Saturday, September 26, 2009

அம்மாவின் கனவு சுதர்சனா !


அம்மாவின் கனவு
தம்பிகளின் தங்கையின் நம்பிக்கை
சுதர்சனா !
நீயெப்படி ?
நெருப்பில் எரிந்து கரித்துண்டமானாய்….?

எப்போதோ செய்தியாய் சந்தேகமாய்
கேள்விப்பட்டது….
அது மறந்து போன ஒருநாளில்
தோழனொருவன் ஊடாய்
தொடர்பில் வந்த உன் அம்மாவின் கண்ணீர்
இன்னும் நனைத்தபடியிருக்கிறது நினைவுகளை….

அம்மாக்களுக்கு நிரந்தர துயராய்
பிள்ளைகளின் இழப்புகள் எங்களுக்கென்ன
எழுதப்படாத விதியா சுதர்சனா…?

உன் நினைவாய் நீ போன இடம் வரப்போவதாய்
புலம்புகிற அம்மாவின் கனவுகளில்
ஏன் தீமூட்டினாய்…..?

அக்காவின் ஞாபகங்களில்
தொலை தூரங்கள் வரையாகத் தங்கள்
கனவுகள எறிகிற உன் உடன்பிறந்தோரின்
உள்ளெரியும் தீயில் அவர்கள்
உயிர்வாழ்வையே வெறுப்பதை….!
எந்த வார்த்தை கொண்டும்
தேறுதல் கொடுக்க முடியாத
எங்கள் ஆறுதல் வார்த்தைகளால்
ஒற்றியெடுக்க முடியாத உனதும்
உன்னுடன் வாழ்ந்ததுமான அவர்களது நாட்களை
எப்படித் தேற்ற…?

*அம்மா நீ என் கடவுள்*
என்ரை தெய்வத்தை எந்தவிதி கொன்றதென
உன் அம்மா எத்தனையோ கதைகள்
உன்னைப் பற்றியே தினமும்….
நீயிருந்திருந்தால் நீயிருந்திருந்தால் என
அவள் நிம்மதியின் காலமெங்கும்
நீயே வெற்றிடமாய் போய்விட்டாய்…..

அம்மாக்களின் விதியை ஏனிந்த உலகு
அழுகையாய் நிரப்பி வைத்திருக்கிறது…?
உன்னுலகில் ஏதேனும் தீர்விருப்பின்
சொல்லியனுப்பு சுதர்சனா….!
26.09.09

2009 March தன்னைத் தீமூட்டி மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி சுதர்சனா இறந்து போனார். அவரது நினைவாய் இப்பதிவு)

Thursday, September 24, 2009

இந்தப்பிள்ளைகளுக்கு யாராவது உதவுவீங்களா...?

யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ?
ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது.

குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ அவர்கள் உண்மையில் வசதியில்லாத மாணவர்களா என்ற ஆராட்சியில் இறங்கி நிற்கிறார்கள். கிட்டத்தட்ட 3மாதங்கள் இத்தகையோரின் சொல்லை நம்பி ஏமாந்தாயிற்று. ஒரு பிள்ளைக்கான உதவியை மனவுவந்து யேர்மனியில் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்கும் மாணவி பொறுப்பெடுத்துள்ளாள்.

ஏனைய இருவரில் ஒருவருக்கு இன்னும் 8மாதங்களில் படிப்பு முடியவுள்ளது. யாராவது உதவுவீர்களானால் அவர்களுடனான தொடர்பினை ஏற்படுத்தித் தரலாம். உதவ முடியுமா ? என்பதை தனிமடல் அல்லது எனது மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துங்கள். மாதாந்தம் ஒரு பிள்ளைக்கு இலங்கை ரூபா ஐந்தாயிரம் (5000) உதவி தேவைப்படுகிறது. நீங்கள் ஒருவரால் முடியாது எனில் இருவர் அல்லது மூவர் சேர்ந்தும் செய்யலாம்.

நல்மனம் படைத்தோர் யாராவது உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் இங்கே எழுதுகிறேன்.

எனது மின்னஞ்சல் - rameshsanthi@gmail.com

Monday, September 21, 2009

பத்துலட்சம் வேணுமென் தோழி தடையிருளிலிருந்து தப்பிக்க

(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)

கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள்
மெல்லக் காய்ந்து போகிறது.
காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த
இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது.

எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.
புதைகுழிகளுக்கான அகழிகள்
புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது.
அற்புதங்கள் அநாமதேயமாய்
வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து
விடுபடுகிறார்கள்….

நாங்கள் போனதும்
உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?
*‘போராடுங்கள்
சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா*
சொன்னவர்களல்லவா நீங்கள்….
இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள்
சமராடிய கைகள் ஓய்ந்து
சத்தமிட்ட குரல்கள் ஒடிந்து
இரவுகளில் ஈனக்குரல்கள் அவர்களின்
போதை மயக்கத்தில் புணரப்படுகிறோம்…*
காப்பாற்றும் கைகளைச்
சேர்த்துவிட்டுக் கதையடி என்றவளே….!

ஒற்றையாய் நின்றுன் குரலை
ஓவென்றுழுது கேட்கத்தான் முடிகிறது…..
கற்றையாய் சேர்த்து அனுப்ப யாருமிங்கு
காசுடன் இல்லையடி…..

19வருடத்தை இந்த இனத்துக்காய்
ஏனிழந்தேனென அழுதவளே….!
பத்துச்சதம் உய்வதற்கே
பலகேள்வி கேட்போரிடம் போய்
பத்துலட்சம் வேணுமென் தோழி
தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்
எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….
முயற்சி திருவினையாகுமோ….?
முடிந்தால் மறுமுறை அழை சொல்கிறேன்.

Thursday, September 17, 2009

ஓர் போராளிக் கலைஞன் 2003இல் பாடிய பாடலொன்று...அவன் குரல் மட்டும்...


கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….

அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது....

பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள்.


பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.


Monday, September 14, 2009

அந்தா பிள்ளையள் அம்மா பிறந்த வீடு.

கால்களுக்கடியில்
மிதிபட்டுக் கொண்டிருந்த
சருகுகளை விலக்கிக் கொள்கிறேன்.

பதின்னான்காண்டுத் தவம் கலைத்த
மிதப்பில் சருகுகளுக்கடியிலிருந்து
என் சிறுவயது ஞாபகங்கள்
மெல்ல மெல்லப் பொலிவு பெறுகிறது.

