Saturday, September 14, 2013

எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....!

அம்மா நான்...! முடிக்க முதலே அம்மா அழத்தொடங்கிவிட்டார். என்ரையம்மா இண்டைக்கு எடுக்க வேணுமெண்டு நேந்து கொண்டிருந்தனான். ஒவ்வொரு நாளும் நினைக்கிறனான் என்ர செல்லத்தை....!

அம்மா அப்படித்தான் ஒவ்வொரு முறையும் குரல் கேட்டதுமே அழத் தொடங்கிவிடுவா...! தன் சோகங்களை தனது கனவுகளை ஒவ்வொன்றாய் ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும் கொட்டிவிட்டு கண்ணீரோடே விடைபெற்றுக் கொள்வா.

அம்மாவின் பிள்ளைகளுக்காக நோர்வேயிலிருந்து ஒரு குடும்பம் மாதம் 6ஆயிரம் ரூபா கல்விக்காக நேசக்கரம் மூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உதவியில் அம்மாவின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தின் காலாண்டு அறிக்கை தொகுப்பதற்காகவே அம்மாவை இன்று அழைத்திருந்தேன். வளமைபோல அம்மா சொல்லியழ கனக்க கதைகளை வைத்திருந்தா போல....!

அம்மாவின் கணவர் , மகள் , மருமகன், 2 மகன்கள் என வீட்டில் விடுதலைக்காகக் கொடுத்த உயிர்களின் விலையும் அவர்களின் தியாகமும் உலகை விற்றுக் கொடுத்தாலும் ஈடாகாதது. வீரச்சாவடைந்தவர்கள் விட்டுச் சென்ற கனவுகளை அம்மா இன்றும் சுமந்தபடி வறுமையின் கோரத்தில் அம்மா படுகிற துன்பம் பிள்ளைகள் பசியில் அம்மாவைச் சினக்கும் பொழுதுகளில் வருகிற துயரம் எல்லாம் ஒவ்வொரு வினாடியும் கடும் போராட்டமாகவே கழிந்தது.

தடுப்பிலிருந்து வந்திருந்த அம்மாவின் 4வது மகள் 23வயது. அவளுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்க மாப்பிளை தேடத்தொடங்கிய நேரமது. தடுப்பிலயிருந்து வந்தவளின் கற்பைச் சோதனையிட முனைந்தவர்களின் கலியாண விலங்கை அவள் விரும்பாமல் அம்மாவின் பிள்ளையாக வாழவே விரும்பினாள். அக்காவும் அத்தானும் விட்டுப்போன பெறாப்பிள்ளைகளுக்கும் அவளுக்கு அடுத்துச் சில வயது இடைவெளியில் நிற்கும் 3சகோதரங்களுக்காகவும் வாழ்ந்துவிட விரும்பியவளை அம்மாவால் மனம்மாற்ற முடியவில்லை.

அவள் வேலை தேடத்தொடங்கினாள். 23வயதில் அவளிடம் எவ்வித தகுதியும் இல்லையென்று அலுவலகக் கதவுகள் வியாபார நிறுவனங்கள் கதவுகளை மூடிக்கொண்டனர். அவளுக்கொரு வேலைகிடைத்தால் மிஞ்சிய 6குழந்தைகளுக்கும் உணவு கிடைக்குமென்ற நம்பிக்கையும் பொய்யாகிப்போன ஒருநாள் அம்மா அதிரடியாய் எடுத்த முடிவு மகளைப் பெருங்கோபத்துக்கு ஆளாக்கியது.

அவ்வப்போது விசாரணையென்ற பெயரால் படும் இம்சையைத் தாண்டி ஏதோ வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இனி எந்த வழியும் இல்லையென்று போனது. 6சிறுவர்களையும் நஞ்சூட்டி தானும் செத்துப்போக முடிவெடுத்து அம்மா ஒருநாள் இரவுச்சாப்பாட்டில் எல்லோர் கதையையும் முடித்து தானும் போய்விடவே யோசித்து ஏற்பாடுகளைச் செய்தாள்.

அம்மா அன்றைய நாளோடு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் முடிவோடு அன்றைய மாலைநேரம் அடையாள அட்டையளவில் அம்மா காப்பாற்றி வைத்திருக்கும் தனது மாவீரரான கணவரின் படத்தை வைத்து புலம்பியழுத போதுதான் அம்மாவின் திட்டம் மகளுக்குப் புரிந்து போனது.
மரணத்தின் வாசத்தை நுகர்ந்து பாராத அதன் நெடிலை அறியாத குழந்தைகளுக்கு நஞ்சூட்டுதல் என்பது உலகில் மாபெரும் குற்றமாகும் அக்குற்றத்தைச் செய்கிறவருக்கு உலகநீதி கொடுக்கும் தண்டனையை அம்மா புரிந்து கொள்ளவோ அதனை அறிந்து கொள்ளவோ இல்லை.

ஒருவரில்லை எட்டுப்பேரின் உயிரை அழிக்கத் துணிந்த அம்மாவிற்கு எதிராய் இப்போதைய அம்மாவின் மூத்த மகள் நெருப்பானாள். இதுக்காத்தானேயம்மா இவ்வளவு கஸ்ரங்களையும் தாங்கினம்....! எனக்கும் உங்களுக்கும் சாவெண்டா என்னெண்டு தெரியும் ஆனால் இந்த 6 சின்னனுகளையும் ஏனம்மா...? அதுகள் வாழ வேணுமம்மா....! எங்கயெண்டாலும் ஒரு வேலை தேடீடுவனம்மா அது மட்டும் பொறுத்திருங்கோ...நான் பாப்பனம்மா எல்லாரையும்....!

அவள் அழுத அழுகையில் அவளது நம்பிக்கை தரும் வார்த்தைகளில் அம்மாவின் ஓர்மமும் கரைந்து ஒரு நொடியில் வந்த இடம் தெரியாமல் ஓடிப்போயிருந்தது. அன்றைக்கு அம்மாவின் அவசர முடிவை மாற்றியமைத்த மகளே இன்று அம்மாவும் ஆறுபிள்ளைகளும் உயிரோடு வாழக்காரணமாய் இருக்கிறாள்.

கூலித்தொழிலுக்கு குறைந்த சம்பளத்திற்கு அவள் வேலைக்குப் போகத்தொடங்கியவள் ஒரு பழைய நட்பொன்றின் உதவியில் நாச்சிக்குடாவில் ஒரு துணிக்கடையில் மாதம் 7ஆயிரம் ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தாள். சொந்த இடத்தைவிட்டு நாச்சிக்குடாவிற்குப் போனமகள் மாதம் மாதம் இப்போது 7ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் அனுப்பிக் கொண்டிருக்கிறாள். இப்போதுள்ள பொருளாதார இறுக்கம் பொருட்களின் விலையேற்றம் அவளது 7ஆயிரம் ரூபாவில் ஒருவாரம் ஓடுவதே சிரமம். ஆனால் அந்த 7ஆயிரம் ரூபாயில் அம்மா அந்த ஆறுபிள்ளைகளையும் காத்து தானும் உயிர்வாழ்கிறாள்.

தினம் தினம் போராடும் அம்மாவின் போராட்டத்தை ஒரு முன்னாள் போராளிதான் அறியத்தந்தான். கெட்டித்தனமான பிள்ளைகள் படிக்கவேனும் ஒரு உதவியை வழங்குமாறு கேட்டு நேசக்கரம் முகவரிக்குக் கடிதம் எழுதியிருந்தான். அவனது வேண்டுகையை உறுதிப்படுத்த அம்மாவின் முகவரிக்கு சென்று நேரில் அவர்களது நிலமையை படம்பிடித்து பார்த்து வந்து ஒரு பணியாளர் அறிக்கை சமர்ப்பித்தார். அடிக்குறிப்பில் இவர்களை அடையாளப்படுத்தி உதவியைக் கோராமல் வெளிப்படுத்தாமலே உதவி செய்யப்பட வேண்டிய குடும்பம் இது....எனவும் எழுதப்பட்டிருந்தது.

அடையாளம் சொல்லாமல் அவர்களை நம்பும் நிலையில் யாரும் முன்வரவில்லை. நான் உதவுவன் ஆனால் என்ரை முகப்புத்தகத்தில அவேன்ரை படம் கடிதங்களை போடவேணும்....ஏனெண்டா என்ரை நண்பர்கள் கனபேர் இருக்கினம்....அவைக்கு நான் செய்யிறதை அறிவிக்க வேணும்....இதுக்கு நீங்கள் ஓமெண்டால் விபரத்தை தாங்கோ....! என ஒரு அன்பர் உதவ விரும்பி முன் வந்தார்.

அந்த அன்பரின் கோரிக்கையை நிராகரித்தேன். கோபித்த அன்பர் அத்தோடு நின்றுவிடாமல்.... உங்களுக்குத் தெரியுமோ எத்தனை பேர் பொய்சொல்லி கனக்க இடங்களிலயிருந்து உதவியெடுக்கினம்...! உந்தக் குடும்பமும் எங்கேயும் எடுக்கிற உதவி பிடிபட்டிடுமெண்டுதான் மறைக்கினம் போல....!

அண்ணா நீங்க சொல்றமாதிரியும் சிலபேர் செய்திருக்கினம்....ஆனால் எல்லாரையும் ஒரேமாதிரி நினைச்சு உண்மையான ஏழையளைத் தண்டிக்கச் சொல்றீங்களா ? சரி நீங்கள் விடுங்கோ ஏதாவது பாப்பம்...! அத்தோடு குறித்த அன்பர் தொடர்பில் வருவதில்லை. ஆனால் முயற்சி கைவிடப்படாமல் அந்தக் குடும்பத்திற்கான உதவியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

02.06.2013 அன்று ஒரு மின்னஞ்சல் நோர்வேயிலிருந்து வந்திருந்தது. அந்த அஞ்சலுக்கு பதிலெழுதிவிட்டுக் காத்திருந்த மறுநாள் ஒரு அண்ணன் தொலைபேசியில் அழைத்தார். தன்னால் முடிந்தது மாதம் ஆறாயிரம் ரூபாய் ஒரு குடும்பத்துக்கு உதவ முடியுமென்றார்.

அம்மாவின் குடும்பத்தின் இழப்புகளைச் சொல்ல உடனே அந்தக் குடும்பத்துக்குத் தன்னால் உதவ முடியுமெனத் தெரிவித்தார். மாதம் மாதம் என்னாலை அனுப்பேலாது...உங்களுக்கு அனுப்பிவிடுறேன் நீங்கள் மாதம் மாதம் குடுங்கோ அவைக்கு....!

நீங்களே நேரடியா அனுப்பு முடியுமெண்டா நல்லமண்ணா....! நான் முடிக்க முன்னம் இன்றுவரை முகமறியாத அந்த அண்ணன் சொன்னார். எனக்கு உங்களில நம்பிக்கையிருக்கு....இந்த ஆறாயிரத்தை வைச்சு நீங்களொண்டும் கோடீஸ்வரியாகமாட்டீங்கள்....! எனச் சிரித்தார்.

நீங்கள் போடுற பதிவெல்லாம் வாசிக்கிறனான்....2010இல 3யுனிவேசிற்றி பிள்ளைகளையும் உங்களிட்டை வாங்கி அவைக்கு உதவி செய்தனான். அந்தப்பிள்ளையள் நீங்கள் அனுப்புற உதவியளையெல்லாம் எனக்கு கனக்க கடிதங்களாக எழுதியிருக்கினம்....! உதவியைத் தாற நானே உங்களை நம்பிறன் நீங்கேன் யோசிக்கிறீங்கள்...வாறகிழமை காசு வரும் அனுப்பிவிடுங்கோ....!

நானும் உங்களைப்பற்றி கிட்டடியில ஒருவர் எழுதினதை வாசிச்சனான்....! குறித்த நபரின் பொய்யான குற்றச்சாட்டு எழுத்து மீதான தனக்கிருந்த கோபத்தையும் வெளிப்படுத்தி நேசக்கரம் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

முகமே தெரியாமல் நம்பிக்கை வைத்து அம்மாவின் ஆறு பிள்ளைகளின் கல்விக்காக மாதம் அந்த அண்ணனின் ஆதரவில் ஆறாயிரம் ரூபா போய்க்கொண்டிருக்கிறது. அந்த அண்ணன் எந்த ஆதாரத்தையும் ஒரு போதும் கேட்டதில்லை. ஆனால் எதையுமே கேட்காமல் நம்பிக்கையோடு உதவுகிற அந்த நல்லுள்ளத்தின் நம்பிக்கையை காக்க வேண்டிய கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து விலகிவிட முடியாது.

உதவிகள் செய்யப்படுகிற குடும்பங்களில் பலரது தொடர்புகளை தனியே பேணுவதால் மாதம் ஒருமுறை அல்லது 2மாதம் ஒருமுறை தொடர்பு கொண்டு அவர்கள் நிலமை முன்னேற்றம் பற்றி அறிந்து உதவிக் கொண்டிருப்போருக்கு அறிவிக்கும் வளமையின் தொடர் இன்று அம்மாவை அழைத்தேன்.

000        000             000

இண்டைக்கம்மாச்சி எலெக்சன் கூட்டத்துக்கு அள்ளிக் கொண்டு போனவங்கள்...இப்பதான் போய் வந்து இதில தேத்தண்ணியொண்டு குடிச்சிட்டு இருக்கிறனம்மா...! இன்று வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்கு இலவச பேரூந்துகள் அனுப்பி மன்னார் தொடக்கம் பல ஊர்களிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கட்டாய பிரசாரம் நடைபெற்றுள்ளது. அம்மாவும் தனது 7பிள்ளைகளையும் வீட்டில் தனியே விட்டுவிட்டு பஸ்சேறி போய் இரவுதான் வீடு திரும்பியுள்ளார்.

அவங்களம்மா எங்களை இப்பவும் வெருட்டலாமெண்டு நினைக்கிறாங்கள்...ஏதோ எங்கடை பிள்ளையள் அநியாயம் செய்து அழிஞ்சு போனமாதிரி நினைக்கிறாங்கள். பெத்த தாய் சொல்றன் உவங்கள் நாசமாப்போவாங்கள்....எங்கடை பி;ள்ளையள் உயிரைக்குடுத்து போனதுகளின்ரை மூச்சு உவங்களை சும்மாவிடாது மோன....!

அவன் சொன்னானம்மா கூட்டமைப்புக்கு வாக்களிச்சா திரும்பியும் உங்கடை பிள்ளையளை சாகடிக்கத்தான் அனுப்புவாங்கள்....30வருச பயங்கரவாதத்தை முடிச்சு 4வரியம் முடிஞ்சுது இதில நீங்கள் எவ்வளத்தை இழந்தனீங்கள்....? இதையெல்லாம் கூட்டமைப்பாலை தர முடியுமா ? வெளிநாட்டில இருந்து உங்களை வைச்சுப் பிழைக்கிற வெளிநாட்டுத் தமிழன் உங்களை கொல்லவிட்டு தங்கடை பிள்ளைகளை படிப்பிச்சு வசதி வாய்ப்போடை வாழ்ந்து கொண்டு உங்களைத்தான் திரும்பவும் சாக வைக்க அங்கை போராட்டம் அது இதெண்டு ஏமாத்திறாங்கள்....!

அவங்களையெல்லாம் நம்பினால் திரும்பியும் உங்களுக்குத் தான் அழிவு...செத்துப்போன உங்கடை பிள்ளையளின்ரை மரணச்சான்றிதழைக்கொண்டு வந்து எங்களிட்டை பதியுங்கோ நாங்க உங்கடை பிள்ளையளுக்கு நட்ட ஈடு தாறம்....! இப்பிடி கனக்கச் சொன்னானம்மா....அதைக் கேக்கக் கேக்க என்ரை நெஞ்செல்லாம் பத்தியெரிஞ்சது.....அவனை அதிலையே வைச்சு சாக்கொல்ல வேணும் போலையிருந்தது.....! அவங்க நினைக்கிறாங்கள் இப்பிடியெல்லாம் சொன்னா நாங்க தங்கடை பக்கம் வந்திடுவமெண்டு....!

என்ரை மகன் கரும்புலியா போகேக்க ஒரு வார்த்தை சொன்னானம்மா....தலைவரை கைவிடாதையம்மா தலைவருக்கு துணையாயிரெண்டு....என்ரை புள்ள தான் வெடிக்கப்போற நேரத்தையும் தெரிஞ்சு வைச்சு எனக்கு இப்பிடித்தான் சொல்லீட்டுப் போனவன்....மற்றவனும் மருமேனும் ஆனந்தபுரத்தில விழேக்க என்ன நினைச்சிருக்குங்களெண்டது எனக்குத் தெரியும்....!

என்ரை மகள் 18வரிசம் இயக்கத்தில இருந்தவள்....கடைசி சண்டையில அவள் சாகேக்க தன்ரை 3 பிள்ளையளையும் என்னை நம்பி விட்டிட்டுப் போகேக்கயும் சொல்லீட்டுப் போனது என்ன தெரியுமா ? என்ரை குஞ்சுகளையும் நாட்டுக்காக விட்டிட்டுப் போறனம்மா பாரெண்டுதான்....! ஏன்ரை கடைக்குட்டி கடைசியா வரேக்க அம்மா அண்ணைக்காகப் போறனம்மா எண்டுதான் போனது பிள்ளை இண்டை வரைக்கும் அவன் இருக்கிறானா இல்லையா எதுவும் தெரியாதம்மா....!

இப்பிடி நாங்கள் எல்லாத்தையும் இழந்து எங்கடை குடும்பங்களும் சீரளிஞ்சு இண்டைக்கு என்ரை குஞ்சுகளுக்கு கஞ்சி குடுக்கவே படுறபாட்டை உவங்களுக்கென்னண்டம்மா விளங்கும்....? இண்டைக்கும் விடியக் காலமை அள்ளிக் கொண்டு போனவங்கள் சாப்பிடேல்ல....மத்தியானமும் இல்ல இரவு பிள்ளையள் கிடந்ததை சாப்பிட்டுதுகள் எனக்கு சாப்பாடில்லை தேத்தண்ணியை போட்டுக் குடிச்சிட்டு படுக்கப்போறன்.

நான் தெருத்தெருவா பிச்சையெடுத்து என்ரை பிள்ளையளை வளத்தாலும் வளப்பனே தவிர உந்த அரசாங்கத்திட்டையோ உந்த அரசியல்வாதியளிட்டையோ ஒரு ரூபாய் கூட வேண்டமாட்டனம்மா....! என்ரை குஞ்சுகளுக்கும் இதத்தான் சொல்லியிருக்கிறன்....சிலவேளை அம்மா செத்துப்போனா  உவங்களின்ரை பிச்சைக்காசுக்கு போய் கையேந்த வேண்டாமெண்டு.....!

அண்டைக்கு 2009இல சண்டை நடக்கேக்க இந்தக் குஞ்சுகள் சின்னனுகள் இதுகள் சண்டைக்கு போற வயசா இருந்திருந்தா கொண்டு போய் சண்டையில விட்டிருப்பன்.....என்ரை அண்ணைக்கு துணையா என்ரை பிள்ளையள் எல்லாத்தையும் குடுத்திட்டு போயிருப்பன்....தலைவர் தானம்மா எங்களை பாதுகாத்த மனிசன் இவங்களெல்லாம் படு சுயநலவாதியள் கள்ளன் காவாலியள்....!

நான் பெத்ததுகளுக்கு ஒரு விளக்குக் கொழுத்தக்கூட ஏலாமல் பண்ணின அறுவாரை நம்பி எங்கடை சனமும் பின்னாலை போகுது...என்ரை சீவன் இருக்குமட்டும் ஒரு ரூவா காசு உவங்கடை கையாலை வாங்கமாட்டன்....அப்பிடி வாங்கினா நான் பச்சைத் துரோகியம்மா....!

அவனொருத்தன் எனக்குச் சொன்னானம்மா ஒரு கதை...., நினைக்க நினைக்க வாற கோவம்....! என்ரை பிள்ளையளின்ரை மரணச்சான்றிதழைக் கொண்டு வந்து தங்களிட்டை பதியட்டாம் 4லச்சம் வேண்டித்தருகினமாம்...மகளுக்கு கலியாணம் கட்ட சீதனத்துக்கு தாங்க ஒழுங்கு செய்யிற 4லட்சத்தையும் எடுக்கலாமாம்....! என்ரை பிள்ளையள் உவங்கடை காசுக்காகவே செத்துப்போனதுகள்....?

அம்மா ஆவேசமாகவும் அழுகையோடும் தனது இன்றைய அனுபவத்தைப் பகிர்ந்து தனது துக்கத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். மரண வீட்டில் ஒப்பாரியெடுத்து கத்துவது போல அம்மா பெலத்து சத்தமிட்டு அழுது கொண்டிருந்தார். மனசுக்குள் பூட்டி வைத்த வெப்பியாரத்தையெல்லாம் இன்றைய இருளின் பொழுதோடு சொல்லியழுது ஆறுதல் தேடும் தாயாக என்னோடு தன் சுமைகளையெல்லாம் பங்கிட்டுக் கொண்டிருந்தா.....!

தினம் தினம் நான் கடவுளிட்டை வேண்டிறனானம்மா எனக்கும் என்ரை குடும்பத்துக்கும் ஒரு நல்ல காலம் வர வேணுமெண்டு....! இவ்வளவு நாளும் நான் கேக்காததை இப்ப கேக்கிறனம்மா என்ரை பிள்ளையளைக் கொண்டவனிட்டை என்னையும் என்ரை பிள்ளையளையும் கையேந்த விடாமல் உதவுங்கோம்மா....!

நான் சொந்தமா ஒரு தொழில் செய்ய ஒரு கை தாங்கோ நான் எழும்பீடுவன்.....! என்ரை பிள்ளையளை படிப்பிச்சுப் போடுவன்...இண்டைக்கு திமிரா நிக்கிறவனுக்கு முன்னாலை என்ரை பிள்ளையள் நிமிந்து நிக்க வைக்க என்னாலை ஏலுமம்மா....! இப்போது அம்மா உறுதி மிக்க ஒரு போராளியின் இயல்பை தன் குரலிலும் வெளிப்படுத்தினா.

ஒரு தாயின் கண்ணீருக்கான பெறுமதியும் அர்த்தமும் அம்மாவின் கண்ணீரிலிருந்தும் உறுதியிலிருந்தும் தெளிவாகியது. உண்மையான தேசத்தின் மீதான நேசத்தின் சாட்சியாக அம்மா ஒருத்தியே ஈழத்து அம்மாக்களின் பிரதிநிதியாக உயர்ந்து எழுகின்ற தேசத்தின் விழுதாக....விலையாக....!

அம்மாவுக்குச் சொந்தமாக விவசாய நிலம் இருக்கு. பயிர்செய்து இருக்கிற வியசாய நிலத்தை வளமாக்க கையில் எதுவுமில்லை. தனது உழைப்பில் உயர தனது குழந்தைகளை வாழ வைக்க விரும்பும் அம்மாவிற்கு குறைந்தது ஒரு லட்சரூபாவேனும் தேவை.

வசதிகள் தருகிறோம் என ஆசைகாட்டுவோர் பின்னால் போகாமல் இன்னும் தனது மாவீரான பிள்ளைகளின் கனவை நெஞ்சில் சுமக்கும் அந்தக் கனவுகள் ஒருநாள் நிறைவேறும் என நம்பும் அம்மாவிற்கு அம்மாவின் பிள்ளைகளாய் புலம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளில் ஒரு பிள்ளை இதோ உதவ நானிருக்கிறேன் அம்மாவென நேசக்கரம் தருமென்ற நம்பிக்கையில் அம்மாவின் வாழ்வை மாற்றும் கனவோடு....!

12.09.2013

No comments: