(15.09.09 தடைமுகாம் ஒன்றிலிருந்து வந்த அழைப்பில் தொடர்பு கொண்ட பெண் போராளி ஒருத்தியின் குரல் இது)
கன்னங்கள் நனைத்த கண்ணீர்ச் சொட்டுக்கள்
மெல்லக் காய்ந்து போகிறது.
காலத்திடம் தோற்றுப் போய் மர்மம் நிறைந்த
இருட்பொழுது தன் இருப்புக்காய் இயல்பாகிறது.
எல்லாம் இழந்து நடுத்தெருவில் சனங்கள்.
புதைகுழிகளுக்கான அகழிகள்
புதிது புதிதாய் பிறப்பெடுக்கிறது.
அற்புதங்கள் அநாமதேயமாய்
வியாபாரிகளின் கணக்குகளிலிருந்து
விடுபடுகிறார்கள்….
நாங்கள் போனதும்
உயிர் கொடுத்ததும் இதற்காகத்தானா….?
*‘போராடுங்கள்
சாவு உங்களுக்குச் சர்க்கரையல்லவா*
சொன்னவர்களல்லவா நீங்கள்….
இன்று சாவோடு கம்பிவேலிகளுக்குள்
சமராடிய கைகள் ஓய்ந்து
சத்தமிட்ட குரல்கள் ஒடிந்து
இரவுகளில் ஈனக்குரல்கள் அவர்களின்
போதை மயக்கத்தில் புணரப்படுகிறோம்…*
காப்பாற்றும் கைகளைச்
சேர்த்துவிட்டுக் கதையடி என்றவளே….!
ஒற்றையாய் நின்றுன் குரலை
ஓவென்றுழுது கேட்கத்தான் முடிகிறது…..
கற்றையாய் சேர்த்து அனுப்ப யாருமிங்கு
காசுடன் இல்லையடி…..
19வருடத்தை இந்த இனத்துக்காய்
ஏனிழந்தேனென அழுதவளே….!
பத்துச்சதம் உய்வதற்கே
பலகேள்வி கேட்போரிடம் போய்
பத்துலட்சம் வேணுமென் தோழி
தடையிருளிலிருந்து தப்பிக்க என்றால்
எவர் கைகொடுப்பரென்று தெரியிவில்லையடி….
முயற்சி திருவினையாகுமோ….?
முடிந்தால் மறுமுறை அழை சொல்கிறேன்.
No comments:
Post a Comment