'
சடான்ரை மோளெல்ல'
பழுத்துக் கிழப்பவருவத்தையண்டிய
நாகேசு ஆச்சியின் கேள்வியில்
இன்னும் ஞாபகம் மறவாது
நினைவுகளில் நினைபடும்
ஒருத்தியென்பதில்
உள்ளுக்குள் புழுகம்
சொல்லுக்குள் அடங்காச் செருக்கு.

மழையரித்த செம்பாட்டுப்
புழுதிக்குள்ளிருந்து
பெயராத மண்வாசமாய்
என் சின்னக் கிராமத்துச் சீரெல்லாம்
எழுந்துவர
ஆமியும் அவர்களின் வாகனங்களும்
எவரங்கே ?
கேள்விக்குப் பதிலிறுக்க முடியாப் பாவிகளாய்
வரிசைகட்டிப் பின் நின்ற
பெற்றவரும் மற்றவரும்
'
போவோம் வா பிள்ளை' நச்சரிக்க....

'
அந்தா அதுதான் பிள்ளையள்
அம்மா பிறந்த வீடு'
அடையாளம் சொல்லி என்
அழகிய கிராமத்தின்
அழிவுகள் நடுவே நிற்கிறேன்.

கைகளிலிருந்த ஒளிப்படக் கருவிக்குள்
ஒற்றைச் சுவர் மட்டுமே மிஞ்சிய - என்
பிறந்த வீட்டையும் நடுவீட்டுக்குள்ளால்
நாப்பதடி உயர வளர்ந்த பதின்னான்காண்டுப்
பாரமேறிய மரங்களையும்
பதிவாக்குகிறான் என் பிள்ளை.

எட்டடி தூரத்தில்
எட்டாதளவு உயரத்தில் எழுப்பப்பட்ட
தகர வேலிகளும்
காணியெங்கும் வேர்பரப்பி
ஆழுயர்ந்த கடுநாவற்பற்றைகளும்
கால் அசைந்தால் வெடிக்கக்
காத்திருக்கும் கண்ணிகள் நடுவே
நெஞ்சுக்குள் துயர் முட்டிக் கனக்கிறது.

யூலை 2004
(
நான் பிறந்த ஊருக்குப் போனபோது எழுதிய பதிவு)

Thursday, September 10, 2009

இந்திய மனைவி திவ்யமதி.


ஞாபகமிருக்கா என்னை... ? கேள்வியாலேயே என் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். என் ஞாபகக்கிடக்கையில் எங்கும் அவளை அறிந்தததற்கான தடயங்கள் எதுவுமில்லை. பிள்ளைகள் எப்பிடியிருக்கினம் ? உன்னுடைய கணவர் இப்பவும் ஒரே வேலைதானோ ? இப்ப உனக்கு 34வயதெல்லோ உன்ரை பிறந்தநாள் யூன் பதினாறெல்லோ ? என்னை அறிந்து பலநாள் பழகியவள் போல தொடர்ந்தாள் அவள். அருகிலிருந்த எல்லோரும் என்னைத்தான் ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

நான் திவ்யமதி. 5வருசத்துக்கு முதல் உந்த நடைபாதையில சந்திச்சனான். அவள்தான் தன்னை அடையாளம் சொல்லி எனது பழைய பறணிலிருந்து புறப்பட்டாள். 'இப்போது நினைவில் அவள்....

எண்ணை வழியும் தலையும் ஒரு நூல்கிளம்பிய பஞ்சாபியோடும் ஒற்றைத் தோற்பையோடும் 'எனக்கு இங்கை ஒருதருமில்லையென அழுதபடி என்னைச் சந்தித்த அவளா இவள் ? ஆச்சரியத்தால் அசந்து போனேன்.

5வருடம் முதல் அதுவொரு கோடைகாலம். நெரிசல் நிறைந்த கடைகளும் மனிதர்களும் நிறைந்த நடைபாதையின் ஒரு தொடக்கத்திலிருந்து அடுத்த முடிவுவரை கிட்டத்தட்ட 2மணித்தியாலங்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாள் ஒருத்தி. ஏதோ தனக்குள் முணுமுணுத்தபடி அங்குமிங்கும் திரிந்தாள். பார்க்கும் கண்களில் தலைபிழைச்ச ஆளோ என எண்ணும்படிதான் அவளது நடையும் முணுமுணுப்பும் இருந்தது. நகர் மத்தியில் புடவைக்கடையொன்றின் வாசலில் கட்டப்பட்டிருந்த குழந்தைகள் காசுபோட்டு ஏறும் குதிரையில் பிள்ளைகளை ஏற்றியிறக்கிக் கொண்டிருக்க....திடீரென நீ இந்தியாவா ? என்ற அந்தக் குரலுக்குரியவளை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் இந்தியா இல்லை இலங்கை ? அப்ப நான் தனியத்தான் எனக்கொருதருமில்லை. என்று சொல்லியபடி போனவள் திரும்பி வந்து 'எனக்கு உதவி செய்வியா ? என்றதும் பயத்தோடுதான் அவளைப் பார்த்தேன். இந்த நகரின் மூலையெங்கும் திரியும் விஸ்கிக் கிழவன் மாதிரி இவளுக்கும் விசரோ ? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அந்தக் கடையொன்றின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த வட்டவடிவான இருக்கையில் போயிருந்து அழுதாள். அந்த வழியால் போய் வந்த யேர்மனியர்கள் ஒருவரும் அவளைப் பார்க்கமாலே போனார்கள். அவளது நிலை சிலவேளை வீதிகளில் கோப்பிக்கப்களோடு பிச்சை கேட்கும் பிச்சைக்காரியென நினைத்தார்களோ என்னவோ. அவளுக்குச் சற்றுத் தள்ளியிருந்துவிட்டு எழுந்து போன வயோதிபச்சோடிகள் அவளுக்கு முன்னால் 2யூரோவை வைத்துவிட்டுப் போனார்கள்.

குதிரை ஓடி முடிந்து பிள்ளைகள் அந்தக் கதிரைகளைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்க அவளுக்குச் சற்றுத் தள்ளி நானும் போயிருக்கிறேன். நீ கிந்தி கதைப்பியா ? தானே மீண்டும் வந்து கேட்டாள். இல்லை நான் இலங்கைத்தமிழ் என்றேன். எனக்கு உதவி செய். எனக்கிப்ப என்ரை அம்மா அக்காவோடை கதைக்க வேணும் என கண்களைத் துடைத்துக் கொண்டு அருகில் வந்திருந்தாள். அவளுக்கு விசரில்லையென்பதை அவளே தனது கதையால் மெய்ப்பித்தாள்.

வீட்டுக்குள் வந்ததும் முதலில் தொலைபேசியைத்தான் கேட்டாள். கையில் வைத்திருந்த 2காட்டையும் சுரண்டி ஏதோ காச்சு மூச்சென அழுதழுது கதைத்தாள். திடீரென தொலைபேசியைத் துண்டித்துவிட்டு நான் போட்டுக்கொடுத்த தேனீரையும் குடித்து வாய்ப்பனையும் சாப்பிட்டாள். உறைப்புக் கறியுடன் சோறுசாப்பிட ஆசையென்று ஒருகதையையும் போட்டு வைத்துவிட்டு மீண்டும் தொலைபேசியில் அழத்தொடங்கியவள் என்னிடம் தொலைபேசியைத் தந்தாள். மறுக்க மனமின்றி தொலைபேசியை வாங்கி காதில் வைத்தேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.பாதித்தமிழ் பாதி ஆங்கிலம் கலந்து என்னோடு கதைத்தாள் அந்தப்பெண். 13வருடங்கள் தமிழ்நாட்டில் வேலைபார்ப்பதாகவும் அங்கிருந்தே தமிழை ஓரளவு பேசக்கற்றுக் கொண்டதாகவும் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்தினாள் அவள்.

திவ்யமதி அவளது சகோதரி என்பதும் இந்தியாவிலிருந்து ஒரு யேர்மனியன் இவளைத் திருமணம் செய்து வந்ததும் அவனது தொல்லைகள் தாங்காமல் இவள் தனித்து பெண்கள் விடுதியில் இருப்பதும் தெரியவந்தது.

அரசியல் கட்சியொன்றில் பணியாளனாக இருந்த அவளது கணவன் காரணம் தெரியாமல் கொலைசெய்யப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தியபடி கட்சித் தொண்டர்கள் கொண்டு வந்து மாலைபோட்டு மரணவீடு கொண்டாடி அவளிடமிருந்து ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்ட பொட்டு , பூ , புடவையெல்லாம் பறிபோய் கணவனின் தம்பி வாழ்வு தருகிறேன் என்றதை உதறிவிட்டு கன்னடத்திற்கு போயிருந்தாள் திவ்யமதி.

இறந்து போன கணவனின் பழைய படங்களைப் பார்ப்பதும் அழுவதுமாக 4வருடத்தை ஏனோ தானோவெனக் கரைத்தவள் 8வயதான தனது ஒரு மகளுக்காகவே இனி வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கன்னடத்திற்குப் போனாளாம். தோழியொருத்தி மூலம் விடுதியொன்றில் பணிப்பெண்ணாக வேலையும் கிடைத்தது.

வெளிநாட்டவர்கள் வந்துபோகும் அந்த இடத்திற்கு 55வயதான இவளது இன்றைய யேர்மன் கணவனும் கோடைகால விடுமுறையொன்றுக்குப் போயிருந்த போது அங்கு பணிபுரிந்த ஒருவனால் இவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டான் அவனது வெள்ளைக்கணவன். யேர்மன் மொழியில் ஒரு சொல்லும் தெரியாதவள் திவ்யமதி. ஆங்கிலத்தில் ஓம் இல்லை என்பதற்கும் அதைவிட்டால் ஓரிரண்டு ஆங்கிலச் சொற்களையே தெரிந்தவன் அவன். இடையில் மொழித்தரகனாக நின்றவன் சொல்லிச்சொல்லி அவளை யேர்மனியனைத் திருமணம் முடிக்கச் சம்மதம் பெற்றுக் கொடுத்தான். இடையில் தடையாய் நின்ற மொழியையும் யேர்மனி போனால் படித்துவிடலாம் என அவன் சொன்ன தைரியத்தை நம்பி உறவுகளுக்கும் சொல்லாமல் அவனோடு திருமண எழுத்தை முடித்து 5மாதத்தில் யேர்மனி வந்து சேர்ந்தாள்.

தனது மகளின் எதிர்காலம் வண்ண வண்ண மலர்களால் சூழப்பட்டு அவள் ஒரு இராஜகுமாரியாக வலம்வருவாள் என்ற கனவில் தனது கற்பனையில் வந்து சேர்ந்தாள். நிலமையோ தலைகீழ் அல்ல அதனினும் மேலாய் உலகவரைபடத்தில் அவள் பார்த்த நிலமெல்லாம் உருண்டு திரண்டு வந்து தன்னை அழுத்துவது போல நம்பிக்கைகள் சிதைந்து உடைந்து போனாள்.

அவனது தேவைகளுக்காக மட்டும் அவள். மற்றும்படி அவன் டிஸ்கோ போய்வரும்வரை காத்திருந்து , அவனுக்கு வைன் குடிக்கவோ சிகரெட் பிடிக்கவோ விரும்பும் தருணங்களில் அதையெல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொள்வதையே அவளது கடமையெனக் கருதினான் அவன்.

அவளது ஒரே மகளுக்கு செஞ்சிலுவைச்சங்கத்தில் போய் பழைய உடுப்புக்கள் எடுத்து வந்து கொடுத்தான். அவளுக்கும் தான். நான் குடுத்து வைச்சவன். ஒரு இந்திய மனைவி கிடைச்சதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என போதையில் உளறுவான். பெண் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று தான் விரும்புவதாய்ச் சொன்னவன் ஒரு உணவகத்தில் துப்பரவுப் பணியாளாக்கினான். சம்பளத்தை மட்டும் தனது வங்கிக்கணக்கில் விட்டு அதிலும் ஒரு சதமும் அவளுக்கோ அவளது மகளுக்கோ சிந்தாமல் பார்த்துக் கொண்டான்.

உன்னையும் உன்ரை மகளையும் கூப்பிட்டதுக்காக நானெடுத்த கடன் இன்னும் முடியேல்ல....எனச் சொல்லிக் கொள்வான். அவள் நினைத்தது ஏதோ நடந்தது ஏதோவாக....அவளால் இயலாத மாதவிடாய் நேரங்களில் கூட அவனுடன் படுத்துச்சாக வேண்டிய தொல்லைக்குள் அவள். சாகும் தருணம் வரும்வரை அவள் ரணமாகிக்கிடந்தாள். அடிக்கடி மருத்துவமனையும் அவளது நாட்களுமாக சில வருடங்கள் போயொதுங்கியது.

சின்னவளாய் அவளோடு ஒட்டித்திரிந்த மகள் பூப்படைந்துவிட்டாள். தனித்து அவன் நிற்கும் நேரங்களில் அவள் அம்மா இல்லாமல் நிற்க அச்சப்பட்டாள். அம்மா வா நாங்க இந்தியாவுக்கே போவோம் என்று அழுவாள். தனது நண்பிகளுடன் சினிமாவுக்குப் போவதாக நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வதாக சொல்லிப் பலநாள் வீட்டுக்கே வராமிலிருந்திருக்கிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல பாடசாலையிலிருந்து அழைப்புக்கள் வந்தது. அவளது ஒற்றைச் செல்ல மகள் பாடசாலைக்குப் போவதில்லை போதைமருந்து டிஸ்கோவென அலைவதாக. ஒருநாள் இரவு 7மணிபோல் வீட்டுக் கதவை காவல்துறை தட்டும் வரையும் தனது மகள் பற்றி எதையுமே அவள் அறியாமல்தானிருந்தாள். போதைவஸ்து விற்றதில் பிடித்ததாக ஒருநாள் காவல்துறை அவளைக்கைது செய்து கொண்டு போனதோடு இவளது உலகம் தலைகீழாகியது. அவளது அழகான பூங்காக்கள் நிறைந்த மாளிகையின் இராஜகுமாரியின் வில்லுவண்டில் உடைந்து நொருங்க அவளது மகளை அவள் இழந்து போனாள்.

துக்கம் மகளைப் பிரிந்த இயலாமையென தன்மீது கோபம் வரும் போதெல்லாம் யேர்மனியக் கணவனுடன் வாய்த்தர்க்கத்தில் மல்லுக்கு நிற்பாள். இந்திய மனைவி கிடைத்ததற்காக பெருமைப்படுவதாகச் சொன்னவன் சிகரெட்டால் சுடுவது கையில் கிடைப்பதால் அவளைக்காயப்படுத்துவது என ஆசியக்கணவனின் ஆயுதத்தைக் கையிலெடுத்தான்.

எல்லாம் தன் கைகளை விட்டுப்போய்விட்டதான ஏக்கம். மனசெல்லாம் சல்லடையாய் போயிருக்க அவன் விரும்பும் தருணங்களில் அவனுடன் ஒன்றாயிருக்க வேண்டிய நரகம் அவளுக்கு. குருதிப்போக்கு அதிகரித்து தொடர்ந்து இயங்க முடியாத நிலையிலும் அவனோடு உடன்பட்டு ஆகவேண்டிய தொல்லை. பொழுது இருள் போர்த்தினால் இவளுக்கு பேய்களும் பிசாசுகளும் சுற்றுவது போல.

இறுதியில் ஒருநாள் அவன் இல்லாத நேரமாகப் பார்த்து அயல் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்தாள். அவர்கள் சேர்த்து விட்டதே பெண்கள் விடுதி நிலையம். மகளுமில்லை மனதில் நிம்மதியுமில்லாமல் தனித்துப் போனாள் திவ்யமதி.

அன்றைய சந்திப்பின் பின் அடிக்கடி வீட்டுக்கு வருவாள். பிள்ளைகளுடன் விளையாடுவாள். என்னவனுடன் கதைப்பாள். நீ என்ரை தம்பியைப்போல என்பாள். நீ எனக்குக் கடவுள் என கண்கள் பனிக்க என்னைக் கட்டியழுவாள். ஒருநாள் தொலைபேசியெடுத்துச் சொன்னாள் மருத்துவமனையில் இருப்பதாக நானும் என்னவனும் போய்ப்பார்த்தோம். தனது அக்காவின் தொலைபேசியிலக்கத்தைத் தந்து தகவல் சொல்லச் சொன்னாள். தலைக்குள் ஏதோ செய்வதாகவும் தற்கொலை பண்ண வேண்டும் போலிருப்பதாகவும் சொல்லியழுதாள். அவளை ஆற்றவோ தேற்றவோ வார்த்தைகளற்று நாங்கள் இருவரும்.....


2நாள் கழித்து மீளவும் மருத்துவமனை போனோம். திவ்யமதி அங்கில்லை. அவளை அவளது கணவன் கூட்டிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள். தொடர்புக்கு இலக்கம் எதுவும் கொடுக்காமல் போய்விட்டாள்.

பின்னர் ஒருதரம் தொடர்பு கொண்டு சொன்னாள். தனது கணவன் ஒற்றுமையாக வந்து கேட்டதில் தானும் சம்மதித்துப் போனதாக. இப்ப பிரச்சனையில்லையென்றாள். ஒருமாதம் கடந்த நிலையில் யூன்பதினாறு ஒரு பாசல் வந்தது. அதில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்தும் பிள்ளைகளுக்கு இரண்டு ரீசேட்டும் என்னவனுக்கு ஒரு ரீசேட்டும். அது திவ்யமதியிடமிருந்து வந்திருந்தது. அவள் தந்த தொலைபேசியிலக்கத்தை அழுத்தினேன் நன்றி சொல்ல. அவளது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

எப்போதாவது இவள் நினைவில் வருவாள் நானும் என்னவனும் அவளைப்பற்றிக் கதைப்போம். அவள் எங்காவது நலமோடு இருக்க வேண்டும் என்ற எனது பிரார்த்தனை இருக்கும். அதற்கும் அப்பால் வேறெதையும் செய்ய முடியாதிருந்தது. பெண்கள் விடுதியிலும் அவள் பற்றிய எந்தவித பதிவுகளும் இல்லாமல் போயிருந்தது.

இத்தனைக்குப் பின் இன்று என் முன் நின்று என் ஞாபகத்தை கிழறிவிட்டுள்ளாள் அன்றைப்போல்... மருத்துவமனையொன்றில் தாதியாக இருப்பதாகவும் யேர்மனியக் கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிவிட்டதாகவும் சொன்னாள். தனக்குத் தெரிந்த ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டும் என அந்தக்கூட்டத்தை விட்டு சற்றுத் தள்ளி அழைத்துப் போனாள்.

அந்த இலங்கைத் தமிழச்சிக்கும் அவளது கணவனுக்கும் நெடுகலும் பிரச்சனையாம். அவளை அவன் மிருகத்தனமாக அடிப்பானாம். அந்தப்பெண்ணின் மகளின் தோழியாயிருந்த 18வயது யேர்மனியப் பெண்ணோடு தொடர்பாம். இது பற்றி அவள் விசாரித்ததில் அவனுக்குக் கோபம் வந்து அந்தப்பெண்ணின் பெண்ணுறுப்பில் தும்புத்தடியால் குற்றி அடித்திருக்கிறான். இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்து வைத்திருக்கிறாள். முதல் நாள் கடைவீதியில் கண்டவள் திடீரென மருத்துவமனையில் என்றதைக் கேட்டு திவ்யமதி போயிருந்தாள் அவளைப் பார்க்க.அப்போதே இந்த அவலத்தை அந்தத் தமிழச்சி இவளுக்குச் சொல்லியழுதிருக்கிறாள்.

அவளின்ரை மகள் நல்லவடிவான பிள்ளை. என்ரை மகளைப் போலயிருக்கிறாள். அவள் பாவம். அவளுக்காகக் கட்டாயம் உதவ வேணும். பொலிஸ் இப்ப அந்தப்பிள்ளையை அவேடை வீட்டிலை விடாமல் இளையோர் பராமரிப்பிடத்திற்கு அனுப்பியிருக்கு. விசர் பிடிச்சாக்கள் மாதிரி தாயைப்பாக்க வருவாள். பிறகு அழுதபடி போயிடுவாள் என்றாள் திவ்யமதி.

கேட்கவே உயிர் வலித்தது. மனசெல்லாம் ரணமாகி அவளுக்காக அழுதது விழிகள். உன்ர மகள் எங்கே ? கேட்ட எனக்கு தனது மகளைப்பற்றி எதையும் சொல்லாமல் கண்ணீர் விட்டாள். அவளது இராஜகுமாரி பற்றிய அவளது கனவுகள் பொடியாகி....கண்ணீர் மட்டும் மீதமாக....திவ்யமதி.

வீடு வந்து நெடு நேரமாகியும் திவ்யமதி சொன்ன தமிழச்சியின் நினைவாகவே இருந்தது.

09.07.2008

Saturday, August 22, 2009

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….


அம்மா….அம்மாஅம்மா….எனக்குஅம்மாட்:டைப் போகவேணும்….. அவள்கதறக்கதற கொடிய கரங்கள் அவளைஇழுத்துக் கொண்டு போகின்றன……என்ரபிள்ளை….என்ரை பிள்ளையைவிடுங்கோ……என்ற அவளதுகதறலையும் கேட்காமல் கார்த்தினிஇழுபட்டுக் கொண்டு போனாள்….அவள்நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும்உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிறஅவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்துநொருங்குகிறது.

கமலினிகமலினி….என்ன….பக்கத்தில் படுத்திருந்த கணவனின் குரல் அவளைமீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவானஅணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை…..
என்ர பிள்ளையப்பா…..என்ரை பிள்ளையை யாரோ…..அதற்கப்பால் அவளால் எந்தவார்த்தைகளையும் உச்சரிக்க முடியாமல் விம்மல் பெலத்து……என்ரபிள்ளை…..என்ர பிள்ளை…..எனப் பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என்னாலை தாங்கேலாதாமப்பா…..நான் செத்துப்போப்போறன்……என்ரைபிள்ளையெங்கை கஸ்ரப்படுறாளோ தெரியேல்ல…..என்ரை பிள்ளைபடிக்கவெண்டெல்லோ விட்டனான்…..என்ரை பிள்ளையைஎங்கையிருக்கிறாளோ……சேவை சேவையெண்டு ஊருக்கு எவ்வளவைச்செய்தன்…..எனக்கேனப்பா இப்பிடியொரு விதியைக் கடவுள் தந்தான்……?
நீ செய்த நன்மையள் எங்கடை பிள்ளையைக் காப்பாற்றும்…..நீயோசிக்காத…..அவள் எப்பிடியும் வருவாள்…..சிவன் கோவில் சாத்திரிசொன்னமாதிரி 6மாதத்தில திரும்பி வருவாள் பாரன்…..அவளை ஆறுதற்படுத்தத்தன்னால் இயன்ற எல்லாவற்றையும் சொன்னான். அவள் தானாக அழுகையைநிறுத்தும் வரை அவன் அமைதியாய் இருந்தான்.
அவள் சொல்வது போல செத்துப் போய்விடலாமா ? என்றுதானிருந்தது. அப்பாஅப்பா எனக் கார்த்தினி உலவிய வீடும் விறாந்தையும் வளவும் இன்று அவளின்றிஒரு சுடுகாட்டின் வாசனைகளைத் தன்னோடு சேமித்துக் கொண்டிருந்தது. அவள்இருப்பாள் என்ற நம்பிக்கையை அவன் தொலைத்துவிட்டான். கமலினிக்காகசாத்திரங்களையும் கோவில்களையும் சாட்டுக்கு வைத்திருப்பதைத் தவிரவேறெந்த நம்பிக்கையும் அவனுக்கில்லை.

கமலினியின் பெரியக்கா நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் முல்லைத்தீவுக்குகார்த்தினியையும் கூடவே அழைத்துப் போனபோது, தன்னுடன் அவளைவைத்துக் கொள்வதாக பெரியக்கா கேட்டதும் மறுவார்த்தையின்றிக் கார்த்தினிசொன்னாள். நான் பெரியம்மாவோடை நிக்கிறன் நீங்க வவுனியாவுக்குப்போங்கோ….என இவர்கள் வவுனியா திரும்ப அவள் அங்கேயே தங்கினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வர இவனுக்கு முடியாது என்பதை யாருக்கும்சொல்லவில்லை.

இடையிடை இவர்கள் போய்ப் பார்த்து வந்தார்கள். கமலினி பணியாற்றியதொண்டு நிறுவனத்தின் அலுவலாக அல்லது ஏதாவதொரு தேவைக்காகஇராணுவத் தடையரண்கள் தாண்டி முல்லைத்தீவு போய்வர ஏதாவது அலுவல்இருந்து கொண்டுதானிருந்தது. அக்காவுடன் அவள் நன்றாக இருப்பாள் என்றநம்பிக்கை மலையளவு அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைகளோடுஇருந்தவளுக்கு 9நெடுஞ்சாலை தொடர்புகளற்று முல்லைத்தீவுடனானஅவளது தொடர்புகளும் அற்றுப்போய்…..போர் உக்கிரமாகியது. எப்போதாவதுபெரியக்கா வந்து அவள்பற்றி சொல்லும் தகவல்களுடன் மாதங்கள் விரைந்ததை மாதத்தில் ஒரு நாள்…..
பெரியக்கா அவளது வேலையிடத்துக்கு அவசரமாக அழைத்தாள். ஐயோ பிள்ளைஎன்னைக்குறை சொல்லாதை நானொண்டும் செய்யேலாமக்கிடக்கு….நான்தேடாத இடமில்லை…..இஞ்சை கனபிள்ளையள்இப்பிடித்தான்……வீட்டுக்கொருத்தர் என்ற கதைமாறி இளவயதினர் எல்லாரையும்கட்டாயமாச் சேர்க்கினம்….என்ரை மூத்தவனையும் ரண்டாவதையும் கொண்டுபோட்டினம்….அதுதான் சரி என்ரை பிள்ளையள்….நீ என்னை நம்பிவிட்டிட்டுப்போன உன்ர பிள்ளையையும் குடுத்திட்டனே….என்ரை குஞ்சு இரவுநித்திரையாக் கிடந்தவளணை வந்து கூப்பிட பிள்ளை மாட்டனெண்டு அழுதுகுழற அதையும் கேக்காமல் கொண்டு போட்டினம்……பெரியக்கா சொல்லிமுடித்தாள்.

கனவுபோலவும் அது பெரியக்கா இல்லை வேறையாரோ போலவும் நினைக்கவேமுடியவில்லை. பிள்ளையில்லையென்றதை ஒருநாளும் அவள்நினைத்திருக்கவேயில்லை. தன் ஆயுசு முழுமையும் தனது மகள் கூடவேஇருப்பாளென்ற கனவுகளும் , இவள்போல அவளும் பெண்கள் சமூகத்தின்முன்னேற்றத்துக்காக உழைப்பாள் என்றெல்லாம் எண்ணியிருந்த நினைப்புகள்மீதெல்லாம் சுனாமிப்பேரலை அடித்துச் சென்ற ஆயிரமாயிரம் பேரின்கனவுகளின் சிதைவு போல அவள் உடைந்து சிதிலமாகினாள். 15வயதே நிரம்பியதனது ஆசைமகளின் ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னும் அவள் மகிழ்ந்ததருணங்களெல்லாம் தவிடுபொடியாகி……

தினம்வரும் சாவுச்செய்திகளுக்குள் தனது ஒற்றைமகளின் செய்தி வரக்கூடாதுஎன தினமும் கடவுளை வேண்டிய பின்னர் தான் செய்தி படிப்பாள். வேலையிடத்திலும் தினமும் அழுகையும் துயருமாய் அவளதுபொழுதுகள்…..அன்றொருநாள் அவளது நிறுவனத்தின் இயக்குனர் வந்துசொன்னார். உங்கடை மகள் இறந்திட்டாவாம்…..பெரியக்கா சொன்னதாகசொன்னார். அந்த இடத்திலேயே அவள் ஐயோவென்று அலறியழுதாள். தொழில்சார் நண்பர்கள் முதல் அயல் அக்கம்பக்கம் உறவுகள் என எல்லாரும்வீடுதேடி வந்து துக்கம் விசாரித்துச் சென்றபின்னும் தனது மகள் உயிருடன்இருக்கிறாள் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் சாத்திரம் கேட்டாள். சிவன்கோவில் சாத்திரியின் சாத்திரம் பொய்க்காதென்ற நம்பிக்கையே அவளைவாழவைத்துக் கொண்டிந்தது.

போர் உக்கிரமாய் நிகழ்ந்து கொண்டிருந்த பகுதிகளிலிருந்து மக்கள் தினம்காயங்களுடனும் சாவுகளுடனும் வவுனியா நகருக்குள் வந்துகொண்டிருந்தார்கள். உதவிக்கென அவளது நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டபணியாளர்களுடன் தானும் மருத்துவமனைகள் மற்றும் காடுகள் வெட்டப்பட்டுஅவசர அவசரமாய் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்குச் சென்று மக்களைச்சந்தித்து அவர்களுக்கான உதவிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

வேலை தவிர்ந்து கிடைக்கும் விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில்வைத்தியசாலைகளுக்குச் சென்று தனித்தனியே போரால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் உதவிகள் என தனதுஓய்வையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு சனிக்கிழமை வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்தவாரத்தில்சந்தித்த யாருமற்ற 4பேருக்கு உணவும் உடைகளும் கொண்டு போயிருந்தாள். வைத்தியசாலையின் வெளிவிறாந்தையில் பெரியத்தான் அடையாளங்கள்யாவும் மாறி சவரம் செய்யப்படாத நரைத்ததாடியும் ஒட்டியொடிந்த உடம்புமாகஇருந்ததைக் கண்டாள். ஓடிப்போய் பெரியத்தானைக் கூப்பிட்டாள். பெரியத்தான்அவளைத்தனக்கு அடையாளம் தெரியும் என்பதற்கான எந்தவிதமானஅசுமாத்தமும் இல்லாமல் வெறித்தபடியிருந்தார்.

பெரியத்தானின் மிடுக்கும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டியும் சேட்டும்புழுதியில் குளித்திருந்தன. போர் நிகழ்ந்த பகுதியொன்றின் பாடசாலை அதிபரானபெரியத்தானின் அத்தனை மிடுக்கும் ஒடுங்கி ஒரு பிணம்போல பெரியத்தான்இருந்தார். மருத்துவர் ஒருவர்தான் சங்கதி சொன்னார். பிள்ளைகளைப்பிள்ளைபிடியில் கொடுத்ததிலிருந்து இப்படித்தானாம்….அதேவைத்தியாசாலையில் பெரியக்கா இருகால்களையும் இழந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொன்னார்.

பெரியக்கா இருக்கும் பகுதிக்கு ஓடிப்போனாள். அந்தக்காலத்தில் பெரியக்காவைநடிகை சுஜாதா என்பார்கள் ஊரில். அத்தகைய ஒரு அழகு அவள். அந்துப்பெரியக்கா கன்னங்கரேலனெ்று கறுத்துக் காய்ந்து முடமாகிப்போன தனதுகால்களைத் தடவிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் போனதன் பின்னர்தான்தெரிந்தது. பெரியக்காவுக்கு அடிவயிற்றிலும் பலத்தகாயம் என்பது. பெரியக்காவும் அவளும் சிலநிமிடங்களுக்கு பேசவேயில்லை. அழுகைதான்இருவரையும் அள்ளித் தின்றது.

நாங்கள் உயிரோடை வருவமெண்டே நினைக்கேல்லப் பிள்ளை…..ஒவ்வொருஇடமா ஓடியோடி புதுமாத்தளனில ஆமீட்டை மாட்டீட்டம்…..ஐயோ கடவுளாரேநாங்கள் பட்ட துயரை என்னெண்டு சொல்றதெண்டு தெரியேல்ல….பெரியக்காவிசும்பியழுதாள்.

அக்கா…, என்ரை பிள்ளையெங்கையக்கா…., அவளின்ரை பிணத்தைத்தந்தவையோக்கா….., முதல் சொன்னவை பிள்ளை சண்டையிலசெத்துப்போச்செண்டு பிறகொருக்கால் புதுமாத்தளனுக்கு வரேக்க அவள்கையில துவக்கோடை நிண்டதைக் கண்டம். ஓடிவந்து கதைச்சது பிள்ளை. உன்னைத்தான் பாக்க வேணுமாப்போலையிருக்கெண்டு அழுதவள். கையிலகிடந்ததை அங்கினை எறிஞ்சிட்டு வாவெண்டு எங்களோடைவாவெண்டன்…..பிள்ளை பக்கத்தில நிண்டவையைப் பாத்திட்டு அழுதது. எங்களைப் பாத்துப்பாத்துப் பிள்ளை போனது…..இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குதுமோன….
கடைசிவரையும் நம்பினம்….ஒரு நல்ல முடிவு கிடைக்குமெண்டு…..ஆனாலட்சம் பேரையும் இப்பிடி நடுத்தெருவில விட்டிட்டு எங்கடை பிள்ளைளையும்காவு குடுத்திட்டு கடைசியில 13வயதுக்கு மேற்பட்டதுகள் எல்லாத்தையும்கொண்டு போய் இப்ப தமிழனெண்டா சிங்களவன் தலையிற மிதிக்கிறநிலமையில விட்டிட்டுப் போட்டினம்…..என்ரை மூத்தவன்காயப்பட்டவன்….தானே சயனைட்டைத் திண்டு செத்துப்போனான்….மற்றவன்எங்கையெண்டு தெரியாது….சின்னவள் உங்கை பம்பைமடுவிலஇருக்கிறாள்….உன்ரை பிள்ளையும் முள்ளிவாய்க்கால் முடிவோடை ஆமிகொண்டுவந்த பிள்ளையளோடை வந்திருக்கும்…….

அவளால் பெரியக்கா சொன்ன எதையும் ஜீரணிக்க முடியவில்லை…..நாடும்வேண்டாம்…..போரும் வெண்டாம்….ஒண்டும் வேண்டாம்…..எங்கடைபிள்ளையள் போதுமெனக் கத்திக்குழறினாள். தன்னை மறந்து தலையிலடித்துநெஞ்சிலடித்துக் கத்தினாள். அவளை ஆறுதற்படுத்தி அழுகையை நிறுத்த வைத்தபெண் மருத்துவர் சொன்னாள். உங்களைப்போலையான ஆயிரமாயிரம்அம்மாக்களின் கண்ணீர்தான் எங்கடை நாட்டை நனைச்சுக்கொண்டிருக்குது…..முகாம்களிலயும் ஆசுப்பத்திரியளிலயும் எல்லா இடமும்பிள்ளைகளைத் தேடுற அம்மாக்களும் உறவுகளும் தான் நிரம்பிவழியினம்….யோசிக்காதையுங்கோ உங்கடை பிள்ளை எங்கையெண்டாலும்உயிரோடை இருப்பா….என்ற அந்த வார்த்தைகள் சின்னதொரு தெம்பைக்கொடுத்தது.

தமிழருக்கான தேசம் வேண்டும் அங்கேதான் தமிழினம் நிம்மதியுடன்வாழமுடியும் என்ற அசையாத நம்பிக்கையோடிருந்த பலலட்சம் தமிழர்கள்போல அவளும் தமிழீழவிடுதலையை தலைமையை நம்பியிருந்தாள். அந்தநம்பிக்கையின் சிகரத்தையே கொன்றுவிட்டதாய் ஒளிக்காட்சிகள் படக்காட்சிகள்காண்பித்தபோது எதையும் நம்ப முடியாதிருந்தது.

சிறுகச்சிறுகச் சேர்த்த பலமும் படையணிகளும் சிதைந்து பத்தாயிரத்தைத்தாண்டிய போராளிகள் சரணடைவு என்ற தகவல்களும் உலக வல்லரசுகளின்கால்களில் மிதிபட்டு எல்லாம் போய்விட்டது. இனிச்சில நூற்றாண்டுகளுக்குத்தமிழினம் எழுந்து நிமிர முடியாமல் அனைத்தும் அனைவரும் எல்லாளனின்வீழ்ச்சியுடன் மாண்டுபோய்விட்டது.

பிள்ளைபிடியில் பறிபோன தனது ஒற்றைப்பெண் கார்த்தினியைத் தேடிமனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச்சங்கம் வரை மகளின் படமும்விபரங்களும் எழுதியெழுதிக் கொடுத்தே கைகள் ஓய்ந்துவிட்டன…..எங்கோஇருக்கிறாள் எனது மகள்….என்ற நம்பிக்கையை சிவன் கோவில் சாத்திரியிடம்சென்று வாரம் ஒருதரம் கேட்டு வருவாள். சிவன்கோவில் சாத்திரியின்வாக்குப்போல தென்பகுதியில் மகள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையைகடந்தவாரசண்டேலீடர்பத்திரிகையில் வந்த கட்டுரை மெய்ப்பித்ததுபோலிருந்தது.

அம்பேபுஸ்ஸ நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருக்கும் சிறுமிகள்எனப்போடப்பட்டிருந்த படத்தில் கன்னப்பாட்டுக்குப் பார்த்தபடியிருந்த மஞ்சள்சட்டையணிந்திருந்த பிள்ளை இவளது கார்த்தினி போலிருந்தாள்.

அம்பேபுஸ்ஸவிலிருந்த சிறுமிகளின் கதைகளில் ஒரு சிறுமி சொன்னாள்….,

இந்தக் காம்பை விட்டு வெளியே சென்ற பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று மீண்டும் கேட்ட போதுநான் என் அம்மாவிடம் போக வேண்டும். எனக்குஎன் அம்மா வேண்டும்என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை. அம்மாஎன்ற அந்த ஒரு சொல்லைத்தான் அங்கிருக்கும் சிறுமிகள் அனைவருமேதிரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.

