அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது.
திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார்.
அதனால் கோபமுற்ற அவரது கணவர் அவரை விசாரித்தார். அவர்கள் இருவரும் கோவிலுக்குப் போய் வந்ததை நானும் பார்த்தேன். அன்று கணவர் திருமதி.ஆனந்தா அவர்களை அடிக்கவில்லை. எதுவும் துன்புறுத்தவில்லை.
அன்று பிள்ளைகள் இருவரும் வீட்டில் இருக்கவில்லை. முற்கூட்டியே பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு திருமதி.ஆனந்தா பிள்ளைகளை அனுப்பி விட்டிருந்தார்.
சாட்சியாளர்
பா.மோ.ராணி.
பா.மோ.ராணியின் கையெழுடுத்தோடு எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அச் சாட்சிக் கடதாசியை நீதிபதியிடம் கையளித்தார்.
பா.மோ.ராணியின் சாட்சிக் கடிதத்தை என்னிடம் தந்தார் எனது சட்டத்தரணி.
எனது பதிலை நீதிபதி எதிர்பார்த்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். கோபம் தான் வந்தது. இரண்டு சட்டத்தரணிகள் நீதிபதி நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் அவமானத்தால் குறுகிப்போனேன்.
இல்லாத ஒரு காதலனை எனக்கு உருவாக்கி அவனும் அவனது காதலியும் என்னைப் பழிவாங்குவதை எப்படி மறுப்பதெனத் தெரியாமல் திண்டாடினேன்.
மறுபடியும் எனது சட்டத்தரணி கேட்ட போது அவன் சொன்னான்.
அவ எனது தோழி.
அவர்கள் குறிப்பிடும் பணத்தை அனுப்பி வைத்தால் அழகான வடிவமைப்பில் ஊடகர் அடையாள அட்டை கிடைக்கும்.
தோழியென்றால் ?
அவன் அதற்கான பதிலை சரியாகச் சொல்ல மறுத்து தன் கதையை வேறுபக்கம் திருப்பினான்.
பிள்ளைகளுக்கு இவளைப் பற்றித் தெரியாது இவள் ஒரு நடத்தை கெட்டவள். பிள்ளைகளை கூப்பிடுங்கோ நீதிமன்றம். நான் இவளது உண்மையான குணத்தை பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும்.
இவளுக்கு கனக்க கள்ளக்காதல்கள் இருக்கு. எனக்குத் தெரியும். நான் ஒரு ஊடகவியலாளன்.
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தி பெற்ற ஊடகவியலாளர் அடையாள அட்டையை எடுத்து மேசையில் வைத்தான்.
ஐநா சபைக்கு போயிருந்த பலர் அந்த ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் கொழுவியிருந்ததை கண்டிருக்கிறேன்.
வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண மக்கள் அந்த அடையாள அட்டையை பெரும் தகுதியாகவும் அதை கொழுவியிருப்போரை தகுதி மிக்கவர்களாகவும் நினைப்பார்கள்.
யூரோப்பியன் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்தில் யாரும் ஊடகவியலாளர் என விண்ணப்ப படிவத்தை நிரப்பியனுப்பினால் அவர்களுக்கு அந்த நிறுவனம் அடையாள அட்டையை வழங்கும்.
ஊடகரா ? என்பதற்கான எந்த தகுதியையும் அந்த நிறுவனம் ஆராய்ந்ததை நான் அறியவில்லை.
அவன் எடுத்துக் காட்டிய அந்த அடையாள அட்டையை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.
நான் 8மணிநேரம் வேலை செய்கிறேன்.
6மணித்தியாலம் தான் வேலை செய்யிறாள். என்ர உழைப்பில தான் வாழ்ந்து கொண்டு எனக்கு பிரச்சனை தாறாள்.
நீதிபதி தனது குரலை உயர்த்தினார். பிள்ளைகளுக்கும் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலை தாருங்கள்.
பா.மோ.ராணி எனது தோழி. அது எனது தனிப்பட்ட விடயம். அதைத்தவிர அவன் எதையும் சொல்லவில்லை.
பா.மோ.ராணியும் அவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஒரே ஒரே அறையில் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பயணங்கள் போவார்கள்.
21.12.2015 அன்று 130கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தன் காதலியை அவரது வீட்டுக்குப் போய் கூட்டி வந்திருந்தார்.
எனக்கு காதலர்கள் யாரும் இல்லை. பிள்ளைகள் இருவரும் மட்டுமே என் உறவுகள். நான் எனது காதலருடன் மலைக்கோட்டை தேவாலயம் போய் வந்தேன் என்பது பொய்.
24.12.2015 அன்று மகன் வீட்டில் இருந்தான். மகள் வருடாவருடம் நத்தார் தினத்தை முன்னிட்டு அவளது தோழியின் வீட்டுக்குச் செல்வது வளமை. அன்று அவளை நானே கொண்டு போய் விட்டுவிட்டு வந்தேன்.
அன்று இரவு ஏழுமணி போல் குசினியில் மகனுக்காக சமைத்துக் கொண்டிருந்தேன். தனியே நிற்கும் போது வாசல் கதவைப் பூட்டிவிட்டு நிற்பேன். பிள்ளைகள் நின்றால் கதவைப் பூட்டுவதில்லை. அன்று நான் வாசல் கதவைப் பூட்டவில்லை.
அவன் என்றும் போல அன்றும் குடித்திருந்தான். திடீரென எனது வாசல் கதவு அடித்து சத்தம் கேட்டது. அதற்கிடையில் அவன் குசினிக்குள் வந்திருந்தான். பின்னால் அவரது காதலியும் நின்றிருந்தார்.
குசினிக்கதவை அவன் அடித்த சத்தம் என்னால் நிதானிக்க முதல் என்மீது அடிவிழுந்தது.
நான் அவனைத் திருப்பியடித்தேன்.
விடு வா வா... என அவனை அவனது காதலா அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போனாள்.
உவளை இண்டைக்கு கொல்லாமல் விடுறேல்ல. அவன் காதலியின் சமாதானத்தைக் கேட்காமல் என்னைத் தாக்க எத்தனித்துக் கொண்டு இருந்தான்.
மகன் பயந்து போய் நின்றான். ஓண்டுமில்லை செல்லம் நீங்க போய் படியுங்கோ.
நீங்களும் வாங்கோ மேல.
மகன் என்னையும் அழைத்தான். மகனோடு நானும் மேலே போய் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தோம்.
சற்று நேரத்தில் அவரது காதலியின் அழுகைச் சத்தம் கேட்டது. எனது பெயரைச் சொல்லி அவள் அழைத்தான். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டது. நான் கீழிறங்கிப் போனேன்.
அவனது வீட்டுக் கதவின் மேற்பகுதியின் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அவனது கை காயமாகியிருந்தது. தானே தனது வீட்டு வாசல் கதவின் கண்ணாடியை உடைத்ததில் அக்காயம் ஏற்பட்டிருந்தது. அவன் என்னைத் தூசண வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் என்னைத் தாக்க உன்னிக் கொண்டு வந்தான். காவல்துறையை அழைத்து நானே தன்னைக் காயப்படுத்தியதாக சொல்லப் போவதாகக் கத்தினான். அவனது காதலி அவனது கையிலிருந்து இரத்தம் வழிவதை பார்த்து அழுது கொண்டிருந்தாள். அவளது அழுகை பாவமாயிருந்தது.
அவனது காயத்திற்கு துணியொன்றை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
மருத்துவமனை அழைத்துப் போகிறேன் என அவனது காதலியிடம் கேட்டேன். அவன் வருமறுத்தான். என்னை கொன்று விடுகிறேன் என சத்தமிட்டான். அதற்கு மேல் நான் அவ்விடத்தைவிட்டு விலகி மேலேயுள்ள எனது வீட்டுக்குள் போயிருந்தேன்.
யாரின் முன்னாலும் அழாமல் இருக்கும் என்னால் அந்த நேரம் வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன்.
சட்டத்தரணி என் கைகளைப் பிடித்தார். அழாதை. அதுதான் முதல்முதலாக அன்னியர்கள் முன்னால் நான் அழுத முதல் கண்ணீர்.
வீட்டுவேலைகள் செய்வது பிள்ளைகளை பராமரிப்பது எல்லாம் நீங்களா வீட்டில் செய்வீர்கள் ?
நீதிபதி அவனைக் கேட்டார்.
அது என்ர வேலையில்லையே அது அவவின்ன கடமைதானே? நளினமாகச் சிரித்தான் அவன்.
அதுக்கு நீ சம்பளம் எவ்வளவு மாதம் குடுக்கின்றாய் ? எனது சட்டத்தரணி குறுக்கிட்டார்.
வீட்டுவேலைக்கு என்ன சம்பளம் ? எதிர்வாதி சட்டத்தரணி அவனை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
உனது பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள் எத்தனையாம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரியுமா ?
எனது சட்டத்தரணி கேள்விகளைக் கேட்க அவன் பதில் சொல்ல முடியாது திணறத் தொடங்கினான்.
எனது சட்டத்தரணி தன்னை சந்திக்க வருமாறு அடுத்து வந்த திங்கட்கிழமை நேரமொன்றைக் குறித்துத் தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு போனார்.
3வது மாடியிலிருந்து கீழிறங்கும் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன். அங்கங்கே படிகளில் பலர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். எல்லா முகங்களும் என்னையே பார்ப்பது போல அவமானத்தின் மனவுளைவை மென்றபடி இறங்கி வாசலுக்கு வந்தேன்.
வெளிச்செல்லும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. கண்ணாடி அறையில் இருந்த பாதுகாப்பு காவல்துறையிருக்கு சைகையால் கதவு திறக்குமாறு கேட்ட போது அவர்கள் கதவைத் திறக்கும் தானியங்கி பட்டினை அழுத்தினார்கள்.
வெளியில் வந்தேன். அவனும் அவனது சட்டத்தரணியும் காருக்குள்ளிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள். எனது காருக்குள் ஏறியிருந்து அவர்களைப் பார்த்தேன் அவர்கள் என்னைப் பார்ப்பது தெரிந்தது.
வீட்டுக்கு போகப் பிடிக்கவில்லை. 5கிலோமீற்றர் தொலைவில் இருந்த மக்டொனால்ஸ் ஒன்றுக்குப் போனேன். கோப்பியொன்றை வாங்கிக் கொண்டு போய் இருவர் அமரும் இடத்தில் போயிருந்தேன். காலையுணவு நிறைவுக்கு வர 10 நிமிடங்கள் இருந்தது.
எனக்கு காதலன் ஒருத்தன் இருக்கெண்டு சாட்சிக் கடிதம் குடுத்திருக்கிறாயெல்லோ ? அவன் யாரெண்டு சொல்றியா ?
உன்னோடை எனக்கு கதைக்க விருப்பமில்லை வையடி ரெலிபோனை. அவள் எனது அழைப்பை நிராகரித்துவிட்டாள்.
மீண்டும் அழைத்தேன். அவள் என் அழைப்பை ஏற்கவில்லை. இதுக்காக ஒருநாள் நீ அழுவாய். என குறுஞ்செய்தியனுப்பினேன்.
காலம் என்னை ஏமாற்றிவிட்ட கோபம். ஒரு பொய்யை நீதிமன்றில் கொண்டு வந்து என்னை அவமதித்த அந்த அவமதிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வெப்பியாரம்.
என் மீதான பொய்யை நிரூபிக்க ஆதாரங்கள் தேடிக் கொண்டிருந்தேன். நித்திரையிலும் அந்த விசாரணைகள் பற்றிய கேள்விகளே என்னைத் துரத்திக் கொண்டிருந்தது.
ஒரு இரவு மகளோடு கதைத்துக் கொண்டிருந்த போது மலைக்கோட்டை தேவாலயம் மற்றும் நிலக்கீழ் கண்காட்சிசாலை பற்றிய கதை வந்தது.
2015ம் ஆண்டு கோடை காலத்தில் மகள் நிலக்கீழ் கண்காட்சி சாலையில் பகுதிநேர வழிகாட்டியாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
அப்போது தான் எனக்கும் பொறிதட்டியது. மலைக்கோட்டை தேவாயலயமும் நிலக்கீழ் அருங்காட்சியகமும் மார்ச்மாதம் இரண்டாம் வாரம் தொடக்கம் நவம்பர் மாதம் முதல்வாரம் வரையுமே திறக்கப்படும்.
நவம்பர் தொடக்கம் மார்ச்மாதம் வரை மலைக்கோட்டை தேவாலயத்துக்கோ நிலக்கீழ் அருங்காட்சியகத்திற்கோ போகமுடியாது. ஏனெனில் இவ்விரண்டு இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் மாதங்களை ஏற்கனவே பிள்ளை வேலை செய்யத் தொடங்கிய போதுதான் நானும் அறிந்திருந்தேன்.
எப்பிடியிருக்கிறாய் ? பிள்ளையள் படிப்பெல்லாம் என்னமாதிரி போகுது ? மகன் என்னமாதிரி பரீட்சையெல்லாம் எழுதினார் ? நல விசாரிப்புகள் முடிய நான் சந்திக்க விரும்பிய காரணத்தை வினவினார் சட்டத்தரணி.
இன்னும் இரண்டு தவணைகள் மட்டுமே தான் அவருக்கு நீதிமன்றம் கொடுக்கும் அதையும் தள்ளிப் போட முயன்றால் பிடியாணை மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நீதிமன்றம்.
உனக்கு யாரிலயும் காதல் இருக்கிறதோ அதெல்லாம் பிரச்சனையில்லை அது உனது சொந்த விருப்பம். அதையெல்லாம் சட்டம் கேள்வி கேட்காது. அது தனிமனித சுதந்திரம்.
என்னுடைய ஆலோசனை நீ இந்த நகரத்தைவிட்டு எங்காவது தூரப்போ. கொஞ்ச நாள் கரைச்சலா இருக்கும். புது இடம் புது மனிதர்கள் புது வாழ்வு உன்னைப் புதுப்பிக்கும். எனக்கும் ரெண்டு மகள்கள் இருக்கினம் எனக்கு அப்பாவாக பிள்ளைகளை எப்பிடி பாதிக்குமெண்டது தெரியும்.
என் அப்பாவின வயதில் இருந்த சட்டத்தரணி எனக்கான ஆலோசனைகளைக் கூறிக் கொண்டு வந்த இடையில் எனது விடயத்துக்கு வந்தேன்.
ஓம்.
போனமுறை என்னில அவரும் அவரது காதலியின்ரை சாட்சியோடை ஒரு குற்றச்சாட்டு வைச்சவை தானே. அதைப்பற்றி நீங்கள் அடுத்த விசாரணையில என்ன சொல்லப் போறீங்கள் ?
அவனும் அவனது காதலியும் வாழும் வாழ்க்கை பற்றி அன்று தான் முதல் முதலாக ஒரு மூன்றாம் நபருக்குச் சொன்னேன்.
நீயென்ன ஒரு விசித்திரமான ஆளாயிருக்கிறாய் ? அவர் கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது.
சிலவேளை நினைக்கிறனான். நான் எவ்வளவு முட்டாளாயிருந்திருக்கிறேனெண்டு . எவ்வளவு பொய் எவ்வளவு நம்பிக்கைத் துரோகம். சொல்லிக் கொண்டிருந்தேன். கண்ணீர்ச் சுரப்பி ஊறுவதை உணர்கிறேன். அத்தோடு அந்த விடயங்களுக்கு முற்று வைத்துக் கொண்டேன்.
நட்போடு விடைதந்து வாசல் வரை வந்து என்னை வழியனுப்பிவிட்டார். அங்கிருந்து வெளியேறி வெளியில் வந்த போது எனக்குள்ளே வெற்றியின் சங்கீதம் முன்னாலிருந்து சைனீஸ் உணவகத்திலிருந்து ஒலித்த பாடலில் கேட்பது போலிருந்தது.
அன்றைக்கு அவை நான் காதலனோடை மலைக்கோட்டை தேவாலயம் போனதெண்டு சொன்ன பொய்யை நிரூபிக்க சாட்சியிருக்கு என்னட்டை.
சட்டத்தரணி முன்னால் இருந்த தண்ணீர் கிளாசில் தண்ணீரை ஊற்றினார்.
மலைக்கோட்டை தேவாலயம் நவம்பர் தொடக்கம் மார்ச் மாதம் வரை திறக்கிறேல்ல. அப்ப நான் எப்பிடி அந்த நாள் இரவு அங்கை போயிருப்பேன்.
யா யா யா யா நான் அதைப்பற்றி யோசிக்கேல்ல பாரன். சட்டத்தரணி எனது வாக்கு மூலத்தை தனது ஒலிவாங்கியில் பதிவு செய்து கொண்டார். நகரத்தின் விபரங்கள் தாங்கிய வெப்சைற்றில் போய் அந்தத் தரவுகளைப் பதிவெடுத்துக் கொண்டார்.
No comments:
Post a Comment