Thursday, January 12, 2012

8நாளில எப்பிடியும் 3லட்சத்துக்கான மிச்சத்தை சேர்க்க வேணும்

கிட்டத்தட்ட 5மாதம் அவனுடன் பேசியிருக்கிறேன். இதுவரையில் தனக்காகவோ தனது மனைவிக்காகவோ தனது 3வயது மகனுக்காகவோ ஒரு சதம்கூடக் கேட்கவில்லை. ஒவ்வொருமுறை கதைக்கிற போதும் தன்கூட இருக்கிறவர்கள் தன்போல சிறைகளில் அடைபட்டவர்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் போன குடும்பங்கள் ,தன்னோடு களமாடி வீரச்சாவணைத்த தோழர்களின் குழந்தைகள் குடும்பங்களைளையே நினைவு கொள்வான். அவர்களுக்கான உதவிகளின் அவசியத்தை ஞாபகப்படுத்துவதும் அதற்கான ஒழுங்குகளைத் தேடுவதிலுமே இதுவரை நாளும் உரையாடியிருக்கிறான்.

மனசுக்குள் தானும் விடுதலையாகிப்போக வேண்டுமென்ற ஆசையிருப்பினும் அதனை வெளியில் சொல்வதில்லையோ என்னவோ தனது விடுதலைக்காக எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. விடுகிற நேரம் போவோமென்றே இருந்தான். ஆனால் கடந்த மாதம் வந்த தீர்ப்பில் அவன் பிணையில் செல்வதற்கான வாய்ப்பை சட்டத்தரணி உறுதிசெய்து சொன்னார். 5லட்சம் பிணைக்கான பணத்தை ஒழுங்கு செய்யும்படி சட்டத்தரணி கூறிவிட்டார். 5சதத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலமையில் 5லட்சம் அவனுக்கு எட்டாக்கனிதான்.

விடயத்தை மனைவிக்குத் தெரிவித்தான். தனது கழுத்தில் கிடந்த தாலியைக் கொண்டு 5லட்சத்தைப் பெற்றுக் கணவனை வெளியில் கொண்டு வந்துவிடலாம் என்று நம்பித் தாலியை விற்கப்போனதிலும் ஏமாற்றம்தான். ஆனாலும் தாலிக்கு கிடைத்த 2லட்சத்தோடு வந்து மீதி 3லட்சத்துக்கான முயற்சியைத் தொடங்கியிருக்கிறாள் அவனது மனைவி.

புதுவருடத்தன்று வாழ்த்துச் சொன்னவனிடம் வழக்கு நிலமைகள் எந்தளவில் உள்ளதென்பதை விசாரித்த போது 3லட்ச விடயத்தை தயக்கத்தோடு சொன்னான்.

அப்ப காசொழுங்கு செய்ய வேணுமென்ன ? இது நான்.

ஏலுமெண்டா முயற்சிச்சு பாருங்கோ. கட்டாயமில்ல....10ம் திகதிக்குள்ள கிடைக்குமெண்டா....அதற்கு மேல் அவன் அதுபற்றி எதையும் கேட்கவில்லை.

அவனுக்கான 3லட்சத்தை எப்படித்திரட்டுவதென்ற குழப்பம். இந்தப்பெரிய தொகையை அவன் பெயர் சொல்லியும் சேகரிக்க முடியாத நிலமையில் அவனது நிலமை.

01.01.2012வரையும் அவன் இன்னும் உயிரோடிருக்கிற விடயத்தை அவனை அறிந்தோம் பழகினோம் அவனைப்போலொருவனுக்கு நட்பாயிருந்ததற்காக ஆயிரம் கோடி புண்ணியம் செய்தோம் என்ற எவருக்கும் சொல்லேல்ல. ஒன்று அவன் அதனை விரும்பவில்லை. காரணம் மற்றவர்களைத் தொல்லை கொடுக்கக்கூடாதென்ற மனம்.

சமாதான காலத்தில் பணியென்று ஊர்போனவர்கள் மாதக்கணக்காக அவனோடு பணிபுரிந்திருக்கிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் அவனுக்காக எவரும் எதையும் செய்யவுமில்லை. அவனைத் தேடவுமில்லை. புலம்பெயர்நாடுகளிலிருந்து போய் அவனுடன் பணியாற்றிய பழகியவர்கள் புலம்பெயர் சமூகம் தன்னைமட்டுமல்ல தன்போன்றவர்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்களேயென்ற கவலை உள்ளுக்குள் இருந்து கண்ணீராய் பலதரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் யாரையும் மனம் நோகாமல் அவைக்கும் என்னென்ன இடைஞ்சலோ தெரியாதென அவர்களில் யாரையும் விட்டுக் கொடுத்ததில்லை.

01.01.2012 வளமைபோன்ற புதுவருட வாழ்த்தொன்று ஸ்கைபில். அவனுடன் பழகிய பணியாற்றிய ஒருவர். அவனைப்பற்றித் தெரிவித்து அவன் இன்னும் உயிருடன் சிறையொன்றில் வாழ்கிறானென்று சொன்ன போது அந்த நண்பர் வெளிப்படுத்திய அவன்மீதான அன்பில் வியந்து போனேன். அவன் தோழனில்லை என் தம்பி கடவுள் என்றெல்லாம் கதை அவிழ்ந்தது. ஒடிந்துபோன நம்பிக்கை எனக்குள் மீண்டும் புத்துயிர் கொண்டது. அவனுக்குத் தேவைப்படுகிற 3லட்சம் பற்றி உதவி கேட்க ஆளின்றிப்போன துயர் அற்றுப்போன சந்தோசம். அவனுடன் சமாதான காலத்தில் ஒன்றாயிருந்த அமெரிக்க கனடிய அவுஸ்ரேலிய ஐரோப்பிய பிரமுகர்களிடமெல்லாம் பேசி அவனுக்கு உதவி கிடைக்கும் போன்ற விம்பத்தை எனக்குள் விதைத்தார் நண்பர். இருண்டு போன அவன் வாழ்வு மீண்டும் ஒளிகாணப்போகிற மகிழ்ச்சியை விதைத்தது நண்பரின் கதை.

10ம் திகதிக்குள் உதவி கிடைத்தால் அவன் பிணைவரலாமென்ற என்ற வேண்டுகைக்கு 5நாளில் பதில் தருவதாகச் சொன்ன நண்பர் 12ம் திகதியாகியும் தொடர்பிலும் இல்லை உதவ முடியாதென்ற சொல்லைக்கூடச் சொல்லாமல் மறைந்துவிட்டார்.

ஒருவரை மட்டும் நம்பியிராமல் அவனுக்குச் சொல்லாமல் அவனை நேசிக்கிறோம் சாமியாக வணங்க வேண்டியவன் என்றெல்லாம் கதைசொன்ன மேலும் சிலரிடமும் பிச்சைபோடுமாறு 9ம் திகதி இரவுவரை தொடர் முயற்சி தோல்விதான். ஒரு கர்ணனும் கருணை காட்டவில்லை.

பெரிய பொறுப்பில இருந்தவரை எப்பிடி அரசாங்கம் சிம்பிளா பிணையில விடுவாங்கள் ? உது அரசாங்கம் எங்கடை வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைக்கச் செய்யிற திட்டமிட்ட வேலையெண்டுதான் நாங்கள் நம்பிறம். உங்கை கன சதியள் நடக்குது....உங்களிலயும் எங்களுக்குச் சந்தேகம்....? அதெப்பிடி உங்களாலை மட்டும் அவையோடையெல்லாம் கதைக்க முடியுது ? உங்களாலை மட்டுமெப்படி அங்கை உதவியளைக் குடுக்க முடியுது ? கேள்விகளால் அவர்கள் தேசியவீரர்களாயினர்.

000 000 000 000

உந்தச் சமாதானப் பேச்செண்ட காலங்களில என்னெண்டு இயக்கம் அரசாங்கத்தோடை சேந்து வேலை செய்தது ?
தமிழ்ச்செல்வன் கட்டுநாயக்காவில கைகுலுக்கி வெளிநாடு வெளிக்கிட அதே கட்டுநாயக்கா வளாகத்துக்கை கரும்புலியையும் புலனாய்வாளனையும் கைதும் நடந்ததே அதெப்பிடி ?

பிறேமதாசாவோடை மேசையில இருந்து கொண்டு அரசியல் பேசேக்கையும் சந்திரிகாவோடை சமரசம் பேசேக்கையும் எப்பிடியாம் எதிரியோடை பேச்சுவார்த்தை நடந்தது ? அப்பெல்லாம் இயக்கம் சமரசம் செய்துதானே எல்லாத்தையும் செய்தது ?

இங்கை மாவீரர்நாள் கொண்டாட கோலெடுக்கிறியள்...மாவீரர் நாளைக் கொண்டாடப்போறமெண்டோ எடுக்கிறியள் ? பொய்க்காரணம் சொல்லித்தானெ எடுக்கிறியள் ? கரும்புலிகள் நாளைச் செய்யேக்க பொலிஸ் வந்தா கரும்புலியளின்ரை படங்களை பூக்களாலை மறைச்சுக் கலைவிழாவெண்டுதானே சொல்லியிருக்கிறியள் ? இதுகளெல்லாம் என்ன வகையான விட்டுக் கொடுப்புகள் ?

கேட்க முடிந்த கேள்விகளை அந்தத் தேசியத் தூண்களிடம் கேட்கத்தொடங்க....

உங்களுக்கு அரசியல் விளங்கிறேல்ல....என்றுதான் தொடர்பை அறுத்துக் கொண்டு போனார்கள்.

தேசியத்தின் பெயரால் மாதச்சம்பளம் எடுத்தும் தேசியத்தின் பெயரால் வசதியை அனுபவித்தும் வாழும் இவர்கள் மீது அவன் இன்னமும் அன்போடிருக்கிறான். இவர்களை நேசிக்கிறான். ஆனால் தங்கள் கல்லாப்பெட்டிகளைத் திறக்க விரும்பாத பழிசுமத்தல் குற்றச்சாட்டு என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த கழுகுகளை நேசிக்கிற நம்புகிற அவனுடன் தொடர்பு கொண்டு நீங்கள் நம்புகிற எல்லாரும் உங்களை நம்பவில்லை துரோகியாய் நினைக்கிறாங்கள் என்று சொல்ல.....அவன் நம்பவேயில்லை. அப்பவும் சிரித்தான் அவர்களை நம்பினான்.
அவையளுக்கும் என்ன பிரச்சனையோ ? என்றான்.

நீங்க திருந்தமாட்டியள்....சொன்ன எனக்குச் சொன்னான்.

என்னாச்சி செய்யிறது அவையள் இருக்கிற நிலமையில இப்பிடித்தான் நினைக்க வரும்போல....ஆச்சி எனக்காக அவையளைப் பகைக்காதையம்மா....!

இத்தகைய மனம் படைத்த இவனை எப்படி ஒன்றாய் இருந்து பழகியவர்களால் நம்ப முடியாது போகிறது ?

சரி பாப்பம் வேறை வழியைத் தேடுவம்...என்றேன். ஆச்சி அதைவிடுங்கோ கஸ்ரப்படாதையுங்கோ....எனத் தனது விடுதலையில் அக்கறையெடுக்காது திரும்பவும் 10கைதிகளின் குடும்பங்களின் விபரங்களை எழுதச் சொன்னான்.

ஒவ்வொரு குடும்பத்தின் கதையும் ஒவ்வோரு வகையான சோகம். அதிலும் குறிப்பாக சந்திரமோகன் என்ற முன்னாள் போராளியின் குடும்பத்தை முதலாவதாக பாக்கச் சொன்னான். சந்திரமோகனின் பிரதேசத்தில் இவன் மக்களுடன் பணி செய்த காலங்கள் பற்றி நிறையச் சொன்னான். சொல்லும்படி முன்னேற்றமில்லாத சந்திரமோகனின் ஊரில் இவன் 100பேரை ஆழுமையாளர்களாக உருவாக்கிய கதையைச் சொன்னான்.

சந்திரமோகனும் ஒரு சிறையில் கைதியாய் இருக்கிறான். அவனுக்கு 4 பிள்ளைகள். ஒரு பிள்ளை வெள்ளை முள்ளிவாய்க்காலில செல்பட்டு இறந்து போக அதேயிடடத்தில் சந்திரமோகனின் சகலனும் தலையில் செல்பட்டு இறந்து போக இரு உடல்களையும் அருகில புதைச்சுப்போட்டு சந்திரமோகனின் குடும்பம் போனதாம். பிள்ளையை இழந்த துயரில சந்திரமோகனின் மனைவி மனநோயாளியாகிப்போய் அவனுடைய மிச்சம் 3பிள்ளைகளும் செல்பட்ட காயங்களோடை உடல் ஏலாம இருக்கினமாம். அந்தப்பிள்ளையளையும் கவனிக்க முடியாத பிள்ளைகளையே மறந்த நிலமையில சந்திரமோகனின் மனைவி இருக்கிறாவாம். சந்திரமோகனின் குழந்தை இறந்த இடத்தில் இறந்த மைத்துனனின் மனைவி மொறிஞ்சலாதான் சந்திரமோகனின் பிள்ளைகளையும் அவனது மனைவியையும் பராமரிக்கிறாவாம். அன்றாடம் சாப்பிடவோ உடுதுணிகளுக்கோ வசதியில்லாமல் இருக்கினமாம்.

இப்போது அவன் தனது நிலமையைப் பற்றி அக்கறைப்படவில்லை. சந்திரமோகனும் அவன்போன்ற பலரது நிலமைகளையும் தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனது விடுதலையை எதிர்பார்த்திருக்கிற அவனது மனைவியைக்கூட மறந்து இன்னும் மற்றவர்களை எப்படி இவனால் நேசிக்க முடிகிறது ? உண்மையான போராளியொருவனின் மனது இப்படித்தானிருக்குமோ ? எண்ணிக் கொள்கிறேன்.
இப்போது 20ம் திகதி தவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலை பணம் கட்டாட்டில் பிறகு அவனுக்குத் தண்டனைதான்.

இன்று 12ம் திகதி. இன்னும் எட்டுநாளில் அவனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்தால் சரி அல்லது ????

12.01.2012 காலை 9.40மணி. எனது நகரில் உள்ள நகை அடைவு கடையில் ஒரு பவுணுக்கு எத்தினை யூரோ கிடைக்குமெனக் கேட்டேன். ஒரு பவுணுக்கு 100யூரோ தருவினமாம். 4வீதவட்டி 3மாதமொருமுறை வட்டி கட்ட வேணும்.

இப்பத்தைய பவுண் விலையில ஏப்பிடியும் ஒரு ஆயிரத்து ஐநூறு யூரோ கிடைக்குமென்று என்னிட்டைக் கிடந்த ஒருநெக்லஸ், ஒரு சோடி காப்பையும் கொண்டு போனதிலும் தோல்விதான். 600€தான் தரலாமென்றான் கடைகாரன். நானும் நகையள் சேத்து வைச்சிருக்கலாம். பவுணென்னத்துக்கெண்டு நினைச்சு எதையும் சேர்த்து வைக்காதது இப்போ உறைத்தது.

ஓவ்வொருமுறை ஒவ்வொருதனும் தனது குடும்ப நிலமையை வறுமையைச் சொல்கிறபோதும் கடைசி எல்லைவரை சென்றும் அவர்களுக்கான அவசர உதவிகளை ஒழுங்கு செய்ய முடியாது போகிற நேரங்களில் இதை விப்பமோ அடைவு வைப்பமோண்டு நினைக்கிற நெக்லஸ்சும் காப்பும் வெள்ளைக்காறனின் அடைவு கடை அலுமாரிக்குள் போய் சிரித்து விடைதந்தது. கடைகாரன் தந்த கடதாசிகளில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.

பெரியதாள் வேணுமோ இல்லது சின்னத்தாள் வேணுமோ ? காசுப்பெட்டியில் நின்ற வெள்ளைக்காரி கேட்டாள். ஒற்றை ஐநூறையும் நூறு யுரோவையும் தரச்சொன்னேன். கையில் காசைத் தந்தவள். இந்நாள் இனிய நன்நாளாய் அமையட்டுமென வாழ்த்தினாள். பதிலுக்கு உனக்கும் அப்படியே அமையட்டுமென்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறேன். இன்னும் மிஞ்சியிருக்கிற 8நாளில் எப்படி 3லட்சத்தின் மீதியைச் சேர்ப்பதென்ற சிந்தனைதான் ஞாபகமெல்லாம் நிறைகிறது. இறுதி முயற்சி இன்னும் 8நாளில் தொங்குகிறது.

12.01.2012

No comments: