Saturday, August 22, 2009

என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….


அம்மா….அம்மாஅம்மா….எனக்குஅம்மாட்:டைப் போகவேணும்….. அவள்கதறக்கதற கொடிய கரங்கள் அவளைஇழுத்துக் கொண்டு போகின்றன……என்ரபிள்ளை….என்ரை பிள்ளையைவிடுங்கோ……என்ற அவளதுகதறலையும் கேட்காமல் கார்த்தினிஇழுபட்டுக் கொண்டு போனாள்….அவள்நாளுக்கு 3தரம் மாற்றிக்கொள்ளும்உடுப்பும் , பாதணிகளும் , அவள் பாவித்த பவுடர் பேணிகளும் இன்னும் பிறஅவளது பாவனையின் மீதங்களான எல்லாம் அந்தக்கால்களுக்கு அடியில் நசிந்துநொருங்குகிறது.

கமலினிகமலினி….என்ன….பக்கத்தில் படுத்திருந்த கணவனின் குரல் அவளைமீளவும் இழுத்து வருகிறது நிசத்துக்கு. என்னாச்சி….என்ன…..அவனது ஆதரவானஅணைப்பில் கரைந்து கண்ணீரால் நனைக்கிறாள் அவனை…..
என்ர பிள்ளையப்பா…..என்ரை பிள்ளையை யாரோ…..அதற்கப்பால் அவளால் எந்தவார்த்தைகளையும் உச்சரிக்க முடியாமல் விம்மல் பெலத்து……என்ரபிள்ளை…..என்ர பிள்ளை…..எனப் பெருங்குரலெடுத்து அழுகிறாள்.

என்னாலை தாங்கேலாதாமப்பா…..நான் செத்துப்போப்போறன்……என்ரைபிள்ளையெங்கை கஸ்ரப்படுறாளோ தெரியேல்ல…..என்ரை பிள்ளைபடிக்கவெண்டெல்லோ விட்டனான்…..என்ரை பிள்ளையைஎங்கையிருக்கிறாளோ……சேவை சேவையெண்டு ஊருக்கு எவ்வளவைச்செய்தன்…..எனக்கேனப்பா இப்பிடியொரு விதியைக் கடவுள் தந்தான்……?
நீ செய்த நன்மையள் எங்கடை பிள்ளையைக் காப்பாற்றும்…..நீயோசிக்காத…..அவள் எப்பிடியும் வருவாள்…..சிவன் கோவில் சாத்திரிசொன்னமாதிரி 6மாதத்தில திரும்பி வருவாள் பாரன்…..அவளை ஆறுதற்படுத்தத்தன்னால் இயன்ற எல்லாவற்றையும் சொன்னான். அவள் தானாக அழுகையைநிறுத்தும் வரை அவன் அமைதியாய் இருந்தான்.
அவள் சொல்வது போல செத்துப் போய்விடலாமா ? என்றுதானிருந்தது. அப்பாஅப்பா எனக் கார்த்தினி உலவிய வீடும் விறாந்தையும் வளவும் இன்று அவளின்றிஒரு சுடுகாட்டின் வாசனைகளைத் தன்னோடு சேமித்துக் கொண்டிருந்தது. அவள்இருப்பாள் என்ற நம்பிக்கையை அவன் தொலைத்துவிட்டான். கமலினிக்காகசாத்திரங்களையும் கோவில்களையும் சாட்டுக்கு வைத்திருப்பதைத் தவிரவேறெந்த நம்பிக்கையும் அவனுக்கில்லை.

கமலினியின் பெரியக்கா நோய்வாய்ப்பட்டிருந்த நேரம் முல்லைத்தீவுக்குகார்த்தினியையும் கூடவே அழைத்துப் போனபோது, தன்னுடன் அவளைவைத்துக் கொள்வதாக பெரியக்கா கேட்டதும் மறுவார்த்தையின்றிக் கார்த்தினிசொன்னாள். நான் பெரியம்மாவோடை நிக்கிறன் நீங்க வவுனியாவுக்குப்போங்கோ….என இவர்கள் வவுனியா திரும்ப அவள் அங்கேயே தங்கினாள். அவளை அங்கே விட்டுவிட்டு வர இவனுக்கு முடியாது என்பதை யாருக்கும்சொல்லவில்லை.

இடையிடை இவர்கள் போய்ப் பார்த்து வந்தார்கள். கமலினி பணியாற்றியதொண்டு நிறுவனத்தின் அலுவலாக அல்லது ஏதாவதொரு தேவைக்காகஇராணுவத் தடையரண்கள் தாண்டி முல்லைத்தீவு போய்வர ஏதாவது அலுவல்இருந்து கொண்டுதானிருந்தது. அக்காவுடன் அவள் நன்றாக இருப்பாள் என்றநம்பிக்கை மலையளவு அவளுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைகளோடுஇருந்தவளுக்கு 9நெடுஞ்சாலை தொடர்புகளற்று முல்லைத்தீவுடனானஅவளது தொடர்புகளும் அற்றுப்போய்…..போர் உக்கிரமாகியது. எப்போதாவதுபெரியக்கா வந்து அவள்பற்றி சொல்லும் தகவல்களுடன் மாதங்கள் விரைந்ததை மாதத்தில் ஒரு நாள்…..
பெரியக்கா அவளது வேலையிடத்துக்கு அவசரமாக அழைத்தாள். ஐயோ பிள்ளைஎன்னைக்குறை சொல்லாதை நானொண்டும் செய்யேலாமக்கிடக்கு….நான்தேடாத இடமில்லை…..இஞ்சை கனபிள்ளையள்இப்பிடித்தான்……வீட்டுக்கொருத்தர் என்ற கதைமாறி இளவயதினர் எல்லாரையும்கட்டாயமாச் சேர்க்கினம்….என்ரை மூத்தவனையும் ரண்டாவதையும் கொண்டுபோட்டினம்….அதுதான் சரி என்ரை பிள்ளையள்….நீ என்னை நம்பிவிட்டிட்டுப்போன உன்ர பிள்ளையையும் குடுத்திட்டனே….என்ரை குஞ்சு இரவுநித்திரையாக் கிடந்தவளணை வந்து கூப்பிட பிள்ளை மாட்டனெண்டு அழுதுகுழற அதையும் கேக்காமல் கொண்டு போட்டினம்……பெரியக்கா சொல்லிமுடித்தாள்.

கனவுபோலவும் அது பெரியக்கா இல்லை வேறையாரோ போலவும் நினைக்கவேமுடியவில்லை. பிள்ளையில்லையென்றதை ஒருநாளும் அவள்நினைத்திருக்கவேயில்லை. தன் ஆயுசு முழுமையும் தனது மகள் கூடவேஇருப்பாளென்ற கனவுகளும் , இவள்போல அவளும் பெண்கள் சமூகத்தின்முன்னேற்றத்துக்காக உழைப்பாள் என்றெல்லாம் எண்ணியிருந்த நினைப்புகள்மீதெல்லாம் சுனாமிப்பேரலை அடித்துச் சென்ற ஆயிரமாயிரம் பேரின்கனவுகளின் சிதைவு போல அவள் உடைந்து சிதிலமாகினாள். 15வயதே நிரம்பியதனது ஆசைமகளின் ஒவ்வொரு வளர்ச்சியின் பின்னும் அவள் மகிழ்ந்ததருணங்களெல்லாம் தவிடுபொடியாகி……

தினம்வரும் சாவுச்செய்திகளுக்குள் தனது ஒற்றைமகளின் செய்தி வரக்கூடாதுஎன தினமும் கடவுளை வேண்டிய பின்னர் தான் செய்தி படிப்பாள். வேலையிடத்திலும் தினமும் அழுகையும் துயருமாய் அவளதுபொழுதுகள்…..அன்றொருநாள் அவளது நிறுவனத்தின் இயக்குனர் வந்துசொன்னார். உங்கடை மகள் இறந்திட்டாவாம்…..பெரியக்கா சொன்னதாகசொன்னார். அந்த இடத்திலேயே அவள் ஐயோவென்று அலறியழுதாள். தொழில்சார் நண்பர்கள் முதல் அயல் அக்கம்பக்கம் உறவுகள் என எல்லாரும்வீடுதேடி வந்து துக்கம் விசாரித்துச் சென்றபின்னும் தனது மகள் உயிருடன்இருக்கிறாள் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் சாத்திரம் கேட்டாள். சிவன்கோவில் சாத்திரியின் சாத்திரம் பொய்க்காதென்ற நம்பிக்கையே அவளைவாழவைத்துக் கொண்டிந்தது.

போர் உக்கிரமாய் நிகழ்ந்து கொண்டிருந்த பகுதிகளிலிருந்து மக்கள் தினம்காயங்களுடனும் சாவுகளுடனும் வவுனியா நகருக்குள் வந்துகொண்டிருந்தார்கள். உதவிக்கென அவளது நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டபணியாளர்களுடன் தானும் மருத்துவமனைகள் மற்றும் காடுகள் வெட்டப்பட்டுஅவசர அவசரமாய் அமைக்கப்பட்ட கொட்டகைகளுக்குச் சென்று மக்களைச்சந்தித்து அவர்களுக்கான உதவிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

வேலை தவிர்ந்து கிடைக்கும் விடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில்வைத்தியசாலைகளுக்குச் சென்று தனித்தனியே போரால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள் உதவிகள் என தனதுஓய்வையெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவிட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு சனிக்கிழமை வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்தவாரத்தில்சந்தித்த யாருமற்ற 4பேருக்கு உணவும் உடைகளும் கொண்டு போயிருந்தாள். வைத்தியசாலையின் வெளிவிறாந்தையில் பெரியத்தான் அடையாளங்கள்யாவும் மாறி சவரம் செய்யப்படாத நரைத்ததாடியும் ஒட்டியொடிந்த உடம்புமாகஇருந்ததைக் கண்டாள். ஓடிப்போய் பெரியத்தானைக் கூப்பிட்டாள். பெரியத்தான்அவளைத்தனக்கு அடையாளம் தெரியும் என்பதற்கான எந்தவிதமானஅசுமாத்தமும் இல்லாமல் வெறித்தபடியிருந்தார்.

பெரியத்தானின் மிடுக்கும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டியும் சேட்டும்புழுதியில் குளித்திருந்தன. போர் நிகழ்ந்த பகுதியொன்றின் பாடசாலை அதிபரானபெரியத்தானின் அத்தனை மிடுக்கும் ஒடுங்கி ஒரு பிணம்போல பெரியத்தான்இருந்தார். மருத்துவர் ஒருவர்தான் சங்கதி சொன்னார். பிள்ளைகளைப்பிள்ளைபிடியில் கொடுத்ததிலிருந்து இப்படித்தானாம்….அதேவைத்தியாசாலையில் பெரியக்கா இருகால்களையும் இழந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொன்னார்.

பெரியக்கா இருக்கும் பகுதிக்கு ஓடிப்போனாள். அந்தக்காலத்தில் பெரியக்காவைநடிகை சுஜாதா என்பார்கள் ஊரில். அத்தகைய ஒரு அழகு அவள். அந்துப்பெரியக்கா கன்னங்கரேலனெ்று கறுத்துக் காய்ந்து முடமாகிப்போன தனதுகால்களைத் தடவிக்கொண்டிருந்தாள். அவள் அருகில் போனதன் பின்னர்தான்தெரிந்தது. பெரியக்காவுக்கு அடிவயிற்றிலும் பலத்தகாயம் என்பது. பெரியக்காவும் அவளும் சிலநிமிடங்களுக்கு பேசவேயில்லை. அழுகைதான்இருவரையும் அள்ளித் தின்றது.

நாங்கள் உயிரோடை வருவமெண்டே நினைக்கேல்லப் பிள்ளை…..ஒவ்வொருஇடமா ஓடியோடி புதுமாத்தளனில ஆமீட்டை மாட்டீட்டம்…..ஐயோ கடவுளாரேநாங்கள் பட்ட துயரை என்னெண்டு சொல்றதெண்டு தெரியேல்ல….பெரியக்காவிசும்பியழுதாள்.

அக்கா…, என்ரை பிள்ளையெங்கையக்கா…., அவளின்ரை பிணத்தைத்தந்தவையோக்கா….., முதல் சொன்னவை பிள்ளை சண்டையிலசெத்துப்போச்செண்டு பிறகொருக்கால் புதுமாத்தளனுக்கு வரேக்க அவள்கையில துவக்கோடை நிண்டதைக் கண்டம். ஓடிவந்து கதைச்சது பிள்ளை. உன்னைத்தான் பாக்க வேணுமாப்போலையிருக்கெண்டு அழுதவள். கையிலகிடந்ததை அங்கினை எறிஞ்சிட்டு வாவெண்டு எங்களோடைவாவெண்டன்…..பிள்ளை பக்கத்தில நிண்டவையைப் பாத்திட்டு அழுதது. எங்களைப் பாத்துப்பாத்துப் பிள்ளை போனது…..இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குதுமோன….
கடைசிவரையும் நம்பினம்….ஒரு நல்ல முடிவு கிடைக்குமெண்டு…..ஆனாலட்சம் பேரையும் இப்பிடி நடுத்தெருவில விட்டிட்டு எங்கடை பிள்ளைளையும்காவு குடுத்திட்டு கடைசியில 13வயதுக்கு மேற்பட்டதுகள் எல்லாத்தையும்கொண்டு போய் இப்ப தமிழனெண்டா சிங்களவன் தலையிற மிதிக்கிறநிலமையில விட்டிட்டுப் போட்டினம்…..என்ரை மூத்தவன்காயப்பட்டவன்….தானே சயனைட்டைத் திண்டு செத்துப்போனான்….மற்றவன்எங்கையெண்டு தெரியாது….சின்னவள் உங்கை பம்பைமடுவிலஇருக்கிறாள்….உன்ரை பிள்ளையும் முள்ளிவாய்க்கால் முடிவோடை ஆமிகொண்டுவந்த பிள்ளையளோடை வந்திருக்கும்…….

அவளால் பெரியக்கா சொன்ன எதையும் ஜீரணிக்க முடியவில்லை…..நாடும்வேண்டாம்…..போரும் வெண்டாம்….ஒண்டும் வேண்டாம்…..எங்கடைபிள்ளையள் போதுமெனக் கத்திக்குழறினாள். தன்னை மறந்து தலையிலடித்துநெஞ்சிலடித்துக் கத்தினாள். அவளை ஆறுதற்படுத்தி அழுகையை நிறுத்த வைத்தபெண் மருத்துவர் சொன்னாள். உங்களைப்போலையான ஆயிரமாயிரம்அம்மாக்களின் கண்ணீர்தான் எங்கடை நாட்டை நனைச்சுக்கொண்டிருக்குது…..முகாம்களிலயும் ஆசுப்பத்திரியளிலயும் எல்லா இடமும்பிள்ளைகளைத் தேடுற அம்மாக்களும் உறவுகளும் தான் நிரம்பிவழியினம்….யோசிக்காதையுங்கோ உங்கடை பிள்ளை எங்கையெண்டாலும்உயிரோடை இருப்பா….என்ற அந்த வார்த்தைகள் சின்னதொரு தெம்பைக்கொடுத்தது.

தமிழருக்கான தேசம் வேண்டும் அங்கேதான் தமிழினம் நிம்மதியுடன்வாழமுடியும் என்ற அசையாத நம்பிக்கையோடிருந்த பலலட்சம் தமிழர்கள்போல அவளும் தமிழீழவிடுதலையை தலைமையை நம்பியிருந்தாள். அந்தநம்பிக்கையின் சிகரத்தையே கொன்றுவிட்டதாய் ஒளிக்காட்சிகள் படக்காட்சிகள்காண்பித்தபோது எதையும் நம்ப முடியாதிருந்தது.

சிறுகச்சிறுகச் சேர்த்த பலமும் படையணிகளும் சிதைந்து பத்தாயிரத்தைத்தாண்டிய போராளிகள் சரணடைவு என்ற தகவல்களும் உலக வல்லரசுகளின்கால்களில் மிதிபட்டு எல்லாம் போய்விட்டது. இனிச்சில நூற்றாண்டுகளுக்குத்தமிழினம் எழுந்து நிமிர முடியாமல் அனைத்தும் அனைவரும் எல்லாளனின்வீழ்ச்சியுடன் மாண்டுபோய்விட்டது.

பிள்ளைபிடியில் பறிபோன தனது ஒற்றைப்பெண் கார்த்தினியைத் தேடிமனிதவுரிமை அமைப்புகள் செஞ்சிலுவைச்சங்கம் வரை மகளின் படமும்விபரங்களும் எழுதியெழுதிக் கொடுத்தே கைகள் ஓய்ந்துவிட்டன…..எங்கோஇருக்கிறாள் எனது மகள்….என்ற நம்பிக்கையை சிவன் கோவில் சாத்திரியிடம்சென்று வாரம் ஒருதரம் கேட்டு வருவாள். சிவன்கோவில் சாத்திரியின்வாக்குப்போல தென்பகுதியில் மகள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையைகடந்தவாரசண்டேலீடர்பத்திரிகையில் வந்த கட்டுரை மெய்ப்பித்ததுபோலிருந்தது.

அம்பேபுஸ்ஸ நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் இருக்கும் சிறுமிகள்எனப்போடப்பட்டிருந்த படத்தில் கன்னப்பாட்டுக்குப் பார்த்தபடியிருந்த மஞ்சள்சட்டையணிந்திருந்த பிள்ளை இவளது கார்த்தினி போலிருந்தாள்.

அம்பேபுஸ்ஸவிலிருந்த சிறுமிகளின் கதைகளில் ஒரு சிறுமி சொன்னாள்….,

இந்தக் காம்பை விட்டு வெளியே சென்ற பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று மீண்டும் கேட்ட போதுநான் என் அம்மாவிடம் போக வேண்டும். எனக்குஎன் அம்மா வேண்டும்என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை. அம்மாஎன்ற அந்த ஒரு சொல்லைத்தான் அங்கிருக்கும் சிறுமிகள் அனைவருமேதிரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.

அந்தச் சிறுமி தனது மகள்தான் என எல்லாருக்கும் சொன்னாள். அயல்முன்வீடென எல்லாருக்கும் அந்தச் செய்தியில் வந்த வரிகளை வாசித்துக்காட்டினாள். தன் மகள் கிடைத்துவிட்டாளென்று உள்ளுக்குள் பேருவகையில்மிதந்தாள்.

இரவு வேலையால் திரும்பிய கணவனை வாசலில் போய் வழிமறித்துச் செய்திசொன்னாள். ஒற்றைப்பிள்ளை போதுமென்று அடுத்த குழந்தையை விரும்பாதஅவர்களது கனவுகளின் ராசகுமாரியாகச் சுற்றிச்சுற்றித் திரிந்த பிள்ளையைமீளவும் காணலாம் என்ற நம்பிக்கையோடு செய்தியையும் படத்தையும்பார்த்தான். அந்த மஞ்சள் சட்டையணிந்தவள் அவர்களது கார்த்தினியில்லை அதுவேறுயாரோ போலிருந்தது. அதைச் சொல்லி அவளைக் கலங்க வைக்காமல்……. நான் சொன்னனெல்லோ நீ செய்த பணியள் எங்கடை பிள்ளையைக்காப்பாற்றுமெண்டு…. பாத்தியோ…. கடவுள் இன்னும் இருக்கிறார்…..எங்கடைபிள்ளை கிடைப்பாள்…..

படுக்கைக்குப் போனவள் நெடுநாளின் பின் அன்று அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள். அவனுக்கு நித்திரை வரவில்லை. தலையணைகை்குப்பக்கத்தில் அவள் வைத்திருந்த ‚‘சண்டேலீடர்பத்திரிகை எடுத்து விறாந்தைக்குள்கொண்டுபோய்ப் பார்த்தான். அவள் தனது மகள் என அடையாளம் சொல்லியபிள்ளை அவர்களது கார்த்தினியில்லையென்பது புரிந்தது. இதை அவளுக்குச்சொல்லி அவள் குழம்பி அழுகையும் துயருமாய் அவளிருக்கும்துயரக்கோலத்தைப் பார்க்கும் தைரியம் அவனுக்கில்லை. அவளது நம்பிக்கைகள்அவளுக்குரியதாகட்டும்……கனவு கண்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவள்மீளவும் உறங்கிப்போனாள்…..

கூரையைப் பிய்த்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்துவிடுமாப்போலிருந்தது மழை. இடியும் மின்னலும் மாறிமாறி யன்னலை உதைக்கும் காற்றோடு உள் நுளைந்தகுளிரின் இனிமையை இதயம் நுகர விரும்பினும் எதனுடனும் ஒட்டவோஉறவாடவோ மனசில் இடமில்லை. அர்த்த இராத்திரிகளில் வந்து தொலையும்பேய்களும் பிசாசுகளுமாக கனவில் திளைக்கும் தருணங்களையெல்லாம்தகர்க்கிறது கனவு.

கார்த்தினியின் நினைவுகளைத் துரத்த முடியாமல் அவளது படங்களும் அவளதுபுத்தகங்களும் அவள் ஞாபகங்களையே நிறைந்த விறாந்தையின் ஒருபக்கயன்னலைத் திறந்துவிட்டு மழையின் இரைச்சலையும் மின்னலின்ஒளிக்கீற்றையும் இடியின் ஓசையையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

தலைவெடித்துவிடும் போல மழை மின்னல் இடி எல்லாவற்றையும் தாண்டிக்கார்த்தினி எல்லாவற்றிலும் நிறைந்திருந்தாள். அவளில்லா நாட்களை அவள்இல்லையென்ற உண்மையை யார் வந்து சொன்னாலும் கமலினி நம்பமாட்டாள்ஏன் இவனாலும் தான் இயலாது……ஏன் தமிழருக்கு இந்த விதி…? என்ன பாவங்கள்எங்களை வதைக்கிறது….? கேள்வி மேல் கேள்விகள்…..எதற்கும் அவனிடம்விடையில்லை…..

பின் வளவிலிருந்து மாமரக்கிழைகள் முறிந்து விழுந்துகொண்டிருந்தன…..மரங்களில் இருந்த கோழிகளும் அடித்துவிழுந்துதாழ்வாரத்தில் ஒதுங்கின…..முற்றத்தில் கிடந்த முயற்கூட்டின் தாழ்வாரத்தில்கிடந்த நாய் ஊழையிட்டுக் கொண்டு போட்டிக்கோவில் வந்துபடுத்தது……படுத்திருந்த நாய் வாசலை நோக்கிக் குரைத்துக் கொண்டுஓடியது…..சண்டை முடிந்ததென்று சொல்லப்படுகின்ற இந்த நாட்களில் வாசலைநோக்கி நாய் குரைத்துக் கொண்டு ஓடியது அச்சமாயிருந்தது. யாராவது இயமதூதர்கள் வந்தாலும் என்ற பயத்தையும் மறந்து அவன் கார்த்தினியின்நினைவுகளோடு கரைந்திருந்தான்……

வாசலுக்கு ஓடிய நாய் ஓடிவந்து இவனைப்பார்த்துக் குரைத்தது…..யாரோவாசலடியில் நின்று அழுவது போலிருந்தது……யாரது…..எனக் குரல்கொடுத்தான்……அது நான்தானப்பா…..கமலினி குரல்கொடுத்தாள்…..படுக்கையறையில் கிடந்தவள் எப்படி வாசலுக்குப் போனாள்….? வாசலுக்கு ஓடிப்போனான்….இரவு உடையுடன் படலையின் பூட்டை கமலினிதிறக்க முயன்று கொண்டிருந்தாள்…..கமலினி….என்ன ? எங்கை போப்போற இப்பநான் பிள்ளையைக் கூட்டிவர அம்பேபுஸ்ஸவுக்குப் போப்போறன்….உங்கடைசயிக்களை எடுங்கோ ரண்டுபேருமாப்போட்டு வருவம்…..
அவனுக்கு அழவா இல்லை அவளை ஆறுதற்படுத்தவா எதுவுமேபுரியவில்லை…..

அந்தப்பெரு மழைக்கால் அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு விறாந்தைக்குள்நுளைந்தான்…..கமலினி பெரிய சத்தமாய் கத்தினாள்…..என்னைவிடுங்கோ….என்ரை பிள்ளை என்னை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறாள்…..நான்அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..அவனுக்கு என்ன செய்வதென்றேபுரியவில்லை….தன்னால் சொல்ல முடிந்த சமாதானத்தைச் சொல்லியும் அவள்கேட்காமல்…., நான் அம்பேபுஸ்ஸக்கு போப்போறேன்…..என்றபடியிருந்தாள்…….
19.08.09

11 comments:

வனம் said...

வணக்கம்

என்ன சொல்லுரதுக்கு இருக்கு ........
ஒன்னும் முடியல

இராஜராஜன்

சாந்தி நேசக்கரம் said...

வணக்கம் இராஜன்,
எம்மால் எதுவுமே சொல்ல முடியாத நிலையில் எமது இனமும் எமது அம்மாக்களும் அப்பாக்களும் கண்ணீரோடு வாழ்கிறார்கள்.

சாந்தி

- இரவீ - said...

//இவனாலும் தான் இயலாது……ஏன் தமிழருக்கு இந்த விதி…? என்ன பாவங்கள்எங்களை வதைக்கிறது….? கேள்வி மேல் கேள்விகள்…..எதற்கும் அவனிடம்விடையில்லை…..//

யாரிடமும் இப்போது இருப்பதாக தெரிய வில்லை ....

பதிலே கேள்வியாக வந்துவிட்டால் தான் உண்டு.

சாந்தி நேசக்கரம் said...

ஹேமா has left a new comment on your post "என்னை விடுங்கோ என்ர புள்ளை அம்பேபுஸ்ஸவில….":

ஈழத்தமிழனின் வாழ்வில்
கேள்விகளும் பதில்களும்
முடிவு பெறாத ஒன்று.

சாந்தி நேசக்கரம் said...

ஹேமா,
நீங்கள் இட்ட பின்னூட்டம் மாறி அழிபட்டுவிட்டது. மின்னஞ்சலில் இருந்ததை மேலே போட்டுள்ளேன்.
மன்னிக்கவும்.

சாந்தி

Anonymous said...

ஈழத்தாயர்களின் கண்ணீர் உலகெங்கும் பரிவியிருக்கிறது. சொல்வதற்கு யாதுமில்லை தோழி.

-வரதா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கடவுளைத் தவிர வேறு எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த நம்பிக்கை எல்லோருக்கும் உண்டா? கடவுளை வையும் எம்மவரைக் காணக் கவலையாக இருக்கிறது.

Anonymous said...

கண்ணீர்.
சொல்வதற்கு யாதுமில்லை தோழி.

சாந்தி நேசக்கரம் said...

//கடையம் ஆனந்த் said...

கண்ணீர்.
சொல்வதற்கு யாதுமில்லை தோழி.//

உண்மைதான் ஆனந்த் சொல்லவோ சொல்லியழவோ இயலாத துயரில் எம்மினம்.

கமலினியக்கா தற்கொலைக்கு முயற்சித்து உயிர் தப்பியுள்ளார். கமலினியக்காவின் கார்த்தினி விரைவில் வரவேண்டும் என்பதைத்தவிர வேறெதையும் ஆறுதல் சொல்ல முடியவில்லை.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

Blogger ஜெஸ்வந்தி said...

கடவுளைத் தவிர வேறு எவராலும் எதுவும் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த நம்பிக்கை எல்லோருக்கும் உண்டா? கடவுளை வையும் எம்மவரைக் காணக் கவலையாக இருக்கிறது.

August 25, 2009 12:35 AM

கடவுளையெல்லாம் நம்பிய நாங்கள் இப்போது கடவுள் உள்ளாரா எனக் கேட்கும் நிலையில் வந்து நிற்கிறோம் ஜெஸ்வந்தி. நமது இனம் கடவுளை அதிகம் நம்புகிறார்கள் என்பதற்கு இக்கதையில் வரும் கமலினியக்கா ஒரு உதாரணம் என நம்புகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள் ஜெஸ்வந்தி.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...
This comment has been removed by the author.