அந்தச் சிறுமி தனது மகள்தான் என எல்லாருக்கும் சொன்னாள். அயல்முன்வீடென எல்லாருக்கும் அந்தச் செய்தியில் வந்த வரிகளை வாசித்துக்காட்டினாள். தன் மகள் கிடைத்துவிட்டாளென்று உள்ளுக்குள் பேருவகையில்மிதந்தாள்.

இரவு வேலையால் திரும்பிய கணவனை வாசலில் போய் வழிமறித்துச் செய்திசொன்னாள். ஒற்றைப்பிள்ளை போதுமென்று அடுத்த குழந்தையை விரும்பாதஅவர்களது கனவுகளின் ராசகுமாரியாகச் சுற்றிச்சுற்றித் திரிந்த பிள்ளையைமீளவும் காணலாம் என்ற நம்பிக்கையோடு செய்தியையும் படத்தையும்பார்த்தான். அந்த மஞ்சள் சட்டையணிந்தவள் அவர்களது கார்த்தினியில்லை அதுவேறுயாரோ போலிருந்தது. அதைச் சொல்லி அவளைக் கலங்க வைக்காமல்……. நான் சொன்னனெல்லோ நீ செய்த பணியள் எங்கடை பிள்ளையைக்காப்பாற்றுமெண்டு…. பாத்தியோ…. கடவுள் இன்னும் இருக்கிறார்…..எங்கடைபிள்ளை கிடைப்பாள்…..

படுக்கைக்குப் போனவள் நெடுநாளின் பின் அன்று அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள். அவனுக்கு நித்திரை வரவில்லை. தலையணைகை்குப்பக்கத்தில் அவள் வைத்திருந்த ‚‘சண்டேலீடர்பத்திரிகை எடுத்து விறாந்தைக்குள்கொண்டுபோய்ப் பார்த்தான். அவள் தனது மகள் என அடையாளம் சொல்லியபிள்ளை அவர்களது கார்த்தினியில்லையென்பது புரிந்தது. இதை அவளுக்குச்சொல்லி அவள் குழம்பி அழுகையும் துயருமாய் அவளிருக்கும்துயரக்கோலத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. அவளது நம்பிக்கைகள்அவளுக்குரியதாகட்டும்……கனவு கண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள்மீளவும் உறங்கிப்போனாள்…..

கூரையைப் பிய்த்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துவிடுமாப்போலிருந்தது மழை. இடியும் மின்னலும் மாறிமாறி யன்னலை உதைக்கும் காற்றோடு உள் நுளைந்தகுளிரின் இனிமையை இதயம் நுகர விரும்பினும் எதனுடனும் ஒட்டவோஉறவாடவோ மனசில் இடமில்லை. அர்த்த இராத்திரிகளில் வந்து தொலையும்பேய்களும் பிசாசுகளுமாக கனவில் திளைக்கும் தருணங்களையெல்லாம்தகர்க்கிறது கனவு.

கார்த்தினியின் நினைவுகளைத் துரத்த முடியாமல் அவளது படங்களும் அவளதுபுத்தகங்களும் அவள் ஞாபகங்களையே நிறைந்த விறாந்தையின் ஒருபக்கயன்னலைத் திறந்துவிட்டு மழையின் இரைச்சலையும் மின்னலின்ஒளிக்கீற்றையும் இடியின் ஓசையையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தலைவெடித்துவிடும் போல மழை மின்னல் இடி எல்லாவற்றையும் தாண்டிக்கார்த்தினி எல்லாவற்றிலும் நிறைந்திருந்தாள். அவளில்லா நாட்களை அவள்இல்லையென்ற உண்மையை யார் வந்து சொன்னாலும் கமலினி நம்பமாட்டாள்ஏன் இவனாலும் தான் இயலாது……ஏன் தமிழருக்கு இந்த விதி…? என்ன பாவங்கள்எங்களை வதைக்கிறது….? கேள்வி மேல் கேள்விகள்…..எதற்கும் அவனிடம்விடையில்லை…..

பின் வளவிலிருந்து மாமரக்கிழைகள் முறிந்து விழுந்துகொண்டிருந்தன…..மரங்களில் இருந்த கோழிகளும் அடித்துவிழுந்துதாழ்வாரத்தில் ஒதுங்கின…..முற்றத்தில் கிடந்த முயற்கூட்டின் தாழ்வாரத்தில்கிடந்த நாய் ஊழையிட்டுக் கொண்டு போட்டிக்கோவில் வந்துபடுத்தது……படுத்திருந்த நாய் வாசலை நோக்கிக் குரைத்துக் கொண்டுஓடியது…..சண்டை முடிந்ததென்று சொல்லப்படுகின்ற இந்த நாட்களில் வாசலைநோக்கி நாய் குரைத்துக் கொண்டு ஓடியது அச்சமாயிருந்தது. யாராவது இயமதூதர்கள் வந்தாலும் என்ற பயத்தையும் மறந்து அவன் கார்த்தினியின்நினைவுகளோடு கரைந்திருந்தான்……

வாசலுக்கு ஓடிய நாய் ஓடிவந்து இவனைப்பார்த்துக் குரைத்தது…..யாரோவாசலடியில் நின்று அழுவது போலிருந்தது……யாரது…..எனக் குரல்கொடுத்தான்……அது நான்தானப்பா…..கமலினி குரல்கொடுத்தாள்…..படுக்கையறையில் கிடந்தவள் எப்படி வாசலுக்குப் போனாள்….? வாசலுக்கு ஓடிப்போனான்….இரவு உடையுடன் படலையின் பூட்டை கமலினிதிறக்க முயன்று கொண்டிருந்தாள்…..கமலினி….என்ன ? எங்கை போப்போற இப்பநான் பிள்ளையைக் கூட்டிவர அம்பேபுஸ்ஸவுக்குப் போப்போறன்….உங்கடைசயிக்களை எடுங்கோ ரண்டுபேருமாப்போட்டு வருவம்…..
அவனுக்கு அழவா இல்லை அவளை ஆறுதற்படுத்தவா எதுவுமேபுரியவில்லை…..

அந்தப்பெரு மழைக்கால் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறாந்தைக்குள்நுளைந்தான்…..கமலினி பெரிய சத்தமாய் கத்தினாள்…..என்னைவிடுங்கோ….என்ரை பிள்ளை என்னை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறாள்…..நான்அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..அவனுக்கு என்ன செய்வதென்றேபுரியவில்லை….தன்னால் சொல்ல முடிந்த சமாதானத்தைச் சொல்லியும் அவள்கேட்காமல்…., நான் அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..என்றபடியிருந்தாள்…….
19.08.09