Saturday, March 10, 2012

யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி

அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான்.

எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ?
நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்....

அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....?
எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான்.

வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆரம்பித்து வளமைபோல நேற்றும் தாயகத்தில் போய் நின்றது.

நேற்றைய நமது கதையில் பவி பற்றிய கதை எப்படி வந்ததென்று தெரியாமல் வந்துவிட்டது. நினைச்சா நெஞ்சு வெடிச்சிடும் மாதிரியிருக்கு....கடைசியா அந்தாள் என்னிட்டை கேட்டது ஒண்டு தான்....தன்ரை பிள்ளையள் மூண்டையும் படிப்பிச்சு விடச்சொன்னது மட்டும்தானக்கா.....

அவன் பவியின் கணவனான ஒரு தளபதியின் கடைசி ஆசையைப் பற்றி கிட்டத்தட்ட 47 நிமிடங்கள் சொல்லிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் அவனது இயலாமை அவனைக் குற்றவாளியாய் வரைந்து அவனை வருத்திக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

என்ன செய்றது....? யார் நினைச்சம் இப்பிடியெல்லாம் வருமெண்டு....

என்னக்கா சொல்றியள்....இந்தக் கட்டமைப்புகள் செயலகங்கள் நினைச்சிருந்தா எல்லாருக்கும் எல்லாம் செய்திருக்கலாமக்கா....நாங்கெல்லாம் ஊரிலை நிக்கேக்க இங்கை அரசியல்வேலை நல்லா நடக்குது எங்களுக்குத் தான் வெற்றியெண்டு சாவுக்கை நிண்டம்....இஞ்சை வந்தப்பிறகு தான தெரியுது நாங்கெல்லாம் முட்டாளுகளா இருந்திட்டமெண்டது....இவனுகளின்ரை வெளிநாட்டரசியலின்ரை விறுத்தத்தை சத்தியமா இஞ்சை வந்தப்பிறகு தானக்கா முழுசாப்புரிஞ்சன்.....ஒருநாள் கூட களமறியாதவனெல்லாம் இப்ப கடைசீல நடந்ததென்னெண்டு கதைவிடுறாங்கள்....அது போதாதைக்கு நம்மையெல்லாம் துரோகியுமெல்லோ ஆக்கீட்டாங்கள்......22வருசம் இந்த இனத்துக்காக எல்லாத்தையும் இழந்து இண்டைக்கு சொந்தக் குடும்பத்தையே காண முடியாம கடைசியில 22வருசம் போராடின குற்றத்துக்கு துரோகிப்பட்டமும் தந்திட்டாங்கள்.....இந்த விதியை நினைச்சாத்தான் வலிக்குதக்கா....

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அவனது கதைகளுக்கு நடுவில் சின்னச் சின்னப் பகிடிகள் விட்டு அவனை அந்தச் சில நிமிடங்கள் சிரிக்க வைக்க மட்டுமே முடிந்தது.

000 000 000
16வயதில் தனது சுயவிருப்போடு விடுதலைப்புலியானவன். எத்தனையோ சமர்கள் களங்கள் அவனது கள அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறு. ஜெயந்தன் படையணியின் சிறந்த சண்டைக்காரர்களில் அவனும் ஒருவன். ஜெயசிக்குறுவே அவனது கடைசிக்களமாக தொடர் காயங்கள் கால்களையும் கைவிரல்களையும் ஊனமாக்கும் வரை அவன் ஒரு சிறந்த சண்டைக்காரனாகவே திகழ்ந்தான்.

சிறந்த சண்டைக்காரனே சிறந்த அரசியல்காரனாகுவான் என்பது அவன் விடயத்தில் உண்மையாக அவன் களத்திலிருந்து நீக்கப்பட்டு மாவட்ட அரசியல் பொறுப்பைத் தலைமை வழங்கியது. அரசியல் பிரிவுக்காரர்கள் ஆடைமடிப்புக்கலங்காமல் பணிசெய்யும் இலகுப்பணிக்காரர்கள் என்ற களப்போராளிகள் பலரது கருத்தே இவனுக்கும் இருந்தது. தானும் அரசியல் பிரிவில் அதுவும் மாவட்டங்களை கட்டி நிர்வகிக்கும் பொறுப்பு வரும்வரை அரசியல் பிரிவில் உள்ள கடினங்களை அறிந்து கொள்ளவேயில்லை.

சண்டையில நிண்டு கொண்டு அரசியல்காறரை ஏதோ பெரிய வாழ்க்கை வாழிறாங்களெண்டு கதைச்ச கதைக்குத்தான் காலமெனக்கு இந்தத் தண்டனையைத் தந்திருக்கெண்டு நினைப்பான்.
சண்டைக்களங்களில் இருந்த முகம்போய் அரசியல் பிரிவுக்குரிய முகத்தை வரவழைத்துக் கொண்டான். மக்கள் தொடர்பு முதல் அனைத்தையும் செய்யத் தொடங்கிய போது வரியுடைக்கு ஓய்வு கொடுத்து பொது உடைக்கு மாறினான். விளையாட்டுத்தனங்கள் போய் சீரியசான அரசியல் போராளியாய் பொறுப்பு மிக்கவனாகிப் போனான். ஆயினும் பலமுறை களம்காண விரும்பும் தனது கனவைத் தலைமையைச் சந்திக்கிற போதுகளில் சொல்லி வைக்கத் தவறுவதில்லை. ஏதோ இனி அரசியல் பணியே உனது பணியென்பது போல தலைமையின் பதில் சிரிப்போடும் கண்டிப்போடும் வருகிற போது வாய்மூடிவிடுவான்.

கடைசிக்கள நிலமை மாறிப்போய் வன்னியை விட்டு விலகி நின்ற வெளிமாவட்டப் போராளிகள் நிலமை துடுப்பிழந்து போகுமென்று கனவில் கூட எண்ணாமல் தனக்குப் பணியாகத் தரப்பட்ட மாவட்டத்திலிருந்து பணிகளோடு கவனமாகினான்.

வாழ்வும் மரணமும் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டுக் கொண்டிருக்க அங்கே சென்றுவிட இவனும் இவனது மாவட்டத்திலிருந்த பலரும் முயற்சித்த முயற்சியும் தோற்றுவிட்ட போது முடிவுகள் அவரவரின் சுய விருப்பங்களாகியது.

எவ்வவோ குழப்பங்கள் விரக்தியின் மத்தியில் தான் நாட்டைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தான். அவனது ஆயுளின் நீளமோ அல்லது அதிஸ்டமோ தெரியாது ஐரோப்பிய நாடொன்றில் வந்திறங்கச் சிலர் உதவி செய்து ஐரோப்பாவில் வந்திறங்கினான். வந்த பின்னர் தான் ஐரொப்பாவின் தாயகம் தேசியம் தன்னாட்சி குழுமோதல் முதல் புரிந்து கொண்டான்.

தன்கையால் மண்போட்டு விதைத்தவர்களை தன்கையால் வளர்ந்தவர்களை களத்தில் இழந்தவர்களை தன்னோடு ஒன்றாய் உறவாடி வாழ்ந்து ஒரே களத்தில் மடிந்தவர்களின் தியாககங்கள் ஆளாளுக்கு கூறுபோட்டு மாவீரர்களின் தியாகங்கள் துண்டாடப்படுவதனை எதிர்த்து ஒற்றுமைப்பாடொன்றை உருவாக்குமாறு எங்கும் வேண்டினான்.

ஒற்றுமையை வேண்டியதற்கான பலன் அவன் பெரிதுரோகியாக்கப்பட்டு இணையங்களில் கிழித்தெறியப்பட்டான். எத்தனையோ நாட்கள் தனக்குக் கிடைத்த துரோகிப்பட்டத்தை நினைத்து அழுதிருக்கிறான். 22வருடம் தமிழினத்துக்காக வாழ்ந்தவனை அவன் போராட்ட வாழ்க்கையின் வயதுகூட இல்லாததெல்லாம் அவனைத் துரோகியாக்கி தேசியம் பேசியது கூடப் பொறுக்க முடிந்தது. ஆனால் அவன் பிறந்த மாவட்டமே துரோகிகளின் மாவட்டமென்று பிரதேசப்பாகுபாட்டை புலத்தில் வளர்ப்பது போன்ற பெரிய கனவான்களின் பிரிவினைவாதக் கருத்துக்கள் எழுத்துக்களை மட்டும் அவனால் தாங்கவே முடியவில்லை.

வெளியில் வெளிக்கிட்டால் துரோகி மாவீர் நாளுக்குப் போனால் துரோகி....எங்கும் துரோகி எதிலும் துரோகி....இப்போது எங்கும் போவதில்லை. ஒரு அறைக்குள் வாழ்க்கையாகிப் போய்விட்டது. வாரத்தில் 3நாள் மிகவும் குறைந்த சம்பளத்திற்குச் செய்யும் வேலையைக்கூடச் செய்ய முடியாது போனது.

உணர்விழந்த வலக்கையின் 3விரல்களையும் பார்த்த மக்டோனால்ஸ் முதலாளி அவனால் வேகமாக வேலைசெய்ய முடியாதென்று வேலையை நிறுத்திவிட புதிய றெஸ்ரோரண்ட் ஒன்றில் கிடைத்த 5நாள் வேலையிலும் சம்பளம் மிகக்குறைவு. ஆனாலும் அரச வேதனத்தில் இருப்பதை விரும்பாமல் தனது சுய உழைப்பில் வாழ வேண்டுமென்ற வைராக்கியம் 12கிலோமீற்றர் தினமும் வேலைக்கு நடந்து போய்வருகிறான். கேட்டால் இதென்ன கஸ்ரமக்கா...? ஏன சிரிக்கிற அவன் மனசுக்குள் எரிகிற துயரத்தீயையும் துரோகமாக்கிவிடுகிற தியாகிகள் நடுவில் அவனுக்காக ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே சொல்ல முடிகிறது.

மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் இப்போதும் தன்னுடன் வாழ்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வை உயர்த்த ஏதாவது செய்துவிட வேண்டுமென்ற ஆவலில் தனது உழைப்பில் முடிந்ததைச் செய்கிறதோடு நின்றுவிடாமல் என்னிடமும் பல குடும்பங்களின் தொடர்புகளைத் தந்து அவர்களுக்கு உதவும்படி அடிக்கடி அன்புத் தொல்லை தந்து கொண்டிருப்பான். அந்த வரிசையில் தான் பவிபற்றி இன்று சொல்லத் தொடங்கினான்.

000 000 000

பவிக்கு ஏதும் ஒழுங்கு செய்யேலுமேயக்கா ? பாவம் சரியாக் கஸ்ரப்படுறாளாமக்கா...பிள்ளையளும் அதோடை அவளும் சண்டையில காயப்பட்டு காலொண்டும் ஏலாதவள்....எங்கினையோ வீடொண்டில வேலை செய்யிறாளாம்....பெரிசா செய்யேலாட்டிலும் அந்தப்பிள்ளையளுக்கு படிக்க மாதnமொரு ரெண்டாயிரம் குடுத்தாலும் அது பெரிய உதவியா இருக்குமக்கா....

சரி நம்பறைத் தாங்கோ....என பவியின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். பவியைக் கண்டிருந்த காலங்களில் ஒரு தளபதியின் மனைவி ஒரு போர்க்களத்தின் போராளியென்ற மதிப்பும் சின்னப் பயமும் இருந்தது. அதனால் சந்தித்த காலங்களில் புன்னகையால் மட்டுமே பவியுடன் விடைபெற்றிருக்கிறேன். இப்போ அவளுடன் கதைக்க வேண்டி வந்தது சற்று சங்கடமாகவே இருந்தது.

08.03.2012 மதியம் அவளை அழைத்தேன்.

சொல்லுங்கக்கா...! ஏன ஆரம்பித்தவள் சொன்ன கதைகளைக் கேட்கக் கேட்க ஐயோ எனக்கத்த வேணும்போலிருந்தது.

பிள்ளையள் எப்பிடியிருக்கினம்....? இருக்கினமக்கா மூத்தவன் என்னோடை இல்லக்கா....சின்னவை ரெண்டு பேரும் தான் என்னோடை அதுவும் மகள் மட்டும் தான் இப்ப என்னோடை ரெண்டாவது அம்மா வைச்சிருக்கிறா...

மூத்தவனுக்கு இருதய வருத்தம் தெரியும் தானேயக்கா.....கடைசிநேரம் முகாமுக்கு வந்தாப்போல பிள்ளைக்கும் சரியா ஏலாமப்போட்டுது....அவனை ஒரு தெரிஞ்சாக்கள் தாங்கள் பாக்கிறமெண்டு கேட்டினம்....எனக்கும் அந்த நேரம் வேறை வழி தெரியேல்ல பிள்ளையை அவேட்டைக் குடுத்திட்டன்....இந்தச் சமூகத்தோடை எப்பிடி ஒட்டி வாழப்போறனெண்ட பயம் ஒருபக்கம்.... பிள்ளையெண்டாலும் எங்கினையும் வாழட்டுமெண்டு குடுத்திட்டனக்கா....மகனின் கதையைச் சொல்லிக் கொண்டிந்தவள் இப்போது அழ ஆரம்பித்தாள்.

ஊருக்கை வந்தா ஒருத்தரும் மதிக்கினமில்லை. அம்மா மட்டும்தான் ஆறுதல். அவற்றையாக்களிட்டையும் போய்ப்பாத்தன் ஒருதரும் என்னையோ என்ர பிள்ளையளையோ பாக்கிறமாதிரியில்லை....எங்கினையுமொரு வேலையைத் தேடுவமெண்டா எங்கை போனாலும் குறைஞ்சது ஓலெவல் தகுதி கேக்கினம்....15இயக்கத்துக்குப் போனநானெங்கை ஓலெவல் படிச்சனக்கா....அதுவும் புலியில இருந்து வந்துமெண்டா வாசலோடை வெளியில விடாத குறையா கதைக்கிறாங்களக்கா....

கடைசியா ஒரு வீட்டில வேலைக்கு ஆள் தேடினாங்கள் அதையாவது செய்து இந்த ரெண்டையும் பாப்பமெண்டு இந்த வீட்டு வேலையைச் செய்ய வந்திருக்கிறன். மகளையும் என்னோடை வைச்சிருக்கக் கேட்டன் அவை ஓமெண்டினம்....தனியவெண்டா மாதம் 5ஆயிரம் ரூபா தாறமெண்டினம்....இப்ப பிள்ளையுமெண்டதும் 4ஆயிரம்தான் தருவினமாம்.....சாப்பாடு தருகினம்....அப்ப ஓமெண்டிட்டன்....

எனக்கு யெகோவா ஆண்டவர்தான் துணையக்கா அவரைத்தான் இப்ப நம்பிறன்....ஆனால் யெகோவாக்காறரெண்டா பெரீசா ஏதோ அள்ளித்தருவினமெண்டு எங்கடையாக்கள் சொல்லுவினமக்கா....எனக்கு பணம் பொருள் ஒண்டையும் யெகோவா சபை தரேல்லயக்கா.....ஆனால் என்ரை மனதை வழிப்படுத்தி செத்துப்போற நிலமையில இருந்த என்னை வாழ வைச்சிருக்கு யொகோவா ஆண்டவர்.....வெளியில காணேக்க எங்கடையாக்கள் நக்கலடிக்கினமக்கா யெகொவாக்காறர் எனக்கு வசதியைத் தந்திருக்கினமெண்டு....சத்தியமா நான் யெகோவா திருச்சபையிட்ட ஒரு சதத்தையும் வாங்கேல்லயக்கா....

முகாமிலயிருந்து ஊருக்கை வரேக்க நான் ஒரு பிணம்மாதிரித்தானக்கா வந்தனான்....கடைசீல அவர் சொல்லிவிட்டது எங்கடை பி;ள்ளையளைக் கைவிட்டிராத எண்டதுதான்.....ஆனா என்னாலை ஒண்டுமே செய்யேலாமப் போச்சக்கா.....மனநலம் பாதிக்கிற நிலமையிலதானக்கா இருந்தனான்....அப்பதானக்கா யெகோவா ஆண்டவரிட்டைப் போனனான். நானிப்ப ஓரளவு மனத்தைரியத்தோடை வாழுறனெண்டா நான் தேடின யெகோவா ஆண்டவற்றை கிருபைதான் காரணமக்கா....

அவள் யெகோவா ஆண்டவர் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருந்தாள். யெகோவா ஆண்டவர் பற்றிய புத்தங்களோடு வந்து வாசலைத் தட்டுகிற எல்லாரையும் துரத்திவிடுகிற என்னால் பவியைத் தொடர்பறுக்க முடியவில்லை. அவளது தேர்வு பிழையென்று வாதாட எனக்கு எவ்வித தகுதியும் இல்லையென்பதனை மனசார ஒப்புக் கொண்டேன். வாழ வழியற்றுப்போன நேரம் அவளை ஆற்றுப்படுத்தியது யெகோவா ஆண்டவரென்று அவள் நம்பியதால் இன்று தனது பிள்ளைகளுக்காக வாழும் தைரியத்தைப் பெற்றிருக்கிறவளோடு விவாதித்து எனது பெருமையை வெளிப்படுத்தவில்லை.

எனக்கு ஆடம்பரமா வாழ வேணும்....சம்பாரிக்க வேணும்....பகட்டா திரிய வேணுமெண்டெல்லாம் ஆசையில்லையக்கா...!என்ரை பிள்ளையள் படிக்க வேணும் அது போதுமக்கா....என்றவள் உறுதியாய் சொன்னது இதுதான்:-

தன்னை வழிப்படுத்திய ஆண்டவருக்கு ஊழியம் செய்கிற பிள்ளைகளாகத் தனது பிள்ளைகளை ஆன்மீகக் குழந்தைகளாக வளர்க்க வேணுமெண்டதே தனது கனவென்றாள்.

உங்களுக்கு உங்களை ஆற்றுப்படுத்த என்ன வழி சரியெண்டு நினைக்கிறீங்களோ அதை நீங்கள் தெரிவு செய்ததில பிழையில்லை.....அது உங்கடை சுதந்திரம்.....என அவளது யெகோவா ஆண்டவரின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அவர் கடைசியா ஆசைப்பட்டது பிள்ளையளை கவனமாப்படிப்பிக்க வேணுமெண்டதுதானக்கா....என்ரை பிள்ளையள் படிக்க ஏதாவது உதவ ஏலுமெண்டா பாருங்கோக்கா....உங்காளலை உதவேலாமல் போனாலும் பறவாயில்லை....இடைக்கிடை எடுத்துக் கதையுங்கோக்கா....அதே எனக்கு பெரிய ஆறுதலா இருக்குமக்கா....இஞ்சை எங்கடை முகத்தைப் பாக்க எங்களோடை கதைக்கவே சனம் தயாரில்லையக்கா.....நாட்டைவிட்டுத் தூரத்தில இருந்தாலும் ஞாபகம் வைச்சு எடுத்திருக்கிறீங்களக்கா....அதுக்கு நன்றியென்றாள்.

அவளோடு கதைக்கச் சொல்லி தொடர்பைத் தந்த தோழனைப் பற்றிச் சொன்னேன். அவனுக்கே இந்த நன்றிகளைச் சொல்லச் சொன்னேன். அவள் அழுதாள்....அண்ணனிட்டைச் சொல்லுங்கக்கா நாங்கள் உங்களை மறக்கேல்லயெண்டு....எங்கேயெண்டாலும் அண்ணன் நல்லாயிருக்கட்டுமென்று வாழ்த்தினாள்.

பவியின் கண்ணீர் தன்னை மேலும் துன்புறுத்தும் என்ற பயத்திலேயே அவளுடன் தொடர்பெடுக்க மறுத்திருக்கிற தோழனின் இக்கட்டை அவளுக்குச் சொல்ல முடியவில்லை. நான் சொல்றன் எடுத்துக் கதைக்கச் சொல்லி....என்றேன். சொல்லுங்கக்கா நாங்களிஞ்சை செல்லாக்காசுகளாப் போனமெண்டு....அவள் அழுது கொண்டிருந்தாள்.

சரி பவி நான் ஆறுதலா இன்னொரு நாள் கதைக்கிறனே....! என்ரை நம்பர் இதுதான் எழுதுங்கோ....என்றேன். பவி அழுதழுது எனக்கு விடை தந்தாள்.

பவியின் வாழ்வுக்கு ஏதாவதொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேணும்...ஆற்றை காலைப்பிடிச்செண்டாலும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் ஏதாவது செய்தாக வேணுமென்ற சிந்தனை மனசுக்குள் வலம்வருகிறது.

அவள் சொன்ன யாவற்றையும் சொல்லிவிட வேண்டுமென்ற முடிவில் புவியின் தொடர்பைத் தந்த தோழனின் தொலைபேசியிலக்கங்களை அழுத்துகிறேன்....

08.03.2012

1 comment:

தீபிகா(Theepika) said...

வலிதருகிற உண்மைகளில் வழிகிறது கண்ணீர். மனிதம் தராத நம்பிக்கையை மதம் அவர்களுக்கு கொடுத்திருக்கிறதென்பதில் சற்று ஆறுதல்படுவோம். அது எந்த மதமாகவேனும் இருந்து விட்டுப் போகட்டும்.வாசிப்பறிவு இருந்தால் ஆன்மீகத்திற்கு அப்பால் இன்னும் நல்ல நம்பிக்கை தரும் புத்தகங்களையும் அவர்கள் படிக்க வழி செய்ய வேண்டும்.கடவுளுக்கு சேவகம் செய்யும் குழந்தைகளாவதை விட தற்போதைக்கு அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தம்மையும்..தங்கள் பெற்றவர்களையும் தாங்கிக்கொள்கிற சக்தி கைவரப் பெற்றவர்களாக வளரவேண்டும். காலம் அவர்களுக்காக மாறவேண்டும்.