Tuesday, January 11, 2011

வெள்ளம் அள்ளுகிறது கிழக்குமாகாணத்தை கண்களையும் கையினையும் இழந்த ஒருவனின் குரல்.

காலம் 09.01.2011 அதிகாலை 3.40மணி.

அக்கா அவசரமாக் கதைக்க வேணும் ஒருக்கா எடுங்கக்கா….! சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான். அக்கா செய்தியள் அறிஞ்சிருப்பியள் தானே…..! எங்கடை ஊரே தண்ணியில மூழ்கீட்டுது…வளவெல்லாம் தண்ணிதான் நிண்டது…வீட்டுக்கை வராதெண்டுதான் நம்பினமக்கா….ராத்திரி நாங்கள் சுத்தி எழுப்பின மண்சுவர் தண்ணீல கரைஞ்சு தகரங்கள் தடியள் எங்களுக்கு மேலை விழுந்து ஒண்டுமில்லையக்கா….. குழந்தைக்குப் பால்மாகூட இல்லை…..
இடுப்பளவு தண்ணீக்கால வெளிய வந்து இப்ப ஊர்ப்பள்ளிக் கூடத்தில வந்திருக்கிறம்….. ஏதாவது உதவிசெய்வியளோண்டு கேப்பமெண்டுதான் எடுத்தனான்….. எங்களோடை 300பேர் இருக்கினம்….குழந்தையளின்டை நிலமை சரியான மோசமாக் கிடக்குது. வெளிக்கிடேக்க இந்த ரெலிபோனைத்தான் எடுத்துக் கொண்டு வந்தனாங்கள். போட உடுப்புக்கூடக் கொண்டு வரேல்லயக்கா….

நேசக்கரத்தால பயனடைஞ்ச குடும்பங்கள் கனபேர் இதில இருக்கினமக்கா அவையளுக்காகவேனும் ஏதாவது செய்யுங்கோக்கா……சண்டையிலயும் நாங்கள் தான் துயரப்பட்டம் இப்ப வெள்ளமும் எங்களைத்தான் அழிக்குது…..நாங்கள் சாவுமில்லாமல் வாழ்வுமில்லாமல் இருக்கிறமக்கா……

எங்களை ஏனக்கா தண்டிக்கிறீங்கள்….? தயவு செய்து திரும்பி இயங்குங்கோக்கா…..அரசியல் செய்யிற எங்கடை அரசியல் கள்ளன்களுக்கு எங்கடை அவலங்கள் விளங்காதக்கா…..அவங்களெல்லாம் எங்கடை கண்ணீரை மாடிவீடுகளிலயிருந்து ரீவியிலயும் கணினியிலயும் பாத்துக் கொண்டிருக்கிறாங்கள்….. எங்கடை குழந்தையள் சாகக்கிடக்குதுகள்….உங்கடை மற்றாக்களோடை கதையுங்கோ எங்கடை நிலமையைச் சொல்லுங்கோ…..எங்களுக்கு உதவச் சொல்லுங்கோக்கா……

அவன் கண்ணிரண்டையும் ஒற்றைக்கையையும் 13வயதில் நாட்டுக்காகக் கொடுத்து கடைசிக்கள முடிவுவரை வன்னிக்குள் வாழ்ந்து 20வருடம் கழித்து தான் பிறந்த மட்டக்களப்புக்குச் சென்று ஓராண்டாகிறது. அவனது துணைவிதான் அவனுக்கு எல்லாம். குடிதண்ணீர் எடுக்கவும் குளிக்கவும் தினமும் 4கிலோமீற்றர் தூரம் சென்றுதான் வருவார்கள். கண்ணில்லாத அவனையும் குழந்தையையும் கையிரண்டிலும் பிடித்துக் கொண்டு அவனது அவள்தான் எல்லாவற்றையும் கவனித்தாள்.
அவர்களுக்கான நேசக்கரம் நீட்டிய உறவுகளால் மீளவும் உயிர்த்ததாய் நம்பிய குடும்பம் செய்த சுயதொழில் விவசாயம் நவம்பர் மாத மழையில் அழிந்து போனது. வளர்த்த கோழிகள் டிசம்பர் மாதம் செத்துப்போக வீதிகளில் தேங்காய்கள் விற்றுக் கொண்டிருந்தவனோடு வீதிவீதியாய் அலைந்தவள். உதவிய புலத்து உறவுகளுக்குத் தயக்கத்தோடு தங்கள் நிலமையைச் சொல்லி சிறு கொடுப்பனவினைப் பெற்றார்கள். ஆனால் இன்று கிடைத்ததும் இல்லாமல் மீண்டும் அகதியாகிப் போய் ஓர் பாடசாலையில் ஒதுங்கியிருக்கிற பலநூறுக்குள் இவர்களும்…..

அக்கா யோசியுங்கோ….சிலவேளை இந்தத்தண்ணி பெருத்து நாங்க செத்துப்போறமோ தெரியாதக்கா…. அடுத்தொருத்தி புலம்பினாள். அவள் கணவன் 2007 மாவீராகிவிட்டான். 3 குழந்தைகளுடன் ஒரு சிறுகடையை ஆரம்பித்திருந்தவள். அதுவும் மழையடித்து மண்ணோடு மண்ணாய் கரைந்து போய்விட்டதாம்.
அக்கா என்ரை கொட்டிலெல்லாம் வெள்ளத்தில போயிச்சு….நீங்கள் உதவினதெல்லாத்தையும் வெள்ளம் கொண்டு போட்டுதக்கா சொல்லியழுதாள் 32வயதான அவள்.சில நல்லிதயங்களின் ஆதரவில் அவள் ஆட்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து உழைக்க வாங்கிக்கொடுத்த பொருட்கள் யாவும் அவளது குடிசையோடு அடிபட்டுப்போயிற்றாம். அவளுக்கும் 3பெண் குழந்தைகள் முள்ளிவாய்க்காலில் அவளது கணவனும் மாவீரர்.
5குடும்பங்களின் துயரக்கதையள் அடுத்தடுத்து எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கினாலும் ஒதுங்க முடியாது துரத்துகிறது துயரங்கள். எம்மை முடக்கியவனுக்கும் தடைவிழுத்திய அவனது தொண்டர்களுக்கும் இது 3ம் சாமமாயிருக்கும். அவர்கள் மூக்குமுட்ட எல்லாவகைகளையும் தின்றுவிட்டுச் சுகமாய் அடுத்த தேர்தல் கனவில் மிதப்பார்கள்.

காலம் 09.01.2011 காலை6.12மணி. அக்கா என்ன முடிவு…?
காலம் 09.01.2011 காலை 6.19மணி.
காலம் 09.01.2011 காலை 15.27 மணி வரை 15தடவைகள் ஒரே குரல் ஒரே விடயம்.

காலம் 10.01.2011 காலை 6.05மணி. கடைசியாக வந்த அழைப்பு. அக்கா ரெலிபோனில சாச் இல்லை. எலெக்றிக் கம்பங்களெல்லாம் இங்காலை அறுந்து விழுகுது. இனிக்கதைக்கிறது கஸ்ரமக்கா. திரும்பியும் சொல்லறமக்கா உங்கடை முடிவுகளை மாத்துங்கோ நாங்க தண்ணீல சாகப்போறம்…..எங்கடை குழந்தையளையும் எங்களையும் தண்ணி இழுத்துக் கொண்டு போப்போகுது. நான் போட்டுத்திரிஞ்ச ஒரு செருப்பும் தண்ணீல போட்டுது…..அவனது தொடர்பு அறுபடுகிறது.

காலம் 11.01.2011 மாலை 15.30 முதல் 11.01.2011 காலை 8.52 மணிவரையும் இரவிரவாகப் பலதரம் அவனை அழைக்க முயற்சித்தாயிற்று தொலைபேசியழைப்பு தற்போது இயலாதென எயாரெல் குரல் சொல்கிறது. அவனோடிருந்த 5குடும்பத் தொலைபேசிகளும் ஒரேமாதிரித்தான் சொல்கிறது.

எழுதப்பட்ட காலம் 11.01.2011 காலை 08.55.

Saturday, January 8, 2011

நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.


06.01.2010

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்காக நேசக்கரம் அமைப்பின் ஊடாக உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் வணக்கம்.
நேசக்கரம் அமைப்பானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதற்காக யாழ் இணையத்தில் இணைந்திருந்த சில உறுப்பினர்களால் நட்பு அடிப்படையில் சில வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அந்த அமைப்பனூடாக புலம்பெயர் மக்களின் உதவிகள் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி பாதிக்கப்பட்ட மக்களிற்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ததுடன் உதவிகள் அனைத்தும் மக்களைச் சென்றடைகின்றன என்பதும் உறுதிப்படுத்தபட்டும் வருகின்றது.

கடந்த 2009 மே 19ம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் நேசக்கரம் அமைப்பினை தொடங்கிய பலரும் மனச்சோர்வு வேலைப்பழு என விலகிச்சென்ற போதும், மனம் தளராது சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரே நேசக்கரம் அமைப்பின் இயக்கம் நின்று போகாமல் அதனூடன சேவையை தொடர்ந்தனர். நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் பின்னர் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், கணவர்களை இழந்த பெண்கள், கல்வியை இழந்த மாணவர்கள் காயமடைந்தவர்கள் என எங்கள் உறவுகளின் தேவைகள் பெரும் பூதாகாரமாய் வடிவெடுத்து நின்றது. அதன்காரணமாக நேசக்கரத்தின் வேலைத்திட்டங்களையும் விரிவாக்க வேண்டிய தேவை எமக்கிருந்தது.தங்கள் பெயர் சொல்ல விரும்பாத சில நல்ல உள்ளம் படைத்த உறவுகளின் உதவிகளுடன் நாமும் காலத்தின் தேவைகளையறிந்து இன்றைய உலகின் அனைத்து நவீன வசதிகளையும் பயன்படுத்தி வானொலி .பத்திரிகைகள் இணையத்தளங்கள் மின்னஞ்சல் என சகல வழிகளிலும் எமது மக்களின் தேவைகளை வெளிக்கொணர்ந்து கடந்த இரண்டு வருடத்தில் பெருமளவான உதவிகளை புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் செய்து முடித்தோம்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் இனி புலம்பெயர் மக்களிடம் உதவியென்றே போகமுடியாது போனாலும் எதுவும் தரமாட்டார்கள் என்கிற ஒரு பொதுவான கருத்து நிலவிய காலத்திலும் அதனையே ஆலோசனைகளாகப் பலர் எம்மிடம் சொல்லிய போதும் இல்லை மக்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் சரியான கணக்கு ஆதாரங்களுடன் சென்றால் நிச்சயமாக உதவுவார்கள் என்று அதனையே ஒரு சவாலாக நினைத்து எங்கள் வேலைத்திட்டங்களை வடிவமைத்தோம். நாங்கள் நினைத்தது போலவே உடனுக்குடன் உதவிகளும் வந்து சேர்ந்தது. உதவியவர்களும் நேசக்கரத்தினை பாராட்டி திருப்திபட்டுக் கொண்டார்கள். ஆனால் நேசக்கரத்தின் வேகமான செயற்பாடுகளும் அதன் சேவையின் பிரபலமும் இலங்கையில் பல அரசியல் வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது. சிலர் தங்களுடன் இணைந்து இயங்குமாறு அழைப்பு விடுத்தனர். சிலர் எங்கள் உதவிகளை பெற்று மக்களிடம் வினியோகித்து தங்கள் அரசியல் இலாபம் பெற நினைத்தனர். சிலர் மிரட்டினார்கள்.


ஆனால் நேசக்கரம் அமைப்பானது எவ்வித அரசியல் சாயமும் பூசிக்கொள்வதில்லையென்பதில் உறுதியாக நின்றது. இவை அனைத்தையும் சமாளித்தும் எதிர்த்தும் எங்கள் வேலைத்திட்டங்களை முடிந்தவரை முன்னெடுப்பது முடியாத நிலை வரும்பொழுது நிறுத்தி விடுவது என முடிவெடுத்திருந்தோம். எனவே அந்த முடிவினை எடுக்கும் நேரம் வந்து விட்டது. காரணம் எமது அமைப்பினை முடக்குவதற்கான அல்லது அதனை பறித்தெடுப்பதற்கான தொடர்ச்சியான அழுத்தங்கள்.தொடர்ச்சியான தொலைபேசி மிரட்டல்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
நேசக்கரம் அமைப்பினை இயக்குகின்ற சாந்தி ரமேஸ் வவுனியன் மற்றும் சிறி ஆகியோரிற்கு எவ்வித அரசியல் பலமோ பணபலமோ ஆள்பலமோ இல்லாதவர்கள். வெறும் மனோபலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் முட்டி மோதி பல உதவித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தொடர்ந்தும் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்வையும் கவனித்தபடி மிகப்பெரிய அரசியல் பலங்கள் பிரபலங்களுடனும் மோதிக்கொண்டு எமது சேவைகளை தொடர முடியாத நிலையில் நேசக்கரத்தின் செயற்பாடுகளை நிறுத்துவது என்கிற மனவருத்தத்திற்குரிய முடிவினை எடுத்துள்ளோம்.

நேசக்கரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிற்கு தொடர்ந்தும் உறவுகள் உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடனும். வேறு ஏதோ ஒரு வடிவத்தில் அந்த உதவிகள் போய்சேரவேண்டும் என்கிற ஆதங்கங்களோடும் இதுவரை காலமும் நேசக்கரத்துடன் கைகோர்த்து நின்ற அனைத்து உறவுகளிற்கும் எங்கள் நன்றிகளையும் வணக்கங்களை கூறிக்கொண்டு நேசக்கரம் அமைப்பு தனது சேவைகளை நிறுத்திக்கொள்கின்றது.
நன்றி வணக்கம்.
இங்ஙனம் நேசக்கரம் நிருவாகம்.

Wednesday, January 5, 2011

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்
ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்
செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.
பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த
24.12.10 அதிகாலை 5மணியோடு
அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது
அவனது கனவுகளை அழித்துக் கொண்டு
காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்
தலைசிதறிக் கதை முடிந்து
30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.
உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது
கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்
தன்னையழித்தானாம்….!
விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..
கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்
பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய
நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை
செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?
கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்
காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு
அவனது விதிபற்றிய இரங்கல்களும்
நினைவு மீட்டல்களும்
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்
குடிகாரனென்கின்றனர் சிலர்,
நல்ல வேலையில்லையென்றும் சிலர்
காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்
அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி
அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்
நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..
‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்
எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது
கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட
இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.
நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்
கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்
எங்கே போயினர்…..?
வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்
தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க
கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்
அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..
ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி
அவனது அக்காக்களின் கண்ணீரில்
கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்
வெளிறிக் கொண்டிருக்க – அவன்
என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு
படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்
அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்
ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு
மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்
நினைவுகளாய் மறக்க முடியாது
மனசோடு அவன் ஞாபகங்கள்
மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்
வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……
இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்
எழுத முடியவில்லையடா……!
இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்
நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த
சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….
சண்டையிடாமல் கோவம் போடாமல்
அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்
ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

Thursday, December 30, 2010

ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்

சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும்
அவள் அணிந்த ஆடைகளையும்
அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள்
படம்காட்டி செய்தியாய் செவ்வியாய்
செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்…..

இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி
76பேருடன் உடலுறவு கொண்டாளாம்…..
அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி…..
ஆளாளுக்கு விளக்கங்கள்
அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான்.

மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம்
அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும்
பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட
விட்டு வைக்காத இனம் நாங்கள்.
நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான்.

விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க
சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி
ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்
கொடுமைக்கு யாரிங்கு குரல் கொடுப்பர்……?

கெளரவம் கவரிமான் சாதியாய்
தன்னையே பெருமைகொள் தமிழினம்
உயர்ந்த பண்பிலும் வரலாற்றிலும்
வனையப்பட்ட சித்திரமென்ற கதைகளை
இனியாவது நிறுத்திக் கொள்வோம் தமிழர்களே…!
எங்கள் வீட்டின் மகளை இப்படியா ஏலம் விடுவோம்…?
மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்…..!
இதுவா மனிதப் பண்பு…?
இதுவா சீர்திருத்தம்…..?
இதுவா தமிழினப் பெருமை….?
ஒன்று முடிய ஒன்றாய் தமிழச்சிகள்
தமிழர்களால் விற்கப்படும் வியாபாரம்
இன்றோடு நிறுத்துவோமா…..?

31.12.10

(28.12.10 அன்று இணையங்களில் வெளிவந்த செய்தியின் தலைப்பிது:-17வயது மாணவி 76 பேருடன் பாலியல் தொடர்பு! யாழில் அதிர்ச்சி! பெருமளவானோர் படையினராம்! இச்செய்தியின் நாயகி ஒரு 17வயதுச் சிறுமி. அவளை ஆளுக்காள் அவரவர் திறமைக்கேற்ப விமர்சனங்களால் வியாபாரம் செய்கின்றனர். இசைப்பிரியாவின் நிர்வாண உடலைக் காட்டி ஊடகவிபச்சாரம் செய்த ஊடகர்களும் ஊடகங்களும் இன்று இந்தப் 17வயதுச் சிறுமியைத் தண்டிப்பதாய் நினைத்து ஒவ்வொரு தமிழ்ச்சிறுமியையும் தண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்கள் பரபரக்க பலியிடப்படும் உயிர்கள் வரிசையில் இன்று பேசப்படும் சிறுமிக்கு அவள் போல ஆயிரமாயிரமாய் காயங்களுடன் வாழும் பெண்களை அவமதிக்கும் ஊடகதர்மர்களுக்கு இது சமர்ப்பணம்)

Thursday, December 9, 2010

உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு


அக்கிரமம் இறுதியில்
பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம்
அதற்கு நீயும் விலக்கில்லாமல்
ஆழ்கடல் நுனிமட்டும்
அலைகிறதுன் ஆத்ம ஓலம்……

கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும்
கதைசொல்லும் பொன்முகமும்
பூவினும் இனியதாய்
பொலிந்த உன் பெண்மையும்
நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்……

நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ
சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை
அலங்கோலமாய் அணுவணுவாய்
படம்பிடித்து மகிழும் காட்சியாய்
நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம்
நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது……

தீயெரித்த கண்ணகியின் கோபத்தை
கதைகளில் தான் படித்தோம்.
ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை
சமகாலத்தில் தானே கற்றோம்.
ஆயினும் ஊமைகளாய்…..!

சாமிகளாய் நம்பிய சரித்திரங்கள் யாவையும்
சாவிட்டு முடித்துச் சாம்பரும் கரைத்துச்
சாவின் மீதுலவும் பூதங்களாய்
பயம்தருகின்ற பொழுதுகளில் உழலுகிறோம்.

சுடலைகளாய் நீழ்கிற தெருக்களில்
கண்ணகைகளாய் எழவும் முடியவில்லை
கண்ணீர் விட்டு அழவும் முடியவில்லை
கொப்பளிக்கும் கோபத்தை துயரத்தை
இப்படித்தான் கொட்ட முடிகிறது.

தங்கையே !
நீ தமிழுக்கும் தமிழனத்துக்கும் கிடைத்த
சொத்துக்களில் ஒரு முத்து.
உன்னைத் தொலைத்துவிட்டோம்.
உன்போல் ஆயிரமாயிரம்
தங்கைகளை அக்காக்களை
தின்னக் கொடுத்துவிட்டு நாங்கள் தின்கிறோம்
உடுக்கிறோம் உழைக்கிறோம்
உயிர்வாழ்கிறோம் இது துரோகம்தான்.
ஆனாலும் உயிர்வாழ்கிறோம்.

யாரும் யாருக்காகவும் உரிமைகோர முடியாத
பூட்டுக்களால் பிணைக்கப்பட்ட
சடங்களாயான எங்கள்
சமகாலவிதியை இப்படித்தான்
ஏற்றுக்கொள்கிறோம்.

பாளங்கள் பிழந்து
வடிந்தொழுகும் சுமைகள்
உன்மீதிறங்கி உன்னைக்
குலைத்துச் சிதைத்துச்
சொன்ன சேதி……!!! :icon_idea:

08.12.10 (கொடுமையாய் சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் நினைவாக இப்பதிவு. இசைப்பிரியா ஒரு கலைஞராக வாழ்ந்து காத்திரம் மிகுந்த படைப்புகளையும் தந்து எங்கள் காலத்தில் வாழ்ந்த போராளி. அவள் நிர்வாணப்படுத்தப்பட்டு நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்)

Friday, November 26, 2010

நீங்கள் பிறந்த இந்நாள்


மெளனங்களாய்
உங்கள் நினைவேந்திக்
கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்
முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு
மூச்சறுந்த நிலையில் எல்லாம்
உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்
வரலாறாய் பதித்துவிட்டு
வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே
வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்
இந்த மெளனங்களும் ஊகங்களும்
வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்
இப்போ நல்ல மழை பெய்கிறது…..
நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை
உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு
உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு
உயிர் கொடுக்கப் போனவர்கள்
தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்
பிழைகாணும் வீர(ண)ர்கள்
இடுகின்ற ஊழைகளில் உண்மையும்
நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை
இந்த ஊனக்கண்களும்
உக்கிய வாய்களும்
ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..
நீங்களாய் மாற நிறையவே நரிகள்
பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்
வருடாவருடம் வந்து போன
நாட்கள் போலில்லை…..
என்றுமே உணர்ந்திராத
வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க
உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்
மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..
26.11.10

Thursday, November 4, 2010

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.
எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.
ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?
கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10