Wednesday, May 14, 2014

விலாசம் மறந்த வீரனின் சுவடுகள் தளபதி ஜெயம் (பாலகுரு சுவேந்திரன்)

தளபதி ஜெயம்
(பாலகுரு சுவேந்திரன் - பிறப்பு - 1965ம் ஆண்டு)

வெற்றிகளுக்கு விழுதான வேர்களை உலகம் என்றைக்கும் உணர்ந்து கொள்வதில்லை. வீரத்தின் வேர்களுக்கான விலாசங்களும் அப்படியே வெளியில் அவை ஒருபோதும் வெளிச்சமிடப்படுவதில்லை. இத்தகைய வேராக வெளியில் வராத விலாசமாக எங்களோடு எங்கள் மக்களோடு வாழ்ந்து வரலாறாகிப் போனவர்களில் தளபதி ஜெயமண்ணாவும் ஒருவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புத மனிதன்.

கதாநாயகத் தகுதியையோ கவர்ச்சியான மேடைப்பேச்சு வல்லுனர்களையோ புலிகளின் பாசறைகள் வளர்த்ததில்லை. தலைவனின் வேதம் போல ‚'சொல்லுக்கு முன் செயல்' இதுவே விடுதலைப்புலகள் வரலாற்றின் வெற்றி.  திறமைகள் மட்டுமே அந்தந்த தகுதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பாசறைகளிலிருந்து வளர்ந்து வெளிவந்த வரலாறுகளே ஜெயமண்ணா போன்ற தளபதிகளுக்கான விலாசங்களும் தகுதிகளும். 

வன்னிக்கிராமங்களில் ஒன்றான பாவற்குளம் மண்தான் சுவேந்திரன் என்ற ஜெயமண்ணாவைப் பெற்ற தாய்மடி. பாவற்குளம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் தொடந்து வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார். 

சிங்களம் திட்டமிட்டு தொடர்ந்த தமிழின அழிப்பானது வன்னிக் கிராமங்களையும் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. சிங்கள எல்லைக் கிராமங்களிலிருந்து வருகிற சிங்களத்தினால் பாவற்குளம் போன்ற கிராமங்களின் வாழ்வுரிமையும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தது. 
விவசாயத்தையே பலமாகக் கொண்ட இந்தக் கிராமங்களில் விவசாயிகளின் கால்நடைகளை திருடுவது முதல் இங்கு வாழ்ந்த தமிழர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத காலம் அது. ஒவ்வொரு தமிழரையும் போராடு என்ற விதியையும் எழுதிய காலமும் அதுவே. 

காலம் சுவேந்திரனை புலியாக்கியது. இந்தியாவில் 3வது பயிற்சிப்பாசறை போராளியாய் புடம்போட்டு வளர்த்துத் தாயகம் அனுப்பியது. அச்சுறுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு அச்சுறுத்தலாக ஜெயமண்ணா ஆயுதம் தாங்கிய வீரனாய் தோழர்களுடன் நிலத்தில் வந்திறங்கிய போது அந்தப் பாதங்கள் பதிந்த இடங்களெங்கும் தலைநிமிர்ந்தது. வன்னியின் வீரவரலாற்றுக் கதைகளாக வீழ்ந்த வீரத்தின் நிமிர்வாக ஜெயமண்ணாவின் பணி வன்னி நிலத்திலும் வன்னிக் காடுகளிலும் ஆரம்பித்திருந்தது. 

இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய ஜெயமண்ணா புதிய போராளிகளை உருவாக்கும் பொறுப்பில் பணியை ஆரம்பித்தார். துணுக்காய் தென்னியங்குளம் பயிற்சி முகாமின் பயிற்சியாசிரியராகினார். இங்கிருந்தே வன்னிக்கான பணிகளுக்கான அணிகள் பிரித்து அனுப்பப்பட்டது. இங்கிருந்தே ஜெயமண்ணா வவுனியா மாவட்ட பணிக்காக போராளிகளோடு அனுப்பப்பட்டிருந்தார்.

ஆரம்பகால சண்டைகளான கொக்குளாய் தாக்குதல் அணியில் ஒரு அணியோடு களம் சென்றது மட்டுமன்றி பூனகரி 4ம் கட்டைச் சண்டை , ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் என பல சண்டைகளிலும் பங்கேற்றிருந்தார். ஆரம்ப காலம் மிகவும் சிரமங்களைச் சந்தித்த கடுமையான சண்டையனுபவங்கள். பின்னர் பெரும் தளபதியாய் நிமிரும் வரையான ஜெயமண்ணாவின் ஆற்றலின் அடையாளங்களும் சாதனைகளும் கால நதியோடு தானும் கைகோர்த்துக் கொண்டே நடந்தது.

000       000           000

1987 யாழ்மாவட்டம் மிகுந்த சிக்கலை எதிர் நோக்கியிருந்த காலமது. „'லிபரேசன் ஒபரேசன்' நடவடிக்கை மூலம் வடமராட்சியின் பெரும் நிலப்பரப்பு இலங்கையரச படைகள் வசமானது. யாழ்மண்ணின் இதர பகுதிகளும் சிங்களத்தின் கைகளில் போய்விடும் என்ற நிலமையைத் தோற்றுவித்து மக்களின் மனங்களில் யுத்தத்தின் பாதிப்பு உள ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் காலம் யாழ்மண் உணவு தொடக்கம் மருந்துகள் அடிப்படைத் தேவைகளுக்கெல்லாம் மிகவும் அவதிப்பட்டகாலம். 
அயல் நாடான இந்தியா தனது பிராந்திய நலனில் எப்போதுமே அடுத்த நாடுகளையோ அல்லது அயல்நாடுகளையோ அண்டவிடாதது. இக்காலத்தில் இந்தியா திடீரென யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளில் வானிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

காப்பதற்கு இந்தியா கட்டாயம் வருமென்று நம்பிய தமிழர்களின் நம்பிக்கைக்கு உற்சாகத்தை வழங்கியது போல 04.06.1987 இந்திய விமானங்கள் போட்ட உணவுப்பொதியில் ஈழத்தமிழரின் விடிவின் காலமும் நெருங்கியதாகவே உணர்ந்தது தேசம். புலிகள் மட்டும் இந்திய அரசின் போலி இரக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். 

04.06.1987 அன்று யாழ்குடாவில் இந்திய வான்படையினரால் போடப்பட்ட உணவுப்பொதிகளும் அதன் ஏற்பாடுகளும் பற்றிய செய்தியானது அப்போதைய இந்திய ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட விடயமாகும்.
‚'ஒப்பிரேசன் பூமாலை' என பெயரிடப்பட்டு நடைபெற்ற மேற்படி உணவுப்பொருட்களை இந்தியா போடுவதற்கான காரணத்தை இப்படித்தான் அந்நாளில் சொல்லப்பட்டது.

'கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.'

இப்படித்தான் அன்றைய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தியா எங்களைக் காக்கும் எங்களின் நேச சக்தியென்றுதான் நம்பியது தமிழினம். 
000           000              000

புலிகளின் வீரமும் இக்கட்டு நிறைந்த காலங்களையெல்லாம் தங்கள் மனபலத்தால் வென்ற தைரியமும் அந்த இக்கட்டு மிகுந்த காலத்தை கப்டன் மில்லர் என்ற மாவீரனின் தியாகத்தால் மீட்டுத் தந்தது. 

05.07.1987 அன்று வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் மீது உயிராயுதமாக மில்லர் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் உட்சென்று வெடித்து பெரும் அழிவை இராணுவப் படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்திய பேரிடியில் சிங்களத்தின் மனபலமும் உடைந்து போனது. 

அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவை உடைத்து கரும்புலியின் வரலாற்றை எழுதிய முதல் கரும்புலி வீரன் கப்டன்.மில்லரின் அந்தத் தாக்குதலோடு அதுவரை திமிரோடு ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணுவ வல்லமையின் ஆணவமும் அடங்கிப்போனது. 

புலிகளின் வரலாற்றில் குறைந்த இழப்பின் மூலம் எதிரி மீதான பெரும் அழிவைக் கொடுக்கும் உயிராயுதங்களின் திறனை ஆடி 5, 1987 உலகிற்கும் சிங்களத்திற்கும் உணர்த்தியிருந்தது. இனி போர் மூலம் வெற்றியைப் பெற முடியாத உண்மையை ஜனாதிபி ஜே.ஆர்.ஜெயவர்த்தன உணர்ந்து கொண்டார். 

புலிகளுடன் தோற்றுப்போன ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் அப்போதைய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அவர்களுக்குமிடையில் 29.07.1987 அன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வொப்பந்தமானது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல.

ஓப்பந்தம் எழுதப்படுவதற்கு முதல் விடுதலைப்புலகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்பியது இந்திய அரசு. இப்பேச்சுவார்த்தையில் தலைவர் பிரபாகரனை பங்கேற்ற வேண்டுமென இந்தியா வேண்டிக் கொண்டதற்கு அமைவாக தலைவர் பிரபாகரன் அவர்களும் மற்றும் போராளிகள் சிலரும் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

அசோகா கொட்டலில் தங்கவைக்கப்பட்ட தலைவரும் போராளிகளும் அங்கே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வழங்கப்படும் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்பட்டனர். 16வயதில் தன் இனத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்து கடினங்கள் துரோகங்களையெல்லாம் தாங்கிப் போராட்ட வாழ்வையேற்று தன்னினத்தின் விடுதலையை மட்டுமே நேசித்த தலைவன் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்தார். ஆனால் பலம் மிக்கவர்கள் வென்றார்கள். இந்தியாவினால் தமிழினம் ஏமாற்றப்பட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டது. இந்திய இராணுவம் ஈழத்தில் குவிக்கப்பட்டது.

எனினும் நேசநாடான இந்தியாவைத் தொடர்ந்தும் நம்பிய புலிகள் மக்களைக் காக்க ஏந்திய ஆயுதங்களையும் இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு தமிழர்களுக்கான நியாமான தீர்வை பேச்சுவார்த்தைகள் தருமென்று நம்பி மக்களுக்காக தங்கள் கைகள் சுமந்த ஆயுதங்களையெல்லாம் இந்தியப்படைகளிடம் ஒப்படைத்து நிராயுதபாணிகளாயினர். 

இந்தியா வாக்குறுதியளித்தபடி தமிழர்களுக்கான எந்தவிதமான தீர்வையும் எட்டும் வழிகளைத் தரவில்லை. இன அழிப்பும் தமிழரின் நிலப்பறிப்பும் நடந்து கொண்டேயிருந்தது. ஆயுதம் ஏந்தி களத்தில் விழுப்புண்ணடைந்தும் தனது பணியை அரசியலில் நிலைநாட்டிய தியாகி திலீபன் அவர்கள் இந்தியாவின் கபடத்துக்கு முன்னால் 5அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் மேற்கு வீதியில் உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை பசித்தீமூட்டியெரித்து பாடையில் ஏறினார்.  இந்தியா பேசாதிருந்தது. 

கடலில் போன கடற்புறாக்களான தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளும் பலாலியில் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவியும் இந்தியா மௌனமாயே இருந்தது. தமிழின அழிப்பும் தமிழர் நிலப்பறிப்பும் தொடராகவே....!

தன்னினம் காக்கப்பட ஏந்திய துப்பாக்கிகளை மீண்டும் புலிகள் தமிழினம் காக்கப்பட ஏந்த வேண்டிய விதியை எழுதியது இந்தியா. குறைந்தளவிலான போராளிகளோடு பெரும் படைபலமும் ஆயுத பலமும் கொண்ட இந்தியப் படைகளுடன் புலிகள் சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவே ஏற்படுத்தி 10.10.1987இன்று இந்தியப்படைகளுடன் யுத்தம் மூண்டது.
காக்க வந்த படைகளால் தமிழினம் அழிக்கப்படத் தொடங்கியது. வயது வேறுபாடின்றி கொன்று குவித்து பெண்களை பாலியல் வன்புணர்வு புரிந்து ஈழம் மறந்து போகா வடுவை இந்தியப் படைகள் ஈழத்தில் செய்து கொண்டிருந்தது. பெரும் படையின் பெரும்பலத்தோடு புலிகள் போராடத் தொடங்கினார்கள். 

மக்கள் பலம் புலிகளுக்கு எப்போதுமே பெரும்பலமாய் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து போராளிகளைப் பாதுகாத்து சமராடும் புலிகளுக்கு ஆதரவழித்தனர். ஆதரவு கொடுத்தவர்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள். அன்னிய இராணுவத்தின் கையில் எங்கள் தேசம்....!

87களில் வன்னி மாவட்டத்தின் பொறுப்பாளராயிருந்த ஜெயமண்ணாவின் பணிகளானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. போராளிகள் மக்களுடன் மக்களாக கிராமங்களில் விழித்திருந்த காலங்கள்.  அக்காலத்தில் காட்டில் தலைவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த போராளிகள் தளபதிகளுடன் தளபதி ஜெயமண்ணாவும் தலைவனைக் காக்கும் பணியில் நியமனம் பெற்று தலைவனின் அருகில் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

புதிய போராளிகளை உருவாக்குதல் தொடக்கம் அந்தக்கால இறுக்கத்திற்கு ஏற்ப திட்டமிடல் பணிகளை விரிவுபடுத்தல் செயற்படுத்தல் என ஓய்வு மறந்து இயங்கிக் கொண்டிருந்த போராளி. பல சண்டைகளில் தனது ஆழுமையை சாதுரியத்தை வெளிப்படுத்திய சத்தமில்லாத சாதனையாளன். இயல்பிலே அமைந்த தனித்துவப் பண்புகள் மக்களின் மனங்களை வென்ற தளபதியாக இனங்காட்டியது. 
000             000             000

1990இந்திய இராணுவ வெளியேற்றம் நிகழ்ந்து புலிகளின் போரியல் வீச்சும் மாற்றம் கண்ட காலம். 90இற்குப் பின்னர் தலைவரின் பாதுகாப்பணியில் செயற்படத் தொடங்கினார். தலைவனின் நம்பிக்கை , தலைவனின் பாதுகாப்பு , போராளிகளின் அன்பையெல்லாம் பெற்றிருந்த போராளியின் தியாகத்திற்குச் சவாலாக 1993காலப்பகுதி அமைந்தது. 

தலைவனை தலைவனின் பாதுகாப்பை தமிழரின் விடிவையுமே சிந்தித்துக் கொண்டிருந்த ஜெயமண்ணா அக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை துயர்களையும் தாங்கினார். தனது கொள்கையில் என்றுமே தலைவனுக்குரிய போராளியாகவே வாழ்ந்தார். அக்காலத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் யாவையும் உறுதியோடு கடந்தார். தளபதியாக என்றும் கோலோச்ச விரும்பாத தளபதி. ஒரு வீரவேங்கையாக இறுதி வரை வாழ்ந்து வன்னியில் அமைந்த துயிலிடம் ஒன்றில் தன்னை விதையாக்கவே விரும்பிய சுயநலம் மறந்த மக்கள் மனங்களை வென்ற மாவீரன்.

‚'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் கலங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே'' என்ற பாடலை சக தோழர்களுக்கு எழுதிக்காட்டி தைரியம் கொடுத்து நடந்து முடிந்த எல்லாத்துயரையும் தலைவனை நினைத்தபடியே வென்றார். அரிச்சந்திரன் கதையை மட்டுமே அறிந்த போராளிகள் முன்னே அரிச்சந்திரனாய் வாழ்ந்து காட்டிய அதிசயம் ஜெயமண்ணா.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது என்ற உண்மையை ஜெயமண்ணாவின் காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருந்தது. அமைதியோடு ஏற்பட்ட கசப்புகளை கவலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து மெல்லெனப் பாய்ந்தோடிய ஜெயம் என்ற நதியின் கால்கள் உண்மையை வெளியில் கொண்டு வந்து தன் இலக்கில் உறுதியோடு பயணித்தது.
000         000      000

காலம் 1997....,
வன்னியை இரு துண்டமாகப் பிரித்து உட்புக முயன்று கொண்டிருந்த சிங்களப்படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிங்களத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான சகல விநியோகமும் கடல் மார்க்கமாகவே நடந்து கொண்டிருந்தது. அதுவும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களினால் பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருந்தது. 

சிங்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வவுனியா நகருக்கும் யாழ்ப்பாணத்திற்குமான வழியான ஏ9 நெடுஞ்சாலையானது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தினை ஏ9 ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றினால் மட்டுமே சிங்களத்தால் இலகுவான வழங்கலை யாழ்பகுதிக்கு செய்ய முடியும். 

ஏ9 பாதையை கைப்பற்றுவதற்கு முதல் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் பாதையைப் பிடிப்பதற்கான முயற்சியில் „'எடிபல' என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது சிங்களம். அந்நடவடிக்கையின் மூலம் தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் பெரும் அழிவை எதிர்கொண்டு இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலத்தைவிட்டு இடம்பெயர்ந்தார்கள். 
அடுத்த கட்டமாக 13.05.1997அன்று ஜெயசிக்குறு பெயரிடப்பட்டு சிங்களம் ஏ9பாதை கைப்பற்றும் நோக்கில் 20ஆயிரம் படைகளைக் கொண்டு சமரைத் தொடங்கியது. 

இந்நடவடிக்கையானது ஒரேநாளில் இருமுனைகளின் ஊடாக சிங்களம் படைநகர்வை ஆரம்பித்தது. தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தையை நோக்கிய ஒரு நகர்வும் , மணலாற்றிலிருந்து நெடுங்கேணி நோக்கிய மறு நகர்வாகவும் சிங்களப்படைகள் நகர்வை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கை மூலம் ஓமந்தையை கைப்பற்றி அதன் ஊடாக ஏ9 பாதையூடாக முன்னேறும் படைகளும் , நெடுங்கேணியிலிருந்து முன்னேறி வரும் படைகள் புளியங்குளம் வரையும் கைப்பற்றி இரு நகர்வும் புளியங்குளத்தில் சந்தித்து கிளிநொச்சியை கைப்பற்ற ஏ9 பாதைவழியே முன்னேறும் திட்டமிடலுடன் தொடங்கப்பட்டது. அரசின் உச்ச பலமும் இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது. வான், தரை உள்ளிட்ட சகல ஆதரவோடும் நகரத் தொடங்கியது சிங்களம்.

புளியங்குளம், கனகராயன்குளம், ஒலுமடு, கரிப்பட்ட முறிப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சமர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நிகழ்ந்த பெரும் சமர்களாகும். நீண்டகாலம் நீடித்த இச்சமரில் எதிரியால் மாங்குளம் வரையுமே நகர முடிந்தது. 

புலிகளின் போராட்ட வரலாற்றில் ஜெயசிக்குறு சமரானது புதிய வடிவத்தில் நடைபெற்ற சமராக வரலாற்றில் பதிவாகியது. இப்பெரும் சமரில் களமுனைத்தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயமண்ணாவின் படையணிகளின் பங்கானது அந்தச் சமரின் வெற்றியில் கணிசமான பங்கை வழங்கியது.

அடுத்து புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட கிளிநொச்சி முகாம் அழிப்பு நடவடிக்கையில் திருவையாறு பகுதியால் சென்ற அணியின் தளபதியாக ஜெயமண்ணாவும் அவரது படையணியும் சென்றிருந்தது. புலிகளினால் வெல்லப்பட்ட கிளிநொச்சி வெற்றியில் ஜெயமண்ணாவும் அவரது படையணியும் தங்களுக்கான கடமையை முடித்தார்கள். மீண்டது கிளிநொச்சி. 

எப்போதுமே தனக்கு வழங்கப்படும் பணியை நேர்த்தியுடன் செய்து முடிக்கும் தளபதியாகவே ஜெயமண்ணா வெற்றி தந்த சமரான கிளிநொச்சி மீட்பிலும் பங்காற்றியிருந்தார்.

அடுத்து வீழ்ந்தது ஆனையிறவு முகாம். எத்தனையோ இழப்புகளை 1991இல் இருந்து ஆனையிறவு மீட்புக்காக இழந்ததற்கான பலன் 2000ம் ஆண்டு புலிகளால் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டது. உப்பளக்காற்றில் வாசனையில் ஜெயமண்ணாவின் பணிகளும் கலந்தேயிருந்தது. ஆனையிறவு வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்மண்நோக்கிய புலிகளின் பாச்சலிலும் ஜெயமண்ணாவின் தடங்களும் அந்த வெற்றியில் பதிந்திருந்தது. 2001இல் நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையிலும் ஜெயம் என்ற ஆழுமையும் ஆற்றலும் தனது கடமையில் பின்செல்லாமல் முன்னேறிச் சென்ற சாதனையாளன். 

காலஓட்டம் ஜெயமண்ணாவின் திறனையும் தன்னோடு எழுதிக் கொண்டே சென்றது. புலிகளின் வேவு அணியின் வளர்ச்சியானது புதிய பரிமாணத்தையும் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டிய காலத்தின் வேகத்தில் வேவு அணியின் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் ஜெயயமண்ணா. 

அதிகளவிலான போராளிகளை உள்வாங்கி உருவாக்கி வேவு அணியின் வீரியத்தை வேகப்படுத்திய பெருமையின் வேரில் ஜெயமண்ணாவின் அர்ப்பணிப்பும் தியாகமும் வெளியில் தெரியாத ஆனால் வேங்கைகளின் வரலாற்றில் மாற்றத்தைக் கண்ட அணியாகும்.
000                  000                     000

1998காலம் மன்னார் மாவட்டத்தின் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு மன்னாரில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தார். போராட்டத்தில் இன்னொரு இக்கட்டான காலத்தை புலிகள் எதிர் கொண்ட காலமாக அமைந்த அக்காலத்தில் ஜெயமண்ணாவின் ஆற்றலும் சாதனைகளும் காலங்களால் மறக்க முடியாத பதிவுகள். 

அப்போது தலைவரால் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் மாவீரர் துயிலுமில்லங்கள் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்பு , பாதுகாப்பு , கவனிப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உரிய கடமைகளுடன் ஒன்றாக வழங்கப்பட்டிருந்தது.

களமுனைப்பகுதி பிரதான தளபதிகளான தளபதி தீபன் கிளிநொச்சி துயிலுமில்லம் ,தளபதி பானு வன்னிவிளாங்குளம் துயிலுமில்லம் ,தளபதி துர்க்கா ஆலங்குளம் துயிலுமில்லம், தளபதி கேணல் சங்கர் முள்ளியவளை துயிலுமில்லும் , பாலதாஸ் பண்டிவிரிச்சான் துயிலுமில்லம் , கேணல் ரமேஸ் விசுவமடு துயிலுமில்லம் என வழங்கப்பட்டிருந்தது.

தமிழீழக் கனவோடு களமாடி வீரச்சாவடையும் ஒவ்வொரு மாவீரரின் கல்லறைகளையும் தானே நேரில் நின்று வடிவமைப்பாளர்களோடு தானும் பணியாளனாகி மாவீரர்களின் கல்லறைகளை வடிவமைத்து முழுமையான வெற்றியை அடைந்தவர் என்றால் அதில் ஜெயமண்ணாதான் முதன்மையானவர். 

மாவீரர் துயிலுமில்லங்களை வடிவமைக்க வழங்கப்படும் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டவை. ஆனால் கொடுக்கப்பட்ட வளங்களை வைத்து மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மாவீரர் துயிலுமில்லங்களை செய்து முடித்த தளபதியாக தலைவரால் பாராட்டுப் பெற்ற ஒரேயொரு தளபதி ஜெயமண்ணாவே.

ஆண்டான்குளம் துயிலுமில்லத்தின் உறுதியின் உறைவிடத்தின் கல்லறை வடிவமைப்பை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அதேபோல மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தின் கல்லறைகள் வடிமைப்பில் ஜெயமண்ணாவின் பணியை அர்ப்பணிப்பை மறக்கவே முடியாதளவு சிறப்பாகச் செய்து முடித்தார். 

மாவீரர் துயிலுமில்லங்களில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறைகளில் சிலமணிகள் ஓய்வெடுத்துக் கொண்டு கால நேரமின்றிச் செயற்பட்டு மாவீரர்கள் உறங்கிய மாவீரர் உறங்குமிடங்களை உருவாக்கும் பணியில் ஒரு சாதாரண பணியாளனாகிச் செயற்பட்ட தளபதி.

ஒரு தளபதியாக அந்த மாவட்டத்தின் நிர்வாக விடயங்கள் முதல் கிராமங்கள் ரீதியான நிர்வாக ஒழுங்குகளையெல்லாம்; ஒருங்கே கவனிக்கும் பாரிய பொறுப்பினை இலகுவாகச் செய்து கொண்டதோடு மக்களோடு மக்களாகி அவர்களது பிரச்சனைகள் இடைஞ்சல்களை அறிந்து அதற்கான தீர்வை வழங்கும் முதன்மையான போராளியாத் திகழ்ந்தார்.

புலிகளின் அரசியல் நிர்வாக ஒழுங்குகளில் எங்கேனும் ஏற்படும் மக்களுக்கான அசௌகரியங்களை என்றுமே அலட்சியம் செய்ததில்லை. அங்கெல்லாம் தானே நேரடியாக நின்று மக்களுடன் உறவாடி அவர்களது பிரச்சனைகளை தலைமைக்கு எடுத்துச் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்கிற துணிச்சல் மிக்க மனிதன். 

குறிப்பாக தமிழீழ ஆயத்துறையின் வரி அறவீட்டு விடயத்தில் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை தானே தலைமையிடம் கொண்டு சென்று சரியான தீர்வையும் பெற்றுக் கொடுத்து ஆயத்துறைப் போராளிகளின் தொடர்ந்த பணிகளுக்கான வழிகாட்டியாகவும் மாறியிருந்தார். மக்களின் மனங்களை வென்று மக்களோடு நல்லுறவைப்பேணி மக்களுடனேயே வாழ்ந்தார்.

போராட்டத்திற்குத் தேவையான ஆட்திரட்டலை மிகவும் திறம்படச் செய்தவர்களில் ஜெயமண்ணாவின் பங்கு மறக்க முடியாதது. தனது பேச்சாற்றலால் உண்மைகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி பறிபோகும் நிலத்தை மீட்க போராளிகளை இணைக்க அந்த நாட்களில் மன்னாரில் ஜெயமண்ணாவின் பங்கை காலத்தினால் மறக்க முடியாது.

000                  000                     000
சமாதான காலம். ஆற்றலின் வடிவமாய் அமைதியின் உருவாய் கடந்து வந்த பாதைகளின் காலத்தை வென்ற போராளியாயிருந்த தளபதி அரசியல் பேச்சு மேடைகளில் கூட வெளிநாடுகளிற்கும் சென்று வந்த அரசியல்ஞானி. என்றுமே தனது வாழ்வை தனது தாயக விடுதலைக்காயே கொடுத்து வாழ்ந்ததோடு தனது வாழ்க்கைத் துணைவியையும் போராளியாகவே தேர்ந்தெடுத்தார். 

வெளிநாட்டு வாழ்வையும் பணபலத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளையெல்லாம் பெற்றிருந்தும் கடைசிவரை தலைவனுடன் தலைவனின் பாதையில் சென்று முடியும் நினைவோடே இறுதிக்காலம் கணவன் மனைவி இருவருமே களத்தில் நின்றார்கள். 

2006 தொடக்கம் 2007 4ம் மாதம் வரையிலும் கிழக்கு மாகாணத்தில் நின்று அந்தக் களங்களை வழிநடத்திய ஆற்றலின் வடிவம். எப்போதுமே சுயநலமற்ற தேசக்காதலை மட்டுமே நெஞ்சில் சுமந்து வாழ்ந்த எளிமையின் பெருமையெல்லாம் ஜெயமண்ணாவின் போராட்ட வாழ்வின் வித்தியாசமான சாட்சிகள். பல விடயங்களில் உதாரணமாகவும் உயர்ந்தவராகவும் வாழ்ந்து காட்டிய வரலாற்றின் புதல்வன்.

களத்தி;ன் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த 2009மே மாதம் 17ம் திகதி வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவரும் சுடுகலன்களோடே காவலிருந்தார்கள். 

வெளிநாடுகளில் இருந்த நண்பர்கள் ஜெயமண்ணாவின் துணைவி நளாக்காவை பிள்ளைகளுடன் வெளியே வருமாறு வேண்டினர். கோல்சர் கட்டீட்டன்....பிள்ளைகளை நீங்கள் பாப்பியள் தானே...எனச் சொல்லிவிட்டு குழந்தைகள் சிந்துசை , அகரன் இருவரையும் கூட மறந்து இறுதி வரை போராடுவோம் என உறுதியோடு நின்ற அந்த வித்தியாசமான தம்பதிகள் இருவரையும் நினைவு கொள்ளும் நண்பர்களிடம் அவர்களது தேசம் மீதான காதலும் தேசியத்தலைவர் மீதான அன்பையும் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகளும் கனவுகளும் நிறைந்து கிடக்கிறது.

கடைசிக்கள முடிவினை உலகம் எப்படியோ எல்லாம் எழுதியும் ஆய்வுகள் செய்தும் கொண்டிருக்க அந்த முள்ளிவாய்க்கால் கரைகளில் தங்கள் இருவரின் உயிரையும் விதைத்து வீழ்ந்து வீ(மீ)ளாத கனவுகளோடும் கலந்து போனார்கள் தளபதி ஜெயமண்ணாவும் அவரது துணைவி நளாக்காவும். அவர்களது குழந்தைகளை குடும்ப உறவுகளை யாரையுமே எண்ணாது மண்ணுக்காகவே வாழ்ந்து அந்த மண்ணிலேயே மடிந்து போனார்கள்...மறக்க முடியாத வீரமாக....வீரர்களாக....! 

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்துக் கொண்டது. ஆற்றல் மிக்க தளபதிகள் , போராளிகள் உயிர்கள் அந்தக் கடற்காற்றின் ஓலத்தோடு கலந்து ஒரு காலத்தின் கதையை தன் காற்றோடு சுமந்து கடந்தது....! அந்தக் காற்றோடும் கடல் அலைகளோடும் ஜெயமண்ணா, நளாக்கா இருவருமே காலம் கடந்தும் வாழும் தம்பதிகளாக ஈழ விடுதலை வரலாற்றில் எழுதப்பட்ட வீரர்களாக எங்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். 

05.2014
நினைவுப்பகிர்வு :-  - சாந்தி நேசக்கரம் -
Email :- rameshsanthi@gmail.com

No comments: