Sunday, September 22, 2013

ஜெகதீஸ்வரன் இறந்துவிட்டான் உதவியவர்களுக்கு நன்றிகள்.

அன்பின் சாந்தி, எனது தம்பி ஜெகதீஸ்வரன் 14.09.2013 அன்று இறந்துவிட்டார். அவரது உயிர் காக்க நேசக்கரம் ஊடாக நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள். அவரது கடைசி ஆசைப்படி திருக்கேதீஸ்வரத்தில் இறுதி நிகழ்வுகள் செய்தோம். நேசக்கரம் ஊடாக எனது தம்பிக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள். தம்பியின் மரணச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க முயன்றேன் உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லை.

15.09.2013 அன்று வந்தடைந்த செய்தியிது. இந்த செய்திக்குரிய முன்னாள் போராளி இறந்துவிட்டான். இவனைப் பற்றியொருமுறை மீள் நினைவு கொள்வோம்.

ஒரு முன்னாள் போராளி மகசீன் சிறைச்சாலையில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உயிராபத்தான நிலமையில் இருப்பதாக 2011 செப்ரெம்பர் அளவில் உலகத்தமிழர்கள் அறிந்த செய்தியை யாரும் மறந்திருக்கமாட்டோம். பிபிசி தொடக்கம் தமிழ் ஊடகங்கள் யாவும்  சூடான பதிவாக வெளியிட்டிருந்த செய்தியாக பலநாட்கள் பல இணையத்தளங்களில் முதல் செய்தியாக இருந்தது ஜெகதீஸ்வரன் என்ற இளைஞனின் நிலமை.

அறிக்கைகளும் ஆய்வுகளும் ஜெகதீஸ்வரனுக்காக பலராலும் எழுதப்பட்டது. அரசியல்வாதிகள் முதல் அவன்மீது அக்கறை கொண்ட யாவராலும் அவனது உயிர்காக்கத் தொடர் முயற்சிகள் நடைபெற்றது. உயிர் போகும் தறுவாயில் அந்தரித்துக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் சிறைச்சாலை மருத்துவமனையிலும் பின்னர் கொழும்பு மருத்துவமனையிலும் அவனுக்கு விலங்குமாட்டப்பட்டே வைத்திருக்கப்பட்டான்.

மனிதாபிமானமற்ற முறையில் அந்த முன்னாள் போராளி வதைக்கப்பட்டுக் கொண்டிருந்தான். உணவு இறங்க மறுத்து அவன் பட்ட வலி சொல்லில் முடியாது. எழுந்து நிற்கவோ அசையவோ திராணியற்ற நிலமையில் அவனிருந்த போதும் அவனுக்கு இடப்பட்ட விலங்கு கழற்றப்படாமல் அவன் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உயிர்காக்க அவனைத் தொடர்ந்து வாழ வைக்கப் பெருந்தொகை பணம் தேவைப்பட்டது. தம்பியின் உயிர்காக்க அவனது அக்காவும் மகனின் உயிர்காக்க அவனது அம்மாவும் அலைந்த அலைச்சலும் கண்ணீரும் இப்போது நினைத்தாலும் தாங்க முடியாத பெருந்துயர். சிலரால் சிறுதொகையை மட்டுமே வழங்க முடிந்தது.  ஊரில் யாராலும் அந்தப் பெரிய தொகையைக் கொடுக்க முடியவில்லை.

அப்போது நேசக்கரம் சிறையில் வாடிக்கொண்டிருந்த முன்னாள் போராளிகள் தமிழ் அரசியில் கைதிகளுக்கான உதவிகளை இயன்றளவு வழங்கிக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த நண்பர்கள் நேசக்கரத்திடம் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்கும் அவசர நிதியுதவியைக் கோரியிருந்தனர்.

அவனது உயிர்காக்கப் பெருமளவு நிதி தேவையாயிருந்தது. முதலில் இலகுவில் நிதியைப் பெற்றுக் கொள்ளும் வசதி படைத்த சில ஊடகங்களிடம் உதவியைக் கோரினோம். ஆனால் அவர்கள் முன்வரவில்லை. போகப்போகிற உயிரை பிடித்து வைக்க சேகரிக்கும் நிதியை காக்கப்படக் கூடியவர்களுக்கு பயன்படுத்தலாமே என ஆலோசனைதான் தந்தார்கள்.

இதோ போகப்போகிறது உயிர் என்றாலும் தனது மகனை தனது தம்பியை எப்படி அவனது குடும்பத்தால் இழக்க மனம் வரும் ? ஒருநாள் அதிகம் அவன் உயிர் வாழ்ந்தாலும் அவனது உறவுகளுக்கு அது பெரும் நம்பிக்கைதானே ?
இறுதியில் நேசக்கரம் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க நிதியினைத் திரட்டுவதென முடிவெடுத்தது.

யாழ் இணையம் , நேசக்கரம் இணையம் , முகநூல் என இயன்ற வழிகளில் உதவியைக் கோரி செய்தியை வெளியிட்டோம். அத்தோடு ஐஎல்சி (லண்டன்) வானொலியில் திரு.தாசீசியஸ் ஐயாவின் ஆதரவில் வாரம் ஒருமுறை நடைபெற்றுக் கொண்டிருந்த ‚'உறவுகளுக்கு உதவுவோம்' நேசக்கரம் நிகழ்ச்சியில் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவியைக் கோரினேன்.

ஐஎல்சி வானொலி தனது நிகழ்ச்சிகளை இரத்துச்செய்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெகதீஸ்வரன் உயிரை மீட்கத் தனது சக்தியை முழுமையாகத் தந்துதவியது. இந்த ஆதரவைத் தந்துதவிய ஐஎல்சி வானொலி நிர்வாகம் , நான் கேட்ட நேரமெல்லாம் தங்கள் நிகழ்ச்சி நேரங்களை விட்டுத் தந்து ஆதரவு தந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் உயிர்காப்பில் தனது முழுமையான ஆதரவையும் தந்து பொறுமையுடன் நேரடி ஒலிபாரப்பில் கலந்து ஆதரவு தந்த திரு.தாசிசியஸ் ஐயாவை என்றென்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட நேரம் வானொயில் குழப்பியடிக்க வந்து தங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொட்டி அந்த நிகழ்ச்சி நின்று போக முயன்ற பல நல்லுள்ளங்களையும் இந்நேரம் நினைவு கூருவோம்.

வழக்கறிஞர் தம்புவும் வேறு பலரும் இவனது பிணைமனுவை மேன்முறையீடு செய்து அவனது மருத்துவ சிகிச்சையைச் செய்யக் கூடிய சூழலை ஏற்படுத்த செய்த உதவிகள் அளப்பரியவை. சட்டத்தரணி தம்பு அவர்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் சினக்காமல் ஜெகதீஸ்வரன் உயிர்காக்கத் தனது ஆதரவை வழங்கிக் கொண்டிருந்தது காலத்தால் மறக்க முடியாத நன்றியாகும்.

எந்த நேரம் தொடர்பு கொண்டு அவனது நிலமையை அறிய முயற்சித்து அழைத்தாலும் ஒருபோதும் தனது கடமையைத் தட்டாமல் ஆதரவு தந்த சட்டத்தரணி தம்பு அவர்களுக்கு நன்றிகள் என்றென்றும். பணமே ஒரு கைதியின் வாழ்வை மாற்றும் சக்தியாக இருந்த காலத்தில் பணம் இல்லாமல் தனது மனிதநேயத்தை வெளிப்படுத்தி தனது சக்தியை ஜெகதீஸ்வரனின் பிணைக்காக உழைத்த திரு.தம்பு அவர்களுக்கு காலம் முழுவதும் நன்றிகள்.

நீண்ட முயற்சியின் பின்னர் பிணை கிடைத்து கொழும்பு மருத்துவமனையில் ஜெகதீஸ்வரன் அனுமதிக்கப்பட்டான். அப்போதும் அவனுக்கு போடப்பட்ட விலங்குகள் அகற்றப்படவில்லை. அந்த நேரம் அவனைப் பார்க்கப்போன ஒரு சிங்கள இனத்தவர் விலங்கிடப்பட்ட நிலமையில் இருந்த அவனது சமகால நிலமையை படம்பிடித்து வந்தார். சில நாட்கள் அந்த நிழற்படம் ஊடகங்களை நிறைத்தது.

சில நாட்களில் அவன் மீது பூட்டப்பட்ட விலங்கு கழற்றப்பட்டு மருத்துவம் பெற்றுக் கொண்டிருந்தான். மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான மருத்துவ ஆதரவு வேண்டிய போது அதற்கான உடல்வலுவை ஜெகதீஸ்வரன் கொண்டிருக்கவில்லை.

நீண்ட சிறைவாழ்வு  அவனை உடலாலும் பலத்தை இழக்க வைத்திருந்தது. ஒருநாள் நன்றாயிருப்பான் மறுநாள் இதோ போகப்போகிறான் போல அந்தரிப்பான். அவன் உயிரோடு போராடினான். அவனுக்காக அவனது தோழர்கள் அவனது உயிர்காக்க இயங்கிய எல்லோரும் தினம் தினம் அவனது உயிர் மீட்பை எதிர்பார்த்து இயங்கிக் கொண்டிருந்தோம்.

தொடர் மருத்துவம் ஓரளவு உடல்நிலமை தேறினான். அதுவரையான செலவு 8லட்சத்தைத் தாண்டியிருந்தது. அடுத்து மாற்றுச்சிறுநீரக சிகிச்சை செய்வதானால் மேலும் தொகை பணம் தேவையென்றது மருத்துவம். அதனையும் செய்துவிடலாம் என முயன்ற போது மருத்துவ அறிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்கு மாறாக வந்தது.

ஏற்கனவே போரில் காயமுற்ற அவனது உடலில் சிறுநீரகத்தை அண்மித்த ஒரு பகுதியில் அகற்றப்படாதிருந்த செல்துண்டு அகற்றப்படாமல் சிகிச்சையை மேற்கொள்வதில் சிரமம் எனச் சொல்லப்பட்டது. செல்துண்டு அகற்றுவது அவனது உயிரையும் கொண்டு போகும் வாய்ப்பே 90வீதத்துக்குமேல் இருந்தது. எனவே குருதிமாற்றுச் சிகிச்சையை மட்டுமே அவன் வாழும் நாட்கள் வரையும் செய்து கொள்வதே சரியெனச் சொல்லப்பட்டது.

அவனுக்காக மாற்றுச் சிறுநீரகத்தை அவனது உடன்பிறந்த சகோதரி வழங்க முன்வந்திருந்தார். 4பிள்ளைகளின் தாயான தனது சகோதரி சிறுநீரகத்தை தானம் செய்து அவருக்கு ஏதும் நிகழ்ந்தால் அனாதையாக 4 பிள்ளைகள் போய்விடுமென அஞ்சிய ஜெகதீஸ்வரன் தனது சகோதரியிடமிருந்து சிறுநீரகத்தைப் பெற்று தான் உயிர்வாழ விரும்பாமல் அதனை மறுத்துவிட்டான். ஒரு போராளியென்பவன் மற்றவர்கள் நலத்தில் அக்கறையுடையவன் என்பதற்கு ஜெகதீஸ்வரன் மீண்டுமொருவனாய் உதாரணமானான்.

உனக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்த முடியாத உடல்நிலமையில் இருக்கிறாய். உனது உயிர் வாழும் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்பதனை எவரும் அவனுக்குச் சொல்லவில்லை. கடைசிவரை அவன் இடையில் செத்துப் போகப்போகிறேன் என்பதனை அறியாதே வாழ்ந்தான்.

ஆனால் அவனது கடைசி ஆசை அவனது அக்கா தனாவுடன் வாழ வேண்டுமென்றதே. அவன் ஆசைப்படி அக்கா தனாவுடன் தனாவின் குழந்தைகளோடும் தனது இயலாத உடல்வலியோடும் இறுதிக் காலங்கள் வரையும் வாழ்ந்தான்.

உடல்நிலமைய தேறி பேசக்கூடிய காலம் வந்த போது தானே ஒரு குறுஞ்செய்தியனுப்பினான். அக்கா, உங்களுடன் கதைக்க வேணும். எனது உயிர்காத்த உங்களுக்கு நன்றிகள். இந்த இலக்கத்துக்கு அழையுங்கள். என சில தடவைகள் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

முதல்முதல் அவனது குறுஞ்செய்தி வந்தது ஒருநாள் விடியற்காலை. உடனே அழைத்த போது அவன் அனுராதபுரத்தில் மருத்துவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். தொலைபெசியெடுத்ததும் உடன் ‚'அக்கா' என்றுதான் அழைத்தான். வார்த்தைக்கு வார்த்தை அவன் சொன்ன அக்கா என்ற அந்த வார்த்தைகள் அவனில்லாத இன்றைய நாட்களில் மீளவும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

தனது நலத்தைவிட தனது உயிர்காக்க உதவிய எல்லோரையும் ஆயிரம் முறை நன்றியோடு நினைவுபடுத்திக் கொண்டிருந்தான். தனது உயிர்காக்க உதவிய ஒவ்வொருவருக்கும் அவன் நன்றி சொன்னான். சாகும்வரையும் நன்றியுடனிருந்தான்.

பல தடவைகள் அவனது இலக்கத்தில் அழைத்து அவனது உடல் நலம் பற்றி விசாரித்திருக்கிறேன். சில தடவைகள் அழுதான் தனது நோயின் வேதனையை வெளிச் சொல்லத் தெரியாத குழந்தையாய் அந்தக் கனத்தை அறிய முடியாதவனாய் அவன் அழுத நாட்கள் அவனுக்காக என்னையும் கண்ணீர்விட வைத்ததைத் தவிர வேறொரு ஆற்றுதலையும் கொடுக்க முடியாது போனது.

சாகக்கிடந்தவனுக்கான ஆதரவு தேவைப்பட்ட போது தள்ளி நின்று விமர்சித்தவர்கள் சிலர் இடையில் வந்தார்கள். அவனுக்கு தொடர்ந்த உதவிகளில் குறுக்கிட்டு நேசக்கரம் அவனுக்கான உதவிகளிலிருந்தும் ஒதுங்கும் வகையில் இடைஞ்சல் தந்தார்கள். இரவு சாமம் எதுவென்றில்லாமல் பல உபத்திரவம் தந்தவர்களின் தேவையற்ற தொலைபேசியழைப்புக்கள் துரத்தத் தொடங்கியது.

சாவின்நுனியில் நிற்கிற ஒருவனின் உதவியிலும் குழுவாத நிலமையும் , நான் நீ என்ற அதிகாரங்களும் வந்தடைய தொடர்ந்து ஜெகதீஸ்ரவனோடு தொடர்பில் இருக்க முடியாது போக வைத்தது.  சரி நீங்களே செய்து கொள்ளுங்கள் என அவனது தொடர்பிலிருந்து ஒதுங்கிப் போனேன்.

குழுவாதம் குத்துப்பாடு எதுவும் அவனுக்குத் தெரியாது. அக்கா கதைக்கவும். என அவன் பல தடவைகள் குறுஞ்செய்தி அனுப்பினான். யாரோ ஒரு கருணையாளர் அவனுக்கு குருதிமாற்றுச் சிகிச்சைக்கு உதவிக் கொண்டிருப்பதாக சிறையிலிருந்து நண்பர்கள் சொன்னார்கள். உதவி கிடைக்கிறது அவன் உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு போனது 2வருடம். அந்த இடைவெளியில் குறுக்கிட்டு எதையும் மேலதிகமாக உதவக்கூடிய நிலமையும் இருக்கவில்லை.

இடையில் சிலதரம் அவனது அக்கா தனாவுடன் தொடர்பு கொண்டு அவன் பற்றி விசாரித்ததோடு போய்விட்டது காலம். உனமுற்ற , பெற்றோரை இழந்த ,பிள்ளைகளை நாட்டுக்குத் தந்தவர்கள் என பல இடங்களிலிருந்தும் வந்து போகும் அழைப்புக்கள் கடிதங்கள் உதவி கோரல்கள் ஓயாமல் காலம் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அந்த வேலைகளோடு ஜெகதீஸ்வரன் இடையிடை நினைவில் வந்து போவான். ஆனால் அவனது மரணத்தின் தறுவாயில் அவன் பேச விரும்பிய போது என்னால் அவனது குரலை இறுதியாய் கேட்க முடியாது போகும் ஒருநாள் என்பதனை ஒருநாளும் நினைத்திருக்கவில்லை.

அவன் இறப்பதற்குச் சில வாரம் முதலும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். வேலைப்பழு அலைச்சல்களோடு அவனுக்கு அழைக்க மறந்து போனேன். ஆனால் அவன் பேச ஆசைப்பட்டதைத் தன் அக்காவுக்குச் சொல்லிவிட்டே இறந்து போயிருக்கிறான். தனக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி சொல்லிக் கொண்டே உயிரை விட்டிருக்கிறான்.

அவனது அக்காவின் குறுஞ்செய்தி எனது தொலைபேசியில் ஏற்பட்ட கோளாறினால் 3நாட்கள் கழித்தே என்னால் வாசிக்க முடிந்தது. தகவல் வாசித்ததும் அவனது அக்காவை அழைத்த போது...., அவனது மருமகள் தான் எடுத்தாள். தனது பிஞ்சுக்குரல்களால் ஆரு நீங்கள் ? எனக் கேட்டாள். நான் சாந்தியன்ரி அம்மாட்டைக் குடுங்கோ...! என்றதும் அந்தக் குழந்தை தாயிடம் தொலைபேசியைக் கொடுத்தாள்.

ஜெகதீஸ்வரனின் இறுதி ஆசைகள் இறுதி நம்பிக்கைகள் என அக்கா கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றுங்கள் என 2வருடம் முதல் அழுத அந்தக்குரலில் விரக்திதான் மிஞ்சியிருந்தது. தனது தம்பி தங்களை விட்டுப்பிரிந்த போதும் அந்தத் துயரத்திற்குள்ளும் புலம்பெயர்ந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டு அவன் சிலகாலம் உயிர்வாழ உதவியவர்களுக்கு நன்றி சொன்னாள்.

அவன் இதுவரை காலம் உயிர் வாழ நீங்கள் ஆணிவேராய் நின்று அடித்தளமிட்டவர்கள் உங்களுக்குத் தான் நன்றி. அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் முகத்தில் அறைவது போலிருந்தது. நெடுகலும் உங்களோடை கதைக்க வேணுமெண்டு சொல்லிக் கொண்டேயிருந்தவன்....என அடிக்கடி சொன்னாள்.

போரில் கணவனை இழந்து வாடும் அந்த விதவை அக்காவின் வாழ்வாதாரம் ஜெகதீஸ்வரனின் வயதான அம்மா எல்லோரும் அவன் வாழ்ந்தவரை போதும் என்றுதான் சொல்கிறார்கள். தொடர்ந்து அவனை வாழ்விக்க அவர்களிடம் இல்லாது போன பணம் மீது அவர்கள் பற்றற்றவர்களாக ஏதோ அவன் இருந்தவரை அவனை மகிழ்வோடு வாழ வைத்த திருப்தியில்....! ஆனால் 35வயதில் முடிந்து போன அவனது இளவயளது மரணம் அந்தக் குடும்பத்தைத் துயரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஒருமுறை அவனோடு இறுதியாகப் பேசியிருக்கலாம் என்கிற துடிப்புத் தொடர்கிறது. அதுவொரு குற்றவுணர்வாக அண்மைய நாட்களை அமைதியில்லாது ஆக்கியிருக்கிறது...! பேசிய பொழுதுகளில் அவன் அக்கா என்றழைக்கும் அந்த அன்பில் இருந்த இணைப்பு இனியென்றும் மீளக்கிடைக்கப்போவதில்லை....! வருடத்தில் அவனை ஒருநாள் நினைவு கூர்ந்துவிட்டு இனிமேல் மறந்துவிடப்போகிறது காலம்....!

இன்றொரு குறுஞ்செய்தி. அதுவும் ஒரு சிறையிலிருந்து வந்திருக்கிறது. அங்கும் ஒரு முன்னாள் போராளி புற்றநோயால் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு போராளி தனது மூச்சை களத்தில் கரைத்த காலங்கள் அந்த மரணங்களை நாங்கள் எத்தனை மரியாதை கொடுத்து வணங்கினோம்.

இன்று அந்த மாவீரர்களை அவர்கள் துயின்ற துயிலிடங்களை அழித்துத்துடைத்து அடையாளம் இல்லாது செய்தவர்கள் இன்று அதே கொள்கைக்காகப் போனவர்களசை; சிறைகளிலும் அவர்கள் வாழும் ஊர்களிலும் வதைக்கிறது. கொள்கைக்காக தங்கள் வாழ்வைத் தந்தவர்கள் இன்று அநாமதேயமாய் அழுவதற்கோ நினைவு கூர்வதற்கோ ஆட்களின்றி அநாதையகளாய்....சாகிற அவலம்....!

20.09.2013

தொடர்புபட்ட செய்தி இணைப்புகள் :-
http://nesakkaram.org/ta/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%EF%BF%BDb/

http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4/

No comments: