Monday, February 27, 2012

லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று


வருடம் தவறாது வந்த வாழ்த்து மடல்களிலும் கடிதங்களிலும் மட்டுமே உங்கள் நினைவுகள் மிஞ்சிக்கிடக்கிறது. அண்ணனாய் ,தோழனாய் , ஆசானாய், மாமனாய் , கடிதம்மாமாவாய் எம்மோடு வாழ்ந்த வீரனே ! இன்றுங்கள் நினைவுநாள் இதயம் முட்டிய துயரோடு உங்களை நினைவு கூருகிறோம்....


கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும்

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, March 2, 2010


ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம்
உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில்
நீ எத்தனையோ அடையாளங்களாய்.....

தேசம் தேசியம் என்றெல்லாம்
கனவுகள் நிரம்பியல்லவா உனது
கடிதங்களை எழுதினாய்...!
ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும்
உரமூட்டி உரமூட்டியல்லவா
உன்னைத் தீட்டிக்கொண்டாய்....!

உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும்
காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று
கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில்
எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது....
எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய
நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்....

மேமாத முடிவுகளைத்
தைமாதமே உரைத்த நீ
மாசி27 கிபீரடியில்
உன் கொள்கையும் இலட்சியமும்
தமிழீழ தேசத்தின்
கனவுடனே கரைந்து போனது....
நீ கண்ட கனவும்
உன்போல் ஆயிரமாயிரம் பேரின் கனவுகளும்
கொள்ளைபோய்விட்டன.....
தடுப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும்
அள்ளுண்டு அரியுண்டு
அனைத்துமே பூச்சியத்தில் போய் நிற்கிறது.

வாழ்வோடு உன்னில் பாதியானவள் - உன்
உயிரின் துளியான உன் குழந்தை
உனது வயதான பெற்றோர்கள்
உன்னை நேசித்த நாங்கள் எல்லோரும்
நீயிருந்தால் நீயிருந்தாலென்று
எத்தனையோ விதமான கற்பனைகள்
எங்களுக்குள்.....

உன்னை வார்த்தாற்போல
உன் செல்வமகன்
அவன் மழலைக்குரலில்
உன் குணங்கள் யாவும்
தேங்கிக் கிடப்பது போல....
உன்னை எழுதுகிறான்
உன்னைத் தேடுகிறான்....
உன் நினவுகளை எங்களோடு தேக்கி
அவன் மழலைக்குரலில் நீயே வாழ்கிறாய்....

தொலையலையில் அழைக்கும் போதெல்லாம்
என்னை அத்தையென்கிறான் உன் பிள்ளை
அக்கா அண்ணா பற்றியெல்லாம் அக்கறைப்படுகிறான்.....
அவன் குரல் கேட்டால்
உன்னையே காண்பது போன்ற பிரமை....
நீ வந்தால்....
இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?

(லெப் கேணல் அருணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு 27.02.2010)

2 comments:

தீபிகா(Theepika) said...

நீ வந்தால்....
இந்த மகிழ்வுகள் எத்தனை நிறைவாயிருக்கும்...?

ஏக்கம் நிறைந்த இந்த வரிகளை தினம் சொல்லிக் கொண்டிருக்கும் சொந்தங்கள் ஏராளம்..ஏராளம்.

நினைவுகள் தரும் சுமைகள்
நீங்காத ரணமாய்
நிலைத்தே இருக்கும்.
இன்னும் வரம் கைவரப் பெறாத அவர்களின் தவங்கள்
பலித்தால் கூட சற்று அமைதிப்படும்
அவர்களின் ஆன்மாக்களும்..
எங்களின் வலிகளும்.

சாந்தி நேசக்கரம் said...

கருத்துக்கு நன்றிகள் தீபிகா.