Sunday, April 5, 2020

காலக்கரைகளில் சந்தித்தவள்.

(இக்கதை எழுதப்பட்டு 9வருடங்கள். அப்போது இணையத்திலும் பதிவிட்டிருந்தேன். இன்று பழைய காட்டிஸ்க் ஒன்றை எடுத்து கணணியோடு மினக்கெட்ட போது மீண்டும். கிடைத்த கதை.)


அவளுக்கு வயது 28. 3குழந்தைகள். மூத்த குழந்தைக்கு வயது 11. கடைசிக் குழந்தைக்கு வயது 5. அவளைவிடவும் 12வயதால் மூத்த அவளது கணவன் தடுப்பில் இருக்கிறான். பிள்ளைகளை உறவினருடன் விட்டுவிட்டு…., வவுனியாவில் பெண்கள் சிலருக்காக ஒரு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அவள் வேலையில் இணைத்துக் கொள்ளப்பட்டாள். 

வாரத்தில் 2நாட்கள் வேலை வழங்கிய இடத்திலிருந்து விடுமுறை அவளுக்கு. அந்த நாட்களில் ஊருக்குப் பிள்ளைகளைப் பார்க்கப் போய்விடுவதாகப் போய்விடுவாள். திங்கள் காலை அல்லது ஞாயிறு இரவு திரும்பும் போது தனது வளவு மரக்கறிகள் என பெரிய சுமையோடு திரும்புவாள்.

திங்கள் முதல் வெள்ளி வரை வேலையில் இருப்பாள் பொழுது இருண்டால் அவளைத் தேடி தொலைபேசியழைப்புகளாகவே இருக்கும். மணிக்கணக்காய் அவள் பேசிக் கொண்டிருப்பாள். தொலைபேசிக்காக போகும் பணத்தை தனது நண்பர்கள் தருவதாகச் சொல்லுவாள். 

அவளது தொடர்புகள் அவளது இப்போதைய நிலமைகள் அவளது எதிர்காலத்தையும் அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் சிதைத்துவிடுமென அஞ்சிய அவளை வேலைக்கு எடுத்த பெண் ஒருநாள் தொடர்பு கொண்டார். 

தடுப்பில் இருக்கும் அவளது கணவன் விடுதலையாகும் நாள் நிச்சயமாகியும் அவனைச் சென்று பார்க்கவோ பொறுப்பேற்க கையெழுத்திடவோ மறுப்பதாயும் சொன்னார்கள். 

அவள் தனது கணவனைக் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்காவிடில் அவன் மேலும் சிலகாலம் தடுப்பில் இருக்கும் அபாயம் உள்ளதாகவும் சொன்னார்கள். அவளுடன் பேசி அவளது கணவனைச் சந்திக்க வைக்க வேண்டுமென்ற முயற்சியில் சிலர் பேசிப்பார்த்து நம்பிக்கை இழந்து போன நேரம் என்னிடம் வந்தது அவளது தொலைபேசியிலக்கமும் அவளதும் அவளது பிள்ளைகளினது நிழற்படங்களும்.

அலங்காரம் செய்தால் அவள் அசினுக்கு நிகர்தான். அவளது படத்தைப் பார்த்த பின்னர் அவளுடன் பேச முயற்சித்து தொலைபேசியில் அழைத்தேன்.
எப்பிடியக்கா இருக்கிறியள் ?
சாப்பிட்டியளோ ?

என்னை ஏற்கனவே அறிந்தவள் போல் சிரித்துக் கதைத்தாள்.
அவளைப்பற்றி ஏற்கனவே எனக்குச் சொல்லப்பட்ட கதைகளுக்கு மாறாக அவளது இயல்பான பேச்சு சிரிப்பு சில நிமிடங்கள் அவள் பற்றிய அனுமானத்தையெல்லாம் உடைத்துவிட்டது. 

சற்று நேர உரையாடலின் பின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். ஒருவாரம் அவளோடு தினமும் சில நிமிடங்கள் பேசுவேன். அவளுக்குள் உள்ள பிரச்சனை என்ன அவளது பிள்ளைகள் மீதான அவளது அக்கறை கணவன் மீதான கோபம் யாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொள்வாள். மெல்ல மெல்ல அவள் மனசுக்குள் புகுந்த நிம்மதியை அவள் உரையாடுகிற தருணங்களில் உணர முடிந்தது. 

நான் பேசத் தொடங்கிய ஒருவாரத்தில் அவளுக்குள்ளான மாற்றங்களை அவள் அறியாமல் அறிக்கைகளாக எடுத்துக் கொண்டேன். ஒரு வாரம் முடிந்து ஒரு திங்கட்கிழமை அவள் கணவனை வெறுக்கும் அளவுக்கு அவன் செய்த குற்றம் என்ன என்பதனை அவளே சொன்னாள்.
000 000 000
நான் நல்ல வசதியான குடும்பமக்கா…நான் ஒரு பிள்ளைதான்….லவ் பண்ணித்தான் என்னைச் செய்தவர்….ஆனால் ஒரே சந்தேகமக்கா….நான் என்ரை சின்னப்பிள்ளையளோடை அந்தரிக்க எனக்குத் தெரியாம ஆமீட்டைச் சரணடைஞ்சவர்….நானும் இந்தப்பிள்ளையளும் எத்தினை கரைச்சல்பட்டு முகாமுக்குப் போனனாங்களக்கா….அன்றுதான் அவள் வாய்திறந்து அழுதாள். 

 1990ம் ஆண்டு ஆறுமாதம் இயக்கத்திலிருந்து விலகியிருந்தவன் கடைசிநேர களத்திற்கு போயிருந்தான்.

காயமடைந்து புதுமாத்தளன் பகுதியில் இராணுவம் புகுந்த நேரம் சரணடைந்து தடுப்பிற்குப் போயிருந்தான். அன்றைய நிலமையில் அவளையோ பிள்ளைகளையோ நினைக்கும் நிலமையில் இருந்தானா இல்லையா என்பதையெல்லாம் அவள் ஆராயவில்லை. தன்னையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு ஆமியிடம் போய்விட்டான் என்று மட்டும் குற்றம் வைத்தாள். 
நெழுக்குளத்தில இருக்கிறாரெண்டு அறிஞ்சு தேடிப்போனனக்கா…..கிடந்த நகையளைக் கொஞ்சம் கொஞ்சமா வித்துத்தானக்கா ஒவ்வொரு முறையும் அவரைப்பாக்கப் போறனான். ஒவ்வோருக்காப் போகேக்கயும் 2ஆயிரம் ரூபாவுக்கு குறையாமல் காசும் சாமானுகளும் வாங்கிக்குடுத்துத்தான் பாக்கிறனான்…..

அப்பெயக்கா அங்கை இவரோடையிருந்த இன்னொரு பொடியனும் நான் போகேக்க இவரோடை வந்திருக்கிறது….அதுக்கு ஒருத்தருமில்லையாம்….அப்ப இவருக்குக் குடுக்கிறதில அந்தப் பொடியனுக்கும் குடுத்திட்டு ரண்டுபேரையும் பாத்திட்டு வருவன். 

தன்ரை ரெலிபோனில காசில்லாட்டி அந்தப்பொடியன்ரை ரெலிபோனிலை எடுத்துக் கதைப்பாரக்கா….அந்தப்பொடியனும் என்னோடை ரெலிபோனில கதைப்பான்…..
கடவுளாணையக்கா அந்தப்பொடியனுக்கும் எனக்கும் எந்தவிதமான தப்பான பழக்கமும் இல்லை. அவன் ஏதும் நினைச்சுத் துலைச்சானோ என்னவோ….என்னிட்டை ஒரு கெட்ட எண்ணமும் இருக்கேல்ல…..

பேந்து பேந்து பாக்கப்போற நேரங்களில இவர் வாறேல்ல….நான் மணித்தியாலக்கணக்கா காவல் நிக்கிறனான்….. ஆரையன் கூப்பிட்டுச் சொன்னால்தான் வருவார்…. பெரிசா கதைக்கார் தேவையில்லாத கதையெல்லாம் கதைப்பாரக்கா…… அப்பவும் நான் அவரையொண்டும் வெறுக்கேல்லயக்கா…. 

உள்ளுக்கையுள்ள கவலையில என்னில சினக்குதாக்குமெண்டு நினைச்சுப் பொறுத்தனான். மற்றாக்களெல்லாம் மனிசிமார் வந்து பாத்திட்டுப் போகேக்க அழுதழுதுதான் விடுவாங்கள் ஆயிரம் கவனம் சொல்லுவாங்களக்கா…ஆனா இவர் அப்பிடியில்லையக்கா…..

ஒருக்கா உப்பிடித்தான்…. என்னெடா பிரச்சனையெண்டா அவரோடையிருக்கிற மற்றப்பொடியனில எனக்கென்ன காதலெண்டு கேட்டாரக்கா….இதென்னக்கா அவன் உள்ளையிருக்கிறான் நான் வெளியில இருக்கிறன் இதென்னக்கா ரெலிபோனுக்காலை அவனோடை நானென்ன படு…..னோ…..அவள் பச்சையாய் அவனைத் திட்டியழுதாள். 

அதுக்குப் பிறகும் என்னேயிறதெண்டு போறனான் பாக்க அந்தப்பொடியன் வாறேல்ல தனிய வருவார் சமானுகளை வேண்டீட்டு ஏதேன் லூசுக்கதை கதைச்சிட்டுப் போவார். அவற்றை தமக்கையாக்களும் என்னைப்பற்றி தேவையில்லாமல் போய் அள்ளி வைக்கிறவை…அதுகளையும் கேட்டுப்போட்டு ஒரே மாப்பிளைக் கதைதானக்கா…..அவனோடை படுக்கிறியோ உவனோடை படுக்கிறியோண்டு ஒரே அரியண்டக்கதைதானக்கா……

ஒருக்கால் சொன்னார் அவன் கெதியில வெளிய போப்போறானாம்….அவன் வந்தா உனக்குக் கொண்டாட்டம் தான…எண்டார். ஒருக்கா ரண்டுதரம் சொன்னாப்பறவாயில்லையக்கா ஒரே அவனோடை அவனோடையெண்டா எப்பிடியக்கா இருக்கும்….?

எனக்கு வந்த கோவத்துக்கு நானும் பேசீட்டுப் போறதுமில்லை பாக்கிறதுமில்லை….விட்டிட்டன்….
000 000 000
உப்பிடித்தான் உந்த லூசைப்பாக்கப்போகேக்க லொஜ் வழிய நிக்க வேண்டி வந்திடுறது…..அப்பிடியொருக்கா ஒருத்தரைச் சந்திச்சனான். அவருக்கும் 3பிள்ளைகள் மனிசி முள்ளிவாய்க்காலில செத்திட்டுதாம்….என்ரை பிள்ளையளின்ரை வயதுதான் அவற்றை பிள்ளையளுக்கும். நானும் கிடந்ததுகளை வித்து முடிச்சு தின்னவும் நிலமை திண்டாட்டமாப் போன நேரம் அந்தாளைச் சந்திச்சன். எங்கினயோ உத்தியோகமாமெண்டு சொன்னார்…..ரெலிபோன் நம்பரையும் குடுத்திட்டன். அவர் ரெலிபோனெடுப்பர் கதைக்கிறவர். 

ஒருக்கால் தன்ரை வீட்டை யாழ்ப்பாணத்துக்கு வரச்சொன்னார். எனக்கு வேலையுமில்லை காசுமில்லை. பிள்ளையளை பக்கத்து வீட்டில விட்டிட்டு வேலைதேடிப் போறனெண்டு சொல்லீட்டு யாழ்ப்பாணம் போய் அவற்றை வீட்டை போனன். அவற்றை அம்மா நல்ல மனிசி. நல்லா கதைச்சா 2நாள் அங்கை அவரோடை தான் தங்கினனான். போகேக்க காசும் தந்து பிள்ளையளுக்கும் சாமானுகளும் வேண்டித் தந்து பஸ் ஏத்தி விட்டார். 

அதுக்குப் பிறகும் ஒருக்கா போனனான். அவற்றை அம்மா சொல்றா அவரை என்னைக் கலியாணங்கட்டட்டாம். அவருக்கும் விரும்பமாம்.பிள்ளையளுக்கு ஒரு அம்மா வேணுமெண்டதில அவர் தெளிவா இருக்கிறராம்……ஆனால் என்ரை பிள்ளையளை எங்கினையும் ஒரு இல்லத்தில விட்டிட்டு வரச்சொல்லிக் கேக்கினம்..

இந்த இடைவெளியுக்கை தான் இந்த அக்காவையிட்டை உதவி கேட்டுப் போக இந்தப் பொம்பிளைப் பிள்ளையளுக்கு உதவிக்கு ஆள் தேடினமெண்டு இந்த வேலையைச் செய்யக் கேட்டினம். இந்தச் சம்பளம் பத்தாதக்கா.எனக்கு ஊருக்கை போய் அவற்றையாக்களுக்கு நடுவ இருக்கவும் விருப்பமில்லை.ஒரே குழப்பமாக் கிடக்கு….

அந்த யாழ்பாணத்து ஆள் ரெலிபோன் எடுக்கிறவர்….என்னாலை இப்ப குடிக்கத் துவங்கீட்டாராம்…. அழுகிறாரக்கா….. என்ரை பிள்ளையளை நீங்கள் பொறுப்பெடுத்தீங்களெண்டாலக்கா நான் அவரோடை போடுவன்….எத்தினை நாளைக்கு இப்பிடியே ஆம்பிளைத்துணையில்லாமல் இருக்கிறதக்கா…..

அவளது அந்த முடிவு அணுகுண்டைப் போட்டது போலையிருந்தது. வடிக்க முடியாத உணர்வுகள் கோபமாக , துயரமாக வெளிவந்தது. அவளை நாங்கள் ஒதுக்கி விட்டாலும் அவள் தனது புதிய துணையுடன் வாழப்போகிற முடிவைத் தெளிவாய்ச் சொன்னாள். அவசர முடிவுகள் சரியா இருக்காது….

3நாளைக்கு நான் எடுக்கமாட்டேன் கதைக்கமாட்டேன் நல்லா யோசியுங்கோ….சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன்.
000 000 000
அவளது குழந்தைகளைப் பொறுப்பேற்று எங்காவது ஒரு இல்லத்தில் விடுவோமோ என்று கூட நினைப்பு வந்தது. அவளது பெண் குழந்தை பருவமடையும் வயதில் இருக்கிறாள் என்பதனைக் கூட யோசிக்காமல் இவள் எடுத்திருக்கிற முடிவுக்கு நாங்களும் காரணமாவதா ? அவள் பற்றி பலருடன் பேசினேன். 

பிள்ளையளைப் பொறுப்பெடுத்திட்டு ஆளை விடுங்கோ….தன்ரை பிள்ளையளை விட்டிட்டுப் போப்போறெனெண்ட இவளெல்லாம் ஒரு தாயோ…. இவளை நாங்க வைச்சிருந்தா எங்களையும் விபச்சாரியாக்கீடுவாள் போல கிடக்கு…..

எல்லாரிடமுமிருந்தும் திட்டுத்தான் வந்தது. அவள் தற்போது உள்வாங்கப்பட்ட வேலையிலிருந்து அவளை வெளியேற்ற வேண்டுமெனவும் முடிவுகள் சொல்லப்பட்டது. அவளை இப்போதைக்கு வேலையை விட்டு நிறுத்த வேண்டாமென வேண்டிக் கொண்டேன். 

உங்கை வெளிநாட்டிலயிருக்கிற உங்களுக்கு இங்கத்தைய நிலமை விளங்காது ஆளைத் துரத்தப்போறம்….பொறுப்பான குரல் தனது முடிவைத் தெரிவித்தது. என்மீது விழுந்த திட்டுகளை வாங்கிக் கொண்டு 2வார அவகாசம் கேட்டேன். அதற்குள் அவளிடமிருந்து மாற்றமொன்றை ஏற்படுத்தலாமென்ற நம்பிக்கையோடு 3ம் நாள் தொடர்பு கொண்டேன்.

எதுவுமே நடவாதமாதிரி அக்கா அக்கா எனக்கதைத்தாள். அங்கிருக்கும் மற்றவர்கள் தன்னுடன் கோபிப்பதாகச் சொன்னாள். என்ரை நிலமையை ஒருதரும் புரிஞ்சு கொள்ளீனமில்லையக்கா….என்னை ஒரே சந்தேகிக்கிறவரை போய் பாக்கட்டாம் அவரோடை திரும்பி வாழட்டாமெண்டு சொல்லீனமக்கா என அழுதாள்.

இஞ்சை வாங்கோ…, உங்கடை பிள்ளையளுக்கு நீங்கள் அம்மா வேணுமெல்லோ….அதுகளை அனாதையில்லத்தில விட்டிட்டு இன்னொரு வீட்டுப்பிள்ளையளை எப்பிடிச் சரியா வளப்பீங்கள்…..? உங்கடை பிள்ளையள் கூட ஒரு நேரம் உங்களை வெறுத்திடுங்கள்… உங்களைச் சந்தேகப்பட்ட உங்கடை கணவர் மாதிரி அடுத்தவருமெண்டா என்ன செய்வீங்கள்…..?

 கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் வரை அவளுக்குப் பல அறிவுரைகள் சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தேன். 

ஏன்ரா இந்தத்தலைவலியை எடுத்தேனென்ற அளவுக்கு மாறி மாறி அழைப்புகள். அவளை வெளியேற்ற வேண்டுமென்பதே எல்லோரினதும் முடிவாக இருந்தது.
அடுத்த நாள் தொடர்பு கொண்டாள் அவள். உடுப்புத் தொழிற்சாலைக்கு ஆக்கள் தேவையாம் யாழ்ப்பாணத்திலயிருந்து அனுப்புகினமாம் நான் இந்த வேலையை விட்டிட்டுப் போப்போறென்….என்ரை பிள்ளையளை எடுக்கிறீங்களோ இல்லையோக்கா….? நான் வேலை செய்து காசனுப்புவன் என்ரை பிள்ளையளை பொறுப்பெடுங்கோ….

சரி உங்கடை அவரை வெளியில வாறதுக்கு கையெழுத்தையெண்டாலும் வைச்சு ஆளை எடுத்துவிடுங்கோவன்…..ஆள் வந்தாப்பிறகு முடிவெடுப்பம்….என்ற என்மீது சினந்தாள். 

எல்லாரும் அவற்றை சுகத்தைத்தான் பாக்கிறியள்….அவரோடை நான் திரும்பி வாழ்ந்தா ஒரு நாளைக்குச் சாவுதான்….என்றெல்லாம் புலம்பினாள். சரி ஆள் வரட்டுமன் யோசிப்பம்….தொடர் முயற்சி தொலைபேசி மூலம் அவளது கணவனை வெளியில் எடுப்பதற்கான கையெழுத்திட அவள் சம்மதம் பெற்றாயிற்று.

அவளது கணவனுடன் ஒரு ஒழுங்கிற்கு வந்தாச்சு. கணவன் மனைவி இருவரும் சந்திப்புக்கான ஏற்பாடும் ஒழுங்குபடுத்தப்பட்டது. அவனுக்கான பொருட்களும் வாங்கிக் கொடுத்து அவள் அனுப்பப்பட்டாள். நடந்து முடிந்து எதையும் பற்றி இருவரும் இருவருடனும் பேசக்கூடாதென்ற உத்தரவாதத்துடன் இருவரும் சந்திக்கும் ஏற்பாட்டில் சந்தித்தார்கள். 

பதிவுகள் கடிதங்கள் என சகலவிதமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு அவளது கணவன் விடுதலையானான். ஆரம்பத்தில் எரிந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்தவள் எல்லாவற்றையும் மறந்து அவனைப் பொறுப்பேற்று ஊருக்குக் கூட்டிப்போனாள்.
தற்போதைய வேலையிலிருந்து நீங்குவதாகக் கடிதம் எழுதியனுப்பிவிட்டு அழைத்தாள். 

அக்கா அவர் வேலையை விடச்சொல்றார்…எங்கடை காணியைத் துப்பரவாக்கி தோட்டம் செய்வமெண்டு சொல்றார்…..அவர் தோட்டத்தைப் பாக்க நான் உடுப்புத் தொழிற்சாலைக்குப் போகலாமெண்ருக்கிறன்…..ரெண்டு பேரும் சேந்து உழைச்சமெண்டா ஒரு 2வருசத்தில பழையபடி வந்திடுவம் என்றாள். 

சொந்தத் தொழில் செய்ய நாங்கள் ஒரு உதவியை ஒழுங்கு பண்ணித்தாறம் ஆடைத் தொழிற்சாலை வேண்டாமென்ற எனது வேண்டுகோளை அவள் ஏற்கவில்லை. 20ஆயிரம் சம்பளத்தை விட்டிட்டு ஒரு தொழில் ஆரம்பிச்சு எப்பக்கா முன்னேறுறது….

ஊரில போய் சாவுதானோவும் தெரியாது தச்சமயம் நான் செத்தால் சவப்பெட்டியொண்டு வாங்கிக் குடுங்கோக்கா….என கதையோடு கதையாய் சொன்னாள். 2வருச விரதம் முடிச்சு சேந்து வாழ்க்கையை ஆரம்பிக்கப்போறியள்….ஏன் சாவு சவப்பெட்டியெண்டு ஏன் அபசகுனமான கதையள்…..எல்லாத்தையும் மறந்திட்டு எதிர்காலத்தை யோசியுங்கோ….
000 000 000
தொடர்போடிருக்குமாறு தொலபேசி மின்னஞ்சல் யாவையும் அனுப்பிவிட்டேன். அவள் அவளது கணவனோடு வன்னிக்குப் போய் 2மாதங்கள் முடிந்துவிட்டது. அவள் எம்மிடம் தந்திருந்த தொலைபேசியிலக்கம் தொடர்பறுந்து போயிருக்கிறது…..வேலையை விட்டுப்போன இடத்திற்கும் இதுவரை எவ்வித தகவலையும் அவள் அனுப்பவில்லை. எல்லாத் தொடர்புகளையும் விட்டுவிட்டுப் போய்விட்டாள். 

அண்மையில் கிளிநொச்சி மக்கள் வங்கிக்குப் போய் வந்த ஒருவர் சொன்னார். அவளைக் கண்டதாக…..என்ன செய்கிறாள்…..எப்படியிருக்கிறாள் என்று விசாரித்தவருக்கு எதையும் சொல்ல விரும்பாதவள் போலச் சமாளித்தாளாம். சிரித்துச் சிரித்துக் கதைச்சாளாம்…..வேறு எதையும் சொல்லவில்லையாம்.

எங்காவது கணவனால் கொலை அல்லது பாலியல் தொழிலாளிகளாக்கப்பட்ட பெண்கள் என்ற செய்திகள் வரும்போது அவள் அடிக்கடி நினைவுகளுக்குள் வந்து போகிறாள். இயன்றவரை அவளைக் காக்கச் செய்த முயற்சி தோற்றதா இல்லையா ? எதையும் அறிய முடியாமல் அவள் எங்களுடனான தொடர்பினை அறுத்துவிட்டாள். 

 சாந்தி நேசக்கரம்
01.07.2011

No comments: