Wednesday, January 5, 2011

அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும் ஞாபகம் கொள்வோம்.

அழகிய கனவுகளாலும்
ஆயிரமாயிரம் கற்பனைகாளாலும்
செதுக்கப்பட்டு சிற்பமானது அவனது வாழ்வு.
பாலன் பிறக்க முன்னொரு பொழுதிருந்த
24.12.10 அதிகாலை 5மணியோடு
அவனது வாழ்வு முடிந்து போயிற்று.

காரணம் அறியப்படாது
அவனது கனவுகளை அழித்துக் கொண்டு
காற்றாய் ஓடிய புகையிரதப் பாதையில்
தலைசிதறிக் கதை முடிந்து
30வயதோடு தன்னை முடித்துக் கொண்டான்.
உறைபனிக்குளிரில் அந்த விடிகாலையில் அவனது
கதை முற்றுப் பெற்றது.

தண்டவாளத்தில் தலையைக் கொடுத்துத்
தன்னையழித்தானாம்….!
விறுவிறென்று செய்தி வீச்சாய் பரவி…..
கதைகள் பலவாய் அவன் கூடக் கடைசிவரையும்
பியரடித்து நத்தார் தினம் கொண்டாடிய
நண்பர்கள் மூலமாய் அவன் செத்துப்போன கதை
செவிகளில் எட்டியது.

ஏன்…? எதற்கு….? எப்படி….?
கேள்விகளால் அவன் மரணம் துளையிடப்பட்டுக்
காரணம் அறியப்படாமல் வினாக்குறிகள் நீண்டு
அவனது விதிபற்றிய இரங்கல்களும்
நினைவு மீட்டல்களும்
புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது……

கோளையென்கின்றனர் சிலர் அவனைக்
குடிகாரனென்கின்றனர் சிலர்,
நல்ல வேலையில்லையென்றும் சிலர்
காதல் தோல்வியென்கின்றனர் இன்னும் சிலர்
அர்த்தம் புரியாமல் நிகழ்ந்த அவனது சாவுபற்றி
அந்தரிக்கும் அவன் உறவுகளின் துயர் நடுவில்
நின்று சிலர் இப்படியும் ஈனமாய் சொல்கின்றனர்…..
‘‘எனக்கு எண்ணாயிரம் யூரோ எனக்குப் பதினைந்தாயிரம் யூரோ‘‘

கடன்கொடுத்தோமென்று கதைவிடுவோர்
எதுவுமில்லா ஒருவனிடம் ஆயிரமாய் கொடுத்தோமென்றது
கதையல்ல நிசம்.

அவனது இறுதிப் பயணம் கூட
இயல்பாயில்லாமல் அங்கும் காசுதான் நின்றது.
நண்பனேயென்று கூடி பியரடித்தவரும்
கும்மாளமடித்தவரும் எங்கென்று தெரியாமல்
எங்கே போயினர்…..?
வாழ்ந்தவரை வந்தோரெல்லாம் சாவின் பின்
தள்ளிப்போய்….. இதுவாம் நட்பு…..!!!

பிறந்தவனை இறுதிப் பயணம் அனுப்பி வைக்க
கூடப்பிறந்தவர்களுக்குக் கூடக் கைகொடுக்க ஆளின்றிக்
அட்டைகளாய்க் கழன்றது நட்பெல்லாம்…..
ஆட்களிருந்தும் அனாதையாய் போனவன் பற்றி
அவனது அக்காக்களின் கண்ணீரில்
கடைசி வரை நட்பும் கடைசியிலும் உதவாத நட்பும்
வெளிறிக் கொண்டிருக்க – அவன்
என்றென்றும் போலக் கள்ளமற்ற சிரிப்போடு
படமாய்த் தொங்குகிறான்.

குழந்தையாய் அவன் உலவியது முதல்
அவனும் நாங்களும் எங்கள் வைரவர் ஆல்விழுதில்
ஊஞ்சலாடி அடிபட்டுக் கோபம் போட்டு
மண்வீடு கட்டி மண்சோறு காய்ச்சிய பிள்ளைப்பருவம்
நினைவுகளாய் மறக்க முடியாது
மனசோடு அவன் ஞாபகங்கள்
மழையாய்ப் பெய்கிறது.

போய்வா என்றவன் சாவைப் போக்காட்ட முடியாமல்
வாழ்கிறான் எங்கள் ஞாபகத்தில்……
இனிவருவாயென்றும் எம்முடன் வாழ்வாயென்றும்
எழுத முடியவில்லையடா……!
இனியொரு பிறவி உண்டாயின் பிறப்போம்
நாங்கள் பிறந்து நாங்கள் வாழ்ந்த
சமாதிகோவிலடிச் செம்பாட்டுப் புழுதியில்….
சண்டையிடாமல் கோவம் போடாமல்
அந்தக் குழந்தைக் கனவுகளை மீண்டும்
ஞாபகம் கொள்வோம்.

05.01.2010

(24.12.10 அன்று யேர்மனியில் ரயிலில் வீழ்ந்து அல்லது வீழ்த்தப்பட்டு அகாலமரணமடைந்த அயலவன் , ஊரவன் , உறவினன் , எம்மோடு வாழ்ந்து காரணம் அறியாமல் நிகழ்ந்த மரணத்தால் எம்மை விட்டுப்பிரிந்த உறவுக்கு இது சமர்பணம்)

(யாழ்மாவட்டம் வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள செம்பாட்டுமண் கிராமம் குப்பிளான். குப்பிளானின் வடக்கேயமைந்த குறிச்சியின் பெயர் சமாதிகோவிலடி. சரவணைச்சாமியார் என்றொரு சாமியார் சமாதியடைந்தமையால் சமாதிகோவிலடியெனப் பெயர்மாறியதாக அப்பு ஆச்சியின் கதைகள் சொல்கிறது. அந்தச் சரவணைச்சாமியார் சமாதியான பூமியில் பிறந்து அகாலமாய் இறந்து போனவனை இக்கவிதையால் நினைவு கொள்கிறேன்)

No comments: