Tuesday, January 3, 2012

அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும்.

19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்குள் இனி உலகம் என்ற பின் அவள் கருவில் காத்துப் பெற்றெடுத்த மகனை இனிப் பார்க்க ஆசைப்படுவதெல்லாம் அபத்தம் என நினைத்தாள்.

19வயதில் மனசுக்குள் துளிர்விட்ட காதலும் காதலனும் அவளை ஏமாற்றிப் பச்சைத் துரோகம் செய்துவிட்டதாகவே பலதரம் கோபித்திருக்கிறாள். காதலையும் காதலனையும் கனகாலம் சிறையில் அடைபட்ட பின்னரும் சுமந்திருக்கிறாள். அவள் பெற்ற குழந்தையை அவள் காண முடியாத பிரிவின் பின்னர் காதலையும் காதலனையும் அவள் சுமந்த புனித உலகத்தை விட்டுத் நிரந்தரமாக விலக்கி வைத்துவிட்டாள். தானாகத் தேடிய வினையின் பரிசு தன் காதல் என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.

1992...! அவளது இலட்சியக்கனவின் ஒரு கட்டம் முழுமையடைந்து பல்கலைக்கழகம் தெரிவானாள். அடுத்ததாய் அவள் ஒரு பொறியியலாளராகும் கனவோடு வடக்கிலிருந்து தெற்குக்கு பயணமானாள். அவள் அதுவரை காலமும் வாழ்ந்த வாழ்வுக்கும் இப்போதைய புதிய வாழ்வுக்கும் இடையிலான பெரும் மாற்றம் ஆச்சரியம்தான் ஆனாலும் அந்தச் சூழலுக்குள் தன்னை இசைவாக்கிக் கொண்டாள்.

மாலைநேரங்களில் பல்கலைக்கழக நட்புகளுடன் கடற்கரைக்குச் செல்லுதல் சனி ஞாயிறுகளில் விக்ரோறியாப்பாக் தெகிவளை மிருகக்காட்சிச்சாலையெனப் பொழுது கழிக்கக் குறைவில்லாத அழகான இடங்களுக்கெல்லாம் போய்வருவாள். அப்படிப்போய்வருகிற ஒரு கடற்கரையில்தான் அவன் அறிமுகமானான்.

'உன்பார்வையில் ஓராயிரம் கவிதைதான் எழுதுவேன்'' என்ற கணக்கில் அவனது கண்களில் அவள் கவிதையானாள். அவனைச் சந்திப்பதற்காகவே அவன் வரும் நேரங்களைக் கணிப்பிட்டு அவனைச் சந்திக்கத் தொடங்கினாள். தூரத்தூர பார்வைகளால் எழுதப்பட்ட காதல் அருகருகாய் சந்திப்புகள் நெருக்கமாகி அவர்கள் காதலர்கள்.

தோழிகள் தேவையற்றுப் போக அவளது உலகம் எல்லாம் அவனாகினான். ஊர் ஒழுங்கைகளுக்குள் ஆரம்பமாகிற காதல்கள் போலல்லாமல் கொழும்புக்காதல் சற்று முன்னேற்றமாக அருகருகான சந்திப்பு நெருக்கமாகி உடலுறவு வரையும் வளர்ந்தது காதல். தொழில்நுட்பவியலாளராகும் கனவோடு ரயிலேறியவள் அவனுக்காக எல்லாவற்றையும் இழந்துவிடவும் அவனுக்காகச் செத்துப்போகவும் தயாராகினாள்.

வளமைபோன்ற ஒரு விடுமுறை மாலைநேரம். அன்றும் கடற்கரையில் சந்திப்பு. இருளும் வரை அவன் தோழில் சாய்ந்து கடலை கொறித்தபடி மாலைச்சூரியனின் இறுதிச் சங்கமத்தை ரசித்தபடியிருந்தாள். அவன் மட்டும் ஏதோ தொலைத்துவிட்டதான உணர்வோடு ஒரு புயலை எதிர்கொள்கிறவன் போல கடும் யோசனையில்.

