Saturday, April 19, 2014

சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர்.

சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது.

ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை.

இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் நம்பியிருக்கும் கணவனுக்கு மறைக்க அவள் பட்ட துயரங்களை வார்த்தைகளில் கோர்த்துவிட முடியாது.

அக்காவுக்கும் , அவள் கணவனுக்கும் 2009வரையிலும் அவர்களுக்காக அவர்களது உயிர் காக்கவும் ஆட்கள் இருந்தார்கள். ஆறுதல் தருவதற்கே ஆயிரக்கணக்கில் இருந்தார்கள். 2009மே மாதத்தோடு எல்லாம் போனது. ஏனென்று கேட்க நாதியற்றுப் போன பல்லாயிரக்கணக்கானவர்களுள் அவர்களும் அடக்கமாயினர்.

20வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கையில் உடலெங்கும் இரும்புத்துகள்களும் நஞ்சூறிய கந்தகக்காற்றையும் சுவாசித்தே வாழ்ந்தார்கள். ஓடியோடி கடமையும் களமும் என வாழ்ந்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. அவளுக்குப் பொருத்தமான துணையாக வந்த கணவனின் துணையோடு அவர்கள் மூச்சு விடுதலைக்காகவே சுவாசித்துக் கொண்டிருந்தது.

ஒருகாலம் தங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது உறவென்று சொல்லிக் கொள்ளவோ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தைரியத்தையும் உடல் பலத்தையும் கூட களத்தில் தான் அக்கா இழந்தாள். அதற்காக அவர்கள் ஒருநாளும் கலங்கியதுமில்லை கவலைப்பட்டதுமில்லை. இன்று அத்தகையதொரு குழந்தையொன்று இல்லாது போனதற்காய் அதிகம் கவலைப்படுகிறாள் அக்கா.

அந்தரிக்கும் உயிருக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றவே ஆளில்லாது வாழ்நாள் நோயாளியாகிப் போன அவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஊரில் யாருமில்லை. ஏதோ வாழ்கிறோம் என்று வாழ்ந்தவர்களுக்காக அவர்களது பாதையை நேசித்து அவர்களோடு வாழ்ந்த சிலரின் சின்ன ஆறுதல் மட்டுமே அவர்களை ஏதோ வாழ வைத்துக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பலதடவைகள் காயங்களுக்கு உள்ளாகிய அண்ணை திடீரென ஒருநாள் மயங்கி விழுந்து நினைவிழந்தார். அக்கா துடித்துப் போனாள். அடுத்தநாள் விடிந்ததும் யாழ்ப்பாணம் மருத்தவத்திற்கு அண்ணையை அழைத்துப் போனாள். உடனே தலையில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென்றார்கள். ஏழைகளுக்கான இலவச மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படக்கூடிய சத்திரசிச்சையை தனியார் மருத்துவமனையில் தான் செய்ய முடியுமென்றார்கள் இலவச மருத்தவமனையில் சம்பளம் பெறும் மருத்துவர்.

யாருக்கும் தொல்லை கொடுத்து சிரமப்படுத்தக் கூடாதென்று வாழ்ந்த அக்கா வெளிநாட்டிலிருந்து அவளுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன உதவிகளை வழங்கிய அக்காவோடு ஒருகாலம் களமாடியவளைத் தான் தொடர்பு கொண்டு அண்ணையின் நிலமையைத் தெரிவித்து அழுதாள்.
அண்ணைக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய அக்கா தன் மகளாய் நேசிக்கும் ஒருத்தியே உதவினாள்.

சத்திரசிகிச்சை முடிந்தது. ஆனாலும் தொடர்ந்து மருத்துவத்திற்கான மருந்துக்கான செலவுகள் அவர்களை நிம்மதியாய் விடவில்லை. இயன்றவரை கிடைத்த சின்னச் சின்ன உதவிகள் மூலம் அண்ணையின் உயிர் போராடிக் கொண்டிருந்தது.

வெயிலில் நின்று வேலை செய்யவோ அல்லது பாரமொன்றைத் தூக்கி சுமக்கவோ ஒரு கூலிவேலையைத் தன்னும் செய்யும் பலத்தை இழந்து போனது அண்ணையின் ஆரோக்கியம். அக்காதான் தன் இயலாத நிலமையோடும் அண்ணையைக் காத்தாள். மருந்தின்றேல் அண்ணையால் இயங்க முடியாத நிலமையாகியது.

திடீரென அக்கா சுவாசிக்கச் சிரமப்பட்டாள். மூச்செடுக்க அவளுக்கு முடியாமல் போகத் தொடங்கியது. பணமில்லாதவர்களுக்காக இலவச மருத்துவமனைகள் தான் உயிர் தரும் இல்லங்கள்.

தன்னையே கொண்டு செல்ல முடியாத அண்ணை அக்காவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். இலவச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த மருத்துவர் பணம் கொடுத்தே அக்காவிற்கு உயிர்காக்க முடியுமென்று அறிவித்தார். கடவுளாகத் தெரிந்த மருத்துவர் காசுப் பிசாசாகி அக்காவின் உயிரைப் பலியெடுக்கும் காலனாகித் தெரிந்தார்கள். காசு இல்லாது போனால் அக்காவை வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள்.

அண்ணையின் உலகம் , ஆறுதல் ,பலம் , நம்பிக்கை , வாழ்வு எல்லாமே அக்காதான். அவளில்லையென்றால் எதையும் சமாளித்து வாழக்கூடிய நிலமையே இல்லாத தனிமனிதன் அக்காவின் உயிர்காக்கப் போராடினார். ஆனால் பணம் தான் அக்கா உயிரைத் தரும் கடவுளாகியது.

அக்கா வாழும் வரையும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனென ஊர் திரும்பினாள். ஒரு மாதம் வரையிலும் எதுவோ சமாளித்துவிட்டாள். கடந்த வாரம் அவளால் உணவை உட்கொள்ளவோ எழுந்து நடக்கவோ முடியாது போனது. உயர் இரத்த அழுத்தம் அத்தோடு சுவாசிக்க முடியாது அவள் சாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் அண்ணை அவளை யாழ்ப்பாணம் கொண்டு சென்றார். பணம் வை இல்லையேல் ஆளைக் கொண்டு போ...! இலவச மருத்துவமனையிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். தெரிந்தவர்களின் வீட்டில் அக்காவை வைத்துக் கொண்டு அண்ணை கடைசி நம்பிக்கை கைவிடாதென நம்பி வெளிநாட்டுக்கு தொடர்பெடுத்தார்.

என்ரை புள்ள உங்களை விட்டா எங்களுக்கு ஒருத்தருமில்லை...அக்கா சாகப்போறாள்....காப்பாற்று....என்ற அண்ணையின் கண்ணீர் ஐரோப்பா வரையிலும் கசிந்தது. அந்தச் செய்தியைக் கொண்டு வந்தாள் ஒரு போராளித் தங்கை. என்ன செய்தெண்டாலும் அக்காவை காப்பாற்ற வேணும்.

முகநூல் , வலைப்பூ மூலம் அறிமுகமான மருத்துவர்கள் பலரது இலக்கங்களைத் தேடிய போது திருகோணமலையில் வாழும் வலைப்பூவில் அறிமுகமான மருத்துவர் தம்பியொருவரின் தொடர்பே கிடைத்தது. அவசர மருத்துவ சேவையில் நின்ற அந்தத் தம்பி தனது அவசர நிலமைக்கு மத்தியிலும் உடனடியாக தொடர்பில் வந்து அக்காவை காப்பாற்ற வேண்டிய ஆதரவைத் தர முன்வந்தார். காசுக்காயே மருத்துவம் செய்யும் காசுப் பிசாசுகள் மத்தியில் அந்த மருத்துவர் தம்பி சத்தியமாய் என் கண்ணில் கடவுளாயே தெரிந்தார்.

17.04.2014 அன்று வேகவேகமாக அக்காவின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி 18.04.2014 ஏதாவது ஒரு வழியைக் காணும் வேகத்தில் தொடங்கிய முயற்சி. 18ம் திகதி அக்காவை மருத்துவமனையில் எதிர்பாராமல் ஒருவர் சந்தித்ததை கடவுள் அருளென்பதா ? இல்லை விதியென்பதா ?

1991இல் அக்காவோடு களமாடி வரலாற்றுச் சமரொன்றில் காயமடைந்து அவள் உயிர் போய்விட்டதென நம்பினார்கள். ஆனால் அக்கா மட்டுமே அவளுக்கு உயிர் இருப்பதை நம்பித் தன் தோழில் நீண்ட தூரம் காவிச் சென்று பிணமாகிக் கிடந்தவளுக்கு உயிர் கொடுத்திருந்தாள். அந்தத் தோழி பின்னர் குடும்பமாகி போராட்ட வாழ்வை விட்டு விலகியிருந்தாள். நீண்ட காலம் தொடர்புகள் எதுவும் இல்லாது போனது. அப்படியொரு உயிரைக் காத்ததைக் கூட அக்கா மறந்து போனாள்.

1991இல் அக்காவால் உயிர் காக்கப்பட்டவள் அக்காவின் நிலமையைக் கேட்டாள். அன்றைக்கு அக்கா தந்த உயிரே இன்று அவளை அந்த இடத்தில் உயிரோடு நிறுத்தியிருந்ததையும் நினைவுபடுத்தி அக்காவுக்கு உயிரைக் கொடுத்தேனும் உதவுவேன் என முன்வந்தாள்.

எங்கள் ஏற்பாடுகளின் நடுவில் அக்காவுக்கு கிடைத்த அந்தத் தோழி தனது உறவினர்கள் மூலம் அக்காவுக்கான சத்திரசிகிச்சையைச் செய்ய ஏற்பாட்டைச் செய்து இரவோடிரவாக கொழும்பு கொண்டு செல்லப்பட்டாள்.
சிகிச்சை முடிந்தால் ஆறுமாதங்கள் வரையில் அக்காவை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கான செலவை கட்டாயம் கருணையுள்ளம் படைத்தோர் யாராவது செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் குடும்பம் அக்காவுக்கான சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்துள்ளார்கள்.

தனது மனைவியின் அருகில் போயிருக்கத் தேவையான பணமில்லாததால் அண்ணை ஊரில் போயிருந்து தனியே அக்காவிற்காக பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். உலகில் யாருக்கும் வரக்கூடாத துயரம் அண்ணைக்கு.
18ம் திகதி வீடு சென்ற அண்ணை திடீரென மயங்கி வீழ்ந்தார். ஏன் எதற்கு ?
காரணம் எதுவும் புரியவில்லை. தனித்தே வாழும் அந்த மனிதனுக்கு சுடுதண்ணீர் கொடுக்கக்கூட ஆளின்றி படுக்கையிலிருந்து எழ முடியாது போனது. தனது நிலமையை அக்கா அறிந்தால் வேதனைப்படுவாள் என யோசித்து தான் சுகமாய் இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு அக்காவின் வரவிற்காய் காத்திருக்கிறார்.

19ம் திகதி காலை 9மணிக்கு சிகிச்சை நடக்குமென்றார்கள். 18.04.2014 மாலை அக்காவை அழைத்தேன். அவள் கதைக்கவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு சொல்லை அவள் சொல்லும் போதும் நிமிடக்கணக்கில் அந்தரிக்கிறாள்.

ஆச்சி என்னால ஏலாதமணை....அண்ணையோடை கதையுங்கோ....அவர் பாவம்....நானில்லாட்டில் அவர் தனிச்சுப் போவர்....உங்கை யேர்மனியிலயும் எனக்கு சொந்தக்காறர் ரெண்டு பேர் இருக்கினம். அவைக்கெல்லாம் ரெலிபோன் எடுத்துப் பாத்தனான்...ஒருத்தரும் உதவமாட்டமெண்டிட்டினம்....அம்மாச்சி என்ரை செல்லம் கடவுள் தான் உங்களையெல்லாம் எனக்குக் காட்டியிருக்கிறான்.

நேற்றைக்கு மட்டும் இனியெனக்கு சாவுதான் தப்பமாட்டனெண்டுதானணை நினைச்சனான்....ஆனால்....அக்காவால் பேச முடியாது குரல் மிகவும் சோர்ந்து போய்க்கொண்டிருந்தது. அண்ணையோடை எடுத்துக் கதையணை....அவர் பாவம் என்னோடை ஏலாதத்தோடை அலைஞ்சவர்....பாவம் இப்ப தனிச்சு கிடக்கிறார்....!

அக்கா நீங்க யோசிக்காமல் படுங்கோ...நாளைக்கு எல்லாம் நல்லா முடிஞ்சு நீங்கள் திரும்பி வருவீங்கள்....உங்களுக்கு உதவிறதுக்கு இங்கை கனபேர் இருக்கினம் எல்லாரிட்டையும் கேட்பம்....உங்களை நாங்க கைவிடமாட்டம்....நிம்மதியா படுங்கோ....சொன்ன போது அக்கா அழுதாள்...
என்ரையம்மா என்னாலை ஏலாதாம் நான் படுக்கட்டே....அக்கா விடைபெற்ற போது இலங்கை நேரம் இரவு 9.40ஆகியிருந்தது. நீ வருவாய் எங்கள் அக்காவாய் உனக்கான உதவியை புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்கள் தருவார்கள் நிம்மதியாய் இரு என்று சொல்லிக் கொண்டு தொடர்பை துண்டிக்கிறேன்.

அவளது குரலும் அவள் மூச்செடுக்க சிரமப்படுவதும் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. நேற்றைய இரவு விடியும் வரையும் அக்காவின் சிகிச்சை முடிவு பற்றிய செய்தியையே கைபேசி எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

பொறுமை கடந்து அண்ணைக்கு தொடர்பெடுத்த போது....ஓம் பிள்ளை சொல்லணை என்ற தீனக்குரலில் அழைத்தார். அக்காவுக்கு என்னமாதிரியண்ணை எல்லாம் முடிஞ்சுதே ? இல்லையம்மா அவவுக்கு பிறசர் சரியா கூடீட்டுதாம் பிறசர் குறையத்தானாம் செய்வினம்....!

தனது தனிமை , தனது இயலாமை , தனது நோயின் வலி பற்றியெல்லாம் அண்ணை சொல்லிக் கொண்டிருந்தார். 21ம் திகதி அண்ணைக்கான அடுத்த மருத்துவ சோதனைக்குப் போக வேணும். ஆனால் போவதற்கு கையில் எதுவும் இல்லாது இருக்கிறார். ஏதாவது வழி செய்வமண்ணை நாளைண்டைக்கு போங்கோ என்ற போது சொன்னார். எனக்கு உதவாட்டில் காரியமில்லை மகள் அக்காவைக் காப்பாற்றுங்கோ....அக்காவுக்கு உதவுங்கோ....!

அண்ணையின் குரல் அழுகையாகி விக்கலெடுத்துத் தேம்பினார். பணமே எல்லாவற்றையும் எல்லாரையும் வாழ வைக்கும் பலமாகிய விதியை நினைக்க கோபம் இயலாமை விரக்தியென ஏதோதோ உணர்வுகள் கண்ணிலிருந்து கண்ணீராய் வழிகிறது.

யோசிக்காதையுங்கோ அண்ணை....அக்கா சுகமாகி கெதியில வருவா....காசுதானே இந்த உலகத்தில எத்தினை பேர் இருக்கினம்....இன்னும் மனிதமும் மனிதர்களும் சாகேல்லயண்ணை திங்கள் விடியக் கிடையில உங்களுக்கு மருந்துக்கு காசு வரும்....! சொன்ன போதும் அண்ணை அக்காவைத் தான் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அக்காவைக் காக்க அக்காவைத் தவிர யாருமில்லாத அண்ணையைக் காக்க கருணையுள்ளம் படைத்தவர்களே உங்களிடமெல்லாம் கையேந்துகிறோம். எங்களுக்காக வாழ்ந்த இரு சீவன்கள் உயிர்காக்க உங்களால் மட்டுமே முடியும்.

19.04.2014 (இந்த உயிர்கள் இரண்டையும் காப்பாற்ற உதவுங்கள். உதவக் கூடியவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை வழங்கி உயிர்காத்துத் தாருங்கள்)

தொடர்புகளுக்கு :-
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418
nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh



No comments: