Sunday, July 28, 2019

பார்த்திபனின் வரவு - பாகம் 2

16. 07. 1996 காலை...,
எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை.

ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். 

வலிக்கிறதா?  வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். 
இல்லை...,
ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். 

அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன்.  துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில்  இருந்த இயந்திரத்தில் இருந்து எனது சுவாசத்துடிப்பு இரத்த அழுத்தம் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

தாதியொருத்தி அருகில் வந்தாள். 
இப்ப எப்படி இருக்கு?
தண்ணி வேணும்... கேட்டேன்.

ஏறிக்கொண்டிருந்த மருந்து முடியும் வரை தண்ணீர் தரமாட்டோமென்றாள். துவாயொன்னை நனைத்து முகத்தைத் துடைத்து விட்டு தலையைத் தடவிவிட்டு கொஞ்சம் பொறுத்திரு என்றாள்.

மருந்து ஏறி முடிய மதியச்சாப்பாட்டு நேரமாகிவிட்டது.  கட்டிலோடு உருட்டிப்போய் எனக்கான அறையில் விடப்பட்டேன்.  மருந்து கழற்றப்பட்ட பிறகும் மணிக்கட்டில் ஏற்றப்பட்டிருந்த உரசி கழற்றப்படவில்லை.  நெருப்பு பட்டது போல கை வலித்துக் கொண்டிருந்தது.

எனது அறைக்கு கொண்டு வந்த பிறகும் என் பார்த்திக்குட்டியை கொண்டு வர அது தரவில்லை. மற்றவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை தூக்கி வைத்திருந்தார்கள்.

அவசர அழைப்புமணியை அழுத்தினேன்.  சற்று நேரத்தில் தாதியர்கள் வந்தார்கள்.  ஏன் அழைத்தாயெனக் கேட்டார்கள். 

எனது குழந்தையை ஏன் கொண்டு வரவில்லை? 

உங்கள் மகன் குழந்தைகள் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலநாட்கள் அங்கே அவர் கண்காணிக்கப்படுவார்.  நாளைக்கு பிறகு தான் நீங்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பார்கள். நீங்கள் தனியாக குளியலறை போக வேண்டாம்.  எங்களை அழையுங்கள்.  சொன்னவர்கள் போய்விட்டார்கள்.

தந்த சாப்பாடு மறந்து போனது.  கண்ணீர் தான் வந்தது.  சாப்பாட்டை விலத்திவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். 

என் குழந்தைக்கு என்ன நடந்தது? குழந்தைகள் கிளினிக்கில் ஏன் வைத்திருக்கிறார்கள் ?

மனம் தன்பாட்டில் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கியது.  வீட்டில் சிகரெட் வாடை வந்தாலே கதவுகளைத் திறந்து விட்டு அந்தப்புகை கருவறையில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரக்கூடாதென்ற என் கவனம்.... வெளியே போகும் நேரத்தில் சிகரெட் பிடிக்கும் ஆட்களின் பகுதியை தவிர்த்து எத்தனை கவனமெல்லாம் பார்த்தேன்...?

வீட்டுக்கு தொலைபேசியெடுத்தேன். மறுமுனையில் கலோ... என்ற குரல் கேட்டதும் அழுகை தான் வந்தது. பிள்ளையை நான் பாக்க தரேல்ல. குழந்தைகள் கிளினிக்கில் வைச்சிருக்கினமாம்.

ஏதாவது வருத்தங்கள் இருக்கோண்டு பாக்கவாயிருக்கும்.  நான் பின்னேரம் வாறன்.  இன்னும் ஆட்களுக்கு பிள்ளை பிறந்தது சொல்லி முடியேல்ல. சரி நான் வாறன் வந்து  கதைக்கிறேன். தொலைபேசி தொடர்பு அறுபடுகிறது.

மனம் அமைதி இல்லாமல் போனது. அப்படியே உறங்கிப் போயிருந்தேன். ஆட்களின் சத்தம் கேட்டு விழித்த போது அங்கிருந்த தாயர்களின் உறவினர்கள் நின்றார்கள்.   

பின்னேரப் பரிசோதனை நேரம்.  இரத்த அழுத்தம் காச்சல் பரிசோதிககப்பட்டுக் கொண்டிருக்க  அறைக்கதவைத் தட்டிக் கொண்டு வந்த நபரைக் கண்டதும் குழந்தை பற்றிய விபரம் கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருப்பதாகச் சொன்னார்கள்.  இன்னும் ஒருமணிநேரம் கழித்து மருந்து மீண்டும் ஏற்றப்படுமென்றாள் தாதி.

என் குழந்தையைக் காட்டினால் நான் உயிர்த்து விடுவேன் எனக்கத்த வேண்டும் போலிருந்தது.

அதொரு பிரச்சினையும் இல்லையாம் பிள்ளை மஞ்சள் நிறமாயிருக்கிறானாம்.  அதுதான் கண்ணாடிப்பெட்டியில வைச்சிருக்கிறாங்களாம்.  மூண்டு கிழமை செல்லுமாம் தர.

என் குழந்தை என் கையை விட்டுப் போனதான உணர்வு. அழுகை அழுகை அதுதவிர வேறெதுவும் தெரியவில்லை.

நான் பிள்ளையைப் பாக்க வேணும்.  கேளுங்கோ. 
நீ கேக்கிறமாதிரி காட்டமாட்டாங்கள் பேசாமல் இரு. அதற்கு மேல் என் துயரைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லையென்பது புரிந்தது.

நான் பிள்ளை பிறந்ததுக்கு பெடியளுக்கு பாட்டி வைக்க வேணும்.  எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறாங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அந்தரிக்கும்  எனது தவிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை. அதற்கு மேல் எதுவும் பேசும் மனநிலையும் எனக்கில்லை. எனக்குள் எல்லாத் துயரையும் விழுங்கிக் கொள்ளென்றது விதி.

நண்பர்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்வைக் கொண்டாட போய்விட்டார்.  மீண்டும் மருத்துவமனையில் நான்.

குழந்தைக்குப் பால் கொடுக்காத வலி உயிரைத்தின்றது. மார்பு கட்டிப் போனது. வுலியைக் குறைக்க மெசினில் பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் பார்த்திபன் என எழுதி வைக்கச் சொன்னார்கள். குழந்தைகள் கிளினிக்கிற்கு பாலை அனுப்புவோமென்றார்கள். எனக்காக ஒரு மெசின் தரப்பட்டது. பால்கட்டி வலியெடுக்கும் நேரம் பாலை மெசினில் எடுத்து கொடுக்க வேண்டும்.

பால்கொடுக்காமல் விட்டால் எவ்வளவு வலியென்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இதைவிடக் குழந்தைப் பேற்று வலியைக் கூட தாங்கிவிடலாம் போலிருந்தது. அந்தளவு வலி. வலிகளால் மட்டுமே என் வாழ்வு ஏனோ சபிக்கப்பட்டிருந்தது.

17. 07. 1996 காலை பரிசோதனைக்கு மருத்துவர்கள் வந்தார்கள். என் குழந்தையைப் பார்க்க வேண்டும் என கேட்டேன்.  மறுநாள் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போவதாக மருத்துவர் சொன்ன பதில் பாரமொன்று இறங்கிய அமைதியைத் தந்தது.

18.07.1996. காலை பத்துமணிக்கு தாதியொருவர் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போக வந்திருந்தார். கட்டிலால் இறங்க கைதந்தாள் வந்திருந்த தாதி. எழுந்து நிற்க தலைசுற்றியது.

நடக்க ஏலுமோ ? கேட்டவளுக்கு ஓமென்றேன். அறைக்கதவு வரை வந்ததன் பிறகு ஞாபகம் இல்லை. சில நிமிடங்களில் கண்விழித்தால் கட்டிலில் கிடந்தேன். தாழ் இரத்த அழுத்தம் எனச் சொன்னார்கள். மீண்டும் சேலைன் ஏறத்தொடங்கியது.

அந்த 3நாட்களும் வந்த மருத்துவமனைச் சாப்பாட்டை சரியாகச் சாப்பிடவில்லை. கட்டாயமாகச் சோறு சாப்பிட்டுப் பழகிய என்னால் உப்புச்சுவை குறைந்த உறைப்பே இல்லாத மருத்துவமனைச் சாப்பாட்டைச் சாப்பிட முடியவில்லை.

குழந்தையைப் பார்க்க பின்னேரம் அழைத்துப் போக வந்திருந்த மருத்துவத்தாதி சக்கரநாற்காலியொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினாள். அதிலே என்னை இருக்க வைத்து உருட்டிச் சென்றாள் 35ம் இலக்க கட்டடத்திற்கு. அங்கே அனுமதியின்றி எல்லோரும் போக முடியாதபடி கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள் கதவு திறபட்டது.

உள்ளே போனதும் ஒரு இடத்தைக் காட்டிச் சொன்னாள். கைளைக் கழுவிவிட்டு அந்தப் பகுதியில் போட வேண்டிய அங்கியொன்றும் தொப்பியும் தந்தாள். இனி எப்பொது வந்தாலும் இதுபோலவே கிருமிநீக்கியில் கைகழுவி அந்தப்பகுதிக்கான தண்ணீர்ப்பச்சை அங்கியும் வெள்ளைநெற் தொப்பியும் அணிந்து தான் உள்ளே போக வேண்டுமெனச் சொன்னாள்.

பெற்றோர் தவிர வேறுயாரையும் உள்ளே கூட்டிவரக் கூடாதெனவும் கூறப்பட்டது. என்னைக் கூட்டிவந்த தாதி குழந்தையைப் பார்க்கும் நேரம் முடியும் போது தங்களுக்கு தொலைபேசியில் அறிவிக்கச் சொன்னாள். மீண்டும் ஒருவர் என்னை அழைத்துப் போக ஒருவர் வருவார் எனச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

அவர்கள் சொன்ன யாவற்றையும் செய்து உள்ளே கூட்டிச் செல்லப்பட்டேன். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் குழந்தைகள். மாதங்கள் முழுமையடையாது பிறந்த குழந்தைகளுக்கு பெரிய மெசின்களில் உணவு உயிர்க்காற்று யாவும் போய்க் கொண்டிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுபோல மெசின்கள் கண்ணாடிப் பெட்டிகள் அவற்றுள் குழந்தைகள் பொம்மைகள் போலக் கிடந்தார்கள். கால்கள் நடுங்கத் தொடங்கியது. தொண்டை வரண்டு போனது. 4வுது கண்ணாடி அறையினுள் கண்ணாடிப் பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர் பிறந்த திகதி நேரம் நிறை உயரம் தலைச்சுற்றளவு எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. ஏனது குழந்தையை அந்த அடையாளத்தைப் பார்த்துப் போனேன்.

என் குழந்தை ஒரு பொம்மை போலக் கிடந்தான். கண்ணை மூடி வெள்ளைத்துணி போன்ற அகலமான பஞ்சினால் பாதிமுகம் கட்டப்பட்டிருந்தது. வெறும் மேலில் கட்டப்பட்ட பம்பஸ் மட்டுமே அவனது ஆடையாக இருந்தது. வெள்ளை நிறத்தில் மின்குமிழ் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கண்ணைப் பாதிக்காமல் இருக்க அந்த மின்குமிழ் போடப்பட்டிருப்பதாக அந்த அறைக்கு பொறுப்பாக நின்ற தாதி சொன்னாள். 5.30இற்கு பால் கொடுக்க வேண்டும் இன்னும் அரை மணித்தியாலத்தில் குழந்தையை வெளியில் தூக்கி வைத்திருக்க தருவதாகச் சொன்னார்கள். என் குழந்தையின் அருகில் எனக்கு ஒரு கதிரை தரப்பட்டது. அதில் இருந்து என் குழந்தையைப் பார்த்தேன்.

என் குழந்தைக்கு என்ன நடந்தது ? ஏன் இப்படி வைக்கப்பட்டுள்ளான் என்பதற்கான சரியாக விளக்கம் ஏதும் எனக்கு முழுமையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் குறைந்தது  மூன்று வாரங்கள் இப்படியே வைத்துத் தான் வீட்டுக்கு போக விடுவார்கள் எனச் சொல்லப்பட்டது. அது பற்றி மேலதிகமாக விசாரித்து விளங்கிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மொழியாற்றலும் இல்லை.

என் பார்த்திக்குட்டி அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் குப்புற கால்களைக் குடக்கிக் கொண்டு படுத்திருந்தான். அப்படியே அவனைப் பார்க்க அழுகைதான் மேலிட்டது.

5.35 மணிக்கு பார்த்திக்குட்டி அழத் தொடங்கினான். அங்கிருந்த சில குழந்தைகள் மெல்ல மெல்ல அழத் தொடங்கினார்கள். அந்த அறையில் இருந்த 8கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த குழந்தைகளின் தாய்களும் தந்தையர்களும் வந்து நின்றார்கள்.

வுந்தவர்கள் அவரவர் தங்கள் குழந்தைகளின் கண்ணாடிப் பெட்டியில் மின்குமிழை நிறுத்தினார்கள். பிறகு கண்ணைக் கட்டியிருந்த பஞ்சுத்துணியைக் கழற்றிக் குழந்தைகளைக் கையில் எடுத்தார்கள். எனது குழந்தையை எப்படி வெளியில் தூக்குவதென எனக்குத் தெரியவில்லை. அங்கு நின்ற ஒரு பெண் எனக்கு உதவினாள்.

மெசினில் எடுக்கப்படும் தாய்ப்பாலை பாதுகாக்க இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தனது குழந்தைக்கான பாலையும் எனது குழந்தைக்கான பாலையும் எடுத்து வந்து சூடாக்கித் தந்தாள்.

முதல் முதலாக குழந்தைக்குத் தாய்ப்பாலை சூப்பிப் போத்தலில் ஊட்டினேன். பால் குழந்தைகள் குடித்து முடித்ததும் தோழில் போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தார்கள். மற்றவர்கள் செய்வது போல நானும் பாலைக் கொடுத்துவிட்டு தோழில் போட்டு என் குழந்தையை முதகில் தடவினேன்.

அருகில் இருந்த மேசையில் வைக்கப்பட்ட பம்பஸ் பெட்டியை நானும் எடுத்துக் குழந்தைக்கு பம்பஸ் மாற்றத் தொடங்கினேன். அவன் கால்களை உதறிக் கொண்டிருந்தான். என்னால் மாற்ற முடியாதிருந்தது. என் போராட்டத்தை அவதானித்த மருத்துவத்தாதி எனக்கு உதவினாள்.

பார்த்திக்குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் உலகத்திற்கு வெளிச்சமாய் வந்த என் குழந்தையின் கைவிரல்களை கன்னங்களை தலையை எல்லாம் வருடினேன். அந்தச் சின்னக் கண்ணால் என்னைப் பார்த்தான். அவனோடு கதைபேசினேன். அவன் விரைவில் என்னோடு வர வேண்டுமென்று அவனுக்குச் சொன்னேன்.

ஏழுமணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறதென அறிவித்தார்கள். மீண்டும் குழந்தையை வாங்கி கண்ணைக் கட்டி மின்குமிழ் ஒளியில் கண்ணாடிப் பெட்டியினுள் குழந்தையைப் படுக்க வைத்தார்கள்.


No comments: