Sunday, July 14, 2019

15.07.1996 பார்த்திபனின் வரவு பாகம் 1

15.07.1996 பார்த்திபனின் வரவு - பாகம் 1

12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை.

என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டது.

வெள்ளிக்கிழமை பின்னேரம் நண்பர்களோடு கூடி கிறிக்கெட் விளையாடும் அவசரம் மட்டுமே இருந்ததை அறிவேன். பின்னேரம் வெளிக்கிட்டால் இரவு டிஸ்கோ உலாத்தி வீடு வர விடியப்பறமாகும்.

அதவரை என்னால் தாக்குப்பிடிப்பேனா என்பது சந்தேகமாக இருந்தது. என்னை மருத்துவமனையில் விட்டுவிட்டு எங்கென்றாலும் போகுமாறு சொன்னேன். கடைசியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

பரிசோதித்த மருத்துவர் மறித்துவிட்டார். நாளை அல்லது மறுநாள் குழந்தை பிறக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே எனக்கான உடுப்புகள் ஒரு பையில் தயாராக வைத்திருந்தேன். அதனை வரும்போது கொண்டுவர மறந்து போனேன். எனக்கான அறையிலக்கம் தந்து போகச் சொன்னார்கள்.

ஏன்ர உடுப்புகள் எடுத்துவர மறந்து போட்டேன்....ஒருக்கா எடுத்து வந்து தாங்கோ...,
வெளிக்கிடேக்க ஞாபகம் வரேல்லயோ ? வந்த சினப்பையும் பேச்சையும் வாங்கிக் கொண்டேன்.

யாருமற்றுத் தனித்து மருத்துவமனையில் என் குழந்தையின் வரவுக்காகக் காத்திருந்தேன். ஓரிடத்தில் இருக்க முடியாது இடுப்பு வலித்துக் கொண்டிருந்தது. 
3வது மாடியில் அமைந்திருந்த மகப்பேற்றுப் பகுதியில் இருந்து முதலாவது மாடிவரை பலதடவை ஏறியிறங்கினேன். படியேறி இறங்கினால்  வலியின்றி விரைவில் குழந்தை பிறக்குமென்ற நம்பிக்கை.

மாலை ஆறுமணிக்கு இரவுச்சாப்பாடு கொண்டு வந்தார்கள். இரவு உணவாக மண்ணிறப்பாண் வந்திருந்தது. கத்தரிக்காய் உறைப்புக்கறியோடு அந்தப்பாணைச் சாப்பிட்டால் அதன் சுவை எப்படியிருக்கும் என்பதை எனக்குள் நினைத்துப் பார்த்தேன்.

நல்ல உறைப்புச் சாப்பிட வேண்டும் போலிருந்தது. எதையும் கொண்டு வந்து தரவும் ஆட்களில்லை. ஏன்னருகிலும் யாருமில்லாமல் தனித்திருந்தேன்.

குழந்தையின் அசைவோட்டம் எனது இரத்த அழுத்தம் சுவாசத்துடிப்பு யாவையும் பதிவு செய்யும் இயந்திரத்தை அருகில் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்ததும் அழைப்புமணியை அழுத்தச் சொன்னார்கள்.

ஆடிமாத வெயில் வெக்கை வியர்த்து எரிச்சலாக இருந்தது. தலைசுற்றிக் கொண்டிருந்தது.

இரவு ஏழுமணி. எனது அறைக்கு வந்த மருத்துவத்தாதி குழந்தையின் அசைவோட்டத்தை குறிக்கும் இயந்திரத்தின் வயர்களைப் பொருத்திவிட்டுப் போனாள். வயிற்றுள் இருக்கும் என் குழந்தையின் ஓட்டம் இரைச்சல் துள்ளல் கரகரப்பு என மாறிமாறி சத்தங்கள் வந்து கொண்டிருந்தது. 20 நிமிடங்கள் அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை இன்னும் 24 – 48 மணித்தியாலத்திற்கிடையே பிறக்கும் எனச் சொன்னார்கள். தாய்வாசல் விரிவடைந்தது போதாதெனவும் கூறப்பட்டது.


இரத்த அழுத்தம் 52-85 என இருந்தது. சீனிக்கட்டியில் 20துளிகள் மருந்தொன்றை சொட்ட வைத்துத் தந்த தாதி அதை மெல்ல மெல்ல உமிந்து விழுங்குமாறு சொன்னாள்.

கால் பகுதியால் கட்டிலை உயர்த்திப்படுக்க வைத்தார்கள். தங்களை அழைக்காமல் கட்டிலை விட்டு இறங்க வேண்டாமெனவும் ஏதாவது தேவையென்றால் அவசர அழைப்புமணியை அழுத்துமாறும் சொன்னார்கள். 

12.07.1996 – 15.07.1996 பின்னேரம் வரையும் கட்டிலைவிட்டு அதிகம் இறங்கவிடாமல் சேலைன் ஏற்றப்பட்டது. மருத்துவமனைச் சாப்பாடு உறைப்புமில்லை உப்புமில்லை புளிப்புமில்லை சப்பென்ற சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

15.07.1996 அன்று மதியம் மருந்துகள் கழற்றப்பட்டு குளிக்க அனுமதித்தார்கள். இரண்டுநாள் வெக்கையும் வியர்வையும் போக மென்சூட்டுத்த தண்ணீரில் முழுகினேன். அங்கேயும் அவசர அழைப்புமணியை எப்படி அழுத்த வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.

இடுப்புவலி 5நிமிடங்களுக்கு ஒருமுறையாக இருந்து மெல்ல மெல்லக் கூடிக்கொண்டிருந்தது. தாங்க முடியாத வலி. அழுகையாக வந்தது. என் சிலுவைத் துயரைத் துடைக்க யாருமின்றிய தவிப்பும் தனிமையும் சேர்ந்த துயரைச் சொல்ல முடியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் எப்படி இருக்கிறேன் என்ன நடக்கிறது என்பதைக் கூட எட்டிப்பார்க்க முடியாதளவு கொண்டாட்டத்தில் இருந்தவரைத் தேடி தொலைபேசியெடுத்தேன். சில உடுப்புக்களும் மருத்தவமனை வெளிக்கிட்ட அன்று வைத்த கணவாய்கறியையும் கொண்டு வந்து தரச் சொன்னேன்.

சரியாக அவியாத வெள்ளையரிசிச் சோறும் பழைய கணவாய் கறியும் பகல் இரண்டு மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னேரம் கிறிக்கெட் விளையாடப் போக வேண்டுமெனச் சொல்லப்பட்டது. 3நாள் உறைப்பு இல்லாத சாப்பாட்டைவிட்டுவிட்டு பழைய கணவாய்க்கறியையும் சோற்றையும் சாப்பிட்டேன்.

தனது கோடைகால விடுமுறையை நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடியும் குடித்து டிஸ்கோவுக்குப் போய் கும்மியடித்தும் கொண்டாடிக் கொண்டிருந்தவரால் எனது வலியை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அடுத்த சில மணித்தியாலத்தில் சாப்பிட்ட கணவாய்க்கறியும் சோறும் சத்தியாக வந்தது. இடுப்பு வலி அதிகரித்துக் கொண்டிருந்தது. கட்டிலைவிட்டு இறங்க முடியாத வலி.

அழுதபடி  அவசர அழைப்புமணியை அழுத்தினேன். என்னால் தாங்க முடியாதிருந்த வலியை வந்திருந்த மருத்துவத்தாதிக்குச் சொன்னேன். 20வருடகாலம் மகப்பேற்றுப் பிரிவில் பணியாற்றும் அந்தத் தாதி என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அழாதே என ஆறுதல் சொன்னாள். இன்னும் சில மணித்தியாலங்களில் குழந்தை பிறந்துவிடுமென்றாள். உனக்கு வேண்டிவர்களைக் கூப்பிடென்றாள்.

தெரிந்த சிலரது வீடுகளுக்கு அழைத்து நிலமையைச் சொன்னேன். கிறிக்கெட் விளையாட அந்த வீட்டு ஆண்களும் போயிருப்பதாக பதில் வந்தது. அவர்களும் தாங்கள் தேடிச் சொல்வதாகச் சொன்னார்கள்.

இரவு எட்டுமணிக்கு பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்கள். வலி வலி வலி...எப்படி அதனை விளக்குவதென்று தெரியாத வலியது. கட்டிலில் படுக்க வைத்து பூட்டப்பட்ட இயந்திரத்தின் இரைச்சல் குழந்தையின் அசைவுகளோடு எனது இயங்குதலையும் குறித்துக் கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பிரசவ அறைக்குப் போன பிறகு பத்துமணி தாண்டியதும் மருத்துவர்கள் இருவரும் 3தாதியர்களும் என்னருகில் வந்தார்கள். அருகிருந்த அறைகளில் பெரும் கூக்குரல்களும் அழுகையுமாக இருந்தது.

பலரும் குழந்தைப் பேற்றின் கடைசி மணித்துளிகNளூடு போராடிக் கொண்டிருந்தார்கள். அனைவருக்குமே குடும்ப உறுப்பினர்கள் கணவர்கள் காவலிருந்தார்கள். கண்ணீர் துடைத்துத் தேற்றி ஆற்ற ஆட்களிருந்தார்கள்.  நான் தனியே போராடிக் கொண்டிருந்தேன்.

அப்போது எனது அறை தட்டப்பட்டது. கதவைத் திறந்து கொண்டு வந்தவரின் பியர் நாற்றம் தடுமாற்றம் மருத்துவர்களை தாதியர்களை அருவெருப்படைய வைத்தது. அவமானம் என்னைப் பிடுங்கித் தின்றது. அந்தக் கணங்களை என்றுமே மறக்க முடியாது.

அந்த அந்தரமான நிமிடங்களில் கூட என்வலியைப் புரிந்து கொள்ளாத மனிதனாக என்னோடு கிரந்தம் கதைத்துக் கொண்டிருந்தது. நான் சத்தமாகக் கத்தியழுவது அவமானமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு நின்றது.

மருத்துவர்களும் தாதியர்களும் சுற்றி நின்றார்கள். வியர்வையில் வளிந்த முகத்தை ஒருதாதி ஈரத்துவாயால் துடைத்துவிட்டாள். குழந்தையின் அசைவோட்டத்தையும் எனது இரத்த அழுத்தம்  சுவாசத்துடிப்பு ஆகியவற்றை அவதானிக்கும் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது.  வயிற்றைச் சுற்றி கட்டப்பட்ட பட்டியைக் கழற்றியெறிய வேண்டும் போல அந்தரம். கால்பகுதியில் நின்ற மருத்துவரை உதைத்துவிட்டேன்.

என் ஓலக்குரலால் அந்த அறை நிறைந்திருந்தது. ஏல்லோரையும் தள்ளி விட்டு எழுந்து ஓடென்றது மனம். வாழ்வில் அப்படியொரு போதும் அழுதிருக்காத அழுகையது.

முதுகைக் குடங்கி படுக்குமாறு மருத்துவர் சொன்னார். முதுகில் ஊசியேறியது. இனி இடுப்புக்கு கீழ் வலிகுறையும் என்றார். தாங்க முடியாத வலி என்னைத் தின்று கொண்டிருந்தது. இடுப்பு எலும்புகள் ஒவ்வொன்றாய் உடைந்து போவது போலிருந்தது.

கைகளிரண்டையும் ஒரு தாதி இறுகப்பிடித்தாள். கால்களை அகட்டி மருத்துவர் ஒருவர் பிடித்தார். அடுத்த இரண்டு மருத்துவர்களும் „'நன்றாக முக்கு' என சொல்லிக் கொண்டு மேல் வயிற்றிலிருந்து கீழ்நோக்கி வயிற்றை அழுத்தினார்கள்.

மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. 1...2..3...இப்ப உனது குழந்தை வரப்போறான் நல்லா முக்கு...நன்றாக மூச்சை உள்ளிளுத்துக் கொண்டு முக்கு....4தடவை நான் முயற்சித்தும் என்னால் முடியவில்லை.

மூச்சடங்கிப் போவதை உணர்கிறேன். அனைவரின் குரல்களும் எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. கன்னத்தைத் தட்டி யாரோ எழும்பென்று சொல்வது கேட்கிறது. கால்களிரண்டினிடையிலும் மெல்லிய சூடாக திரவம் ஏதோ வெளிவருவதை  உணர்கிறேன்.

செயற்கைச் சுவாச மஸ்க்கினை முகத்தில் பொருத்தினார்கள். சில வினாடிகளில் எனது சுவாசத்துடிப்பு சீராகியது.  அந்தா பார் உனது குழந்தை எப்பிடி ஓடிவாறான்....நீ முயற்சி செய்தால் இன்னும் சில நிமிசத்தில உனது குழந்தை வெளியில வந்திடுவான்.....கணணித்திரையைக் காட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார் மருத்துவர்.

உன்னாலை முடியும் இன்னொரு தடவை முயற்சி செய் உனது சக்தியைத் திரட்டி முக்கு... சொல்லிக் கொண்டு வயிற்றை இரண்டு மருத்துவர்களும் ஊண்டி அமத்தினார்கள். அவர்கள் சொன்னது போல என் சக்தியெல்லாம் ஒன்றாகியதா அல்லது அவர்கள் அமத்திய அமத்தில் குழந்தை வெளியில் வந்ததா தெரியாது. 

23.20...மணிக்கு பார்த்திபன் பிறந்தான். என் நெஞ்சில் குழந்தையை மருத்துவர் படுத்திவிட்டார். என் பார்த்திக்குட்டி என் நெஞ்சில் கிடந்து அழுதான்.

பார் பார் வந்தவுடனும் அவருக்குப் பசிக்குது...மருத்துவர் சிரித்தார்.  அவ்வளவு நேரம் நான் அழுத அழுகை ஓய்ந்தது. அதுவரையில் என்னை வதைத்த வலியை என்னால் உணர முடியவில்லை.

புhர் அழகான குழந்தை நல்ல கறுப்பு தலைமயிர் வடிவான கண் மூக்கு முகம்...என ஒவ்வொன்றாகச் சொல்லிச் சிரித்தபடி தொப்புள் கொடியை வெட்டி குழந்தையைத் தாதியொருத்தியிடம் கொடுத்தார் மருத்துவர்.

குழந்தையின் நிறை உயரம் தலையின் சுற்றளவு யாவையும் அவள் எழுதி ஒரு அட்டையில் குறித்தாள். குழந்தையை மெல்லிய சுடுநீரில் கழுவிக் கொண்டிருந்தாள். மருத்துவர் கதைத்துக் கதைத்து என் வயிற்றிலிருந்து அகற்ற வேண்டிய கழிவுகளை அகற்றி தைத்துக் கொண்டிருந்தார்.

குழந்தையைக் கழுவிக் கொடுக்க அடுத்த மருத்துவர் குழந்தையின் கண்கள் கைகால்களை பரிசோதனை செய்துவிட்டு திரும்ப தாதியிடம் கொடுக்க அவள் பிள்ளைக்கு உடுப்புப் போட்டு என் நெஞ்சில் வைத்தாள்.

என் குழந்தையின் கைவிரல்களைப் பிடித்தேன் அவன் கன்னங்களை மெல்ல வருடினேன். எனக்கு புதுவாழ்வு தந்த கடவுளாக அவன் என் நெஞ்சில் கிடந்தான்.

கைகள் இரண்டையும் குடக்கி கால்களையும் மடித்து என் நெஞ்சில் கிடந்தான். என் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டேன். அவன் பஞ்சுக் கைவிரல்களை என் கன்னத்தில் வைத்து அழுத்தினேன். ஆழதான்.

அவனது வாயை பால்குடிக்க வசதியாக சரித்துப் படுக்க வைத்தார்கள். அவன் அழுதான். சில நிமிடங்கள் பாலை உறிஞ்ச முடியாமல் அழுதவன் கொஞ்ச நேரத்தில் அமைதியாக பால் குடிக்கத் தொடங்கினான்.   


14.07.2019

No comments: