27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது.
4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன்.
வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப் போட்டாள். எனக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளது எண்ணங்கள் சிந்தனைகள் எப்போதும் போல அன்றும் ஆச்சரியத்தைத் தான் தந்தது.
சிறுவயது முதலே இசையென்றால் என்னைப் போல அந்த உலகில் தன்னைக் கரைத்து விடுவாள். அவளது பத்தாவது வயதில் ஒருநாள் நோர்மா கடைக்குப் போயிருந்தேன். அங்கே 40யூரோவுக்கு ஒரு கிற்றார் இருந்தது.
கிற்றார் பற்றி எந்த அறிவும் எனக்கில்லை. அந்தக் கிற்றாரை வாங்கிக் கொண்டு போன போது அவளுக்கு கிற்றார் வாசிக்கவே தெரியாது. அவளும் பார்த்திபனும் கிற்றாரை தங்களுக்குத் தெரிந்தபடி தட்டிக் கொண்டிருந்தார்கள்.
பார்த்திபனுக்கு 9வயதும் அவளுக்கு 7வயதும் ஆகிய போது கீபோட் பழக ஒரு றஸ்சிய ஆசிரியையின் கீபோட் பள்ளிக்கு மாதம் 120யூரோ கட்டி கீபோட் பழக அனுப்பியிருந்தேன்.
பிள்ளைகள் சிந்தனைக்கான ஏதாவதொரு கலையைக் கற்க வேண்டுமென்றது என் விரும்பம். ஐரோப்பிய நாடுகளில் கலையொன்றைக் கற்பதற்கு செலவும் அதிகம். என்னோடு சேர்ந்து பிள்ளைகளும் பாடல்கள் கேட்பார்கள். சிலவேளை படங்களும் பார்ப்பார்கள்.
என்னால் முடியாது போன யாவையும் எனது குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற சாதாரண அம்மாவின் கனவுகள் எனக்குள்ளும் இருந்தது.
40யூரோவுக்கு வாங்கிக் கொடுத்த கிற்றார் அதிகம் தொடப்படாமலேயே இருப்பதிலும் அடிக்கடி வீட்டில் சண்டை வந்து போனது. அது பிள்ளை வாசிக்காமல் போனாலும் பறவாயில்லை அவளது அறையில் அது இருக்கட்டும் என்பது எனது விருப்பம்.
அவள் தானாகவே தனது அறையில் இருந்து பாடல்கள் பாடத்தொடங்கினாள். ஆங்கிலப் பாடல்கள் டொச்பாடல்களைத் தனக்குப் பிடித்தபடி பாடத் தொடங்கினாள்.
தங்கா பாட்டுப் பாட விருப்பமெண்டா மியூசிக் ஸ்கூலில அம்மா சேர்த்து விடுறேன்... ஒரு நாள் கேட்க அவளும் உடனே ஓமென்றாள். மொடேன் மியூசிக் ஸ்கூலில் சேர்த்துவிட்டேன். கிழமைக்கு 30 நிமிடங்கள் படிக்க 60யூரோ. வருடத்தில் வரும் விடுமுறைகள் பள்ளிக்கூட விடுமுறைகள் சேர்த்து கிட்டத்தட்ட வருடம் 4 மாதங்கள் வகுப்புக்கு போகாமலேயே அதற்கும் பணம் செலுத்த வேண்டும்.
அவள் இணையத்தில் பார்த்துப் பார்த்து கிற்றார் வாசிக்கப் பழகினாள். தனது ஓய்வு நேரங்களில் பாடுவாள் கிற்றார் வாசிப்பாள். ஆசிரியர் இல்லாமல் தானே கிற்றாரை அவள் வாசிப்பதில் எனக்குப் பிரமிப்பு.
2012ம் ஆண்டு கோடைவிழாவில் அவள் முதலாவது மேடையேறினாள்.
500பேருக்கும் மேலான மக்கள் கூட்டத்தில் அவள் பாடிய போது முதல் முதலில் பெருமை எனக்கே. அவள் பாடி முடிந்து மேடையால் இறங்க அவளது ஆசிரியர் வந்து அவளை வாழ்த்தியதும் பார்வையாளர்கள் அவளது பாடலை மீண்டும் பாடுமாறு சத்தமிட்டுக் கைதட்டியதும் இன்றும் காதுக்குள் கேட்கிறது.
2020 அவளது பாடல் அல்பம் வெளிவரவிருப்பதை மகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்தவள் தனது பாடல்கள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள். ஆங்கிலப் பாடல்களைக் கேட்கத் தொடங்கியது அவளால் தான். ஆங்கிலப் பாடல்கள் அறிமுகமானதும் அவளால் தான்.
இன்று அவள் ஆங்கிலப்பாடல்களை தானே எழுதி மெட்டமைத்து நண்பர்களின் ஆதரவோடு ஒரு அல்பத்தை வெளியிடும் வரையில் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாள்.
முதலாவதாக வெளிவரவுள்ள பாடலைப் பலதடவைகள் போட்டாள்.
இது யாருக்காக தெரியுமோ குண்டம்மா ?
அம்மாவுக்கும் அண்ணாவுக்காகவும் தான் எழுதியிருக்கிறேன்.
அவள் சொல்லிய போது என்னுள் எழுந்த கண்ணீரை ஆனந்தக் கண்ணீராய் துடைத்துக் கொண்டேன்.
நேற்று பழைய கதைகள் கதைத்துக் கொண்டிருந்த போது கதைகளோடு அழுதுவிட்டேன்.
என்ர பிள்ளையளை அம்மா கரைச்சல்படுத்தீட்டேன். நீங்கள் ரெண்டு பேரும் எவ்வளவு கரைச்சல் பட்டீங்கள் என்னோடை...நான் வேளைக்கே உங்கள் ரெண்டு பேரையும் வெளியில கொண்டு போய் வாழ்ந்திருந்தா உங்களுக்கு மனவழுத்தத்தைத் தராமல் இருந்திருக்கலாம். நிம்மதியாக நாங்கள் தூரத்தில போய் இருந்திருந்தால் ஒவ்வொருத்தரும் சொல்ற குறைகளையெல்லாம் கேட்டிருக்கமாட்டன்.
அவள் என்னை அணைத்து அழுதாள்.
அம்மா அழாதைங்கோ. நீங்கள் தனிச்சு எங்களுக்கு செய்தது காணும். நீங்கள் எங்களை கவனமாப் பாத்தனீங்கள் எங்களுக்கு எல்லாம் தந்தனீங்கள். உங்களால முடிஞ்சதையெல்லாம் எங்களுக்குத்தான் செய்தனீங்கள். அதைவிட எங்களோடை இருக்கிறீங்கள். எங்களுக்காக நீங்கள் தானம்மா கஸ்ரப்படுறீங்கள். எல்லாத்துக்கும் நன்றியம்மா.
நீண்டநாளின் பிறகு அழுதேன். பலநாள் அழாமல் எனக்குள்ளே மறைத்த பலவிடயங்களை நினைத்து அவள் கண்ணீர் துடைக்கத் துடைக்க அழுதேன். மனம் கனக்கும் நேரங்களில் யாருமற்ற தனிமையில் என்னோடு எனக்கு நான் மட்டுமே துணையாக அழுவேன்.
நன்றாக அழுதால் மனம் இலேசாகும். ஆனால் தனித்து அழுதல் பெரும் பாரத்தை என்மீது ஏற்றி வைத்திருப்பது போலக் கனக்கும். என் கண்ணீரைத் துடைக்கும் என் குழந்தையைக் கட்டியழுதது எல்லா இடர்களும் தொலைந்து மீண்டது போல மனம் அமைதியானது.
இதுவரையில் பிள்ளைகள் முன்னால் இப்படி அழுததில்லை. தனியே இருக்கும் அவர்களைக் கவலைப்படுத்தக் கூடாதென என்னுள்ளே எனக்காக தனித்திருந்து அழுது என்னைப் புதுப்பிப்பேன்.
ஆங்கிலப் பாடல்களை நிறுத்திவிட்டாள்.
இனி தமிழ்ப்பாட்டு கேட்பம் குண்டம்மா.
அனிருத்தின் பாடல்களைப் போட்டாள்.
இதாரெண்டு தெரியுமோ செல்லம் ?
ஓம் அனிருத்.
அவள் அனிருத் யார் என்பது தொடக்கம் அனிருத் இறுதியாய் இசையமைத்த பாடல்வரை சொன்னாள்.
எப்பிடியம்மா இதெல்லாம் தெரியும் ?
அம்மா நான் இப்ப பெரியாள்.
ஒருவர் இறுதியாக கேட்ட பாடலைச் சொன்னால் அதிலிருந்து அவரது அவர் புதிய இசையோடு எத்தனை தொடர்பாயிருக்கிறார் என்பதை அறிய முடியும். அவள் ஆங்கிலப் பாடல்களைத் தான் கேட்கிறாள் தமிழப்;பாடல்களில் பரீட்சயம் இல்லையென்ற என் நினைப்பில் அவள் மாற்றத்தைத் தந்தாள்.
அனிருத்துக்கும் ரஜனிகாந்திற்குமான உறவுவரை அவள் அறிந்து வைத்திருக்கிறாள்.
அடுத்து ஏ.ஆர்.ரகுமான் இசையை ஒலிக்கவிட்டாள். பிறகு ஜஸ்வர்யா ராய் எப்போதே அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டி பற்றிச் சொன்னாள். தென்னிந்திய இசையமைப்பாளர்கள் பாடல்கள் பலதையும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை அவள் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லப் புரிந்து கொண்டேன்.
அடுத்து ஒலித்த பாடல்....,
'ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிர் காலம்'
கஜினி படத்தில் அசினுக்காக சூரியா பாடுவதாக அமைந்த பாடல் இது. தாமரையக்காவின் வரிகளுக்கு ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்த இனிமையான பாடல்.
இந்தப் பாடலை எழுதியது கவிஞர் தாமரை. தாமரையக்கா பற்றி நான் சொல்லத் தொடங்க அவள் சினுங்கினாள்.
அம்மா எனக்குத் தெரியும் தாமரை யார் அவ எப்பிடி பாடல் எழுத வந்தா....அவள் தாமரையென்ற பெண் பாடலாசிரியை பற்றி அவர் எழுதிய பாடல்கள் பற்றிச் சொல்லத் தொடங்கினாள். என் குழந்தையின் ரசனைகள் பற்றிய பிரமிப்பை என்னால் எழுதத் தெரியில்லை.
'பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள் நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆளாக
என்னை மாற்றி கொண்டெனே' தானும் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தவள்.
திரும்ப அந்த வரிகளை என்னைக் கேட்கச் சொல்லி மறுபடியும் ஒலிக்க விட்டாள்.
இந்தப் பாட்டில கடைசி வரியை கேளுங்கோம்மா.
'உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டேனே' இது பிழைதானேம்மா...?
ஏன் ஒராளுக்காக ஒராள் தன்னை மாத்த வேணும். ஓவ்வொருவரும் தனக்கான தனித்துவத்தோடை ரசனைகளோடை இருக்கிறது தானே வாழ்க்கை. அப்பதானே ஒருவர் மகிழ்ச்சியா இருக்கேலும். இன்னொராளுக்காக தன்னை மாத்தி எப்பிடி அவர் தன்ரை வாழ்வை சந்தோசமா வாழ முடியும் ?
அவள் தனது கருத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பாடல்களைக் கேட்டு அதில் சொல்லப்படும் கருத்தையும் உள்வாங்கி அதுபற்றிய தனது கருத்தையும் சொல்லும் அளவுக்கு அவள் இசையோடு தன்னை வரித்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குள் பெருமிதமாகவே இருந்தது.
இவளது வயதில் எனக்குள் இப்படியெல்லாம் பாடல்களை அதன் கவிதையைப் பிரித்து ரசிக்கவோ பொய்யான கருத்துருவாக்கத்தை ஒரு பாடல் எப்படி விதைத்துச் செல்கிறது என்பதையோ யோசிக்கத் தெரியாது போயிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
காக்கா தலையில கக்கா இருந்தாலும் தமிழ்ப்படங்களில் காதல் வந்துவிடும் அதுதானே தமிழ்ப்படம் எனச் சொல்பவள் சில படங்களைத் தெரிவு செய்து பார்த்தாள். அந்தப் படங்கள் பற்றியெல்லாம் அவள் சொல்லச் சொல்ல எனது இருபதுகளுக்குள் போகத் தொடங்கினேன்.
இதுதான் தலைமுறை இடைவெளியோ ?
இருண்டு போன எனது காலங்களை அவளும் பார்த்திபனும் அடிக்கடி ஒளிநிரப்பி என்னை மீட்டெடுத்த கடவுளர்கள். காலம் முழுவதும் என் அருகிலேயே இருப்பார்களென்ற எனது எண்ணங்கள் இருண்டு போனது. காலம் எங்களை திசைக்கொன்றாய் அள்ளியெறிந்து விட்டது.
அவர்களது எதிர்காலம் கல்வி என காரணங்களை காலம் எழுதி வைத்துவிட்டுச் செல்கிறது.
காலம் 2020 பெப்ரவரி வவுனீத்தாவின் முதலாவது பாடல் வெளியாகி இரண்டாவது பாடல் ஏப்றல் மாதமும் வெளியாகியிருக்கிறது. பல்கலைக்கழக படிப்பு முடிந்த பிறகு இசையில போகலாமே யாரோ ஒருவர் சொன்னதை அவள் மறுத்தாள். படிச்சுக் கொண்டே என்னால பாட்டும் செய்யேலும். நான் செய்வன். அவள் ஒவ்வொரு விடயங்களையும் சொல்லும் போதும் அமைதியாக கேட்கத் தொடங்கியிருக்கிறேன்.
சீலைப்பிள்ளையள் வளக்கிறாவாம். அதுகளை ஒரு வேலையும் செய்ய விடுறேல்ல. லீவு நாளுகளில அதுகளை நல்லா நித்திரை கொள்ள விடுறது. அதுகளைச் சமைச்சுச் சாப்பிட விடாமல் வளந்ததுகளுக்கு சமைச்சு சாப்பாடு குடுத்துப் பிள்ளையளைக் குட்டிச்சுவராக்கிறாள்.
அதுகளைத் தனிய வெளியில போய்வர விடுறேல்ல. பள்ளிக்கூடத்துக்கும் வாசலில கொண்டு போய்விட்டு வாசலில போய் கூட்டி வாறது. நானெல்லாம் ஊரில எப்பிடி இருந்தனான். வயலுக்குப் போனனான் கிளிக்காவலிருந்தனான் எத்தினை செய்தனான்.
இப்படிப் பல வசைகள் வீட்டில் இருந்த ஒரு குடிகாரனின் வாயிலிலிருந்தும் அவனது உறவினர்கள் சிலரின் வாயிலிருந்தும் வந்த வார்த்தைகள் பல்லாயிரம்.
ஆப்ப வயல்காவலிருக்கேக்கயோ சாராயமும் குடிக்கப் பழக்கினவை..., கேட்கச் சொல்லும் வாய். ஆனால் அமைதியாக அதையும் சமாளிக்கப் பழகிக் கொண்டேன்.
பிள்ளைகள் தங்களுக்கான வயதை அடைந்ததும் தாங்களே தங்களுக்காக சமைக்கவும் சமூகத்தைச் சந்திக்கவும் போராடவும் இயல்பிலேயே துணிவார்கள். அம்மாவோடு வாழும் காலம் வரையும் அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தாலே அவர்கள் நிமிர்ந்து விடுவார்கள். எங்களையும் நிமிர்ந்து அதிசயிக்க வைப்பார்கள்.
பார்த்திபன் வவுனீத்தா என்னை நிமிர்த்திய நெம்புகள்.
என் தன்னம்பிக்கையையும் தட்டியெழுப்பிய தைரியத்தின் வேர்களாகி வளர்ந்து நிற்கிறார்கள். காலம் சுமைகளை அவர்கள் மீது ஏற்றி வைத்து தன் கால்களில் நெரித்துக் கொண்ட போதிலும் அதையும் தாண்டி தங்களை உயர்த்திய என் தோழனும் தோழியும். அவர்கள் இலக்கையடையும் வரை அம்மாவாக ஆதரவாக உதவியாக இருத்தலே இப்போதைய காலக்கடனும் கடமையும்.
01.05.2020
சாந்தி நேசக்கரம்

No comments:
Post a Comment