Sunday, April 19, 2020

உலையும் மனசோடு உலவும் இரவு.

உலையும் மனசோடு அலையும் இரவு.

- சாந்தி நேசக்கரம் -

குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன்.

றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய்   மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது.

றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது.

வெயில் ஏறாத காலைநேரம் மரங்களின் முகடுகளில் படிந்திருந்த மெல்லிய புகைமூட்டம். அன்றைய காலைப்பொழுதின் றைன்நதியோர அழகை ரசிக்கும் பொறுமையில்லை. ஆனால் கண்கள் தானே அந்த அழகோடு பயணித்துக் கொண்டிருந்தது.

கணணியோடு சிலர் , கைபேசிகளோடு பலர், கதைத்தபடி சிலர் , கண்களை மூடி நல்ல நித்திரையில் சிலர் என பலவகையான மனிதர்களோடு றெயின் வளைவுகளில் சரிந்தும் நேர்பாதையில் நிமிர்ந்தும் 360கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

000       000       000

காலை 8.52. அவளது நகரில் இறங்கினேன். அடுத்த தொடரூந்துக்காக மனிதர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு பலர் ஓடிக் கொண்டிருந்தார்கள். எனது பயணப்பொதியோடு நானும் பயணிகளோடு நடந்து தானியங்கிப் படிகளில் ஏறி கீழிறங்கினேன்.

பிரதான வாசலுக்கு வலதுபுறமாக அடையாளமிடப்பட்ட மலசலகூடத்திற்கு செல்லும் வழியூடாக ஆண்கள் பலரும் பெண்கள் பலரும் ஒரே நிறத்தில் உடையுடுத்தி கைகளில் இனிப்புகள் குடிவகைகளோடு மேலேறி வந்தார்கள்.

அவர்களில் ஒருவன் றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்திருந்தான். அவர்களில் சிலர் மலசலகூடப்படிகளில் இறங்கிப் போனார்கள்.

அந்தப்படிகளில் நானும் இறங்கிக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவனின் கை எனது பின்பகுதில் தட்டிவிட்டுப் போனதை உணர்ந்து திரும்பினேன்.

றோசா நிறத்தில் ரீசேட்டும் கறுப்பு நிறத்தில் காற்சட்டையும் அணிந்தவன் சில படிகள் கீழிறங்கிப் போய்க்கொண்டிருந்தான். தவறுதலாக அவன் கை என்னில் பட்டிருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

வெளியில் வந்து அவளின் மாணவர்கள் தங்கிடத்திற்கான தொடரூந்து நேரவிபரத்தை தொலைபேசியில் பார்த்தேன்.  அடுத்த தொடரூந்து வருவதற்கு இன்னும் 26நிமிடங்கள் இருந்தது.

இரு குழுக்களாக ஆண்களும் பெண்களும் பிரத்தியேக உடைகள் அணிந்து சத்தமாக கதைத்துச் சிரித்து கைகளில் குடிவகைகள் சிகரெட்களோடு நின்றவர்களுக்கு 10மீற்றர் அளவிலான தொலைவில் நானும் நின்று கொண்டிருந்தேன்.

பர்தா அணிந்த பெண்ணொருத்தி பிளாஸ்ரிக் கப்பொன்றை கையில் கொண்டு வந்து ஒவ்வொருவரிடமும்  'பசிக்கிறது காசு' என கை நீட்டினாள். யாரும் அவளுக்கு காசு போடவில்லை. அவள் ஏதோ பேசிக்கொண்டு கடந்து போனாள்.

நான் போக வேண்டிய இடத்தின் பெயரோடு தொடரூந்து வந்தது. பிரதான தொடரூந்து நிலையத்திலிருந்து 6வது தரிப்பிடத்தில் இறங்கினேன். அந்த வீதிக்கு எதிர்ப்புறம் கடந்து நூறுமீற்றர் தொலைவில் அவளது குடியிருப்பு இருந்தது.

4வது மாடியில் இருந்து கீழிறங்கி வந்து எனக்காக அவள் காத்திருந்தாள். தொடரூந்துக்குள்ளிருந்து அவளைக்கண்டு கொண்டேன்.

பாலத்தைக் கடந்து போகும் நடைபாதையில் நடந்து அடுத்த பக்கத்தில் அமைந்திருந்த மேட்டுவீதியில் ஏறி அவளது வீட்டை நோக்கி நடந்தேன். அவள் கைகாட்டிச் சிரித்தபடி நிற்பது தெரிந்தது.

அம்மா...அவள் ஓடிவந்து கட்டியணைத்தாள்.

 குண்டம்மா எப்பிடியிருக்கிறீங்கள் ?

ஓரு நாய்க்குட்டி போல கட்டி முத்தமிட்டாள். அம்மாவைக் காணும் பசுக்கன்று போல என்னை அழைந்தாள்.

எனது பயணப்பொதியை வாங்கிக் கொண்டாள். 4வது மாடியில் இருக்கும் அவளது அறைக்கும் செல்லும் தானியங்கியில் ஏறினோம். 

15சதுரமீற்றர் அறையில் அவளது உலகத்தை காலம் அமைத்திருந்தது.
சமையல் குளியல் படிப்பு உறக்கம் அனைத்துமே அந்த அறைக்குள்ளே தான். அவ்வப்போது அவளைப் பார்க்க வரும் போது நிலத்தில் சிறிய மெத்தை எனது படுக்கையாகும்.

துளசியிலைத் தேனீர் ஒன்றைப் போட்டு கையில் தந்தாள்.

 அம்மா எனக்கு தேனீர்...
எனக் கேட்பவள் இன்று எனக்குத் தேனீர் போட்டுத் தந்தாள்.

அம்மா இண்டைக்கு கடைக்குப் போவமோ ? கேட்டாள்.
ஓமம்மா போவம்.

நீண்டகாலம் அவளோடு கடைகளுக்குப் போகவில்லை. அது அவளுக்குப் பெரும் குறையாகவே இருந்து வந்தது. இன்றைய நாளை அவளோடு அவள் விரும்புவது போல கழிப்பது என்பதே எனது எண்ணமும்.

கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அவளோடு புறப்பட்டேன் கடைத்தெருக்களிற்கு.  விடிய விடிய மனிதர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் , நிறைந்த மனிதர்களாலும் தனது நிறத்தை மாற்றியிருந்த யேர்மனியின் பெருநகரங்களில் ஒன்று அது.

வீதிச்சமிஞ்ஞைகளால் அவள் என்னையும் அழைத்துக் கொண்டு பழக்கப்பட்ட வழிகாட்டிபோல நடந்து கொண்டிருந்தாள்.

உடுப்புக்கடைகளுக்குச் சென்றோம். அவள் தனக்கான சில ஆடைகளை வாங்கினாள். எடுக்க விரும்பிய ஆடைகளை நீண்ட வரிசையில் நின்று போட்டுப் பார்த்தாள். ஓவ்வொரு உடுப்பையும் எடுக்கும் போது என்னிடமும் அபிப்பிராயம் கேட்டாள்.

மதியம் 2மணிவரையும் கடைகளைச் சுற்றினோம்.

உணவகமொன்றில் போய் பீற்சா சாப்பிட்டு 3மணிவரை உணவகத்தில் இருந்தோம். கதைகள் நிறையச் சொன்னாள். தனது படிப்பு பற்றி தன் தோழிகள் பற்றி அவளது கதைகளால் நிறைந்தது பொழுது.

அவள் செய்து முடித்த 'ஆசியப்பெண்கள்' பற்றிய ஆய்வுக்கட்டுரைக்காக வாசித்த நூல்கள் ஆய்வுகள் அவற்றில் எழுதப்பட்ட விடயங்கள் பற்றி நிறையவே சொல்லிக் கொண்டிருந்தாள்.

எனது குழந்தை உலகத்தை எப்படியெல்லாம் கற்றுக் கொள்கிறாள் என்பது பெருமையாகவும் வியப்பாகவும் இருந்தது. ஐரோப்பிய இலக்கியத்தின் நான் அறியாத பல இலக்கியர்களின் பெயர்களைச் சொல்லி அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியெல்லாம் சொன்னாள்.

பிள்ளைகளோடு சேர்ந்துதான் யேர்மன் மொழியைக் கற்றேன். மேற்குலக இசை இசைக்கலைஞர்கள் பாடகர்களை அறிந்து கொண்டதும் , பிள்ளைகள் ஊடாகவே எனது உலகத்தை பரந்து விரியச் செய்த சிந்தனையின் ஊற்றாக பிள்ளைகளே நிக்கிறார்கள்.

தான் படிக்கும் ஐரோப்பிய இலக்கிய விஞ்ஞானம் பற்றியும் பெண்பிள்ளைகள் அந்தத் துறையில் அதிகம் இல்லாதது பற்றியெல்லாம் சொன்னாள்.

பல்கலைக்கழகம் போனால் மருத்துவம் தொழில்நுட்பம் போன்றவையே சிறந்த கல்வியென்ற மனநிலையில் இருந்து மாறுபட்ட என் மனநிலையே அவளதும். கல்வி வாழ்வதற்கே வாழ்க்கை கல்விக்கல்ல என்பதில் அவள் தெளிவாக இருந்தாள்.

கடைத்தெருக்களைத் தாண்டி தொடரூந்து நிலையம் சென்றோம். நாங்கள் பயணிக்கவிருந்த தொடரூந்து தாமதமாகியது.

தனது கையில் இருந்த பைகளை என்னிடம் தந்துவிட்டு மலசலகூடம் செல்லும்  படிகளில் இறங்கினாள். அவள் இறங்கிய படிகளின் மேற்பகுதியில் நின்றேன். அந்தப்படிகளில் பலர் மேலேறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

சிலநிமிடங்களில் மலசலகூடத்திலிருந்து மேலேறிக் கொண்டிருந்தவள்...திரும்பி படிகளில் தடதடவென ஓடினாள்.

ஏய்...! கோபமாய் சத்தமிட்டபடி படிகளில் கீழிறங்கி ஓடினாள்.

அவளது கோபம் ஓட்டம் என்னை ஒருகணம் திகைக்க வைத்தது.

அம்மா நில்லுங்கோ...

மேலே ஓடியவளைத் தொடர்ந்து நானும் ஓடினேன்.
அவள் ஆண்களின் மலசலகூடத் கதவடியில் ஒருவனை மறித்துக் கத்திக் கொண்டிருந்தாள்.

அங்கே நின்ற காவலாளர் அங்கே நின்றவனை கெட்ட வார்த்தைகளால் திட்டினான்.

என்னம்மா ? என்ன நடந்தது ?

என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அம்மா இவன் என்னை பின்பக்கதில தட்டீட்டு போனான்.

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டுமே என்காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கைகளில் இருந்த பைகள் கையைவிட்டு வீழந்ததையும் எனது ஞாபகத்திலிருந்து அழித்துப் போனது அந்தக்கணம்.

அந்த உயரமான மனிதன். றோஸ்கலர் ரீசேட் அணிந்தவன். அவன் தான் அவளைத் தொட்டான் என்பதை அவள் கைநீட்டிச் சொன்னாள்.

அவன் நெஞ்சில் என்கைகள் பதிந்தது. அவனைத்தள்ளி விட்டு எனது காலில் இருந்த காற்செருப்பைக் கழற்றி அவன் முகத்துக்கு நேரே ஓங்கினேன். காவலுக்கு நின்றவன் என் குறுக்கே நின்று தடுத்தான்.

அம்மா அடிக்காதையுங்கோ...

அவனுக்கு அடிக்க வேண்டாமென அவள் சத்தமிட்டாள். காவலுக்கு நின்றவன் காவல்துறையை அழைக்கிறேன் அவனை அடிக்காதே என வேண்டிக் கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு முதல் கடைசியாக நண்பர்களுடன் கழிக்கும் பொழுதை ஆணும் பெண்ணும் அவர்களது சகாக்களோடு ஒன்றாக நகரங்களைச் சுற்றிக் குடித்து அனுபவிப்பார்கள். அதுவொரு கலாசரமாக யேர்மனியர்களிடம் வளமையாக இருந்து வருவதை சில இடங்களில் கேட்டுள்ளேன்.

தனது திருமணத்திற்கு முதல் தனது நண்பர்களுடன் என் குழந்தையைச் சீண்டியவனும் என்பதை காவலுக்கு நின்றவன் சொன்னான்.

நீங்கள் விரும்பினா நான் காவல்துறையைக் கூப்பிடுறேன்.

பொறுமையா இரு...

அந்த வயதான மனிதனின் கண்கள் கெஞ்சின. பலர் அந்த நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

மன்னிச்சுக்கொள்ளு பேபி...மன்னிச்சுக் கொள்ளு...

அவன் என் குழந்தையிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டு மேலேறி ஓடினான். அவன் பின்னே செருப்போடு திரும்பிய என்னை அவள் மறித்தாள்.

விடுங்கோம்மா...அவனுக்கு கலியாணம் நடக்கப்போகுது...இவ்வளவு ஆக்களும் பாக்க அவனை நானும் நீங்களும் பேசினதே அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டான்...இதை அவன்ரை வாழ்க்கையில மறக்கமாட்டானம்மா....

என்னால் ஆறுதலடைய முடியவில்லை. அவனை அடியென்கிறது மனசு.

எனது கையிலிருந்து தவறி அங்கங்கே கிடந்த பைகளை அவள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துக் கொண்டு படிகளில் மேலேறினாள்.

இந்தத் தொல்லையள் இருக்கெண்டு தெரிஞ்சுதான் நான் நீளமான உடுப்புகள் போடுறதம்மா...இவங்களுக்கு இதைவிட இனியெப்பிடி உடுப்பு போடுறது...

சொல்லிக் கொண்டு நடந்தாள்.

அவள் தன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்தநாளை இவள் தனியே சந்தித்திருந்தால் அவளது மனவுளைச்சலை எப்படி இருந்திருக்குமென நான் யோசித்துக் கொண்டு நடந்தேன்.

நாங்கள் வெளியில் தொடரூந்துக்காக காத்து நின்றோம். தன் குழுவோடு நின்றவன் எங்களுக்கு கிட்ட வந்தான்.

மன்னிச்சுக்கொள்...மன்னிச்சுக்கொள்...என அவன் எங்களை வேண்டினான். தெரியாமல் செய்திட்டேன்.

அவனை தமிழில் உள்ள கெட்டவார்த்தைகளால் திட்டினேன். போ இதில நிக்காதை...அவனை அவள் டொச்சில் திட்டினாள். அவன் திரும்பிப் போய் தனது குழுவோடு சேர்ந்தான். எங்களை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.

காலையில் என் பின்புறத்தையும் தட்டிவிட்டுப் போனவன் இவனோ என நினைத்தேன்.

இப்பிடியும் இருக்கிறாங்களம்மா உலகத்தில...
அம்மாவுக்கு இப்பிடியான அனுபவங்கள் நிறைய இருக்கம்மா...
பெண்கள் ஒவ்வொருத்தரும் இப்பிடியான சனியனுகளைத் தாண்டித்தானம்மா போறம்...
இதை இதிலையே மறந்திடம்மா...
இதுவும் உங்கடை வாழ்க்கையில ஒரு கடந்து போன அனுபவமாக போகட்டும்.

நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

எனது குழந்தையைத் தொட்டவனை தண்டிக்க வேண்டுமென்றதே எனது மனம் முழுவதுமான ஒலியாகவிருந்தது. கோபம் அவன் மீது எனது எதிர்ப்பைக் காட்டிவிடும் வேகமே என்னிடமிருந்தது.

000       000           000
இரவு...,

மண்ணிற கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்தபடி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். தலைக்குப் பக்கத்தில் கடைசியாக அவள் வாசித்த கனடாவில் வாழும் இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த மகள் ரூபியின் கவிதைப்புத்தகம் நேர்த்தியாய் வைக்கப்பட்டிருந்தது.

இளம் கவிஞையான ரூபியின் ஆங்கிலக் கவிதைப் புத்தகத்தில் தனக்குப் பிடித்த கவிதைகளை எனக்கு மொழிபெயர்த்துத் தந்திருந்தாள்.என் குழந்தையைவிட சில வயதுகளால் மூத்த ரூபி தனது பிறப்பின் வேரிலிருந்து எழுதிய பெண் அடக்குமுறைகள் தொடக்கம் அவளது வாழ்வனுபங்கள் பற்றி அவள் சொன்ன கதைகள் அனைத்தையும் அவள் எனக்கு உணர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.

நித்திரை வரவில்லை. ஓவ்வொரு பக்கமாய் திரும்பித் திரும்பி உருண்டு கொண்டிருந்தேன். நேரம் இரவு 2.42.

என்ன குண்டம்மா நித்திரை கொள்ளேல்லயோ ?

நெஞ்சில் அணைத்து வைத்திருந்த கரடி பொம்மையை கன்னத்தில் வைத்துக் கேட்டாள்.

இல்லைச் செல்லம்...இப்பதான் முளிச்சனான். அவளுக்குப் பொய் சொன்னேன்.

பிரதான மின்விளக்கைப் போட்டுவிட்டு குளியலறைக்குப் போய் வந்து மீண்டும் மின்விளக்கை அணைத்தாள்.

அவளுக்கு 20வயது. என்னை விடவும் உயரத்தால் மட்டுமன்றி எண்ணங்களாலும் உயர்ந்து என்னை நிமிர்ந்து பார்க்க வைக்கிறாள். எனக்குள் ஒரு கோழிக்குஞ்சாகவே அவள் இப்போதும் காக்கப்படும் குழந்தையாகவே தெரிகிறாள்.

போனவருடம் என்கையிலிருந்து பிரிந்து பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பித்தவள். சமையல் சாப்பாடு படிப்பு படுக்கை பொழுது போக்கு யாவையும் தனித்து ஒரு அறையில் வாழப்பழகியிருக்கிறாள்.

அம்மா நான் சின்னனில்லை... எனக்கு இப்ப இருபது வயது.

அடிக்கடி ஞாபகப்படுத்துவது போல சொல்வாள்.

அம்மா..., இது அவள்...,

என்னம்மா...பகல் நடந்ததையே நினைச்சுக் கொண்டிருக்கிறீங்களோ ?

இல்லைக்குட்டி அதுதானே அம்மா அவனுக்கு செருப்பாலை அடிக்கப் போனனான்.

அவள் சிரித்தாள்.

அதுதானே என்ர குண்டம்மா துணிச்சல் சண்டைக்காரியெல்லோ....

அவள் மீண்டும் தூங்கிவிட்டாள்.


மேசையில் மெல்லிய ஒளியைப் பரப்பியபடியிருந்த மின்விளக்கின் வெளிச்சமும் எனது கைபேசியின் வெளிச்சமும் தவிர அவளது அறை அமைதியாக இருந்தது.

அமைதியைத் தொலைத்த கடலின் அலைகள் கரைகளில் மோதிச் செல்லும் ஓசைபோல எனக்குள் நேற்றைய மதியப்பொழுது தான் ஓடிக்கொண்டேயிருந்தது.

மனவுளைச்சலைத் தந்த அந்த நிகழ்விலிருந்து என்னால் விடுபட முடியாதிருந்தது.

பெண்ணின் அனுமதியின்றி அவளை ஒருவர் தீண்டுவது என்பது எந்தளவு மனவுளைச்சலைத் தருமென்பதை பலதரம் உணர்ந்தவள் நான். நித்திரை வர மறுத்தது. கைபேசியில் காலச்சுவடு இணைய சஞ்சிகையை வாசிக்கத் தொடங்கினேன்.

சாந்தி நேசக்கரம்
ஆவணி 2018

(இச்சிறுகதை 2008 ஆவணி மாதம் எழுதினேன்.  தாயகத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழில் வெளியாகியது.
ஜீவநதி வெளியீட்டாளர் பரணி அவர்களுக்கும் அவரது துணைவிக்கும் மனம் நிறைந்த நன்றிகள். ஒரு சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுதல் என்பது சிரமமான விடயம். ஆனால் தங்கள் காலப்பணியாக ஜீவநதியை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். சஞ்சிகையோடு நின்றுவிடாமல் ஆழுமைகளை வெளிக்கொணர்தல் தொடக்கம் சிறந்த பதிப்பாளர்களாகவும் இருந்துவரும் பரணியின் முயற்சியில் நூற்றையும் தாண்டிய நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து வெளியாகிக் கொண்டுமிருக்கின்றன.)

No comments: