பு , பாதுகாப்பு , கவனிப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உரிய கடமைகளுடன் ஒன்றாக வழங்கப்பட்டிருந்தது.

களமுனைப்பகுதி பிரதான தளபதிகளான தளபதி தீபன் கிளிநொச்சி துயிலுமில்லம் ,தளபதி பானு வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் ,தளபதி துர்க்கா ஆலங்குளம் துயிலுமில்லம், தளபதி கேணல் சங்கர் முள்ளியவளை துயிலுமில்லும் , பாலதாஸ் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் , கேணல் ரமேஸ் விசுவமடு துயிலுமில்லம் என வழங்கப்பட்டிருந்தது.

தமிழீழக் கனவோடு களமாடி வீரச்சாவடையும் ஒவ்வொரு மாவீரரின் கல்லறைகளையும் தானே நேரில் நின்று வடிவமைப்பாளர்களோடு தானும் பணியாளனாகி மாவீரர்களின் கல்லறைகளை வடிவமைத்து முழுமையான வெற்றியை அடைந்தவர் என்றால் அதில் ஜெயமண்ணாதான் முதன்மையானவர். 

மாவீரர் துயிலுமில்லங்களை வடிவமைக்க வழங்கப்படும் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஆனால் கொடுக்கப்பட்ட வளங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாவீரர் துயிலுமில்லங்களை செய்து முடித்த தளபதியாக தலைவரால் பாராட்டுப் பெற்ற ஒரேயொரு தளபதி ஜெயமண்ணாவே.

ஆண்டான்குளம் துயிலுமில்லத்தின் உறுதியின் உறைவிடத்தின் கல்லறை வடிவமைப்பை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அதேபோல மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் கல்லறைகள் வடிமைப்பில் ஜெயமண்ணாவின் பணியை அர்ப்பணிப்பை மறக்கவே முடியாதளவு சிறப்பாகச் செய்து முடித்தார். 

மாவீரர் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறைகளில் சிலமணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு கால நேரமின்றிச் செயற்பட்டு மாவீரர்கள் உறங்கிய மாவீரர் உறங்குமிடங்களை உருவாக்கும் பணியில் ஒரு சாதாரண பணியாளனாகிச் செயற்பட்ட தளபதி.

ஒரு தளபதியாக அந்த மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் முதல் கிராமங்கள் ரீதியான நிர்வாக ஒழுங்குகளையெல்லாம்; ஒருங்கே கவனிக்கும் பாரிய பொறுப்பினை இலகுவாகச் செய்து கொண்டதோடு மக்களோடு மக்களாகி அவர்களது பிரச்சனைகள் இடைஞ்சல்களை அறிந்து அதற்கான தீர்வை வழங்கும் முதன்மையான போராளியாத் திகழ்ந்தார்.

புலிகளின் அரசியல் நிர்வாக ஒழுங்குகளில் எங்கேனும் ஏற்படும் மக்களுக்கான அசௌகரியங்களை என்றுமே அலட்சியம் செய்ததில்லை. அங்கெல்லாம் தானே நேரடியாக நின்று மக்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்கிற துணிச்சல் மிக்க மனிதன். 

குறிப்பாக தமிழீழ ஆயத்துறையின் வரி அறவீட்டு விடயத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை தானே தலைமையிடம் கொண்டு சென்று சரியான தீர்வையும் பெற்றுக் கொடுத்து ஆயத்துறைப் போராளிகளின் தொடர்ந்த பணிகளுக்கான வழிகாட்டியாகவும் மாறியிருந்தார். மக்களின் மனங்களை வென்று மக்களோடு நல்லுறவைப்பேணி மக்களுடனேயே வாழ்ந்தார்.

போராட்டத்திற்குத் தேவையான ஆட்திரட்டலை மிகவும் திறம்படச் செய்தவர்களில் ஜெயமண்ணாவின் பங்கு மறக்க முடியாதது. தனது பேச்சாற்றலால் உண்மைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி பறிபோகும் நிலத்தை மீட்க போராளிகளை இணைக்க அந்த நாட்களில் மன்னாரில் ஜெயமண்ணாவின் பங்கை காலத்தினால் மறக்க முடியாது.

000                  000                     000
சமாதான காலம். ஆற்றலின் வடிவமாய் அமைதியின் உருவாய் கடந்து வந்த பாதைகளின் காலத்தை வென்ற போராளியாயிருந்த தளபதி அரசியல் பேச்சு மேடைகளில் கூட வெளிநாடுகளிற்கும் சென்று வந்த அரசியல்ஞானி. என்றுமே தனது வாழ்வை தனது தாயக விடுதலைக்காயே கொடுத்து வாழ்ந்ததோடு தனது வாழ்க்கைத் துணைவியையும் போராளியாகவே தேர்ந்தெடுத்தார். 

வெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும் கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்று முடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள். 

2006 தொடக்கம் 2007 4ம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் ஜெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள். பல விடயங்களில் உதாரணமாகவும் உயர்ந்தவராகவும் வாழ்ந்து காட்டிய வரலாற்றின் புதல்வன்.

களத்தி;ன் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள். 

வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்....பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே...எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , அகரன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கிறது.

கடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடும் கலந்து போனார்கள் தளபதி ஜெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும். அவர்களது குழந்தைகளை குடும்ப உறவுகளை யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள்...மறக்க முடியாத வீரமாக....வீரர்களாக....! 

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டது. ஆற்றல் மிக்க தளபதிகள் , போராளிகள் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து கடந்தது....! அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் ஜெயமண்ணா, நளாக்கா இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். 

05.2014
நினைவுப்பகிர்வு :-  - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

Thursday, April 24, 2014

காலமறியாக் கற்பூரங்களாய் காடுகளில் நடந்தவரே....!

ஆளரவம் தொலைத்த
அடர் வனங்கள்
அன்றைக்கு மௌனித்து
மயானம் பூண்டு
ஆட்களற்றுப் போனது.

ஆழகான புற்தரைகளின் பச்சையம்
ஆட்களற்றுத் தனித்த
பனித்துளியின் ஈரம்
குருதித் துளியாகிக்
காயத் தொடங்கியது.

நீங்களும் வெடியாகி இடியாகி
வெளியில் வராத ஒளியாகிப்
போனீரென்றுதான் காலமழுதது.
எனினும் போரின் கறைகள் காயாமல்
கண்ணீரின் ஈரம் தோயாமல்
நீங்களெல்லாம் வனமளப்பதான
வதந்திகளையெல்லாம்
மௌனங்கள் காடேற்றிக்
கடந்தது காலநதி.

உங்கள் நிழலைக் கூடத்
தொட்டறியாத பேயெல்லாம்
உங்களைப் பற்றி ஆய்வுகள் செய்தது
அங்கென்றும் இங்கென்றும்
அறிக்கைகள் கொடுத்தது.

சொல்லியழ முடியாத் துயர்
கண்ணில் நிறைந்தாலும்
வெளியில் சொல்லியழும் தைரியமின்றி
தனிமையில் தொலைந்த நாட்கள்....!

தட்டச்சு விசைப்பலகை வீரரின்
வீணாய்ப் போன கதைக்கெல்லாம்
வாயடைத்து மௌனித்து
காலம் வருமென்றெண்ணிக்
காத்திருந்த காலமொன்றில்
கருவிழி நிறைந்த இருள்.

காலம் மீண்டும் கண்ணீரை
விழியெங்கும் நிரப்புகிறது.
மீண்டும் இருள் நிரம்பி உறைகிறது
வனங்களும் எங்கள் மனங்களும்
மேலும் இருள்கிறது.

காடறியும் பனித்துளியில் - உங்கள்
காற்தடங்கள் கரைகிறது.
ஊரறிய ஒப்பாரி வைத்து
நாடழுத காலங்கள் போய்
மீண்டும் காலமறியாக் கற்பூரங்களாய்
காடுகளில் நடந்தவரே....!

காலமும்மைக் கைபற்றி
வருமொருநாள்
அதுவரையும் காலமறியாக்
கடவுளர் அறியாத காலத்தின்
சுடர்களாய் வாழும் தெய்வமாய்
வாழ்ந்திடுவீர்.

20.04.2014
சாந்தி நேசக்கரம்

Saturday, April 19, 2014

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.

சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது.

ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை.

இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் நம்பியிருக்கும் கணவனுக்கு மறைக்க அவள் பட்ட துயரங்களை வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாது.

அக்காவுக்கும் , அவள் கணவனுக்கும் 2009வரையிலும் அவர்களுக்காக அவர்களது உயிர் காக்கவும் ஆட்கள் இருந்தார்கள். ஆறுதல் தருவதற்கே ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். 2009மே மாதத்தோடு எல்லாம் போனது. ஏனென்று கேட்க நாதியற்றுப் போன பல்லாயிரக்கணக்கானவர்களுள் அவர்களும் அடக்கமாயினர்.

20வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையில் உடலெங்கும் இரும்புத்துகள்களும் நஞ்சூறிய கந்தகக்காற்றையும் சுவாசித்தே வாழ்ந்தார்கள். ஓடியோடி கடமையும் களமும் என வாழ்ந்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குப் பொருத்தமான துணையாக வந்த கணவனின் துணையோடு அவர்கள் மூச்சு விடுதலைக்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஒருகாலம் தங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது உறவென்று சொல்லிக் கொள்ளவோ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தைரியத்தையும் உடல் பலத்தையும் கூட களத்தில் தான் அக்கா இழந்தாள். அதற்காக அவர்கள் ஒருநாளும் கலங்கியதுமில்லை கவலைப்பட்டதுமில்லை. இன்று அத்தகையதொரு குழந்தையொன்று இல்லாது போனதற்காய் அதிகம் கவலைப்படுகிறாள் அக்கா.

அந்தரிக்கும் உயிருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றவே ஆளில்லாது வாழ்நாள் நோயாளியாகிப் போன அவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஊரில் யாருமில்லை. ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்தவர்களுக்காக அவர்களது பாதையை நேசித்து அவர்களோடு வாழ்ந்த சிலரின் சின்ன ஆறுதல் மட்டுமே அவர்களை ஏதோ வாழ வைத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பலதடவைகள் காயங்களுக்கு உள்ளாகிய அண்ணை திடீரென ஒருநாள் மயங்கி விழுந்து நினைவிழந்தார். அக்கா துடித்துப் போனாள். அடுத்தநாள் விடிந்ததும் யாழ்ப்பாணம் மருத்தவத்திற்கு அண்ணையை அழைத்துப் போனாள். உடனே தலையில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென்றார்கள். ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படக்கூடிய சத்திரசிச்சையை தனியார் மருத்துவமனையில் தான் செய்ய முடியுமென்றார்கள் இலவச மருத்தவமனையில் சம்பளம் பெறும் மருத்துவர்.

யாருக்கும் தொல்லை கொடுத்து சிரமப்படுத்தக் கூடாதென்று வாழ்ந்த அக்கா வெளிநாட்டிலிருந்து அவளுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகளை வழங்கிய அக்காவோடு ஒருகாலம் களமாடியவளைத் தான் தொடர்பு கொண்டு அண்ணையின் நிலமையைத் தெரிவித்து அழுதாள்.
அண்ணைக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய அக்கா தன் மகளாய் நேசிக்கும் ஒருத்தியே உதவினாள்.

சத்திரசிகிச்சை முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவத்திற்கான மருந்துக்கான செலவுகள் அவர்களை நிம்மதியாய் விடவில்லை. இயன்றவரை கிடைத்த சின்னச் சின்ன உதவிகள் மூலம் அண்ணையின் உயிர் போராடிக் கொண்டிருந்தது.

வெயிலில் நின்று வேலை செய்யவோ அல்லது பாரமொன்றைத் தூக்கி சுமக்கவோ ஒரு கூலிவேலையைத் தன்னும் செய்யும் பலத்தை இழந்து போனது அண்ணையின் ஆரோக்கியம். அக்காதான் தன் இயலாத நிலமையோடும் அண்ணையைக் காத்தாள். மருந்தின்றேல் அண்ணையால் இயங்க முடியாத நிலமையாகியது.

திடீரென அக்கா சுவாசிக்கச் சிரமப்பட்டாள். மூச்செடுக்க அவளுக்கு முடியாமல் போகத் தொடங்கியது. பணமில்லாதவர்களுக்காக இலவச மருத்துவமனைகள் தான் உயிர் தரும் இல்லங்கள்.

தன்னையே கொண்டு செல்ல முடியாத அண்ணை அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இலவச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பணம் கொடுத்தே அக்காவிற்கு உயிர்காக்க முடியுமென்று அறிவித்தார். கடவுளாகத் தெரிந்த மருத்துவர் காசுப் பிசாசாகி அக்காவின் உயிரைப் பலியெடுக்கும் காலனாகித் தெரிந்தார்கள். காசு இல்லாது போனால் அக்காவை வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

அண்ணையின் உலகம் , ஆறுதல் ,பலம் , நம்பிக்கை , வாழ்வு எல்லாமே அக்காதான். அவளில்லையென்றால் எதையும் சமாளித்து வாழக்கூடிய நிலமையே இல்லாத தனிமனிதன் அக்காவின் உயிர்காக்கப் போராடினார். ஆனால் பணம் தான் அக்கா உயிரைத் தரும் கடவுளாகியது.

அக்கா வாழும் வரையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனென ஊர் திரும்பினாள். ஒரு மாதம் வரையிலும் எதுவோ சமாளித்துவிட்டாள். கடந்த வாரம் அவளால் உணவை உட்கொள்ளவோ எழுந்து நடக்கவோ முடியாது போனது. உயர் இரத்த அழுத்தம் அத்தோடு சுவாசிக்க முடியாது அவள் சாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அண்ணை அவளை யாழ்ப்பாணம் கொண்டு சென்றார். பணம் வை இல்லையேல் ஆளைக் கொண்டு போ...! இலவச மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தெரிந்தவர்களின் வீட்டில் அக்காவை வைத்துக் கொண்டு அண்ணை கடைசி நம்பிக்கை கைவிடாதென நம்பி வெளிநாட்டுக்கு தொடர்பெடுத்தார்.

என்ரை புள்ள உங்களை விட்டா எங்களுக்கு ஒருத்தருமில்லை...அக்கா சாகப்போறாள்....காப்பாற்று....என்ற அண்ணையின் கண்ணீர் ஐரோப்பா வரையிலும் கசிந்தது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தாள் ஒரு போராளித் தங்கை. என்ன செய்தெண்டாலும் அக்காவை காப்பாற்ற வேணும்.

முகநூல் , வலைப்பூ மூலம் அறிமுகமான மருத்துவர்கள் பலரது இலக்கங்களைத் தேடிய போது திருகோணமலையில் வாழும் வலைப்பூவில் அறிமுகமான மருத்துவர் தம்பியொருவரின் தொடர்பே கிடைத்தது. அவசர மருத்துவ சேவையில் நின்ற அந்தத் தம்பி தனது அவசர நிலமைக்கு மத்தியிலும் உடனடியாக தொடர்பில் வந்து அக்காவை காப்பாற்ற வேண்டிய ஆதரவைத் தர முன்வந்தார். காசுக்காயே மருத்துவம் செய்யும் காசுப் பிசாசுகள் மத்தியில் அந்த மருத்துவர் தம்பி சத்தியமாய் என் கண்ணில் கடவுளாயே தெரிந்தார்.

17.04.2014 அன்று வேகவேகமாக அக்காவின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி 18.04.2014 ஏதாவது ஒரு வழியைக் காணும் வேகத்தில் தொடங்கிய முயற்சி. 18ம் திகதி அக்காவை மருத்துவமனையில் எதிர்பாராமல் ஒருவர் சந்தித்ததை கடவுள் அருளென்பதா ? இல்லை விதியென்பதா ?

1991இல் அக்காவோடு களமாடி வரலாற்றுச் சமரொன்றில் காயமடைந்து அவள் உயிர் போய்விட்டதென நம்பினார்கள். ஆனால் அக்கா மட்டுமே அவளுக்கு உயிர் இருப்பதை நம்பித் தன் தோழில் நீண்ட தூரம் காவிச் சென்று பிணமாகிக் கிடந்தவளுக்கு உயிர் கொடுத்திருந்தாள். அந்தத் தோழி பின்னர் குடும்பமாகி போராட்ட வாழ்வை விட்டு விலகியிருந்தாள். நீண்ட காலம் தொடர்புகள் எதுவும் இல்லாது போனது. அப்படியொரு உயிரைக் காத்ததைக் கூட அக்கா மறந்து போனாள்.

1991இல் அக்காவால் உயிர் காக்கப்பட்டவள் அக்காவின் நிலமையைக் கேட்டாள். அன்றைக்கு அக்கா தந்த உயிரே இன்று அவளை அந்த இடத்தில் உயிரோடு நிறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தி அக்காவுக்கு உயிரைக் கொடுத்தேனும் உதவுவேன் என முன்வந்தாள்.

எங்கள் ஏற்பாடுகளின் நடுவில் அக்காவுக்கு கிடைத்த அந்தத் தோழி தனது உறவினர்கள் மூலம் அக்காவுக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய ஏற்பாட்டைச் செய்து இரவோடிரவாக கொழும்பு கொண்டு செல்லப்பட்டாள்.
சிகிச்சை முடிந்தால் ஆறுமாதங்கள் வரையில் அக்காவை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை கட்டாயம் கருணையுள்ளம் படைத்தோர் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் குடும்பம் அக்காவுக்கான சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்துள்ளார்கள்.

தனது மனைவியின் அருகில் போயிருக்கத் தேவையான பணமில்லாததால் அண்ணை ஊரில் போயிருந்து தனியே அக்காவிற்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உலகில் யாருக்கும் வரக்கூடாத துயரம் அண்ணைக்கு.
18ம் திகதி வீடு சென்ற அண்ணை திடீரென மயங்கி வீழ்ந்தார். ஏன் எதற்கு ?
காரணம் எதுவும் புரியவில்லை. தனித்தே வாழும் அந்த மனிதனுக்கு சுடுதண்ணீர் கொடுக்கக்கூட ஆளின்றி படுக்கையிலிருந்து எழ முடியாது போனது. தனது நிலமையை அக்கா அறிந்தால் வேதனைப்படுவாள் என யோசித்து தான் சுகமாய் இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு அக்காவின் வரவிற்காய் காத்திருக்கிறார்.

19ம் திகதி காலை 9மணிக்கு சிகிச்சை நடக்குமென்றார்கள். 18.04.2014 மாலை அக்காவை அழைத்தேன். அவள் கதைக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சொல்லை அவள் சொல்லும் போதும் நிமிடக்கணக்கில் அந்தரிக்கிறாள்.

ஆச்சி என்னால ஏலாதமணை....அண்ணையோடை கதையுங்கோ....அவர் பாவம்....நானில்லாட்டில் அவர் தனிச்சுப் போவர்....உங்கை யேர்மனியிலயும் எனக்கு சொந்தக்காறர் ரெண்டு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் ரெலிபோன் எடுத்துப் பாத்தனான்...ஒருத்தரும் உதவமாட்டமெண்டிட்டினம்....அம்மாச்சி என்ரை செல்லம் கடவுள் தான் உங்களையெல்லாம் எனக்குக் காட்டியிருக்கிறான்.

நேற்றைக்கு மட்டும் இனியெனக்கு சாவுதான் தப்பமாட்டனெண்டுதானணை நினைச்சனான்....ஆனால்....அக்காவால் பேச முடியாது குரல் மிகவும் சோர்ந்து போய்க்கொண்டிருந்தது. அண்ணையோடை எடுத்துக் கதையணை....அவர் பாவம் என்னோடை ஏலாதத்தோடை அலைஞ்சவர்....பாவம் இப்ப தனிச்சு கிடக்கிறார்....!

அக்கா நீங்க யோசிக்காமல் படுங்கோ...நாளைக்கு எல்லாம் நல்லா முடிஞ்சு நீங்கள் திரும்பி வருவீங்கள்....உங்களுக்கு உதவிறதுக்கு இங்கை கனபேர் இருக்கினம் எல்லாரிட்டையும் கேட்பம்....உங்களை நாங்க கைவிடமாட்டம்....நிம்மதியா படுங்கோ....சொன்ன போது அக்கா அழுதாள்...
என்ரையம்மா என்னாலை ஏலாதாம் நான் படுக்கட்டே....அக்கா விடைபெற்ற போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது. நீ வருவாய் எங்கள் அக்காவாய் உனக்கான உதவியை புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்கள் தருவார்கள் நிம்மதியாய் இரு என்று சொல்லிக் கொண்டு தொடர்பை துண்டிக்கிறேன்.

அவளது குரலும் அவள் மூச்செடுக்க சிரமப்படுவதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. நேற்றைய இரவு விடியும் வரையும் அக்காவின் சிகிச்சை முடிவு பற்றிய செய்தியையே கைபேசி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமை கடந்து அண்ணைக்கு தொடர்பெடுத்த போது....ஓம் பிள்ளை சொல்லணை என்ற தீனக்குரலில் அழைத்தார். அக்காவுக்கு என்னமாதிரியண்ணை எல்லாம் முடிஞ்சுதே ? இல்லையம்மா அவவுக்கு பிறசர் சரியா கூடீட்டுதாம் பிறசர் குறையத்தானாம் செய்வினம்....!

தனது தனிமை , தனது இயலாமை , தனது நோயின் வலி பற்றியெல்லாம் அண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். 21ம் திகதி அண்ணைக்கான அடுத்த மருத்துவ சோதனைக்குப் போக வேணும். ஆனால் போவதற்கு கையில் எதுவும் இல்லாது இருக்கிறார். ஏதாவது வழி செய்வமண்ணை நாளைண்டைக்கு போங்கோ என்ற போது சொன்னார். எனக்கு உதவாட்டில் காரியமில்லை மகள் அக்காவைக் காப்பாற்றுங்கோ....அக்காவுக்கு உதவுங்கோ....!

அண்ணையின் குரல் அழுகையாகி விக்கலெடுத்துத் தேம்பினார். பணமே எல்லாவற்றையும் எல்லாரையும் வாழ வைக்கும் பலமாகிய விதியை நினைக்க கோபம் இயலாமை விரக்தியென ஏதோதோ உணர்வுகள் கண்ணிலிருந்து கண்ணீராய் வழிகிறது.

யோசிக்காதையுங்கோ அண்ணை....அக்கா சுகமாகி கெதியில வருவா....காசுதானே இந்த உலகத்தில எத்தினை பேர் இருக்கினம்....இன்னும் மனிதமும் மனிதர்களும் சாகேல்லயண்ணை திங்கள் விடியக் கிடையில உங்களுக்கு மருந்துக்கு காசு வரும்....! சொன்ன போதும் அண்ணை அக்காவைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அக்காவைக் காக்க அக்காவைத் தவிர யாருமில்லாத அண்ணையைக் காக்க கருணையுள்ளம் படைத்தவர்களே உங்களிடமெல்லாம் கையேந்துகிறோம். எங்களுக்காக வாழ்ந்த இரு சீவன்கள் உயிர்காக்க உங்களால் மட்டுமே முடியும்.

19.04.2014 (இந்த உயிர்கள் இரண்டையும் காப்பாற்ற உதவுங்கள். உதவக் கூடியவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை வழங்கி உயிர்காத்துத் தாருங்கள்)

தொடர்புகளுக்கு :-
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh



Wednesday, April 9, 2014

காணாமற்போனவர்கள் இனி வர வேண்டாம்

நீலக்கோடுகள் அடர்த்தியாய் வரையப்பட்ட சாரமும்  வெள்ளைச் சேட்டும் அணிந்திருந்தான். சன நெரிசலை விலக்கி வந்து கொண்டிருந்தவன் தனது நடையின் வேகத்தைக் கூட்டி ஓடிவரத் தொடங்கினான். கையில் ஒரு பை அதனுள் எதையோ வைத்துக் காவிக்கொண்டு ஓடிவந்தான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தான். கையில் இருந்த பையிலிருந்து ஒரு அழகான பெட்டியை அவளிடம் நீட்டினான். இது உன்னுடைய மகனுக்காக நான் எடுத்து வைச்சிருந்தனான். இத அவனிட்டைக் குடு மாமா தந்தனெண்டு....!

அவன் கொடுத்த பெட்டி தவறி கீழே விழுந்தது. அதனுள் சில்லறைக்காசுகள். நிலத்தில் சிதறிய காசுகளைப் பொறுக்கிப் பெட்டியில் பத்திரப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள். பச்சையுடையுடுத்த சட்டித் தொப்பியணிந்தவர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.  பாதணி அணியப்படாத வெறும் காலோடு சகதி நிறைந்த ஆற்றுநீரில் இறங்கினான். ஆற்று நீர் அவனை தன் மெல்லிய கால்களோடு இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது.

அவன் பெயரைச் சொல்லிக் கத்தியழுதாள். சிரித்தபடி அவளிடம் வந்தவன் இரத்தம் வழிய ஆற்றோடு அடிபட்டு இழுபட்டுப் போய்க்கொண்டிருந்தான். மெல்லென ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீரில் அவனது குருதியும் கலந்தோடியது. ஆற்றோடு இழுபடும் அவனை நோக்கிக் கைகளை நீட்டியழுதாள் அவன் கண்ணிலிருந்து விடுபட்டுத் தொலைவாகிக் கொண்டிருந்தான்.....!

அவசரமாக எழுந்தாள். சே...கனவு....! உறங்கிக் கொண்டிருந்த மகனின் அறையைத் திறந்து மின் விளக்கைப் போட்டாள். என்னம்மா...! நித்திரைத் தூக்கத்தில் கேட்டான் மகன். சரி படுங்கோ செல்லம்....! சொல்லிவிட்டுத் தன் கட்டிலில் வந்து மீண்டும் சரிந்தாள். ஆனால் அந்தக் கனவில் சிரித்தபடி வந்தவன் இரத்தம் கலந்து ஆற்றோடு அடிபட்டுப் போனது மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது. திரும்ப நித்திரை வர மறுத்தது. மனசுக்குள் ஏதோ அந்தரிப்பாயிருந்தது.

2009இன் பின்னர் அனேகமான கனவுகள் இப்படித்தான். காணாமற்போனோர் முகங்களும் கடைசியாய் சிரித்தபடி விடை தந்து போனோருமே நிறையும் கனவுகளாகியிருக்கிறது. அவர்கள் பிரிவும் , துயரங்களும் கனவுகளையும் நிம்மதியாய் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.

இன்றைய கனவில் வந்தவனும் 2009இல் காணமற்போனவன். இந்த 5வருடத்தில் ஒருமுறையும் கனவில் வராதவன் இன்று வந்து போயிருக்கிறான். சிலவேளை எங்கேனும் இருப்பானோ ? கைபேசித் திரையைத் தட்டி இணையத்தில் உலாவத் தொடங்கினாள். அவனது பெயரை கூகிளில் அடித்துப் பார்த்தாள் ஏதாவது செய்திகள் அண்மையில் வந்ததோ என தேடினாள்.

அப்படியேதும் இருக்கவில்லை. ஆனால் நினைவுகளில் இருந்து மறந்து போனவன் ஏன் இன்று கனவில் வந்து சில்லறைக்காசுகளை அவளது மகனுக்காக கொடுத்துவிட்டுப் போயிருக்கிறான் பெரும் குழப்பமாகவே இருந்தது. கனவுகளுக்கு காரணங்கள் ஆய்வுகள் ஆயிரம் சொல்லப்பட்டாலும் இதுவரை கனவுகள் பற்றி எவரும் சரியான ஆய்வை காணாமல் இருப்பது பற்றி அந்த நேரம் யோசித்தாள்.

இப்போது கனவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. கனவுகளைப் பகிர்ந்து கொண்டால் அது பலிக்காதென்று சொல்வதை நம்பி பலமுறை தனது கனவுகளை பகிரப்போய் எல்லோரிடமும் நன்றாக வேண்டிக்கட்டியிருக்கிறாள்.

ஒண்டையே ஒரே நினைச்சுக் கொண்டிருந்தால் கனவும் அதுதான வரும்....! எல்லோரும் சொல்வார்கள். அதனால் கனவுகளை யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் அந்தக் கனவிலிருந்து விடுபடும் வரையும் அமைதியின்றி அலைவாள். மௌனமாய் நினைவுகளோடு கரைதலும் பின்னர் மீள எழுதலுமே வளமையாகிப் போனது.

000               000               000

அவனும் அவளும் ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள். அவன் அப்பா அவளது தாய்வழி உறவு. மாமா என்ற மதிப்போடு அவனது அப்பா அவள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் அவனைப் பற்றி ஏதாவது சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டேயிருப்பார். அவன் க.பொ.த.சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கணித பிரிவில் உயர்தரத்தை ஆரம்பித்திருந்தான். அவனிலும் 2 வயதால் இளைய அவள் அவனது கடைசித் தங்கையுடன் படித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்களும் பெண்களும் கலந்து படித்த பாடசாலைக்கு அவள் ஆறாம் வகுப்பில் இணைந்த போது அவனும் கூடவே வருவான். மதியம் பேயயுலவும் என்று நம்பிய புளியமரத்தடியை அவன் வரும் துணிவோடு பயமில்லாமல் கடந்து போவாள். பனைவடலிகளைத் தாண்டிப் போகும் போதெல்லாம் அவனே துணையாக வந்திருக்கிறான். பின்னர் அவனது கடைசித் தங்கையுடன் சேர்ந்து போகும் போது அவனும் கூடவே அவர்களோடு சயிக்கிளில் வருவான்.

அதிகம் கதைக்க வேண்டிய தேவைகள் இல்லாது போனாலும் அவன் தங்கைக்கு காவலனாய் வரும் போது அவளுக்கும் காவலாயே வருவான். வெள்ளி , செவ்வாய்க்கிழமைகளில் வயிரவர் கோவிலில் பஜனை பாடும் போதும் அவனும் வருவான். நெற்றியில் விபூதியும் சந்தனமும் வைத்து அமைதியாய் வைரவரை வழிபடுவான். சரஸ்வதி பூசைக்கு பேச்சுப்போட்டி , தேவார மனனப்போட்டி எல்லாவற்றிலும் அவனும் கலப்பான். ஆளாளுக்கு போட்டி போட்டு பரிசை வெல்வார்கள்.

எதுவென்று பிரித்தறிய முடியாத உறவிணைப்பு. அவன் வீட்டு வளவில் காய்க்கும் நெல்லிக்காய் , கொய்யாக்காயிலிருந்து எல்லாமே அவன் எல்லோருக்கும் பங்கிடுவான். சிறுவயது மகிழ்ச்சிக் காலங்களில் அவனோடு சேர்ந்து கிளிக்கோடு மறித்தது தொடக்கம் எட்டுப்பாத்தி , மாங்கோடு , கப்பல் கோடு வரையும் போட்டி எப்போதுமே அவனுடன் இருந்து கொண்டேயிருந்தது.

உயர்தரம் கணித பிரிவில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களில் அவன் ஊரிலிருந்து காணாமற்போனான். அது இந்திய இராணுவம் வெளியேற்ற காலம். அவனுடைய அப்பா அவள் வீட்டில் வந்து போகும் நேரமெல்லாம் கண்கள் பனிக்க அவனைப் பற்றிச் சொல்லுவார். என்ன குறைவிட்டனான் ? ஏன் இப்பிடிச் செய்திட்டுப் போனவன் ? அவரது கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவளது அம்மாவுக்குச் சொல்லுவார்....அவன் ஒரு பெரிய ஆளா வருவனெண்டு தான் படிப்பிச்சன்...ஆனால் அவருக்கு நாடு பெரிசெண்டு போயிட்டார்....!

அந்த அப்பாவின் வலியின் கொடுமை அவளுக்கு அப்போது புரிந்ததில்லை. ஆனால் அவனைப் பற்றி பெருமையாக இருந்தது. மனசில் சின்ன நெருடல் அவ்வப்போது இருந்தாலும் அவன் ஒருநாள் துவக்கோடு ஊரில் வந்து வரிச்சீருடையுடன் அவளையும் தாண்டி மோட்டார் சயிக்கிளில் போன போது ஏனோ இனம்புரியாத துயரம் மனசை நெருக்கியது.

அவனது உயிர் இன்று அல்லது நாளை போய்விடும் போல அவனது கடமை அமைந்து அவன் களத்தில் நின்றான். எங்காவது எதேச்சையாக காணும் நேரங்களில் ஒரு சிரிப்பு அவ்வளவுதான் அதற்கு மேல் எதுவுமில்லை. அவனை உறவென்று சொல்லிக் கொள்வதில் ஒருவகை பெருமிதம்.

1990 மேலும் ஊரிலிருந்து ஆண்கள் , பெண்கள் காணாமற்போனார்கள். அவன் போன கடுமையான பயணத்தில் பலர் இணைந்தார்கள். மீண்டும் இடப்பெயர்வு  , குண்டுச் சத்தங்கள் , மரணங்கள் அவலத்தின் பொழுதுகள் அவன் பிறகு காணாமற்போய்விட்டான். பொறுப்பாளராய் உயர்ந்து ஓமந்தையில் நிற்கிறான் எனச் சொன்னார்கள்.
.......,
காலநதியில் எழுதப்பட்ட கதைகள் பல அவை கண்ணீராலும் எழுதப்பட்டு கரைந்து கொண்டேயிருந்தது. அவள் நாட்டைவிட்டுப் பிரிந்தாள். திருமணம் குழந்தைகள் என வாழ்வு மாறிப்போனது. அவன் நடந்த களத்திலிருந்து தூரமாகினாள்.

இடையில் களங்கள் இறுகி தொடர்புகள் அறுந்து உறவுகள் அயல் எல்லாம் எங்கெங்கோ பிரிந்து போனார்கள். அவனும் நினைவுகளிலிருந்து மறந்து போகாமல் பல தோழர்களின் நினைவுகளோடு அவ்வப்போது நினைவுகளோடு வந்து போயிருக்கிறான். உறவொன்றைச் சந்தித்த போது அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் ஒரு தளபதியாக தகுதிநிலை உயர்ந்தானென்று தகவல் சொன்னார்கள். ஒரு பெண் போராளியை திருமணமும் செய்தானென்றும் சொன்னார்கள்.

காலம் 2002.....,மீண்டும் தாயகப்பயணம் போன போது அவனது கடைசித் தங்கையைத் தேடிப்பிடித்தாள். முல்லைத்தீவில் ஒரு அழகான தென்னந்தோப்பு வளவில் குடியிருந்தார்கள். அண்ணா என்ன செய்றான் ? கேட்ட போது அவனது சின்னத்தங்கை அவனைப் பற்றிச்  சொன்னாள். சந்திக்கக் கூடிய இடத்தில் அவன் அப்போது இல்லையென்றார்கள். மீண்டும் 2003இல் பிள்ளைகளோடு போன போது கிளிநொச்சியில் அவன் அரசியல் அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். அந்தக்கால அவசரங்களோடு அவனும் அலுவலாகியிருப்பதாக சொன்னார்கள்.

ஒருநாள் அறிவமுது புத்தகசாலையில் அவள் புத்தங்கள் வாங்கப் போயிருந்தாள். பலர் புத்தகக் கடைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவள் ஒவ்வொரு புத்ததங்களையும் பார்த்துப் பார்த்து அது வேணும் இது வேணும் என எடுத்துக் கொண்டிருந்தாள். என்னக்கா கடை போடப்போறியளோ ? புத்தகக் கடையில் நின்ற தம்பியொருவன் கேட்டான்.

மேலும் சிலர் வந்தார்கள். அவள் புத்தங்களை பார்த்துப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்தாள். பலசரக்குக் கடைக்கு சீனிச்சரை சுத்தவோ உவ்வளவு புத்தகமும் ஒருவன் சொன்னது கேட்டது. திரும்பிப் பார்த்த போது அவன் தனது முகத்தைக் காட்டாமல் மறுபக்கம் திரும்பி நின்றான். இடுப்பில் பெலிற் கட்டி பிஸ்ரல் செருகிகியிருந்தான். பிஸ்ரல் கட்டிய ஒருவர் புத்தகங்கள் சீனிச்சரை சுத்தவோ புத்தகங்கள் என்றது சட்டென கோபத்தைக் கொடுத்தாலும் அதை வெளிக்காட்டாமல் புத்தகங்களை எடுத்தாள்.

பிள்ளைகள் வெளியில் ஐஸ்கிறீம் வாகனத்தைக் கண்டதும் ஜஸ்கிறீம் வேணுமென அடம்பிடித்தார்கள். பிள்ளைகளுடன் அவளுக்கு உதவியாய் வந்திருந்த தம்பியிடம் சொன்னாள். தம்பி ரெண்டு பேருக்கும் ஐஸ்கிறீம் வேண்டிக் குடுக்கிறீங்களே நான் புத்தகத்தை எடுத்திட்டு வாறன். ஓமக்கா....என்றவன் வாங்கோ நாங்க ஐஸ்கிறீம் வாங்குவம் என பிள்ளைகளை கூட்டிக் கொண்டு தெருவுக்குப் போனான்.

123புத்தகங்களை கொள்வனவு செய்து கொண்டு வெளியில் வந்தாள். பிள்ளைகள் ஜஸ்கிறீமும் கைகளில் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றையும் வைத்துக் கொண்டு தம்பியுடன் நின்றார்கள். அரசியல்துறை அண்ணையொராள் வந்தவர் பிள்ளையளுக்கு ஜஸ்கிறீமும் விளையாட்டுச் சாமானுகளும் வாங்கிக் குடுத்திட்டு போறார் என்றான். உங்கடை ஊராம் உங்களைத் தெரியுமாமெண்டு சொன்னவர். பிள்ளையளுக்கு தான் மாமாவெண்டு சொல்லி உதெல்லாம் வேண்டிக் குடுத்தவர்.

தம்பி சொல்லியும் அது யாரென்பது புரியவில்லை. அவனை நினைவும் வரவில்லை. வீடு போன பின்னர் தம்பியிடம் அவனது பெயரை விசாரித்ததில் அவன் நினைவில் வந்தான். சமாதான செயலகத்தில சொல்லிவிட்டால் ஆளைப் பாக்கலாமக்கா...!

அண்மையாக சந்தித்தவன் பேசாமல் போனது கோபமாக இருந்தது. தம்பி சொன்ன பிறகும் கௌரவம் விடாமல் அவனைச் சந்திக்கும் முயற்சியை எடுக்கவில்லை. எங்கே நிற்கிறாள் யாருடன் நிற்கிறாள் என்பதெல்லாம் நிச்சயம் அறிந்திருப்பான். அப்படியிருக்க அருகில் வந்தும் பேசாமல் போனானென்றால்....திமிர் என தனக்குள் முணுமுணுத்தாள். ஆளாளுக்கு பிடிவாதத்தில் சந்திக்க முயற்சியெடுக்கவில்லை. அவள் ஐரோப்பா திரும்பிவிட்டாள்.

2006இல் இந்தியாவில் இருந்த அவனது சித்தி நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அறிந்து கதைக்க எடுத்த போது கதையோடு அவனது கதையும் வந்தது. நீயென்னடி 3மாதம் கிளிநொச்சியில் நிண்டியாம் தன்னை ஒருமுறை கூட பார்க்க வரேல்லயெண்டு சொன்னான். ஏனடியாத்தை ஒருக்கா பிள்ளையளையும் காட்டி பாத்திருக்கலாமெல்லே ?
புத்தகக்கடையில கண்டவர் ஏனன்ரி என்னோடை கதைச்சிருக்கலாம் தானே...! பிள்ளையளுக்கு விளையாட்டுச் சாமானுகளை வாங்கிக் குடுத்திட்டு போகத் தெரிஞ்சவர் கதைச்சா என்ன குறைஞ்சே போயிடுவர் ?
நீ தன்னை அடையாளம் பிடிக்கிறியோண்டு பாக்கத்தான் அவன் கடையில கண்டிட்டு கதைக்காமல் போயிருக்கிறான். சீனிச்சரை சுத்தவோ புத்தகமெண்டு சொன்னவனாம்....அப்ப பக்கத்தில தானே நிண்டவனாம்.....! சத்தியமா எனக்கு அடையாளம் தெரியேல்லயன்ரி...! ஏத்தின வரியம் இப்பத்தைய தோற்றத்தை என்னாலை அடையாளம் காண முடியேல்ல...வேணுமெண்டு தானே கதையாமல் போனவர்.....!

பழைய குரல் நினைவிருக்கலாம் என நினைத்தானோ என்னவோ...! அவன் கொஞ்சம் வீம்பு பிடித்தவன் என்பாள் அவளது தங்கை. அதற்காக அருகில் நின்றும் தன்னை அடையாளம் காட்டாமல் போனவன் மீது சொல்ல முடியாத கோபம். ஆளாளுக்கு பிடிவாதம் பிடித்து சந்திக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டு அதுவொரு சின்ன வயசு கால கோபம் போலவே போய்விட்டது.
அவனைப்பற்றி பலரும் கதைத்தார்கள். அவனது பதவிநிலை , பணிகள் , திறமை எல்லாவற்றையும் ஊரவர்கள் தொடக்கம் அவனது பெயரையும் காலம் உச்சரித்துக் கொண்டேயிருந்தது. அவனது அலுவலகத்தில் அவனுக்கு உதவியாளராயிருந்த அவனது துறைசார் போராளியொருவனுடன் ஒருமுறை அலுவல் ஒன்றிற்காக தொடர்பேற்படுத்திய போது அவனைப் பற்றி அடிக்கடி அறியக் கிடைத்தது. ஒருமுறை அவனது உதவியாளர் அவனது நிழற்படமொன்றை மின்னஞ்சலிட்டிருந்தான்.

சொல்லுங்கோ தம்பி அவர் கதைக்காட்டி நானும் கதைக்கமாட்டனாமெண்டு. ஐயோ கடவுளே இந்தக் குழந்தைப்பிள்ளையள் ரெண்டின்ரை தொல்லையும் எனக்கு பெருந்தொல்லையப்பா...! ஏன் அவ கதைக்கமாட்டாவோண்டு அவரும் இவ ஒராள் என் அவர் கதைக்கமாட்டாரோண்டு ....! தம்பி ஒருமுறை கதைத்த போது இப்படித்தான் அலுத்துக் கொண்டான்.

காலம் ஓடியது யுத்தம் மூண்டது. இரத்தமும் அவலமும் தோய்ந்த நாட்களாய் விடியத் தொடங்கியது. தொடர்பில் இருந்த அவனது உதவியாளர் தம்பி இடையிடை தொடர்பு கொள்வான் சுகம் விசாரிப்பான். அவனும் ஆனந்தபுரம் சண்டை முடிவோடு இல்லாமல் போய்விட்டான். சொல்லாமல் கொள்ளாமல் காணாமற் போயிருந்தான்.

மேமாதம் 2009 உலகம் பரபரத்தது தமிழர்கள் மட்டும் கண்ணீரோடும் துயரத்தோடும் அந்தப் பொழுதுகளை வரவேற்றுக் கொண்டார்கள். எல்லாம் மாறியது நினைக்காத சரணடைவு கனவிலும் பார்த்திராத அந்த நிகழ்வு நடந்து....எல்லாம் முடிந்து போனது....பலரின் முடிவு போல அவனும் இறுதியில் சரணடைந்தானா ? சாவை தனக்குத் தானே மூட்டினானா என எதுவும் தெரியாது.

தேடித்திரிந்தவர்களில் அவனும் ஒருவனாய் அவள் தேடினாள். அவனது குடும்பம் அவனது மனைவி , பிள்ளைகள் யாரையும் எங்கும் கண்டுபிடிக்கவில்லை. உறவுகள், நண்பர்கள் , தெரிந்தவர்கள் என காணாமற்போனவர்களின் பட்டியலில் அவனும் காணாமற்போயிருக்கிறான்.

இணையத்தில் செய்திகளைத் தேடுகிறாள். அவர் கைது , இவர் கடத்தல் என தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுகளும் , செய்திகளும் தூள்பறக்கும் அலசல்களால் நிறைகிறது தமிழ் இணையங்கள். அவனது பெயர் இதுவரை எங்குமே வரவில்லை. துரோகியாய் ஆராயப்பட்டு அவன் வாழ்ந்த வாழ்வை எவரும் இதுவரை கொச்சைப்படுத்தாதது ஆறுதலாக இருந்தது.

அவன் விரும்பியிருந்தால் வெளிநாடொன்றில் வசதியை அனுபவித்து தனது வாழ்நாளை கடத்தியிருக்கலாம். அவனது கணிதத்துறைக் கல்வியைத் தொடர்ந்து வென்றிருந்தால் ஒரு விஞ்ஞானியைக் கூட அவனது குடும்பமும் அவனது ஊரும் பெற்றிருக்கலாம். ஆனால் பதின்மம் மாறாத அந்த வயதில் தேசத்தை நேசித்துப் போனதால் அவன் காணாமல் போனான்.

எல்லோரையும் போல சுயநலமாய் இல்லாமல் பொதுநலமாய் யோசித்து தன்னை மறந்து தேசத்தை நேரித்த போராளிகளை மாவீரர்களை சமகால தமிழ்ச்சாதி கவனிக்கும் கவனிப்பையெல்லாம் பார்க்காமல் மறைந்தவரும் காணாமற்போனவரும் இனி வரவே வேண்டாமென நினைத்துக் கொண்டாள்.
ஒரு வேளை காணாமற்போனவர்கள் திரும்பி வந்து இந்த நிலமையைப் பார்த்தால் எதிரியிடம் பிடிபடாமல் இலட்சியத்தை வெல்ல அணிந்த சயனைட் வில்லைகளை இந்த சமூகத்தின் மீதான அவநம்பிக்கையை சகிக்க முடியாமல் தற்கொலைக்காக பயன்படுத்தக் கூடும். அவர்கள் வர வேண்டாம்...காணாமலேயே இருக்கட்டும்.

சின்னப்பிள்ளையள் மாதிரி ஆளாளுக்கு முரண்டு பிடித்து கதைக்காமல் தொடர்பு கொள்ளாமல் விட்டது இப்போது நெஞ்சுக்குள் வலியைத் தருகிறது. நீ முதல் கதைச்சாலென்ன என ஆளாளுக்கு அடம்பிடித்ததையும் ஒருகாலம் விளையாட்டாக ரசித்தது போல இப்போது ரசிக்க முடியவில்லை. இனி என்றுமே திரும்பக் கிடைக்காத அவனும் அவன் போன்றவர்களினதும் நினைவுகள் மட்டும் மீதமாக....!

08.04.2014 (அண்மைய நாட்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளைப் படித்த போது எழுந்த உணர்வும் ஒரு காலத்தின் ஞாபகமும் ஒரு கனவும் தந்த பாதிப்பிலிருந்து இக்கதை பிறந்திருக்கிறது)

Friday, April 4, 2014

ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...!

அந்த நாட்கள்
தீயின் நாக்குகளால்
தின்னப்பட்ட தீராத்துயர்
எங்கள் வீரத்தின்
விலாசங்களை
வெ(கொ)ன்ற நாட்கள்.


வெற்றிகள் தந்தெங்கள்
விடுதலைச் சுவடுகளில்
வீரம் எழுதிய
மகனாரும் , மகளாளும்
இறுதிச் சமர் புரிந்து
எரிந்து கரைந்த
5ம் ஆண்டு நினைவில்
ஆனந்தபுரம் அழியாத நினைவாக....!

பூக்களின் வாசனை கலந்த
பொன்னிதழ் விரியும்
புன்னகை முகங்கள்
பொசுங்கிக் கிடந்த நாளை
வசந்த கால மலர்வாசம் தரும்
ஏப்றல் மாதம் என்றென்றும்
எங்களில் எரியும் தீயாய்...!

இழப்பின் கதைசொல்லும்
என்றைக்கும் இதயம் நிரம்பிய
துயர் தருமாதம் நஞ்சு கலந்து
எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட
நிலத்தின் கதைசொல்லும்
நீங்காத் துயர் மாதம்.

04.04.2014 (2009 முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான நாள். உலகம் திரண்டு அழித்த ஈழவிடுதலைப்போரில் அன்று உலகின் கண்முன்னால் எங்கள் தளபதிகளும் போராளிகளும் எதிரிக்கு அதிகளவு இழப்பை ஏற்படுத்தி இறுதிவரை சமரிட்டு தங்கள் உயிர்களைத் தந்து போனவர்கள்)

Email - rameshsanthi@gmail.com

Sunday, March 23, 2014

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம் என்ற காமுகன்.

22.03.2014 அன்று ttnnews என்ற இணையத்தினை நடாத்தும் விசுவலிங்கம் சிறீறங்கராம் என்ற றாம் அவர்கள் முன்னாள் போராளியான அஸ்வினி பற்றி தனது இணையத்தளமான ttnnews இல் மிகவும் கீழ்த்தரமாகவும் பொய்யான செய்தியொன்றை எழுதியிருந்தார். அச்செய்திக்கு தானே பல பெயர்களில் கருத்தும் எழுதி அஸ்வினி அவர்களை மிகவும் மோசமாக சித்தரித்துள்ளார்.

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் மகளீர் பிரிவின் தளபதியாக இருந்த அஸ்வினி அவர்கள் காமக்கதை பேசி புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பறிப்பதாகவும் இறுதி யுத்தத்தில் அஸ்வினி அவர்கள் இலங்கை புலனாய்வுப்பிரிவினிருடன் உல்லாசமாக இருந்து பலரை காட்டிக் கொடுத்ததாகவும் எழுதி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் றாம்.

தனது வாழ்க்கையை எங்கள் இனத்தின் விடுதலைக்காகவே தந்து இன்று வாழும் வழியையும் இழந்து நிற்கும் இந்தப் போராளியின் தற்போதைய வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது றாம் என்ற வக்கிரம் பிடித்த காமுகனின் செய்தி. அஸ்வினியினதும் அவரது குடும்பத்தினது வாழ்வும் அவரது பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கு புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் என்ன செய்யப்போகிறோம் ?

ஒரு சக பெண்ணை தோழியை எங்களுக்காக போராடி எல்லாம் இழந்து யாராவது புலம்பெயர்ந்தவர்கள் உதவுவார்கள் என்று நம்பி கையேந்திய அஸ்வினி மீதான ஊடக வன்முறைக்கு எதிராக பேசாமல் மௌனமாக என்னால் இருக்க முடியவில்லை. அஸ்வினிக்காக குரல் கொடுக்கும் என்மீது கூட நாளை இந்த ஊடக வியாபாரியால் ஏதாவது புனைகதையொன்றைத் தயாரிக்க முடியும்.

அநீதிகளை எதிர்த்தோ அல்லது சக பெண்போராளி மீதான பாலியல் அச்சுறுத்தலை எதிர்த்தோ ஒரு பெண் நின்றால் அவளுக்கு இந்த றாம் போன்ற தமிழ் ஆணாதிக்கம் கொடுக்கும் பட்டம் விபச்சாரிகள்.

சக பெண் போராளிகளை வெளிநாடு அழைப்பதாகவும் , திருமணம் செய்வதாகவும் பொய் கூறி ஏமாற்றிய றாமை எதிர்த்து தன் சக தோழிகளுக்கு நியாயம் கேட்டதற்காக இன்று அஸ்வினி என்ற முன்னாள் போராளி றாம் என்ற காமுகனின் பொய்யான பழிக்கு ஆழாகியிருக்கிறாள்.

அக்கிரமத்தைக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு பெண்ணையும் றாமின் ஆணாதிக்க வக்கிரம் பலியெடுத்துக் கொண்டே போகப்போகிறது. தயை கூர்ந்து தமிழ்ப் பெண்கள் அனைவரும் இந்த றாமின் அடாவடித்தனத்துக்கும் பெண்போராளிகள் மீதான இத்தகைய ஊடக வக்கிரத்திற்கும் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

போரில் எல்லாவற்றையும் இழந்த பல போராளிகள் இந்தியா, இந்தோனேசியா , மலேசியா என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு நல்வாழ்வொன்று வருமென்று நம்பும் இவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உதவி கேட்கிறார்கள். உதவுகிறோம் எனும் பெயரால் அவர்களது சுயமரியாதையை கௌரவத்தை விலைபேசும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலரால் எத்தனையோ பெண்களின் வாழ்வு அனாதரவாகிக்கிடக்கிறது.

ஒருகாலம் வன்னிக்குச் செல்லவும் போராளிகளைக் சந்திக்கவும் இவர்களது தோழ தோழியர்கள் என்று சொல்லியும் பெருமைப்பட்டு படங்கள் எடுத்துக் கொண்டு புலம் வந்தவர்கள் தங்களுக்கு ஏதோவொரு வழியைக் காட்டுவார்கள் என்று நம்பியே உதவிகள் கேட்கிறார்கள். உதவி ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் தேவைப்பட்டிருக்கிறது.

ஆனால் உதவுகிறோம் என்பதற்காகவே தங்கள் இச்சைகளுக்கு அவர்களைப் பலியாக்குவதும் , உடன்படாதவர்களை விபச்சாரிகள் , இலங்கையரச புலனாய்வாளர்களின் ஆசைநாயகிகள் என எழுதி அவர்களது வாழ்வின் நிம்மதியைப் பறிக்கின்ற றாம் போன்றவர்களின் அடாவடிகளைப் பார்த்தும் இன்னும் மௌனமாயே இருக்கப் போகிறதா ?

மேலும் பல போராளிப் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களுக்கு உதவுவுதாகக் கூறி பலருக்கு பல பெண்களை விற்ற றாமின் உண்மை முகத்தை பல முன்னாள் போராளிகளும் இன்னும் நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். இவரது உதவிகளுக்குப் பின்னால் பல மர்மங்களும் பலரது முகங்களும் மறைந்து கிடக்கிறது. அவர்களையும் விரைவில் வெளிப்படுத்துவோம்.

ஓவ்வொரு போராளியும் வாழ்க்கையின் இளமைக் காலத்தை போராட்ட களத்தில் கொடுத்து வெளியுலக வாழ்வினை அனுபவிக்காதவர்கள். இவர்கள் மக்களையும் மண்ணையும் மட்டுமே நேசித்தவர்கள். றாம் போன்ற வக்கிரமானவர்கள் எல்லாம் இதே தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட அறியாதவர்கள்.

உதவுகிறோம் என அழைத்தவுடன் தங்கள்  வறுமையையும் தங்கள் நிலமையையெல்லாம் கூறிவிடுகிறார்கள். வறுமையும் யாரும் ஆறுதலுக்கு இல்லாத நிலமையிலும் இருக்கும் போராளிகள். அவர்கள் மீது அன்பு காட்டுவது போல பேசி சில ஆயிரம் ரூபாய்களை உதவிவிட்டு தன்னுடைய பாலியல் வியாதிக்கு வடிகால் தேடும் றாம் போன்றவர்களால் தொடர்ந்து பல பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

றாமின் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை வரையும் சென்ற பெண்போராளிகளும் இன்னும் தங்களால் வெளியில் சொல்லியழ முடியாத துயரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருடாவருடம் பலமுறை சுற்றுலா சென்று வரும் போதெல்லாம் பல பெண்களின் வாழ்வை பலியெடுத்துக் கொண்டு வருகிற மிருகம்.

தாயகத்தில் வாழும் பல பெண்போராளிகளின் குடும்பங்களை சிறைக்கு அனுப்புவேன் என தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் றாமின் அச்சுறுத்தலுக்குத் தினமும் பயந்தபடி வாழும் போராளிகளின் கண்ணீருக்கும் துரயத்துக்கும் முடிவு என்ன ?

றாம் என்பவர் யார் !

இவர் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவர். விசுவலிங்கம் சிறீறங்கராம் என்பது இயற்பெயர். 90களில் புலிகள் அமைப்பில் இணைந்து 95இல் காவலரணிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பியோடியவர்.  பின்னர் இந்தியா சென்று பிரித்தானியாவை வந்தடைந்தவர்.

மச்சாள் முறையான றாதிகாவைத் திருமணம் செய்து 2பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையோடும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். இவரது மனைவி ராதிகா இந்தக் காமுகனின் எல்லா அடாவடிகளையும் தாங்கிக் கொண்டு வாழும் கண்ணகி கால மனைவி. தன்போன்ற பெண்களை பாலியல் வக்கிரம் புரியும் விடயங்களை அறிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவிப் பெண்ணாக இருக்கிறார்.

2009வரை றாம் யாரென்று யாருக்கும் தெரியாது. 2009யுத்த முடிவின் பின்னர் தான் தலைவர் பிரபாகரனின் மைத்துனன் எனவும் மூத்த பெண்போராளி ஒருவரின் தம்பியெனவும் கூறிக் கொண்டு ஆட்கடத்தல் வேலையை ஆரம்பித்திருந்தார்.

2009நாட்டில் இருக்க முடியாத நிலமையில் இருந்த போராளிகள் பலரை வெளிநாடு அழைக்கும் ஆட்கடத்தல் முகவராக வெளிப்படையாக இயங்கத் தொடங்கிய போதே பல போராளிகள் இவரிடம் உதவி கேட்கும் நிலையேற்பட்டது.

தாயகத்தில் இருந்த பல போராளிகளுக்கு அங்கே வாழ முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பல போராளிகளை மலேசியா , இந்தியா , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அழைத்து பாதுகாப்பு வழங்குவதாக உதவிகளைக் கோரியிருந்தார். இவனது கதைகளை நம்பி புலத்திலிருந்து பலர் உதவிகளையும் வழங்கியிருந்தார்கள்.

சில லட்சங்களுடன் தங்கள் வாழ்க்கையை அவுஸ்ரேலியா ,கனடா , ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ வழி கிடைக்கும் என நம்பிய பலர் தங்கள் பணத்தையும் இழந்து இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். இருந்த உடமைகளையும் விற்று றாமை நம்பி வெளிநாடு பார்க்க வெளிக்கிட்ட பலர் தற்போது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள்.

வெளிநாடு அழைக்கிறேன் என்றும் தனது மனைவி இறந்துவிட்டாரெனவும் கூறி பல போராளிப் பெண்களை ஆசிய நாடுகளில் அழைத்து அவர்களை பாலியல் வதை செய்திருக்கிறான். இவனால்; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பை யாராலும் வழங்க முடியவில்லை. வந்த நாடுகளில் சட்ட ரீதியற்று வாழ்வதால் சட்டம் உள்ளே தள்ளிவிடுமென்ற பயத்தில் றாமின் அநியாயத்துக்கெல்லாம் பல பெண்கள் பலியாகியுள்ளார்கள்.

இன்னும் தொடரும்.....!

Sunday, March 16, 2014

தாயே உனக்காயும் விபூசிக்காகவும்.

அம்மா அம்மா என - நீ
அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம்
நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள்
இன்று போல.....!
உன்னைக் கைவிடோமென நம்பிய
உனது பிள்ளைகளின் கனவுகள் மீது
உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன.

உனது கண்ணீரை உனது துயரங்களை
நீ சொல்லியழுகிற போதெல்லாம்
மறுமுனையில் உனக்காய் 
உனது குழந்தைகளுக்காய்
அழுத நாட்கள் அதிகம் தாயே....!


நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள்
விதையாகிப்போன பின்னும்
வீரத்தின் அடையாளமாய் அவர்கள்
விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில்
வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் 
அங்கேயே வாழ விரும்பினாய்....!

ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற
கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய்
அவனது வரவைத் தானே நீ தினமும் ஏந்தினாய்...!
'காணாமற்போனவர்கள் ஒருநாள் வருவார்கள்'
நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நீ
அவனைத் தேடித்தானே அலைந்து திரிந்தாய்....!

காணாமற்போனவனை நாங்களும் தேடித்திரிந்தோம் 
என்றாவது வருவானென நீ நம்பியது போலவே நம்பினோம்.
இன்றோ உன்னையும் உனது மீதி நம்பிக்கையான
குழந்தையையும் பறிகொடுத்து
உங்களிருவரையும் தேடுகிறோம் தாயே....!

மீண்டு வருவீர்களென்ற நம்பிக்கையில்
தாயே உனக்காயும் விபூசிக்காகவும்
மனுக்களோடு மனிதவுரிமையாளர்கள் 
மனங்கள் மட்டுமல்ல – அவர்
கண்களும் திறக்குமென்ற நம்பிக்கையோடு
தாயே உங்கள் விடுதலைக்காக
உலகெங்கும் வேண்டுகிறோம்.....!

16.03.2014
 சாந்தி நேசக்கரம்