அவளை அடிக்கடி பார்த்தான். காரணம் கேட்டவளுக்கு ஒன்றுமில்லையென்ற ஒற்றைத் தலையாட்டலோடு மீண்டும் யோசனையில்.....நாக்குநுனி வரையும் உந்திக் கொண்டு வருகிற வார்த்தைகளைத் திரும்பியும் தொண்டைக்குளிக்குள் மென்று விழுங்கினான். உப்பும் மிளகாய்த்தூளும் தூவிய அன்னாசித் துண்டுகளை விற்றுக் கொhண்டிருந்த அன்னாசி வியாபாரியைக் கூப்பிட்டு 4அன்னாசித் துண்டுகளை வாங்கினான். நிறைவேற்ற வேண்டிய விடயத்தை அன்னாசி சாப்பிட்டு முடித்த கையோடு சொல்லிவிடுகிற தைரியத்தோடு அன்னாசியை அவளிடம் கொடுத்தான்.

ஆளையாள் அடையாளம் தெரியும் வெளிச்ச நிழலில் அவளது கண்களைப் பார்த்தான். மெல்லிய கடற்கரைக்காற்றின் குளிரில் குளிர்ந்த அவளது கைகளை எடுத்துத் தனது கையோடு சேர்த்து அழுத்தினான். நெஞ்சில் தலைசாய்த்து அவனோடு ஒட்டிக் கொண்டாள். கடலில் சென்று கொண்டிருந்த கப்பல்களிலிருந்து தூரத்தே தெரிந்த சின்னச்சின்ன ஒளிப்பொட்டு அவர்களை நெருங்கி வருவதுபோலிருந்தது.

இடம் பொருள் காலமறிந்து அவன் தனது திட்டத்தை அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லத் தொடங்கினான். அவனது அருகாமையை விட்டெழுந்து ஓயாமல் கரைகளைத் தொட்டுக் கொண்டிருந்த அலைகளில் கால் புதைத்தாள். அவளுக்குள் பல்லாயிரம் கிலோமீற்றர் வேகத்தில் அலையடிக்கத் தொடங்கியது. கண்ணுக்குள் முட்டிய கண்ணீரை கைலேஞ்சிக்குள் ஒற்றிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். அவன் இருந்த இடத்தைவி;ட்டு அசையவில்லை. அந்த நேரம் கூட அவனில் கோபம் வரவில்லை அவளுக்கு.

எத்தனைதான் கரையில் மோதினாலும் திரும்பியும் கடலுக்குள் ஓடியொளிகிற அலைகள் போல திரும்பி அவனிடம் வந்தாள். அவன் ஒரு கடவுள்போலத் தெரிந்தான். அவள் கால்களை நனைத்த அலைகளில் அவனது தோழர்கள் வாழ்வதாகச் சொன்னான். அவர்களது கனவுகளோடு கரைந்து போகவே இவனும் காத்திருப்பதாகச் சொன்னான். மற்றைய நாட்களைவிடவும் இன்றைய நாள் அவன் அவளுக்கு மேன்மையானவாகத் தெரிந்தான்.

000 000 000

அவன் சொன்னபடி ஊரில் உறவொன்று மரணமடைந்ததாகவும் ஊர்போய் வருவதற்காக ஒருவாரம் விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த 2வது நாள் அவனோடு போனாள். அந்த இரவு பணக்காரர்களால் நிறைகிற ஒரு விடுதியில் அறையெடுத்துக் கொண்டார்கள். முதல் முதலாக அத்தகையதொரு ஆடம்பர விடுதியில் அன்றுதான் அவள் காலடி வைத்தாள். அந்த வாழ்வையே தினமும் அனுபவிப்பவன் போல் அங்கே அவளை அழைத்துக் கொண்டு போனான். தனது முகத்தை அந்த விடுதியின் நிலத்தில் பார்த்து வியந்துபோனாள்.

அங்கே அவனுக்கு அறிமுகமான பல பெரும் புள்ளிகளை இவளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவர்களில் சிலர் இராணுவ அதிகாரிகள் , புலனாய்வு அதிகாரிகள் எனப் பலரது அறிமுகம் அவளுக்கும் அன்று அவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு அவளைத் தனது காதலியெனவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அடையாளப்படுத்தினான். அவர்களுடன் சேர்ந்து அவனும் விலையுயர்ந்த மதுவகைகளை அருந்தினான். நிதானத்தை இழக்காத நிலமையில் தானிப்பதை அவளுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தான். நள்ளிரவு தாண்ட தங்களுக்காக ஒழுங்கு செய்த அறைக்கு அவளை அழைத்துப் போனான்.

மறுநாள் அவன் சொன்னபடி அவள் தயாரானாள். இரவு கொண்டு வந்த சில்லுப்போட்ட உடுப்புப் பெட்டியை அவள் உருட்டிக் கொண்டுவர அவன் ஒரு இராசகுமாரனின் மிடுக்கோடு வந்து கொண்டிருந்தான். காவலுக்கு நின்றவர்கள் அவனுக்குத் தலைகுனிந்து நிமிர்ந்து விடைகொடுக்க அந்த அதிசயம் மிக்க உலகத்தைவிட்டு வாசலிற்கு வந்தார்கள். சற்று நேரத்தில் சொகுசு வாகனமொன்று அவனையும் அவளையும் ஏற்றிப்போக வந்தது. அவள் உருட்டி வந்த பெட்டியை அவன் தூக்கி வாகனத்தில் ஏற்றினான்.

நாளை நீ விரும்பியபடி ஊருக்குப் போகலாம். பிறகு நானுன்னைத் திருமணம் செய்து கொள்வேன். நீ விரும்பியடி நானும் நீயும் வாழுவோம் என்ற அவனது வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவளது காதுக்குள் மீள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லாளமன்னன் , பண்டாரவன்னியன், சங்கிலியன் பற்றி நேற்றைய இரவு அவன் சொன்ன கதைகளை இன்று நினைத்துப் பார்த்தாள். அந்த மன்னர்கள் எல்லோரும் அவன் வடிவாய் அவளுக்கு முன் தோன்றித் தோன்றி மறைந்தார்கள்.

மதுஅருந்தினால் மதிமயங்குமென்றுதான் அவள் அறிந்திருந்தாள். ஆனால் அவன் அதற்கெல்லாம் விதிவிலக்கானவன் என்பதனை அன்று அவனது செயற்பாட்டில் அறிந்து கொண்டாள். அவளால் செய்து முடிக்க வேண்டிய காரியத்தையே அவளுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டிருந்தான்.

அது பிரதான ரயில் நிலையம். காலிசெல்லும் ரயிலில் அவளை ஏற்றி சில்லுப்பூட்டிய பெட்டியையும் அவளோடு சேர்த்து ஏற்றிவிட்டு அவன் இறங்கினான். ரயில் புறப்பட்டது. அவன் சொன்னபடி சொன்ன இடம் வரை விடயம் பிசகாமல் அவள் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் இறங்க வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. எவ்வித படபடப்புமின்றி கவனமாக அவனால் சொல்லிக் கொடுக்கப்பட்ட காரியத்தைச் செய்துவிட்டு இறங்குவதற்காகக் காத்து நின்றாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் அவனிடம் திரும்பிச் செல்லும் ரயிலில் ஏறினால் அவளது காதலும் அவளது காதலனும் அவளும் காதலை வென்றுவிடுவார்கள்.

ரயில் தரித்தது. அவள் அவன் சொன்னபடி சொன்னதைச் செய்துவிட்டு இறங்கி அவனிடம் போகும் ரயிலில் ஏறக்காத்திருந்தாள். காலை அவசரம் சன நெரிசல் அவள் எதிர்பார்த்த சத்தம் கேட்கவில்லை. சிலவேளை நேரம் தப்பலாம் அல்லது இடம்மாறலாம் என நினைத்தபடி அடுத்த பயணத்துக்குக் காத்திருந்தவளைக் காக்கிச் சட்டைகள் சுற்றிக் கொண்டது. பெரிய நாய்களும் காக்கிச் சட்டைகளும் அவளை விலங்கிட்ட அந்தக்கணங்களை அவளால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அனுராதபுரம் தாண்டி வவுனியா போகும் ரயிலில் போகலாம் என்று சொன்னவனையும் அவள் முன் கொண்டு வந்து இருவரையும் விலங்கிட்டு ஏற்றிக் கொண்டு போனார்கள். காதல் கண்ணை மறைத்ததா அவளது கவனப்பிழை காரியத்தைக் கெடுத்ததா ? எதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவள் அறியாத வதைகள் அவளை இரவுபகல் தெரியாமல் வதைத்தது. சித்திரவதை என்பதனைச் செவிகளால் மட்டுமே கேட்டிருந்தவள் அந்தக் கொடும் வதைகளையெல்லாம் அனுபவித்தாள். மாதங்கள் பல அவளுக்கு நினைவில் நிற்கவில்லை. ஒட்டிய அவள் வயிறு உப்பி உயிரின் ஓசை அவள் உணர்வைத் தட்டியெழுப்பியது. காற்றோடு கரைந்து போனாலும் அவன் காதலைச் சுமப்பதில் இன்பமென்று ஒருகாலம் நினைத்தவளுக்கு அவன் மீது எரிச்சலாயிருந்தது.
சித்திரவதைக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுச் சிறையொன்றுக்கு மாற்றப்பட்டாள். அவளது வயிற்றுக்குள் வளர்ந்த உயிர் உருவமாகிக் குழந்தையாய் சிறைக்கம்பிகளின் பின்னால் கண்விழித்தது. அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டாள். சிறையின் அரியண்டங்களோடு அவளது குழந்தை அவளது காதலின் மீதம் அவளோடு 2வயதாகும் வரை வாழ்ந்தது.

தனது குழந்தையின் எதிர்காலம் பற்றியே அவளுக்குப் பெரும் பயம். சிறையில் வளரும் தனது குழந்தையை வெளியில் யாராவது வளர்க்க முன்வரமாட்டார்களா என ஏங்கினாள். அவளது ஏக்கம் வேண்டுதல் நிறைவேற அவளது உறவுகள் அவளது குழந்தையைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு போக முன்வந்து அவளது குழந்தையைக் கொண்டு போய்விட்டார்கள். 5வயது வரையும் அம்மாவுக்கு மகனைக் கொண்டு வந்து காட்டியவர்கள் நிரந்தரமாக அவளது குழந்தையைக் கொண்டு போய்விட்டார்கள்.

ஒவ்வொரு வயதிலும் தனது குழந்தை எப்படியிருப்பான் எப்படியான வளர்ச்சியில் இருப்பான் என்ற கனவுகளோடு காலங்கள் போகத் தொடங்கியது. அவளது காதலனைச் சந்திக்க வாரம் ஒரு ஞாயிற்றுக் கிழமை அனுமதி கிடைத்தது. இருவரும் சந்திக்கிற நேரமெல்லாம் ஆளையாள் குற்றம் சாட்டியே பிரிவது வளமை.

எப்படியும் வெளியில் போய்விடலாம் குழந்தையுடன் சேர்ந்து வாழலாம் என்ற கனவில் இடிவிழுந்து இருவருக்கும் ஆயள்தண்டனை வழங்கப்பட்டது. இருந்த நம்பிக்கையும் போய்விட்ட துயரில் அவள் அவனை முற்று முழுதாக வெறுத்தாள்.

தனது கனவுகளையும் இலட்சியத்தையும் ஏமாற்றி அழித்த பாவம் அவனுக்குரியதாக்கி அவனைச் சந்திப்பதையும் முழுதாக நிறுத்திக் கொண்டாள். காதல் பேசிய அவனது கண்களில் துரோகம் நிரம்பிய விரோதமாகவே தெரிந்தான் அவளுக்கு.

எப்படியோ வாழலாம் என்ற கனவோடு வடக்கிலிருந்து ரயிலேறியவள். தெற்கின் சிறையில் வாழ்வும் போய் வயிற்றில் சுமந்த குழந்தையையும் பிரிந்து அப்படியொரு அம்மாவின் குழந்தைதான் தானென்றதைக் கூட அறியாது மறந்து போன குழந்தையின் நினைவுகளையே தனது கனவாக்கிக் கொண்டு நடைபிணமானாள்.

தண்டனை பெற்ற கைதிகள் வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் வாகனத்தில் இவளும் ஏற்றப்படுவாள். அதிகாரிகளின் ஏவலுக்கு எல்லாக் கடினங்களையும் மாய்ந்து மாய்ந்து செய்து தொலைய வேண்டிய தனது விதியை நினைத்து அழுவாள். உடல் வலிக்க செய்கிற வேலைக்கு உகந்த உணவும் கிடைக்காது. உடல் அசந்து ஓய்வாய் உறங்கவும் முடியாத கடந்தகாலத்துயரம் சிறையோடு வாழ்வே இனி முடிவென்றாயிற்று.

இலங்கையில் இப்படியொரு உலகம் இருக்கென்பதனை இலங்கை ஜனாதிபதிகூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய கொடுமைகளும் அசிங்கங்களும் அந்தச் சிறைச்சாலைக்குள் ஒளிந்திருந்தது. போதைவஸ்து , விபச்சாரம் , கொள்ளை , கொலை , களவென எல்லாக் குற்றங்களுக்கும் தண்டனை பெற்ற சிங்களக் கைதிகள் நடுவில் இவளும் இவள் போன்ற தமிழ் அரசியல் கைதிகளும் படுகிற வலிகளையும் தாங்கியபடி அவள்.....

2012ம் ஆண்டு புதுவருடப் பிறப்பில் ஆயள்தண்டனை பெற்ற சில கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்போவதாகவும் அதற்கானபடிவங்;களை நிரப்புமாறும் சொன்னார்கள். இப்படி எத்தனையோ கடிதங்கள் மன்னிப்பு மன்றாட்ட மனுக்கள் இந்தப் 19வருடத்தில் அனுப்பியிருப்பாள். இதுவரையில் ஒரு ஜனாதிபதியும் அவளுக்குக் கருணை காட்டவுமில்லை கண்திறக்கவுமில்லை. இம்முறை இந்த நாடகத்தில் அவள் பங்கேற்பதில்லையென்றே ஒதுங்கியிருந்தாள். ஆனால் அவளோடிருந்தவர்கள் சிலர் அவளது பெயரையும் இணைத்து ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார்கள்.

புதுவருடத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் யாரோ கொடுத்த உதவியில் அவர்களுக்கெல்லாம் புரியாணிசாப்பாடு கிடைத்திருந்தது. புழு அரிசியும் வேகாத சூத்தைக்கத்தரிக்காய் வெண்டக்காய் அவியல் சாப்பிட்ட வாய்க்கு புரியாணி சோறு தேவாமிர்தம் போலிருந்தது. அந்தச் சோற்றில் கைவைக்க ஒருத்தி சொன்னாள் அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும்.
நீண்டகாலம் கட்டி வைத்த அழுகை அந்தக் கணத்தில் வந்து குதித்தது. புதுவருடத்தில் கிடைத்த புரியாணிச் சோற்றின் முன்னிருந்து கதறியழுதாள். இந்தச் சிறையை ஜனாதிபதியை வந்து பாக்கச் சொல்லி மனுப்போடுங்கோ எனக்கத்தினாள். ஆசையோடு எடுக்கப்பட்ட புதுவருடப் புரியாணிச் சோறு சுவையிழந்து போக அவளது கண்ணீர் போல எல்லாக்கண்களும் கண்ணீரால் நிறைந்தது......

01.01.2012

1 comment:

தீபிகா(Theepika) said...

வெளியே சொல்லப்படாத பல கதைகளில்
ஒரு கதை. போர் முடிவடைந்துவிட்டது என சொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் விடுவிக்கப்படாத தமிழ் கைதிகளின் நிலைகளை யார் பேசப்போகிறார்கள். நிச்சயம் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய விடயம். நேரில் பழகிய மனிதர்களாய் அவர்களோடு எங்களையும் வாழ்ந்து வலிப்பட வைக்கிறது உங்கள் எழுத்து.

தீபிகா.